பாவேந்தர் பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள்

முனைவர் நிர்மலா மோகன்


“பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞான ரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்” என்பது புதுமைப்பித்தன் வாக்கு (புதுமைப்பித்தன் கட்டுரைகள், ப.124). பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துறைதொறும் துறைதொறும் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அங்ஙனம் தொண்டாற்றிய பல்துறைகளுள் ஒன்று பெண் முன்னேற்றம். பெண் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. அவற்றுள் இன்றியமையாத ஒரு சிலவற்றை இக்கட்டுரையில் சுருங்கக் காண்போம்.

பெண் குழந்தையின் பெருமை

பெண் குழந்தை என்றாலே ஒதுக்கித் தள்ளும் – வேண்டா வெறுப்பாய்ச் செயற்படும்-காலம் இது. பல பெண் குழந்தைகளுக்குக் கருவறையே கல்லறை ஆகிவரும் நூற்றாண்டு இது. ‘ஆணாய்ப் பிறப்பது அருமை; பெண்ணாய்ப் பிறப்பது எருமை’ என்று பழமொழி – இல்லை பழிமொழி – பேசித் திரியும் உலகம் இது. ஆண் குழந்தையையே போற்றிப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் இன்றைய நிலையில், பெண் குழந்தைக்கும் தாலாட்டுப் பாடிய பெருங்கவிஞர் பாரதிதாசன். குழந்தையில் ஆண், பெண் இரண்டும் ஒன்றே. இரண்டில் எதுவாக இருந்தாலும் பேணி வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடன் என்று அறிவுறுத்திய புரட்சிப் பாவலர் அவர்.

“வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
          பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
          தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
          காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”


என்று பெண் குழந்தைக்குக் கவிஞர் தம் தாலாட்டில் ஏற்றம் தந்திருப்பது நெஞ்சை அள்ளுவதாகும். மேலும் கவிஞர் ‘ஆண் குழந்தை தாலாட்டு’ என ஒரு பாடலே பாடியிருப்பதும், ‘பெண் குழந்தை தாலாட்டு’ என்னும் தலைப்பில் இரு பாடல்கள் பாடியிருப்பதும் இங்கே நினைவுகூரத்தக்கனவாகும்.

கவிஞர் பெண்மைக்குச் சூட்டியுள்ள அருமையான புகழாரம் ‘குடும்ப விளக்கு’. அதன் நான்காம் பகுதி ‘மக்கட் பேறு’ என்பதாகும். அதில், கருவுற்ற தன் மகள் நகைமுத்துவுக்குப் ‘பிறக்க இருப்பது பெண்ணா ஆணா?’ என்பதை அறிய எண்ணி, அவள் தாய் மலர்க்குழல் தக்கார் ஒருவரிடம், ‘என்ன குழந்தை பிறக்கும்?’ என்று வீட்டு நடையில் அமர்ந்து குறி கேட்பது போல் மெல்லக் கேட்கிறாள். பெரியவர், ‘பெண்ணே பிறந்து விட்டால் எங்கே போடுவீர்?’ என்று கேட்கிறார். அதற்கு மலர்க்குழல், ‘மண்ணில் பட்டால் மாசுபடும் என்று என் கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா’ என்று இயம்புகிறாள். ‘ஆணே பிறந்தால் அதை என் செய்வீர்?’ என்று மீண்டும் கேட்கிறார் பெரியவர்; ‘ஆணையும் அப்படியே ஐயா’ என்று மகிழ்ந்து கூறுகிறாள் மலர்க்குழல். இந்நிலையில் ‘பெண்ணே ஆயினும், ஆணே ஆயினும் பிறத்தல் உறுதி’ என்று சுவையாக – முத்தாய்ப்பாகக் கூறுகிறார் பெரியவர். இதற்குள் நகைமுத்துவுக்கு இடுப்புவலி வந்து குழந்தையும் பிறக்கின்றது. ‘பெய் என்ற உலகுக்கு பெய்த வான் போல்’ கீச்சென்று அழுதுகொண்டே உலகிற்கு வருகின்றது ஒரு பெண் குழந்தை. ‘மூச்சோடும் அழகோடும் பெண்குழந்தை முத்துப் போல் பிறந்தது’ என்று கூறி வீட்டில் உள்ளோர் அனைவர்க்கும் வெற்றிலை, பாக்கு, பழம், கற்கண்டு கொடுத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாகப் பெண் குழந்தைகளைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் கவிஞர்.

பெண் கல்வியின் இன்றியமையாமை

பாவேந்தர் பாரதிதாசனின் பார்வையில் நல்ல குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமானால், குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவு உடையவர்களாக விளங்க வேண்டும் என்பது அவரது கருத்து.

“பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கே;
பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுவதற்கே;
பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுவதற்கே;
பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுவதற்கே!”

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்திய கவிஞர், தொடர்ந்து, ‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம். அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வி உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்?’ என்று பெண்கள் கல்வியறிவு உடையவர்களாக இருப்பின், அவர்கள் பெற்றுப் பேணும் இளைய தலைமுறையும் வளமையுறும் என்பதனையும் அறிவுறுத்துகின்றார்.

பெண்கள் நகை மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நகையாசையால் ஒரு பெண் தன் தாயிடம், ‘அம்மா என் காதுக்கொரு தோடு – நீ அவசியம் வாங்கி வந்து போடு! கைக்கும் இரண்டு வளையல் வீதம் – நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!’ என்று கேட்கிறாள். அவளுக்குத் தாய் ‘பெண்ணுக்கு எது ஆபரணம்’ என்று அறிவுறுத்துகிறாள்.

“கற்பது பெண்களுக்கு ஆபரணம் – கெம்புக்
       கல்வைத்த நகை தீராத ரணம்;
கற்ற பெண்களை இந்நநாடு – தன்
       கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு’


என்று வறுமையிலும் செம்மையாக வாழ மகளுக்கு வழிகாட்டுகின்றாள்.

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள்

குழந்தை மணம். பொருந்தா மணம், கைம்மைக் கொடுமை என்று பெண்ணுக்கு நேரும் அநீதிகளைக் கண்டு கண்ணீர் வடித்தவர் பாரதிதாசன். குழந்தை மணத்தின் கொடுமையைக் கல்லும் கரையும் வண்ணம் கவிதையில் எடுத்துக்காட்டிய கவிஞர் அவர். ஏழு வயதுப் பெண் ஒருத்தி – கூவத் தெரியாத குயில், தாவாச் சிறுமான், மோவா அரும்பு தாலியறுத்துத் தாய் வீட்டில் இருக்க, தன் முதல் தாரத்தை இழந்த அவளது தந்தையோ வேறு ஒரு பெண்ணை மணம் புரிந்து அவளுடன் களித்திருப்பதோடு மட்டுமல்லாமல், தனது மகள் – அறியா சிறுபெண் – எதிரே வந்தாலும் குற்றம் என்று எண்ணுகிறார். “என்னை விலக்கி என்சிறு தாயிடம் தந்தை கொஞ்சுதல் தகுமோ? தந்தை அவளை விரும்பி அவள் தலைமீது பூச்சூடுகின்றார்; புறக்கணித்தார் என்னை; அவருக்கு நான் மகள்! அவர் எதிர் சென்றால் ‘சீ, போ!’ என்று புருவம் நெறிப்பதோ?” என்று தனது பாட்டி மடியில் படுத்துப் புரண்டு அழும் அந்த இளம்பெண்ணின் வேதனை என்று தீரும் என்று ஏங்குகிறார் கவிஞர்.

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே – இங்கு
வேரிற் பழுத்த பலா – மிகக்
கொடியதென்று எண்ணிடப் பட்டதண்ணே – குளிர்
வடிகின்ற வட்ட நிலா!
சீரற்றிருக்குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ்சோலை – சீ
சீ என்றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்
சீதளப்பூ மாலை!”

என்று கணவன் இறந்தபின் கைம்மை என்னும் பெயரில் பெண்ணின் தலையில் ஒரு துன்பச் சுமையை ஏற்றி வைக்கும் சமூகத்தின் கொடுமை மாற வேண்டும்; கைம்பெண் நல்வாழ்வு பெற வேண்டும் என விழைகின்றார் கவிஞர். வேரில் பழுத்த பலாவாக, குளிர் வடிகின்ற வட்ட நிலாவாக, குளிர்தென்றல் சிறந்திடும் பூஞ்சோலையாக, நறுஞ்சீதளப் பூமாலையாக விளங்கும் கைம்பெண் மறுமணம் செசய்து கொள்ளலாம் என்பது பாரதிதாசன் கருத்து. ‘மனைவி இறந்தபின் வேறு ஒரு துணைவியை ஆண்மகன் தேடுவது போல், பெண்ணும் துணைவன் இறந்த பின் வேறு துணை தேடச் சொல்லிடுவோம் புவிமேல்’ என்று அஞ்சாமல் எடுத்துரைக்கின்றார் அவர். மேலும், ‘மாலையிட்ட மணவாளன் இறந்து-விட்டால், மங்கை நல்லாள் என்ன செய்வாள்? அவளை ஆலையிட்ட கரும்பாக்கிச் சாகச் செய்தல் என்ன நியாயம்?’ என்று கேட்கும் கவிஞர் கைம்மைக் கொடுமையினின்றும் பெண்கள் விடுபடுவதற்கு வழி சொல்கிறார்; பயம் விடுத்து, பகுத்தறிவின் துணை கொண்டு, தனக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையைப் பிடித்துத் துயர் கடக்குமாறு பெண்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

“கடும்பிணி யாளன்நான் இறந்தபின் – மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே! பழி என்றன் மீதே!
அடஞ்செய்யும் வைதிகம் பொருள்படுத்தாதே!
ஆசைக்குரியவனை நாடு – மகிழ்வோடு – தார்சூடு – நலம் தேடு!”


