இதயக் கூட்டில் இடம்பிடித்து
இன்பமூட்டும் இனிய கவிதைகள்
முனைவர்
இரா.மோகன்
'தவம்
செய்த தவம்' என்னும் தொகுப்பின் வாயிலாக இருபத்தியோராம் நூற்றாண்டுத்
தமிழ்க் கவிதை உலகில் 2008-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர் சின்மய
சுந்தரன். 'கோ.முத்துசுவாமி' என்பது அவரது இயற்பெயர் ஆகும்.
திருநெல்வேலியில் பிறந்து, நாகர்கோவிலில் கல்வி பயின்று, சிறிது காலம்
சென்னையில் இருந்து, இப்போது பல்லாண்டுக் காலமாக ஹைதராபாத்தில் வாழ்ந்து
வரும் கவிஞர் அவர். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில்
பணியாற்றி 2014-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற சின்மய சுந்தரனுக்கு
இலக்கியமும் ஆன்மிகமும் இரு கண்கள். 'இறைவனுக்கு வந்த நாணம்' என்பது
அவரது ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்மிகம் குறித்து
ஆங்கிலத்திலும் அவர் நூல் எழுதியுள்ளார். 'ஹைதராபாத் மாநகர்த் தமிழ்ச்
சங்க'த்தின் செயலாளராகவும், 'நிறை இலக்கிய வட்ட'த்தின் தலைவராகவும், 'சித்தாந்த
வாழ்வியல் மன்றம்' என்ற அமைப்பின் நிறுவனராகவும் பொறுப்பில்
வீற்றிருந்து அவர் ஆற்றிய மற்றும் ஆற்றி வரும் அரும்பணிகள் பலவாகும். 'வாழ்க்கையை
நேசிக்க வைப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் என் கவிதைகள்
வாசகர்களோடு கை குலுக்கும்' ('என்னுரை', தவம் செய்த தவம், ப.3)
என்பது கவிஞரின் பெருமிதம் மிக்க ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். நான்கு
ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ஆம்
ஆண்டில் 'அழகின் நண்பன்' என்னும் கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு
வெளிவந்தது. இரு தொகுப்புகளையும் பதிப்புலகில் தடம் பதித்த மணிவாசகர்
நூலகம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 'கவிதைகள் மரபு வடிவில்
தனி அழகைப் பெறுகின்றன' என்பது கவிஞரின் தனிப்பட்ட கருத்து; முடிந்த
முடிபு. 'மரபோ, புதிதோ எவ்வடிவில் பிறந்தாலும் கவிதை கவிதையாக இருக்க
வேண்டும், கவித்துவம் நிறைந்ததாக இருக்க வேண்டும்' எனக் குறிப்படும்
கவிஞர், 'என் கவிதைகள் மரபு வடிவைத் தாங்கியே பிறக்கின்றன. என்னைப்
பொறுத்த வரை மரபு வடிவில் கவிதைகள் தனியழகைப் பெறுகின்றன. வாசகனுக்குத்
தனியொரு வாசிப்பனுபவத்தையும், சுகத்தையும் தருகின்றன' ('என்னுரை',
அழகின் நண்பன், ப.4) என மொழிவது
மனங்கொளத்தக்கது.
'மௌனத்தின் அழகிய கோணங்கள்' என்பது வெளிவர உள்ள கவிஞரின் மூன்றாவது
கவிதைத் தொகுப்பு. 'மௌனத்தின் பெருமையைப் பற்றி என்னால் மணிக்கணக்கில்
பேச முடியும்' எனத் தமக்கே உரிய பாணியில் மொழிவார் பேரறிஞர் பெர்னார்ட்
ஷா. 'மௌனத்தின் அழகிய கோணங்கள்' என்னும் ஆழ்ந்த அனுபவப் பொருள்
உணர்த்தும் தலைப்பில் அமைந்த இத் தொகுப்பில் எட்டு உட்தலைப்புக்களில்
95 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'எண்ணங்கள் புத்தம் பூக்கள்;
எழில்மாலை யாகித் தத்தம்
வண்ணங்கள் காட்ட வேண்டின்
மௌனமாம் நாரில் கோர்த்துத்
திண்ணெனப் பின்ன வேண்டும்!
