'ஆருயிர் அன்னை
முதற்றே உலகு'
முனைவர்
இரா.மோகன்
'மனித
குலத்தின் உதடுகளில் மிக அழகான வார்த்தை 'அம்மா' என்ற வார்த்தை, மிக
அழகான அழைப்பு, 'அம்மா' என்ற அழைப்பு. அது நம்பிக்கையும் அன்பும்
நிறைந்த வார்த்தை, இனிய, அன்பான, இதயத்தின் ஆழத்தினின்றும் வரும்
வார்த்தை. அன்னையே எல்லாம். துயரத்தின் போது ஆறுதல், நம் துன்பத்தில்
நம்பிக்கை, பலமின்மையில் பலம் - அவளே. அவளே அன்பு, கருணை, இரக்கம்,
மன்னிக்கும் பண்பு எல்லாவற்றிற்கும் மூலம். தன் அன்னையை இழப்பவன்,
அவனைக் காக்கின்ற ஒரு ஆன்மாவை இழக்கிறான்' (தமிழில்: முழுமுதலோன், கலீல்
ஜிப்ரானின் 'முறிந்த சிறகுகள்', பக்.79-80)
என்பது உலக இலக்கியத்திற்கு லெபனான் தந்த கொடையான கலீல் ஜிப்ரானின்
வாக்கு. அன்னையின் அருமையை – பெருமையை – உயர்வை - இதனினும் மேலாக எவரும்
சொற்களில் வடித்துக் காட்டிவிட முடியாது.
'மாதா பிதா குரு தெய்வம்' என்னும் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது
அன்னையே. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'தாயிற் சிறந்த
கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்றாற் போல் நீதி
நூல்கள் அறம் உரைத்திடும் போதும் முதலில் குறிப்பிடப் பெறுவது தாயே.
சங்கச் சான்றோர் பொன் முடியாரும் 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே' (புறநானூறு,
312) எனத்
தாயின் கடமையையே முதற்பெருங் கடமையாகச் சுட்டுவார். நீண்ட, நெடிய
இலக்கியச் செழுமையும் பண்பாட்டுச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும்
கொண்ட தமிழ் மொழியும் காலங்காலமாகத் தாயின் மாண்பினை போற்றியே
வந்துள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைகூ கவிதை என்னும் இருபதாம்
நூற்றாண்டுக் கவிதை வடிவங்களும் திரையிசைப் பாடல்களும் அன்னையின் அருமை
பெருமைகளைப் பலபடப் பேசியுள்ளன. ஒரு பறவைப் பார்வையில் அவற்றினைக்
குறித்து இங்கே சுருங்கக் காண்போம்.
தாயன்புக்காக ஏங்கிய பாரதி
இருபதாம் நூற்றாண்டுக் தமிழ்க் கவிதையின் தலைமகன் பாரதி. இளமைப்
பருவத்தில் தாயை இழந்தது பாரதியின் வாழ்வில் நிகழ்ந்த மிகப் பெரிய சோகம்;
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
'என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்க விட்டு விண்ணெய்திய தாய்'
(பாரதியார் கவிதைகள், ப.20)
என இதனைத் தம் 'ஸ்வசரிதை'யில் மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார் பாரதி.
'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா'
எனத் தாய்ப் பாசத்திற்குப் புகழாரம் சூட்டும் பாரதியார்,
'மானஞ் சேர்க்கு(ம்) மனைவியின் வார்த்தைகள்'
(ப.503)
என மனைவியின் மாண்பினையும் தம் கவிதையில் உரிய வகையில் போற்றிப் பாடி
இருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 'தாய்க்குப் பின் தாரம்'
என்னும் முதுமொழியும் இதற்கு அரண் சேர்க்கும்.
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே' (ப.135)
என 'நாட்டு வணக்கம்' பாடும் போதும் தந்தையுடன் தாயையும் குறிப்பிடத்
தவற மாட்டார் பாரதியார்.
