ஈழத்துத் தேசியக்
கலைவடிவம் பற்றிய ஒரு பதிவு
பேராசிரியர்
இ.பாலசுந்தரம்
ஆடலும்
பாடலும் மனித குலத்தின் முதற்கலை வடிவங்களாகும். அக் கலை வடிவங்கள்
தேவைக்கும் சூழலுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப அவற்றின் வடிவங்களும்
மாற்றம் பெற்றுவந்துள்ளன. அவ்வகையில் நாட்டார் கலை - இலக்கியங்கள்
அழிந்து போகாமல் அவற்றைத் தொகுத்துப் பேணி, அவற்றின் முக்கியத்துவத்தை
உலகுக்கு முதலில் வெளிப்படுத்தியோர் ஜேர்மன் நாட்டு கிறீம் சகோதரர்கள்
ஆவர். நாட்டார் வழக்கியல் அறிஞர்கள் நாட்டார் கலை-இலக்கிய ஆய்வின்
முக்கியத்துவத்தை உலகமயப்படுத்தினர். குறிப்பிட்ட பிரதேச மக்களின்
மரபுகள், வழக்காறுகள், பண்பாட்டுப் பாரம்பரியங்கள் என்பவற்றையும,;
இன்றைய பண்பாட்டின் ஆணிவேரைக் கண்டுகொள்ளவும் நாட்;டார் கலை -
இலக்கியங்கள் பெரிதும் துணையாகின்றன. மேலும் ஓரின மக்களின் செவ்வியல்
பண்பாட்டுக்கு நாட்டார் கலை - இலக்கியங்களே முன்னோடிகளாவும் உள்ளன.
தமிழகத்திலும் ஈழத்திலும் 1950
களிலிருந்து நாட்டார் கலை - இலக்கியங்களைச் சேகரித்துப் பதிப்பிக்கும்
முயற்சியிலும், இலக்கிய இரசனையுடன் பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதிலும்
பலர் ஈடுபட்டுவந்தனர். 1965
களுக்குப் பின்னர் தமிழகத்திலும் (நா.வானமாமலை),
1970க்குப் பின்னர்
ஈழத்திலும் (இ.பாலசுந்தரம்) நாட்டார் இலக்கிய ஆய்வுகள்
இடம்பெறத்தொடங்கின. ; 'மட்டக்களப்பு வசந்தன் பாடல் திரட்டு' என்ற நூலை
தி.சதாசிவ ஐயர் வெளியிட்டதுடன், தொடங்கிய ஈழத்து நாட்டார் கலை -
இலக்கியச் சேகரிப்பு, பதிப்பு முயற்சிகள் 1960 களில் எழுச்சிபெறத்
தொடங்கின. 1980
களுக்குப் பின்னர் கூத்துக்கலை பல்கலைக்கழகங்களில் ஆய்;வுக்கு
உட்படுத்தப்படுவதாயிற்று.
ஈழத்தின் நாட்டார்கலைப் பாரம்பரியத்தில் கூத்து, நாட்டார்இலக்கியம்,
நாட்டுமருத்துவம், சடங்குகள், அவற்றோடு தொடர்புடைய வழக்காறுகள் முதலானவை
பழைமையின் தொடர்ச்சியாக இன்றுவரை மறந்தும் மறவாத நிலையில் உள்ளன. கூத்து,
வசந்தன், விலாசம், கும்மி, கரகம், காவடி முதலான ஆடல் வகைகள்; ஆடற்கலை
வளத்திற்கு அணிசேர்க்கின்றன. ஈழத்து நாட்டார் கலைகளில் முதலில்
பேசப்படுவது கூத்து ஆகும். யாழ்ப்பாணம், மன்னார், வன்னி, கிழக்கிலங்கை
ஆகிய தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் கூத்துக்கலை வடிவம் இன்று
வரையும் பேணப்பட்டு வருகின்றது. கூத்தின் ஆடல்முறைகள், பாடல்கள் வகைகள்
என்பவற்றின் நுட்பங்களைக் கூர்ந்து ஆராயும்போது கூத்து ஈழத்தமிழரின்
பாரம்பரியக் கலை என்ற உண்மை பெறப்படும். இந்த அடிப்படையில் ஈழத்
தமிழரின் தேசியக் கலைவடிவம் கூத்து என பல தடவைகளில் எழுதியும் மேடைப்
பேச்சுக்களில் குறிப்பிட்டும் வந்துள்ளேன். கேரளநாட்டு மக்கள்
கதகளியையும், கன்னட மக்கள் குச்சுப்பிடியையும், ஆந்திரநாட்டினர்
யகஷகானம் மற்றும் பாகவதமேளா முதலான நாடகங்களையும்;, இலங்கையில்
சிங்களவர் கண்டிய நடனத்தையும் தத்தம் தேசியக் கலை வடிவம்
எனக்கொண்டுள்ளனர். எனவே, 'ஈழத் தமிழரின் தேசியக் கலைவடிவம் கூத்து
என்பதை விதியாகக் கைக்கொள்ள வேண்டியது ஈழத்தமிழரின் கலை சார்ந்த
வரலாற்றுக் கடமையாகும்.
