வ.சுப.மாணிக்கம் - கவிஞராக

முனைவர் இரா.மோகன்


‘மூதறிஞர்’, ‘செம்மல்’, ‘தமிழ் இமயம்’ என்றெல்லாம் போற்றப்படும் வ.சுப.மாணிக்கனார், ஒரு சிறந்த ஆய்வாளர் மட்டுமல்லர்; ஒரு நல்ல படைப்பாளியும் கூட. ஆய்வு மனமும், படைப்பு மனமும் ஒருவரிடமே அமைவது என்பது அரிது. ஆயின், வ.சுப. மா. ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்டுப் பெற்றிருப்பாரோ என்னவோ? எல்லாம் வல்ல இறைவனும் அவரது இனிய தமிழ்க் குரலுக்கு - அன்பு வேண்டுகோளுக்கு - இசைந்திருப்பாரோ என்னவோ? வ.சுப.மா.விடம் ஆய்வு மனமும், படைப்பு மனமும் இறுதி வரை கைகுலுக்கிய வண்ணம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

வ.சுப.மா.வின் கவிதை நூல்கள்

படைப்பிலக்கியத் துறைகளைப் பொறுத்த வரையில், வ.சுப.மா. மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்ட துறைகள் இரண்டு. ஒன்று, கவிதை; மற்றொன்று, நாடகம். இவ்விரண்டனுள், கவிதைத் துறையில் அவர் வெளியிட்டுள்ள நூல்கள் மூன்று. அவையாவன:

1.‘கொடை விளக்கு’ – இந்நூல் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கையைப் பாடுபொருளாகக் கொண்டது; 171 வெண்பாக்களால் அமைந்தது; 1957-இல் வெளிவந்தது. ‘அன்னை தமிழின் அணிவிரல் மோதிரம், என்னப் புனைந்த இளஞ்சிறு காப்பியம்’ என்பது கவிஞரின் சுவையான பாயிரக் குறிப்பு ஆகும்.

2.‘மாமலர்கள்’ – இந்நூல் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருள் சார்ந்தது; 1978-இல் முதற்பதிப்பாக வெளிவந்தது.

3.‘மாணிக்கத் தமிழ்’ – இந்நூல் ஐந்நூற்றாறு குறட்பாக்களைத் தன்னகத்தே கொண்டது; அந்தாதிப் போக்கில் அமைந்தது; 1991-ஆம் ஆண்டில் வெளிவந்தது. சுருங்கக் கூறினால், வ.சுப.மா.வின் கொள்கை விளக்க நூலாக இந்நூல் திகழ்கின்றது.

இனி, இம்மூன்று கவிதைப் பனுவல்களின் வாயிலாக வ.சுப.மா. என்ற கவிஞரின் படைப்புத் திறத்தினைக் குறித்துக் காண்போம்.

வ.சுப.மா.வின் அளவுகோலில் பாட்டு

“பாட்டு என்றால் உணர்ச்சி துள்ள வேண்டும், கற்பனை செறிய வேண்டும், உவமை கலக்க வேண்டும், எதுகை மோனை இணைய வேண்டும், நயம் கனிய வேண்டும், நோக்க இருக்க வேண்டும்... இங்ஙனம் பாட்டுக்கு ஓர் அளவுகோல் செய்து வருகின்றோம்” (சங்க நெறி, ப.82) என்பர் வ.சுப.மாணிக்கம். வ.சுப.மா.வின் இவ்வளவுகோலைக் கொண்டே அவரது கவிதைத் திறத்தினைக் காண முற்படுவோம்.

