உலகில் அமைதி நிலவ பெண்ணிய அரசியல்
அவசியம்
முனைவர் இரா.செல்வி
ஐம்பெரங்காப்பியங்களில்
ஒன்றான மணிமேகலையைப் பௌத்தக் காப்பியம் என்பர். அதோடு பெண்ணிய அரசியல்
சிந்தனைகளைக் கொண்ட காப்பியமாக மணிமேகலை விளங்கக் காண்கிறோம்.
மணிமேகலையில் ஆபுத்திரன் கதாப்பாத்திரத்தை யாவரும்
அறிவோம்.வாரணாசிரமத்தில் வசித்த அந்தணன் ஒருவரின் மனைவி சாலி.
முறைதவறிய ஒழுக்கம் காரணமாகக் கருத்தறித்து ஓர் ஆண்மகனைப் பிரசவித்தாள்.
சமூகத்திற்கு அஞ்சி அக்குழந்தையை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கினாள்.
பசியால் அழுத குழந்தைக்கு அங்கு வந்த பசு பாலூட்டி ஒரு நாள் அங்கேயே
இருந்தது. அப்போது அவ்வழியே வந்த பூதி என்ற அந்தணரும் அவர் மனைவியும்
அக்குழந்தை 'ஆமகன் இல்லை என் மகன்' என எடுத்துச் சென்று வளர்த்தனர்.
நன்றாகப் படிக்கவைத்தனர்.
கல்வியில் தேர்ச்சிப் பெற்ற அவன் ஒருநாள் ஓர் அந்தணன் வீடு சென்றான்.
அங்குள்ள வேள்விச்சாலையில் ஒரு பசு வலையில் அகப்பட்ட மான்போல்
துன்புறுவது கண்டு கவலை கொண்டான். யாருக்கும் தெரியாமல் அப்பசுவை இரவோடு
இரவாக ஓட்டிச் சென்றான். அந்தணர்கள் விரைந்து பின் தொடர்ந்து அவனையும்
பசுவையும் பிடித்துக் கொண்டனர். புலைச்சிறுவன் என்று அடித்துத்
துன்புறத்தினர். அந்தணர்களும் வளர்த்த பெற்றோரும் அவனை விரட்டிவிட்டனர்.
ஆபுத்திரன் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானான். பிச்சைப்பாத்திரத்தில்
கல் இட்டனர். ஆபுத்திரன் அந்த ஊரைவிட்டு நீங்கினான். தென்மதுரை சென்றான்.
சிந்தா தேவி கோயிலில் தங்கினான். அவள் அவனுக்கு அமுத சுரபியை அருளினாள்.
அது கொண்டு ஆபுத்திரன் எல்லா உயிர்களுக்கும் உணவளித்து வந்தான். மக்கள்
அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவன் புகழ் எங்கும் பரவியது. இந்திரனுக்கும்
எட்டியது. இந்நிலையில் ஆபுத்திரன் செய்த அறச்செயல் இந்திரன்
இருக்கையாகிய வெண்ணிறப் பாண்டுகம்பளத்தை நடுங்கச் செய்தது என்கிறது
மணிமேகலைக் காப்பியம். அந்தப் பாடல் அடிகள் பின்வருமாறு.
'ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது' (பாத்திர மரபு கூறிய காதை:28-29)
பாண்டு கம்பளம் என்பது நாற்காலியைக் குறிப்பதாகக் கருதலாம்.. நாற்காலி
சண்டை குறித்து அறியாதவர்கள் இருக்கமுடியுமா என்ன? மக்கள் விரும்பினால்
தான் விரும்பிய ஒருவருக்கு அரசாட்சியைத்தர முடியும். ஆபுத்திரன் போர்
பண்ணாமல் நால்வகைப் படையில்லாமல் மக்கள் மத்தியில் முடிசூடா மன்னனாக
விளங்கி அறச்சாலையை நடத்துவது ஆதிக்கவாதியான இந்திரனுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆபுத்திரனின் அறச்சாலையால் தங்களைப்
போன்றேரின் அரசு வீழ்ந்துவிடும் என்ற எண்ணம் பிறந்திருக்க வேண்டும்.
ஆகவே இந்திரன் முதிய மறையவனாக வந்து 'நான் இந்திரன். உனக்கு வரம்
தரவந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்' என்கிறான். அதற்கு ஆபுத்திரன்
இந்திரனுக்குப் பதிலடி தருகிறான்.
அறம் செய்வோரும் நல்ல தவம் செய்வோரும் இல்லாத தேவலோகத்திற்குத் தலைவனே.
பசியால் வருந்திவரும் வறியவரின் பசிப்பிணியைப்யைப் போக்கும் இந்த
அமுதசுரபி ஒன்று போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம் என்கிறான். இங்கு
நாம் ஆழ்ந்து யோசிக்கவேண்டியுள்ளது.
'இந்திரன் ஆளக்கூடிய ராஜியம் என்பது சொர்க்கலோகம் எனக்கருதப்படுகிறது.
இந்திரன் பெரும் போர் நிகழ்த்தக் கூடியவன். பெண்கள் விசியத்தில்
பலவீனமானவன். இவனால் அகலிகை வாழ்வு பாழாகியது. அவனது அந்தப் புரத்தில்
ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற அழகிய ஆடல் அழகிகள் அடிமைகளாக இருந்துள்ளனர்
என்பதைப் புராணக்கதைகள் மூலம் அறியமுடியும். இத்தகைய ஆணாதிக்க
இந்திரன்தான் நரகாசூரனின் காதலியைக் கடத்திச் சென்றான். இன்னும்
இப்படிப் பல புராணச் செய்திகளைப் படித்திருக்கிறோம்' இத்தகைய
ஆட்சிமுறையையும் ஆட்சியாளரையும்தான் ஏகாதிபத்தியம் என்கிறோம். இந்திரன்
என்பது ஒரு ஏகாதிபத்தியத்தின் வம்சாவழி. அவர்களது ஆதிக்கம் எங்கும்
பரவியிருந்தது.
