பாவேந்தர் பாரதிதாசனின் காதல்
சித்திரிப்பு
முனைவர் இரா.மோகன்
கவிஞரும் காதலும்
“நம்
பிறப்போடு ஒட்டியது, உலகப் பிறப்பை அருளுவது, யாண்டும் பரந்தது,
உணர்ச்சியுள்வலியது, ஐம்புலனின்பமும் ஒருங்கு தருவது, எண்ணம் சொல்
செயலெல்லாம் இனிப்பது எது? காதல், காதல், காதல். இக் காதலே – இயல்பான
பாலுணர்ச்சியே – அகத்திணை இலக்கியத்தின் பாடற் பொருளாம். உலகியலில்
வாழ்வியலைக் கண்ட தமிழினத்தின் தனியிலக்கியத்துக்கு வேறு எவ்வுணர்ச்சி
பாடுபொருளாக இருக்கமுடியும்? இவ்வுணர்ச்சிக்குத் திணையும் வகுத்துத்
தனியிலக்கியம் காணும் எண்ணம் வேறு எவ்வினத்துக்குத் தோன்ற முடியும்?”
எனக் காதலின் மேன்மையை – காதலை இலக்கியமாக வளர்த்த தமிழினத்தின் தகைமையை
– விதந்து கூறுவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் (தமிழ்க் காதல்,
பக்.114-115). இனிதினும் இனிதான இக்காதல் உணர்வு காலங்காலமாகத் தமிழ்
இலக்கியங்களில் ஓர் இன்றியமையாத பாடற்-பொருளாய் இடம்பெற்று வந்துள்ளது.
வாழையடி வாழையென வந்த தமிழ்க் கவிஞர் கூட்டம் காதலைச் செவ்விதாகப் பாடி
வந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசனும் காதல் பாடல்களை நிரம்பப்
பாடியுள்ளார். மொழியுணர்வுக்கு அடுத்து, காதல் உணர்வு அவரது பாடல்களில்
சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது.
“ அமிழ்தமிழ் தமிழ்தெனில் இருதமிழ் கிட்டிடும்
அவளிதழ் நினைவினில் விளைவன
முத்தமிழ்”
எனக் கவிஞர், அமிழ்து – தமிழ் – காதலியின் இதழ் என்னும் மூன்றையும்
இணைத்து ஒரு கவிதையில் நயமாகப் பாடியிருப்பது (காதல் கவிதைகள், ப.31)
நெஞ்சை அள்ளுவதாகும். ‘நாடும் அகப்பொருளினுக்கே – அவள் நல்லதோர்
இலக்கியமோ? தேடரிய கலைப்பொருளோ? – அருமைச் செந்தமிழின் சுவையோ?’ எனக்
கவிஞர் பிறிதோரிடத்தில் (காதல் கவிதைகள்,ப.25) பாடியிருப்பதும் இவண்
மனங்கொள்ளத்தக்கதாகும்.
I. மரபைப் போற்றல்
தொல்காப்பியப் பொருளதிகாரம், சங்க அகப் பாடல்கள், திருக்குறள் காமத்துப்
பால், பாரதியாரின் காதல் பாடல்கள் முதலான முன்னைய காதல் இலக்கியங்களின்
சொல்லையும் பொருளையும் பாவேந்தர் பாரதிதாசன் தம் காதல் பாடல்களில்
ஆங்காங்கே பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ளார்.
“ ஒன்றே வேறே என்றுஇரு பால்வாயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” (களவியல், நூ.2)
எனக் களவொழுக்கத்தில் காதலர்களின் கண்கள் கலப்பதை – கலப்பால் காதல்
பிறப்பதை – நுண்ணிதின் பாடுவார் தொல்காப்பியர். காதலன் முதலில்
காதலியைக் காண்பான், பிறகு காதலி காதலனைக் காண்பாள் என்றோ, காதலி
முதலில் காதலனைக் காண்பாள், அடுத்துக் காதலன் காதலியைக் காண்பான் என்றோ
பாடாமல், காதலின் இயல்புக்கு ஏற்பக் காதலர் இருவரும் ஒரே நேரத்தில்
ஒருவரை ஒருவர் கண்டு கொள்வார்கள் என்ற பொருளில், ‘ஒத்த கிழவனும்
கிழத்தியும் காண்ப’ என்று தொல்காப்பியர் பாடியிருப்பது நயமானதாகும்.