தீதிலாக் கட்டில் மெல்லக்
கண்ணவிழ்த்து இழையும் சொற்கள்
கவித்துவம் ஏந்தி நிற்கும்!'
(மௌனத்தின் அழகிய கோணங்கள், ப.25)
என்னும் கவிஞரின் வாக்கிற்கு ஏற்ப, இத் தொகுப்பில் கவித்துவம் ஏந்தி
நிற்கும் சொற்களைக் கொண்டு, புதுப்புது எண்ணங்களைப் பலப்பல வண்ணங்களில்,
கோலங்களில் மௌனம் எனும் நாரில் கவினுறக் கோர்த்துக் கவிதைகள்
பின்னப்பட்டிருக்கக் காண்கிறோம். மேலும், 'சொல்லுற வாடல் தேர்ந்தோன்,
சொற்களுக் குள்ளே மௌனம், மெல்லுற வாடல் தானாய், முகிழ்ப்பதும்
உணர்ந்தோன்' (ப.27) எனக்
கவிஞனுக்கு வகுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம். சின்மய சுந்தரனுக்கும்
பொருந்தி வருவதை உய்த்துணர்கிறோம்.
'மரணமிலாப் பெருவாழ்வு'
என்பதன் மெய்ப் பொருள்
'மரணமிலாப் பெருவாழ்வு' என்பது இராமலிங்க
சுவாமிகள் உலகிற்கு வழங்கிய ஓர் உயரிய வாழ்க்கை நெறி; விழுமிய தத்துவம்.
இதன் உண்மைப் பொருளினைத் தம் கவிதை ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்
சின்மய சுந்தரன். 'மரணமிலாப் பெருவாழ்வு' என்பது ஒருவர் பெரும் பணத்தால்
பெறுவது அன்று; இல்லாத திறனை இருப்பதாகப் பலரைச் சொல்ல வைப்பதும் அன்று;
ஊடகத்தின் அலைவரிசையிலே தேடினால் கிடைத்திடும் வாய்ப்பு அன்று;
விளம்பரத்தால் வருவதும் அன்று. கவிஞர் கேட்பது போல், 'மரணமிலாப்
பெருவாழ்வை மாதவத்தோர் மரணத்தின் பின்னே அடைவார்கள்' என்று சொல்வதில்
என்ன பெருமை உள்ளது? அப்படி என்றால், அந்தச் சொற்றொடரே பொருள் இழந்து
நிற்குமே? பின், அத்தொடர் குறிக்கும் மெய்ப்பொருள் தான் யாது என்று
கேட்கிறீர்களா? இதோ, கவிஞர் தரும் தௌ;ளத் தெளிவான விடை:
'நிகழ் வாழ்வில் நொடிதோறும் நல்லனவே நினைத்து,
நல்லனவே செய்து வரின், நிலம் மறைந்தும் நிலைக்கும்
புகழ்வாழ்வே மரணமிலாப் பெருவாழ்வாம் காண்க!' (ப.100)
ஆம்; 'ஒருவரது அரும்புகழே அவரது உடல் காலம் ஆன பின்பும் கூட, ஆன்மாவின்
பெயர் சொல்லி அவனியிலே நிலைத்து நிற்கும்! மரணமிலாப் பெருவாழ்வு என்பது
புகழ்வாழ்வே யன்றி, மற்றென்ன?' என்பது கவிஞர் கேட்கும் பொருள் பொதிந்த
வினா.
