சிங்கை மண்ணின் பெண்பா
மரபில் வந்த புதுப்பா!
முனைவர் இரா.மோகன்
கவிஞர் க.து.மு. இக்பாலின் படப்பிடிப்பில், 'வெண்பா வழங்கிய / பெண்பா
மரபில் வந்த புதுப்பா / மலர்விழி இளங்கோவன்' (அணிந்துரை, மலர்விழி
இளங்கோவனின் 'கருவறைப் பூக்கள்', ப.6). வரலாற்றில் தடம் பதித்த வேலு
நாச்சியாரின் வீரம் செறிந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்தின் அலவாக்கோட்டை
அவரது பிறந்த ஊர். அவரை 'அவையத்து முந்தி இருக்கச் செய்த' தந்தை முனைவர்
கா.சிவப்பிரகாசம் பயிர் நோயியல் துறையைச் சார்ந்த ஓர் அறிவியல் அறிஞர்;
'ஈன்று புறந்தந்த' தாய் கமலா அம்மையார் ஓர் இல்லத்தரசி. கோவை
அவினாசிலிங்கம் கல்லூரியில் உயிர் வேதியியல் பயின்ற கவிஞருக்குச்
சிங்கப்பூர் புகுந்த வீடு.
1996-ஆம் ஆண்டில் அவரை ஒரு படைப்பாளியாக
அடையாளம் காட்டிய மண் அது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழகத்தில்
இவருடைய கதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன; இவருக்குப் பல்வேறு
பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளன. சிங்கப்பூரின் தேசியக்
கலைமன்றத்தின் தங்க முனை விருதினைக் கவிதைக்கும்
(2007) சிறுகதைக்கும்
(2015) பெற்றவர் மலர்விழி இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,
சிங்கப்பூரில் தொடக்கக் கல்லூரி பயிலும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான
பாடத் திட்டப் பரிந்துரையின் 'இலக்கியச் சாரல்' தொகுப்பில் இவரது கவிதை
இடம்பெற்றுள்ளது.
மலர்விழி இளங்கோவன் இதுவரை வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புக்கள் மூன்று.
அவற்றின் கால வரிசை முறை வருமாறு:
1. 'கருவறைப் பூக்கள்'
(2008)
2. 'கடல் சூழ் கவிதை' (2015)
3. 'அலை பிடுங்கிய சொற்கள்'
(2015)
'சொல்வதெல்லாம் பெண்மை' என்னும் தலைப்பில் மலர்விழி இளங்கோவன் சிறுகதைத்
தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
இனி, மலர்விழி இளங்கோவனின் படைப்பாளுமைத் திறன் குறித்துச் சுருங்கக்
காண்போம்.
உறவுகளாலும் உணர்வுகளாலும் ஆன உலகம்
தமது தனிவாழ்வில் மட்டுமன்றி, படைப்புலகிலும் மலர்விழி உயரிய
விழுமியங்களைப் போற்றும் நற்பண்பினராக விளங்குகின்றார். இவ்வுலகிற்குத்
தாம் வருவதற்குக் காரணமான பெற்றோரைப் பற்றி மதிப்புடனும் மரியாதையுடனும்
நினைவுகூர்ந்து போற்றும் மலர்விழி, 'என் துணைவர் (இதற்கு மேல் நான்
எதுவும் சொல்ல வேண்டாம்!) ஒரு பொறியாளர். என் படைப்புகளின் முதல்
வாசகர், விமரிசகர்' ('என்னைப் பற்றி....', கருவறைப் பூக்கள், ப.24) எனத்
தம் கரங்களைப் பற்றிய துணைவரைக் குறித்து நயத்தகு மொழியில் பதிவு
செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாகஇ தமது 'கருவறைப்
பூக்க'ளான – அன்பிற்கினிய மக்களான மதன், துளசி ஆகிய இருவரையும் பற்றி –
'சுய குறிப்பு' என்னும் தலைப்பில் மலர்விழி வரைந்திருக்கும்
சிறுகவிதையும் நனி சிறந்தது:
'தகுதி, திறன், சாதனைகள் / அறியும் வண்ணம்
என் சுய குறிப்புக் கேட்டார்கள்... / ஒரு சில பக்கங்களில்!
ஒரே வாக்கியத்தில் / எழுதி முடித்தேன்...
'நற்பண்புகளும் / பல்திறனுமுடைய
இரு புத்திசாலிப் பிள்ளைகளின் தாயென!'' (கருவறைப் பூக்கள்,
ப.132)
'பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த, மக்கட்பேறு அல்ல பிற'
(61) என்னும் திருக்குறள் இங்கே ஒப்புநோக்கத் தக்கது. 'பழி பிறங்காப்
பண்புடை மக்கள்' (62) என்னும் வள்ளுவத் தொடரும் இவ் வகையில் மனங்கொளத்
தக்கது.
கவிஞர் 'அலை பிடுங்கிய சொற்கள்' என்னும் கவிதைத் தொகுப்பினை 'மாமியார்-மருமகள்
உறவும் மகத்துவமானது, மகிழ்ச்சிக்கு உரியது தான் என்கிற உணர்வை
உறுதிப்படுத்தி, மறதி நோய் என்று மருத்துவம் குறிப்பிட்டிருந்த
போதிலும், நிறைய எழுது என மறக்காமல் தமக்கு ஊக்கமூட்டிய' தமது அன்பு
அத்தை திருமதி. கமலம் செல்லதுரைக்குக் காணிக்கையாக்கியுள்ளார். இங்ஙனம்
நல்ல உறவுகளாலும் உணர்வுகளாலும் பின்னப்பட்ட ஒன்றாக மலர்விழி
இளங்கோவனின் படைப்புலகம் விளங்குகின்றது.