பாவேந்தர் பாரதிதாசன் போற்றும் தாயுள்ளம்
'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டல'த்தைச் சார்ந்த தனிப் பெருங்கவிஞர்
பாரதிதாசன். அவர் 'உலக ஒற்றுமை' என்னும் கவிதையில் மனித உள்ளத்தை ஐந்து
வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளார்:
-
1. கடுகு உள்ளம்:
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் என்னும் இவை
உண்டு தான் உண்டு என எண்ணும் உள்ளம். இவ்வுள்ளம் கொண்டவனைத் 'தெருவார்க்கும்
பயனற்ற சிறிய வீணன்' எனச் சாடுவார் பாரதிதாசன்.
2. துவரை உள்ளம்: சற்றே
விரிவாக, 'கன்னலடா என் சிற்றூர்' என நினைக்கும் உள்ளம் இது;
கடுகுக்கு நேர் மூத்தது.
3. தென்னை உள்ளம்: தனது
நாட்டுச் சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்துவது இது.
4. மாம்பிஞ்சு உள்ளம்:
இவ்வுள்ளம் படைத்தவர் ஆயுதங்கள் பரிகரிப்பார். அமைதி காப்பார்,
அவரவர் தம் வீடு, நகர், நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச்
செய்வார்.
5. தாயுள்ளம்: இது தூய உள்ளம்,
அன்பு உள்ளம், பெரிய உள்ளம், 'தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே' என
எண்ணும் உயர்ந்த உள்ளம். தன்னலம் தீர்ந்ததாலே ஆங்கே சண்டை இல்லை;
எப்போதும் இன்பமே குடிகொண்டிருக்கும்.
(பாரதிதாசன் கவிதைகள்: முதல் தொகுதி, ப.88).
உலகம் இன்பம் விளையும் தோட்டமாக விளங்க வேண்டுமானால், மக்கள்
யாவரும் உயர்ந்த தாயுள்ளத்தைப் பெற வேண்டும் என்பது பாவேந்தர்
பாரதிதாசனின் முடிந்த கருத்து ஆகும்.
நாமக்கல் கவிஞரின் அனுபவ மொழி
'என் கதை' என்பது நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரைநடை
வடிவில் எழுதிய தன்வரலாறு. அதில், 'எனக்கு வினாத் தெரிந்தது
நாமக்கல்லில் தான். முதலில் என நினைவிற்கு வருவது என் தாயார் உருவமும்,
எனக்கு இவர் இளமையில் பழக்கி விட்ட வழக்கங்களுந் தாம்; என்னுடைய
பிற்கால வாழ்க்கையில் எனக்கு உதவிய ஒழுக்கங்கள் அனைத்தும் என் அன்னை
ஊட்டிய அமுதம் என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு' (என் கதை, ப.30)
எனத் தம் அன்னையாரைப் பற்றிய 'பால பருவ'த்து நினைவினை நெகிழ்வுடன்
குறிப்பிட்டுள்ளார் நாமக்கல் கவிஞர்.
'அன்னகைகுப் பதில் பின்னையொருவர் கிடைப்பாரா? எத்தனையோ நண்பர்கள்
கிடைக்கலாம்; எத்தனையோ கலியாணங்களைச் செய்து கொள்ளலாம்; எத்தனையோ
பேருடன் உறவாடலாம்; ஆனால், அன்னை ஒருத்தி தான். அவள் அன்பும் அலாதிதான்.
அந்த அரும்பெரும் பொருளையும் எவ்வளவோ பேர் அறியாமல் அவமதிக்கிறார்கள்!'
(ப.31)
என்னும் நாமக்கல் கவிஞரின் கருத்து முதியோர் இல்லங்கள் பெருகி வரும்
இந்நாளில் மக்கள் அனைவரும் தங்கள் மனங்களில் கல்வெட்டுப் போல் பொறித்து
வைத்துக் கொள்ள வேண்டிய மணிமொழி ஆகும்.
கவிஞர் சிற்பி தீட்டியுள்ள 'அழித்து எழுத
முடியாத சித்திரம்'
'எழுத்து ஆன்மாவின் ரத்தம் / கவிதைகள் காலத்தின் உதடுகள்' (சிற்பி
கவிதைகள்: தொகுதி 1,
ப.539)
என்னும் கொள்கை முழக்கத்துடன் அரை நுற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகக்
கவிதை உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் கவிஞர் சிற்பி மானுடம் பாடிய
வானம்பாடி இயக்கத்தின் கூர்முனையாகச் செயல்பட்ட கவிஞர்களில்
முக்கியமானவர் அவர். 'ஒரு கிராமத்து நதி' (1998)
சிற்பிக்குச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுத் தந்த கவிதைப்
படைப்பு. அதில் இடம் பெற்றுள்ள 'ஓடு, ஓடு சங்கிலி...' என்னும் கவிதை
அன்னையைப் பற்றிய கவிஞரின் அற்புதமான பதிவு – உருக்கமான படப்பிடிப்பு –
ஆகும்.
