தமிழர் வாழ்வியல்
- தொல்காப்பியம் தரும் செய்திகள்
த.சிவபாலு
தொல்காப்பியம்
தமிழில் கிடைத்துள்ள பண்டைய நூல். தொல்காப்பியரால் எழுதப்பட்டமையால்
தொல்காப்பியம் எனப்பெயர் பெற்றது என தொல்காப்பியத்திற்கு உரை கண்ட
பனம்பாரனர் பின்வரும் பாயிரத்தால் குறிப்பிடுகின்றார்:
“tlNtq;flk;
njd;Fkup
யிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்;து நூல் கண்டு முறைப்பட எண்;ணிப்
புலம் தொகுத்தோனே ......................
.......................................................
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே'
எனக் குறிப்பிடுவதன் வழி தொல்காப்பியரே தனது பெயரால் தான் எழுதிய
நூலுக்குப் பெயர் தந்துள்ளார் எனக் கொள்ளமுடிகின்றது. தொல்காப்பியம்
இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று இலக்கணம் இன்னொன்று
இலக்கியம். இந்நூல்
1. எழுத்தியல்
2. சொல்லியல்
3. பொருளியல் என முப்பெரும்
பகுப்புக்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது.
எழுத்தியல், சொல்லியல் ஆகிய இருபிரிவுகளும் தமிழ் மொழியின் இலக்கணத்தை
வரையறை செய்து நிற்க மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள பொருளதிகாரம் மக்கள்
வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றது. இந்நூல் மொழி இலக்கணத்தையும் அந்த
இலக்கணத்தால் அமைந்த மக்கள் வாழ்க்கை முறைமையையும், அவர்கள் வாழ்ந்த
இயற்கையோடு ஒட்டியதாக வரையறைப்படுத்துவது அதன் சிறப்பாக அமைகின்றது.
தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் கூறவந்த கருத்துக்கள் முதல் இரு
அதிகாரங்களின் பொருளை தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது என்பது
பெரும்பான்மையான இலக்கியவியலாளர்களின் கருதுகோளாகக் காணப்படுகின்றது.
பொருளதிகாரம் இலக்கியக் கோட்பாடு பேசும் நூலெனக் கொள்ளப்படுவதற்குப்
அதில் காணப்படும் பொருள் வைப்பின் அடிப்படையில் விளக்கங்களை; இளம்பூரணர்,
நச்சினாக்கினியர் முதலியோர் தந்துள்ளனர்.
வடவேங்கடம் முதல் தென் குமரிவரை அமைந்த நிலப்பரப்பே தமிழ்கூறும்
நல்லுலகமாகத் திகழ்ந்தது. அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை
முறைகள் அவர்களின் வாழ்வாதாரம் என்பன இயற்கையோடு ஒட்டியதாக இருந்துள்ளது.
இதனை இயற்றைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவாக நோக்கி பொருளதிகாரத்தில்
தந்துள்ளார். எனினும் இலக்கண வரையறைக்குள் நின்று இவற்றை எவ்விதம்
இலக்கியத்தின்பாற் கொள்ளலாம் என்பது அவரது இலக்கணக்கட்டமைப்பாக
அமைந்துள்ளது. பாடு பொருளும் அப்பொருளைக் கூறும் முறையும், எவ்வித
வரன்முறையில் கூறப்படவேண்டும் என்பதற்கான இலக்கண அமைதியை பொருளியல்
அதிகாரம் கொண்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய வை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என அவர் தமிழகத்தில் காணப்பட்ட நிலத்தின் பாகுபாடு கொண்டு பகுத்து
நோக்குகின்றார். காடும் காடுசார்ந்த இடமும் முல்லை எனவும், மலையும்
மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
எனவும், மணலும் மணல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும் இனங்கண்டு அவற்றோடு