தமிழுக்குக் கவிஞர் விடுக்கும் எச்சரிக்கை
மனித இனத்தின் சரிபாதியான பெண்ணாக இருந்தாலும் சரி – தாய்மொழியாம்
தமிழாக இருந்தாலும் சரி – முதலில் வேண்டுவது தற்காப்பே. 'சோர்விலாத
பெண்'ணின் இயல்பினைச் சொல்ல வந்த வள்ளுவர் பெருமானும் முதலில் 'தற்காத்து'
என்று தானே தமது குறட்பாவினைத் தொடங்கி இருக்கிறார்? அவரை அடியொற்றி
மலர்விழி இளங்கோவனும் அன்னைத் தமிழுக்கு ஓர் அன்பான எச்சரிக்கையை
விடுக்கின்றார்; எண் கணிதமும் வாஸ்துவும் ராசி பலனும் மனித இனத்தை
ஆட்டிப் படைத்து வரும் இந்நாளில் விழிப்போடு இருந்து தமிழ் தன்னைத்
தற்காத்துக் கொள்ள வேண்டுமாம்! இதோ, கவிஞர் தமிழிடம் விடுக்கும் அன்பான
வேண்டுகோள்:
'எண் கணிதம் பார்த்துப் பார்த்து / எழுத்துகளை மாற்றிவிட்டால்
எட்டி விடும் உச்சம் என்று / ஏதேதோ சொல்லிச் சொல்லி...
தலையெழுத்து மாறும் என்று / தன் எழுத்தை மாற்றும் கூட்டம் ...
எண் கணிதம் பார்த்து விட்டு / உன் எழுத்தை மாற்றாமலும் ...
வாஸ்து பார்த்து வந்து / உன் வரிசை மாற்றாமலும் ...
இராசி பார்த்து / இடம்இ வலம் மாற்றாமலும் ...
தமிழே உன்னைத் / தற்காத்துக் கொள்!' (கருவறைப் பூக்கள், ப.34)
'இன் தமிழே... என் தமிழே...' என உளமார விளித்துப் போற்றும் கவிஞர், 'பன்னாட்டு
வாழ்க்கையிலும் பந்தம் நீயே!' என்கின்றார்; 'கிழமாகி உடல் நலிந்து
கிடந்த போதும், கிளைகள் எல்லாம் தமிழ் பேசி அருகில் வேண்டும்'
(கடல்
சூழ் கவிதை, ப.15) என விழைகின்றார். மேலும், 'எங்கள் வருங்காலத் தமிழே,
வாய் இனிக்கத் தமிழ் பேசு!'
(கடல் சூழ் கவிதை, ப.29) என இளையோர்க்கும்
அழைப்பு விடுக்கின்றார்.
கவிஞரின் கண்ணோட்டத்தில் பாரதி
'பாரதி' என்னும் குறுகத் தறித்த தலைப்பில்
மலர்விழி இளங்கோவன் 'பாட்டுக்கொரு புலவர்' பாரதியாருக்குச் சூட்டியுள்ள
புகழாரம் நெஞ்சை அள்ளுவது. கவிஞரின் மொழியிலேயே அக் கவிதையைக் காண்பது
சிறப்பாக இருக்கும். கறுப்பு மேலங்கி கம்பீரமாய் நிமிர்கிறதாம் -
நெஞ்சுரத்துக் கவிஞனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்ததற்காக! மீசை தன்னை
முறுக்கிக் கொள்கிறதாம் – கவிதை முறுக்கேறிய முகத்தை அலங்கரித்ததற்காக!
தலைப்பாகை தனக்கு மகுடம் சூட்டிக் கொள்கிறராம் – கவிதைக் கனம் ஏறிய தலை
தன்னைச் சூடிக் கொண்டதற்காக! இங்ஙனம் பாரதியின் கறுப்பு மேலங்கி, மீசை,
தலைப்பாகை என ஒவ்வொன்றும் உற்ற பெருமையையும் பெருமிதத்தையும் பாடி வரும்
கவிஞர், நான்காவதாகக் கவிதை தனக்குள் கர்வப்படுகிறது என்கிறார்.
எதற்காகத் தெரியுமா? பாரதியின் படைப்பு உள்ளத்தில் கருவுற்றதற்காகவாம்!
பாரதியின் விரல் வழிக் கசிந்த வீரிய எழுத்துக்கள் எல்லாம், காதிக
எழுத்துகளாய்ப் போகாமல், ஆயுத எழுத்துகளாய் ஆனதற்காக ஆனந்தம்
அடைகின்றனவாம்!
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல், தமிழால் தகுதி பெற்று, தமிழுக்குத்
தகுதி சேர்ந்த தனிப்பெருங் கவிஞன் அல்லவா பாரதி? எனவே, தமிழரின் தலை
எல்லாம் கர்வத்தோடு கனக்கிறதாம் – 'எம் தமிழ்க் கவி நீ!' என்று தரணி
எங்கும் மார்தட்டி!