'அழித்து எழுத முடியாத
சித்திரம் ஒன்றுண்டு –
அம்மா' (சிற்பி கவிதைகள்: தொகுதி 2, ப.962)
என்னும் வைர வரிகளுடன் தொடங்கும் அக் கவிதை,
'நேசிப்பு . . . நேசிப்பு
புருசனைப் போலவே / பண்ணையத்தையும்!
குழந்தைகள் போலவே / எருமைகளையும்!
உறவுகளைப் போலவே / அக்கம் பக்கத்தையும்' (ப.963)
என 'நேசிப்புக்கு எடுத்த ஜென்ம'மாகவே அன்னை வாழ்ந்ததை அன்புச் சுவை நனி
சொட்டச் சொட்ட எடுத்துரைத்து,
'சோர்வு சூழும்பொழுது
இன்றும் அம்மாவில் குரல்:
'ஓடு ஓடு சங்கிலி
ஓடோடு...'' (ப.964)
என்னும் இளம்பருவத்து மலரும் நினைவுடன் 'அம்மா ஓர் அதிசயம்' என்பதைச்
சொல்லி நிறைவு பெறுகிறது.
கவிஞர்
மு. மேத்தாவின் படப்பிடிப்பில் தாயின் தனித்தன்மை
'மண்ணுக்கு மரம் பாரமா?, மரத்துக்கு இலை பாரமா?, கொடிக்குக் காய் பாரமா?,
பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?' என ஒரு திரை இசைப் பாடலில்
அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுப்பார் மருதகாசி. எவ்வளவு நேரம் தூக்கி
வைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தையின் பாரம் சுமையாகவே தோன்றாது
தாய்க்கு. இதுதான் தாயன்பின் தனிச்சிறப்பு. இதனைக் கவிஞர் மு.மேத்தா 'தாய்'
என்னும் கவிதையில் தமக்கே உரிய பாணியில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
இரயிலில் பயணம் செய்யும் ஒர் இளைஞன், 'பெட்டியை மேலே வைத்தான் / சிறிய
பெட்டியைப் / புகை வண்டியின் / இருக்கைக்குக் கீழே / இழுத்துத்
தள்ளினான்... / தோள் பையைக் கம்பியில் / தொங்க விட்டான்... / கையில்
பிடித்திருந்த / பத்திரிகையைக் கூடப் / பக்கத்தில் வைத்தான்... / நெட்டி
முறித்து / நிமிர்ந்தான்...' அப்போது எதிரே அவன் காணும் காட்சி அவனைத்
தலைகுனியச் செய்கின்றது. அப்படி என்ன காட்சி அது என்கிறீர்களா? இதோ,
அதனைக் கவிஞரின் சொற்களிலேயே காண்போம்:
'எதிரே
இடது தோளினும் / வலது தோளினும்
இடுப்பிலும் / மாற்றி மாற்றி
வைத்ததன்றி / தன் குழந்தையைக்
கீழே / இறக்கி வைக்காத
தாயைப் பார்த்துத் / தலை குனிந்தான்!'
(ஆகாயத்துக்கு அடுத்த வீடு, ப.74)
ஏர்வாடியாரின் கவிதையில் இமயமாய் உயர்ந்து
நிற்கும் இந்தியத் தாய்
கவிஞர் கல்யாண்ஜி குறிப்பிடுவது போல், 'எளிமையாகச் சொல்வது, இதயத்தைத்
தொடுவது, எல்லோரையும் அடைவது எனும் எளிய, வெற்றிகரமான கவிதைச்
செயல்பா'ட்டினைத் (அணிந்துரை, யாரும் யாராகவும்..., ப.10)
தம் வசமாக்கி வைத்திருப்பவர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்.
