புலம்பெயர் இலக்கியம்

அகில்


புலம்பெயர் இலக்கியம் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் தான்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும், அதன் இன்னொரு கட்ட வளர்ச்சிக் கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உள்ளது.

புலம்பெயர் இலக்கியத்தை ஆராய்வதாயின் புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்பிரயோகம், புலம்பெயர்ந்த நாடுகள், காலம், படைப்புகள், படைப்புகளின் உள்ளடக்கம் என வகைப்படுத்திப் பார்க்கலாம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு நாற்று நடுகை செய்யப்பட்டவர்கள் தான் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது தமது இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றோடு முற்றிலும் மாறுபட்ட புதியதொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களால் படைக்கப்படும் இலக்கியத்தையே 'புலம்பெயர் இலக்கியம்' என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கிறோம். இச் சொற்றொடரை ஆங்கிலத்தில்
'diaspora literature" என அழைப்பர்.

புலம்பெயர்ந்த நாடுகள் எனும்போது கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிஸ், இத்தாலி, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா முதலான நாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருமளவில்; வாழ்ந்து வருகிறார்கள்.

கனடாவில் மட்டும் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில்; சுமார் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கி;றார்கள். ஏனைய நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆக புலம்பெயர்ந்து சுமார் பன்னிரெண்டு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பலர் இலக்கியம் படைக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கிய காலகட்டத்தை
1980ஆம் ஆண்டுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள், 1980ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்து போனவர்கள் என வகைப்படுத்தலாம்.

1980ஆம் ஆண்டுக்கு முன் புலம்;பெயர்ந்து போனவர்கள் உயர்கல்வி, தொழிலை நோக்கமாகக் கொண்டு இடம் பெயர்ந்தவர்கள். இவர்களில் அ.முத்துலிங்கம், எஸ்.பொ, லெ.முருகபூபதியை உதாரணமாகச் சொல்லலாம். அ.முத்துலிங்கம் தொழிலின் நிமிர்த்தம் பலவேறு நாடுகளிலும் பணிபுரிந்தவர். தற்சமயம் கனடாவில் வாழ்கி;றார். இவரை இலக்கிய உலகம் புலம்பெயர் எழுத்தாளர் என்று அழைப்பதை விடுத்து சர்வதேச எழுத்தாளராகக் குறிப்பிடுகிறார்கள்.

1980ன் ஆரம்பத்தில் ஈழத்தைவிட்டு வெளியேறியவர்களை விட
1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம், ஈழப்போர் காரணமாக அதிகமானவர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். இன்று வரை புலம்பெயர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இவர்களில் சிலர் ஈழத்தில் இருந்தபோதே இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். உதாரணமாக எஸ்.பொ, லெ.முருகபூபதி, அ.முத்துலிங்கம், கே.எஸ்.சுதாகர், ஆழியாள், வி.கந்தவனம், குறமகள் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்கள் முக்கியமானவை.

கவிதை

அதிக அளவில் வெளிவந்த, வெளிவருகின்ற படைப்பிலக்கியமாக கவிதை காணப்படுகி;றது. இவர்களின் பாடுபொருளாக தாயகநினைவுகளும், வாழ் அனுபவங்களும் அமைந்தன. பின்வந்த படைப்பாளிகள் தாயக நினைவுகள் மட்டும்மற்றி ஈழத்தில் துயரம் மிகுந்த யுத்த அவலங்களும், புலம்பெயர் தந்த பல்வேறு வகைப்பட்ட துயர அனுபவங்கள், புலம்பெயர் நாட்டின் புதிய கலாச்சார பண்பாட்டு தாக்கங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பின் வந்த படைப்பாளிகளின் கருப்பொருளாக அமைந்தன. எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாமல் பாசங்கற்ற முறையில் பூரண சுதந்திரத்துடன் தமது படைப்புக்களை கொண்டு வர அவர்களால் முடிகிறது.

புலம்பெயர் கவிஞர்களில் முக்கியமான ஒருவராக விளங்குபவர் கவிநாயகம் கந்தவனம். கனடாவில் தற்சமயம் வாழும் இவர், ஈழத்தில் இருந்த போதும் பல படைப்புக்களை கொண்டு வந்தவர். கனடா தேசிய கீதத்தை தமிழில் இயற்றிவர்.

