'கவிஞர்களுள் மோனையைப் போல் முன் நிற்கும் அப்துல் ரகுமான்!'

பேராசிரியர் இரா.மோகன
 

கவிக்கோவின் பவள விழா மலரில் வெளிவந்த கட்டுரை



'நேயர் விருப்பம்' தொகுப்பிற்கு 'எடைக்கல்' என்னும் தலைப்பில் எழுதிய அணிந்துரையில் 'உவமைக் கவிஞர்' சுரதா,

' இன்றுபலர் புதுக்கவிதை எழுது கின்றார்
எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்
முன்நிற்கும் மோனையைப் போல் முன்நிற் கின்றார்'


எனக் குறிப்பிடுவார். மேலும் அவர்,

' தமிழகத்துக் கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்
சிந்திக்கும் முறைபுதிது! ஒன்றைப் பற்றித்
திறனாயும் இவர்முறையோ புதிய தாகும்'


என மொழிவார்; 'வார்த்தைகளைத் தேனாக்கும் ரகுமான்' எனக் கவிக்கோவுக்குப் புகழாரமும் சூட்டுவார். சுரதாவின் நோக்கில்,

' ... ... புதுமை தன்னை
அடைகாக்கும் சிந்தனைகள் வேண்டு மாயின்
அப்துல் ரஹ்மான் நூலாம் இந்நூல் போதும்!'
(பக்.
8-10)

'எண்ணி எண்ணிப் புதுமை பல பின்னிப் பின்னி', கவிக்கோ படைத்திருக்கும் நூல் 'நேயர் விருப்பம்'.

'கால வரிசைப் படி பார்த்தால், 'நேயர் விருப்பம்' தான் என் முதல் கவிதைத் தொகுதியாக வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் 'பால்வீதி' என் முதல் தொகுதியாக முந்திக் கொண்டதால் இது இரண்டாவது தொகுதியாக வெளிவர வேண்டியதாயிற்று... இந்தத் தொகுப்பில் அறுபதுகளில் நான் எழுதிய மரபுக் கவிதைகள், புதுக்கவிதையை நோக்கிப் புறப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள், எழுபதுகளில் எழுதிய புதுக்கவிதைகள் என்று மூன்று கால கட்டக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன' (பக்.5-6) என இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டிருப்பது நோக்கத் தக்கது.


முன்னைய மரபினை வளர்த்தல்


ஒரு சிறந்த கவிஞர் முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவதோடு நின்று விட மாட்டார்; அமைதியடைந்து விட மாட்டார். அதனினும் ஒரு படி மேலே சென்று தமது தனித்தன்மை துலங்க முன்னயை மரபினை வளர்ப்பதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார்; கண்ணும் கருத்துமாக இருப்பார். ஓர் எடுத்துக்காட்டு:

' கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து'
(1127)

என்பது காமத்துப் பாலில் 'காதற் சிறப்பு உரைத்தல்' என்னும் அதிகாரத்தில் தலைவியின் கூற்றாக இடம்பெற்றுள்ள ஓர் அழகிய குறட்பா. 'எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார். ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுத மாட்டோம்!' என்பது இக் குறட்பாவின் பொருள்.

'கண்ணும் எழுதேம்' என்னும் தலைப்பிலேயே கவிக்கோ அப்துல் ரகுமான் 'நேயர் விருப்பம்' தொகுப்பில் ஓர் அழகிய கவிதையைப் படைத்துள்ளார். அதில் அவர் படைக்கும் காதலி தன் கண்ணுக்கு மை எழுதாமைக்கு ஆறு நுட்பமான காரணங்களை ஆருயிர்த் தோழியிடம் அடுக்கிக் கூறுகின்றாள்.

'கண்ணில் ஏன்
மை தீட்டவில்லை?
என்கிறாயா தோழி
சொல்கிறேன்'

எனத் தொடங்கி அவள் எடுத்துரைக்கும் காரணங்கள் இதோ:

1.கண்ணுக்குள் என்
காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?

2.என் சூரியன் மீது
இருட்டைத் தடவுவதோ?

3.வீட்டுக்குள்ளே அவர்;
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்?

4.அவரையே தீட்டி
அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம்
வேண்டுமா?

5.கண்ணை விட மென்மையானவர்
காதலர்;
கோல் பட்டால் வலிக்காதா?