அவரது 'கவிதை உறவு' இதழின்
7ஆம் பக்கக்
கவிதைகளின் தொகுப்பு 'யாரும் யாராகவும் ...' அத் தொகுப்பில் அன்னையின்
பெருமையைப் பேசும் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'அவள் உடுத்திய
சேலைகள் கிழிந்திருக்கலாம்
அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும்
இன்னும் அப்படியே...' (ப.30)
என 'அம்மாவின் சேலை' கிழியாத நினைவுகளுடன் அவரது நெஞ்சப் பேழையுள்
இடம்பெற்றிருப்பதை ஒரு கவிதை எடுத்துரைக்கின்றது.
பிறிதொரு கவிதையில் படிப்பறிவு இல்லாத ஒரு வெகுளித் தாயிடம் மதிப்பெண்
பட்டியலைக் காட்டிப் பள்ளிக் கட்டணம் அது எனக் கூறி ஏமாற்றிப் பணம்
கேட்கிறான் படிப்பு ஏறாத அவளது மகன் இளங்கோ. கவிஞரோ அதனைப் பொறுக்க
மட்டாமல் பதறி ஒரு நாள் தாயிடம் விவரம் கூறி நண்பனுக்குப் பணம் தர
வேண்டாம் என்கிறார்.
'தம்பி ராதா! தெரியும் எனக்கு.
யாரவன் இளங்கோ, என் மகன் தானே?
ஏமாற்றிப் போகட்டும், யாரிடம்
இழக்கிறேன்?
அதிகமாய்ப் பணத்தைக் கறந்திட வேண்டி
அதற்காகவேனும் அதிகமாய் மதிப்பெண்
பெறுவதற்காகப் படிப்பான் என்ற
எதிர்பார்ப்பில் தான் ஏமாறுகின்றேன்'
என்கிற தாய் அப்போது அவர் முன் இமயமாய் உயர்ந்து நிற்கிறாள்.
'இது தான் தாய்மை. . . இதுதான் இந்தியா'
(ப.32)
எனப் பெருமிதத்தோடு அக்கவிதையை முடித்து வைக்கிறார் கவிஞர்.
ஹைகூ கவிதை போற்றும் அன்னையின் மாண்பு
காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறலாம். கோலங்கள் மாறலாம்; கொண்ட
கொள்கைகளும் மாறலாம். எனினும், தாயன்பு என்பது என்றும் வற்றாமல் ஓடிக்
கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதி ஆகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
தமிழ்க் கவிதை எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ஹைகூ. 1984-ஆம் ஆண்டில்
'புள்ளிப் பூக்கள்' என்ற முதல் ஹைகூ கவிதைத் தொகுப்பினைத் தமிழுக்குத்
தந்தவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.
ஹைகூ கவிதையும் தன் பங்கிற்குத் தாய்மையைத் தனித்தன்மை துலங்கப்
போற்றிப் பாடியுள்ளது.
'அடுப்புப் புகை
கரித்துணிக் கவிதை ...
அம்மா'
(விரல் நுனியில் வானம், ப.19).
என்பது மு.முருகேஷ் படைத்துள்ள அழகிய ஹைகூ.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!' எனப்
பறைசாற்றினார் பாட்டுக்கொரு புலவர் பாரதியார். இன்றைய ஹைகூ கவிஞர்
நவதிலக்கும் 'தமிழ் இனிமை' என்கிறார். எதனால் தெரியுமா? இதோ, அவரே
கூறுகிறார், கேளுங்கள்:
'தமிழ் இனிமை.
அம்மா –
இருப்பதால்'
(பூக்கள் பறிப்பதற்கில்லை, ப.17)
அவரது கைவண்ணத்தில் மலர்ந்துள்ள பிறிதொரு ஹைகூ:
'புதிய திருவாசகம்
எழுதி வைத்தேன் -
அம்மா!' (ப.31)
ஒரு பொழுதும் தனக்கென வாழாமல் அல்லும் பகலும் நாள் முழுவதும் தான்
பெற்றெடுத்த குழந்தைகளின் நலத்திற்காகவே வாழும் தாயின் அன்பு
நெஞ்சத்தினை ஹைகூ கவிதைகள் போற்றும் விதமே தனி!
'விடிய விடிய விழித்திருந்தாள்
அம்மா
நாளை மகனுக்கு பரீட்சை'
(தூரத்து வெளிச்சம், ப.67).
