பண்டைத்தமிழரின் முப்பெரும் விழாக்கள்

கலாநிதி பால.சிவகடாட்சம்


ந்திரன் பயணிக்கும் விண்வெளிப்பாதையை இருபத்தேழுநட்சத்திர மண்டலங்களாகப் பிரித்தபண்டைய இந்தியக்காலக்கணிதர் சூரியன் உதிக்கும் வேளையில் எந்த நட்சத்திரம் அல்லது நட்சத்திரமண்டலம் சந்திரனுக்கு அருகில் காணப்படுகின்றதோ அதனையே நாள்மீன் அதாவது அந்தநாளுக்குரிய நட்சத்திரம் எனக்குறித்தனர். ஒரு மாதத்துப் பௌர்ணமி தினத்தில் எந்தநாள்மீன் சந்திரனுக்கு அருகில் காணப்படுகின்றதோ அந்தநாள்மீனின்பெயரையே அந்த மாதத்தின் பெயராகக்கொண்டனர். சித்திரைக்குச் சித்திரை, வைகாசிக்கு விசாகம், ஆனிக்குக் கேட்டை, ஆடிக்குப் பூராடம், ஆவணிக்குத் திருவோணம், ஐப்பசிக்கு அஸ்வினி, கார்த்திகைக்குக் கார்த்திகை, மார்கழிக்கு மிருகசீரிடம், தைக்குப்பூசம், பங்குனிக்கு உத்தரம் என்பன மாதங்களின் பெயருக்கு உரிய நட்சத்திரங்களாகின.

மதி நிறைந்த பௌர்ணமி நாட்களைப் புனிதமான நாட்களாகக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழர் மத்தியில் இருந்துவந்துள்ளது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரணையும் கூடும் தீப ஒளித்திருநாள், மார்கழி மாதத்தில் திருவாதிரையும்பூரணையும் கூடும் ஆதிரைநாள் இதைமாதத்தில் பூசநட்சத்திரமும் பூரணையும் கூடும்தைப் பூசப்பொங்கல் திருநாள் என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். தமிழ்மக்களால் நெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வரும்விழாக்களில் மிகத்தொன்மையான தொன்றாகக் கார்த்திகைத் தீபத்திருநாள் உள்ளது. இத்திருநாளைத்தொல் கார்த்திகைநாள் அதாவது தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை நாள் என்று சம்பந்தர் தமது தேவாரம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை நோக்கலாம்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.


இத்தேவாரப்பாடலில் கார்த்திகை மாதத்துத் தீபத் திருநாளை 'விளக்கீடு' என்று சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இந்நாள் 'விளக்கீடு' என்றே குறிப்பிடப்படுகின்றது.

கார்த்திகை மாதம் மதிநிறைந்த நன்னாளில் வீடுகளில் நெய்விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்தும் மலர்ச்சரங்களைத் தொங்கவிட்டும் சங்ககாலத்தமிழர் பெருவிழாக் கொண்டாடினர்.

மழை இருள் நீங்கிய கருவானத்தில் முயல்வடிவம் வெளிறிக்காணும் முழுநிலவுடன் கார்த்திகை நட்சத்திரம் சேரும்பரந்த இருள் சூழ்ந்த நள்ளிரவில் வீடுகளில் விளக்குகளை ஏற்றிவைத்தும் வீதிகளில் மலர்த்தோரணங்களைத் தொங்கவிட்டும் பெருவிழாக் கொண்டாடும் மக்கள் வாழும் தொன்மையும் பெருமையும் வாய்ந்த ஊர்பற்றிக் கூறுகின்றது அகநானூற்றில் வரும்பாடல்ஒன்று. இப்பாடலைப்பாடியவர் நக்கீரர்.

மழைகால் நீங்கிய மாசு விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேறும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கிறுத்து மாலை தூக்கிய
பழவிறல் மூதூர்


                               அகநானூறுபாடல்
141

கார்த்திகை விளக்கீடு அன்று வீட்டுமாடங்களில் மக்கள் வரிசைவரிசையாக ஏற்றிவைத்திருக்கும் தீபச்சுடர்கள் காற்றில் அசைவதைப் பார்க்கும் போது சங்கத்தமிழ்ப்புலவருக்குக் காட்டில் ஓங்கிவளர்ந்த முள்ளிலவு மரத்தில் செக்கச்சி வந்தபூக்கள் ஆடி அசையும் ஓர் இயற்கைக்காட்சி கண்முன்னே விரிகின்றது.

அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடிபோல
பல்பூங்கோங்கம் அணிந்த காடே


                                நற்றிணை: பாடல்
202


நற்றிணையில் வரும் இப்பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.கோங்கு என்பது முள்ளிலவு மரத்தின் மற்றுமொரு பெயர். இந்த முள்ளிலவு மரம் கார்த்திகை மாதத்தில் இலைகளை உதிர்த்து விடும். இதன் கிளைகளில் வரிசையில் மலர்ந்த பூக்கள் மாத்திரம் கண்ணில் தெரியும். இலைகள் இல்லாத மரக்கிளைகளில் வரிசையாகப் பூத்திருக்கும் செந்நிறப்பூக்கள் கார்த்திகை விளக்கீட்டுத் தீபவரிசையை நினைவூட்டுகின்றன. அகநானூற்றில் வரும் இப்புலவரின் மற்றும் ஒருபாடல் இதனை மேலும் விளக்குகின்றது.

பெரு விழா விளக்கம் போலப் பலவுடன்
இலை இல மலர்ந்த இலவம்

                                  அகநானூறு
185

'இலை இல மலர்ந்த இலவம்' என்பது இலைகளை உதிர்த்துவிட்டு மலர்களுடன் காணப்படும் இலவமரத்தைக் குறிக்கின்றது. தமிழர்கள் பண்டுதொட்டுக் கொண்டாடி வந்த திருநாட்களுள் கார்த்திகை விளக்கீடே முதலாவது ஆகின்றது.

ஆதிரைநாள் சிவபிரானின் பிறந்தநாள் என்னும் நம்பிக்கையில் இறைவனை ஆதிரையான் என்று அழைத்தனர் நமது பண்டைத்தமிழ் முன்னோர்கள். இந்தப்புனிதமான நாள்மீனுக்குத் 'திரு' என்னும் அடையாளம் சேர்த்துத் திருவாதிரை எனக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

நட்சத்திரங்கள் சந்திரன் சூரியன் என்று அறியப்படுபவை அனைத்தையும் ஆதியில் படைத்த முதல்வனுக்குப் பிறந்தநாள் என்று ஒன்றைக்கற்பித்து அவனை 'ஆதிரையான்' 'ஆதிரையான்' என்று இன்னமும் அழைக்கின்றதே இந்த உலகம் என்று சிரிக்கின்றார் நம் பழந்தமிழ்ப்புலவர் ஒருவர். முத்தொள்ளாயிரத்தில் வருகின்றது இப்பாடல்.

மன்னிய நாண்மீன் மதி கனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர் வேலி உலகு


சங்க இலக்கியமான பரிபாடல் சிவபிரானை 'ஆதிரைமுதல்வன்' என்று குறிப்பிடுகின்றது. மார்கழிமாதத்துப் பூரணை நாளும் திருவாதிரை நட்சத்திரமும் சேரும் நன்னாளில் ஆதிரையான் திருவிழா கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்த ஆதிரைநாள் பற்றிக்காரைக்கால் அம்மையாரும் அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் சேந்தனாரும் பாடியுள்ளனர். திருவாரூர்க்கோயிலில் கொண்டாடப்படும் ஆதிரைநாள் திருவிழா பற்றி அப்பர் சுவாமிகள் தனியொரு பதிகமே பாடியுள்ளார்.

வீதிகள் தோறும் வெண்கொடி யோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூரர் ஆதிரை நாளால் அதுவண்ணம்

மார்கழிமாதத்துத் திருவாதிரைநாள் சிவபிரானுக்கு உரியநாளாக மட்டுமன்றி மார்கழி நீராடலுக்காகவும் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றது.

மார்கழிமாதத்து மதிநிறைந்த ஆதிரை நன்னாளில் அந்தணர்கள் செய்யும் சடங்குகளில் கலந்துகொள்ள இளம் பெண்கள் தமது அன்னையரின் வழிகாட்டுதலுடன் மார்கழி நீராட வருவது பற்றி எடுத்துரைக்கின்றது பரிபாடலில் வரும் இப்பாடல்.

