நடைச் சித்திரத்திற்குக் கவிப்பேரரசு வைரமுத்துவின் பங்களிப்பு

முனைவர் இரா.மோகன்

டைச் சித்திரம் (Pen Picture) என்னும் இலக்கிய வகை தமிழுக்குப் புதியது; மேலை இலக்கியத் தாக்கத்தால் தமிழுக்கு அறிமுகம் ஆனது. ஆங்கிலத்தில் ஏ.ஜி.கார்ட்னர் எழுதிய 'சமூக நிலைதாங்கிகள்' (Pillars of Society), 'தீர்;க்கதரிசிகளும் மறையோரும் மன்னர்களும்' (Prophets, Priests and Kings) என்னும் இரு நூல்களும் இவ் வகையில் தடம் பதித்தவை. இவை நாற்பதுகளில் 'அக்கிரகாரத்து அதிசயப் பிறவி' என அறிஞர் அண்ணாவால் அடையாளம் காட்டப்பெற்ற எழுத்தாளர் வ.ரா.வின் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்தன. 'தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி' என்ற படி, தமிழிலும் இத்தகைய சொற்சித்திரங்களைத் தீட்ட வேண்டும் என்ற சித்தம் அவரது நெஞ்சில் கால் கொண்டது. அதன் விளைவாக, 'நடைச் சித்திரம்' (1940), 'தமிழ்ச் பெரியார்கள்' (1943), 'வாழ்க்கை விநோதங்கள்' (1947) என்னும் நூல்கள் தமிழுக்கு நல்வரவு ஆயின. வ.ரா.வை அடியொற்றி எழுத்தாளர் கல்கியும் 'யார் இந்த மனிதர்கள்?' (1998) என்ற நடைச்சித்திரத் தொகுப்பினை வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். இவற்றின் தொடர் முயற்சிகளாகச் 'சுதேசமித்திரன்' ஆசிரியர் ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸனின் 'தராசு' (1942). பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் 'தமிழ்ச் சுடர் மணிகள்' (1995), வானதி திருநாவுக்கரசின் 'நினைக்க.. நினைக்க...' (1987), நெ.து.சுந்தர வடிவேலுவின் 'நினைவில் நிற்பவர்கள்' (1982), கு.அழகிரி சாமியின் 'நான் கண்ட எழுத்தாளர்கள்' (1988), டொமினிக் ஜீவாவின் 'அட்டைப் பட ஓவியங்கள்' (1986), பி.ஸ்ரீ.யின் 'நான் அறிந்த தமிழ் மணிகள்' (1971), அ.ச.ஞானசம்பந்தனின் 'நான் கண்ட பெரியவர்கள்' (2001), கி.நாச்சிமுத்துவின் 'தமிழ் தந்த சான்றோர்கள்' (2007), குமரி அனந்தனின் 'இத்தரையில் முத்திரை பதித்தோர்' (1992), கண்ணதாசனின் 'சந்தித்தேன் சிந்தித்தேன்' (1982), எம்.சரவணனின் 'நெஞ்சில் நிற்கும் மனிதர்கள்' (4 பாகங்கள்: 2008, 2001, 2003, 2004), ஏ.நடராஜனின் 'காற்றினிலே...' (2001), தாமரை மணாளனின் 'உள்ளத்தைக் கிள்ளியவர்கள்' (2001), திருப்பூ10ர் கிருஷ்ணனின் 'சுவடுகள்' (2003), 'இலக்கிய முன்னோடிகள்' (2007), ஞா.மாணிக்கவாசகனின் 'வரலாறு படைத்தவர்கள்' (2002), சி.மோகனின் 'நடைவழிக் குறிப்புகள்' (2000), கல்கி ராஜேந்திரனின் 'அது ஒரு பொற்காலம்!' (2009), திருவேங்கிமலை சரவணனின் 'தலைநிமிர்ந்த தமிழர்கள்' (இரு பாகங்கள்: 2004, 2006), சின்னக் குத்தூசியின் 'எத்தனை மனிதர்கள்!' (2004), கர்ணனின் 'கி.வா.ஜ முதல் வண்ணதாசன் வரை' (2011), ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் 'மனத்தில் பதிந்தவர்கள்' (7 தொகுதிகள்: 1997; 2003; 2006; 2008; 2009; 2011; 2014), வாலியின் 'இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்' (2004), தமிழருவி மணியனின் 'மறக்க முடியாத மனிதர்கள்' (2009) முதலான நூல்கள் அடுத்தடுத்து வெளிவந்து நடைச் சித்திரம் என்னும் இலக்கிய வகைக்கு வளம் சேர்த்தன. வாழையடி வாழை என வரும் இவ்வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் 1991-ஆம் ஆண்டில் சேர்ந்துள்ளார்; 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' என்னும் நூலின் வாயிலாக நடைச் சித்திர வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பினை நல்கியுள்ளார்.