கவிஞரின் கண்ணோட்டத்தில் பரந்து, விரிந்து பட்ட களத்தில் - தளத்தில் -
மனித நேயப் பணிகளை ஆற்றுவோர், வாழ்க்கைக் கலையின் அருமையை உணர்ந்து
அதனைப் பயிற்றுவிப்போர், கவிதைகளில் அதனை ஆற்றலுடன் எடுத்துரைப்போர்,
பிற உயிர்களின் துன்பத்தைத் தம் துன்பம் போலவே கருதிக் கருணை மனத்துடன்
அதனைத் தீர்;த்து வைக்க முயல்வோர், பாராட்டு, புகழ் என்னும் இரண்டையும்
சமமாக எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பினர் ஆகியோரது வாழ்வே நிலைபெற்ற
புகழ் வாழ்வு; இதுவே உண்மையில் மரணமிலாப் பெருவாழ்வு! புத்தர், ஏசு
பெருமான், காந்தியடிகள், அன்னை தெரசா முதலானோர் இவ் வகையில் சிறப்பாக
நினைவுகூரத் தக்கவர்கள் ஆவர்.
இ(ந)ல்வாழ்வின் அடித்தளம்
'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' (திருக்குறள், 49) எனத் தேற்ற ஏகாரம்
போட்டு இல்வாழ்க்கையின் மாண்பினைப் போற்றிப் பாடுவார் வள்ளுவர். 'இல்லறம்
அல்லது நல்லறம் அன்று' என்பது ஒளவை மூதாட்டியின் அமுத மொழி. பாவேந்தர்
பாரதிதாசன், 'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என மொழிவார். கவியரசர்
கண்ணதாசனும் தம் பங்கிற்கு, 'நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம்
தெய்வீகம்' என இனிய இல்வாழ்க்கைக்குப் புகழாரம் சூட்டுவார். வாழையடி
வாழை எனத் தொடர்ந்து இல்வாழ்க்கையின் மாண்புகளைப் போற்றி வரும் இக்
கவிஞர்களின் வரிசையில் சின்மய சுந்தரனும் சேர்ந்து கொண்டுள்ளார்;
இல்வாழ்க்கையின் இனிமைகளைத் தம் கவிதைகளில் ஒல்லும் வகை எல்லாம்
எடுத்துரைத்துள்ளார்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர்
என விட்டுக் கொடுத்து வாழ முற்பட்டால் அதுவே இனிய இல்வாழ்க்கை ஆகும்;
கணவன் மனைவி இடையே புரிதலும் விட்டுக் கொடுத்தலும் இல்லை என்றால்
வாழ்க்கையே 'இல்லை'யாகிப் போகும்; தொல்லையாக மாறும். கவிஞரின் 'ஈகோ
இல்லறம்' என்னும் கவிதை இவ்வகையில் நினைவுகூரத் தக்கது. அக் கவிதையில்
வரும் மனைவி, 'இதுவே நான், ஏற்றுக்கொள் நீ' எனக் கணவனிடம் வேண்டும் போது,
அவன், 'கொஞ்சம் நீ என் அகத்துணையாக மாறேன்!' எனக் கூறுகிறான்;
'கதவினைத் திறந்து, விட்டுக்
கொடுத்தலைச் சுவாச மாக்கி,
புதுநொடி களுக்குள் நம்மைப்
புதுப்பித்து வாழ்வோம், வாநீ!' (ப.54)
என அழைப்பு விடுக்கிறான்.
'தகவுடை ஆணும் பெண்ணும், ஒருமன தாக ஒன்றி, வாழ்வதில் மணமுண்டு என்றே,
திருமணம் எனப் பேரிட்டார்!' என மொழியும் மனைவி தன் பங்கிற்குக் கணவனிடம்,
'என்னை நீ மாற்றப் பார்க்கும்
எண்ணத்தைப் பாதி யாக்கி,
உன்னை நீ மாற்றிக் கொள்ளும்
உணர்வினை மீதி யாக்கின்,
தன்னிலை யறிந்த நல்ல
தகைமையன் எனநான் ஏற்பேன்!
அன்னதன் றோநல் வாழ்வின்
அடித்தளம்? சிந்திப் போமா?' (ப.55)
என வாதிட்டு, அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். முடிவாக, பெண்ணை என்றும்
இகழ்வுடன் பார்க்கும் வழக்கத்திற்கு முழுக்குப் போட்டு,
' ஒருவரை ஒருவர் உள்ள
வா(று) ஏற்று வாழ்வோம், வாநீ!' (ப.56)
என அழைப்பு விடுக்கிறாள்.
