ஈழத்தில் சிவ வழிபாடு –  ஒரு வரலாற்று நோக்கு

பேராசிரியர் இ.பாலசுந்தரம்


ிந்துவெளிநாகரிகச் சான்றுகளின் அடிப்படையில் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தமிழர் இலிங்க வழிபாட்டினராகவே வாழ்ந்துவந்துள்ளனர். ஹரப்பா புதைபொருள்ஆய்வில் பல இலிங்க உருவங்களின் அடிப்படையில் சிந்துவெளி மக்களால் சிவனும் சக்தியும் ஒருங்கே வழிபட்டமையும்,சிவனும் சக்தியும் தமிழர் வழிபாட்டில் பண்டைக்காலம் முதலாகவே வழிபடப்பட்டு வந்தமையும் அறியப்படுகின்றன. சிந்துவெளி நாகரிக ஆய்வாளரில் ஒருவரான சேர். ஜோன் மார்சல் 'சைவ சமயமே உலகில் வாழும் சமயங்கள் எல்லாவற்றிலும் மிகவும் தொன்மையானது' எனத் துணிந்து கூறினாhர். சிவன் என்னும் பெயர் சிந்துவெளி மக்கள் வைத்த தமிழ்ப் பெயரே என்றும், அது செந்நிறமுடையோன் எனப் பொருள்படுவதாய்ச் 'சிவ' என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது என்றும், சிந்துவெளி மக்கள் பெரிதும் போற்றிய இத்தெய்வத்தின் பெயரைப் பின்னர் படைஎடுத்து வந்த ஆரியர் 'ருத்திரன்' என்னும் தமது தெய்வத்திற்கு ஏற்றி வேதத்தில் வழங்கியுள்ளனர் என்றும் பேராசிரியர் சுநிதி குமார் சட்டர்ஜி குறிப்பிடுவர்.சிவம் என்பதற்குச் செம்மை என்றும் பொருளுண்டு. கடவுளைச் செம்பொருள் என்பது தமிழர் மரபு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிவன் செம்மேனி உடையவராகவே வருணிக்கப்படுகிறார். தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களில் சிவனைப் பற்றிய வருணனைகள் இடம்பெற்றுள்ளன. சிவம் என்பது தமிழ்ச் சொல்லாகும். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வாளர் றொபர்ட் கால்டுவெல்லின் கருத்துப்படி சிவம் என்பது தமிழ் அடிச்சொல் கொண்டது என்பதும், சிவ வழிபாடும் தமிழரின் பண்டைய சொத்து என்பதும் உறுதியாகின்றன.

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த பூர்வீககால மக்கள் இயற்கையின் இயல்புகளையும் ஆற்றல்களையும் அதிஅற்புத சக்திகளையும் கண்டு பயந்தனர். அதன் அடிப்படையில் சூரியன், சந்திரன், மழை, காற்று, கடல், நதி, மலை, இடிமுழக்கம், மின்னல், பெருமரம், விலங்குகள் முதலியவற்றை வழிபடலாயினர். சூரிய வழிபாடு பற்றிய சிந்தனையை நோக்கும்போது சூரியனின் வெப்பமும், ஒளியும், அவற்றின் பயன்பாடும் முக்கியத்துவம் பெறுகின்றன. காலைச் சூரியனின் அழகும். மாலையில் மறையும் சூரியனின் எழிலும் பார்ப்போர் அனைவரையும் மயக்கும் தன்மை கொண்டவை. காரைக்காலம்மையாரும் 'காலையே போன்றிலங்கும் மேனி..' எனச் சிவனது தோற்றப் பொலிவை காலையில் அக்கினிப் பிளம்பாகத் தோன்றும் சூரியனின் அழகில் இறைவனைக் காண்கின்றார். சிவனுக்கும் இமயமலைக்கும் தொடர்பு கூறுதல் சைவ மக்களின் நம்பிக்கையாகும். இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்த பூர்வீகத் திராவிடர்,உலகில் மிகவும் உயர்ந்து காணப்பட்ட இமய மலை உச்சியைத் தமது கடவுளின் இருப்பிடமாக நம்பினர்.