கூத்துக்கலையின் தொடக்க கால வரலாற்றைச் சங்ககால இலக்கியங்கள்,
சிலப்பதிகாரம், திருக்குறள் முதலியவற்றினூடாக அறியக்கூடியதாக உள்ளது.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூத்துக்கலையை அர்ப்பணிப்போடு வளர்த்து
வந்தனர். அக்கலைஞர்களை மன்னர்களும் வள்ளல்களும் ஆதரித்தனர்.
சங்ககாலத்தில் பொம்மைக்கூத்தும் வழங்கியதைக் குறுந்தொகை கூறுகின்றது.
திருவள்ளுவர் கூத்தாடும் களங்களைக் 'கூத்தாட்டு அவைக்களம்'
என்றுகுறிப்பிடுவர். இளங்கோவடிகள்; பல்வகையான கூத்துக் கலையின்
நுட்பங்களைச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். கூத்துக்கள்
தெய்வத்தைப் போற்றும்; வழிபாட்டிலும் பயன்பட்டன. வேட்டுவவரி
கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவை மாயோனையும், குன்றக்குரவை முருகனையும்
போற்றியாடும் கூத்துக்களாகும். இக்கூத்துக்களில் முழவு வாத்தியம்
இசைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது மத்தளம் எனப் பெயர்; பெற்றுள்ளது.
சோழர் காலத்தில் (கி.பி. 900-1200)
கூத்துக்கலை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தமையை சோழரது கல்வெட்டுக்கள்
கூறுகின்றன. கோயில் திருவிழாக்காலங்களிலும் மற்றும் விழாக் காலங்களிலும்
கூத்துக்கள் பெரிதும் ஆடப்பட்டன. 1200-1800
காலப் பகுதியில் குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் என்ற கிராமியக்
கூத்துக்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. 18ஆம்
நூற்hண்டு முதலாக கூத்து வடிவம் சமூக – அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும்
சாதனங் களாகவும் பயன்படலாயின. பிற்காலத்தில் நிலப் பிரபுத்துவ
செல்வந்தர்கள் கூத்துக்கலை அழியா வண்ணம் பாதுகாத்து வந்ததோடு,
இக்கலையினூடாக நிலமானிய சமூகத்தின் சமூக பொருண்மிய கட்டமைப்பையும் பேணி
வரலாயினர். தமிழகத்தில் இவை தெருக் கூத்துக்களாக வழங்கிவருவதையும்
அறியக் கூடியதாக உள்ளது.
ஈழத்தமிழரின் கூத்துக்களின் ஆடல், பாடல், கதைமுடிபு, உடை அலங்காரம்,
தாளக்கட்டு, கதாபாத்திரங்களின் ஆயுதங்கள் என்பனவற்றின் அடிப்படையில்
கூத்துக்கள் இரு வகைப்படும். யாழ்ப்பாணத்தில் வடபாங்கு-தென்பாங்கு
என்றும், வன்னியில் மன்னார்ப்பாங்கு - வன்னிப்பாங்கு என்றும்,
மட்டக்களப்பில் வடமோடி - தென்மோடி என்றும் இவை வழங்குகின்றன. வடமோடி
நாடகங்களில் போர்த்தன்மை மிகுந்தும், தென்மோடி நாடகங்களில் சிருங்காரம்
மலிந்தும் காணப்படும். உதாரணமாக 'இராம நாடகம் வடமோடியிலும்,
அலங்காரரூபன் நாடகம் தென்மோடியிலும் ஆடப்படுவதைக் குறிப்பிடலாம். உலக
நாடகங்களைத் துன்பியல்;, இன்பியல் என வகைப்படுத்தியிருத்தல் போன்றே,
ஈழத்துக் கூத்துக்களும் அவ்வாறமைந்து உலக நாடகப் பொதுத்தன்மையைப்
பெற்றுள்ளன.