' செல்வார் அல்லர்என்று யான்இகழ்ந் தனனே;
ஒல்லாள் அல்லள்என்று அவர்இகழ்ந் தனர்
ஆயிடை, இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்குஎன்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே'
என்னும் ஒளவையாரின் குறுந்தொகைப் பாடலே (43)
சின்மய சுந்தரத்தின் கைவண்ணத்தில் 'ஈகோ இல்லறம்' என்னும் இக் கவிதையாகப்
புதுக்கோலம் பூண்டுள்ளது எனலாம்.
விதியைத் தள்ளு! முனைப்புடன் வினையாற்று!
கவிஞர் சின்மயசுந்தரன் 'ஊழின் பெருவலி யாவுள?' (திருக்குறள்,38) எனக்
கேட்பவர் அல்லர்; 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' (620)
என்னும் வள்ளுவர் வாக்கில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 'விதியா? வினையா?'
என்னும் அவரது கவிதை இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 'உன்
வினை உன் கை வண்ணம்; விதியினை அழைத்தல் ஏனோ?' என வினவும் கவிஞர்,
'வினை - அதுஉன் கையி ருப்பு;
விதி - அதுஉன் கையில் இல்லை;
முனை - வினை யாற்றும் ஆற்றல்
முழுமையாய் செயலாய் மாற்ற!
புனைவது விதியென் றாலும்
புரி! வினை நிகழ்த்த எண்ணம்
வனைவதில் செயல் பிறக்கும்;
வாட்டம் ஏன்? விதியைத் தள்ளு!' (ப.8)
என விதியைப் புறந்தள்ளி, முனைப்புடன்
வினையாற்றி வெற்றி வாகை சூடுமாறு வழிகாட்டுகின்றார்;
வலியுறுத்துகின்றார். 'விதித்ததைப் பற்றி நின்று, வினைசெயல் கடப்பாடு
ஆகும்!' என்பது கவிஞரின் தாரக மந்திரம்; வெற்றி மொழி.
தம்பி, உள்ளிருக்கும் ஆற்றலை உணர்! சாதனை புரி!
'சின்ன நூல் கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?' என வினவுவார்
மூத்த எழுத்தாளர் சிவசங்கரி. அது போல, சின்மய சுந்தரனும் 'சின்னவன் நீயா!
இல்லை!' என்னும் கவிதையில் அடித்துப் பேசுகிறார்; ஆணித்தரமாகப்
பாடுகின்றார்; பயில்வார் நெஞ்சில் நம்பிக்கையை ஆழமாக விதைக்கின்றார். 'சின்னச்
சின்ன சாவிகளே, திறக்கும் பெரிய பூட்டுகளை! சின்ன எளிய சொற்களிலே,
சிறந்த எண்ணம் வெளிப்படலாம்! சின்ன தாகச் சுரக்கும் நீர், சீறிப் பாயும்
நதியாகும்!' எனத் தொடங்கும் அக் கவிதை,
'சின்ன வாழ்க்கைப் பின்னணியில்
சாதனை நிகழ்த்தி சிரி, தம்பி!'
என இளைய தலைமுறைக்கு எழுச்சியும் நம்பிக்கையும் ஊட்டுகின்றது.
'பூவில் சிறிய பிச்சிப்பூ, பரப்பும் வாசம் பல தொலைவு; கோவில் மூர்;த்தி
சிறிது எனினும், கொண்ட கீர்த்தி பெரிது என்பர்; ஓவிய நுட்பக் கலைவல்லோன்,
வரைவான் நகக்கண் ணதில் கூட' என வளர்ந்து செல்லும் அந்தக் கவிதை,
' யாவும் எளிதாம் உனக்குள்ளே
இருக்கும் ஆற்றல் உணர்ந்தாலே!' (ப.131)
என ஒவ்வொருவர் உள்ளேயும் புதைந்து - பொதிந்து - கிடக்கும் ஆற்றலின்
வலிமையை உணர்த்தி நிறைவடைகின்றது.
