பண்டைத் தமிழர்
பண்பாடு
லீலா சிவானந்தன்
உலகில்
மிகத் தொன்மையானதும் அதே சமயம் இனிமையானதுமான செம்மொழி தமிழ்மொழி.
‘‘கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்துதித் தெழுந்து ஒன்று லவாயிடினும்
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்
வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’’
என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரால் வாழ்த்தப்பட்ட இனிமையான மொழி தமிழ்
மொழி.
மிகவும் மேம்பாடுடைய ஒரு பண்பாட்டையும் பாரம்பரியம் மிக்க கவின்
கலைகளையும் தொன்மையான மரபு வழி முறைகளையும் தன்னகத்தே கொண்டது தமிழர்
வரலாறு. கலை, இசை, நடனம், சிற்பம், கட்டிடம், மெய்ஞானம், விஞ்ஞானம்
போன்ற பல துறைகளில் கரைகண்ட சிறப்பை உடையது தமிழர் கலாசாரம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என எல்லா ஊர்களையும் தன் ஊராகவும் எல்லா
மக்களையும் தன் உற்றாராகவும் நேசித்து மனித நேயத்துடன் வாழ்ந்த
வாழ்வியலைக் கொண்டது சங்க காலத் தமிழினம்.
இத்தகு சிறப்பும், பெருமையும், பழமையும் வாய்ந்த தமிழ் மொழியில்
முதன்முதலில் தோன்றியதாகக் கூறப்படும் தொல்காப்பியமும், தமிழனுடைய
வாழ்வும் வளமும் உச்சநிலையில் இருந்த போது தோன்றிய இலக்கியங்களாக சங்க
காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவையும், ஐவகைக்
காப்பியங்களுள் சிறந்தவையான சிலப்பதிகாரம், மணிமேகலை போல இலக்கிய
நூல்களும் தமிழின் தலை சிறந்த நீதி நூலான திருக்குறளும் தமிழின்
பெருமையயை பண்பாட்டின் சிறப்பை விளக்கி நிற்பனவாகும்.
இதே வேளை அவ்வக் காலத்திய மக்கள் வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுவதில்
அவ்வக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற
கூற்றுக்கு அமைய அவ்வக்கால இலக்கியங்கள் அவ்வக்கால சமுதாயத்தைப்
பற்றியும் வாழ்வியலைப் பற்றியும் அரசர்கள் பற்றியும் அரசாட்சி முறை
பற்றியும் நிறையவே பேசுகின்றன என்பதைக் குறிப்பிட்டுக் கூறலாம். அந்த
வகையில் சங்க இலக்கியங்கள் குறித்து நோக்கும் போது தமிழினம்
நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில் எழுந்தவை என்று
கூறக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் வானம்
அளந்ததனைத்தும் அளந்த வண்மைத் தமிழ் மொழியில் ஏறத்தாழ இரண்டாயிரத்து
ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்திலிருந்து சமீபத்தில் பிறந்த
இலக்கியம் வரை எடுத்துப் பார்த்தோமானால், சங்க காலப் பாடல்கள் பல
பொருளுரை இன்றி விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளதைக் காணலாம்.
இன்றும் வழக்கில் இருக்கின்ற சொற்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவதும் அன்றே வாழ்தல்....
என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்தப் பாடலை இப்போதும் பலராலும்
எடுத்தாளப்படுதலை உதாரணமாகக் கூறலாம். அதே போல் 2000 ஆண்டுகளுக்கு
முன்னரான திருக்குறளை இன்றும் உரையின் உதவியின்றிப் பெரும்பாலான
குறள்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றமை அதன் சிறப்பு
அம்சமாகும். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் பூரண வளர்ச்சியைப்
பெற்றிருந்தால் மட்டுமே இவ்வாறான ஒரு தொடர்ச்சியான வளர்ச்சியைப்
பெற்றிருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
தமிழில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு. 400 ஆண்டுகளுக்கு
முற்பட்டது என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் அதற்கும் முற்பட்ட
காலத்தது என்று கூறுவார்கள். எதுவாயினும் தொல்காப்பியம் பிறந்த போது
அதற்கு முன்னரே தமிழ் மொழி பூரண வளர்ச்சியடைந்த மொழியாக இருந்தது என்பதை
ஏற்றுக் கொள்கிறார்கள்.