வடஇந்தியாவிற் கருவறையில் லிங்கம் வைத்து வழிபடும் முறையே பெரிதும் உள்ளது. தென்னாட்டிலும் ஈழத்திலும் கருவறையில் லிங்கம் அமைந்த சிவன்கோயில்களும், ஆளுருவிற் சிவமூர்த்தங்களை வைத்து வழிபடும் சிவாலயங்களும் காணப்படுகின்றன. தமிழகத்தில்குடிமல்லம், களத்தூர், குடுமியான்மலை ஆகிய இடங்களிலே உள்ள இலிங்கங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவை என ஆய்வாளர் கூறுவர்.பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின்; காலத்தில் அமைந்திருந்த சிவன்கோயில் பற்றியும்,செங்கற்களாற் கட்டப்பட்ட வீதிகளுடன் அமைந்த சிவன் கோயில்கள், கோவில் வீதிவழியே அரசன் உலாப் போகும் செய்திகள் என்பனவும் புறநானுற்றிற் பேசப்படுகின்றன. அக்காலத்தில் மதுரையில் அமைந்திருந்த சிவன்கோயில், அங்கு மக்கள் மேற்கொண்ட வழிபாடு என்பன பற்றி; மதுரைக்காஞ்சி
(453-457) குறிப்பிடுகிறது.சங்க காலத்திற் 'கந்து' என்ற சொலலே சிவலிங்கத்தைக் குறித்தது என நச்சினார்க்கினியரும்,மற்றும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் - மறைமலைஅடிகள் முதலானோரும் கருதுவர்.

விஜயன் இலங்கைக்கு வரும்போது (கி.மு.
5 நூ.டு) ஈழத்தின் ஆதிக்குடிகளாகிய நாகர்களது தலைசிறந்த வழிபாட்டுத் தலமாக சிவத்தலங்கள் விளங்கின என மகாவம்சம் கூறுகிறது. கி. மு.249இல் பௌத்த மதம் ஈழத்தில் அறிமுகம் செய்யப்பட முன்னர் ஈழம் முழுவதிலும் சிவமயமாகவே இருந்ததைக் கருத்திற் கொள்ள வேண்டும். அண்மைக் காலமாக ஈழத்தல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளாய்வின் பயனாக ஈழத்திற் கி.மு. 8-7 நூற்றாண்டிலிருந்து பெருங்கற் பண்பாட்டைத்தழுவிய திராவிட மக்களிடையே சிவ வழிபாடு இடம் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை தெரணியகல:1953, பரணவிதான:1970, க.புஷ்பரட்ணம்:1993, க.சிற்றம்பலம்: 1995, சி.பத்மநாதன்:1999 ஆகியோரின் வரலாற்றாய்வுகள் நிறுவுகின்றன. இக்காலத்து மன்னர் பெயர்கள், சிவ, மகாசிவ, முடசிவஎனவும் வழங்கியுள்ளமை சிவ வழிபாட்டின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாகும். கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுகளில் பௌத்த மன்னர் சிவ ஆலயங்களை அழித்து அவ்விடங்களிற் பௌத்தக் கோயில்கள் அமைத்தமை பற்றி மகாவம்சம் ;(ch. XXXVII:4)  கூறுதல் நோக்கத்தக்கது.