இவ்வளவும் பாடி முடித்த நிலையில் கவிஞரின் உள்ளத்தில் மூன்றாம் பிறை
போல் முகம் காட்டி நிற்கும் உணர்ச்சிச் சுழிப்பு இது:
'இதில் ஏதாவது ஒன்றேனும் / நீ இருக்கும் போது
நிகழ்ந்திருந்தால் / இன்னும் சில ஆண்டுகளேனும் / அதிகமாய்
வாழ்ந்திருப்பாயோ... / பாரதி?'
(கடல் சூழ் கவிதை, ப.30)
எவ்வளவு பெரிய கவிஞன் என்றாலும் உயிருடன் இருக்கும் போது கண்டுகொள்ளாமல்
இருந்துவிட்டு, வாழ்நாள் எல்லாம் அவன் வறுமையுடன் போராடி, 'கடை
விரித்தேன் கொள்வார் இலை!' என விரக்தியுற்று, இறந்த பிறகு, 'ஆஹா, ஓஹோ'
என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது தானே தமிழனின் 'தனிக்குணம்'?
இதனையும் கவிதையின் முடிவில் கவிஞர் கோடிட்டுக் காட்டி இருப்பது
நோக்கத்தக்கது.
சிங்கப்பூரின் வளர்ச்சியும் வனப்பும்
அறுபதுகளில் சிங்கப்பூர் இருந்த நிலை வேறு; இன்று சிங்கப்பூர்
அடைந்திருக்கும் உச்ச நிலை வேறு. 'சிங்கப்பூர்' என்னும் தலைப்பில்
புனைந்திருக்கும் கவிதை ஒன்றில் இதனை மலர்விழி இளங்கோவன் அழகுறப் பதிவு
செய்துள்ளார்:
'அன்று / அனாதையாய் உதறி விடப்பட...
வறுமையின் விரல் பற்றி / வாழ்க்கைக்கு மீன் பிடித்த
அந்தக் / கிராமத்துச் சிறுபெண்ணா... நீ!
இன்று நீயே வலையாய்! / உன் வளர்ச்சியும்இ வனப்பும் கண்டு
விரும்பி வந்து விழுகின்றன / உன் வலையில்...
மீன்கள் மட்டுமின்றி / முதலைகளும்' (கருவறைப் பூக்கள், ப.48)
இங்கே சிங்கப்பூர் 'சிங்க நடை' போட்டுச் சிகரத்தில் ஏறிய வரலாற்றைச்
சில வரிகளிலேயே சொல்லிக் காட்டி விடுகின்றார் கவிஞர். இன்று உலக
அரங்கில் உச்சத்தில் இருக்கும் வல்லரசு நாடுகளே சிங்கப்பூரின்
வளர்ச்சியைப் பார்த்து அதிசயித்து நிற்பதையும் அவர் குறிப்பாகக்
கவிதையின் முடிவில் புலப்படுத்தி விடுகின்றார். 'உருவத்தில்
சிறுத்திருந்தும் திலகம் போலே, உலகத்தின் பார்வையிலே சிகரம் நீயே!' (கடல்
சூழ் கவிதை, ப.20) எனப் பிறிதொரு கவிதையிலும் சிங்கையின் மாண்பினைச்
சிந்தை குளிரப் போற்றிப் பாடுகிறார் கவிஞர்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழரின் நிலை
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
புலம்பெயர் வாழ்வுக்குப் பச்சைக் கொடி காட்டியவர் நம் தமிழ்ப்
பெருமாட்டி ஔவையார் தான். 'புலம் பெயர்தல்' என்பது ஒரு வித்தியாசமான
வாழ்க்கை அனுபவம். வாழ்வினில் பொருளாதார நிலை உயர்வதால் அது அவசியமான
ஒன்று தான்; ஆனால், புலம் பெயர்ந்து வாழ்வோர் அதனால் இழக்கும் –
தொலைக்கும் – உறவுகளும் உணர்வுகளும் பற்பல. இதனைக் குறிப்பு மொழியால்
தம் கவிதை ஒன்றில் சிறப்பாக வடித்துக் காட்டியுள்ளார் மலர்விழி
இளங்கோவன். 'புலம் பெயர்தல்' என்னும் தலைப்பில் அமைந்த அக் கவிதை இதோ:
'நாற்று முதிர்ந்து / நாளாகி நாடு மாற்றி நடவு செய்தாலும்
வேற்று மண் பதிந்து / விருப்புடனே வேர் பிடித்து
வியத்தகு மகசூல் தரும்...
அவசிய வாழ்வினிலே / ஆணிவேர் தொலைத்த
அதிசய ராகம் நாங்கள்!'
சுருங்கக் கூறின், புலம் பெயர்ந்து
வாழ்வோரின் இதய ஒலியாக விளங்குவது இக் கவிதை எனலாம்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின்
நிலையை ஒரு வித்தியாசமான கோணத்தில் 'திரிசங்கு' என்னும் கவிதையில் பதிவு
செய்துள்ளார் மலர்விழி இளங்கோவன்.
'புலம்பெயர்ந்து
/ குடி புகுந்த
சிங்கையில்
கேட்டார்கள்... / 'நீங்க ஊர்க்காரங்களா?'
விடுமுறைக்குப் / பிறந்த நாடு சென்றிருந்தேன்...
அன்போடு விசாரித்தார்கள்...
'சிங்கப்பூர்க்காரங்க எல்லாம் / எப்ப வந்தீங்க?'' (கருவறைப் பூக்கள்,
ப.92)
புகுந்த நாடான சிங்கப்பூரில் அவர்கள் 'ஊர்க்காரர்கள்';
பிறந்த நாட்டிலோ அவர்கள் அழைக்கப்படுவது 'சிங்கப்பூர்க்காரர்கள்' என்று.