1.உணர்ச்சி வெளிப்பாடு

கவிதைக் கலைக்கு உயிரோட்டத்தினைத் தந்து நிற்கும் அடிப்படையான உணர்ச்சிகளை எண் வகையாகப் பகுத்துக் கூறவர் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர். நகை முதலாக உவகை முடிய உள்ள இவற்றை ‘மெய்ப்பாடு’, ‘இரசம்’, ‘சுவை’ என்னும் சொற்களால் சுட்டுவர் சான்றோர். இனி, வ.சுப.மா.வின் கவிதைப் படைப்புக்களில் உணர்ச்சித் திறம் பளிச்சிட்டு விளங்கும் இரு இடங்களைக் காண்போம்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு என்றோ அகன்று விட்டனர்; என்றாலும், ஆங்கில மோகம் நம் நெஞ்சை விட்டு இன்னமும் அகன்ற பாடில்லை. வ.சுப.மாவும் ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் தலைப்பில் எழுதிய ஓர் இயக்கப் பாட்டில் நம் நாட்டவரின் ஆங்கில மோகத்தை அங்கதச் சுவையோடும் நகைச்சுவை உணர்வோடும் சாடுகின்றார். ‘ஆங்கில மோகம் அதிகமாக யாருக்கு உண்டு?’ என உலகத்தில் ஒரு போட்டி வைத்தால், அதில் ஆங்கில நாட்டாரே அதிசயிக்கும் வகையில் முதல் பரிசைத் தட்டிச் செல்பவர் யாராக இருப்பார்கள் தெரியுமா? தமிழர்கள்தானாம்! நல்ல நகைச்சுவை உணர்வு மிளிரும் வ.சுப.மா.வின் நயமான கவிதைப் பகுதி இதோ:

“ ஆங்கில மோகம் அடிமையிற் கூட
            ஏங்கிய தமிழர்க்கு இவ்வள வில்லை;
            ஆங்கில மோகம் யாருக் குண்டென
            ஓங்கிய போட்டி உலகிடை வைப்பின்
            ஆங்கில நாடரும் ஆஆ என்னத்
            தாங்கும் பரிவு தமிழர்க்கு உண்டே!”  
   (மாமலர்கள், ப.115)

நகைச்சுவைக்கு மாறானது அவலச் சுவை. ‘கொடை விளக்கு’ என்ற நூலில் வள்ளல் அழகப்பரின் மறைவை ஒட்டி மக்கள் அழுது புலம்புவதாக வ.சுப.மா. இயற்றியுள்ள கையறு நிலைப் பாடல் ஒன்று:

“ துக்கத் துணிதாங்கித் தொய்யும் மனந்தாங்கி
            நெக்கு வடிகின்ற நீர்தாங்கி – எக்கால்
            இனியோர் அழகப்பா எங்கட்கு எனாஅ
            நனிசோர்வர் மக்கள் நலிந்து”   
  (கொடை விளக்கு, 4)

‘தாங்க முடியாத’ அவலத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களின் மனத் துயரைச் சித்திரிக்கும் இப்பாடலில் ‘துணிதாங்கி’, ‘மனந்தாங்கி’, ‘நீர்தாங்கி’ என்னும் முரண் சுவை கொண்ட தொடர்களைக் கையாண்டிருக்கும் வ.சுப.மா.வின் கவிதைத் திறம் எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும்; மனம் நெகிழத் தக்கதுமாகும்.

இங்ஙனம் உணர்ச்சி வெளிப்பாட்டால் நம் நெஞ்சை அள்ளும் இடங்கள் வ.சுப.மா.வின் கவிதைகளில் நிரம்ப உண்டு.

2. கற்பனை வளம்

“புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக்குறிக்கோளைப் பதிய வைப்பதற்கு அன்னவர்கள் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது” (தமிழ்க் காதல், ப.91) எனக் கற்பனைக்கு விளக்கம் தருவர் வ.சுப.மா. அவரது கவிதைகளில் இக்கற்பனை களிநடம் புரியும் ஓரிரு இடங்களைக் காணலாம்.

வ.சுப.மா.வு ‘பிள்ளைக் கனியமுது’ பற்றிக் கற்பனை நயம் விளங்கப் பாடியுள்ள வெண்பா வருமாறு:

“கள்ளந் தொடாத கனியே! வா! காதலர்தம்
            உள்ளந் தொடுக்கும் உவப்பே! வா! – பள்ளம்
            விழுகச் சிரிக்கும் வியப்பே! அமிழ்தம்
            இழுகத் திறவாய் இதழ்”        
     (மாமலர்கள், ப.48)

என்பது வ.சுப.மா. தீட்டும் எழில் மிகுந்த சொற்சித்திரம். குழந்தையின் கொள்ளை ‘அழகிற்கு அழகு சேர்க்கும்’  அற்புதமான சொற்சித்திரம் இது!

குழந்தை கண்ணுறங்குவதற்காகத் தாலாட்டுப் பாடிய கவிஞர்களை நாம் அறிவோம். ஆயின், வ.சுப.மா.வோ புதிதாகக் குழந்தை கண் வளர்வதற்காகத் ‘தமிழாட்டு’ப் பாடுகின்றார் (மாமலர்கள், ப.77-81).