6.அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா?' (ப
.82)

தமிழ்க் கவிதை மரபு நீண்ட, நெடிய பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டது. கவிக்கோ அப்துல் ரகுமான், சங்கச் சான்றோர் தொடங்கி பாரதியார் வரையிலான முன்னைய படைப்பாளிகளின் எழுத்துக்களை எல்லாம் எழுத்தெண்ணிப் பயின்றுள்ளார்; அவரது ஆழங்காற்பட்ட பழந்தமிழ் இலக்கிய பயிற்சியையும் புலமையையும் பறைசாற்றும் சான்றுகள் 'நேயர் விருப்பம்' தொகுப்பு முழுவதும் மண்டிக் கிடக்கின்றன பதச்சோறு இதோ:

'நாமென்றுரை - இன்றேல்
நானென்று சொல் - இந்த
நாடகம் இன்றே முடித்துவிடு!'
(ப.
74)

'மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் என்றன், மூச்சை நிறுத்தி விடு' (பாரதி பாடல்கள், ப.
163) என்னும் பாரதியாரின் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.


கவிக்கோ காண விரும்பும் ஒப்பிலாத சமுதாயம்


'எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ!'
                                               
(பால காண்டம், நகரப் படலம், பா.
74)

எனக் கவிப் பேரரசர் கம்பர் படைத்துக் காட்டும் கோசலம் அவரது விழுமிய கனவு ஆகும்.
'முப்பது கோடி ஜனங்களின் ஸங்க முழுமைக்கும் பொது உடைமை, ஒப்பிலா சமுதாயம், உலகத்துக்கு ஒரு புதுமை' (பாரதி பாடல்கள், ப.544) என வாழ்த்திசைப்பார் கவியரசர் பாரதியார்.

'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட, போரிடும் உலகத்தை வேறொடு சாய்ப்போம்!' என முழக்கம் இடுவார் பாவேந்தர் பாரதிதாசன்.

இங்ஙனம் வாழையடி வாழை எனத் தொடர்ந்து வரும் கவிஞர்களின் வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் சேர்ந்து கொண்டுள்ளார்; 'ஒப்பிலாத சமுதாயம்' என்னும் தலைப்பில் தாம் கனவு காணும் நல்லதொரு சமுதாயம் குறித்து நல்லதொரு கவிதை படைத்துள்ளார். அவரது கருத்தியலில் 'ஒப்பிலாத சமுதாயம்' என்பது 'தனித்திருந்தவன், பசித்திருந்தவன், விழித்திருந்து கண்ட கனா!' மட்டும் அன்று. அவர் காண விரும்பும் நல்லதொரு சமுதாயம் என்பது அடைய முடியாத ஆகாயக் கோட்டை அன்று; எட்ட முடியாத இலட்சியங்கள் தேவை இல்லை. 'எட்ட முடிகின்ற யதார்த்தக் குடில் போதும்!' என மொழியும் கவிக்கோ, அந்தச் சமுதாயத்தில் காணப்பெறும் விழுமிய நிலைகளை நிரந்தினிது கூற முற்படுகின்றார். அங்கே –

1. சாதிகள் சரித்திரத்தின் ஏடுகளில் மட்டும் இருக்குமே ஒழிய, நடைமுறையில் இருக்காது.

2. போர்ப் படைகள் பொருட்காட்சிச் சாலைகளில் காணப்படுமே தவிர, புழக்கத்தில் காணப்படாது.

3. சமுதாய ஒழுங்குக்குச் சட்டங்கள் இருக்கும்; நீதி மன்றம் நீதியை விற்கும் சந்தையாக அல்லாமல், சத்தியத்தின் நிழலாக இருக்கும்.

4. கட்சி நாயகம் அல்ல, ஜனநாயகம் நடக்கும்.

5. கல்விக் கூடங்களில் ஆண்டின் இறுதியிலே பட்டம் அளிக்கும் பயன்படா விழா அல்ல, வேலை அளிக்கும் விழா நடக்கும்.

6. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட மாட்டர் திருமணங்கள் சொர்க்கத்தை நிச்சயிக்கும்.

7. பெருமைக்கு உரிய பெண்மை போற்றப்படும்; பூஜிக்கப் படாது.

8. சமயங்கள் எல்லாம் தைக்கின்ற நூலாகும்; கத்திரிக் கோல்களின் காரியத்தைச் செய்யா.