இத்தகைய 'திரிசங்கு நிலைமை' தான் புலப் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு
என்கிறார் கவிஞர்.
ஞான பீட விருதாளர் அகிலனின் 'பால் மரக் காட்டினிலே' என்னும் புதினம்
மலேசிய நாட்டின் ரப்பர்த் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின்
வாழ்க்கை அவலத்தைச் சித்திரிப்பது. இதனை நினைவூட்டும் விதத்தில்
மலர்விழி இளங்கோவன் 'பால் மர நாட்டினிலே' என்னும் தலைப்பில் படைத்துள்ள
கவிதை வருமாறு:
'இரத்தத்தைப் பாலாக்கி
/ வடிப்பது
தாய்மை மட்டுமல்ல ...
தமிழனின் இரத்தத்தை / இன்றும் பாலாய் வடித்த படி...
மலேசியத் தோட்டத்து மரங்களும்!' (கருவறைப் பூக்கள், ப.82)
மலேசியத் தோட்டத்து மரங்கள் இன்றும்
பாலாய் வடிப்பது தமிழனின் இரத்தத்தையாம்!
குழந்தைகள் உலகம்
மலர்விழி இளங்கோவன் படைத்துள்ள குழந்தைகள்
உலகம் கள்ளங்கரவு இல்லாதது; சூது வாது அறியாதது; எதையும் கேள்வி
கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவது; கற்பனைத்
திறனும் விளையாட்டு மனப்பான்மையும் கொண்டது. 'சிறுவர் இரயில்' என்னும்
தலைப்பில் அமைந்த கவிஞரின் ஒரு சிறுகவிதை, குழந்தைகள் உலகை உள்ளது
உள்ளவாறே படம்பிடித்துக் காட்டுகின்றது.
'ஓர் இரயிலை / உருவாக்கிட
சக்கரமெனச் சுழலும் / கைகளும்
கொஞ்சம் / 'சிக்கு, புக்கு'
சத்தமும் / போதுமானதாயிருக்கிறது
ஒரு குழந்தைக்கு!' (கடல் சூழ் கவிதை, ப.84)
சக்கரம் போலச் சுழலும் தனது கைகளையும், 'சிக்கு,
புக்கு' என்னும் சத்தத்தையும் கொண்டு ஓர் இரயிலையே உருவாக்கி
விடுகின்றதாம் குழந்தை!
'சூரியக் குழந்தை' என்னும் கவிதையும் இவ்
வகையில் நினைவுகூரத் தக்கது. 'பாட்டி... வாங்க வெளியில் போய்
விளையாடலாம்...' எனத் தனது பாட்டியை அழைக்கிறது குழந்தை. 'இப்ப
வேண்டாண்ட, வெளியிலே வெயில்...' என்கிறார் பாட்டி. 'இப்போ வெயிலைப்
போகச் சொல்லுங்க...' என்கிறது குழந்தை. 'சாயங்காலம் வந்தால் தானே வெயில்
போகும் செல்லம்...?' என்கிறார் பாட்டி. 'சரி... சாயங்காலத்தை வரச்
சொல்லுங்க' என்கிறது குழந்தை. வெயிலைப் போ என்றோ, சாயங்காலத்தை வா என்றோ
சொல்ல முடியாத பாட்டி என்னதான் சொல்லுவார் குழந்தையிடம்? 'இங்க
பார்த்தியா... உனக்கு முன்னால் இருக்கும் சூரியன் தலைக்கு மேலே போய்
முதுகுப் பக்கம் சென்றால்தான் சாயங்காலம் வரும்... சரியா?' என்கிறார்.
இப்போது சட்டெனத் திரும்பி நின்று கொண்டு குழந்தை சொல்கிறது: 'நான்
சூரியனை முதுகுக்குப் பின்னால் நகர்த்தி விட்டுட்டேனே... வாங்க
விளையாடலாம்.' குழந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு,
'ஒரே நேரத்தில்
/ சிரித்தார்கள்
பாட்டியும்இ சூரியனும்' (அலை பிடுங்கிய சொற்கள், பக்.23-24)
எனக் கவிதையை முடித்து வைக்கிறார் கவிஞர்.
குழந்தையின் கள்ளங் கரவில்லாத இயல்பான பேச்சும் செயலும் இங்கே கவிதைக்கு
வண்ணமும் வனப்பும் சேர்க்கின்றன.
இளையோர் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையை
விதைக்கும் கவிஞர்
'விழிமின்; எழுமின்; இலக்கை எட்டும் வரை
ஓயாது உழைமின்!' என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தினார் வீரத் துறவி
விவேகாநந்தர். அவரது வாக்கினை வழிமொழிவது போல் மலர்விழி இளங்கோவன் 'இலக்கை
எட்டு' என்னும் தலைப்பில் ஓர் அருமையான கவிதையை இயற்றியுள்ளார்.
'தேடுகிறோம் எதையோ / வாழ்கிறோம் எதற்கோ
அறியாமலே / ஓடத்தான் செய்கிறது / வாழ்க்கை!'
எனத் தொடங்குகின்றது அக் கவிதை. இங்கிலாந்துப் பழமொழி ஒன்று கூறுவது
போல், 'நாம் அழுதுகொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே
வாழ்கிறோம், ஏமாற்றம் அடைந்து இறக்கிறோம்' (ப.ராமஸ்வாமி, உலகப்
பழமொழிகள், ப.48).