நடைச் சித்திரம் எனப்படுவது...

நடைச் சித்திரம் என்பது வாழ்க்கை வரலாறு
(Biography) அன்று; ஆனால், வாழ்க்கை வரலாற்றின் கூறுகள் அதில் இருக்கும். நடைச் சித்திரம் என்பது புனைகதையும் (Fiction) அன்று; ஆனால், புனைகதையின் தாக்கம் அதில் காணப்படும். படைப்பாளியின் மனத்தில் பதிந்த - ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்திய - ஓர் ஆளுமையாளரின் வாழ்க்கை பற்றிய சுவையான தகவல்களை - அவரது ஆளுமைப் பண்புகளை - ஒரு நடைச் சித்திரம் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்யும். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, குடும்பம் முதலான வாழ்வியல் செய்திகளைக் கால வரிசை முறைப்படியே சொல்லிச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் நடைச் சித்திரத்திற்கு இல்லை. நடைச்சித்திரத்தைப் படைக்கும் எழுத்தாளரின் உள்ளத்தில் தாக்கத்தினை ஏற்படுத்திய ஆளுமையாளர், படிப்பவரின் உள்ளத்திலும் அதே தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். இதுவே வெற்றி பெற்ற ஒரு நடைச் சித்திரத்தின் பண்பும் பயனும் ஆகும்.

'சின்னஞ்சிறு வயது முதல் என் இதயக் குளத்தின் மேற்பரப்பில் அலைகள் கிளப்பியவர்கள் - சலனம் செய்தவர்கள் - பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் பலர். அந்தப் பலரில் சிலர் மட்டும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்... பாறையாய்க் கிடந்த என்னை இலக்கியவாதியாய் இளக்கியவர்கள் - தமிழுக்கு என்னைப் பழக்கியவர்கள் - லட்சியங்களை மயிலிறகால் வருடியவர்கள் - வாழ்வின் முக்கியமான நிமிடங்களில் என்னை முடிவெடுக்க வைத்தவர்கள் - சமுத்திரம் நிலப்பரப்பை பாதிப்பது மாதிரி என் சம காலத்தையே பாதித்தவர்கள் - சராசரி மனிதர்களாய் இருந்தும் என்னுள் சரமழையாய் விழுந்தவர்கள் - இவர்களெல்லாம் எனது சின்னத் தூரிகையில் சித்திரமாகியிருக்கிறார்கள்' ('நாவற் பழத்தை ஊதி விட்டுச் சாப்பிடும் ஒரு மாட்டிடையன் மாதிரி...', இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,
pp.iii-iv) என்னும் வைரமுத்துவின் கூற்று இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

வைரமுத்துவின் நடைச் சித்திரங்கள்: 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்'

தாத்தா பொன்னையாத் தேவர் தொடங்கி டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி வரையிலான 31 பேரைப் பற்றிய நடைச் சித்திரங்கள் இந் நூலில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இவர்களிடம் தாம் கண்ட நல்ல பண்புகளை - இவர்களது ஆளுமையில் சிறந்து விளங்கும் அற்புதமான கூறுகளை - மட்டுமே ஆராதிப்பதோடு நின்று விடாமல், நடைச்சித்திரங்களைத் தீட்டிய நாயகர்களின் சமூகப் பங்களிப்பினையும் மதிப்பிட்டிருப்பது வைரமுத்துவின் தனித்தன்மை ஆகும்.

