சொற்றமிழ் வளர்த்த நற்றுணை
நிகண்டுகள்
கவிஞர் வி.கந்தவனம்
நிகண்டு
என்ற சொல், சொல்லுக்குப் பொருள் கூறும் நூலைக் குறிக்கும். இப்பெயர்
வடமொழி வேதாங்கங்களில் ஒன்றாக விளங்கும் நிகண்டிலிருந்து பெறப்பட்டது.
நீண்ட சொற்பட்டியலைக் கொண்டிருத்தலின் நிகண்டு என்ற பெயர்
வந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. அதனால் நிகண்டு என்பதை ஒரு
தமிழ்ச் சொல்லாகவும் கொள்ளலாம். நிகண்டுக்குக் கூட்டம் என்ற பொருளும்
உண்டு. சொற்கூட்டம் என்ற பொருளிலும் இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
நிகண்டுகள் தமிழில் எழுந்த முதற் சொற்றொகுதிகளாக, சொற்களஞ்சியங்களாக
உள்ளன. அகராதி என்ற பெயரும் இவற்றுக்கு உண்டு.
நிகண்டுகளுக்கு அடிப்படையாக அமைவது தொல்காப்பியம். முதன்முதலிற்
சொல்லுக்குப் பொருள் சொல்லிக் காட்டியவர் தொல்காப்பியரே.
சொல்லதிகாரத்தில் 120 உரிச் சொற்களுக்குப் பொருள் தந்திருக்கின்றார்.
அவர் காலத்திலிருந்து(கி.மு.5?) கி.பி. 19ஆம் நூற்hண்டுவரை
தமிழ்மொழியில் வழங்கிய சொற்றொகுதிகளே நிகண்டுகள்.
நிகண்டுகள்
18
தமிழில் 18 நிகண்டுகள் பயிலப்பட்டுவந்துள்ளன. அவையாவன: திவாகரம்,
பிங்கலம், உரிச்சொல், கயாதரம், பாரதி தீபம், சூடாமணி, சூத்திர அகராதி,
கைலாசம், ஆசிரியம், வடமலை, அரும் பொருள் விளக்கம், பொதிகை, நாமதீபம்,
பொருட்டொகை, நாநார்த்த தீபிகை, அபிதான மணிமாலை, வேதாகிரியார் சூடாமணி,
அகராதி என்பன.
1. திவாகரம்: இது திவாகரர் என்பவரால் ஆக்கப் பெற்றது. இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு என்பர். திவாகரன் என்றால் சூரியன் என்று பொருள். திவாகரமே
தமிழில் எழுந்த முதல் நிகண்டாகும். இதில் தொல்காப்பியர் காலம்முதல்
ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டுவரை உள்ள சொற்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. திவாகரம்
2518 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.
2. பிங்கலம்: இந்நிகண்டு பிங்கல முனிவரால் இயற்றப் பெற்றது. பிங்கலம்
என்றால் பொன்னிறம் என்று பொருள். இவரது காலமும் 9ஆம் நூற்றாண்டாகும்.
பிங்கலர் இளமையில் சிறந்த போர்வீரராக இருந்தமையால் தமது நிகண்டிற்
போர்ச் செய்திகளை அதிகம் தந்துள்ளார். இதில் 4121 நூற்பாக்கள் உள்ளன.
நிகண்டுகளில் மிகச் சிறந்த நூலாகப் பிங்கலம் போற்றப்படுகின்றது.
3. உரிச்சொல்:
இதன் ஆசிரியர் காங்கேயர் என்பர். இவரது காலம் 14ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகின்றது. உரிச்சொல் என்ற பெயர் சொற்பொருளைக்
கூறும் நூல் என்ற பொருளில் வந்தது. நிகண்டுகளைக் குறிக்கும் ஒரு பொதுச்
சொல்லாகவும் உரிச்சொல் வழங்கப்பட்டது. 285 வெண்பாக்களால் ஆக்கப் பெற்ற
இந்நிகண்டில் பிறமொழிச் சொற்கள் பல இடம்பெற்றுள்ளன.
4. கயாதரம்:
கயாதரர் என்பவரால் செய்யப் பெற்றமையால் கயாதரம் என்ற பெயரை
இந்நிகண்டு பெற்றது. கயாதரர் காலம் 15ஆம் நூற்றாண்டாகக்
கருதப்படுகின்றது. இது அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக்
கலித்துறைச் செய்யுள்களால் ஆக்கப் பெற்றுள்ளது. இதிற் பேச்சு வழக்குச்
சொற்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன.