மக்கள் வாழ்க்கைக்கு உண்டான தொழில் முறைகளையும் வாழ்வியல் முறைகளையும்
வரையறை கண்டு தந்துள்ளார். இதனை நோக்கும் போது மொழியின் பங்கு,
பண்பாட்டின் பகுதியாக அமைந்து அப் பண்பாட்டின் படிமுறைகள், வேறுபாடுகள்,
ஒற்றுமை என்பன எவ்விதம் இடத்திற்கும் காலத்திற்குமேற்ப மாறுபடுகின்றன
என்பனவற்றைக் கட்டமைத்துத் தரும் பாணியில் அமைந்துள்ளது பொருளதிகாரம்
என்றால் தனியே இலக்கணத்தோடு மட்டும் நின்றுவிடாது மக்களின் வாழ்வியலை
உள்ளடக்கி மொழிக்கும் மக்கள் வாழ்;வியலுக்குமான தொடர்பைத்
தெளியவைப்பதாக அமைந்துள்ளது என்பதனைப் பொருளதிகாரத்தைக் கற்கும்போது
தெளிவாகின்றது. 'உண்மையில் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமையையும்
பார்க்கும்பொழுது அது இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம், இலக்கிய வகை,
இலக்கியத்தின் பயன், இலக்கியத்தைப் புரிந்துகொள்ளுகின்ற முறை ஆகியவற்றை
விளக்கும் ஒரு பாவியல் நூல் என்பது புலனாகும்' என உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனம் ஏற்பாடு செய்த தொல்காப்பிய இக்கியக் கோட்பாடுகள் பற்றிய
கருத்தரங்கத்தின் நோக்கத்தில்; குறிப்;பிட்டிருப்பதனை அவதானிக்கலாம். 'பலர்
தொல்காப்பியம் ஒரு பாவியல் நூல் (Pழநவiஉள) என அண்மைக்காலத்தில்
குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மீனாட்சி சுந்தரன்
(1965),
மு.வ.வரதராசன், ஜி.சுந்தரமூர்த்;தி (1974),
பேராசிரியர் செவலபில், பேராசிரியர் பொற்கோ
(1994:90) போன்றவர்கள்
இவ்வரிசையில் அடங்குவர். துரதிஷ்டவசமாக இன்றும் தொல்காப்பியப்
பொருளதிகாரத்தை ஒரு படைப்பிலக்கியமாகவே கருதுகின்றனர். வாழ்வியல்
நூலாகவே கொள்ளப்படுகின்றது. பாவியல் நூலாகக் கருதப்படுவதில்லை. இவ்வாறு
பிழைபட உணருவதற்கு காரணம் தொல்காப்பியரின் கவித்துவப் பண்பு எனக்கூடக்
கூறலாம்' என முனைவர் அகஸ்தியலிங்கம் (தொல்காப்பிய இலாக்கியக்
கோட்பாடுகள் - உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
1998)அவர்கள் குறிப்பிடுவது
கருத்திற்கொள்ளற்பாலது.
தொல்காப்பியத்தில் இல்வாழ்க்கை:
'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்னும் தத்துவத்தின் பாற்பட்டது தமிழர்
வாழ்வியல். அகம், புறம் என வாழ்வியலை இருவகையாகப் பகுத்து
விளக்குகின்றது தொல்காப்பியம். ஒத்த அன்புடையராகிக் கணவனும் மனைவியும்
இணைந்து வாழும் குடும்பவாழ்வினை அகவாழ்வென்றும், இவ்விதம் இணைந்த
குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல் வாழ்வினைப்
புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் பழந்தமிழர் பண்பாட்டின் பாற்படும். 'இல்லறம்
அல்லது நல்லறம் இல்லை' என்னும் தொன்மொழி இல்வாழ்வின் உண்மைத் தத்துவத்தை
எடுத்துக்காட்டுகின்றது.
அறம்,பொருள், இன்பம் என்பனவற்றை; மும்முதற்பொருள் எனப் பாராட்டிப்
போற்றினர் தமிழர். இன்பத்திற்கான அடிப்படை பொருள். அந்தப் பொருளை
ஈட்டுதற்குரிய நெறிமுறை அறம் எனப்பட்டது.
அக ஒழுக்கத்தை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை
ஒழுக்கங்களோடு; கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு வகையான ஒழுக்க மரபினைச்
சங்ககாலத் தமிழர் கொண்டிருந்தனர் என்பதினை நாம் தொல்காப்பியவழி
காண்கின்றோம்.