“ முல்லை நறுமுகையோ

          முழுதலராத் தாமரையோ

   புல்லின் பனித்துளியோ

          பொற்கதிரே கண்வளராய்!”

என்பது ‘தமிழாட்’டின் தொடக்கம். முல்லை அரும்பு, தாமரைப் போது, பனித்துளி, பொற்கதிர் எனச் சின்னஞ்சிறு குழந்தையின் வடிவிற்கும் வண்ணத்திற்கும் ஒப்புமையாக வ.சுப.மா. கையாண்டுள்ள உவமைகள் அவரது கற்பனை வளத்திற்குக் கட்டியம் கூறுவனவாகும். இயற்கையை ஆராதிக்கும் முருகியல் உணர்வோடு தொடங்கும் ‘தமிழாட்டு’ இடையே தன் பெயருக்கு ஏற்பத் தமிழுணர்வோடு குழந்தையைத் தாலாட்டி மகிழ்கின்றது.

“ மாசிலாத் திருக்குறளோ?
            மனங்கவரும் சிலம்படியோ?
            காசிலா வாசகமோ?
            கம்பனார் காப்பியமோ?
            சங்கத்தின் இலக்கியமோ?
            தடம்புதிய பாரதியோ?
            எங்கள்தொல் காப்பியமோ?
            எல்லாமும் நீதானோ?”


இத்தகைய சுகமான ‘தமிழாட்’டில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, இடையில் எப்படியோ தூக்கம் கலைந்துவிட எழுகின்றது; அழுகின்றது; வெதும்பி - அலறி - அழுகின்றது. இங்கே குழந்தையின் அழுகைக்கு - துடிப்புக்கு - வ.சுப.மா. காட்டும் காரணம் புதுமையானது; வித்தியாசமானது; இதுவரை எவரும் பாடாதது.

“ அம்மாவோ என்னைநீ
                 ஆங்கிலவாய்ப் பள்ளிக்குச்
            சும்மாவும் விடாயென்று
                 சொல்லவோ துடிக்கின்றாய்?
             சிறியவாய்க் குழந்தைகள்
                 செந்தமிழை உண்ணாமல்
             தெரியவாய் ஆங்கிலத்தைத்
                  திணிப்பதற்கோ துடிக்கின்றாய்?”

குழந்தையின் துடிப்புக்கு இங்கே வ.சு.மா. கற்பிக்கும் காரணம் கற்பவர் நெஞ்சைத் தொடுவதாகும்.

‘மாமலர்கள்’ தொகுப்பில் ‘குழந்தைப் பாடல்கள்’ என்னும் பிரிவில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ‘நூல் விளையாட்டு’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல், சின்னஞ்சிறு மழலைச் செல்வங்களுக்குத் தமிழ் இலக்கியச் செல்வங்களை வேடிக்கையான போக்கில் கற்பனை நயம்பட அறிமுகம் செய்யும் அறிவு விருந்தாக விளங்குகின்றது (ப.41).

3. உவமை நயம்

வள்ளல் அழகப்பரின் கொடைப் பெருமையைப் பற்றிப் பாடும் போது, ‘நீரைப் புழங்கினால் என்னப் பொருட் செல்வமெல்லாம் வழங்கினான்’ (கொடை விளக்கு, 7) என்ற இயல்பான உவமையைக் கையாளுகின்றார் வ.சுப.மா. ‘நட்டம், மலைபோல் அழுத்தினும் மாமல்லபுரத்துச் சிலைபோல் இருப்பன் சிரித்து’ (கொடைவிளக்கு, 120) என்பது வள்ளல் அழகப்பரின் மனத் திட்பத்தைச் சுட்டுவதற்கு வ.சுப.மா. கையாளும் உவமையாகும்.

தமிழின் இனிமைக்கு வ.சுப.மா. கையாண்டிருக்கும் ஓர் உவமை புதுமையானது; இதுவரை யாரும் சொல்லாதது. ‘இடியாப்பம் போலும் இனிமைத் தமிழ்’ என்னும் அவ்வுவமை ‘மாணிக்க குற’ளில் (477) இடம் பெற்றுள்ளது.