பெண் முன்னேற்றச் சிந்தனைகள்

‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்றும், ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம்’ என்றும், ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என்றும் பாடினார் பாரதியார். அவரது கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாரதிதாசன் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதைத் தம் பாடல்களில் ஆங்காங்கே வலியுறுத்துகின்றார்.

‘ஆண் உயர்வு, பெண் உயர்வு என்பதும்
        நீணிலத்து எங்கணும் இல்லை;
வாணிகம் செய்யலாம் பெண்கள் – நல்
         வானூர்தி ஓட்டலாம் பெண்கள்”


‘ஆண் உயர்வு, பெண் தாழ்வு’ என்று தான் யாரும் பொதுவாகக் கூறுவார்கள். பாரதிதாசனுக்கோ சொல்லளவிலும் அப்படிக் கூற – பெண்மையைத் தாழ்த்திப் பாட – மனமில்லை. எனவே, ‘ஆண் உயர்வு என்பதும், பெண் உயர்வு என்பதும் நீணிலத்து எங்கணும் இல்லை’ என்று அவர் பாடியிருக்கிறார். ‘நல்வானூர்தி ஓட்டலாம் பெண்கள்’ என்னும் அவரது வாக்கு அண்மையில் பலித்திருப்பது அவரது தொலைநோக்கிற்கு ஒரு சான்று. மேலும், அவர் ‘நாணமும் அச்சமும் வேண்டும் – எனில், ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்’ என்று பாடுவது, ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்’ என்று பாரதி பாடியதை நினைவூட்டுகின்றது.

‘அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் தமிழ்நாட்டின் கண்கள்’ என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே அவர் படைத்துக் காட்டும் புதுமைப் பெண்கள் வீரத்தில் சிறந்தவர்களாக – கல்வியறிவு நிறைந்தவர்களாக – குடும்பத்தைப் பேணிப் பாதுகாக்கும் அன்பு மிகுந்தவர்-களாக – தம் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களாக – விளங்குகிறார்கள். ‘சஞ்சீவி பர்வதத்தின் சார’லிலே வரும் வஞ்சி, ‘புரட்சிக் கவி’யிலே வரும் அமுதவல்லி, ‘வீரத் தா’யில் வரும் விஜயராணி போன்ற பெண்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் காவியத்திலே வரும் குப்பன் கோழை; அச்சம் நிறைந்தவன்; ஆனால் வஞ்சியோ,

“பெண்ணுக்குப் பேச்சுரிமை மேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே”


என்று கூறும் உள்ள உறுதி நிறைந்தவளாக – பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுப்பவளாக – பகுத்தறிவு மிக்கவளாக – விளங்குகிறாள்.

‘ஆடை அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதும், அஞ்சுவதும் நாணுவதும், ஆமையைப் போல வாழுவதும், கொஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம், மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஓர் பகுதி’ என நினைக்கும் ஆண் இனத்திற்கு ஒரு பாடம் கற்பிப்பது போல் அமைகின்றாள் ‘வீரத் தாய்’ விஜயராணி. மன்னனுக்கு எதிராகச் சதி செய்யும் சேனாதிபதியை எதிர்த்து, ஒரு கிழவன் போல் வேடமிட்டுத் தன் மகனுக்குப் போர்க்கலையை மறைமுகமாகக் கற்பித்து, உரிய நேரத்தில் சேனாதிபதியின் சதியை வெளிப்படுத்தி, நாட்டு உரிமைக்காகப் போராடும் வகையில் தன் மகனை உருவாக்கும் வீரம் நிறைந்தவளாக விளங்குகிறாள் அவள்.

“அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும் படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெல்லாம்
போகும் நாள், இன்பப் புதிய நாள் என்றுரைப்பேன்”


என்று விஜயராணியை மனமாரப் பாராட்டுவதன் மூலம், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார் பாரதிதாசன்.