9. அனைவரும் ஓர் நிலை அல்ல் உழைக்கும் சாதியே உயர்ந்த சாதி.

10. சுதந்திரம் சுவாசமாய் இருக்கும்; பிறர் தர வாங்கும் பிச்சையாய் இராது.

நிறைவாக, அங்கே கடமை கவுரவமாக - உரிமை ஊதியமாக - சத்தியம் சமயமாக - இதயம் முகவரியாக - புன்னகை பொதுமொழியாக இருக்கும் என்கிறார் கவிக்கோ.

தௌளத் தெளிந்த இறைச் சிந்தனை

'ஆயிரம் திருநாமம் பாடி...' கவிக்கோவின் தௌ;ளத் தெளிந்த இறைச் சிந்தனையைப் பறைசாற்றும் ஓர் அற்புதமான கவிதை. 'ஒரு நாமம் ஓர் உருவம், ஒன்றுமிலாய்! ஆயிரம், திருநாமம் பாடி நாம் தௌ;ளேணம் கொட்டுகிறோம்' என்னும் திருவாசகத்தின் மணிவார்த்தைகளுடன் அக் கவிதை தொடங்குவது நோக்கத்தக்கது.

' அரன் என்றழைப்பினும்
வரன் கொடுப் பவன் நீ;
அரியென் றிசைப்பினும்
சரியென் றிசைப்பாய்;
கர்த்தன்என் றுரைப்பினும்
அர்த்தம் நீதான்;
அல்லா எனினும் நீ
அல்லாது வேறு யார்?'
(ப.
31)

அரன், அரி, கர்த்தன், அல்லா என எப் பெயரிட்டு அழைப்பினும் செவி சாய்ப்பவன், அருள் பாலிப்பவன் இறைவன் என்பது கவிக்கோவின் முடிந்த முடிபு. அவரைப் பொறுத்த வரையில் 'எப்பெயரும் ஆகுபெயர் தான் இறைவனுக்கு; அவனுக்கு ஆகாத பெயர் என எதுவும் இல்லை'.
' ஆத்திகர் நாவினில் நீ
அமர்ந்திருத்தல் வியப்பில்லை;
நாத்திகரின் நாவினிலும்
நடம்புரியும் நாயகன்நீ!
'இல்லை' எனும் பெயரே
இறைவா! அவருனக்குச்
சொல்லுகின்ற பெயரென்றால்
எல்லையுண்டோ உன் பெயர்க்கே?'
(ப.
33)

என்னும் கவிதையின் முடிப்பு முத்தாய்ப்பானது கம்ப ராமாயணத்தின் இரணியன் வதைப் படலத்தில் பிரகலாதன் 'நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய' தனது தந்தை இரணியனிடம், 'நீ சொன்ன சொல்லினும் உளன்!' என உரைப்பது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

முதுமை பற்றிய கவிக்கோவின் உயிரோட்டமான பதிவு


' தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இரும்இடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே'
(
243)

என்னும் சங்கச் சான்றோர் தொடித்தலை விழுத்தண்டினாரின் கூற்று நடப்பியல் பாங்கில் முதுமையின் தன்னிரக்க உணர்வினைப் படம்பிடித்துக் காட்டும். முதுமையில் மூன்றாவது காலாக அமைந்து உற்றுழி உதவும் ஊன்றுகோலைச் சுட்டும் 'தொடித்தலை விழுத்தண்டு' என்னும் அழகிய சொற்றொடரால் அறியப்படுபவர் அவர்.
தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய புறநானூற்று
243-ஆம் பாடலின் உணர்ச்சி மிகு விரிவாக்கமே கவிக்கோ அப்துல் ரகுமானின் 'முதுமை' என்னும் கவிதை. அதில் முதுமை குறித்து அவர் தீட்டி இருக்கும் உயிரோட்டமான, படிம அழகு மிளிரும் வரிகள் இவை:

' நிமிஷக் கறையான்
அரித்த ஏடு;

இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத் தட்டு;

ஞாபகங்களின்
குப்பைக் கூடை;

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்;

காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
வர்ண ஓவியம்!'
(ப.
22)

'தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று...' என்னும் தொடித்தலை விழுத்தண்டினாரின் அடி கவிக்கோவின் கைவண்ணத்தில்,

' நடக்கும் பாதையெல்லாம்
காலோடு கோல்சுவடு
மறுப்பதுபோல் தலையாட்டம்
வாழ்வையா?
மரணத்தையா?'