‘புரட்சி மண்டோதரி’ என்பது வ.சுப.மா.வின் கவி வண்ணம் காட்டும் சிறுபடைப்பு; பெண்மைக்கும் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிக்கும் புதுப்படைப்பு. அதில் வரும் மண்டோதரி தன் கணவன் இராவணன் பிறன் மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோக வனத்தில் கொண்டு வந்து சிறை வைத்திருக்கிறான் என்ற தீய செய்தியினைக் கேட்டு வெதும்புகிறாள்; எப்படியேனும் அவனைத் திருத்தும் துணிவு கொள்கிறாள். இராவணன் ஒரு நாள் நள்ளிரவில் அசோக வனம் சென்று இரந்து பேசி சீதையின் காலடியில் விழ முற்படும் போது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே தோன்றுகிறாள். எதிர்பாராமல் தன் மனையாளைக் கண்ட இராவணன் நடுநடுங்குகிறான். அவனது அப்போதைய நிலையையும் உணர்வையும் மூன்று அழகிய உவமைகளால் எடுத்துக் காட்டுகின்றார் வ.சுப.மா. அவ்வுமைகள் வருமாறு:

“ கள்ளமாய் எழுதித் தேர்வில்

          கைப்படு பேதை போல,

   எள்ளலாய்ப் பெண்ணைப் பேசி

          இடிபடுங் கயவன் போல,

   துள்ளலாய் வேலி தாண்டித்

          தொடுத்துணும் மாடு போல

   உள்ளமாய் நடுக்கங் கொண்டான்

          உம்பரை நடுக்கஞ் செய்தான்”       (மாமலர்கள், ப.92)

முன்பு உம்பரை எல்லாம் நடுங்கச் செய்த இராவணன், இப்போது உள்ளம் முழுவதும் நடுக்கம் கொண்டானாம். இங்ஙனம் இராவணனின் பேதைமைக்கும் கயமைக்கும் கீழ்மைக்கும் வ.சுப.மா. கையாண்டிருக்கும் உவமைகள் அவரது படைப்பாற்றலை மட்டுமின்றி, ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றும் அவரது உயரிய உள்ளத்தினையும் உணர்த்தி நிற்கின்றன.

உயர்ந்த குறிக்கோள் உடைய வாழ்வே வாழ்வு; குறிக்கோள் இல்லையென்றால் அதற்குப் பெயர் ‘வீழ்வு!’ ‘குறிக்கோள் இலாது கெட்டேன்!’ என்ற அப்பர் வாக்கு இதனை வலியுறுத்தும். சீரிய குறிக்கோள் எதுவும் இல்லாத வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும்? இதோ, வ.சுப.மா.வே நான்கு அழகிய உவமைகளை அடுக்கிக் கையாண்டு பாடுகின்றார், பார்ப்போம்:

“ குறிக்கோள் இலாத வாழ்வு

          கோடுகள் இலாத ஆட்டம்;

   நெறிக்கோள் இலாத நெஞ்சு

          நிறைநீர் இலாத யாறு;

   மறிக்கோள் இலாத கல்வி

          வரப்புகள் இலாத நன்செய்;

   செறிக்கோள் இலாத மேனி

          திறவுகோல் இலாத பூட்டாம்”        (மாமலர்கள், ப.60)

‘கோடுகள் இல்லாத ஆட்டம்’, ‘நிறைநீர் இல்லாத ஆறு’, ‘வரப்புகள் இல்லாத நன்செய்’, ‘திறவுகோல் இலாத பூட்டு’ - என வரும் இந்நான்கு உவமைகளின் வாயிலாகக் குறிக்கோளின் அருமையினையும் ஆற்றலினையும் படிப்பவர் நெஞ்சில் நன்கு பதிய வைக்கின்றார் வ.சுப.மா.

4. தொடக்கமும் முடிவும் நயமுற அமைதல்

வ.சுப.மா.வின் ‘மாமலர்கள்’, தொடக்கமும் முடிவும் நயமுற அமைந்த கவிதைப் படைப்பாகும். அதில் இடம் பெற்றுள்ள தொடக்கக் கவிதையின் தலைப்பு ‘இந்தியப் பாயிரம்’ என்பதாகும்; முடிவுக் கதையின் தலைப்பு ‘உலகப் பாயிரம்’ என்பதாகும். ‘இந்திய பாயிர’த்தில் தொடங்கி, ‘உலக பாயிரத்’தில் முடிவது போல் வ.சுப.மா. இந்நூலை உருவாக்கியிருக்கும் திறம் போற்றத்-தகுவதாகும். மேலும், ‘உலகப் பாயிரம்’ என்னும் கவிதையின் தொடக்கத்தில் எதுகை, மோனை, முரண் மூன்றும் ‘அருமையில் எளிய அழகு’டன் அமைந்திருக்கும் பாங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