வடஇலங்கையிலே விலாசக்கூத்து மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தமைக்கு மயான
காண்டம், சத்தியவான் சாவித்திரி முதலானவற்றை நான்றாகக் குறிப்பிடலாம்.
வடஇலங்கையில் இசைநாடகங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்தமைக்கு, கர்நாடக இசை
அங்கு செல்வாக்குப் பெற்றிருந்தமையும் காரணமாகலாம். காத்தவராயன்
சிந்துநடைக் கூத்து இதற்குத் தக்க சான்றாகும். கூத்துப் பயிற்றுவிக்கும்
கலைஞர் 'அண்ணாவியார்' என மிக மரியாதையுடன் அழைக்கப்படுவர். அண்ணாவிமார்
கலாவித்தகர்களாக விளங்கினர். பரத நாட்டிய அரங்கேற்றத்தில் நடன ஆசிரியர்
நட்டுவாங்கம் செய்வது போன்று அண்ணாவியார் கூத்துத் தாளக்கட்டுக்களை
தாளம் தப்பாமலும், இசை பிசகாமலும் இசையோடு பாடுவார். வரவு ஆட்டம், தாளம்
தீர்த்தல், அடந்தை, அரைவீசாணம், எதிர்வீசாணம், உலா, நாலடி, எட்டடி,
ஒய்யாரம், சுழன்றாடல், பாய்ந்தாடல், குந்திச் சுழல்தல், குந்துநிலை,
குத்துமிதி, தட்டிநிலைமாறல், இரண்டாம் - மூன்றாம் - நாலாம் வாட்டி
ஆட்டம், பாம்பென வளைந்தாட்டம், பின்னல் ஆட்டம் என கூத்தில் பல்வேறு
ஆடல்கள் இடம்பெறும். கூத்து ஆடுவதற்கு 'சபையோர்' எனப்படுவோர் மத்தளம்,
சல்லரி, உடுக்கு, பிற்பாட்டு எனப் பின்னணியிசை வழங்குவர். தென்மோடிக்
கூத்தில் தளபதிக்குரிய ஒரு வரவுத் தாளக்கட்டு பின்வருமாறு தொடங்கும்
'ததித்தளாதக தாதெய்ய திமிதக - தாதிமிதத்
தித்தெய்யே
ததித்தளாதக தாதெய்ய திமிதக - தாதிமிதத் தித்தெய்யே...
தச்சோந்திமி தொந்தரிகிட திமிதக
தாதெய்யதா தளங்கு ததிங்கிண....... என அத்தாளக்கட்டு நீண்டு
செல்லும்.