எனப் புதுக்கோலம் கொண்டுள்ளது. இங்கே தற்குறிப்பேற்ற அணியின் திறன்மிகு ஆட்சியைக் காண்கிறோம்.
'இரும் இடை மிடைந்த சிலசொல்' என்னும் புறநானூற்றுப் பாடல் அடி கவிக்கோவின் பதிவில்,

' இருமல்
இது இருமல் அல்ல
மரணம்
உயிர் வீட்டுக் கதவை
இடிக்கும் ஓசை'

எனப் புதுப்பிறவி எடுத்துள்ளது.


புறநானூற்றுப் பாடலில் 'பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே' எனத் தன்மை நவிற்சியில் அமைந்த ஈற்றடி, கவிக்கோவின் சொல்லோவியத்தில் பின்வருமாறு அணி நயத்தோடு களிநடம் புரிந்து நிற்கின்றது:

' வாழ்க்கை வாக்கியத்தின்
உணர்ச்சிக் குறியாயிருந்த
உடல்
வளைகிறது
கேள்விக் குறியாக!'


எளிய உவமைகள் உணர்த்தும் உயரிய ஆளுமைப் பண்புகள்

கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்பாளுமையைப் பறைசாற்றும் ஒரு சிறந்த கவிதை 'காந்தியடிகள்' இக் கவிதையில் காந்தியடிகளின் விழுமிய ஆளுமைப் பண்புகளைப் புலப்படுத்தும் வகையில் கவிக்கோ கையாண்டிருக்கும் உவமைகள் எட்டும் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும், உயிர்ப்பும் உயர்வும் வாய்ந்தவை. இக் கவிதை முழுவதும் அவர், காந்தியடிகளின் பண்பு நலன்களுக்கு முதலில் மின்னுகின்ற, விலை மதிப்பு மிக்க, பகட்டான, ஆரவாரமான பொருள்களை சுட்டிக் காட்டி, அவற்றை மறுத்து, பின்னர் மங்கலமான, பயன் மிக்க, எளிய, அன்றாடம் தேவைப்படும் பொருள்களை உவமைகளாக எடுத்தாண்டு காந்தியடிகளின் மேன்மையை நிலைநாட்டி இருப்பது மிகச் சிறப்பு. கவிக்கோவின் மொழியிலேயே முழுக் கவிதையையும் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்:

' சங்கீத வித்தகர் ஓசையல்ல – அவன்
தாயின் மலரிதழ்த் தாலாட்டு!
மங்கையர் தங்க மினுக்கல்ல – அவன்
மங்கல மஞ்சள் மணிக்கயிறு!
இங்கித வர்ணப்பூ வாணமல்ல – அவன்
இளைத்த குடிசை அகல்விளக்கு!
அங்கப் பகட்டுப்பூ மாலையல்ல – அவன்
ஆடைக் குதவும் பருத்தி மலர்!
இமைக்கும் ஒளிச்சுடர் வைரமல்ல – அவன்
எல்லோரும் தேடும் எளிய உப்பு!
அமுதமோ தேனோ மதுவோ அல்ல – அவன்
அன்றாடம் தேவைப் படுகின்ற நீர்!
யமகம் திரிபுள்ள செய்யுளல்ல – அவன்
எளிய நடைச்செந் தொடைக் கவிதை!
யமுனை நதிக்கரைச் சின்னமல்ல – அவன்
ஏழையின் வீதிச் சுமைதாங்கி!'
(ப.
42)

தாயின் தாலாட்டு – மங்கலமான மஞ்சள் கயிறு – குடிசை அகல் விளக்கு – மானம் காக்கும் ஆடைக்கு உதவும் பருத்தி மலர் – எல்லோரும் தேடும் எளிய உப்பு – அன்றாடம் தேவைப்படுகின்ற குடிநீர் – எளிய நடையில் அமைந்த செந்தொடைக் கவிதை – ஏழையின் வீதியில் நிற்கும் சுமைதாங்கி: இவற்றினும் மேலாக, காந்தியடிகளின் உயரிய பண்புகளை வேறு எவ்வகையிலும், எவரும் புலப்படுத்தி விட முடியாது.