'தென்னானுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!' எனப் போற்றி வழிபடப்படும் சிவவழிபாடு பண்டைக் காலம் முதல் இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெற்று வந்தமையை வரலாறு நிரூபிக்கின்றது.'சிவபூமி' எனத் திருமந்திரத்திற் போற்றப்படும் ஈழத்தின் நாற்றிசைகளிலும் கடற்கரையோரங்களிற் காவல் தெய்வமான சிவன் ஆலயங்கள் பண்டைக்காலம் முதலாக அமைந்திருந்தமை சமய வரலாறாகும். திருக்கேதிஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டேஸ்வரம், கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், மாமாங்கேஸ்வரம், திருக் கோணேஸ்வரம்,நகுலேஸ்வரம் ஆகிய பண்டைய சிவத்தலங்கள் இதற்குச் சாட்சிகளாகும்.இவற்றைவிடச் சோழர் ஆட்சிக்காலத்திலும் இலங்கையில் சிவத்தலங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இலங்கையில் மிகவும் பழைமை வாய்ந்த சிவத்தலமாகத் திருக்கோணேஸ்வரம் விளங்கிற்று. இக்கோயில் 'திரிகூடம்' என்றும்,'தட்ஷிணகைலாசம்' என்றும் இலக்கியங்களிற் கூறப்படுகிறது. தமிழகத்திற் பக்தி இயக்கம் ஏழாம் நூற்றாண்டிலே தோன்றியபோது, சிவவழிபாடும் சைவப்பண்பாடும் அங்கு மேலோங்கின. அதுபோன்றே ஈழத்திலும் அக்காலத்திற் சிவவழிபாடு சிறப்புறுவதாயிற்று என்பதைத் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் பாடிய தேவாரப்பதிகங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். திருக்கோணேஸ்வரம் பற்றித் திருஞானசம்பந்தர் பாடிய கோணேஸ்வரப் பதிகத்தில் 'கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே' எனப்பாடியிருத்தல் நோக்கத்தக்கது. 'குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே' என்ற தேவாரப் பாடல் வரி அக்காலத்தில் திருகோணமலைப் பிரதேசத்திலிருந்த மக்கட்குடியிருப்புக்களைக் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள இராவணன் வெட்டு, இராவணன் இமயமலையைப் பெயர்த்ததும், சாமகானம் பாடி அவன் விமோசனம் பெற்ற கதையும்,இலங்கேஸ்வரனும் அவன் தாயும் வழிபட்ட தலம் என்ற செய்திகளும் ஈழத்தில் சிவவழிபாட்டின் மகத்துவத்தையும் பழைமையையும் குறிப்பதாக உள்ளன. பாண்டிய மன்னருக்கும் இச்சிவாலயத்திற்குமுள்ள தொடர்பை கோயில் தூணிற் பொறிக்கப்ட்டுள்ள இணைக்கயல் சின்னம் புலப்படுத்துவதாக அறிஞர் கூறுவர்
.13ஆம் நூற்றாண்டில் குளக்கோட்டமன்னன் இக்கோயிலைப் புனருத்தாரணம் செய்தோடு மானியங்களும் வழங்லானான். போத்த்துக்கேயர் 1624இல் இக்கோயிலைத் தகர்த்தனர். ஆங்குள்ள விக்கிரங்களை மக்கள் எடுத்து கிணற்றுள் போட்டுப்பாதுகாத்தனர் முக்கிய விக்கிரகத்தை அருகிலுள்ள தம்மலகாமத்துக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாகத் திருக்கேதிஸ்வரம் மிகமுக்கிய சிவத்தலமாக நிலைபெற்று வந்துள்ளதோடு, சுந்தரமூர்த்தி நாயனாராற் பாடப்பெற்ற தலப் பெருமையும் கொண்டது. 'நத்தார்படை ஞானன் பசு....' எனத் தொடங்கும் தேவாரத்திருப்பாசுரங்களில் வரும் இயற்கை வள வருணனை இத்தலத்தின் செழுமையை விளக்குவதாகும். மேலும் அப்பாசுரங்களில் வரும் 'பாலாவிக்கரைமேல்','மாதோட்ட நன்னகர்','வங்கம் மலிந்த கடல்','தெங்கம் பொழில் சூழ்ந்த இடம்' என்ற தொடர்கள் திருக்கேதிஸ்வரத்தின் எழில், பொருண்மியம், முத்துக் குளித்தல், மன்னார்க்கடல்வழியாக மேற்கொள்ளப்பட்ட வணிகம் என்பனவற்றைக் குறிப்பதாக அமைகின்றன. புராணக்கதைகளின் அடிப்படையில் ராகு, கேது இலிங்க பூசை செய்து மோட்சம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்குண்டு. பாலாவி என்னும் புண்ணிய தீர்த்தம் கொண்ட இத்தலம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பிணிதீர்க்கும் தன்மையதாகும். தமிழகத்தின் தென்கோடியிலுள்ள இராமேஸ்வரத்திற்கும் திருக்கேதீஸ்வரத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தமையாலும் சைவமயப் பண்பாட்டுச் செயற்பாடுகள் அங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமைவதாயிற்று. போர்த்துக்கேயர் காலத்தில் மன்னார்ப் பிரதேசம் கத்தோலிக்க மதமாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மிகப் பெருந்தொகையானோர் மதமாற்றத்திற்கு உள்ளானார்கள். பின்னர் ஆறுமுநாவலர் காலத்தில் திருக்கேதீஸ்வரத்தை மையமாகக் கொண்டு சைவமும் தமிழும் மீண்டும் புத்துயிர் பெறலாயின.

