சங்கத் தமிழர் பண்பாடு

பேராசிரியர் இ.பாலசுந்தரம்

ண்பாடு என்பது ஓரினத்தின் வாழ்க்கை நெறி, மொழி, கலைகள், வரலாறு, பொருண்மியம், வாழ்விடம் முதலான பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதொரு விடயமாகும். காலத்திற்கும் வாழ்விடத்திற்கும் புறச் சூழல்களுக்கும் ஏற்பப் பண்பாடு மாறுந் தன்மை கொண்டது. எனவே சங்கத் தமிழர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு முதலில் அம்மக்கள் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு மிக இன்றிய மையாதது. சங்க காலம் பற்றிக் கூறும்;போது இலக்கிய வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பல்வேறுபட்ட காலவரையறைகளைக் குறிப்பிட்டபோதிலும், இலக்கியச் சான்றுகள், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள், பிறநாட்டறிஞர்களின் ஆவணங்கள், தமிழ்மொழி வரலாறு, இனம், பண்பாடு முதலான சான்றுகள் அனைத்தையும் ஒப்ப நோக்கும்போது, சங்க காலத்தின் பின் எல்லையாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும், அதற்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுக்காலப் பகுதியை முன் எல்லையாகவும் கொண்ட காலப்பகுதியைச் சங்க காலம் எனக் கொள்வது பொருத்தமாகும். சங்கத் தமிழர் பண்பாட்டினை அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், மற்றும் சிலப்பதிகாரம், இறையனார் களவியலுரை முதலான இலக்கிய இலக்கணச் சான்றுகளும், புதைபொருட் சான்றுகளும் பிறநாட்டார் குறிப்புக்களும் துணையாகவுள்ளன.

சங்கத் தமிழர் பண்பாட்டில் முதன்மையானதும் பல்வேறு நாட்டு அறிஞர்களாற் பெரிதும் பேசப்படுவதும் அக்கால இலக்கியக் கட்டமைப்பின் தனிச் சிறப்பாகும். சங்கப் பாடல்களாக இன்றெமக்கு
2381 பாடல்களே கிடைத்துள்ளன. இவற்றைப் பாடியோர்களில் 473 புலவர்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. 102 பாடல்களின் ஆக்கியோர் பெயர் அறியப்படவில்லை. இப்பாடல்கள் யாவும் மனனம் செய்யப்பட்டு வாய்மொழி மரபில் தலைமுறை தலைமுறையாகப் பயிலப்பட்டும் ஏடுகளில் பொறிக்கப்ட்டும் வழங்கி வந்தவை என்பதையும், அவை சோழர் காலத்தில் தேடித் தொகுக்கப்பட்டு பேணப்படலாயின என்பதும், 19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் டாக்டர் உ.வே. சாமிநாதஐயர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோரால் நூல் வடிவம் பெற்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இப்பாடல்கள் அனைத்தும் அகத்திணை, புறத்திணை என்னும் இலக்கிய மரபுகளுக்கு அமையவாகப்; பாடப்பட்டவை. அகத்திணை என்பது காதல், குடும்ப வாழ்வியல் பற்றியன. புறத்திணை என்பது வீரம், போர், நாடு, அரசு, அறம் முதலான விடயங்களைப் பாடுவதாகும். இவ்வடிப்படையிற் பாடப்பட்ட தனித்தனிப் பாடல்களைப் பிற்காலத்தோர் பொருள், யாப்பு என்பவற்றின் அடிப்படையில் தொகுத்து, பெயர்களுமிட்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பெரும் பிரிவாகப் பகுத்தும் கொண்டனர். அவற்றில் அகம் சார்ந்த நூல்கள் நற்றிணை, குறுந்தொககை, ஐங்குறுநூறு, அகநானூறு. கலித்தொகை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற எட்டுமாகும். புறத்திணை சார்ந்தனவாக புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி என்ற பத்து நூல்களாகும். தொல்காப்பியர் கூறும் அகத்திணை, புறத்திணை இலக்கிய மரபுகளை இந்நூல்களினூடாக அறிந்து கொள்ளலாம்.

