புறநானூற்றுக் குறுங்கலிப் பாடல்கள்
உணர்த்தும்
வாழ்க்கை பெரும் பாடம்
முனைவர் இரா.மோகன்
புறநானூற்றில்
இடம்பெற்றுள்ள அரிய துறைகளுள் ஒன்று குறுங்கலி. 'ஒருவனால் துறக்கப்பட்ட
அவன் மனைவியை அவனோடு சேர்க்கும் பொருட்டு, 'நீ அவள்பால் அருள் செய்தல்
வேண்டும்' என்று வேண்டுதல்' (இர.பிரபாகரன், புறநானூறு: மூலமும் எளிய
உரையும், ப.471)
என்பது இத் துறைக்கான விளக்கம். புறநானூற்றில் இத் துறையைச்
சார்ந்தனவாக ஐந்து பாடல்கள் (143-147)
காணப்படுகின்றன. கபிலர் (143),
பரணர் (144, 145),
அரிசில்கிழார் (146),
பெருங்குன்றூர்கிழார் (147)
என்னும் சங்கச் சான்றோர்கள் நால்வர் இப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து,
பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்விப்பட்ட இச் சான்றோர் பெருமக்கள்,
அவனுக்குத் தக்க அறிவுரை கூறித் திருத்தும் நோக்கில் இப் பாடல்களை
யாத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புறநானூற்றுக் குறுங்கலிப் பாடல்களைப் பொருள் உணர்ந்து பயிலும் எவரது
உள்ளத்திலும் இரு தெறிப்பான சிந்தனைகள் எழுவது இயல்பு. அவையாவன:
1.நல்லூர் நத்தத்தனார்
சிறுபாணாற்றுப்படையில் கடையெழு வள்ளல்களைப் பற்றிப் பாடும்போது, பேகனின்
பெயரையே முதலாவதாகச் சுட்டுகின்றார்;
'வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்...' (84-87)
எனப் பேகனுக்குப் புகழாரம் சூட்டுகின்றார். மலைப்பக்கத்தில் திரிந்த ஒரு
மயில் ஆடி அகவுவதை, மயில் குளிரால் நடுங்கிக் கூவுவதாகக் கருதி, அம்
மயிலின் குளிரைப் போக்கத் தன் போர்வையைத் தந்தவன் பேகன். இத்தகைய இரக்க
குணமும் கொடை உள்ளமும் பெற்றிருந்த பேகன், தன் வாழ்க்கைத் துணைவியும்
பெண்ணின் நல்லாளுமான கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு தொடர்பு
கொண்டு வாழ்ந்ததை எண்ணும் போது நம் நெஞ்சில் ஆழ்ந்த வருத்தமும்
வியப்பும் வேதனையுமே மேலிடுகின்றன.
'அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு'
(503)
என்னும் திருக்குறள் உணர்த்தும் அனுபவப் பொருளே நினைவுக்கு வருகின்றது.
சிறந்தவற்றைக் கற்றுக் 'குற்றமற்றவர்' எனப் பெயர் எடுத்தவர்கள் இடத்தும்
ஆராய்ந்து பார்த்தால் ஓரிரு குற்றமேனும் இல்லாமல் இருப்பது என்பது
அரிதினும் அரிது போலும்!
2.பேகனின் பரத்தைமை இழுக்கத்தினைக்
கேள்விப்பட்டு அவனைக் காணச் சென்றவர்கள் சங்கச் சான்றோர்கள் நால்வர்.