களவொழுக்கம்:
அன்பின் ஐந்திணை ஒழுக்கம் 'களவு, கற்பு' என இரு வகைப்படும். ஒருவும்,
திருவும், உணர்வும் என்பனவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும்
விதியின் வழி தாமே ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு, அன்பினால் வயப்பட்டு
ஒருவர்க்கொருவர் இன்றியமையாதவராய் உலகத்தார் அறியாவண்ணம் மறைந்தொழுகுதல்
களவாகும். 'மறைவில் நிகழும் ஒழுகலாறு' என்னும் கருத்தியலே 'களவு'
எனப்படும். இவ்விதம் மறைந்தொழுகுதலைத் தவிர்த்து பெற்றோர் உடன்பாடு
பெற்று இருவரும் உலகத்தால் அறிய மணங் கொண்டு மனையறஞ் செய்தலே 'கற்பு'
எனப்படும். ஆதலால் களவும் கற்பு நெறியின் பாற்படும் என்பதே பொருளாகக்
கொள்ளப்பட்டது. 'களவு என்னும் பெயரீட்டைக் கற்பு என்னும் பெயரீட்டிற்கு
எதிர்மறையாகக் கொளல் பிழை. முன்னைய அகவாழ்வின் முதல் நிகழ்வு களவு,
தொடர் நிகழ்வு கற்பு என்று கொள்ளுதல் வேண்டும்' என முனைவர் சு.ப.அறவாணன்
அவர்கள் குறிப்பிடுவது கருத்திற்கொள்ளற்பாலது.
இயல்பாக தலைவனும் தலைவியும் இணைந்து வாழ்வதற்கு அவர்கள் தாமே விரும்பி
தேர்ந்து வாழுதல் அல்லது பெற்றோர் முறைப்படி வரன்பார்த்துக்
கட்டிவைத்தல் என்னும் இருமுறைகள் முக்கியமானவையாகத் தமிழர்களிடையே
பயின்று வந்துள்ளது என்பதனை தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகின்றார்.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்து, விரும்;;பி இணைவதனைக்
களவொழுக்கம் எனக்கூறினர். அது எவ்விதம் நிகழ்கின்றது என்பததை
தொல்காப்பியம்; எடுத்துக்காட்டுகின்றது:
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்து ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணுங் காலை
மறை ஓர் தேயத்து மன்றல் எட்டணுற்
துறையமை நல்லியாழ்த் துணைமையார் இயல்பே (தொல். காஞ்.
89)
பருவம் எய்திய பெண்ணும் ஆணும் அவ்வவ் நிலங்களின் தன்மைக்கேற்ப அவர்கள்
ஒருவரை ஒருவர் சந்தித்து தம்முள் காமக்கிளர்ச்சியின்கண் விருப்புண்டாகி
களவொழுக்கத்தில் நிற்பதனை அந்தந்த நிலத்துக்கு உரியனவாக மட்டுமன்றி
வௌ;வேறு நிலத்து மக்களிடையேயும் காதல் தோன்றி கடிமணம் புரியும் முறை
இருந்துள்ளது. இதனைச் சங்க காலத்துப் புலவரான செம்புலப்பெயல் நீராரின்
செய்யுள் ஒன்று குறுந்தொகையில் மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றது.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல (செம்புலப்பெயனீரார் அகம்.-
40)
மணம் என்பது தமிழர் வாழ்வில் வெறும் உடலுறவு மட்டும் என்னும் கருத்தைக்
கொடுப்பதாக இல்லை. அது உள்ள உறவு என்று கொள்ளுதல் சாலப் பொருந்தும்.
உள்ள உறவு என்பது ஒருத்தனுக்கும் ஒருத்திக்கும் இடையேயான முன்னரான,
நிகழ்கால, பின்னரான உறவினைக் குறித்து நிற்;கின்றது என்பது அறிஞர்களின்
கூற்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களுக்குரிய
ஒழுக்கத்தையும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் அகம் என்று
தொல்காப்பியர் வரையறைப் படுத்துவதனைக் காணலாம்.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே (தொல்.பொரு. கற்.
1)
பெற்றோர் அறியாவண்ணம் தலைவனுடன் தலைவி செல்லுதல் உடன்போக்கு என்பதாக
விபரிக்கப்படுகின்றது. ஒத்த காதலனும் காதலியும் யாருமறியாவண்ணம்
கரந்தொழுகி, பெற்றோர் விருப்பமின்றி தாமே சேர்ந்து வாழ நினைத்துச்
செல்லும் மரபும் இருந்துள்ளது.