தொல்காப்பியரை வழிமொழிவது போல் பாரதிதாசனும்,
“ கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக்
கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி”
(பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி,
ப.72)
என்று ஒரு கவிதையில் பாடியுள்ளார். இங்கும் ‘பாடம் படித்து நிமிர்ந்த
ஆண் விழிதனில், பட்டுத் தெறித்தது மானின் விழி’ என்று காதலர் இருவரது
விழிகளும் ஒரே நேரத்தில் தன்னியல்பாகச் சந்தித்துக் கொள்வதைச்
சொல்லோவியமாக்கியுள்ளார் பாவேந்தர்.
திருக்குறள் காமத்துப் பாலில் வரும் ஒரு தலைவி,
“ செல்லாமை உண்டேல்
எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு
உரை” (குறள்: 1151)
எனத் தன் பிரிவாற்றாமை உணர்வை உணர்த்துவாள். பாரதிதாசன் படைக்கும்
காதலியோ,
“ இருப்பதாய் இருந்தால் என்னிடம்
சொல் – நீ
போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்
சொல்” (பன்மணித் திரள்,
ப.4)
என்கிறாள் திருவள்ளுவரின் தலைவி, ‘நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை’ எனக்
குறிப்பாகப் பேச, பாவேந்தரின் காதலியோ கறாராக – வெட்டு ஒன்று துண்டு
இரண்டாக – முடிந்த முடிபாக – ‘நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்
சொல்’ என வெளிப்படையாக உடைத்துப் பேசுகிறாள்.
பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்தவர் பாரதிதாசன் என்பது காதல்
சித்திரிப்பிலும் பொருந்தி வருகின்றது. பாரதியார் ‘பெண்மை’ என்ற
கவிதையில்,
“ காற்றில் ஏறிஅவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”
(பாரதியார் கவிதைகள், ப.504)
என்று காதற் பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு உள்ள தனி ஆற்றலைப் பாடுவார்.
பாரதியாரை அடியொற்றிப் பாரதிதாசன் தம் ‘சஞ்சீவி பர்வத்தின் சார’லில்,
“ கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்”
(பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி,
ப.4)
என்று காதல் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியுள்ளார்.
இங்ஙனம் முன்னையோர் பாடி இருக்கும் காதல் மரபைப் பின்பற்றிப் பாவேந்தர்
பாரதிதாசன் பாடியுள்ள இடங்கள் பலவாகும்.
II. மரபை வளர்த்தல்
முத்தொள்ளாயிரத்தில் ஒரு முத்தான காட்சி. சேர மன்னன் உலா வருகிறான்.
அவன்பால் காதல் கொண்ட மகளிர் அவனைப் பார்க்கத் துடிக்கின்றனர்.
பார்த்தால் காதல் மிகுதியாகி விடும் என்று தம் மகளிர் அவனைப்
பார்க்காவண்ணம் தெருக்கதவைத் தாழிட்டு அடைக்கிறார்கள் தாயர்கள். ஆனால்
காதல் உள்ளம் தூண்ட, மறுபடியும் மகளிர் கதவைத் திறந்து பார்க்க, தாயர்
அடைக்க, இருவருக்கும் இடையே இவ்வாறு போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
இதன் விளைவாக வீதிக் கதவு பெரும்பாடு படுகின்றது.
“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலா அங்கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலா அம்வீதிக் கதவு.” (சேரன், 1)
என்பது முத்தொள்ளாயிரம் தீட்டும் காதல் ஓவியம்.
கலிங்கத்துப் பரணியில் பிறிதொரு காட்சி. போருக்குச் சென்ற தன் கணவன்
திரும்பி வந்திருப்பான் என்று எதிர்பார்த்து வீட்டுக் கதவைத் திறந்து
பார்க்கிறாள் மனைவி; கணவன் வராமல் போகவே வீட்டுக் கதவை அடைக்கிறாள்.
இந்தத் திறப்பும் அடைப்பும் மாறி மாறி நிகழவே, வீட்டு வாயிற்கதவின்
குமிழ்கள் இங்கும் அங்கும் அலைந்து தேய்ந்து போகின்றன.
“ வருவார் கொழுநர்எனத் திறந்தும்
வாரார் கொழுநர்என அடைத்தும்
திருகும் குடுமி விடிவளவும்
தேயும் கபாடம் திறமினோ!” (69)
என்பது கலிங்கத்துப் பரணி காட்டும் காதல் ஓவியம்.