ஞாயிறுகாயா நளிமாரிப் பின்குளத்து
மாஇருந்திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
வெம்பாதாக வியல் நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட
பனிப்புலர்பு ஆடி


மார்கழி மாதத்து மதிநிறைந்த நன்னாள் சைவருக்கும் வைணவருக்கும் பொதுவான புனித நாள் என்பதற்கு மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் சான்றாக விளங்குகின்றன.

மார்கழிமாதத்து மதிநிறைந்த நன்னாளில் தொடங்கும் பாவைநோன்பு அடுத்த பௌர்ணமி நாளானதைப் பூசத்தன்றுதை நீராடலுடன் முடிவடைகின்றது. இந்த இருபத்தொன்பது நாளும் இளம்பெண்கள் அதிகாலையில் எழுந்து வீடுவீடாகச் சென்று இறைவன் புகழ்பாடித்தம் தோழியரை மார்கழி நீராட அழைத்துச் செல்வர். ஆற்றில் அல்லது குளத்தில் நீராடி வந்து ஆண்டவனை வழிபடுவர்.

'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்'


என்று பாவையரை அழைக்கும் கோதை நாச்சியார் கண்ணுக்கு மை இடாமல் ,பூச்சூடிக் கூந்தல் முடிக்காமல், நெய்யும் பாலும் அருந்தாமல், பாற்கடலில் துயில் கொள்ளும் பரந்தாமன் புகழ்பாடி விரதம் காக்கும் பாவைநோன்பு பற்றி விளக்குகின்றார்.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

சங்க இலக்கியமான கலித்தொகை கன்னிப்பெண்கள் அதிகாலையில் பிறர் வீடுகள் தோம்சென்று இறைவன் புகழ்பாடுவது பற்றியும் தைநீராடுவது பற்றியும் கூறுகின்றது.

தையில் நீர் ஆடியதவம்தலைப்படுவாயோ?
பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம்பயக்கிற்பதோ


                                     கலித்தொகை
59

ஒரு மாதமாகப் பாலும் நெய்யும் தவிர்த்துப் பாவைநோன்பு நோற்றுவந்த பாவையர்கள் நோன்பு முடிவுறும் தைப்பூச நீராட்டு நாளில் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ, காலணி என்று சொல்லப்படுகின்ற ஆபரணங்கள் பலவும் அணிந்து, புத்தாடை உடுத்து, முழங்கையால் வழியும் அளவுக்கு நெய் சொரிந்து தயாரித்த பாற்சோற்றைச் சொந்தபந்தங்களுடன் கூடி இருந்து உண்பது பற்றிக் கூறுகின்றது ஆண்டாளின் திருப்பாவைப்பாடல்.

பாடிப்பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


தைப்பூச நாளன்று பெண்கள் கோவில்களில் இறைவனுக்கு நெய்ப்பொங்கல் பொங்கிப் படைத்து வழிபடும் வழக்கமும் மிகநீண்டகாலமாக இருந்துவந்துள்ளது. சம்பந்தர் தமது திருமயிலைப்பதிகத்தில் குறிப்பிடும் கோயில் திருவிழாக்களுள் இந்தத் தைப்பூசப்பொங்கல் திருநாளும் ஒன்றாகும்.

மைப்பூசும் ஒண்கை மடநல்லார் மாமயிலைக்
கைப்பூ சுநீற்றான் கபாலீச் சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்


இந்தத்தைப் பூசப்பொங்கலே தற்காலத்தில் தைப்பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று கார்த்திகை விளக்கீடு பெற்றிருந்த பெருமையைத் தீபாவளியும் தைப்பூசப்பெருநாளின் பெருமையைத்தைப் பொங்கலும் இன்று தமதாக்கிக் கொண்டன. மார்கழிமாதத்து மதிநிறையும் ஆதிரைநாளை இன்று திருப்பாவையும் திருவெம்பாவையுமே எமக்கு நினைவூட்டுகின்றன.

 

sivakad@gmail.com