முனைவர் இர.பிரபாகரனின் புறநானூற்று உரை வளம்

முனைவர் இரா.மோகன்
 

'மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறும் நூல் திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறும் நூல் புறநானூறு... நவில்தொறும் நவில்தொறும் புறநானூறு என்னை மகிழ்ச்சியின் கடலில் ஆழ்த்துகிறது. அதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு காணொளி போல் - ஒரு குறும்படம் போல் - சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. புறநானூறு, திருக்குறள் போன்ற ஒப்புயர்வற்ற நூல்களைப் படிக்கும் பொழுது நான் தமிழனாகப் பிறந்ததற்காகவும், தமிழ் கற்றதற்காகவும் பெருமைப்-படுகிறேன்' (முன்னுரை, புறநானூறு: மூலமும் எளிய உரையும், ப.34) எனப் பெருமிதம் பொங்க மொழியும் முனைவர் இர.பிரபாகரன், 'அயலகத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிக்கும் புதுயுகத்தைத் தொடக்கி இருப்பவர்களில்' குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாநிலத்தில் வாழ்ந்து வரும் அவர், கணிதம், கணினி, மேலாண்மை ஆகிய மூன்று துறைகளில் முதுகலை, முனைவர் ஆகிய உயர்பட்டங்கள் பெற்று முத்திரை பதித்தவர்; தனியார் நிறுவனங்களிலும் அமெரிக்க நாட்டு அரசு நிறுவனங்களிலும் பல்லாண்டுக் காலம் தொழில் நுட்ப வல்லுநர், இயக்குநர், துணைத்தலைவர், தலைவர் என்னும் உயர் பொறுப்புக்களில் வீற்றிருந்து பணியாற்றிய சிறப்பிற்கு உரியவர்.

முனைவர் இர.பிரபாகரன் தாம் பயின்ற கல்வித் துறைகளைச் சார்ந்த அலுவலகப் பணிகளைச் செவ்வனே ஆற்றுவதோடு நின்று விடவில்லை; இன்னும் ஒரு படி மேலாக, புலம் பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள் மற்றும் புறநானூறு முதலான பழந்தமிழ் நூல்களைப் பரப்ப வேண்டும் என்னும் அவா உள்ளத்தில் அரும்பிட, அத்திசையில் அவர் அடியெடுத்து வைக்க முற்பட்டது அன்னைத் தமிழுக்கு வாய்த்த ஒரு நற்பேறு ஆகும். 'தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்' என்ற அமைப்பினை உருவாக்கி மாதம் இரு முறை வகுப்புகள் நடத்தி, அமெரிக்காவில் பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி, உலகளாவிய நிலையில் மாநாடுகள் கூட்டித் தமிழர்களை ஒன்றிணைத்து, புறநானூற்றின் பெருமையைப் பறைசாற்றியதில் முனைவர் இர.பிரபாகரனின் பங்களிப்பு முதன்மையானது. புறநானூற்றுக்கு அவர் ஆற்றிய பணிகளில் எல்லாம் தலையாயது, மணிமகுடம் போன்றது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையும் முழுமையும் உடைய இரு பகுதிகளால் அமைந்த உரை நூல் ஒன்றினை வெளியிட்டிருப்பது ஆகும். 'புதுமைத் தென்றல்' இதழ் (மார்ச் 2012) சென்னையில் நடைபெற்ற முனைவர் இர.பிரபாகரனின் புறநானூறு எளிய உரையின் வெளியீட்டு விழா பற்றிய தகவலையும், இவ்வுரைநூலைப் பற்றிய பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, பேராசிரியர் ப.மருதநாயகம் ஆகியோரது பதிவுகளையும் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

புறநானூறு: மூலமும் எளிய உரையும்

'புறநானூற்றை எளிமையாகவும், ஒவ்வொரு பாடலைப் பற்றிய கருத்து-களையும், பின்னணியையும் விளக்கமாகவும் முழுமையாகவும் கூறுவது தான் இந்நூலின் நோக்கம்' (புறநானூறு: மூலமும் எளிய உரையும், முன்னுரை, ப
.34) எனத் தம் உரை நூலின் நோக்கத்தினை முனைவர் இர.பிரபாகரனே முன்னுரையில் தெளிவு-படுத்தியுள்ளார். அவரது உரை இரு பகுதிகளாக (பகுதி 1: பாடல்கள் 1 முதல் 200 வiர் பகுதி 2: பாடல்கள் 201 முதல் 400 வரை) வெளிவந்துள்ளது. சென்னை காவ்யா பதிப்பகத்தார் இவ்வுரை நூலின் இரு பகுதிகளையும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகிய முறையில் வெளியிட்டுப் பெருமை தேடிக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் இருந்து இப் பதிப்பினைக் காண நேர்ந்தால், உரையாசிரியரையும் பதிப்பகத்தாரையும் ஒரு சேர ஆரத் தழுவி அகம் மிக மகிழ்ந்திருப்பார்; 'பதிப்பு வேந்தர்' உ.வே.சா. இருந்து இவ்வுரையினைப் பயில நேர்ந்தால், உரை கண்ட முனைவர் இர.பிரபாகரனுக்குச் சாற்றுகவியே பாடி இருப்பார்.