இக் கவிதையின் வாயிலாகக் கவிஞர்,
இளையோர்க்கு விடுக்கும் செய்தி இதுதூன்: 'ஞாலம்' என்பது பரந்து விரிந்த
சிறுபுள்ளி; இளைய பாரதமே, இதை நெஞ்சில் பதித்துச் சாதனை புரி!'
'நம்பிக்கை' என்னும் தலைப்பிலேயே கவிஞர் ஓர் அருமையான கவிதையைப்
படைத்துள்ளார். அதன் தொடக்க வரிகள் படிப்பவர் நெஞ்சில் நம்பிக்கையைத்
தோற்றுவிக்கும் வல்லமை படைத்தவை. அவ் வரிகள் இதோ:
'நம்பிக்கை எனும்சொல்லில் இருக்கும் 'நம்'மை
'நாமாக' அணைத்துக் கொள்; வரும்நம் பிக்கை!
நம்பிக்கை எனும்சொல்லில் இருக்கும் 'கை'யால்
நாம்உதவ முன்வந்தால் வரும்நம் பிக்கை!
நம்பிக்கை எனும்சொல்லில் 'நம்பி' என்ற
நல்லபதம் ஆடவரில் சிறந்தோன் ஆகும்;
நம்பிவரின் ஏமாற்றம் நல்கான் என்னும்
நல்லுணர்வைத் தருபவனே 'நம்பி' யாவான்!' (அழகின் நண்பன், ப.17)
'நம்பிக்கை ஒரு வரமாம், நம்பி! கேள் நீ!, நம்பியிதை வாழ்வில் கொள் நீ!'
என இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் கவிஞர், 'நம்பிக்கை பூமணம் போல்
நம்மைச் சுற்றி, நாம் இருக்கும் திசை நோக்கிப் பிறரை ஈர்க்கும்;
வளர்பிறையாய் வெளிச்சம் நல்கும்; நகை நல்கும்; துன்பங்கள் நம்மை
நெருங்காது விலகி ஓடும், நம்பிக்கை நெஞ்சுரம் ஆகும். தன்னம்பிக்கை
நமக்குள்ளே இருக்கின்ற இறையை நாடி நம்பிக்கை கொள வைக்கும். தன்னம்பிக்கை,
இறை நம்பிக்கை இரண்டும் சேர்ந்தால் நானிலமே உன் கையில், நம்பீ! நம்பு!'
என அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர்.
கவிஞரின் உள்ளத்தில் கோலோச்சி
நிற்பவர்கள்
சின்மய சுந்தரனின் படைப்பு உள்ளத்தில் தெய்வப் புலவர் கம்பருக்கும்
பாட்டுக்கொரு புலவர் பாரதியாருக்கும் தனி இடம் உள்ளது. அவர் உலகப்
பெருங்கவிஞர் கம்பரின் பெருமையை நான்கு கவிதைகளிலும், பாட்டுக்கொரு
புலவர் பாரதியாரின் புகழை இரண்டு கவிதைகளிலும் வானளாவ உயர்த்திப்
பாடியுள்ளார்.
'சொற்களின் தவம்; கம்பனின் திறம்' என்பது கம்பரின் பாட்டுத் திறம்
பற்றிய கவிஞரின் இரத்தினச் சுருக்கமான மதிப்பீடு ஆகும். கணவனின் சொல்லை
மீறிக் கானகத்திற்கு உடன் சென்றாலும் அந்தக் கணவனுக்குத் துணையாய்
நின்ற அணங்கான சீதை; கணவனான வாலியும் அறிந்திடாத அறிவுக் கூர்மை
வாய்க்கப் பெற்ற பெண்ணான தாiர் எதிர்நிலைத் தலைவனான இராவணனின்
துணைவியான மண்டோதரியோ புகழ் மணம் பொருந்திய மங்கை! இங்ஙனம் 'உணர்வினில்
உயர்ந்த பெண்கள் உருவாக, உயர்ந்தான் கம்பன்!' என்கிறார் கவிஞர். அவரது
கணிப்பில், 'பாத்திரப் படைப்பில் எந்தப் பங்கமும் இல்லாக் காதை யாத்திட
விரும்புவோர்க்கு ஓர் இலக்கணம் வகுத்தோன் கம்பன்!' ஆவான். 'சுந்தர
காண்டம்' ஒன்றே போதுமாம், இக் கருத்தினை நிலைநாட்ட!