சிந்தையை அள்ளும் சித்திர மின்னல்கள்

''சித்திர மின்னல்கள்' பகுதியில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளின் வடிவ(மு)ம் தமிழுக்குப் புதுமையானது' (ப.6) என இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் மொழிவார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது கூற்றுக்குக் கட்டியம் கூறி நிற்கும் சில சொற் சித்திரங்களை ஈண்டுக் காண்போம்.

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்' எனச் சிலப்பதி-காரத்திற்குப் புகழாரம் சூட்டுவார் கவியரசர் பாரதியார். கவிக்கோ அப்துல் ரகுமானோ,

' பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகி தன்
கால்நகையால் வாய்நகைபோய்
கழுத்துநகை இழந்த கதை'
(ப.
91)

எனச் சிலப்பதிகாரத்தினைக் குறிப்பிடுகின்றார். இங்கே 'நகை' என்ற சொல்லினை ஐந்து முறை கையாண்டு கவிக்கோ படைத்திருக்கும் இலக்கிய விருந்து சுவை மிக்கது. 'பால் நகையாள்' என்றும் 'வெண்முத்துப் பல் நகையாள்' என்றும் கண்ணகியின் கள்ளங்கரவற்ற புன்னகையையும் அவளது முத்துப் போன்ற வெண்மையான பல் வரிசையையும் பாராட்டும் கவிக்கோ, 'கால் நகை' (சிலம்பு), 'வாய் நகை' (புன்னகை), 'கழுத்து நகை' (மங்கல அணி – தாலி) என 'நகை' என்னும் சொல்லைக் கொண்டு நிகழ்த்தி இருக்கும் சொல் விளையாட்டு நயம் மிக்க ஒன்று.

மெல்லிய நகைச்சுவை உணர்வும் அங்கதச் சுவையும் களிநடம் புரிந்து நிற்கும் குறுங்கவிதை 'அரசு மாற்றம்'.

' பிள்ளை வேண்டும் என்று
பெண்கள் அரசு சுற்றியது
அக்காலம்;

பிள்ளை வேண்டாம் என்று
அவர்களை 'அரசு' சுற்றுவது
இக்காலம்!'
(ப.
92)

இங்கே முதலில் வரும் 'அரசு' மரத்தைக் குறிப்பது; அடுத்து வரும் 'அரசு' அரசாங்கத்தைச் சுட்டுவது. அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும இடையிலான வேறுபாட்டைக் கவிக்கோ இக் கவிதையில் வெளிப்படுத்தி இருக்கும் பாங்கு நெஞ்சை அள்ளுவதாகும்.

கவிக்கோவின் கண்ணோட்டத்தில் நாற்பாலையும் முப்பாலில் அடக்கிக் கூறியிருக்கும் திருக்குறள் 'மும்முலைத் தாய்!' பண்புடையாளர் பலருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் புத்தகம் என்பது 'கற்பை இழக்காத பரத்தை!' (ப.92) தமிழ் யாப்பியலில் நாம் அறிந்தது 'வெண்டளையால் இயன்ற வெண்பா!'; உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலோ கவிக்கோவின் படப்பிடிப்பில் 'பெண்டளையான் இயன்ற வெண்பா!'

'பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்' என்பார் 'காவியக் கவிஞர்' வாலி. கவிக்கோவோ 'பற்கள் என்ற முட்களே பூக்கும் பலர்' புன்னகை என்கிறார்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பூசலார் நாயனாரின் வாழ்வைக் குறித்துப் பாடி இருப்பார். கவிக்கோ அப்துல் ரகுமான் 'கற்பனை' (ப.93) என்னும் ஒற்றைச் சொல்லிலேயே பூசலார் நாயனாரின் முழுப் பரிமாணத்தையும் புலப்படுத்தி விடுவது குறிப்பிடத்தக்கது.
'காதல் சபையில் / பேச்சுக்கு எதிராக நிறைவேறும் / நம்பிக்கை இல்லாத் தீர்மானம்' என்பது 'முத்தம்' பற்றிய கவிக்கோவின் அழகிய சித்திர மின்னல்.