அடுத்ததாகத் திருக்கேதிஸ்வரத்திற்குத் தெற்கே சிலாபத்துக்கு அண்மையில் அமைந்துள்ள முன்னீஸ்வரம் இராமாயண காலத்துடன் தொடர்புடைய சிவத்தலமாகும். இராம - இராவண யுத்தம் முடிந்து,இத்தலத்தில் இராமர் களைப்பாறி சிவலிங்க பூசை செய்தார் என்பது மரபுவழிக் கதையாகும். இப்பிரதேசம் இப்போது சிங்கள மக்களின் குடியிருப்புக்களாற் சூழப்பட்டபோதிலும் சைவ மக்களும் பௌத்தரும் சென்று வழிபடும் சிவத்தலமாக இப்போது பேணப்பட்டுவருகின்றது.

அடுத்ததாக இலங்கையின் தெற்கு முனையில் சந்திரமௌலீஸ்வரம் என்ற பெயரில் பண்டைக் காலத்தில் அமைந்திருந்த சிவன் கோயில் பற்றியும் அறிதல் வேண்டும்.அவ்விடம் தேவன்துறை எனவும்,தேவேந்திரமுனை எனவும் வழங்கப்பட்டு,; தற்போதுனுழசெனய எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பண்டைக் காலத்திலே தேவேந்திரமுனை என்ற நகரம் இருந்தமையும்,அங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் ஒன்றாக மிகப் பெரிய கோயில் அமைந்திருந்தமையும், அக்கோயிலில் ஆயிரக்கணக்கான நடன மாதர்; நடனமாடினர் எனவும், அந்நகரைச் சூழவுள்ள பகுதியிற் பெரும் மக்கட்குடியிருப்பு அமைந்திருந்ததென்றும் வரலாறு கூறுகிறது. இப்பகுதியின் வடகிழக்கிற் கதிர்காமம் அமைந்துள்ளபிரதேசங்களில்
1950-60களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது பாண்டியரது மீன்சின்னம் பொறித்த அடையாளங்கள் பெரிதும் கண்டு பிடிக்கப்பட்டன. அப்பிரதேசம் முன்னர் பாண்டியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என அறியப்;பட்டதைத் தொடர்ந்து, அகழ்வாராய்ச்சி செய்தல் நிறுத்தப்பட்டதும் ஈழவரலாற்று நிகழ்வுகளாகும். எவ்வாறிருப்பினும இலங்கையின் தென்கோடியில்சிவன் கோயில் அமைந்திருந்தது என்ற உண்மை பெறப்படுகிறது.