கொடுப்போ ரின்றிக் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான (தொல். பொருள். கற்.
.2)
காலப்போக்கில் தான்;விரும்பிக் காதலித்த தலைவியைக் கைவிட்டு வேற்றாளை
நாடிய நிலைகள் அதிகரித்தமையால் ஊரறிய, சமூகமறிய மணவினைகள்
இடம்பெறலாயிற்று. இந்த மணவினை முறைகளுக்குச் சாட்சியம் தேவைப்பட்டது.
களவு மணத்தைத் தடுத்து திருமணம் என்னும் கட்டுக்குள் எல்லோருமறியச்
செய்து வைக்கும மணவினைமுறைகள் இடம்பெறத்தொடங்கியதை தொல்காப்பியர்
எடுத்துக் காட்டுகின்றார்.
பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன
ரையர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொருள். கற்.
4)
ஏமாற்றிச் செல்லும் அல்லது மறுத்து நிற்கும் நிலைகளைத் தவிர்த்துக்
கொள்வதற்காக கரணம் என்னும் மணவினைச் சடங்குகளை அந்தணர்கள் ஏற்பாடு
செய்துகொண்டனர் எனப்படுகின்றது. இந்த மணவினைகள் சமுதாயத்தின்
உயர்மட்டத்தில் உள்ள அந்தணர், வணிகர், அரசர் ஆகியோருக்கு மட்டும்
உரித்துடையதாக அல்லது அவர்களுக்கு மட்டுமென இடம்பெற்று வந்துள்ளது.
ஆனால் அது பின்னர் உழவுத்தொழிலை மேற்கொள்ளும் சாதாரண மக்களிடத்தும்
ஏற்படத் தொடங்கியுள்ளமையை தொல்காப்பியர் எடுத்தியம்பத் தவறவில்லை.
'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே' (தொல்.
பொருள்-கற்பியல், 3)
வடக்கிருந்து வந்தவர்களிடையே நிலவிய மணவினை முறைகள் எட்டு அவற்றுள்
காந்தர்வம் எனப்படும் காதல் மணம்; தமிழர்களிடம் இடம்பெற்றுள்ளது என்பதனை
எடுத்து விபரிக்கின்றார்.
திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் நிலைமையும் அங்கு இருந்துள்ளமையை
உய்த்துணர முடிகின்றது. அதாவது திருமணம் செய்யப்போகும் தலைவனுக்கும்
தலைவிக்கும் உள்ள தகமைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.
தலைவனும், தலைவியும் பத்துவகைப் பண்புகளால் ஒத்திருத்தல் வேண்டும்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருபு நிறுத்த காமவாயில்
நிறைய அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்.பொரு.மெய்.25).
இப்பண்புகள் ஒத்தில்லாது தலைவன் மிக்கிருந்தாலும் குற்றமில்லை. ஆனால்
தலைவிக்கு பண்புகள் மிக்கிருத்தல் கூடாது எனக்குறிப்பிடுகின்றார்.
ஆண்வழிச் சமுதாயத்தின் பேறாக அக்காலத்து நிலவிய தன்மையினை அவர் கவனித்து
அதன்வழி ஆண்மைக்கு முதன்மை அளித்துள்ளார்போலும். தலைவன், தலைவி ஆகிய
இருபாலாருக்குமான பொருத்தப்பாடுகளையும் அவர் எடுத்தியம்பியுள்ளார்.
'பெருமையும், உரனும் ஆடூஉ மேன' (தொல்.பொரு.
கற் 7) என
ஆண்மைக்குரிய பண்புகளைக் கூறிய தொல்காப்பியர் பெண்மைக்கான பண்புகளையும்
எடுத்துக் கூறியுள்ளார்.
'பெருமையும், உரனும் ஆடூஉ மேன' (தொல்
பொரு, 7)
என ஆண் மகனுக்குரிய பண்புகளைக் கூறிய தொல்காப்பியர், பழிபாவங்களைக்
கண்டு பயப்படுபவனாகவும், அறிவுடையவனாக இருத்தல் போன்றன தலைமகனுக்குரியன
என்கின்றார்;. அதேபோன்று பெண்களுக்குரிய பண்புகளையும் அவர்
குறிப்பிடத்தவறவில்லை.
அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப. (தொ.பொரு. 8)
அச்சம், நாணம், பேதைமை ஆகிய மூன்றும் பெண்டிர்க்குரிய பண்புகளாகக்
கொள்ளக்;கிடக்கின்றன. இந்த மூன்று பண்புகளும் பின்னர் அச்சம், நாணம்,
மடம், பயிர்ப்பு என்னும் நான்காக விரித்துரைக்கப்பட்டது. அச்சம், நாணம்,
பேதைமை ஆகிய மூன்றும் பெண்டிர்க்குரிய இலக்கணமாகும். இவ்வாறு பண்புகளை
உடைய தலைவனும், தலைவியும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கை அறம், பொருள்,
இன்பம் இவற்றால் சிறப்புறுவதாகும். தலைவன் இவ்வாறு தன் குடிப்பெருமை
விளங்க மனைவாழ்க்கை நடத்துவான் என தொல்காப்பியம் கூறுகிறது. பெண்களின்
பண்புகள் குறித்து பின்வரும் வரிகள் விளக்குவதையும் அது களவு'
ஒழுக்கத்தின் பாற்படுவதையும் வரைகின்றார்.
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப. (தொல்.கள 9)
ஆசைமிகக் கொள்ளுதல், மற்றவர் அறியாவண்ணம் தலைவன் மாட்டுக் காதல்
கொள்ளுதல், அதனால் உடல் நலிதல், தன்னிடம் நேர்ந்தது என்ன என தோழிக்கு
எடுத்துக்கூறுதல், வெட்கப்பட்டு சிந்தித்திருத்தல், காண்பதெல்லாம் தனது
மனதிற்பட்டவையாகவே தோன்றுதல், அடிக்கடி என்ன செய்வதென்பதனையே மறந்து
செயலிழந்திருத்தல், நினைவழிதல், வேதனை மிகுதியால் இறந்துபோனாலென்ன என
எண்ணுதல் போன்ற அனைத்தும் களவு ஒழுக்கத்தின பாற்படுவதாக
கொள்ளப்படுகின்றது.
நன்னெறிப் படரும் தொல் நலம் பொருளினும்
(தொல்.கற்பு.5)
நன்னெறி என்பது அறம், பொருள், இன்பம் தவறாத நெறி பிறழாது தலைமகனும்
தலைமகளும் இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கை எனப்படும்.
கற்புடைமை
கற்பெனப் படுவது தலைவனுக்கு தலைவியை முறையோடு திருமணம் செய்து கொடுத்தல்
எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியம் காண்ப
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப. (தொல்.பொரு. களவி
1)
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி களவுவழி ஒழுகலை பெற்றோர் அறிந்து
அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது கற்பொழுக்கம் என
வரையறுக்கின்றார் தொல்காப்பியர். இது இன்றும் உள்ள நடைமுறையாகவே தமிழர்
மத்தியில் காணப்படுகின்றது. பெற்றோரால் வரன் பார்க்கப்பட்டு
மேற்கொள்ளப்படும் திருமணங்கள் இத்தகையனவே. திருமணத்தில் இன்று கதைத்துப்
பேசி முடிவெடுத்தல் முக்கியமானதாக விரவி வருவதனையும் காண்கின்றோம்.
ஆணும் பெண்ணும் தாமே முடிவெடுக்கும் பண்பினை தொல்காப்பியர் காலத்து
களவொழுக்கம் எடுத்துக் காட்டுகின்றது.
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
இழிந்துழி இழிபே சுட்டலான (தொல்.பொரு.களவி 2)
வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ்
நின்றவை களையும் கருவி என்ப
நாட்டம் இரண்டும் அறிவ உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்
குறிப்பே குறித்துக் கொள்ளும் ஆயின்
ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர்.' (தொல்.பொரு. களவி
3)
களவொழுக்கதில் பிறரறியாது ஒழுகிவரும் தலைமகளையும் தலைவனையும் பெற்றோர்
அறிந்து அவற்றை வினவி, அவர்கள் அவ்விதம் ஒழுகுவது உலகுக்குத் தெரியும்
முன்னர் அவர்களுக்குத் திருமணம் முடிக்கவேண்டும் என விளைந்து அதன்வழி
அவர்கள் இருவரையும் இணைப்பதற்கான ஏதுக்களானவை என்ன என்பதனைக்
கண்டறிவதும், தலைமகளிடம் ஏற்பட்டள்ள மாற்றத்தின் விளைவுகள் குறித்து
அறிந்து கொண்டு அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கும் முறையினையும்
பெற்றோர் கொள்கின்றனர்.