“ இனிய உலகம் இன்னா உலகா

   அளிய உலகம் அடிதடி உலகாப்

   பெரிய உலகம் பின்னிய உலகா

   நல்ல உலகம் நம்பா உலகா

   மாறி வருவதை மாற்றல் வேண்டும்;

   மாற்றம் இன்றேல் கூற்றம் வருமால்;

   இற்றைப் போக்கே இன்னும் வளரின்

   நாளைய உலகம் நன்றா காதே!”           (மாமலர்கள், 127)

5. நவில்தொறும் வெளிப்படும் நயம்

தெய்வத் தமிழில் ‘நயத்துக்குச் சுந்தரர்’ என்பது போல் இன்றைய தமிழில் ‘நயத்துக்கு மாணிக்கனார்’ எனக் கூறத் தக்க அளவில், நல்ல நல்ல நயங்கள் பல வ.சுப.மா.வின் கவிதைகளில் ஆங்காங்கே வட்டமிட்டு நிற்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கே சுருங்கக் காண்போம்.

ஔவையாரின் ‘ஆத்திசூடி’, பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’, பாரதிதாசனின் ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘இளையார் ஆத்திசூடி’ ஆகியவற்றை அடியொற்றி வ.சுப.மா. இயற்றியுள்ள சிற்றிலக்கியம் – சிறுவர் இலக்கியம் – ‘தமிழ்சூடி’ (1978). இதில் சின்னஞ் சிறுகுழந்தைகள் மனங்கொளத்தக்க 118 சீரிய அறக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்துக்களின் ஊடே ஒளிவிடும் ஒரு சில நயங்களை இவண் காண்போம்.

“ தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்

   தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்

   திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்

   தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்

   துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்

   தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்

   தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்

   தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்

   தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய் 

   தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்

   தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்”

என்பது ‘தமிழ்சூடி’யின் பாயிரம். இப் பாயிரம் த வரிசை எழுத்துக்களால் நிரல்பட அமைந்திருப்பது ஒரு நயம்.

‘கீதை நெறி நில்’ (35), ‘கொரான் வழிநில்’ (41). ‘விவிலியம் படி’ (113) – வ.சுப.மா.வின் ஒருமைப்பாட்டு உணர்வை நயமுற வெளிப்படுத்தும் அறிவுரைகள் இவை.

வ.சுப.மா. பழமையைப் போற்றும் பண்பாளராக மட்டும் நில்லாமல், புதுமையை மனமாற வரவேற்கும் பண்பினராகவும் விளங்குகின்றார். ‘ஐ.நா.நன்று’ (9), ‘மே நாள் அயர்’ (102). ‘வானொலி கேள்’ (112) என வரும் நயவுரைகள் இவ்வகையில் நினைவுகூரத்தக்கவை. ‘கையூட்டு மறு’ (40), ‘தீண்டாமையொழி’ (64), ‘போரையொழி’ (94), ‘மதுவை விலக்கு’ (96), ‘கிளர்ச்சி எதற்கு’ (34) – இன்றைய சமூக அவலங்களுக்கு எதிரான வ.சுப.மா.வின் கவிக் குரல்கள் இவை. ‘உன்னைத் திருத்து’ (31), ‘ஏனென்று கேள்’ (8), ‘நெஞ்சை உயர்த்து’ (78), ‘பிறவியை மதி’ (86), ‘சாவிலும் மகிழ்’ (45); ‘யமனைப் புறங்காண்’ (45), ‘மக்களை மதி’ (14), ‘மாற்றம் விரும்பு’ (97) – ‘தமிழ் சூடி’ வழங்கும் தெள்ளிய துன்முன்னேற்றச் சிந்தனைகள் இவை.

‘தமிழ் சூடி’ தமிழுக்குத் தரும் இடம் தலைமையானது; தனித்தன்மை வாய்ந்தது. ‘தொல்காப்பியம் படி’ (70), ‘சங்க நூல் போற்று’ (44), ‘அகத் தமிழ் படி’ (1), ‘குறுந்தொகை படி’ (36), ‘புறத்திணை படி’ (88), ‘திருக்குறள் வரப்பண்’ (63), ‘சிலம்பை நடி’ (46), ‘தேவாரம் பாடு’ (68), ‘ஆழ்வார் நெறிநில்’ (2) எனத் தம் பெருக்கு ஏற்ப ஒல்லும் வகையெல்லாம் ஓங்கு தமிழ் நூல்களைக் கசடறக் கற்குமாறும், கற்றபின் அவற்றிற்குத் தக நிற்குமாறும் வலியுறுத்துகிறது ‘தமிழ் சூடி’.