இவ்விலக்கியங்கள் கூறும் வாழ்வியல் இலட்சியங்களிற் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். உலகப் பொது நொக்கடன் பண்டைத் தமிழர் சீ_ரோடு வாழ்ந்தனர் என்பதை, 'யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் வரிகள் சான்றுபடுத்டுகின்றன. இன்று பேசப்படும் உலகக் கிராமம்
(Global Village) என்ற தத்துவத்தை எம்மூதாதையர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. பொருளுக்கும் பதவிக்கும் சோரம்போகும் இழிதகவுடையோர் பலர் தமிழர் அரசியலில் இடம்பெற்றமையை அண்மைக்கால வரலாறு உணர்த்துகின்றது. ஆனால் சங்காலத் தமிழர் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை இளம்பெருவழுதியின் பாடல்வரிகள் வருமாறு குறிப்பிடுகின்றன:

'துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்'


இவை புறநானூற்றுக் காலத் தமிழரின் இனப்பற்றையும் நாட்டுப் பற்றையும் எமக்கு உணர்த்தும் பாடல் வரிகளாகும். அத்துடன் இப்பிறவியிலே தாம் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை மறுபிறப்பிலே அனுபவித்தே தீர்வோம் என்னும் மறுபிறப்புக் கோட்பாட்டிலும் அவர்கள் ஆழக்கால் பதித்திருந்தனர் என்பதை 'இம்மைச் செய்தது மறுமைக்காம்..' – எனப் பாடும் வேள்ஆய் அண்டிரன் பாடல்வரி அறவுறுத்துகிறது. 'தாம் வாழும் நாட்டுக்கு நல்லன செய்ய முடியா விட்டாலும் தீயவை செய்வதை ஒழிமின்' என்ற அறவுரையையும் சங்கப் பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. 'தோன்றிற் புகழொடு தோன்றுக' எனத் திருவள்ளுவர் பாடுவதற்கு முன்னோடியாகக் குமணன் தாம் பாடிய, 'மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே..' என வரும் புறநானூற்றப் பாடல் அமைகின்றது.

சங்கத் தமிழரது அரசியற் கோட்பாட்டில் நாடு, மொழி, இனம், இறைமை, தேசியம் முதலான விடயங்கள் அரசர்களால் மிகவும் பேணப்பட்டு வந்தன. சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களும் இறைமையிலும், தேசியக்கட்டுக் கோப்பிலும் அதீத கவனம் செலுத்தியுள்;ளனர். முடியுடை மூவேந்தருக்கு உட்பட்ட குறுநில மன்னர்களது ஆட்சியும் இடம்பெற்றிருந்தது. மூவேந்தர்களும் தத்தம் தேசிய எல்லைகளில் காப்பரண்கள் அமைத்தல், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதன் நிமிர்த்தமான போர்கள், படையணிகள், பாசறைகள் என்பவற்றுடன் ஆட்சிபுரிந்தனர். இதனால் போர்மறவர்களின் வீரம் பெரிதும் போற்றப்பட்டது. வீரயுக காலம் என்று போற்றத் தக்கவகையில் அரசும் மக்களும் வீரர்களைப் பெரிதும் போற்றி மதிப்பளித்தனர். வீரமறவர்களுடன் வீரத் தாய்மாரின் பெருமைகளும் பண்டைத் தமிழர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டன. புறத்திணை இலக்கியங்களில் வீர மறவர்களின் சாதனைகள் விரிவாகப் புகழ்ந்து பாடப்பட்டன.