இவ்விரு காதல் ஓவியங்களின் வளர்ச்சி நிலையாகக் ‘கதவு பேசுமா?’ என்ற
தலைப்பில் ஓர் அற்புதமான காதல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார் பாரதிதாசன்.
தன் காதல் துணையைப் பிரிந்து சென்ற வேல்முருகன் காதலுணர்வு துரத்தக்
கடிது வருகிறான்; ஏதும் பேசாமல் இரு விரலை மட்டும் கதவில் ஊன்றுகிறான்.
‘திறந்தேன்!’ என்று ஒரு சொல் வரக் கேட்கிறான். ‘ஆஆ!, மரக்கதவும் பேசுமா?’
என்று வியப்பு மேலிடுகிறது அவனுக்கு. ‘என்ன புதுமை!’ என அவன் மருண்டு
நிற்க, மறுநொடியில் சின்னக் கதவு திறக்கிறது. அவன் தன் அருமைக்
காதலியின் தாவு மலர்க் கையை நுகர்கிறான்; அவள் முகத்தில் புன்முறுவல்
கண்டு உள்ளம் பூரிக்கிறான்; ‘என்னேடி, தட்டு முன்பு தாழ்திறந்து
விட்டாயே?’ என்று வியப்படங்காமல் கேட்கிறான். அவனுக்கு மறுமொழியாக,
“ விட்டுப் பிரியாதார் மேவும் ஒருபெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்
கருமரத்தால் செய்த கதவு”
(பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.68)
என்று கூறுகிறாள் அவனது உள்ளங்கவர் காதலி.
முத்தொள்ளாயிரம், காதல் உள்ளத்திற்கும் தாய் உள்ளத்திற்கும் இடையே
நடக்கும் போராட்டத்தில் சிக்குண்டு வீதிக் கதவின் குமிழ் தேய்ந்து
திரிந்ததைப் படம் பிடித்தது. கலிங்கத்துப்பரணி, கணவனின் வருகைக்காக
விடியவிடிய வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒரு பெண்ணுள்ளத்தால்
அலைபுரண்டு தேயும் வீட்டுக் கதவின் குமிழினைச் சொல்லோவியமாக்கியது.
பாவேந்தர் பாரதிதாசனின் எழுதுகோலோ பிரிந்து சென்ற கணவன் வரும் வரையில்
வீட்டுக் கதவாகவே மாறி, வழிமேல் விழி வைத்து எப்போதும் காத்திருக்கும்
ஓர் உயிருள்ள பெண்ணோவியத்தை உருவாக்கிக் காட்டியுள்ளது. இங்ஙனம்
முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி ஆகிய இரு இலக்கியங்களும்
காட்டியுள்ள காதல் உணர்வினை ஒருபடி கூடுதலாக வளர்த்துத் தம் கவிதையில்
சித்திரித்துள்ளார் பாரதிதாசன்.
III. மரபை மாற்றல்
“ அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர்” (நூ.23)
என்பது தொல்காப்பியர் கூறும் அகத்திணையியல் இலக்கணம். இவ்-விலக்கணத்தை
அடியொற்றிச் சங்க அக இலக்கியம் சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின்
காதலையே பாடியது; அடியோர் (குற்றேவல் செய்வோர்), வினைவலர் (ஏதேனும் ஒரு
தொழில் வல்லுநர்) ஆகியோர் காதலுக்கு இடம் தரவில்லை; அன்னோர் காதலைக்
கைக்கிளை, பெருந்-திணைக்குக் கொண்டு சென்றது. பாவேந்தர் பாரதிதாசன் தம்
காதல் பாடல்களில் இம்மரபினை மாற்றியுள்ளார். மாடு மேய்ப்பவன்,
வண்டிக்காரன், உழவன், தறித் தொழிலாளி, ஓவியக்காரன், குறவன்,
கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோன், ஆலைத் தொழிலாளி, சுண்ணாம்பு
இடிக்கும் பெண், பாவோடும் பெண், பூக்காரி, உழத்தி முதலான ஏழை எளியோரின்
காதலுக்கு ஏற்றம் தந்துள்ளார். கவிஞரின் ‘இசையமுது’ என்னும் நூலில்
காதல் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்கள் இவ்வகையில் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கவை.