5. பாரதி தீபம்: இந்நூல் திருவேங்கட பாரதியாரால் இயற்றப் பெற்றது. இவரது
காலமும் 15ஆம் நூற்றாண்டாகவே கொள்ளப்படுகின்றது. தீபம், தீபிகை என்ற
சொற்கள் விளக்கைக் குறித்து நிற்பன. பாரதி தீபமும் கயாதரம் போன்று
கட்டளைக் கலித்துறைகளால் ஆக்கப்பெற்றுள்ளது. இதில் 665 செய்யுள்கள்
உள்ளன.
6. சூடாமணி:
இதனை ஆக்கியவர் மண்டலப் புருடர் என்பவர். இவரது காலம்
16ஆம்
நூற்றாண்டு. இவரது காலம்வரை நிகண்டுகளுக்கு உரிச்சொல் என்ற சொல்லே
பயன்படுத்தப்பட்டு வந்தது. இவரே நிகண்டு என்ற சொல்லை முதன்முதலாக
வழக்கத்துக்குக் கொண்டுவந்தவர். இது 1187 விருத்தப் பாக்களால்
ஆக்கப்பெற்றுள்ளது.
7. சூத்திர அகராதி:
இது புலியூர் சிதம்பரம் ரேவண சித்தர் என்பவரால்
1594ஆம் ஆண்டில் இயற்றப்பெற்றது. இது அகராதி நிகண்டு என்றும் ரேவண
சூத்திரம் என்றும் வழங்கப்பெறும். தமிழ் நிகண்டுகளில் முதன்முதலாகச்
சொற்களை அகரவரிசைப்படுத்திப் பொருள் கூறியிருக்கும் நிகண்டு இதுவேயாகும்.
இதில் 3334 நூற்பாக்கள் உள்ளன.
8. கைலாசம்:
இது கைலாச நிகண்டு சூளாமணி என்றும் வழங்கப் பெறும். இதனை
இயற்றியவர் கைலாசம் என்பவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டு. இது 506 நூற்பாக்களால் இயற்றப் பெற்றுள்ளது. நூல் அறச் செயல்களை மிகுதியாக
வற்புறுத்துகின்றது.
9.
ஆசிரியம்: இதனை இயற்றியவர் ஆண்டிப் புலவர் என்பவர். இவரது காலம்
17ஆம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இது ஆசிரிய விருத்தங்களாற்
செய்யப்பட்டிருப்பதால் ஆசிரியம் என்ற பெயரைப் பெற்றது. ஆசிரியத்தை
ஆக்குவதற்கு திவாகரம், பிங்கலம், உரிச்சொல், கயாதரம், அகராதி நிகண்டு
ஆகியன தமக்கு ஆதாரமாக இருந்தனவென ஆண்டிப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 199 ஆசிரிய விருத்தங்கள் உள்ளன.
10. வடமலை:
இந்நிகண்டு ஈசுவர பாரதி என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. இவரது
காலம் 17ஆம் நூற்றாண்டு. இதனை இரையூர் வடமலை நிகண்டு என்றும் பல்பொருட்
சூடாமணி என்றும் அழைப்பர். 1452 நூற்பாக்களால் இது ஆக்கப்பட்டுள்ளது.
11. அரும்பொருள் விளக்கம்:
இந்நிகண்டு அருமருந்தைய தேசிகர் என்பவரால்
இயற்றப்பட்டது. இதன் பாயிரச் செய்யுள் 1863ஆம் ஆண்டில் இது எழுதி
முடிக்கப் பட்டதாகக் கூறுகின்றது. இவர் தமது நூலுக்கு உரிச்சொல்,
சூடாமணி, சூத்திர அகராதி, கயாதரம் ஆகியவற்றை ஆதாரமாகப்
பயன்படுத்தியுள்ளார். இதில் 750 விருத்தங்கள் உள்ளன.
12. பொதிகை:
இதனைச் சாமிநாதக் கவிராயர் என்ற சாமிகவிராசன்
இயற்றியுள்ளார். இவரது காலம் 18ஆம் நூற்றாண்டு. இந்நிகண்டு இரண்டு
பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி 496 விருத்தப் பாக்களாலும் இரண்டாம் பகுதி
2228 நூற்பாக்களாலும் ஆக்கப்பட்டுள்ளன.
13. நாமதீபம்:
இதனை சிவசுப்பிரமணிய கவிராயர் என்பவர் இயற்றியுள்ளார்.