பண்டைத் தமிழர் பண்பாட்டில் முடியாட்சி நிலவியது. அக்காலத்தில் அரசர் கடவுளுக்குச் சமமாகப் போற்றப்பட்டனர். மக்களைக் காப்பாற்றுபவன் அரசன். கோ என்பது அரசனையும் தலைவனையும் குறிக்கும் சொல்லாகும். கோ10 இல் ஸ்ரீ கோயில். அரசனாகிய தலைவன் வீற்றிருக்குமிடம் கோயில் என்று வழங்கிப், பின்னாளில் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் குறிக்கும் சொல்லாக அது மாற்றம் பெறுவதாயிற்று. பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சியில் நீதி, நிர்வாகம் மேம்பட்டிருந்தன. அரசசபை இருக்கை, ஓலக்கம், வேத்;தவை என்றழைக்கப்பட்டது. அரசசபையில் அறிவுடைப் பெரியோர்கள் எண்பேராயம், ஐம்பெருங்குழு என்ற பெயர்கொண்ட அமைப்பாகச் சுற்றமாகச் சூழ்ந்திருந்து அரசனுக்கு அறிவுரை புகட்டுநராகச் செயற்பட்டனர். எண்பேராயத்தில் கரணத்தியலர் (அரசின் பெருங்கணக்கர்), கருமவிதிகள், கனகச்சுற்றம் (பொருள் காப்பு அதிகாரி), கடைக்காப்பாளர் (நாடு காவலர்), நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர் (குதிரைப்படைத் தலைவர்) முதலியோர் இடம்பெற்றிருந்தனர். அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர் என்போர் ஐம்பெருங்குழுவில் இடம்பெற்று, அரசனுக்கு ஆலோசனை வழங்கினர்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
(குறள்
381 )

என வள்ளுவர் கூறியவாறு அரசசபைச் சுற்றத்தினர் புடைசூழ சங்க கால மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். பெரு மன்னர்கள் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என நாற்படைகளுடனும் விளங்கின். கடல் வணிகம் சிறந்து விளங்கிய அக்காலத்தில் கடற்படையும் அக்கால மன்னர்கள் கொண்டிருந்தமை பற்றி புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான நூல்கள் கூறுகின்றன. பதிற்றுப்பத்திலே கடல்பிறக்கோட்டிய குட்டுவன் என்னும் சேரமன்னன் கடற்கொள்ளையர்களை வெருட்டியடித்த செய்தி கூறப்படுகிறது. கரிகாற் சோழனும் கடற்படையிற் சிறந்து விளங்கியவன் என்பதைத் தமிழர் வரலாற்றுச் செய்திகள் சான்றுபடுத்துகின்றன.

மன்னரின் பிறந்த நாட்கள், அவர்களின் முடிசூட்டு விழாக்கள் என்பன சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இளவரசர்கள் இளங்கோ என்றழைக்கப்பட்டனர். தந்தைவழி மூத்த மகனுக்கு அரசுரிமை வழங்கப்பட்டது. இளவயதினரும் அரச பதவி ஏற்றமைக்குக் கரிகாலனும், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சான்றாவர். முடி, கொடி, வெண்கொற்றக்குடை, முரசு ஆகியவை அரசனுக்குரிய சிறப்புச் சின்னங்களாகும். நாட்டு மக்களின் உயிராக மன்னன் விளங்கினான். இதனை

'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யானுயிரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'


என்ற மோசிகீரனாரின் புறநானூற்றுப் பாடல்
(184) சான்றுபடுத்துகின்றது.

தமிழரசர்களின் வீரத்தையும் ஆட்சிச் சிறப்பையும் குறித்துக் காட்டுவனவாக விருதுப்பெயர்களுடன் மன்னர்களின் பெயர்கள் வழங்கலாயின. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டியன் அறிவுடைநம்பி, சோழன் நலங்கிள்ளி முதலான பெயர்களைச் சான்றாகக் காட்டலாம்.

சங்ககாலத்து ஆட்சியியலில் முடியுடை மூவேந்தருக்கு அடுத்தபடியாகச் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லைப் புறங்களில் குறுநில மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றமை அறியப்படுகிறது. எருமைநாடு, துளுநாடு, ஓய்மானாடு, பூழிநாடு, குன்றநாடு, எழில்நாடு, ஒல்லையூர்நாடு, நாஞ்சில்நாடு, குடவாயில்கோட்டம் முதலிய பல குறுநிலப் பிரிவுகள் இருந்தமையைச் சங்க நூல்களின் வழியாக அறியலாம். கோசர், ஆய்வேளிர் என்ற அரச பரம்பரையினரே இக்குறுநில மன்னர்களாவர்.