'அவர்களுக்கு மதிப்பளிக்கத்தான் தமிழகத்தில் இந்திரவிழாவும்
கொண்டாடப்பட்டது. இப்படி நடந்த விழாநாளில்தான் சுதமதி என்ற அப்பாவிப்
பெண் மாருதவேகன் என்ற இந்திரலோகத்தைச் சேர்ந்த ஒருவனால்
வஞ்சிக்கப்படுகிறாள். இந்தப்பெண்ணிற்குப் புத்தமதம் அடைக்கலம் தருகிறது
என்பதை மணிமேகலை உணர்த்துகின்றது'
ஆகவே இந்திரலோகம் ஆணாதிக்க அரசியலின் குறியீடாகத்திகழ்கிறது. ஆபுத்திரன்
பெண்ணிய அரசியலுக்கு வித்திட்டவனாகத்திகழ்கிறான். அமுதசுரபி என்பது
கற்பனைதான். ஆனால் ஆபுத்திரன் அறச்சாலை நடத்தியவனாக விளங்குகிறான்.
இந்த அறச்சாலை கொண்டு மக்களாட்சியை உருவாக்கமுடியும். மக்கள் சங்கத்தை
உருவாக்கமுடியும். மக்கள் பிரதிநிதியாக ஆபுத்திரன் திகழவாய்ப்புள்ளது.
படையில்லாத ஆயுதம் தூக்காத, வன்முறையற்ற, ஒரு அரசியிலை, இந்திரனின்
ஆணாதிக்க அரசியலுக்கு எதிரான ஒரு பெண்ணிய அரசியிலை ஆபத்திரன்
உருவாக்குவான். இதை உணர்ந்தே இந்திரன் பெரும் திட்டத்தோடு வந்து
ஆபுத்திரன் இந்தத் தமிழக மண்ணில் இராதபடிக்குச் செய்துவிடுகிறான்.
ஆபுத்திரன் அமுதசுரபியோடு மணிபல்லவம் தீவுக்குச் சென்று இறந்து போகிறான்.
அவன் கையில் இருந்த அமுதசுரபிதான் பின்னாளில் மணிமேகலை கைக்கு வந்து
சேர்கிறது. மணிமேகலை சோழ இளவரசன் உதயகுமரனிடம் இருந்து தப்பிக்க
எண்ணற்ற போராட்டங்கள். சிறை செல்வவேண்டிய அவலம். ஆனால் சிறைச்சாலையை
அறச்சாலையாக மாற்றுகிறாள்.
ஒருவிதத்தில் பௌத்த மதம் பெண்ணிய அரசியல் தன்மை கொண்ட மதமாக அகிம்சையைப்
போதித்த பெண்ணியத்தத்துவத்தை உள்ளடக்கிய மதமாகத்தான் இருந்துள்ளது.
புத்தரே போர் புரியும் விருப்பம் இன்றி ஆதிக்கம் புரியும் மன்னராட்சியை
விட்டுத் துறவியாகச் சென்றவர்தானே. அந்த வகையில் புத்தர்
பெண்ணியவாதியாகிறார். பெண்ணிய அரசியலாக வளரவேண்டிய புத்தமதம் இங்குள்ள
ஆணாதிக்க அரசியலால் வளரமுடியாமல் போய்விட்டது. அசோகமன்னன் மட்டும்
போர்புரிவதை விட்டொழித்தான். தன் மகனையும் மகளையும் இலங்கைக்கு அனுப்பி
அங்குப் புத்தமதம் வேரூன்றச்செய்தான். ஆனால் அங்குப் புத்தமதம்
பெண்ணியமதமாக வளரமுடியாமல் ஆணாதிக்கமதமாக வளர்ந்துவிட்டது.
புத்தனின் அகிம்சா நெறிக்கு எதிரான போர்முறைகள். போர் ஆயுதங்கள்.
அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்த வன்செயல்கள். உலக மனிதஇனம்
ஆணாதிக்க உணர்வை விட்டுப் பெண்ணிய உணர்வினைப் பெறும் நாள் ஒன்று வந்தே
தீரும். அப்போது பெண்ணிய அரசியல் தானாக மலரும். இந்தப் பெண்ணிய அரசியலை
இந்துமதமா கிறித்துவமா இஸ்லாம் மதமா பௌத்தமதமா மார்க்சியரா
காந்தியவாதிகளா இல்லை எல்லோரும் சேர்ந்து ஒன்றுகூடியா யார் உருவாக்க
முன்வந்தாலும் இந்தப்பூமாதேவி அமைதிகாண்பாள். அணுகுண்டு தயாரிப்போர்
அன்புக்கரங்களோடு அறச்சாலைகள் வைத்துப் பிறரை விருந்துக்கு அழைப்பர்.
கட்டாயம் வன்முறையற்ற சமத்துவம் மலரும் என்பது பெண்ணியக் கனவாக
விளங்குகிறது.
முனைவர் இரா.செல்வி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641014
தமிழ்நாடு, இந்தியா
நன்றி: தி டிடெக்டிவ் ரிப்போர்ட் (ஜனவரி
1-15-2016)
|