அடுத்ததாக, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரைப் பகுதியிற் கொக்கட்டிச்சோலை என்னும் பழம் பதியிலே தான்தோன்றீஸ்வரம் அமைந்துள்ளது. அங்கு கொக்கொட்டி மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றி மக்களுக்கு அருள் பாலித்தபோது அடியார் சேர்ந்து அமைத்த பெருங்கோயில் அங்கு இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது
2015 அக்கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு வைபவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களில் சிவாலயங்கள் அவர்களால் கொள்ளையிடப்பட்டதும்அழிக்கப்பட்டதும்; வரலாறாகும்.போர்த்துக்கேயர்; இக்கோயிலைச் சூறையாட முயன்றபோது அவர்களைக், குழவிகள் துரத்தித் தோற்றோடச் செய்தன என்பதும்இத்தலத்தின் மகிமையாகும்.

வடஇலங்கையில் காங்கேசன்துறைக்கு அண்மையிலுள்ள கீரிமலை என்ற இடத்தில் நகுலேஸ்வரம் என்ற பழம்பெரும் சிவத்தலம அமைந்துள்ளது. இதற்குத் திருத்தம்பலேஸ்வரம் என்ற பெயருமுண்டு. கீரிமலைச் சிவன் கோயில் என்றே மக்கள் பெரிதும் வழங்குவர். இங்கு நகுல முனிவர் என்பவர் வாழ்ந்து சிவலிங்க பூசை செய்து முத்தி பெற்றார்; எனக் கூறப்படுகிறது. இங்கே மூர்த்தி - தலம் - தீர்த்தம் என்ற மூன்று மகிமைகளும் ஒருங்கே அமைந்துள்ளன. மாருதப்புரவீரவல்லி என்ற சோள இளவரசி ஒருத்தி இங்கு வந்து தவம் மேற்கொண்டு தன் தீராநோயைத் தீர்த்துக் கொண்ட புண்ணியதலம் இதுவென்ற கதையுமுண்டு. அந்த அரசியே மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயிலைக்கட்டியதாகவும் அறியப்படுகிறது. பொருளாசையும் மதவெறியும் கொண்ட போரத்துக்கேயர்
1621இல் இக்கோயிலிற் கொள்ளையடித்துச் சீரழித்தமை வரலாறாகும். பின்னர் ஆறுமுகநாவலரின் உதவியுடன் இக்கோயில் புனரமைக்கப்பட்டு மீண்டும் சிறப்படன் பரிபாலிக்கப்பட்டுவந்தது. மீண்டும் சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போதும் இக்கோயில் சீரழிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைவிட ஈழத்திற் சோழர் ஆட்சிக் காலத்தில் பொலநறுவை, கந்தளாய் முதலிய இடங்களிற் சிவன் கோயில் கட்டப்பட்டிருந்தமை பற்றிச் கந்தளாயிலுள்ள சாசனங்கள் குறிப்பிடுகின்றன. கந்தளாய் சிவன் கோயில் 'தென் கைலாசம்' என்றும் அந்நாட்களில் வழங்கலாயிற்று. ஆனால் அவையாவும் சிங்கள மன்னர்களால் அழிக்கப்பட்டன என்பது வரலாறாகும். இவ்வாறாக ஈழத்தில் சிவ வழிபாட்டின் வரலாற்றை ஆராயும்போது, தமிழகத்தைப் போன்றே ஈழத்திலும் தொன்மையான தமிழர் வரலாறும், அவ்வரலாற்றுடன் தொடர்புடைய சிவ வழிபாடும் தொன்மையானது என்பது புலப்படும். ஈழத்தில் 'சிவ' என்ற சொல் மிகத் தொன்மைக்காலம் முதலாக இருந்து வந்துள்ளது என்பதும் கி.மு.
4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சிவ ஆலயங்கள் ஈழத்தில் இருந்துள்ளன என்பதும் புதைபொருட்சான்றுகள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பனவற்றால்நிரூபிக்கப்படுகின்றன.