அடுத்து, 'கிடைத்தது எதுவோ / பிடித்தது அதுவேயானதால்...' என்ன
நிகழ்கிறது என்பதையும் கவிஞர் சுட்டிக்காட்டுகின்றார். 'நிறுத்தி வைத்த
/ மிதிவண்டிச் சக்கரமாய் / நகராத வாழ்க்கை...' அமைந்து விடுகின்றது.
அதன் விளைவாக, 'சக்கரமோ சுழல்கிறது / இலக்கை எட்டாமலே!'
அப்படி என்றால் இதனை எப்படிச் சரி செய்வது? வாழ்க்கையை எப்படி மாற்றி
அமைப்பது? வினாத் தொடுக்கும் இளைய தலைமுறைக்குக் கவிஞரின் மறுமொழி இதோ:
'சரிந்து விழப் பிறந்தவனல்ல... / சாதிக்கப் பிறந்தவன் நீ...!
சரி செய் உன் பயணத்தை
பிடித்தது எதுவோ / கிடைத்தது அதுவேயாகும் வரை!'
(கடல் சூழ் கவிதை, ப.64)
பயணத்தைச் சரி செய்து, பாதையைத் திட்டமிட்டுத் தொடர்ந்தால் வாழ்வில்
சாதனை புரியலாம் என வழிகாட்டுகின்றார் கவிஞர்.
'எட்ட முடியாத உயரங்கள்' என்னும் கவிதையும் படிப்பவர் நெஞ்சில்
தன்னம்பிக்கையை விதைக்க வல்ல ஓர் அற்புதமான கவிதை. ஆம்ஸ்ட்ராங் அடி
எடுத்து வைக்கும் வரை நிலவும், எட்மண்ட் ஹில்லாரி எடுத்து அடி வைக்கும்
வரை எவரெஸ்ட்டும் எட்ட முடியாத உயரங்களாகவே எவருக்கும் தெரிந்தன.
ஆனால், ஒருவரது வாழ்வில் எட்ட முடியாத உயரங்கள் என எவையும் இல்லை என
அழுத்தமாகவும் ஆழமாகவும் நம்புகின்றார் கவிஞர். அவர் இளைய தலைமுறைக்கு
உணர்த்த விரும்பும் செய்தி இது தான்:
'எட்டி விட்டால் \ சிகரங்கள் கூட
உன் \ உயரத்திற்குக் கீழே தான்!
எட்ட முடியாத உயரங்கள் \ எல்லாம்
எட்ட முயலாத உயரங்களே! (கருவறைப் பூக்கள், ப.128)
கவிஞரது அகராதியில் 'எட்ட முடியாத உயரங்கள் எல்லாம் எட்ட முயலாத
உயரங்களே!'
'எது வீரம்?' என்னும் வினாவுக்குக் கவிஞர் தரும் இரத்தினச் சுருக்கமான
விடை இது தான்:
'நாளைவரும் நாட்கள்எல்லாம் நன்றே என்று
நம்பிக்கை வளர்ப்பதுவே வாழ்வின் வீரம்!'
(கடல் சூழ் கவிதை, ப.24)
கவிஞர் தீட்டும் முதுமைக் காதல்
'துள்ளுவதோ இளமை, தேடுவதோ தனிமை, அள்ளுவதோ திறமை, அத்தனையும் புதுமை'
என எழுச்சிக் குரலில் முழக்கம் இடுவது இளமைக் காதல்; 'எது எனக்கு இன்பம்
நல்கும்? இருக்கின்றாள் என்ப தொன்றே!' எனக் கனிந்த குரலில் மென்மையான
மொழிவது முதுமைக் காதல். துள்ளலும் துடிப்பும் மிக்க இளமைக் காதலைப்
பாடுவது எளிது; பக்குவமும் முதிர்ச்சியும் வாய்ந்த முதுமைக் காதலைச்
சொற்களில் வடிப்பது என்பது அரிது. மலர்விழி இளங்கோவன் 'முதுமைக் காதல்'
குறித்துத் தீட்டியுள்ள நயமான கவிதை இது:
'அம்மாவின் காதல்
/ அப்பாவிடம்
கை சேர்கிறது... / பத்திய உணவாய்!
அப்பா / தன் காதலை / உறுதிப்படுத்துகிறார்...
சர்க்கரை நோய் மாத்திரைகளாய்க்
கைமாறிய / அன்பின் பரிசுகளோடும்,
'நேரத்திற்கு மாத்திரையைச் / சாப்பிட மாட்டாயா?' / என்னும்
காதல் மொழிகளோடும்!' (அலை பிடுங்கிய சொற்கள், ப.16)
'அதையும் தாண்டி...' என்னும் தலைப்பில் கவிஞர் படைத்திருக்கும் பிறிதொரு
குறுங்கவிதையும் இவ் வகையில் நினைவுகூரத் தக்கது.