இன்னொரு பிறவியை ஏற்க இராமன் துடிக்கின்றானாம்! மன்னவனாக அல்ல்
மைதிலிக்காகவும் அல்ல் வன்மனம் கொண்ட அரக்கர் மீது போர் தொடுத்து வெற்றி
வாகை சூடிடவும் அல்ல் பின், எதற்கு? அட! 'கம்பன் பாட்டில் பிணைந்து
அனுபவம் துய்த்தற்காம்!' இங்கே கம்பன் தமிழுக்குக் கவிஞர் தந்திருக்கும்
உயர்வு மலையினும் மாணப் பெரிது!
'கம்பனின் சீதை இக்காலப் பெண்ணே!' என்பது கவிஞரின் முடிந்த முடிபு.
கொஞ்சம் ஈர்ப்புடன் அலசிப் பார்த்தால், மனம் கலந்து சீதையைக் கற்றால் 'என்றுமே
மனத்திட்பத்தால் முக்காலம் வெல்லும் ஆற்றல் முகிழ்க்குமாம் உள்ளே!' 'சீதை
இக்காலப் பெண்ணே!' என்பது நன்கு விளங்குமாம்! காலங்கள் மாறினாலும் -
எக்காலம் ஆனாலும் - கம்பனின் சீதை தன் வாழ்வில் ஏற்ற சீலங்கள் -
ஒழுக்கங்கள் - இன்றும் பெண்களுக்குச் சீரிய வழியினைக் காட்டுமாம்!
'ஒப்பற்ற களஞ்சியம்' என்றும் 'நுண்கவிதையின் பயிற்றுக் கூடம்!' என்றும்
கம்பன் கவிதைக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர், 'நின்று நிலாவுக கம்பன்
நற்புகழ்!' என்னும் கவிதையில், கம்பன் தம் காப்பியத்தில் வரும் ஒவ்வொரு
கதைமாந்தரும் ஓரோர் அறத்தினை உயர்த்திக் காட்டி ஒளிர வைத்திருக்கும்
தகைமையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பிறன் மனையை விரும்பாத
பேராண்மைச் செவ்வறம், 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' எனக் கொண்டு
தம்பிக்கு அரசை விடுத்துக் கானகம் புறப்பட்டுச் சென்ற இராமன், 'இராமன்
இருக்கும் இடமே அயோத்தி' என ஏற்று அவனைப் பவ்வியமாகப் பின்தொடர்ந்து
சென்ற சீதை, அண்ணன் பாதுகையே அரசு என்று கொண்டு ஆண்ட பரதன் - இங்ஙனம்
காப்பியக் கதைமாந்தர்களின் பண்பு நலனில் ஒளிரும் சிறியன சிந்தியாத
சிறப்பை அக் கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார் கவிஞர். 'தவம் செய்த
தவம்' என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள 43 கவிதைகள் (தவம் செய்த தவம்,
பக்.87-97) கம்ப ராமாயணம் என்னும்
கட்டித் தங்கத்தை வெட்டி எடுத்து, கவி நயம் என்னும் சாறு பிழிந்து,
தட்டித் தட்டிச் சின்மய சுந்தரன் படைத்துத் தந்துள்ளவை ஆகும். பதச்சோறு
ஒன்று:
'கம்பனின் படைப்பில் யாரும்
குறைந்தவர் இல்லை; கங்கைச்
செம்மலாம் குகனும், வெற்றி
சடாயுவும், காற்றின் மைந்தன்
நம்பிநல் அனுமன் தானும்,
நலம்பெறும் சுக்ரீ வன்தன்
விம்மித வீரர் குழாமும்,
விளங்கினர் மேன்மை நெஞ்சால்' (தவம் செய்த தவம், ப.93)
நயமும் நளினமும் நயத்தக்க நாகரிகமும் நுட்பமும் களிநடம் புரிந்து
நிற்கும் இக் கவிதைகளைக் 'குட்டி இராமாயணம்' எனச் சிறப்பித்துக் கூறலாம்.