இத்தகு வளர்ச்சியடைந்த ஒரு மொழியில் இலக்கியம் தோன்றும்போது அவை ஒரு
வளர்ச்சியடைந்த சமுதாயத்தை குறிப்பதாகவே அமையும். சுங்ககால நூல்கள்
தமிழ்மொழி, மற்றும் தமிழர் வாழ்க்கை முறை ஆகியன உச்சத்தில் இருந்த போது
தோன்றியிருக்க வேண்டும் என்பது அக்கால மொழி வழக்கு, மக்கள் வாழ்க்கை
முறை ஆகியவற்றைப் பார்க்கும் போது தெரிகின்றது. மொழிக்கு இலக்கணம்
வகுத்தது போலவே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்து அந்த இலக்கணத்துக்கு
ஏற்பவும் அறநெறி பிறழாமலும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அகம்,
புறம் அல்லது காதல் வீரம் என்ற கட்டுக் கோப்புக்குள் நின்று வாழ்க்கையை
நடத்தினார்கள்.
மன்னர்களும் சிறந்த ஆட்சி நடாத்தினார்கள். அவர்கள் வழி தவறும்
சந்தர்ப்பங்களில் புலவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழி
நடத்தினார்கள் என புறநானூறுப் பாடல்கள் பல எடுத்துக் கூறும்.
சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றில் குறிப்பிடப்படும் பாடல்களில்
பெரும்பாலானவை போர்க்காலத்தில் அரசர்கள் வெளிப்படுத்தும் வீரம்
பற்றியும், புலவர்கள் அரசர்களைப் புகழந்து பாடும் பாடல்களாகவும்
அமைந்துள்ளன. அடக்கமுடைமை, புறம் கூறாமை, பிறன்மனை நயவாமை ஆகிய
நற்குணங்களுடன், தீவினை அச்சம், சான்றாண்மை, பிழை பொறுக்கும் பண்பு
ஆகியவை நிறைந்த அறவாழ்க்கையை அக்கால மக்கள் வாழ்ந்தார்கள். அரசர்களும்
இக்குண நலன்களுடன் நீதிநெறி வழுவாது ஆட்சி நடாத்தினார்கள். சில
சமயங்களில் அரசர்கள் ஒருவருக்கொருவர் தமக்குள் சண்டையிட்டுக்
கொண்டிருந்தாலும் பொதுவான அடிப்படை வாழ்க்கைக் கோட்பாடுகளில்
பெரும்பாலான தமிழ் மக்கள் ஈடுபாடு கொண்டிருந்தமையால் அவர்கள் பண்பாடும்
நாகரிகமும் அழிந்து போகாமல் இருந்தது. இன்றளவும் நிலைத்து இருக்கிறது.
பபிலோனியா, ரோம நாகரிகங்கள் அழிந்து போனது போல் இல்லாமல் நீடித்து
நின்று அதன் பண்பாட்டு வலிமையை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.
இவ்வாறான இந்தப் பண்பாடு மற்றும் அறத்தின் பாற்பட்ட வாழ்க்கை முறையால்
தான் இன்னும் உலகம் ஒழுங்காக நடைபெறுகின்றது என்று புறநானூற்றில் வரும்
பாடல் ஒன்று கூறுகின்றது. பாண்டிய மரபில் தோன்றிய ஒரு மன்னன் அவன் பெயர்
இளம்பெருவழுதி. இவன் கூறுவது போல பாடல் அமைந்துள்ளது.
உண்டால் சும்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுனர் உண்மையானே
சாவா மருந்தான அமிர்தமே கிடைத்தாலும், அதைப் பிறருடன் பகிர்ந்து
கொள்ளாது தனியே உண்ணாதிருப்பது, யார் மீதும் வெறுப்புக் கொள்ளாது
அனைவரிடமும் அன்பு செய்வது, அயர்வை நீக்கி முயற்சியுடன் எப்போதும்
சுறுசுறுப்பாக இருப்பது, அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சுவது, நல்ல
செயல்களைச் செய்வதன் மூலம் கிடைக்கும் புகழுக்காக உயிரையும் கொடுக்கத்
துணிவது, இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் பாவச் செயலைச்
செய்யாதிருப்பது ஆகிய இந்த மேன்மைக் குணங்கள் நிறைந்த சான்றோர்களால்
தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகின்றது என்று மன்னன் இளம்பெருவழுதி
கூறுவதாக அமைந்து தமிழர் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் காட்டுவதாக
அமைந்துள்ளது அருமையான இந்தப் பாடல்.
அதே போல மன்னன் அன்பும் அருளும் உடையவனாக வாழ வேண்டும், ஆட்சி நடத்த
வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பாடல் ஒன்று நரிவெரூஉத்தலையார்
என்ற புலவர் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனுக்கு அறிவுரை கூறும்
முகமாக அமைந்துள்ளது.
......நீயே பெரும்
நீயோ ஆகலின் நின் ஒன்று மொழிவல
அருளும், அன்பும் நீங்கி நீங்கா
நியாயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அநிதோ தானே அதுபெறல் அருங்குணத்தே
அரசே உனக்கு சில அறிவுரைகளைக் கூற விரும்புகின்றேன். அன்பும் அருளும்
இல்லாதவர்கள் நரகத்தை அடைவார்கள். அத்தகையவர்களுடன் தொடர்பு கொள்ளாதே.
குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காக்கும் தாய் போல குடிமக்களை
அன்போடும் அருளோடும் பாதுகாப்பாயாக, ஆட்சி என்பது கருணைக்கு உரியது
என்று அறிவுரை கூறும் பண்டைத் தமிழ் மக்களின் பண்பு கூறும் இன்னொரு
பாடல் இது.
ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் இரு நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிபடிக்க
வேண்டும் என்று சங்கச் சான்றோர் கருதினர். நலிவுற்று வாடும் மக்களுக்கு
மறைமுகமாக உதவுவது வாக்குறுதி தவறாமல் நடப்பது ஆகிய இரு நெறிகளையும் இரு
கண்களாக மதித்தனர். பிறர் துன்பத்தில் பங்கு கொள்வதை மதித்தனர். அவர்கள்
இன்னல் தீர்க்கும் மனிதாபிமானத்தைப் போற்றினர். ஈதல் இசை பட வாழ்தலை தம்
கடமையாகக் கருதினர்.
வல்லார் ஆயினும் வல்லுனர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள் வல்லை ஆகுமதி....
என்ற புறநானூற்றுப் பாடல் இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
அரசர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரைகளாக இவை அமைந்த போதிலும் அக்கால
அரசர்களுக்குப் புலவர்களால் கூறப்பட்ட போதும் இவற்றை அவர்கள்
கடைப்பிடித்தார்கள் என்றே கூறலாம். தன்னைக் காப்பது தன் குடும்பத்தைக்
காப்பது, நாட்டைக் காப்பது, பிறர்க்குத் துன்பம் நேராது காத்தல்
இரப்போர்க்கு இல்லை என்று ஈதல், பிறரிடம் யாசிக்காமை ஆகிய பண்புகளைப்
பேணிக் காப்பதற்கு வீரமும் அதனுடன் இணைந்த மானமும் அவசியம் எனக்
கொண்டார்கள்.
அக்காலத்தில் காலாட்படை தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய நான்கு
வகைப்படைகள் இருந்ததாகவும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை போன்ற
புறத்திணை குறிக்கும் குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய பகுதிகளில்
நடைபெற்ற போர்கள் பற்றிச் சங்க நூல்கள் கூறும். போர் செய்வது வீரர்கட்கு
அழகு என்று அரசர்கள் கருதினர். பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில்
பஃறுளி என்ற ஆறு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நாட்டை
பாண்டிய மன்னன் ஒருவன் ஆண்டான். ஒரு சமயம் அவன் போர் செய்ய வேண்டி
நேர்ந்தது. அப்போது அவன் ஐவகை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தனது
கடமை எனக் கருதினான் என்று ஒரு புறப்பாடல் மூலம் அறிகிறோம்.
போர் நடக்கும் காலங்களில் குறிப்பிட்ட சிலரைப் பாதுகாப்பான இடங்களுக்கு
அனுப்பி விட்டுப் பின்னர் போருக்குப் புறப்படுவது பண்டைய காலத்திலேயே
தமிழ் அரசர்கள் கடைப்பிடித்த ஒரு நடைமுறையாகும். சாதாரண பொதுமக்கள்
போரில் ஈடுபடாதவர்கள் புறங்காட்டி ஓடுவோர், புண்பட்டோர், முதியோர்,
இளையோர் ஆகியோர் மீது ஆயுதப் பிரயோகம் செய்யத்தகாது என்பதையும்
புறநானூறு எடுத்துக் கூறும். மிகவும் சிறப்பான ஒரு அறத்தை, தர்மத்தை,
நெறியை, மரபை போர்க்காலத்தில் கூட கடைப்பிடித்தனர். அக்காலத் தமிழர்கள்
என்பது இவ்வாறான தகவல்களிலிருந்து தெரிகின்றது.
இவ்வாறு மனிதர் மனிதத்தன்மையுடன் வாழ்வதற்குத் தேவையான நீதிநெறிமுறைகள்,
சமுதாய மரபுகள், மனிதனை மேன்மைப்படுத்தும் பண்புகள், ஏராளமாகப் பழைய
நூல்களில் காணக் கிடைக்கின்றன. எத்தனை காலமானாலும் மங்காது, அழியாது
பரம்பரையாகத் தொடர்ந்தும் மக்கள் அப்புண்புகளைக் கடைப் பிடித்து
வருகின்றார்கள் என்றால் அப்பண்பாட்டை உள்ளடக்கிய நல்லொழுக்கம் அத்தனை
வலுவுடையதாக இருப்பதுவே காரணம் எனலாம்.
|