புலம்பெயர் கவிஞர்களைப் பட்டியலிட்டால் திருமாவளவன், சக்கரவர்த்தி, இளைய அத்துல்லா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், செழியன், முல்லை அமுதன், அனலை ராசேந்திரம், எம்.ரி.செல்வராஜா, இராஜமனோகரன், கௌசல்யா சொர்ணலிங்கம், வீணைமைந்தன் என பட்டியல் நீண்டு செல்லும்.

'துருவச் சுவடுகள்' என்ற கவிதைத்தொகுப்பு புலம்பெயர்ந்தவர்களின் மத்தியில் வெளிவந்த முதலாவது கவிதைத்தொகுப்பாகவும், பெண் கவிஞர்களின் கவிதைத்தொகுப்பாக 'மறையாத மறுபாதி' என்ற கவிதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவ்விரண்டு நூல்களும் தொகுப்பாக வெளிவந்தவை. இவற்றை விட கவிஞர்களி;ன் தனிப்படைப்பாக வெளிவந்தவை பல நூறைத்தாண்டும்.

சிறுகதை

கவிதைக்கு அடுத்தபடியாக பலரால் படைக்கப்படும் படைப்பிலக்கியமாக சிறுகதை விளங்குகி;றது. பல்வேறு புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் சிறுகதைகளைத் தொகுத்து 'மண்ணைத் தேடும் மனங்கள்', 'புலம்பெயர்ந்தோர் கதைகள்', 'பனியும் பனையும்', 'உயிர்ப்பு', 'புது உலகம் எமை நோக்கி', 'முகங்கள்' எனும் சிறுகதைத் தொகுப்புகளாக வெளி;வந்துள்ளன. இதுதவிர எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையிலும் தமது கதைகளைத் தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளார்கள்.

சிறுகதைப் படைப்பாளிகளை பட்டியலிட்டால் ஜேர்மனியைச் சேர்ந்த பொ.கருணாகரமூர்த்தி, சாந்தினி வரதராஜன், சந்திரவதனா செல்வகுமாரன். இங்கிலாந்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல்;, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நவஜோதி ஜோகரத்தினம், சந்திரா ரவீந்திரன், எம்.ரி.செல்வராஜா. கனடாவாழ் அ.முத்துலிங்கம், அகில், இரா சம்பந்தன், கமலா பெரியதம்பி, குரு அரவிந்தன், சுமதி ரூபன், வி.ஸ்ரீரஞ்சனி, குமார்மூர்த்தி, குறமகள், பொன்.குலேந்திரன், தேவகாந்தன், இரா.தணி, க.நவம், ரவீந்திரன், வ.ந.கிரிதரன் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கே.எஸ்.சுதாகரன், லெ.முருகபூபதி, ஆழியாள், ஆவுரான். பிரான்சை சேர்ந்த ஷோபா சக்தி, வண்ணைத்தெய்வம், வி.ரி.இளங்கோவன். டென்மார்க்கைச் சேர்ந்த அ.பாலமனோகரன், வி.ஜீவகுமாரன் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த உதயணன் போன்றவர்களைத் குறிப்பிடலாம்.

அ.முத்துலிங்கத்தின் 'மகாராஐhவின் ரயில்வண்டி', அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' போன்ற அண்மையில் வெளிவந்து பலராலும் பேசப்பட்ட சிறுகதைத் தொகுப்புகளாகும். குறிப்பாக 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடும், பல விருதுகளையும் பெற்றுள்ளது.

நாவல்

கவிதை, சிறுகதை போன்று நாவல் இலக்கியத்தின் கருப்பொருளாக தாயக நினைவுகள், யுத்த அவலம், புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள்; போன்றவை பொதுவாக நாவல்களின் கருப்பொருளாக கொண்டிருக்கின்றன. இந்த இலக்கியப்படைப்புகளில் நாவல்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறது.