கம்பருக்கு அடுத்து, சின்மய சுந்தரனின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளை
கொண்டிருப்பவர் பாரதியார் ஆவார். 'பாரதம்' என்னும் நம் நாட்டிற்கான
பெயர்க் காரணம் அறிஞர்களின் பார்வையில் பலவாக இருக்கலாம்; ஆனால்,
சின்மய சுந்தரன் காட்டும் காரணம் நயமானது:
''பாரதி பிறந்த தாலே பாரதம்' என்போம்!' எனப் பறையறைகிறார் கவிஞர். 'பாரதி
எழுத்தில் மக்கள் பாரதம் எழுந்தது!' என்பது அவரது அழுத்தம் திருத்தமான
கருத்து ஆகும்.
'உத்தியில், மொழியாளு மையில்,
உவமையில் ஒருவன்! இஃதோர்
சத்தியம்: அவனைப் போல
மகாகவி சகத்தில் இல்லை'
என்பது பாரதியார் பற்றிய கவிஞரின் திட்டவட்டமான கணிப்பு.
'பன்முகக் கவிஞன் எங்கள் பாரதி' என நெஞ்சாரப் போற்றும் கவிஞர், 'பாரதி
கருத்தாக்கங்கள், பயனுறும் வழியைக் காண்போம்!' என உலகிற்கு
அறிவுறுத்து-கின்றார்.
மயக்குறு மழலையும் முதுமையில் இளமையும்!
சின்மய சுந்தரனின் எழுதுகோல் 'குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும்,
தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை'யும் பாங்குறப் படம்பிடித்துக் காட்டியுள்ளது; 'தொடித்தலை
விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று, இரும்இடை மிடைந்த, சில சொல்
பெருமூதாள'ரையும் நடப்பியல் பாங்கில் பதிவு செய்துள்ளது. முன்னைய
போக்கிற்குக் கவிஞரின் 'எங்கள் வீட்டு இளவரசி' என்னும் கவிதை நல்லதோர்
எடுத்துக்காட்டு; பின்னைய பான்மைக்கு அவரது 'முதுமையில் இளமை' என்னும்
கவிதை சிறந்த உதாரணம்.
'சாமி' என்றால்
கைகுவிப்பாள்;
'செல்லமே' என்றால் கைவிரிப்பாள்;
'காமி' என்றால் கைமூடிக்
காட்டி நிற்பாள் குறுஞ்சிரிப்பை!
பூமி இவள்கால் படுகையிலே
புத்தம் அகலிகை போல்உயிர்க்கும்!
ஆம், இப் புவியின் அழகெல்லாம்
மழலை யராலே மலர்ந்ததம்மா!' (ப.157)
எனக் கொஞ்சும் தமிழில் சிறுசிறு செயல்களில் வெளிப்படும் மழலையின் கொள்ளை
அழகினைச் சொல்லோவியமாக்கிக் காட்டும் கவிஞர், 'முதுமையில் இளமை' என்னும்
கவிதையில் இன்று 'பெரிசு' என்று சொல்லி உலகம் இளக்காரம் செய்யும்
முதுமையின் உணர்வுகளை உள்ளது உள்ளபடி சித்திரித்துள்ளார்.
'தூரிகை இயற்கை கொண்டு
தீட்டிய ஓவியத்தில்
ஓரிரு வரிகள் கூடி
ஒளிர்வதாம் முதுமை, கேளிர்!'
என்பது முதுமை பற்றிய கவிஞரின் அழகிய படப்பிடிப்பு, 'நாடுவீர்
உள்ளந்தன்னில், நலிவிலா இளமை ஒன்றே!' என்பதே மனித குலத்திற்குக் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள்.
தத்துவ நோக்கும் புதிய பார்வையும்
தத்துவ நோக்கும் புதிய பார்வையும் கைவரப் பெற்றவராகச் சின்மய சுந்தரன்
விளங்குகின்றார்.