கத்தோலிக்க சமய வருகையுடன் பைபிள் கதைதழுவிய கூத்துக்;கள் மன்னார்,
யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின. இவ்வரிசையில் ஞான
சவுந்தரி, எண்றீக்கு எம்பரதோர், கிறிஸ்தோப்பர் முதலான கூத்துக்களைக்
குறிப்பிடலாம். மட்டக்களப்புக் கலைகள் என்றதும் முதலில் பேசப்படுவது
நாட்டுக் கூத்து கலைவடிவமாகும். மக்களின் வாழ்வின் பாரம்பரிய முறைகள்,
நாட்டார் கலைகள், வழிபாட்டுமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள்,
நாட்டார்பாடல் வடிவங்கள், நாட்டுவைத்தியம், மந்திரக்கலை முதலான பல்வேறு
நாட்டார் வழக்கியல் கூறுகள் உயிர்ப்புடன்; வழங்கும் வளம் செறிந்த
பிரதேசமாக மட்டக்களப்பு மாநிலம் விளங்குகின்றது. 'மீன்மகள் பாடுகிறாள்
வாவிமகள் ஆடுகிறாள் அழகான மட்டுநகர் நாடம்மா..... இங்கு கூத்தொலியும்
குரவைஒலியும் எங்கும் கேட்கலாம்' எனக் கவிஞர் காசி ஆனந்தன் பாடியதும்
நினைவுகொள்ளத்தக்கது. பொதுவாக் இராமாயணம், பாரதம், புராணம், பைபிள்,
வரலாறு முதலியவற்றைத் தழுவிய கதைகளைப் பின்னணியாகக் கொண்டே கூத்துக்கள்
ஆடப்பட்டன. தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் அரசியல் பரப்புரை
செய்யும் நோக்கோடு சமகால அரசியல் சமூகம் தழுவிய கதைகளை எழுதியும்
சிறந்த கூத்துக்கள் மேடை ஏற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் றொன்ரோவில் மேடை ஏற்றப்பட்ட 'கனடா வந்த கண்ணம்மை'
(1997) என்ற
வடமோடிக் கூத்து சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
அறுபதுகளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
மட்டக்களப்புக கூத்தை மெருகூட்டி அதனை அரங்கக் கலையாக மாற்றினார். முழு
இரவு ஆடப்பட்ட கூத்தை ஒன்றரை மணித்தியாலமாகச் சுருக்கியதோடு, வட்டக்களரி
மரபினை ஒருபக்க அரங்கக் கூத்தாகவும் மாற்றினார். கூத்தர்களுக்குக்
கலையுணர்ச்சி, பாவம், நடிப்பு என்பவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு.,
பாடல்களின் சொற்பொருளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பக்கப்பாட்டு
மாணவர் ஒழுங்கு செய்து பாடல்களுக்கு இசை ஒழுங்கு அமைக்கப்பட்டது.
ஆடலுட்ன் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒப்பனை, நவீன
ஒளி - ஒலி அமைப்பு என்பனவற்றில் கவனம் கொள்ளப்பட்டன. கர்ணன் போர்
(1962), நொண்டி
நாடகம் (1963),
இராவணேசன் (1964),
வாலிவதை (1967)
என்பன இந்த வரிசையில் அவரால் தயாரிக்கப்பட்டு பல்லோரது பாராட்டையும்
பெற்றுக்கொண்டன. வித்தியானந்தனுக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
நாட்டார் வழக்கியல் கழகத்தினதும, கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தினதும்
புதிய தயாரிப்புக்களால் நாட்டுக் கூத்து புதிய பரிமாணங்களைப் பெற்றள்ளது.
கூத்துக் கலைக்குப் பல்கலைக்கழக நிலையில் மகிமை சேர்த்தோர் வரிசையில்
பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர்
இ.பாலசுந்தரம் பேராசிரியர் சி.ஜெய்சங்கர் ஆகியோர் குறிப்பிடப்படுவர்.
இக்கலைவடிவம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியில்
குறிப்பாக ஜேர்மனி, பிரான்சு, ரொறன்ரோ ஆகிய இடங்களிலும்
பேணப்பட்டுவருதல் குறிப்பிடத்தக்கதாகும். மொன்றியலில்
1994 இல்
மேடையேற்றப்பட்ட 'வில்விஜயன்' முதல் ரொறன்ரோவில்
2012 இல்
அரங்கேறிய 'விஜய மனோகரன்' ஈறாகப் பல நாட்டுக் கூத்துக்கள் பல்லோராலும்
பாராட்டப்படும் வகையில் மேடை ஏற்றப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும்
தமிழர் மத்தியிலே இளைய தலைமுறையினரால் கூத்துக்கலை முன்னெடுக்கப்பட்டு
வருதல் நல்லதோர் எதிர்காலத்தைக் குறிக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு,
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எமது தேசியக்கலை
வடிவமாகிய 'கூத்துக் கலை'; வளர்ச்சி பெறுவதற்கும் உதவியாகச் செயற்படுதல்
தேசியக் கடமைகளில் ஒன்றாகின்றது.
பேராசிரியர் இ.பாலசுந்தரம்
தமிழ்த்துறைத் தலைவர்,
அண்ணாமலைப் பல்பலைக்கழகம்,
கனடா வளாகம்
|