“ கட்டி வெல்லத்தைக் கசக்குது என்றாள்; அவன்
கட்டாணி முத்தம் இனிக்குது என்றாள்” (இசையமுது, 1, ப.16)
என்பது சுண்ணாம்பு இடிக்கும் பெண் ஒருத்தியின் காதல் மொழி.
“ அதோ பாரடி அவரே என் கணவர் அதோ பாரடி;
புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி!”
(இசையமுது,
1, ப.3)
என்பது ஒரு வண்டிக்காரன் மனைவியின் வாய்மொழி.
இங்ஙனம் பாரதிதாசன் ஏழை எளிய மக்களின் காதல் வாழ்வுக்குத் தலைமை இடம்
தந்து பாடியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மரபு மாற்றம் ஆகும்.
IV. மரபை மீறல்
“ மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்” (குறள்: 1289)
என்பது வள்ளுவம். மலரை விட மென்மையான காதலைப் பாரதிதாசன் கையாண்டுள்ள
பாங்கு செம்மையானதாகும். ஆனால், அதே நேரத்தில் அவர் படைத்துள்ள காதலர்
சிலர் மலையினும் உறுதி வாய்ந்தவராக – முன்னைய மரபை மீறும் துணிவும்
தனித்தன்மையும் பெற்றவராக – விளங்குகின்றனர்.
பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தலைவி தன் காதல் வேட்கையைத்
தலைவன் முன்னே வெளிப்படையாக எடுத்துரைக்க மாட்டாள். புதுமண் கலத்திலே
ஊற்றிய நீர் புறத்தே பொசிந்து காட்டுவது போல், அவள் தலைவன் குறிப்பாக
உணரும்படி காட்டுவாள். இதனை, “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்,
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை, பிறநீர் மாக்கள் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” எனக் களவியலில் (நூ.27) எடுத்துக்
கூறுவார் தொல்காப்பியர். பாரதிதாசன் படைக்கும் காதலி ஒருத்தியோ இவ்
விதியினின்றும் சிறிது மீறிப் பத்து வழிகளில் தன் காதலை
வெளிப்படுத்துகிறாள்; அக்காதலி இடம்பெறும் கவிதைக்குக் ‘கைப்புண்
நோக்கக் கண்ணாடியா வேண்டும்?’ எனத் தலைப்பிட்டுள்ளார் கவிஞர். காதலி
முன்னே வருகிறாள்; தன் உடை திருத்துகிறாள்; தன் மின்னிடை
குலுக்கு-கிறாள்; அருகே வந்து தோளால் காதலனை இடித்துக் கொண்டு போகிறாள்;
வீட்டின் பின்னே காதலன் போகும்போது கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல
மெல்லப் பாடுகிறாள்; காதலனின் நாய்க்குட்டிக்கு அவன் கண்ணெதிரே முத்தம்
கொடுக்கிறாள்; சின்னச் சிட்டுக்களின் கூடல் கண்டு, காதலனைப் பார்த்து
அழுகிறாள்; காலம் கடத்தக் கூடாதென்று கையொடு பிடிக்கிறாள். ‘என் மேல்
ஆசை இல்லாவிட்டால் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளுவாளா?’ என்று
நினைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான் காதலன் (காதல் கவிதைகள்,
பக்.41-42).
கவிஞரின் ‘எதிர்பாராத முத்த’த்திலும் இத்தகைய ஒரு காதலியைக் காண
முடிகின்றது. அதில் வரும் பூங்கோதையும் பொன்முடியும் காதலர்கள்;
பொன்முடியின் அத்தை மகள் பூங்கோதை; ஆனால் இரு குடும்பமும் பகைமையில்
மூழ்கிப் பிளவுண்டு வாழ்கின்றன. இதற்கிடையில் ஒரு நாள் எதிர்பாராத
விதமாகக் காதலர் இருவரும் சந்திக்கின்றனர். ‘அத்தான் நீர் மறந்தீர்
என்று மெய்யாக நான் நினைத்தேன்’ என்கிறாள் பூங்கோதை. பொன்முடியோ
உணர்ச்சி மிக வெடுக்கென்று அவளை அணைக்கிறான். ‘விடாதீர்’ என்கிறாள்
பூங்கோதை. ‘கை இரண்டும் மெய்யிறுக, இதழ் நிலத்தில் கனஉதட்டை ஊன்றி,
முத்தம் விதைக்கிறான், பொன்முடி’ (எதிர்பாராத முத்தம், ப.11). “கடலன்ன
காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்: 1137)
என்பார் வள்ளுவர். பாரதிதாசன் படைக்கும் காதலியோ கடல் போல் காம உணர்வு
பெருகிய நிலையில் ‘விடாதீர்’ எனத் தம் மனம் திறந்து பேசுகிறாள். இங்ஙனம்
ஒரு காதலியை உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பாரதிதாசன் பேச வைத்திருப்பது
மரபு மீறல் ஆகும்.