புலம்பெயர் நாவல்கள் எனும்போது விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி', பார்த்திபனின் 'ஆண்கள் விற்பனைக்கு', வ.ஐ.ச.ஜெயபாலனின் 'செக்குமாடு', ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 'தில்லையாற்றங்கரை', அகிலின் 'திசைமாறிய தென்றல்', ஷோபாசக்தியின் 'கொரில்லா', கே.எஸ்.பாலச்சந்திரனின் 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்', கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்பவற்றைக் குறிப்பிடலாம்.

கட்டுரை

கட்டுரையைப் பொருத்தவரை இலக்கிய கட்டுரைகள்;, அரசியல் சார்ந்தவை, ஆன்மீகம், விஞ்ஞானம் என பல்வேறு விடயங்களை பேசுவனவாக கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டவர்களில் கவிநாயகம் கந்தவனம், அனலை ராசேந்திரம், சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், பொ.கனகசபாபதி, ஈழத்துப் பூராடனார், லெ.மூருகபூபதி, சு.ஸ்ரீகந்தராசா, புலவர் ஈழத்துச் சிவானந்தன், பொன்.குலேந்திரன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புலம்பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கியத்துக்கும் தனியிடம் உண்டு. கனடாவில் வாழும் கவிஞர் சபா அருள் சுப்பிரமணியம் அந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்.

ஈழத்தமிழரின் புலம்பெயர்வின்; காரணமாக ஏற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் பெருக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு படைப்பிலக்கியம் உருவாகிய மண்ணில் இருந்து கொண்டே அந்த வாழ்விட சூழல், பண்பாட்டுக்குள் தம்மையும்; உட்படுத்தி அவ்விலக்கியங்களை தமிழில் மொழிமாற்றம் செய்வதன் மூலம் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் புதிய பரிமாணம் ஒன்றை தந்து வருகிறார்கள். இதுவரை ஆங்கில வழி மூலமான மொழி மாற்றங்களையே தருவித்து வந்த எமக்கு புலம்பெயர் எழுத்தாளர்கள் மூலமாக நேரடியான மொழிபெயர்ப்புகளை தமிழுக்குப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹன்ஸ் கிரிஸ்ரியன் அனசன் இவர் டெனிஸ் மக்களின் இலக்கிய கர்த்தா என வர்ணிக்கப்படுபவர். இவர் எழுதிய 'எனது வாழ்கை ஒரு அழகான கதை' என்ற, சுயவரலாற்று நூல், மற்றும் அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை, டென்மாக்கில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர் த.தர்மகுலசிங்கம் என்பவர் டெனிஷ் மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு பல புலம்பெயர் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்புத் துறைக்கு தமது கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

ஜோஜ் ஓர்வல் எழுதிய Animal Farm  நாவலை 'விலங்குப்பண்னை' என்ற பெயரில் நல்லைக் குமரன் க. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

'கலேவலா' என்பது பின்லாந்தின் தேசிய காவியமாகவும், உலகின் மிகச்சிறந்த இலக்கியமாகவும் உள்ளது. இதை பின்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் உதயணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

டென்மாக்கில் புலம்பெயர்ந்து வாழும் பாரதிபாலன் என்பவர் எச்.சி.அனசனின் 'ஒரு சின்ன கடற் பெண்' என்ற காவியத்தை தமிழில் 'கடற் கன்னி காவியம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எஸ்.பொ பல தென்னாபிரிக்க சிறுகதைகளை, நாவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நவீனன் ராஜதுரை ஆதிவாசி இன எழுத்தாளன் ஹென்றி லோசனின் கதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஆழியாள் என்ற பெண் எழுத்தாளரும் இவ்வாறு ஆதிவாசிகள் சம்பந்தப்பட்ட கதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இதுதவிர தமிழில் இருந்து பிறமொழிக்கும் தமது படைப்புக்களை மொழிமாற்றம் செய்து தமிழுக்கு வளமை சேர்த்து வருகின்றனர்.

