மனிதன்,  முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்

கவிஞர் இரா.இரவி


உலகமே நம்மைக் கண்டு வியக்கக் காரணம் நமது குடும்ப அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்ப பண்பாடு. திருமண வாழ்க்கை என்பது மிகவும் மகிழ்ச்சியானது. அதனால் தான் அதனை சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுவதாகச் சொன்னார்கள். சிலர் சொல்கிறார்கள், மாமனிதர் அப்துல் கலாம், கல்வி வள்ளல் காமராஜர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் சாதிக்கலாம் என்கின்றனர். அது தவறு, அவர்கள் விதி விலக்கானவர்கள். வாசுகி இல்லை என்றால் திருக்குறள் இல்லை. கஸ்தூரிபாய் இல்லை என்றால் சத்தியசோதனை இல்லை. செல்லம்மாள் இல்லை என்றால் பாரதியார் கவிதைகள் இல்லை. முனைவர் நிர்மலா மோகன் இல்லை, என்றால், முனைவர் மோகன் இல்லை, என்பது நூல்கள் இல்லை. இப்படி பல சாதனையாளர்களுக்கு மூலமாக முதகெலும்பாக மனைவி இருந்துள்ளார். மனைவியின் மகத்தான உழைப்பு, தியாகம் இல்லை என்றால் சாதனையாளர்கள் இல்லை.

கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்ற பல சாதனையாளர்கள், குடும்பஸ்தர்கள் தான். இளைய கலாம் என்ற நற்பெயர் பெற்றுள்ள, உலகமே வியக்கும் வண்ணம், சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பிய மயில்சாமி அண்ணாத்துரை அவர்களும் குடும்பஸ்தர் தான், இப்படி பல்வேறு சாதனையாளர்களை பட்டியலிட முடியும்.

தன் மனைவி அறிவாளியாக இல்லை என்று ஒரு நண்பர் என்னிடம் வருத்தப்பட்டார். நான் அவரிடம்,  உங்கள் மனைவி அறிவாளியாக இருந்தால் இந்நேரம் உங்களுக்குள் மணமுறிவு நடத்திருக்கும் என்று சொன்னேன். ஏனென்றால், எனது நண்பர் வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. மனைவிக்கு சிறிதும் உதவிடும் உள்ளம் இல்லாதவர். ஆணாதிக்கச் சிந்தனை மிகுந்தவர், இட்லி, மல்லிகைப் பூ போல மெதுவாக, சுவையாக உள்ளது எனப் பாராட்ட மாட்டார். ஆனால் சட்னியில் தேங்காய் நார் இருந்தற்காக மனைவியிடம் கோபப்படாமல் இநகைச்சுவையாக, 'மருத்துவர் உங்களுக்கு நார்ச்சத்து குறைவாக இருப்பதாகச் சொன்னார்,அதனால் தான் நார் சேர்த்தேன்' என்று சொன்னார்.

போதுவாக, நம்மில் பலருக்கு அடுத்தவரிடம் குற்றம் பாண்பதே குறியாக இருக்கும். நல்லதை மனம் திறந்து பாராட்டும் உள்ளம் வேண்டும். மனைவி, சுவையாக சமைக்கும் போது மனம் திறந்து பாராட்ட வேண்டும். என் மனைவி, கறி, மீன், கோழி ஆகிய அசைவ உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் நான் இவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவேன். அவர் சாப்பிடா விட்டாலும், எனக்கு சமைத்து வைப்பார்கள். இது போன்ற தியாக உள்ளம் பெண்களுக்கு மட்டுமே உண்டு. சுயநலமற்றவர்கள், குடும்ப நலன் பேனுவார்கள்.

முனைவர் இரா.மோகன் அவர்களின் தம்பிக்கு திருமண நாள். அவர், தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுவையான மடக்கு கொழுக்கட்டை செய்து கொண்டு வந்து அய்யா அவர்களிடம் கொடுத்து, காலில் விழுந்து ஆசி வாங்கினர். அய்யா அவர்களின் வீட்டிற்கு சென்ற எங்களிடமும், ஆசிவாங்கச் சொன்னார்கள். இது போன்ற உயர்ந்த பண்பாடு, நாம் வெளிநாடுகளில் பார்க்க முடியாது. திருமண வாழ்க்ககை இருபாலருக்கும் இனிமையானது. தனிமையில் இனிமை காணலாம் என்கிறார்கள், அது தவறு. தனிமையில் இருந்தால்,மனநிலை பாதிப்புத் தான் வரும். கற்பனை செய்து பாருங்கள், இந்த உலகில் ஒரு பெண் கூட இல்லாமல் ஆண்கள் மட்டுமே இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும். ஆண்கள் அனைவரும் மனநோயாளியாக இருப்பார்கள். எனவே வாழ்வின் அர்த்தம் விளக்குவது பெண்கள்.

மனைவி சண்டை போடுகிறார். கோபப்படுகிறார் என குற்றம் சுமத்துவோர் உண்டு. வாழ்க்கைக் துணைவியிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதால் கெட்டுப் போவதில்லை. பொறுமை மிகவும் அவசியம். பொறுப்புணர்ச்சி வளர்ப்பது குடும்ப வாழ்க்கை. நமது வாழ்க்கை முழுவதும் மூச்சு உள்ளவரை முதமையிலும் துணை நிற்கும் மனைவியை மதிக்க வேண்டும்.

மதுரையில் ஒரு எழுத்தாளர் தன் மனைவி இறந்து விட்ட பின்பும், அவரது பெயரை முன் பெயராகத் கொண்டு ஹேமலதா பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் எழுதி வருகிறார். மனைவி இறந்த பின்னும், அன்பு செலுத்தும் ஆண்கள் இருக்கச் தான் செய்கிறார்கள். கணவருக்கு பொறுமை, சகிப்புத்தன்மை தந்து நெறிப்படுத்துபவள் மனைவி.

பிரபல ரவுடிகள் கூட மனைவியின் வருகைக்கு பின், நல்லவர்கள் ஆன வரலாறு உண்டு. தருதலைகளை தலைவனாக்குபவள் மனைவி, புயலை தென்றல் ஆக்குபவள் மனைவி எனவே குடும்ப வாழ்க்கை மனிதனை முழு மனிதனாக ஆக்குகின்றது.



eraeravi@gmail.com