காதலுக்கு சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை என்பர்; பாரதிதாசன்
சித்திரிக்கும் காதலில் சாதி அல்லது மதம் குறுக்கீடாக அமையவில்லை; ஆனால்
மொழி ஒரு தடையாக – குறுக்கீடாக – அமைகிறது. ‘காதல் இல்லா இடம் சூனியமாம்
– புவி காதலினால் நடக்கும்!’ (பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி,
ப.107) என்றும், ‘காதல் அடைதல் உயிரியற்கை – அது கட்டில் அகப்படும்
தன்மையதோ?’ (பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.69) என்றும், ‘காதல்
கொண்ட பின் – நம்மில் சாதி ஏதடி?’ (காதல் கவிதைகள், ப.167) என்றும்
பாடியுள்ள பாரதிதாசன், மொழி வேறுபாடு காரணமாகக் காதல் முறிவதாகவும் –
காதலர்கள் பிரிவதாகவும் – பாடுவது முரணாக உள்ளது. ‘பாட்டுப் படித்துச்
சுவையறியாதவன்’ என்றும், ‘ஆனால் பத்து இலக்கம் (நூறாயிரம்) சொத்துடையவன்’
என்றும் கேள்விப்பட்ட காதலி ஒருத்தி, அவனைத் தன் வீட்டுப் படியேற
வேண்டாம் என்று ஓட்டி விடுகிறாள். அவன் ஓடிப்போய் திருவள்ளுவர் செய்த
திருக்குறளைப் படித்துத் தெளிந்தேன் என்று திரும்பி வருகிறான்;
‘அப்படியானால், நீ கொடு; நான் உன்னிடமிருந்து படித் தேன் – ஒரு படித்
தேன் அளவான இன்பத்தைக் கொள்ளுவேன்’ என்கிறாள் காதலி. இப்பாட்டில் வரும்
காதலியின் தமிழுணர்வு போற்றத்-தகுந்தது (காதல் கவிதைகள், ப.72). ஆனால்,
பிறிதொரு பாடலில் வரும் காதலன் ஒருவன்,
“ மாதுஒருத்தி வேண்டும் எனக்கும் – தமிழ்
மகளாய் இருந்தால்தான் இனிக்கும்” (காதல் கவிதைகள், ப.70)
என்பதும், ‘தமிழ் மகளாக இல்லாத காரணத்தால் உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை’
என்று காதலை மறுப்பதும் ஏற்கத்தக்கன அல்ல.
பெயர் சுட்டாப் பண்பு சங்க அகத்திணை இலக்கியத்தின் அடிப்படை-யானது;
உயிரானது. தொல்காப்பியரும்,
“ மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்” (நூ.57)
என அகத்திணை இயலில் இப் பண்பினைச் சுட்டுவர். இம் மரபும் பாரதிதாசனின்
காதல் பாடல்களில் – காதலைப் பாடற்பொருளாகக் கொண்ட தனிப் பாடல்களில் –
மீறப்பட்டுள்ளது. வேல்முருகன், மதிவாணன் என்றாற் போல் தம் காதல்
பாடல்களில் வரும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டிப் பாடியுள்ளார்
பாவேந்தர்.
V. மரபை உருவாக்கல்
‘குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; நல்ல குடும்பம் ஒரு
பல்கலைக்கழகம்’ என்னும் கருத்துக்கு இலக்கியமாகப் பாவேந்தர் பாரதிதாசன்
படைத்துள்ள நூல் ‘குடும்ப விளக்கு’. குறள் ஓவியமான இந்நூல் ஐந்து
பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் ஐந்தாம் பகுதி ‘முதியோர் காதல்’ இன்னது
என மொழிவதாகும். அதில் வரும் மணவழகருக்கு வயது 105; அவரது துணைவி
தங்கத்திற்கு வயது 100. இருவரும் நல்ல முதுமை பெற்றவர்கள்; மக்களையும்
பேரர் பேத்திமாரையும் கண்டவர்கள்; நரை திரை மூப்பு உற்றவர்கள்; ஆயிரம்
பிறை கண்ட அன்னோர் இப்போது ஆடிய பம்பரங்கள். ‘ஒருவருக்காகவே மற்றவர்’
என உருவாக்கப்பட்ட அம் முதியோரின் (made for each other) காதல் மாட்சியை
மணவழகரின் கூற்றின் வாயிலாக நெஞ்சை அள்ளும் வகையில்
புலப்படுத்துகின்றார் பாரதிதாசன்.