டென்மார்க்கை சேர்ந்த அ.பாலமனோகரன் தன்னுடைய 'நிலக்கிளி' நாவலை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு பிரான்ஸில் வாழும் கவிஞர் கலாமோகன் தன் கவிதைகளை பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

இவற்றோடு நின்றுவிடாது பல அகராதிகளையும் படைத்து வருகிறார்கள். டெனிஷ் - தமிழ் அகராதி, தமிழ் - டெனிஷ் அகராதி, தமிழ் - ஜேர்மன் அகராதி, டெனிஷ் மருத்துவ தமிழ் அகராதி என்பன ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் உள்ள புலம்பெயர் எழுத்தாளர்களான வி.ஜீவகுமாரன், சரவணபவன், கிருஷ்ணநிதி கிருஷ்ணபிள்ளை, நற்குணராஜா குழந்தை, கண்ணதாஸ் இராமலிங்கம், சிவபாதசுந்தரம் வேலுப்பிள்ளை போன்ற புலம்பெயர் படைப்பாளிகளால் படைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆகியவை பற்றி உங்களுடன் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன்;. ஆனால் புலம்பெயர் இலக்கிய வரலாறு மூன்று தசாப்பதங்களை கடந்து நிற்கின்றது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா கண்டங்களில் கிட்டத்தட்ட பன்னிரெண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வாழுகிறார்கள். புலம்பெயர் இலக்கியத்தின் தொகை பல்கிப் பெருகிவிட்டது. இந்த நிலையில் ஒரு படைப்பைப்பற்றிய சரியான மதிப்பீட்டைத் தெரிந்து கொள்ள தனியே அதை புலம்பெயர் சிறுகதையென்று பார்ப்பதைவிட அந்தச் சிறுகதை தோன்றிய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், புவியியல் சார்ந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதே சரியாக இருக்கும் என்ற கருத்து தற்போது நிலவுகிறது. இந்த நிலையில் கனடா புலம்பெயர் இலக்கியம், இங்கிலாந்து புலம்பெயர் இலக்கியம், ஜேர்மன் புலம்பெயர் இலக்கியம், பிரான்ஸ் புலம்பெயர் இலக்கியம் என்று நாடுகள் ரீதியாக வகைப்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

புலம்பெயர் படைப்புகளின் உள்ளடக்கத்தை தாயகநினைவு, அகதிவாழ்வு, புதிய பண்பாட்டு கலாச்சாரத்தாக்கம், நிறபேதம், இனவாதம், புவியியல் சூழல், அனைத்துலக நோக்கு என பொதுவாக நோக்கினாலும் எல்லா நாடுகளுக்கும் இடையில் இவை பொதுவானவையாகத் கருதமுடியாது. சில நாடுகளில் சில பிரச்சினைகள் கூடுதலாகவும் சில நாடுகளில் குறைவாகவும் காணப்படுகின்றது.

உதாரணமாக பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மண், சுவிஸ் போன்ற நாடுகளில் மொழிப்பிரச்சினை பெரிதாகக் காணப்படுகிறது. அதே போல் இனப்பாகுபாடு, நிறப்பிரச்சினை பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் பெருமளவில் எதிர்நோக்கப்படுகிறது. இப்பிரச்சினைகள் கனடா, அமெரிக்கா, இந்கிலாந்து போன்ற நாடுகளில் குறைவாகவே காணப்படுகிறது. மொழிப்பிரச்சினை, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைவாக இருப்பதற்குக் காரணம் ஆங்கில மொழி இந்நாடுகளில் பிரதான மொழியாகச் காணப்படுவதாகும்.

புவியியல் சாhந்த பிரச்சினைகள் கனடா, அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகளில் உள்ளவர்கள் எதிர் நோக்குகின்றார்கள். இப்பிரச்சினைகள் அந்த அந்த நாடுகளில் உள்ள படைப்பாளிகளின் படைப்புக்களில் பெருமளவில் பிரதிபலிக்கின்றன. எனவே படைப்பு ரீதியாக பிரித்து பார்ப்பதை விட புலம்பெயர் இலக்கியங்களை அவைதோன்றிய நாடுகளின் அடிப்படையில் பார்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

புலம்பெயர் படைப்புகளின் இன்றைய வகைதொகையற்ற பெருக்கத்தைப் பார்க்கும் போது 'உலகத்தமிழ் இலக்கியத்துக்கு ஈழத்தவர்கள் தலைமைதாங்குவார்கள்' என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று ஞாபகத்திற்கு வருகிறது.


நன்றி - கணையாழி