‘தமிழாட்டு’, ‘தமிழ் சூடி’ என்றார் போல் ‘தமிழாயிரம்’ என்ற தலைப்பில் குறள் யாப்பில் அந்தாதி அமைப்பில் ஓர் அறநூல் – வாழ்வியல் நூல் – இயற்றத் திட்டமிட்டிருந்தார் வ.சுப.மா. ஆயின் நம் தவக் குறைவால் 506 குறள்கள் எழுதி முடித்த நிலையிலேயே இம் மண்ணுலகை விட்டு மறைந்தார் அவர். இம் ‘மாணிக்கக் குற’ளில் வ.சுப.மா. தமிழுக்குக் கையாண்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட நயமான அடை மொழிகளை நிரல்படக் காணலாம்.

‘வளமார் தமிழ்’ (4), ‘அருந்தமிழ்’ (29), ‘பெருந்தமிழ்’ (41), (44), ‘முறைத்தமிழ்’ (47), ‘வெண்தமிழ்’ (61), ‘செந்தமிழ்’ (63), (97), (119), (129), (152), (159), (171), (189), (206), (219), (359). (409), ‘பெரிய தமிழ்’ (64), ‘நந்தமிழ்’ (67, 86, 259), ‘எந்தமிழ்’ (74, 160, 419), ‘தீந்தமிழ்’ (81), (115), ‘கோல்தமிழ்’ (87), ‘தன்னிற் சிறந்த தமிழ்’ (102), ‘நெடுந்தமிழ்’ (120), ‘விளிவில் தமிழ்’ (121), ‘முத்தமிழ்’ (137), ‘சொற்றமிழ்’ (139), ‘செய்தமிழ்’ (143), ‘வளர்தமிழ்’ (144), (350), ‘பொருவில் தமிழ்’ (163), ‘தீஞ்சொல் தமிழ்’ (190), ‘செழுந்தமிழ்’ (191), ‘பைந்தமிழ்’ (193), ‘உயர்தமிழ்’ (217), (380), (458), ‘விளக்கு தமிழ்’ (225), ‘வண் தமிழ்’ (258), ‘பொதியத் தமிழ்’ (280), ‘இன்தமிழ்’ (297), ‘பொதியில் தமிழ்’ (300), ‘செல்தமிழ்’ (303), ‘உலகுதமிழ்’ (323), ‘நற்றமிழ்’ (324), ‘குளிர்தமிழ்’ (351), ‘மட்டுத்தமிழ்’ (352), ‘வெல்தமிழ்’ (358), ‘ஒண்தமிழ்’ (362), ‘முதுதமிழ்’ (376), ‘பண்தமிழ்’ (376), ‘பழுத்த தமிழ்’ (379), ‘கனிதமிழ்’ (383), ‘இளையாத் தமிழ்’ (402), ‘உரிமைத் தமிழ்’ (418), ‘விரிதமிழ்’ (423), ‘தொழுதமிழ்’ (433), ‘பசுந்தமிழ்’ (434), ‘நல்ல தமிழ்’ (456), ‘பண்பார் தமிழ்’ (457), ‘நிறைசெந்தமிழ்’ (466), ‘கிளர்தமிழ்’ (469), ‘நலங்கூர்தமிழ்’ (474), ‘இனிமைத் தமிழ்’ (477), ‘படிதமிழ்’ (478), ‘எண் தமிழ்’ (485) – இவ் அடைமொழிகள் அருந்தமிழின் அழகையும் ஆற்றலையும், வண்ணத்தையும் வனப்பையும் வகை வகையாய்ச் சுட்டியிருப்பது வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த ஒன்றாகும். இவை தமிழின்பால் வ.சுப.மாவுக்கு உள்ள ஆழ்ந்த பற்றையும் புலப்படுத்தி நிற்பது கண்கூடு.

“ மாரியிவன் எனச் சொன்னால் உவமை போதா
            மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா”

எனப் பாரி நிலையம் செல்லப்பனாரைக் குறித்து வ.சுப.மா. எழுதியிருக்கும் அன்புரிமைப் பகுதியும் அவரது நயத்தமிழுக்கு நல்லதொரு சான்றாகும்.