சங்ககாலச் சமூக அமைப்பானது கணியன்பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண்பில் இயங்கிற்று. சமூக ஏற்றத் தாழ்வுகள் இருக்க வில்லை. இயற்கை நெறிக்காலத்தில் வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களிடையே தொழிலடிப்டையிலான பெயர்களே நிலவின. பாணர், பறையர், தச்சர், கொல்லர், மீனவர், வேட்டுவர், ஆயர், உழவர் முதலான தொழிற் பிரிவினருக்கிடையில் சமநோக்கே காணப்பட்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலத்து மக்கள் தத்தம் நிலப்பெயர்களால் அழைக்கப்ட்டனர். உயர்ந்த பண்பிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியோர் அந்தணர் எனப்பட்டனர்.

'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்'
(குறள்:
30)

என்ற திருக்குறளும் இதனையே விளக்குகின்றது. கல்வியிற் சிறந்தோர் அக்காலத்தில் மன்னராலும் மக்களாலும் உயர்வாக மதிக்கப்பட்டனர். பிற் காலத்தில் தமிழகத்திற் புகுந்து கொண்ட பிராமணர் தம்மையே அந்தணர் என்றழைத்து, அதனைச் சாதிப் பெயராக மாற்றிக் கொண்டனர். வடஇந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்துவந்த ஆரியரின்; பெருக்கம் அதிகரிக்கவே சமூக மாற்றங்களும் சாதிப் பிரிவினைகளும் தமிழகத்தில் மெல்ல மெல்லப் புகத்தொடங்கி, பண்பட்ட தமிழர் சமூக அமைப்பின் அடிப்படையே மாற்றம் பெற்றமை துன்பம் தருவதாகும்.

சங்ககால மக்களது வாழ்வியலானது, காதல்வழிப்பட்ட மனையற வாழ்க்கை முதன்மை பெற்றிருந்தது. மனித வாழ்க்கையில் ஆண்களுக்கு வீரமும் பெண்களுக்குக் கற்பும் சிறந்த பண்புகளாகக் கருதப்பட்டன. இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மக்கள் தம் இயற்கைச் சூழலுக்கேற்ற வகையில் குடும்ப வாழ்க்யினையும் அமைத்துக் கொண்டனர். இல்லறம் சிறந்து காணப்பட்டது. விருந்தோம்பி வாழ்ந்தனர். ஆடல், பாடல், விழாக்களுடன் அவர்களது சமூக வாழ்வு சிறப்புற்றிருந்தது. சாதி, சமய ஏற்றத் தாழ்வுகளற்ற காதல் வாழ்க்கை முறையே அவர்களிடம் காணப்பட்டது. அவர்களது காதல் வாழ்க்கையை, ' யாயும் ஞாயும் யாராகியரோ- எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்; .. .. என்ற குறுந்தொகைப் பாடல்
(40) வருணிக்கிறது. காதல் மண வாழ்க்கையே பெரிதும் இடம்பெற்றது. அதற்குத் தடை ஏற்பட்டபோது உடன்போக்கு நிகழ்ந்தது. திருமண வாழ்க்கையில் நம்பகத்தன்மை குறைந்தபோது, தொல்காப்பியர் (பொருள்-கற்பியல் -4) கூறுவது போன்று, 'பொய்யும் வழுவும் மலிந்த பின்னர்- ஐயர் யாத்தனர் கரணம் என்ப.' ஊரார் அறியச் சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஏறு தழுவி மணம் செய்யும் வழக்கம் முல்லை நிலத்தில் இருந்திருக்கிறது. இருப்பினும் சங்கத் தமிழர் மத்தியில் பெண்ணுரிமை, பெண் சமத்துவம் என்பன பேணப்படவில்லை என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