பெண்கள் எந்நேரமும் ஏதாவதொரு வேலையைச் செய்தவாறு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பது பாரதிதாசன் கருத்து. வேலையில்லாத நேரத்திலும் வீட்டில் உள்ளோர் யாவரும் ஆலிலையைத் தைத்து, அதைக் கடையில் விற்று வாழலாம்; வாழ வேண்டும். அப்படி வாழ முயலாது மூலையிலேயே குந்தி இருக்கும் பெண்ணை ‘மந்தி’ என்று கடுமையாகச் சாடுகிறார் கவிஞர். இங்ஙனம் வேலை பார்க்காது சோம்பித் திரியும் பெண்ணைச் சாடும் கவிஞர், வீட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபடும் பெண்ணைப் பாராட்டவும் தவறவில்லை. ‘வேலை செய்யும் பெண்கள் வீட்டின் இரு கண்கள்’ என்பது வேலை பார்க்கும் பெண்களுக்கு அவர் சூட்டும் புகழாரம்.

இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட இலேசு வழி

‘பெண்களும் ஆண்கள் தாமும் பெருந்தமிழ் நாடு தன்னில் தண்கடல் நிகர்த்த அன்பால் சமானத்தர் ஆனார் என்ற பண் வந்து காதிற் பாயப் பருகுநாள் எந்த நாளோ?’ என்று ஏங்கிய பாரதிதாசன், இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட ஓர் எளிய வழியை எடுத்துரைக்கிறார்.

“இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு: பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்...
மகளிரெலாம் கல்வியறிவு ஒழுக்கம் உளராயின்
மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா;
மகளிரெலாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை;
தொல்லையிலா அவ்வுலகம் யான் வாழும் இல்லம்;
பகையில்லை; அங்கு இன்மை இல்லை; பிணி இல்லை;
பழியில்லை; என் துணைவி அரசாண்ட தாலே”


என்று கல்வியறிவும் ஒழுக்கமும் பெற்ற மகளிரின் பெருமையைப் பறைசாற்றுவதோடு, ‘அறிவு மனையாளால் அமைதியுலகு உண்டாகும்’ என்று உலக அமைதிக்கும் நன்மனைவியின் துணை தேவை என்பதை வலியுறுத்திச் செல்கின்றார். இராமனின் நல்லாட்சிக்கு அவனது வாழ்க்கைத் துணைவி சீதையின் நலமும், அவளது நற்குண நற்செய்கைகளும் ஓர் அடிப்படைக் காரணம் என்றார் கம்பர். கம்பரின் சிந்தனையைக் காலத்திற்குத் தக நன்கு வளர்த்துப் பாவேந்தர் பாரதிதாசன், ‘மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆளும் நாள் வர வேண்டும்’ எனக் கனவு காண்கிறார். இது வளர்ச்சி பெற்ற ஒரு முற்போக்குச் சிந்தனை என்பது தெளிவு.

மலை விளக்கு ஆகுதல் வேண்டும்!

“காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்”

என்று மனைவியின் அருமையை உணர்த்துகிறார் கவியரசர் பாரதியார். பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த பாரதிதாசனும்,

“இடும்பை தீர்ப்பவள் என்மனை, அவள்என்
குடும்ப விளக்கு”


என்று பாடுகிறார். அத்துடன் நில்லாது, மேலும் அவர் ‘பெண்ணின் பெருமையை இவ்வுலகம் அறிந்து போற்ற வேண்டும். பெண்கள் கல்வியினால் ஏற்றம் பெற வேண்டும். குடத்தில் இட்ட குத்து விளக்காக, குடும்ப விளக்காக இதுவரை இருந்து வந்த பெண்கள், இனி மலைவிளக்கு ஆகுதல் வேண்டும்’ என்னும் தம் விருப்பத்தினையும் வெளிப்படுத்துகிறார்.

“நிலையினிலே உயரவேண்டும் பெண்ணுலகு
மலை விளக்கு ஆகுதல் வேண்டும்! நீ
மலை விளக்கு ஆகுதல் வேண்டும்!”

முன்னைய அற நூல்கள் பெண்களை ‘மனைவிளக்’காகக் கண்டு போற்றின. அந்நூல்களை அடியொற்றி பாவேந்தர் பாரதிதாசனும் பெண்களைக் ‘குடும்ப விளக்கு’ என்றார்; அதற்கு மேலும் ஒரு படி சென்று, ‘இதுவரை மனை- விளக்காய் – குடும்ப விளக்காய் – குடத்து விளக்காய் – இருந்து வந்த பெண்ணுலகு இனி மலை விளக்காய் ஆக வேண்டும்’ என்று விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறும் நாள் – கனவு நனவாகும் நாள் – பெண்ணுலகின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நன்னாள் ஆகும்.


முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்