'உன் / வெள்ளை முடிக்குள்
தலை கோதிக் / கிடக்கிறதுஎன் காதல்' (கடல் சூழ் கவிதை, ப.87)
நரையைப் பாடிய கவிஞர்
'வித்தகக் கவிஞன் கைபட்டால், விறகுக் கட்டை கூட வீணையாகும்' என்பார் கவி
வேந்தர் மு.மேத்தா. அவரது கூற்றுக்கு இணங்க, ஓர் ஆண்மகனின் கருகருவென
வளர்ந்த தலைமுடி அன்று – பருவத்திற்கு வந்த ஓர் இளம்பெண்ணின் ஆறடிக்
கூந்தல் அன்று – நரை கூட மலர்விழி இளங்கோவனின் எழுதுகோலில் கவிதைப்
பொருள் ஆகும் தகுதியைப் பெற்று விடுகின்றது. 'நாராய், நாராய்! செங்கால்
நாராய்!' என நாரையை விளித்துப் பாடினார் சக்திமுற்றப் புலவர்; கவிஞர்
மலர்விழி இளங்கோவனோ 'நரையே நரையே...' என விளித்து நயமான கவிதை ஒன்றைப்
புனைந்துள்ளார்.
'ஒத்த நரை வந்தப்ப
/ உதவாக் களைன்னு
உடனடியாக் களையெடுத்தேன்!
ஊட ஊட வந்தப்ப / ஊடு பயிரா
நான் நெனச்சேன்!
களையா வந்தது / கழனி நெறஞ்சப்ப
இதுவும் முகத்துக்குக் / களையாத் தான்
இருக்குதுன்னு / கர்வமாக் கண்ணுற்றேன்!
தரிசா இல்லாமல் / தலையில இருக்கேன்னு
தளராது புன்னகைக்க / உள் மனத்தின் குதிலாட்டம்
இளமைத் துள்ளலுடன்!' (கருவறைப் பூக்கள், ப.52)
'ஒத்த நரை'யை 'உதவாக் களை'யாகவும், 'ஊட உட வந்த' நரையை 'ஊடு
பயி'ராகவும், தலை முழுக்க நரைத்த போது முன்பு 'களை'யாகத் தோன்றிய நரை,
இப்போது முகத்திற்குக் 'களை' கூட்டுவதாக உணர்ந்து கர்வம் கொள்வதாகவும்,
தலையில் முடியே இல்லாமல் போவதை விட, நரை முடியாவது இருக்கிறதே என்று
இளமைத் துள்ளலுடனும் புன்னகையோடும் உள்மனம் குதியாட்டம் போடுவதாகவும்
கவிஞர் பாடி இருக்கும் அழகே அழகு!
இன்றை சமூக அவலங்களின் படப்பிடிப்புகள்
'வீட்டின் பெயரோ 'அன்னை இல்லம்'; அன்னை இருப்பதோ 'முதியோர் இல்லம்''
எனக் கன்னத்தில் ஓங்கி அறைவது போல் எழுதப் பெற்ற குறுங்கவிதை ஒன்று
உண்டு. அதனோடு ஒப்ப வைத்து நோக்கத் தக்க மலர்விழி இளங்கோவனின் கவிதை
'தாய்மையின்
காத்திருப்பு.'
' தன் மகனின் / அருமை, பெருமைகள்
சிறுவயதுச் சேட்டைகள் / சொல்லிச் சொல்லிச் சிலிர்த்த படி...
மகனின் வருகைக்காய் / வழிமேல் விழி வைத்துக்
காத்திருக்கிறாள் தாயொருத்தி...'
எங்கே தெரியுமா? 'முதியோர் இல்ல வாசலில்!' (கருவைப் பூக்கள், ப.110)
எனக் கவிதையை முடிக்கும் போது நம் மனமெல்லாம் கனக்கிறது; வலிக்கிறது.
'கருவறைப் பூக்கள்' தொகுப்பில் இக் கவிதைக்கு அடுத்து
இடம்-பெற்றிருப்பது 'நியாயங்கள் பொதுவானவை' என்னும் கவிதை. சிலம்பும்
மேகலையும் எப்படி இரட்டைக் காப்பியங்களோ அது போலத் தான் இவ்விரு
கவிதைகளும். இதல் மகன் தாய்க்குத் தன் தரப்பு நியாயங்களை ஒவ்வொன்றாக
எடுத்துரைக்கிறான். முதியோர் இல்லத்தில் தாயைச் சேர்த்தது என்பது
காலத்தின் கட்டாயமாம். 1. அரவணைத்துத் தாய்ப்பால் ஊட்ட அவகாசம் இன்றிப்
புட்டிப்பாலைப் புகட்டிய போது... 2. பராமரிக்க நேரம் இன்றிப் பணிப்பெண்
பராமரிப்பில் பகல் இரவாய் வளர்த்த போது... 3. கண்ணே என்று கொஞ்சிடவும்
கால அவகாசம் இன்றி கண் விழிக்காத தன்னைக் காப்பகத்தில் தள்ளி விட்டுச்
சென்ற போது... 4. வீட்டில் கவனிப்பார் இன்றி விடுதிப் படிப்பே விதி
என்று ஆன போது... 5. பாசமாய்ப் பற்றிக் கொள்ளப் பரிதவித்த போதெல்லாம்
பணத்தை நீட்டிவிட்டுப் பறந்த போது... தாயின் தரப்பில் இருந்த நியாயங்கள்
போலவே இன்று மகன் தரப்பிலும் இருக்கின்றனவாம்! இவ்வளவு நியாயங்களையும்
அடுக்கிக் கூறிவிட்டு முடிவில்,
'அம்மா, நான் கடமை தவறாதவன்...
/ தவறாது அனுப்பி விடுகிறேன்
முதியோர் இல்லப் பராமரிப்புச் செலவை!'