அவர்களுள் ஒருவரேனும், 'வள்ளலைப் பாடிப் பரிசில் பெற்றுவிட்டோம்; இனி,
கவலை இல்லாமல் வளமாக வாழ்ந்து விடலாம்' என்ற எண்ணத்தில் வாளா
இருந்துவிடவில்லை; பேகனைத் திருத்தி நல்வழிப்படுத்தும் எண்ணத்திலேயே –
அவனது இல்வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே – நான்கு புலவர்
பெருமக்களும் பாடல்கள் பாடியுள்ளனர். இன்னமும் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டும் என்றால், 'தேரேறி இன்றே புறப்பட்டு விரைந்து சென்று உன்னைப்
பிரிந்து துயருறும் உன் துணைவி கண்ணகியின் கண்ணீரைத் துடைப்பது தான்
யாம் வேண்டும் பரிசில்' என்று அவர்கள் ஒருமித்த குரலில் பேகனிடம்
வேண்டியுள்ளனர். இது சங்கச் சான்றோர்களின் பேருள்ளத்தினையும்
பெரும்பண்பினையுமே புலப்படுத்துகின்றது. இவ் வகையில் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்க பரணரின் சீரிய புறநானூற்றுப் பாடல் ஒன்று வருமாறு:
'மடத்தகை மாமயில் பனி;க்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக,
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி
'அறம்செய்து ஈமோ அருள்வெய் யோய்'என
இஃது யாம் இரந்த பரிசில்அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே!' (145)
'மென்மையான இயல்பும் நீல நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில்
நடுங்குகின்றது என்று எண்ணி இரங்கி அம் மயிலுக்குப் போர்வை அளித்தவனே!
நல்ல புகழையும் மதம் கொண்ட யானைகளையும் செருக்குடைய தாவும்
குதிரைகளையும் உடைய பேகனே! நான் பசியினால் வருந்தி உன்னிடத்து வரவில்லை;
எனக்குச் சுற்றத்தினரால் வரும் சுமையும் இல்லை. களாப் பழம் போன்ற கரிய
தண்டினை உடைய சிறிய யாழினை, இசை நயம் தெரிந்தோர் தலையசைத்துப்
பாராட்டிக் கேட்குமாறு, 'அறத்தைச் செய்வாயாக் அருளை விரும்புவனே' என்று
பாடி, உன்னிடம் யாம் வேண்டும் பரிசில் இதுவே: 'இன்று இரவே நீ, மணிகள்
ஒலிக்கும் உயர்ந்த தேரில் ஏறிச் சென்று, கவலையுடன் வாழ்பவளின் (உன்
மனைவி கண்ணகியின்) பெருந்துயரைக் களைவாயாக!'' என்பது இப் பாடலின்
தெளிவுரை.
'மயிலுக்குப் போர்வை வழங்கியதைக் குறித்தது, 'அத்தகைய அருளாளனாகிய நீ
மயில் போலும் துணையை வருந்த விடலாமா? கூடாது' என்ற குறிப்பினது' (புறநானூறு:
மக்கள் பதிப்பு, ப.260)
என இப்பாடலின் தொடக்க வரிகளில் நுண்ணிய நயத்தினைக் காண்பர் மூதறிஞர் இரா.
இளங்குமரன்.
கணவரைப் பிரிந்து தனித்து வாழும் கண்ணகியை 'இன்னாது உறைவி' எனப் பரணர்
இப்பாடலில் சுட்டியதிலும் ஆழ்ந்த பொருள் உண்டு. இப் பாடலில் 'அறம்'
என்பது இல்லற வாழ்வினைக் குறிப்பது. கணவரோடு சேர்ந்து வாழாத பெண்களால்
'அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்ப் பேணல், விருந்து எதிர்
கோடல்' ஆகிய அறச் செயல்களை ஆற்ற இயலாது ஆகலான், 'இன்னாது உறைவி
அரும்படர்' எனச் சுட்டியுள்ளார் பரணர்.
இங்ஙனம் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள குறுங்கலிப் பாடல்கள் ஐந்தும்
உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் அரியது; பெரியது; நனி சிறந்தது. 'ஒரு
மனிதனின் உயர்வு என்பது அவனது ஒழுங்கான, முறையான இல்வாழக்கையைப்
பொறுத்தே அமைவது' என்பதே அப் பாடம் ஆகும்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
|