கைம்மை மகளிர் பற்றித் தொல்காப்பியம்:
பண்டைக் காலத்தில் தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர்.
அவர்களுடைய பழக்கவழக்கம் தொழில், விளையாட்டு போன்றவை யாவும் போர்ப்
பண்புடன் இருத்தலைக் காணலாம். தொல்காப்பியத்தில் புறத் திணைகள் ஏழு
என்று கூறப்பட்டுள்ளது. வெட்சித் திணை 14 வகைஎன்றும் அதன் குறைகள் 21
என்றும் தொகுத்துக்காட்டப்பட்டுள்ளது. வஞ்சித்திணைத் துறைகள் 13, உழிஞை
12, தும்பைத் திணை துறைகள் 12, ஆகிய திணைகள் போரைப் பற்றியும், வாகைத்
திணை ஏழு துறைகளைக் கொண்டதாகவும் அவை இருபகுதிகளாக்கப்பட்டு,
ஒவ்வொன்றும் 9 வகைகளாக உள்ளன. இது போரின் வெற்றியைப்பற்றிக் கூறுகின்றது.
காஞ்சித் திணை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறது. நிலையாமையாவது இளமை
நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூன்று வகையாகக்
கூறப்பட்டுள்ளது.
பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.பொரு.காஞ்.78)
பாடாண்திணை என்பது அண்மகனையும் கடவுளையும் பற்றிக் கூறுவது.
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே (தொல்.பொரு. காஞ்.80)
மகளிர் பெருமை பேசும் தொல்காப்பியம்:
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவேற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயல்கட்கு உரிய. (தொல்.பொரு. கள.
10)
பெண்டிற்கழகு சொற்றிறம்பாமை என்று ஒளவையார் கூறுவார். கற்பு நெறி
வழுவாது வாழத்தலைப் படலே ஆண், பெண் இரு திறத்தார்க்கும் உரிய உயரிய
ஒழுக்கம் எனப்படுகின்றது. ஆனால் பெண்களுக்கு மட்டும் சிலவற்றை விதந்து
கூறப்பட்டுவருவது தொல்காப்பியர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கின்றது.
கற்பொடு ஒழுகுதல், துணைவனின் காமப் பசியைத் தீர்த்தல், நன்நெறியொடு
ஒழுகுதல் மென்மையான இயல்பும், எதனையும் பொறுத்து நிற்கும்
பொறுமைக்குணமும், எல்லாவற்றிலும் நிறைவைக்காணும் பண்பும், மிகவும்
கடினமாக உழைத்து தனது மனைக்குவந்துற்ற விருந்தினரை உபசரித்து
உணவளித்தலும் போன்ற பிறவும் குடும்பத்தலைவிக்கு உரிய மாண்புகள் எனத்
தொல்காப்பியம் கூறுகின்றது.
முகம் புகல் முறைமையின் கிழவோற்;கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய (கற். 11)
கணவன் இறந்த வலியினாலேயே மனைவி தன் உயிரைப் போக்கிக் கொண்டாள் என்று
தொல்காப்பியம் கூறுகிறது. அவ்வளவு தூரம் கணவன்மீது பாசம்
வைத்திருந்ததோடு அவனின்றி வாழாக் கவரிமானின் மாண்பு கொண்டவள் தலைவி என
உரைக்கின்றார்.
நீத்த கணவன் தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி ஆஞ்சியானும்
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் (தொல்.பொரு. புறம்.18)
போரில் புண்பட்டுக் கிடக்கும் தன் கணவனைப் போர்களத்தில் பேய்கள்
நெருங்க விடாது பாதுகாத்த பெண்ணின் பெருமை பற்றி கூறப்பட்டுள்ளது.