(கருவறைப் பூக்கள், பக்.111-112)
என்று மகன் கூறுவதைக் கேட்கும் போது நாம் அதிர்ச்சியில் உறைந்து
போகின்றோம்! எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறுவது போல் 'உண்மை சுடும்' என்னும்
கசப்பானன வாழ்வியல் உண்மையே நம் நெஞ்சில் வந்து அலை மோதுகின்றது.
இப்படி எல்லாம் இன்று சமுதாயத்தில் – குடும்பங்களில் – நிகழ்- வதற்கான
காரணத்தையும் 'உறவுகள்' என்னும் கவிதையில் கற்பிக்கின்றார் மலர்விழி
இளங்கோவன். வேறொன்றும் இல்லை... இப்போதெல்லாம் நாம் -
'ஒட்டாமல் சமைக்கிறோம்
/ 'நான் ஸடிக்'கில்
கை ஒட்டாது உண்கிறோம் / கரண்டி கொண்டு...
ஒட்டாது போனதே / உறவுகளும்!' (கருவறைப் பூக்கள், ப.113)
'மயக்கம்' என்னும் தலைப்பில் மலர்விழி இளங்கோவன் வடித்திருக்கும் கவிதை
இன்றைய கல்வி உலகின் அவல நிலையை அப்பட்டமாகக் காட்டுவது:
' காலை எழுந்தவுடன் தனிப்பாடம்
/ பகல் பொழுதெல்லாம்
பள்ளிப் பாடம்
மாலை வந்தால் துணைப்பாடம் / இரவு நேரத்தில் வீட்டுப் பாடம்
வார இறுதி சிறப்புப் பாடம் என / மூச்சுத் திணறி
மயங்கிக் கிடக்கின்றன... / பாடப் புத்தகங்கள்!'
(அலை பிடுங்கிய சொற்கள், ப.45)
எடுப்பும் தொடுப்பும் முடிப்பும்
கவிதையை எடுப்பாகத் தொடங்கி, சுவையாக வளர்த்துச் சென்று, முடிவில்
முத்தாய்ப்பாக ஒரு திருப்பத்தையோ, திடீர்த் தாக்குதலையோ ஏற்படுத்துவது
என்பது கவிஞருக்கு விருப்பமான – அவருக்கு நன்கு கைவந்த – ஓர் உத்தியாக
விளங்குகின்றது. பதச் சோறாக, 'எது பிடிக்கும்?' என்ற கவிதையை இங்கே
சுட்டிக்காட்டலாம்.
பாவேந்தர் பாரதிதாசனின் 'குடும்ப விளக்'கின் சாயலில், 'கொண்டவர்க்கெது
பிடிக்கும்' எனத் தொடங்கும் கவிதை, 'கொழுந்தனுக்கெது பிடிக்கும்
/ நாத்திக்கெது பிடிக்கும் / மாமன், மாமிக்கெது பிடிக்கும் / குழந்தைகள்
எது விரும்பும்? / பார்த்துப் பார்த்துப் / பக்குவமாய்ச் செய்தாள்' எனப்
படிப்படியே சுவையாக வளர்ந்து செல்கின்றது. இங்ஙனம் தொடர்ந்து வரும்
கவிதை,
'அறியவில்லை எவருமே
/ அவளுக்கெது பிடிக்குமென்று?'
(கருவறைப் பூக்கள், ப.55)
எனப் பொட்டில் அடித்தாற் போன்ற தெறிப்பான ஒரு விரைவுடன் முடிவடைவது
முத்தாய்ப்பு. பெண்ணிய நோக்கில் படிப்பவர் மனத்தில் அதிர்வலைகளை
உருவாக்கி விடுகின்றது கவிதையின் முடிப்பு.
'எம்மதமும் / சம்மதமே' எதுவரை தெரியுமா? கவிஞரின் நறுக்கான மறுமொழி இதோ:
'வாரிசுகளுக்கு / வரன் தேடாத வரை!' (கருவறைப் பூக்கள்,
ப.97)
'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'எம்மதமும் சம்மதம்', 'சாதிகள் இல்லையடி
பாப்பா!' என்பவை எல்லாம் தம் மக்களுக்கு வரன் தேடாத வரை தான் என்ற சமூக
நடப்பினை - மனித இயற்கையை - இங்கே தோலுரித்துக் காட்டியுள்ளார் கவிஞர்.
'பாலூட்டி' என்னும் தலைப்பில் ஒரு குறுங்கவிதை. 'பாலூட்டி இனத்தில்
/ மனிதன் தவிர்த்து / மற்றனைத்தும் / பாலூட்டிகளே!' எனத் தொடங்கும் இக்
கவிதை,
'மனிதன் மட்டுமே
/ புட்டிப் பாலூட்டி' (கருவறைப் பூக்கள், ப.62)
என நறுக்காகக் கூறி நிறைவு பெறுவது சிறப்பு.
மெல்லிய முறுவலைத் தோற்றுவிக்கும் கவிதை
படிப்பவர் இதழ்களில் மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கும் விதத்தில்
கவிதை படைக்கும் திறமும் மலர்விழி இளங்கோவனுக்கு வசப்பட்டுள்ளது. 'அழகுக்
குறிப்பு' என்னும் கவிதை ஒன்றே போதும் இக் கருத்தினை நிலைநாட்ட.
கவிஞரின் சொற்களில் அக் கவிதை இதோ:
'பாதாம் பருப்பை
/ ஊற வைத்துத் / தோலுரித்து,
பால்இ குங்குமப் பூ சேர்த்தரைத்த / விழுதோடு
கொஞ்சம் தேனும் / முட்டை வெள்ளையும்
சேர்த்துக் குழைத்து / முகத்தில் போட்டால்
முகத்திலுள்ள சுருக்கங்கள் / காணாமல் போய்விடுமாம்!'