6. நோக்குத் திறன்

“ மாத்திரை முதலா அடிநிலை காறும்
            நோக்குதற் காரணம் நோக்குஎனப் படுமே”

என்பது தொல்காப்பியம். ‘நோக்குதற் காரணம் நோக்கு எனப்படும். கற்பார் கண்டு மகிழ்தற்குரிய காரணமாகிய இனிமைத் திறம் அமைந்திருப்பது நோக்கு எனப்படும்’ என இதற்கு விளக்கம் தருவர் உரையாசிரியர். மாத்திரை, எழுத்து, அசை, சீர், தொடை, அடி அனைத்தும் காரணம் கருதி அமைக்கப்பட வேண்டும். பயனின்றி ஒரு மாத்திரை இருப்பினும் அது நோக்கு ஆகாது. “நோக்கு என்பது மறித்து நோக்குதல். ஒரு பாடலுள் ஒரு மாத்திரை முதல் அனைத்தையும் பயன்படுமாறு அமைப்பதையே இது குறிக்கிறது. ஒரு பாடலுள் ஒரு மாத்திரையையோ, அசையையோ, சீரையோ நீக்கினாலும் மாற்றினாலும் பொருள் கெட்டுவிடும் என்கிற அளவிற்கு ஒவ்வொன்றையும் காரணம் கருதிப் பொருந்திய இடத்தில் வேண்டிய அளவு அமைத்துப் பாட்டுப் பொருளைச் சிறக்கச் செய்வதே நோக்காகும்” என்னும் பேராசிரியர் தமிழண்ணலின் கருத்தும் இங்கே நினைவுகூரத்தக்கதாகும் (சங்க இலக்கிய ஒப்பீடு: இலக்கியக் கொள்கைகள், ப.172). வ.சுப.மா.வின் பாடல்களில் நோக்கு என்னும் உறுப்பு – திறன் – சிறப்பாக அமைந்த ஓரிரு இடங்களைக் காண்போம்.

தமிழில் ‘ஆசை’, ‘மோகம்’, ‘பற்று’ என்று மூன்று வகையான சொல்லாட்சிகள் உண்டு. இவற்றுக்கு இடையே நுண்ணிய பொருள் வேறுபாடுகளும் உண்டு. ‘மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை’, ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’, ‘நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இறைப் பற்று’ என்றாற் போல் வரும் பழகுதமிழ் வழக்குகளும் இதனை நன்கு உணர்த்துவனவாகும். இவ்வுண்மையினை மனங்கொண்ட வ.சுப.மா. தம் ‘இந்திய பாயிர’த்துள் நாட்டுப் பற்றின் இன்றியமையாமையை அழகுற எடுத்துரைக்கின்றார்:

“சாதிப் பற்றும் சமயப் பற்றும்
            காதல் அன்ன கட்சிப் பற்றும்
            மோதல் இல்லா மொழியின் பற்றும்
            ஆசை நீங்காப் காசுப் பற்றும்
            நேசங் கலந்த ஈசன் பற்றும்
            தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக்
            பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
            மற்றோர் பற்று மனம்புகல் வேண்டா” 
  (மாமலர்கள், ப.1)

நாட்டுப் பற்றின் அருமையை நோக்க, ஏனைய பற்றுகள் எல்லாம் ‘சிறுபற்றுகள்’ என்பது வ.சுப.மா.வின் கருத்து.

‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது வள்ளுவர் வலியுறுத்தும் ஓர் அடிப்படையான உண்மை. பொருளின் அருமைப்பாட்டை நன்கு உணர்ந்தே பண்டைத் தமிழரும் ‘அறம் பொருள் இன்பம்’ என்னும் வழக்குத் தொடரில் – வரிசைத் தொடரில் – பொருளை நடுவணதாக இடம்பெறச் செய்தனர். ஒருவன் பொருள் இருந்தால்தான் அறச் செயலைச் செய்ய இயலும்; இன்பம் நுகர வேண்டும். இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டே கவியரசர் பாரதியாரும் ‘பொருளில்லார் பொருள் செய்தல் முதற்கடன்’ என்று அறுதியிட்டு உரைப்பார். தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதியார் ஆகியோரின் கருத்துக்களை வழிமொழியும் பாங்கில் வ.சுப.மா.வும்,

“ பின்வாழ்க்கை வேண்டின் பெரும்பொருள் ஈட்டுக
            என்வாழ்க்கை இல்லா தவர்க்கு”  
         (மாணிக்கக் குறள், 227)

எனப் பொருளின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகின்றார்.