மக்கள் தம் புறவாழ்க்கையில் வீரத்திற்கு மட்டுமன்றிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ';உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே..' என்றும், 'ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருகவென்னாது அவருள் அறிவுடையோனால் அரசும் செல்லும்..' (புறம்:
183) என்றும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கற்றோருக்கு ஏற்றம் கொடுத்துப் பாடுகிறார்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐநிலப் பகுப்புக்கு ஏற்றவாறு உழவு, மீன்பிடி, வேட்டையாடுதல், வணிகம், கைவினை முதலிய பல்வகைத் தொழில்களை மக்கள் மேற்கொண்டிருந்தனர். கடல் கடந்த வணிகமும் நடைபெற்றது. சங்க காலத் தமிழரின் பொருண்மியம் கிராமியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்கள் விவசாயத்தைப் பெருக்கித் தன்னிறைவுடன் வாழ்ந்தனர். மந்தை வளர்ப்பும் மீன்பிடியும் சிறப்புற்றிருந்தன. ஆடை உற்பத்தி உயர்நிலை பெற்றிருந்தது. சீனர், கிரேக்கர், ரோமர் முதலிய நாட்டவருடன் வணிகம் மேற்கொண்டிருந்தனர். தமிழ் நாட்டிற் புதைபொருட் சான்றுகளில் கிடைத்துள்ள கிரேக்க, ரோனிய நாணயங்களும், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொருட்களும் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த பரந்த வணிக நடவடிக்கைகளைச் சான்று படுத்துகின்றன. தொண்டி, முசிறி, கொற்கை, காவிப்பூம்பட்டினம் முதலியன பண்டைய வணிகத் துறைமுகங்களாகும். கொங்கு நாட்டுத் தங்கம், பாண்டி நாட்டு முத்து, தந்தம், சந்தனம், மிளகு, வாசனைப்பொருட்கள், இஞ்சி, ஏலம், கிராம்பு முதலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பண்டமாற்று முறையில் வணிகம் நடைபெற்றது என்பதைச்

'சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்..'


என வரும் அகநானூற்றுப் பாடலடிகள் விளக்குகின்றன:

சங்கத் தமிழர் பண்பாட்டில் பல்வேறு விழாக்கள், பண்டிகைகள், பொழுதுபோக்குகள் இடம்பெற்றிருந்தன. இசைக்கலை, நாடகக்கலை, கூத்துக்கலை, சிற்பக்கலை என்பன சிறப்புற்றிருந்தன. சுவாமி விபுலாநந்தர் தமது யாழ்நூலிலே சங்கத் தமிழரிடையே வழங்கிய பேரியாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் முதலிய யாழ்வகைகள், யாழிசை நுட்பங்கள், அவை பயன்படுத்தப்டபட்ட முறைகள் என்பனபற்றி விரிவாக ஆராய்ந்து வெளிப்படுத்தி யுள்ளமை கற்றறியத் தக்கவையாகும். நெடுநல்வாடை, பரிபாடல் என்பன அக்கால ஓவியக்கலையின் நுட்பங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணையாக அமைகின்றன.

சங்ககாலத் தமிழரின் சமய வாழ்வும் மேம்பட்டிருந்தது. சிவன் திராவிடரின் முழுமுதற் கடவுளாகும். முக்கட்செல்வன், செஞ்சடைக்கடவுள். ஆலமர்செல்வன், கறைமிடற்று அண்ணல், பிறவாயாக்கைப்பெரியோன், ஏறூர்தியான் என்ற பெயர்களில் சிவனை வழிபட்டனர். இலிங்க வழிபாடும் தமிழரிடம் இருந்தது. முருக வழிபாடு தமிழ் மக்களின் வாழ்வில் மிகவும் சிறந்து காணப்பட்டது. முருக வழிபாட்டுடன் பல்வேறு சடங்குகளும் இடம்பெற்றன. வீரயுகமாகிய சங்க காலத்திலே வீரத்தின் உறைவிடமாகிய கொற்றவை வழிபாடும் மேலோங்கியிருந்தது. அதைப்போன்றே நடுகல் வழிபாடும் மக்களால் போற்றப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் முறையே சேயோன், மாயோன், வேந்தன், வருணன் என்ற பெயர்களில் தெயவ வழிபாடு இடம்பெறலாயிற்று.

தமிழகத்திற்கு எத்தகு வரலாற்றுப் பழைமையுண்டோ அத்தகு வரலாற்றுத் தொன்மை ஈழத்திற்கும் உண்டு. சங்க காலப் புலவர் வரிசையில் ஈழத்துப் பூதன்தேவனாரின் தேர்ந்த பாடல்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. அக்காலப் பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்களின் பாடல்கள், மற்றும் ஆவணங்கள் என்பன தொடர்ச்சியான தமிழரசர்கள் இன்மையாலும், சிங்கள அரசர்களால் தமிழரது பண்பாட்டுச் சான்றுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வந்தமையாலும் ஈழத்தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லாது போய்விட்டது.