' பூவினில் மணம் அடக்கம்;
பூமியில் பொன் அடக்கம்;
நாவினில் சுவை அடக்கம்;
நற்றமிழ்ச் சொல் அடக்கம்;
பாவினில் கவிஞன் உள்ளம்
பத்திர மாய் அடக்கம்;
சீவினில் சிவனும் தானே
சிரிப்புடன் அடங்கு வானே!' (தவம் செய்த தவம், ப.21)
எனத் தத்துவ நோக்கில் பாடுவது கவிஞருக்கு வசப்படுவது போலவே,
'நுணுகிய 'ஹைக்கூ' விற்குள்
நுட்பமம் பொருளைப் போல
சிணுங்கலில், மழலைச் சொல்லில்
சிறுகதை வடிப்பாள் அன்னை!' (ப.15)
எனக் குழந்தையின் சிணுங்கலுக்கு இன்றைய ஹைகூ கவிதையை உவமை காட்டவும்
கவிஞரால் முடிகின்றது.
இதயக் கூட்டில் இடம்பிடித்து இன்பமூட்டும் இனிய
தமிழ்
'குட முழுக்கில் ஒளிர்கின்ற கோபு ரத்துக்
கலசம் போல் முகத்தழகி! கவனம் ஈர்த்துத்
தடம் பதிக்கும் மார்பழகி!' (மௌனத்தின் அழகிய கோணங்கள், ப.37)
எனக் கற்பனை நலம் ததும்பி நிற்க இளம் பெண்ணின் பருவ எழிலைப்
படம்பிடித்துக் காட்டும் போதும்,
' ... ... கொஞ்சம்
வருத்தமாய் நடக்கும் போது
வழியிலே சிறுகு ழந்தை
திருத்தமாய் 'டாடா' காட்டிச்
சிரித்திடின் வரமே, கண்ணா!' (தவம் செய்த தவம், ப.24)
என வாழ்வில் அரிதாய்க் கிடைத்திடும் வரத்தினைப் பகிர்ந்து கொள்ளும்
போதும்,
'இல்லையென்று உரைப்போர் உள்ளும்
இருப்பவன் கடவுள்' (ப.26)
என முரண் சுவையுடன் கடவுளின் இருப்பினைப்
பறைசாற்றும் போதும்,
'அன்னையின் முலைப்பால் போல
ஆற்றுநீர் வாழ வைக்கும்' (தவம் செய்த தவம், ப.87)
எனக் கம்பன் தமிழை எளிய நடையில் வடித்திடும்
போதும்,
'இனிப்புண்டேல் கசப்புண்டாம், இதுவே வாழ்க்கை' (ப.103)
என அனுபவ அடிப்படையிலான வாழ்வியல் பாடத்தை உணர்த்தும் போதும்,
'கவலைகளைக் குப்பையெனக் கொட்டி வைக்கும்
கூடையாமோ மனமதுவும்?' (அழகின் நண்பன், ப.12)
என மனமதன் செம்மையை நிலைநாட்டும் போதும்,
'பொருள்குவிந்த சொல்கவிந்தால் கவிதை யாகும்' (ப.48)
எனக் கவிதை எனப்படுவது யாதென மொழியும் போதும்,
' ... ... ... காதல்
கற்பித்தால் வருவதல்ல, கணிதம் அல்ல்
விற்பனையில் கிடைப்பதல்ல் விருப்பம் போல
விளையாடும் பொருளல்ல' (ப.57)
எனக் காதலின் செவ்வியைச் சித்திரிக்கும் போதும்,
' எல்லாமே அரசியல்தான் எங்கள் நாட்டில்!
எம்மக்கள் நடந்திடுவர் அவர்கள் பாட்டில்!' (ப.81)
என நாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் போதும், கலைமாமணி
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் குறிப்பிடுவது போல், 'நாமெல்லாம் அறிந்த
சொற்கள், அற்புதமான கற்பனை, இயல்பான நடை, இனிய தமிழ் என்று இவரது (சின்மய
சுந்தரனின்) கவிதைகள் எல்லாம் நம் இதயக் கூட்டில் இடம்பிடித்து
இன்பமூட்டுகின்றன' (அணிந்துரை, அழகின் நண்பன், ப.7)
எனலாம்.
.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
|