என எஸ்.குமார் இரவெல்லாம் மகனுக்காகக் கண் விழித்திருக்கும் அன்னையைப்
படம்பிடித்துக் காட்ட,
'மகளுக்குப் பிரசவம்
துடித்தாள்
தாய்'
(சின்ன சின்ன ஆசை, ப.13)
என பொன்.குமார் மகப்பேறு காண இருக்கும் தனது மகளுக்காகத் துடிக்கும்
தாயினை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையின் நினைவு நெஞ்சை விட்டு என்றும்
நீங்குவதே இல்லை. இதனை,
'ஒவ்வொரு கவளச் சோற்றிலும்
நிற்கும்
அம்மா நினைப்பு.'
(கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு, ப.25)
என்ற சென்னிமலை தண்டபாணியின் ஹைகூ அழகாகப் பதிவு செய்துள்ளது.
பாரதி ஜிப்ரானின் நோக்கில்,
'வார்த்தைகளால்
எழுத முடியாத கவிதை
அம்மா.'
(மழை தினம், ப.14)
சு.சேகருக்கோ, 'அன்பின் / அட்சயப் பாத்திரம் / அன்னை' (முள்ளின் முகவரி,
ப.28)
'உலகின் உன்னதம்
உயிர் தாங்கும் காவியம்
தாய்மை'
(நிலவின் புன்னகை, ப.67)
என்பது மயிலாடுதுறை இளையபாரதி தாய்மைக்குச் சூட்டும் புகழாரம்
'அன்பு வானம்
பால் மழை சுரக்கும்
தாய் முலை மேகம்'
(உடைத்து கிடந்த நிலவு, ப.45)
என்பது உருவக நலம் சிறந்த விளங்க ஸ்ரீரசா படைத்துள்ள ஹைகூ.
இங்ஙனம் தமிழ் ஹைகூ கவிதைகள் தாயின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ள இடங்கள்
பலவாகும்.
குழந்தைப் பாடல் கொண்டாடும் அம்மா!
குழந்தைப் பாடல்கள் அம்மாவைக் கொண்டாடி மகிழ்வது என்பது இயல்பினும்
இயல்பே. பதச் சோறாக, தமிழ்நாட்டுக் குழந்தைகளின் நாவில் களிநடம்
புரியும் ஓர் அழகிய குழந்தைப் பாடல் இதோ:
'அம்மா இங்கே வாவா! ஆசை முத்தம் தாதா!
இலையில் சோறு போட்டு / ஈயைத் தூர ஓட்டு1
உன்னைப் போன்ற நல்லார் / ஊரில் யாவர் உள்ளார்?
என்னால்; உனக்குத் தொல்லை / ஏதும் இங்கே இல்லை
ஒற்றுமை என்றும் பலமாம் / ஓதும் செயலே நலமாம்
ஐயமின்றிச் சொல்வேன் / ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்'
குழந்தைக் கவிஞர் கா.நமச்சிவாய முதலியார் இயற்றிய இப்பாடலில் கொலு
வீற்றிருக்கும் இசை இனிமை பயில்வார் நெஞ்சை அள்ளும் பான்மையது;
உயிரெழுத்தக்களின் வரிசையில் அமைந்த இப்பாடல் ஒரு முறை பொருள் உணர்ந்து
சொன்னாலே இதய அரியணையில் ஏறி அமர்ந்து கொள்ளும் இயல்பினது.
திரைஇசைப் பாடல்கள் தாய்மைக்குச் சூட்டியுள்ள
புகழாரம்
நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் திரை உலகில் தாயின் பெருமையைப் போற்றி
எழுந்த பாடல்களைக் கணக்கெடுத்தால் அவை நூற்றுக்கு மேல் இருக்கும்.
கவிஞர் கா.மு.ஷெரீப் முதலாகக் கண்ணதாசன் முடிய - கவிஞர் வாலி தொடங்கி
வைரமுத்து வரை - வாழையடி வாழைடியன வரும் பாடலாசிரியர்கள் தாய்மையின்
சிறப்பினையும் தாயன்பின் தனித்திறத்தினையும் ஒல்லும் வகைகளில் எல்லாம்
உயர்வாக வெளிப்படுத்தியுள்ளார்.