இன்னகை மனைவி பேஅய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்சியும் (தொல். பொருள்.காஞ்)
இவ்வாறு மகளிரின் மாண்புகளை தொல்காப்பிய நூற்பாக்கள் தெளிவாக
விளக்குகின்றன. மகளிரின் பண்புகளைக் கூறும் தொல்காப்பியர் மகளிர்க்கு
இருக்கக் கூடாத குணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர் (தொல். பொரு.
25)
அழுக்காறு, அறனழிய பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியராக நினைத்தல்,
புறம் கூறல், கடுஞ்சொல், முயற்சியின்மை, தம் குலச்சிறப்பை எண்ணி
இன்புறல், பேதைமை, மறதி, தான் காதலித்தவரை பிறரோடு ஒப்பிடல் போன்றவை
இருக்கக்கூடாதவையெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
தனிமனிதர்களிடம் தோன்றும் பண்பாடே சமுதாயப் பண்பாடாக அமைகின்றது.
சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். தூய்மையான இல்லற ஒழுக்கத்தால்
குடும்பம் மேன்மை அடைகிறது. இல்லறம் சிறப்பாக இருந்தால் சமுதாயம்
சிறப்படையும். அதனால் தொல்காப்பியர் காட்டும் பண்பாடு எக்காலத்திற்கும்
பொருந்துவதாகவும் நாடு சிறப்படைய வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
விருந்தோம்பல்:
விருந்தோம்பல் தமிழரின் சிறந்த சால்பு. இதனை தொல்காப்பியரின் பின்வந்த
திருவள்ளுவர் பின்வருமாறு பெருமையாகப் கூறிப்போந்தார்.
விருந்து புறத்ததாய்த் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று (குறள் 82)
விருந்தெதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே
(தொல்.பொ. கற் 230)
தம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உண்டி முதலியவைகளை
அளித்து அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது இல்வாழ்வோர்க்குரிய
தலைசிறந்த பண்பாடாகத் தமிழகம் போற்றியது. இதனைத்தான் தொல்காப்பியம்
விருந்து புறந்தருதல் என மனைவிக்குரிய மாண்புகளுள் ஒன்றாகக் கூறுகிறது.
இல்வாழ்க்கையுடைய மகளிர்க்கு விருந்தோம்பி வாழ்வதே சிறப்புடையதாகக்
கருதப்பட்டது.
'விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்....'
(தொல். பொருள்.
விருந்தினரோடு நல்ல செயல்களை விருப்பதோடு செய்தல் வேண்டும் என
விருந்தோம்பல் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது. இதனை மிக நயமாக வள்ளுவர்
பின்வரும் குறட்பாவிலே தெளிய வைக்கின்றார்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள்
90)
தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் தெளிவாக
எடுத்துக் கூறுகின்றது. நாகரிகம் படைத்த தமிழன் மிக உயர்ந்த நோக்கோடு
வாழ்ந்துள்ளான் என்பதனை தொல்காப்பிய வழி நாம் அறியமுடிகின்றது. 'யாதும்
ஊரே யாவரும் கேளிர். .. . .' (கணியன் பூங்குன்றனார்) என்ற புறநாநூற்று
அடிகள் தொல்காப்பியக் கோட்பாட்டின் வழிவந்ததாகவே கொள்ள முடிகின்றது.
மிகவும் பரந்த நோக்கம் கொண்ட உயர்ந்த நிலையில் தமிழன் இருந்துள்ளான்
என்பதனைத் தொல்காப்பியம் நிறுவுகின்றது. தமிழரின் பண்பாடு பற்றிப்
பேசுவதற்கு தமிழ் மொழியையும் தமிழ்மொழியில் உள்ள பண்டைய கருவூலங்களையும்
அறிந்துகொள்ளவதன் மூலமே முடியும். தமிழின் தொன்மை வரலாறும் தமிழனின்
தொன்மைப் பண்பாடும் தமிழனைத் தலைநிமிர வைக்கும். எமது பண்பாட்டு
விழுமியங்களை உலகறிய வைப்பது கைகூடிவரும் என உணர்ந்து தமிழை வாழ்வில்
கற்றுக்கொள்ள முயற்சித்தல் வேண்டும்.
|