இது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டிருக்கின்றது. நாமம்
என்றால் பெயர். தீபம் என்றால் விளக்கு. பெயர்ப் பொருளை விளக்கஞ்
செய்வதால் இந்நூல் நாமதீபம் எனப்பட்டது. இதிற் புதிய முறையிற் பொருட்
பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. உரிச்சொல் நிகண்டைப் போல நாமதீபமும்
வெண்பாக்களினால் ஆக்கப்பட்டுள்ளது. வெண்பாக்களின் எண்ணிக்கை 808 ஆகும்.
14. பொருட்டொகை:
இந்நிகண்டு சுப்பிரமணிய பாரதி என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பபெற்றது. இதில் 1000 நூற்பாக்கள் உள்ளன.
15. நாநார்த்த தீபிகை:
இதன் ஆசிரியர் கவிராயர் முத்துசாமிப் பிள்ளை
என்பவர். இவரது காலமும் 19ஆம் நூற்றாண்டாகும். நாநா என்றால் பல.
அர்த்தம் என்றால் பொருள். தீபிகை என்றால் விளக்கு. அதனால் பல
பொருள்களுக்கு விளக்காக அமையும் இந்நூல் நாநார்த்த தீபம் என்ற பெயரைப்
பெறலாயிற்று. இது 1102 விருத்தப் பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
16. அபிதான மணிமாலை:
இதன் ஆசிரியர் திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை
என்பவர்ளூ 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்ளூ எல்லா மதங்களையும் சமமாகக்
கருதுபவர்.
அபிதானம் என்றால் பெயர் என்று பொருள். பெயர்களின் வரிசையைத் தொகுத்துக்
கூறுவதால் இது அபிதான மணிமாலை என்ற பெயரைப் பெற்றது. அதிக வடசொற்களைக்
கொண்டுள்ள இந்நிகண்டில் எல்லாமாக 2425 நூற்பாக்கள் உள்ளன.
17. வேதகிரியர் சூடாமணி:
இதனை இயற்றியவர் வேதகிரி முதலியார் என்பவர்.
இவரது காலம் 1795-1852 ஆகும். இந்நூல் மண்டலப் புருடரின் சூடாமணி
நிகண்டின் விரிவாக்கமாக விளங்குகின்றது. அதனால் இதனை வேதகிரியார்
சூடாமணி என்று அழைப்பர். மண்டலப் புருடரின் சூடாமணியிலும் அதிக
சொற்றொகுதிகளையுடைய இந்நிகண்டு 583 விருத்தப் பாக்களால்
ஆக்கப்பெற்றிருக்கின்றது.
18. அகராதி:
இது சிதம்பரம் ரேவண சித்தரது சூத்திர அகராதியிலும்
வேறுபட்டது. இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. பிற நிகண்டுகள் போல
அல்லாது அகரவரிசையில் அகராதி போன்று சொற்களுக்குப் பொருள்களை நேரடியாகத்
தருகின்ற நூலாக இது அமைகின்றதுளூ 1301 நூற்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது.
பொதுவான இயல்புகள்
நிகண்டுகளை இயற்றுவதிற் புலவர்கள் சில மரபுகளைப் பின்பற்றிவந்திருப்பது
தெரிகின்றது. பொதுவாக எல்லா நிகண்டுகளும் 12 உட்பிரிவுகளைக்
கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அவையாவன:
1. தெய்வப் பெயர்த் தொகுதி
2. மக்கட் பெயர்த் தொகுதி
3. விலங்கின் பெயர்த் தொகுதி
4. மரப் பெயர்த் தொகுதி
5. இடப் பெயர்த் தொகுதி
6. பல்பொருட் பெயர்த் தொகுதி
7. செயற்கைவடிவப் பெயர்த் தொகுதி
8. பண்புப் பெயர்த் தொகுதி
9. செயற் பெயர்த் தொகுதி
10. ஒலிப் பெயர்த் தொகுதி
11. ஒருசொற் பல்பொருட் பெயர்த் தொகுதி
12. பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி
இலக்கண நூல்களுக்கும் நிகண்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இலக்கண நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். அதில் தொல்காப்பியர்
சொல்லாட்சி முறைகள் பற்றி விளக்குகின்றார். அவர் இலக்கணச் சொற்களாக
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியனவற்றையும்
செய்யுள்களில் வரத்தக்க சொற்களாக இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார். நிகண்டுகளில் வரும் சொற்கள்
யாவும் தொல்காப்பியர் வகுத்த இவ் எட்டுச் சொல்வகைக்குள்ளும்
அடங்குவனவாகும்.