'டீச்சரம்மா' என்ற திரைப்படத்திற்காகக் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்,
'அகர முதல எழுத்தெல்லாம்; ஆருயிர் அன்னை முதற்றே அனைத்துலகும்' என்பதை
அழகுத் தமிழில் மொழிவது.
'அம்மா என்பது தமிழ் வார்த்தை!
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!
அம்மா இல்லாத குழந்தைகளுக்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை!...
கவலையில் வருவதும் அம்மா அம்மா!
கருணையில் வருவதும் அம்மா அம்மா!
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா!...
பூமியின் பெயரும் அம்மா அம்மா!
புண்ணிய நதியும் அம்மா அம்மா!
தாய்மொழி யென்றும் தாயக மென்றும்
தாரணி அழைப்பது அம்மா அம்மா!...'
(திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, பக்.253-254)
'பட்டணத்தில் பூதம்' என்ற திரைப்படத்தில் 'உலகத்தில் சிறந்தது எது? ஓர்
உருவமில்லாதது எது? – ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபமாவது
அது' என்ற வினாவை முன்வைத்து ஒரு சுவையான விவாதம் நிகழும். 'உலகத்தில்
சிறந்தது வட்டி! அது போடும் குட்டி!' என நகைச்சுவையாக முதல் வாதம்
முன்மொழியும்; 'உலகத்தில் சிறந்தது காதல் - அந்தக் காதல் இல்லையேல்
சாதல்!' என அடுத்த வாதம் காதலின் பெருமையைப் பேசும். மூன்றாம் வாதமோ
முத்தாய்ப்பாக,
'பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணை அது – பிறர்
பசித்த முகம் பார்த்துப் பதறும் நிலை பார்த்துப்
பழம் தரும் சோலை அது.
இருக்கும் பிடிசோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது – தினம்
துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வம் அது.
அது தூய்மை, அது நேர்மை, அது வாய்மை
அதன் பேர் தாய்மை!
உலகத்தில் சிறந்தது தாய்மை – அதை
ஒப்புக் கொள்வதே நேர்மை!'
(திரைஇசைப் பாடல்கள்: தொகுதி 1,
பக்.334-335)
என உருக்கமான மொழியில் தாய்மையின் அருமை பெருமைகளை எல்லாம்
எடுத்துரைக்கும். அந்த அரங்கமே அதிரும்; கூடி இருக்கும் ஒட்டுமொத்த
அவையும் பலத்த கரஒலி எழுப்பி, ஆரவாரம் செய்து அதனை ஏற்றுக்கொள்ளும்!
கவியரசர் கண்ணதாசன் விவாதப் பாங்கில் எழுதியுள்ள அருமையான திரைப்பாடல்
இது!
'மன்னன்' திரைப்படத்திற்காகக் காவியக் கவிஞர் வாலி எழுதிய 'அம்மா
என்றழைக்காத உயிரில்லையே' என்ற பாடல் அன்னையைப் பற்றி இதுவரை
திரையுலகில் எழுந்துள்ள பாடல்களுள் எல்லா வகையிலும் சிறந்து விளங்கும்
முத்திரைப் பாடல் ஆகும்.
'அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?'
என்ற இப்பாடலின் பல்லவி கேட்பவர் உள்ளத்தைப் பாகாய் உருக்கும் வல்லமை
பெற்றதாகும்.
'பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா!'
(வாலி
1000:
திரையிசைப் பாடல்கள் தொகுதி
2, ப.12)
எனத் தாயன்பின் தனிப்பெருந் தகைமையை இப் பாடல் மொழிந்துள்ள பாங்கு
பாட்டுத் திறத்தின் மணி மகுடம் ஆகும். இளையராஜாவின் இன்னிசையில்,
பின்னணிப் பாடகர் ஜேசுதாஸின் உயிரோட்டமான இப் பாடலைக் கேட்டு உருகாதார்,
ஒரு வாசகத்திற்கும் உருகார் எனலாம்.
'தமிழ்க் கவிதை போற்றும் தாயின் மாண்பு' என்பது தனி ஒரு நூலாக விரித்து
எழுதத் தக்க தலைப்பு. இக் கட்டுரை அதற்கான ஒரு கோலப் புள்ளியே ஆகும்.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
|