திருமுகமெழுதும் பெருமிதமுறை

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ (முனைவர் பட்ட ஆய்வாளர்)

முன்னுரை:
பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும் ஆவணங்களும் பிறவும் பனைவோலையில் தீட்டப்பட்டன. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செய்தியனுப்ப பனைவோலையில் எழுதிச் சுருள் செய்து , காப்பிட்டு (இலச்சினை பதித்து) ஏவலாளர் முதலியோரிடம் கொடுத்துவிடுதல் வழக்கம். அன்றியும்,புறாவின் காலில் இணைத்தும் அனுப்பியுள்ளனர். அதனால்,கடிதத்தை ஓலை என்றும் முடங்கல் என்றும் கூறுவர். செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தமையால் அது முடங்கல் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

சிலம்பில் முடங்கல்:
சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்தகாதையில் மாதவி தீட்டிய முடங்கல் ஒன்றைக் கோவலன் பெற்ற செய்தி அறியப்படுகிறது. சிலம்பு விற்க, கண்ணகியோடு மதுரை நோக்கிச் சென்ற கோவலனிடம் அம்முடங்கலை கோசிகன் என்பான் கொடுக்கிறான். கோவலன் அதனைப் பெற்றவுடன் அதன் மீது இடப்பட்டிருந்த இலச்சினையைக் கண்;டான்.அது,மாதவி தன்னுடன் கூடியுறைகின்ற காலத்து அவள் கூந்தலின் வாசநெய் பூசிய தன்மையைத் தனக்கு உணர்த்தியதால், ஓலையை வாங்கி விரித்து செய்தியைப் படிக்கத் தொடங்குகிறான்.

'உடன் உறை காலத்து உரைத்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டியது: ஆதலின் கைவிட லீயான் :
ஏட்டுஅகம் விரித்து: ஆங்கு எய்தியது உணர்வோன் :


மாதவி கூந்தலைப் பொறித்து மண் இலச்சினையிட்டதும்,அதனால் கோவலன் எய்திய உணர்ச்சித் தன்மையும் அவர்களின் காதலையும் கலக்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளத்தை உருக்குகின்ற அளவில் உள்ளது. முடங்கலின் வாசகம் இப்படி இருந்தது.

'அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு,என் பிழைப்பு அறியாது:
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி!'


அடிகாள்! நும் முன்னர் அடிபணிகிறேன். இருமுது குரவர்க்குத் தொண்டு செய்வதையும் மறந்தீரே! உயர்குலத்துப் பிறந்த மனைவியுடன், இரவின் கடைசி யாமத்திலே ஊரைவிட்டே போயினரே, அதற்கு என் தவறுதான் யாதோ! என்றறியாது என் நெஞ்சம் செயலற்றுப் போகின்றதே! அந்தப் பெருந்துயரையாவது போக்குதல் வேண்டும். பொய்ம்மையின்றி உண்மையே கண்டுணரும் உயர்ந்தோனே! உம்மைப் போற்றுகின்றேன்.
கோவலனைப் பிரிந்திருந்த காலத்தில் கண்ணகி மடல் எழுதியதாகவோ, தூது அனுப்பியதாகவோ சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. ஆனால், கோவலனைப் பிரிந்த மாதவியின் மேனியிற் பசலை படர்ந்தது. ஏக்கம் என்னும் பெருநோயுற்றாள். பல் பூஞ்சேக்கைப் பள்ளியள், கோவலனோடு முன்னர் கூடி மகிழ்ந்த நினைவுகள், அவள் பால் அலைமோதின. தன் மலர்க்கையால் ஓர் ஓலை எழுதி, வசந்தமாலையிடம் கொடுத்தாள்.

செம்பிஞ்சுக் குழம்பும் பித்திகையரும்பும்:
மாதவி எப்படி எழுதினாளாம்? வெள்ளை நிறத் தாளில் சிவப்பு மையால் எழுதுவதைப் போல வெண்தாழைமடலில் தன் கால்களை அழகு செய்துகொள்வதற்காக வைத்திருந்த செம்பஞ்சுக்குழம்பில் பித்திகைஅரும்பைத் தோய்த்து எழுதினாளாம்.

'மன்னுயிரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிளவேனில் இளவரசாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன்'

புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர்க் கோடல்
இறும்பூதன்று இது அறிந்தீமின்'


இப்படியெல்லாம் பேசிப்பேசி எழுதி, இவ்வோலையின் பொருளையெல்லாம் கோவலர்க்கு ஏற்ப சொல்லி அவரை இப்பொழுதே இங்கே கொண்டு வருவாயாக என விடுத்தாள்.

சீவகசிந்தாமணி:
சீவகசிந்தாமணியிலிருந்து,பிறிதொரு திருமுகச் செய்தியைக் காணலாம். தன்னை யாழில் வெல்வோரையே மணஞ் செய்து கொள்வது என்று உறுதி கொண்டிருக்கும் காந்தருவதத்தை என்னும் விஞ்சையர் நங்கையை யாழில் வென்று அவளை மணக்க எண்ணிய சீவகன் அச்செய்தியை தன் நண்பன் மூலம் அறிவிக்க முயலுகிறான். அப்பொழுது நாகமாலை என்பவளால் அனுப்பப்பட்ட தூதியொருத்தி(தோழி) வந்து தன் கூந்தலில் பொதிந்த நீலமணி போலும் குவளை மலரை எடுத்து சீவகனிடம் நீட்டினாள். அதனை அவன், மயிரில் முடித்த மலரென்று இகழாது, நாகமாலையின் குறிப்பால் ஏதோ ஒரு செய்தி உளதென்று கருதி குவலையின் அகஇதழின் உள்ளிருந்து ஒரு ஓலையை எடுத்து வாசிக்கின்றான். அந்த ஒலையையும் எப்படிப் படிப்பதென்பதையும் நாகமாலை சூக்குமமாகத் தெரிவிக்கிறாள்.

'நல்லவ ணோக்க நாய்கன் றேர்ந்து குவளைப்போதின்
அல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதல்
சொல்லுமென் றாய்ந்துகொண்டு துகிலிகைக் கணக்குநோக்கி
வல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக்கின்றான்!


மறைபொருளாகத் திருமுகம் எழுத இம்முறை கையாளப்பட்டிருக்கிறது.ஒரு சலாகையில் ஓலையை வரிசையாக நீளச்சுற்றி அதன் மீது வாசகத்தை வரைந்து, பின் பிரித்தெடுத்துச் சுருள் செய்து அனுப்புவது. நாகமாலை விடுத்த ஓலையோ, மிகவும் வியப்பினை விளைவிப்பது. அவள் தான் எழுதிய ஓலையை குவளை மலரினுள்ளே வைத்துக் கொடுக்கத் தூதியானவள் அதனைக் கூந்தலின் உள்ளே பொதிந்து வைத்துக் கொணர்ந்தளித்தாள்.

 

      Manipulation thy name is women

முடிவுரை:
அறிவியல் முன்னேற்றத்தின் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிற நமக்கு சிலப்பதிகாரம் பண்டைய செய்தியை சொல்லி முடங்கல் என்றும், மடல் என்றும் கடிதம் அனுப்பும் கலை இருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

 

castrm44@gmail.com