இவ்வளவும் விலாவாரியாகச் சொல்லி விட்டு கவிஞர் அக் கவிதையை
முடித்திருக்கும் பாங்கு தான் படிப்பவர் இதழ்களில் புன்னகையைத்
தோற்றுவிப்பது:
'முகச் சுருக்கமென்ன ... / வயிற்றுச் சுருக்கமே
/ போய் விடுமே!'
(கருவறைப் பூக்கள், ப.125)
இவ்வளவு அழகுக் குறிப்புக்களையும் ஒன்று விடாமல் செய்து முடித்தால்,
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமா காணாமல் போகும்? வயிற்றுச்
சுருக்கமும் அல்லவா விடைபெற்றுச் செல்லும் என மொழிகிறார் கவிஞர்.
ஆறு படிமங்களின் அணிவகுப்பு
சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடாகும் விதத்தில் மலர்விழி இளங்கோவன்
படைத்துள்ள ஒரு சிறந்த கவிதை 'புகை பிடித்தல்'. ஒற்றை வரியில்
மதிப்பிடுவது என்றால்இ ஆறு அழகிய படிமங்களின் அணி வகுப்பு அக் கவிதை:
1.
'சொந்தச் செலவில் / வைத்துக் கொண்ட / சூனியம்',
2. 'தனக்குத் தானே
/ இட்டுக் கொண்ட / கொள்ளி', 3. 'தானே
/ பூசிக் கொண்ட / கரி', 4.
'கொள்ளிவாய்ப் / பிசாசு', 5. 'வஞ்சம் தீர்த்திடும்
/ வெள்ளை யானை', 6. 'புரையோடிய
/ நாவினால் / சுட்ட வடு!' (கடல் சூழ் கவிதை, ப.46)
வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பி 'சிகரெட்' என்னும் தலைப்பில்
'இரு விரல் நடுவில் புகையும் எரிமலை', 'வயதும் சாதியும் பார்க்காத ஞானி'
என்றாற் போல் அழகிய படிமங்களைக் கையாண்டு படைத்திருக்கும் கவிதை இங்கே
ஒப்புநோக்கத் தக்கது.
'சித்திர மின்னல்கள்'
ஒற்றை வரியில் – சில சொற்களில் – சில சமயங்களில் இரண்டே வரிகளில் -
மூவடி ஹைகூ வடிவில் – சொல்லோவியமாக வடிக்கப் பெறும் கவிதைகளைச் 'சித்திர
மின்னல்கள்' என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். இத்தகைய 'சித்திர
மின்னல்கள்' மலர்விழி இளங்கோவனின் கவிதை உலகில் பரக்கக் காணப்படுகின்றன.
உள்ளங் கவரும் உதாரணங்கள் சில வருமாறு:
கவிஞரின் கை வண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு வரிக் கவிதைகள் சில:
1.
குழந்தை: தொப்புள் கொடிப் பூ!
2.
தேன்: பூக்களின் கண்ணீர்!
3.
வகிடு: பிரிவினைவாதி! (கருவறைப் பூக்கள், பக்.117, 128)
கவிஞரின் கண்ணோட்டத்தில் –
வழுக்கை: 'மூப்பு செய்த / நில மீட்பு' (கடல் சூழ் கவிதை, ப.47)
மீனவ வாழ்வின் அவலத்தை அற்புதமாகச் சொல்லும் கவிஞரின் வாமனக் கவிதை இது:
'படகு நிறைய மீன்கள்
மீனவனோ
கருவாடாய்!' (கருவறைப் பூக்கள், ப.115)
சிங்கப்பூர்க் கவிமாலை கண்டெடுத்த படைப்பாளுமை
'பெண்கள், ஆண்களை விடக் கவிதைக்கு அதிகம் நெருக்கமானவர்கள் என்பது என்
நம்பிக்கை' (வாழ்த்து, மலர்விழி இளங்கோவனின் 'அலை பிடுங்கிய சொற்கள்',
ப.7) எனத் தமது தனிப்பட்ட கருத்தினை எடுத்துரைக்கிறார் ஆசியான் கவிஞர்
க.து.மு. இக்பால்.
'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர்கள் குறைவாகவே
உள்ளனர். மலர்விழி போன்ற கவிஞர்களின் வரவு இக் குறையை நிறைவாக்கும் என
எதிர்பார்க்கலாம்' (அணிந்துரை, மலர்விழி இளங்கோவனின் 'கருவறைப்
பூக்கள்', ப.11) எனக் கவிஞரின் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் தமது
எதிர்பார்ப்பினை வெளிப்படுத்துகிறார் சிங்கப்பூர் தேசியப்
பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன். இவ்விரு
பெருமக்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் மலர்விழி இளங்கோவனின் கவிதை
உலகினைக் கூர்ந்து நோக்கும்போது உறுதிப்படும்
உண்மை இது தான்:
புதுமைச் சிந்தனை – சமூக அக்கறை – அழகியல் பார்வை – நயமான கற்பனை –
நலமான கவிமொழி – போர்க் குணம் – நேர்மைத் திறம்: இவை யாவும் ஒன்றிணைந்த
கவி ஆளுமையே சிங்கப்பூர்க் கவிமாலை கண்டெடுத்த மலர்விழி இளங்கோவன் ஆவார்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
|