தொல்காப்பியரும் தமக்கு முன்பு தோன்றி வளர்ந்த இலக்கிய மரபைத் தழுவியே
இலக்கணத்தைச் செய்திருக்கின்றார். நிகண்டுகளும் முற்கால
இலக்கியங்களிலிருந்தே
சொற்பட்டியலைத் தொகுத்திருக்கின்றன. இலக்கியங்கள் கற்பனை கலந்தவை. ஆயின்
இலக்கணங்களும் நிகண்டுகளும் கற்பனைகள் அற்றவை.
நிகண்டுக் கல்வி
நிகண்டுகள் தமிழ்மொழியை வளப்படுத்தினளூ தமிழ்க் கல்வியை வளர்த்தெடுத்தன.
முற்காலத் தமிழ்க் கல்வியில் நிகண்டுகளுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது. சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்வதற்கு நிகண்டுகள் பெரிதும்
உதவின. தமிழ் நிகண்டுகள் வெறும் சொற்பட்டியல்களைக் கொண்ட அகராதிகள்
அல்ல. அவை தமிழ்
மரபுபற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பலவகையான தகவல்களைக்
கொண்டிருக்கின்றன.
செய்யுள் செய்வதற்கு இலக்கண அறிவு இன்றியமையாதது. அத்துடன் சொல்வளமும்
இருத்தல் வேண்டும். புலவர்கள் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும்
கற்றுவந்தனர். திவாகரத்தின் தெய்வப் பெயர்த்தொகுதி பல பதிப்புகளைக்
கண்டிருக்கின்றது. அதிலிருந்து அது நன்கு கற்கப்பட்டு வந்திருக்கின்றது
என்பது தெரிகிறது.
நிகண்டுகளில் மிகச் சிறந்த நிகண்டாகக் கருதப்படும் பிங்கல நிகண்டும்
புலவர்களால் விரும்பிக் கற்கப்பட்டது. சூடாமணியும் சிறப்புக்கள்
பலவற்றைக்கொண்ட ஒரு நிகண்டாகும். சூடாமணி தோன்றியபின்னர் அதற்கு முன்
எழுந்த நிகண்டுகளின் பயிற்சி குறையலாயிற்று. கடந்த நூற்றாண்டில் சூடாமணி
நிகண்டு மனப்பாடத்துக்குரிய நூலாக அறிஞரால் விதந்துரைக்கப் பெற்றது.
நாவலர் பெருமான் தமிழ்ப் புலமை என்ற கட்டுரையில்(1) நிகண்டுக் கல்வியை
வற்புறுத்தியிருக்கின்றார். சூடாமணி நிகண்டைப் பதிப்பித்தவர்
அறுமுகநாவலரேயாவர். மிகவுஞ் சிறந்த பதிப்பு ஆதலாலும் மாணவர் அதனைப்
பெரிதும் விரும்பிக் கற்றதாலும் ஆறுமுகநாவலர் பதிப்பு இருபதுக்கும்
மேற்பட்ட தடவைகள் அச்சேற்றப்பட்டிருக்கின்றது.
மேனாட்டு முறைசார்ந்த தமிழ் அகராதிகளின் ஆக்கத்துக்கு நிகண்டுகள்
பெரிதும் உதவியாக இருந்தன. ஆயின் அவற்றின் வருகையைத் தொடர்ந்து தமிழ்
நிகண்டுகள் முக்கியத்துவம் இழக்கத் தொடங்கின. பிற்காலத்திற் பண்டித
பரீட்சைகளுக்கு நிகண்டுகள் பாடபுத்தகங்களாக வைக்கப்பட்டன. இக்காலத்தில்
பண்டிதருக்குப் படிப்பவர்களும் மிகவும் குறைந்துபோயினர். அதனால்
தமிழ்மொழியில் அஃகி அகன்ற அறிவுடைச் சான்றோரைக் காண்பதுவும் அரிதாக
உள்ளது.
இன்றும் என்றும் அறிஞருக்கு, முக்கியமாகச் சொல்வளத்தைப் பெருக்க
விரும்பும் சொற்பொழிவாளர், கவிஞர் ஆகியோருக்கு நற்றுணையாக விளங்கும்
நிகண்டுகளின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தும் வகையில் அவற்றை இரு
தொகுதிகளாக 2008ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள மெய்யப்பன் பதிப்பகத்தாரின்(2) பணி சொல்லவும் பெரிதே!
-----------------
1. பிரபந்தத் திரட்டு முதலாம் பாகம்.
2. தமிழ் நிகண்டுகள்: முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன்
பதிப்பகம்,
53, புதுத் தெரு, சிதம்பரம்
- 608001.
|