“ புதுமலர் அல்ல, காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்,
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு,
வறள் நிலம் குழிகள் கண்கள்!
எதுஎனக்கு இன்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்ப தொன்றே!”
(குடும்ப விளக்கு,
பக்.100-101)
முதியவரின் நெஞ்சில் அவரது நலமான வாழ்க்கைத் துணையான முதியோளே
வாழ்கின்றாள்; முதியோரின் அன்புள்ளத்தைக் கண்டவுடன் அகத்தின்பம்
கொள்கின்றார் முதியவர். மூதாட்டி உயிர் வாழ்வாள், ஆதலால்தான்
முதியவருக்கு உவப்பூட்டுகின்றது இவ் வையம்; அதே போல முதியவளின் நெஞ்சில்
தேன் மழையாக இனிக்கின்றார் – இருக்கின்றார் – முதியவர்; ஓய்தலின்றிச்
சறுக்கின்றி ஒன்றை ஒன்று பற்றிச் சலிக்காது இன்பம் கொள்ளும் இரண்டு மனப்
பறவைகளைக் ‘குடும்ப விளக்’கின் இறுதிப் பகுதியில்
சொல்லோவியமாக்கியுள்ளார் பாரதிதாசன். அழகும் ஆற்றலும் மிக்க இளமைக்
காதலைப் பாடுவது எளிது; ஆனால் ‘சருகு உடல், பல்லில்லா வாய், வெண்பட்டு
மயிர்’ கொண்ட முதுமைக் காதலை நெஞ்சம் நெகிழும் வகையில் பாடுவது என்பது
அரிதினும் அரிது. இவ்வகையில் முதுமைக் காதலுக்குப் பாரதிதாசன்
வழங்கியிருக்கும் கருத்துக் கொடை தனித்தன்மை வாய்ந்ததாகும். ‘இந்தியக்
கவிஞருள் முதுமைக் காதலைச் சிறப்பாகப் பாடிய கவிஞர்’ என்ற
பாராட்டிற்குப் பாரதிதாசன் முற்றிலும் தகுதியானவர் ஆவார். இவ்வகையில்
இலக்கியத்திற்குப் பாடற்பொருளாகும் தகுதி முதுமைக் காதலுக்கு உண்டு
என்று காட்டியவரும் – ஒரு புதிய மரபை உருவாக்கியவரும் – பாரதிதாசனே
ஆவார்.
முடிவுரை
“இலக்கிய வரலாற்றில் காதற் பாடல்களைத் தனிப்பாடல்களாகப் பெருமளவில்
அமுதூரப் பாடியுள்ளவர் பாரதிதாசனே ஆவார்... நுணுக்கமறிந்து, சுவை கெடாது
காதற் கவிதைகளைப் பாடுவதில் பாரதிதாசனார்க்கு ஒப்பு அவரே” எனப்
பாரதிதாசனின் காதல் சித்திரிப்பினைப் போற்றுகிறார் சிலம்பொலி
சு.செல்லப்பன் (அணிந்துரை, பாரதிதாசன் காதல் பாடல்கள், ப.6). பாவேந்தர்
பாரதிதாசன் காதலைக் குறித்து நிரம்பப் பாடியிருக்கிறார்; காதலை
நுணுக்கமாக, சுவையாகப் பாடியிருக்கிறார்; முன்னைப் பழமைக்கும் பழமையான
காதலைப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாகப் பாடி-யிருக்கிறார்.
சுருங்கச் சொன்னால், பாவேந்தர் பாரதிதாசன், முன்னோர் மரபைப் போற்றியும்
– வளர்த்தும் – மாற்றியும் – மீறியும் – புதுப்பித்தும் – தம் காதல்
பாடல்களைப் பாடியுள்ளார் எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
|