ஆயினும் கந்தரோடைத் தமிழ் இராச்சியம் நிலவியபோது அவர்கள் சீனம், கிரேக்கம் முதலான நாடுகளுடன் மேற்கொண்டிருந்த கடல் வணிகம் பற்றி அறியத்தக்க புதைபொருட் சான்றுகள் கந்தரோடை, பொன்பரிப்பு, ஆனைக்கோட்டை, அனுராதபுரம், பூநகரி முதலான பண்டைய நாகரிகத் தளங்களில் இன்றெமக்குக் கிடைத்துள்ளன. உரோம நாணயங்கள், உரோம மட்பாண்டங்கள், இரும்பு, வெங்கல மூலப்பொருட்களிலான பாவனைப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் முதலியன பண்டைய வணிகப் பண்பாட்டையும், ஈழத்தின் பொருண்மிய நிலைப்பாட்டையும் விளக்குகின்றன. ஈழத்திலிருந்து உணவுவகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டமை பற்றிப் பட்டினப்பாலை சான்றுபடுத்துகிறது. கிரேக்க அறிஞர் மெகாதீனஸ் என்பவர் கி.மு
.4ஆம் நூற்றறாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, ஈழநாட்டின் வணிகம் பற்றி எழுதுகையில், இந்தியாவிலும்விட, ஈழத்தவரின் முத்து, யானை வணிகம் அதிகமாக இருந்தது என்பர். சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துக் காதையில் பூம்புகாரை ஒத்த நகர் ஈழத்தில் இருந்மை அறியப்படுகிறது. பின்னாளில் பூம்புகாரைப் போன்று ஈழத்துத் துறைமுகங்களும் கடலால் அள்ளுண்டிருக்கலாம். ஈழத் தமிழரது பண்டைப் பாரம்பரிய வரலாறு முழுமையாக எழுதப்படுவதற்குரிய ஆவணங்கள் புதைபொருள் ஆய்வுகளின் மூலமே சாத்தியமாகலாம்.

சங்ககாலத் தமிழர்கள் பூர்வீகத் திராவிடர்களின் வழிவந்தவர்கள். அவர்கள் மிகப் பழங் காலத்தில் பேசிய மொழியை மொழியியலாளர் பழந்திராவிடமொழி (
Proto-Dravidian) என்பர். தமிழ் என்பதே திராவிடம் எனத் திரிந்தது என்ற கருத்துமுண்டு. மொழியிலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த 21 மொழிகளில் தமிழ்; முதல்மொழி எனக் கூறப்படுகிறது. சேரநாட்டில் சங்கத் தமிழ்ப் புலவர்கள்; பாடிய மொழியும், சேரநாட்டார் பேசிய மொழியும் தமிழே. சேரநாட்டில் குடியேறிய அந்நிய இனத்தவரின் வடமொழித் தாக்கத்தால் விகாரம் அடைந்த தமிழ், காலப்போக்கில் மலையாளம் எனத் தனிமொழியான கதையும் சோகம் நிறைந்ததே. அக்காலத்தில் வடமொழியாளரின் செல்வாக்கு சோழர், பாண்டியர் நாட்டுத் தமிழ்மொழியில் மேலாண்மை செலுத்த முடியவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்மொழியில் நூற்றுக்கு ஒன்று என்ற விழுக்காட்டில் வடமொழிக் கலப்பு இருந்தது. பின்னர் சமண, பௌத்த மதங்களினாலும் பிராமணரது சமய நடவடிக்கைகளினாலும் தனித்தமிழ், வடமொழியை உள்வாங்கிக் கொண்ட வரலாறும், வடமொழிமோகம் இன்றுவரை தமிழரைச் சிக்கெனப் பிடித்திருப்பதும் தமிழ்த்தாய் பெற்றுள்ள நீண்ட காலத் தீரா நோயாகும். சங்க காலத்து அனைத்துப் பெயர்களும் தனித்தமிழில் அமைந்திருந்தன. பேச்சும் பாட்டும் தனித்தமிழில் அமையலாயின. மொழியடிப்படையில் அந்நிலை மீண்டும் வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் ஆகும்.