வைரமுத்துவின் நடைச் சித்திரங்களில் சிங்க நடை போட்டுச் சிகரத்தில் ஏறியவர்களும் உண்டு; எளிய நிலையில் வாழ்ந்து வரும் சாமானியர்களும் உண்டு. அரசியல், திரைப்படம், பத்திரிகை, இலக்கியம் ஆகிய துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் உண்டு; குட்டையன், அ ஆ டீச்சர், சின்னராசு, சீனிப்பாட்டி, நற்பணிக் கழக நண்பர்கள் என்றாற் போல் சாதாரணமானவர்களும் உண்டு. வைரமுத்துவின் எழுதுகோல் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், இளையராஜா, பாரதிராஜா, சிவசங்கரி, பி.சுசீலா, ஜேசுதாஸ் என்றாற் போல் புகழேணியின் உச்சிக்குச் சென்ற ஆளுமையாளர்களையும் நடைச் சித்திரங்களாகத் தீட்டி இருக்கின்றது; பாஸ்கரன் (உதவியாளர்), கஸ்தூரி அம்மாள் (சமையல்கார அம்மாள்), 'சொல்லாமல் போனவள்', 'அந்த ஒருத்தி', 'இருளாண்டி என்கிற மோகன்', 'தாயுமானவன்', 'தாஸ்', 'வேப்பமர(ம்)ன்' என்றாற் போல எளிய மனிதர்களையும் - ஏன், அஃறிணை உயிரான வேப்ப மரத்தைக் கூட - தமது நடைச் சித்திரங்களின் பாடுபொருள் ஆக்கியுள்ளது.

எடுப்பும் தொடுப்பும் முடிப்பும்

எடுப்பாகத் தொடங்கி, சுவையாக வளர்த்துச் சென்று, முத்தாய்ப்பாக முடிப்பதிலே தான் ஒரு நடைச் சித்திரத்தின் வெற்றி அடிங்கியுள்ளது எனலாம். எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்னும் மூன்று கூறுகளையும் நன்கு திட்டமிட்டுச் சரிவரக் கையாளும் சதுரப்பாடு வாய்க்கப் பெற்றவராக வைரமுத்து விளங்குகின்றார். ஒரு விமானம் குறிப்பிட்ட தொலைவு ஓடுதளத்தில் ஓடி, சட்டென்று வானத்தில் ஏறித் திட்டமிட்ட தொலைவு வரை பறந்து சென்று, சரியான நேரத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்குவது போலத் தான் வெற்றி பெற்ற நடைச் சித்திரமும். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், வாசகரைப் படிக்கத் தூண்டும் எடுப்பான தொடக்கம், தொடர்ந்து அவரைப் படிக்க வைக்கும் வண்ணம் சுவையாக வளர்த்துச் செல்லல், படித்து முடிந்தாலும் வாசகர் நெஞ்சில் பல்வேறு உணர்வலைகளை எழுப்பும் முத்தாய்ப்பான முடிப்பு: இவையே ஒரு வெற்றி பெற்ற நடைச் சித்திரத்தின் முதன்மைக் கூறுகள் - அடிப்படைப் பண்புகள் - ஆகும். இக் கருத்தியலின் ஒளியில் நாம் வைரமுத்துவின் நடைச் சித்திரங்களை அலசி ஆராயலாம்.

' பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களை தூரத்திலிருந்து பார்த்தால் பொருட் செல்வர்.
அருகிலிருந்து பார்த்தால் அவர் அருட்செல்வர்.
ஆழ்ந்து பார்த்தால் அவர் அறிவுச் செல்வர்.' (இ.கு.க., ப.
166)

-பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பற்றிய நடைச் சித்திரத்தின் நெஞ்சை அள்ளும் எடுப்பான தொடக்க வரிகள் இவை. பொருட் செல்வராக - அருட் செல்வராக - அறிவுச் செல்வராக விளங்கும் பொள்ளாச்சி நா.மகாலிங்கனாரின் பன்முகப் பரிமாணங்களை இவ் வரிகள் பறைசாற்றி நிற்பது நெற்றித் திலகம் அந் நடைச் சித்திரத்தின் இடைப் பகுதியில், 'அவர் தந்தை கோடு போட்டுக் கொடுத்தார்; இவர் ரோடு போட்டு முடித்தார்' (ப.
168) என ஒரே வரியில் மகாலிங்கனாரின் ஆளுமைப் பண்பினை அடையாளம் காட்டி விடுவார் வைரமுத்து.

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய வைரமுத்துவின் நடைச் சித்திரம் எடுப்பும் தொடுப்பும் முடிபு;பும் கச்சிதமாக அமைந்த அற்புதமான ஒன்று; ஒன்பது பக்க அளவில் அமைந்த அழகிய அந் நடைச் சித்திரத்தில் இருந்து சில துளிகள்:

• 'ஒரு கவிதையில் சொல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் அவரே (கண்ணதாசனே) எனக்கு வழிகாட்டி.'
• 'கவிதையின் அத்தர்களை அவர் உடைநடையில் தெளித்து விட்ட அழகு இருக்கிறதே! அதனால், தமிழ் வாசனை வாக்கியங்களைத் தனக்குள் வரவு வைத்துக் கொண்டது.'
• 'செரிக்க முடியாத விஷயங்களைக் கூடச் சிரிக்க முடிந்தவாறு சொல்லத் தெரிந்தவர் அவர்தான்.'
• 'இலக்கியத்தில் எளிமை, எளிமையில் இலக்கியம் இரண்டும் வசப்பட்டது அவருக்குத் தான்.'
• 'முற்றுப்புள்ளிக்குப் பிறகும் கூட ஒரு பாடலைச் சிந்தித்துக் கிடந்திருக்கிறானே! அவன் கவிஞன்.'
• 'கண்ணதாசனின் உரைநடையும், கவிதைகளும் இலக்கிய வரலாற்றில் கிழிக்க முடியாத பக்கங்களில் அழிக்க முடியாமல் எழுதப்படும்.'
'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை'


இந்த வரிகளைக் கேட்டிருந்தால் அந்த நித்தியக் கவிஞனை
மரணம் நெருங்கியிருக்காது.
என்ன செய்வது?
மரணத்திற்குக் காது கேட்காது.'
(இ.கு.க.,
192-193; 194; 195; 196; 197; 199; 200)

இங்கனம் தொடக்கம் முதல் முடிவு வரை கண்ணதாசனில் இருந்து நல்ல நல்ல உதாரணங்களைக் காட்டி அவரைப் பற்றிய நடைச் சித்திரத்தினை வைரமுத்து வளர்த்துச் சென்றிருக்கும் அழகே அழகு. 'தவம் செய்த தவமாம் தையல்' என்பது போல், 'கவியரசு கண்ணதாசன்' என்பது ஒரு நித்தியக் கவிஞனுக்குப் பிறிதொரு முத்திரைக் கவிஞன் செவ்விய சொல்லால் வடித்திருக்கும் சுந்தரச் சித்திரம் ஆகும்.

'எம்.ஜி.ஆர்.' பற்றிய வைரமுத்துவின் நடைச் சித்திரம் உணர்ச்சி மயமானது. அதன் முடிப்பு முத்தாய்ப்பானது; உருக்கமும் உயிரோட்டமும் ததும்பி நிற்பது:

'ஒரே ஒரு சந்திரன்தான்;
ஒரே ஒரு சூரியன்தான்;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர். தான்' (
ப.
208)

ஒரு சிறந்த நடைச் சித்திரம் எங்ஙனம் முடிக்கப் பெற வேண்டும் என்பதற்கான நல்லதோர் உதாரணம் இது!

இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளில் நடைச் சித்திர நாயகர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் கலையில் வல்லவர் வைரமுத்து. இதற்குக் கட்டியம் கூறும் சில மணிவாசகங்கள் இதோ:

• சிவாஜி கணேசன்: 'தமிழர்களின் சாயங்காலத்துச் சந்தோஷம்!' (இ.கு.க., ப.
7).
• சுரதா: 'உவமைகளின் உற்சவம்!' (ப.
17)
• ஜேசுதாசின் குரல்: 'எந்திர வாழ்க்கையின் ஆறுதல் மந்திரம்!' (ப
.29)
• பாரதிராஜா: 'தமிழ்த் திரையுலகின் மூன்றாம் தலைமுறையை – தொழில்நுட்பக் கலைஞர்களின் யுகமாக மலர வைத்தவர்' (ப.
62)
• பி.சுசீலாவின் குரல்: 'மனசுக்குள் தேன் பிலிற்றும் அதிர்வுகள்' (ப
.83)
• கஸ்தூரி அம்மாள்: 'சோறு போடும் தெய்வம்' (ப.
180)

மொழி ஆளுமை

வைரமுத்துவின் நடைச் சித்திரங்களில் தனியிடம் பெறுவது அவரது மொழி ஆளுமை ஆகும். அடிப்படையில் வைரமுத்து ஒரு கவிஞர் என்பதால், கவிதையின் வண்ணமும் வனப்பும் அவரது உரைநடையிலும் கொலு வீற்றிருக்கக் காணலாம். 'அவரது (கண்ணதாசனின்) உரைநடையில் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பத்தியாய் இருக்கும். அப்படிப் பத்தி பிரிக்கும் உத்தி பைபிளில் இருந்து தி.ஜ.ர. கைப்பற்றியது. தி.ஜ.ரவிடமிருந்து கண்ணதாசன் கைபற்றியது. கண்ணதாசனிடமிருந்து நான் கற்றது' (இ.கு.க., ப.195) என்னும் வரைமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம் இங்கே நினைவு கூரத்தக்கது. கவித்துவம் களிநடம் புரியும் வைரமுத்துவின் மொழி ஆளுமைக்குப் பதச்சோறு ஒன்று இதோ:

'சாலமன் பாப்பையா வித்தியாசமான கலவைகளின் விளைச்சல்.
இருட்டுக்கு வேட்டி கட்டியது மாதிரி ஒரு தோற்றம்.
கரும்பலகையில் நேர்கோடு போட்டது மாதிரி ஒரு சிரிப்பு.
திருக்குறளில் ஓர் அதிகாரம் எழுதி வைக்க வசதியான அகலமான நெற்றி.
அறிவுச் சூட்டில் உதிர்ந்து போன முன்முடி.
சிரிப்பும் குறும்பும் மிதக்கும் சின்னக் கண்கள்.
புலமையில் தொலைந்து போகாத பணிவு.
பணிவில் கரைந்து போகாத புலமை.


சாலமன் பாப்பையா என்றவுடன் என் ஞாபகக் குளத்தில் நுரை கட்டும் விஷயங்கள் இவைகள் (இ.கு.க., ப
.77)

-படிப்பவர் மனக்கண் முன்னே பேராசிரியர் சாலமன் பாப்பையாவைக் கொண்டு வந்து நிறுத்த வல்ல, கவித்துவம் ததும்பி நிற்கும் உயிர்ப்பான வரிகள் இவை!

'நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே'


என்னும் சங்கச் சான்றோரின் வைர வரிகள், பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு - மரங்களோடு - கொண்டிருந்த உணர்ச்சி மயமான உறவினைப் பறைசாற்றும். வைரமுத்துவின் நடைச் சித்திரத்திலும் இவ் வரிகளுக்கு நிகராக மதிக்கத் தக்க ஓர் உயரிய இடம் உண்டு:

'எனக்கு மூன்று மகன்கள்.
இரண்டு பேர் பள்ளிக்கூடம் போகிறார்கள்.
ஒருவன் வீட்டுக் காவலுக்காய் வெளியே நிற்கிறான்.
அவனுக்கு வயது நான்கு.
அவன் பெயர் வேப்ப மரம்'
(இ.கு.க., ப.
112)

'வேப்ப மர(ம்)ன்' என்னும் நடைச் சித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் இப் பகுதி தனித்தன்மை வாய்ந்தது; மரங்களின் மீது வைரமுத்து கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றையும் பாசத்தையும் புலப்படுத்துவது.

சுருக்கமும் செறிவும், திட்பமும் நுட்பமும், அருமையும் எளிமையும், அழகும் ஆழமும் வைரமுத்துவின் நடைச் சித்திர மொழியில் சிறந்து விளக்கும் தனிக்கூறுகள். இவ் வகையில் பேராசிரியர் பெரியார்தாசனைப் பற்றிய வைரமுத்துவின் நடைச் சித்திரம் குறிப்பிடத்தக்கது கிராமத்து இயற்கை அழகில் இருவரும் உளம் ஒன்றி ஈடுபட்டதைச் சுட்டும் இடத்தில், 'இருவரும் அத்வைதம் அடைந்தோம்' (இ.கு.க., ப.190) என நயமாகவும் நுட்பமாகவும் எழுதிச் செல்வார் வைரமுத்து. அதே போல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் பெரியார்தாசனைச் சந்திக்க நேர்ந்ததையும், 'ஒரு குறிஞ்சிப்பூ வருஷங்களுக்குப் பிறகு தான் அவரை நான் சந்திக்கிறேன்' (இ.கு.க., ப.188) என இலக்கிய மணம் கமழக் குறிப்பிடுவார் வைரமுத்து, மேலும், 'அறிவும் நகைச்சுவையும், ஜடை போட்டுக் கொண்டு நடை போட்டுக் கொண்டிருக்கும் அவர் எழுத்தில்' (இ.கு.க.,ப.190) என்னும் எழுத்தாளர் பெரியார்தாசனைப் பற்றிய வைரமுத்துவின் மதிப்பீட்டிலும் சுவையான சொல் விளையாட்டு இடம் பெற்றிருக்கக் காணலாம்.

வைரமுத்துவின் மொழியில் தனித்துவம் வாய்ந்த, புத்தம் புதிய, பொருளுக்கு நெருக்கமான, எவரும் இதுவரை கையாளாத, வித்தியாசமான உவமைகள் மண்டிக் கிடக்கின்றன. இவ் வகையில் படிப்பவர் உள்ளம் கவரும் உதாரணங்கள் சில:

• 'கடவுள் பெயர் சொன்னால் அழுதுவிடும் நாயன்மார் மாதிரி என் பெயரை யார் சொன்னாலும் அவசரமாய் அழுதுவிடுவீர்கள்.'
• 'தமிழ் சினிமாவில் எப்போதும் கடைசியாய் வரும் போலீஸ் மாதிரி, அவர் கடைசியாய்த் தான் பேசுவார்.'
• 'பழைய காதலியை அவள் கணவனோடு பார்த்த காதலன் மாதிரி – தள்ளியிருந்தே தர்ம தரிசனம்.'
• 'அவன் பையிலிருந்த சில்லறைகள், தேர்தல் தோல்விக்குப் பின் கூட்டணிகள் மாதிரி சிதறி ஓடின.'
• 'நீராவி இஞ்சினும் மின்சாரமும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்த மாற்றங்களைப் போல் உங்கள் (டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின்) எழுத்துக்களைப் படித்த பிறகு எனக்குள்ளும் எத்தனையோ மாற்றங்கள்.'
(இ.கு.க., பக்.
4; 11; 49; 125; 213)

தமிழக மக்களின் நாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழிகளுக்கும் மூத்தோர் அமுத மொழிகளுக்கும் இணையாக வைரமுத்து படைத்திருக்கும் புதுமொழிகள் சுவை மிக்கவை. இங்கே அவற்றிற்கான இரு சான்றுகளைக் காண்போமா?

''ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதற்கு இணையாக 'நூலகம் செல்வது சாலவும் நன்று' என்று எழுதி வைத்தார் (வடுகபட்டி கிளை நூலகத்தில் நூலகர்).' (இ.கு.க., ப.
136)

''இந்த நாட்டில் காசு இருந்தால் எதையும் வாங்கலாம் - தாயைத் தவிர' - இந்த வாசகத்தை நான் சந்திக்கும் நூறு மனிதர்களில் ஒரு மனிதனாவது சொல்லாமல் இருந்ததில்லை.

இந்தப் பழமொழியைக் காய்மொழியாக்கியிருக்கிறார் கஸ்தூரி அம்மாள்.
குறைந்த சம்பளத்திற்கு எங்கள் குடும்பத்திற்கு ஒரு தாய் வாங்க முடிந்திருக்கிறது.' (இ.கு.க., பக்.
180-181)

பழமொழிக்கு எதிராக வைரமுத்து இங்கே கையாண்டிருக்கும் 'காய்மொழி' என்னும் சொல்லாட்சி புதுவது.

முன்னோர் மொழி பொருளே அன்றி அன்னோர் சொல்லையும் தொடரையும் பொன்னே போல் போற்றி வைரமுத்து தம் நடைச் சித்திரங்களில் ஆங்காங்கே எழுதிச் சென்றிருக்கும் இடங்களும் உண்டு. இவ் வகையில் குறிப்பிடத்தக்க இரு சான்றுகள்:
' நானும் நாளைகளை நம்பும் நந்தனாராவேன்' (இ.கு.க., ப.
116)

'பளிச்சென்று விழித்தேன.
அன்று புதிதாய்ப் பிறந்தேன்'
(இ.கு.க., ப.
94)

'புதிதாய்ப் பிறத்தல்' என்னும் கவியரசர் பாரதியாரின் தொடராட்சியில் வைரமுத்துவுக்குத் தனி ஈடுபாடு உண்டு. உதவியாளர் பாஸ்கரனைப் பற்றிய நடைச் சித்திரத்திலும் அதன் ஆட்சியைக் காணலாம்:

''சரி! உன்னைச் சேர்த்துக் கொள்கிறேன்; முதலின் உன் லுங்கியை இறக்கிவிடு!' என்றேன். அன்று புதிதாய்ப் பிறந்தான் ...
அவனை நினைக்கும் போதெல்லாம் நான் பாரதியின் பாடலை பாட பேதத்தோடு முணுமுணுக்கிறேன்.

'எங்கிருந்தோ வந்தான்
தமிழ்ச்சாதி நானென்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்!''
(இ.கு.க., பக்.123; 126)

கவிதையைப் போலவே உரைநடைக்கும் முரண் சுவை என்பது ஒரு தனி அழகு தான்!

'உங்களுக்குப் படிக்கத் தெரியாது... ஆனால் படிக்கத் தெரியாத உங்களிடம் நான் படித்துக் கொண்டது அநேகம். 'போலீஸ் ஸ்டேஷன் - கோர்ட் - ஆஸ்பத்திரி மூன்றுக்கும் மனிதன் போகக் கூடாது என்று எனக்குப் பாடம் சொன்னது நீங்கள் தானே!' (இ.கு.க.,ப.2) எனத் தாத்தா பொன்னையாத் தேவர் பற்றிய நடைச் சித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதி இவ் வகையில் மனங்கொள்ளத்தக்கது.

இங்ஙனம் நுண்ணோக்கு நெறி நின்று ஆராயும் போது கவிப்பேரரசு வைரமுத்துவின் நடைச் சித்திரங்களில் புலனாகும் நயங்களும் நுட்பங்களும் பற்பல ஆகும். இக் கட்டுரை அத்தகைய ஆய்வு முயற்சிக்கான ஒரு கோலப் புள்ளி; அவ்வளவே!

 


.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021