ஐம்பெரும் உத்திகளின் கூட்டுக் களி

சரி விகித உணவு போல மெல்லிய நகைச்சுவை, கூரிய அங்கதம், அழகிய முரண், சொல் கேட்டவுடன் பொருள் கண்கூடாகும் படிமம், சீர்மிகு தொன்மம் ஆகியவற்றின் கூட்டுக் களியாகக் கவிக்கோவின் கவிதைகள் விளங்குகின்றன.
கவிக்கோவின் படைப்புலகில் நகையும் அங்கதமும் கை குலுக்கி நிற்கும் ஒரு சுவையான இடம்:

' எத்தனை பதவி வெறி
இந்த மனிதருக்கு?
செத்தால் அதையும்
சிவலோக பதவியென்பார்!'
(ப.
17)

ஒரு மனிதன் இறந்ததைக் கூட, 'சிவலோக பதவி அடைந்தார்' எனக் குறிப்பிடும் உலக வழக்கினை இங்கே சாடியுள்ளார் கவிக்கோ.

'தாயைப் பெற்ற நாள்!': முரண் சுவை சிறந்து விளங்கும் அழகிய தலைப்பு.

' அது ஒரு
முரண்பட்ட குருஷேத்ரம்
அங்கே-
அர்ச்சுனர்கள்
ஆயுதம் ஏந்தத் துடித்தார்கள்;
ஆனால் கண்ணனோ
ஆயுதங்களை நிராகரித்தான்;
அவன் புல்லாங்குழலே
எதிரிகளைப் பணிய வைத்து விட்டது!

இந்த நாள்
ஓர் அதிசய நாள்
பிள்ளைகள் கூடி
ஒரு தாயைப் பெற்ற நாள்!'
(பக்.
50-51)

குருஷேத்ரம் (விடுதலைப் போர்), அர்ச்சுனர்கள் (ஆயுதப் புரட்சியால் விடுதலை பெற எண்ணியவர்கள்), கண்ணன் (காந்தியடிகள்), புல்லாங்குழல் (அகிம்சை), எதிரிகள் (ஆங்கிலேயர்), தாயைப் பெற்ற நாள் (விடுதலை பெற்று மற்றும் குடியரசான நாள்) எனக் குறியீட்டு நோக்கில் பொருள் கொள்ளும் வகையில் இக் கவிதையைச் செறிவான மொழியில் யாத்துள்ளார் கவிக்கோ.

எதையும் தனித்தன்மை துலங்க எடுத்துரைப்பதில் கை தேர்ந்தவர் கவிக்கோ, ஓர் எடுத்துக்காட்டு:

' உழைப்பவர்கே ஆள்கின்ற
உரிமையுண்டு என்பதொரு
உண்மையை உலகமெல்லாம்
உணரட்டும் என்றோ
உடலிலே எத்தனையோ
உறுப்பிருக்க - இயற்கை
நமது விரல்களுக்கே
நக மகுடம் சூட்டியது?'
(ப.
40)

இங்கே விரல் நகங்களை மகுடமாக உருவகம் செய்திருக்கும் கவிக்கோவின் பாட்டுத் திறம் நனிநன்று.

பெண்களுக்குப் பொறுமைக் குணம் எப்படி வந்தது தெரியுமா? 'மசக்கை நேரத்தில் என்னைத் தின்றதால் தான்!' (ப.15) என்கிறது மண். என்ன நயமான கற்பனை பாருங்கள்!

இரத்தினச் சுருக்கமான மொழியில் 'சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடு ஆகும்' வண்ணம் படைப்பதில் கவிக்கோவுக்கு நிகர் கவிக்கோவே.

' மரணம்' : மூச்சுத் தொடரின் முற்றுப் புள்ளி...
ஜன்ம விழாவின் 'ஜனகணமன!'

'பொங்கல் விழா' : 'இன்று வியர்வைக்கு வெகுமதி நாள்!'

'மரங்கள்' : 'பூமியின் வரங்கள்!'; 'பறவைகளின் தாய்நாடு!'

'கஸ்தூரிபா காந்தி' : 'இலக்கணத்தை உண்டாக்கும் இலக்கியம்!'

'வள்ளலார்' : மருவூரில் பிறந்தும் / மருவுதலை விலக்கித்
துறவூரில் வசித்த / தோன்றல்!'

'நேரு' : 'இந்திய நாட்டை / எழுதிய ஓவியன்!'

'ஐந்து சால்பு ஊன்றிய தூண்' (திருக்குறள்,
983) என்றாற் போல் கவிக்கோவின் படைப்புலகம் முரண், அங்கதம், படிமம், குறியீடு, தொன்மம் என்னும் ஐம்பெரும் உத்திகளும் ஒன்றிணைந்து எழிலுடன் மிளிரும் கூட்டுக் களியாக விளங்கக் காண்கிறோம்.

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.