நோக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராயும் போது, இக்குறட்பாவின் பொருட்சிறப்பு நன்கு புலனாகும். ‘பின் வாழ்க்கை வேண்டின்’ என்பது இக்குறட்பாவின் தொடக்கம். ‘எதிர்வரும் காலத்தில் இடரில்லாத நல்வாழ்வு வேண்டுமானால்’ என்பது இத்தொடரின் பொருள். ‘ஒருவன் தம் முதுமைக் காலத்தில் அமைதியான – இன்பமான – வாழ்வு வாழ வேண்டு-மானால்’ என்று கூட இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம். ஏனெனில் ஒருவன் தன் இளமையில் – பொருள் ஈட்டுகின்ற ஆற்றல் படைத்த          இளமையில் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருளை ஈட்டிக் கொண்டுவிட வேண்டும்; அதுதான் அவன் வாழ்வின் பிற்காலத்தில் அரணாக அமையும். அடுத்து, எவ்வளவு பொருள் ஈட்ட வேண்டும் என்ற வினாவுக்குப் ‘பெரும்-பொருள் ஈட்டுக’ என விடையறுக்கின்றார் வ.சுப.மா. ஒருவனின் வாழ்க்கைக்குப் ‘பொருள்’ சேர்க்க வல்லது ‘பொருள்’ என்பதால் – அடைமொழி சேர்த்துப் ‘பெரும்பொருள் ஈட்டுக’ என அறிவுறுத்துகின்றார் வ.சுப.மா. சரி, பொருள் இல்லை என்றால், ஒருவனின் வாழ்க்கை என்ன ஆகும்? இதற்கும் முத்தாய்ப்பாக மறுமொழி கூறுகின்றார் வ.சுப.மா. ‘இல்லாதவர்க்கு ஏன் வாழ்க்கை?’ என்பது அவர் கேட்கும் வினா. தமிழில் ‘இல்லான்’ -         ‘இல்லாதவன்’ - என்ற சொற்களும் பொருள் இல்லாதவனையே - வறியவனையே - குறித்தல் இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

வ.சுப.மா., வள்ளல் அழகப்பரின் கொடைப் பண்பினை விதந்து பாடியுள்ள பாடல்கள் சிலவும் நோக்குத் திறத்தில் சிறந்து விளங்குகின்றன. ‘கொடுக்கிலாதனைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை’ என்று சுந்தரர் பெருமான், பாரியின் வண்மையைப் பாடினார். எத்தனை கொடுத்தாலும் பாரி தான் இருந்த பறம்பு மலையைக் கொடுக்கவில்லை. அழகப்பரோ தாம் வாழ்ந்த கோட்டையூர் மாளிகையையும் கல்லூரிக்குக் கொடுத்து விட்டார். எனவே. குடியிருந்த வீட்டையும் வழங்கிய அழகப்பரின் வண்மை பாரியின் வண்மையிலும் பெரிது. ஆதலால், இனி ‘அழகப்பன் என்றே அழைப்பினும் கொடுப்பாரிலை’ என்று சுந்தரர் பாட்டினைப் புதுப்பிக்க வேண்டும் என்று கருதுகின்றார் வ.சுப.மா. (கொடை விளக்கு, 25).

வ.சுப.மா. - கவிஞராக

“ஊனக் குழந்தை ஒன்று பிறந்தால்
            ஏனக் குழவியென் றெறியாள் தாயவள்;
            என்னைப் பெற்ற என்தமி ழன்னை
            என்னிற் பிறந்த இதனைத்
            தன்னிற் பேரரெனத் தழுவுவள் பெரிதே.”


என ‘மாமலர்க’ளுக்கு எழுதிய ‘அடக்கப் பாயிர’த்தில் பணிவோடும் பெருமித உணர்வோடும் குறிப்பிடுகிறார் வ.சுப.மா. ஆய்வாளராக, உரைநடை ஆசிரியராக வ.சுப.மா. எடுத்திருப்பது ‘விசுவரூபம்’ என்றால், கவிஞராக அவர் காட்டியிருப்பது ‘சுயரூபம்’தான்; மறுக்க முடியாத உண்மை இது. என்றாலும், கவிதை நூல்கள் வெளிப்படுத்தும் வ.சுப.மா.வின் ‘சுயரூபம்’ கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021