உரையின் கூறுகள்

இவ்வுரை நூல் கீழ்க்காணும் பத்துக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகின்றது:
1. பாடியவர். 2. பாடப்பட்டோன், 3. பாடலின் பின்னணி, 4. திணை, 5. துறை, 6. பாடல், 7. அருஞ்சொற்பொருள், 8. கொண்டுகூட்டு, 9. உரை, 10. சிறப்புக் குறிப்பு
ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலுக்கும் அதன் உட்கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் சிறுசிறு அழகிய தலைப்பினைத் தந்திருப்பதில் உரையாசிரியரின் கைவண்ணமும் மொழி ஆளுமையும் மிளிரக் காண்கிறோம்.

பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூற்றின் திணைகளும் துறைகளும் (அகர வரிசையில்), துணைநூல்கள் என இவ்வுரை நூலின் முடிவில் சேர்க்கப் பெற்றிருக்கும் பின்னிணைப்புகளும் துணைநூற்பட்டியலும் ஆய்வாளர்-களுக்குப் பெரிதும் பயன் தருவன ஆகும்.

முத்திரைப் பாடல் ஒன்றின் உரை விளக்கம்

'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!'
(187)

என்பது பொருண்மொழிக் காஞ்சித் துறையில் அமைந்த ஒளவையாரின் புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடல்.

'நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது என்ற கருத்தை இப் பாடலில் ஒளவையார் குறிப்பிடுகிறார்' என இப் பாடலின் பின்னணியைச் சுருக்கமாகச் சுட்டும் உரையாசிரியர், அடுத்து இப் பாடலில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினைத் தருகிறார்.

'நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும் அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!' என்பது இப் பாடலுக்கு உரையாசிரியர் வரைந்துள்ள எளிய விளக்கம் ஆகும்.

இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில், 'நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப் பகுதிகளைக் குறிக்கும்... பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப் பகுதிகளுமே பயனளிப்பனவாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், 'ஆடவர்' என்பதை 'மக்கள்' என்றும், 'நல்லவர்' என்பதைக் 'கடமை உணர்வோடு உழைப்பவர்' என்றும் பொதுவான முறையில் பொருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது' (புறநானூறு: மூலமும் எளிய உரையும், பக்.389-390) என முனைவர் இர.பிரபாகரன் குறிப்பிட்டிருக்கும் கருத்து ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைப் புலப்படுத்துவதாகும்.

ஆழ்ந்து, அகன்று, நுண்ணிய திருக்குறள் புலமை

'இவ்வுரையில் பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சம் ஒவ்வொரு பாடலுக்கும் தேவைக்கேற்ப அரிய தகவல்களைப் பெரும்பாடுபட்டுத் திரட்டி வாசகர்கட்கு அளித்திருக்கிறார். ஆங்காங்கு பொருந்தும் வகையில் திருக்குறளில் இருந்து அவர் மேற்கோள் காட்டியிருப்பது திருக்குறளில் அவருக்குள்ள நிபுணத்துவத்தை அறிவிப்பதாகும்' (வாழ்த்துரை: 'தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுயுகம்', ப.11) என்பது மூதறிஞர் வா.செ.குழந்தைசாமி உரையாசிரியர் முனைவர் இர.பிரபாகரனுக்குச் சூட்டியுள்ள புகழாரம் ஆகும்.

உரையாசிரியர் முனைவர் இர.பிரபாகரனின் ஆழ்ந்து, அகன்று, நுண்ணிய திருக்குறள் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு:

கடலுள்ள மாய்ந்த இளம்பெருவழுதியின் 'உண்டால் அம்ம இவ்வுலகம்!' (புறநானூறு, 182) எனத் தொடங்கும் புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரை-யாசிரியர் வரைந்துள்ள சிறப்புக் குறிப்பு வருமாறு:

'திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப் பாடலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்பல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்க-முடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக் கருத்துக்களை இப் பாடலில் காணலாம்' (புறநானூறு: மூலமும் எளிய உரையும், ப
.383).

இங்ஙனம் பொதுப்படையாகக் கூறுவதோடு நின்றுவிடாமல், 'கீழே கொடுக்கப்-பட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துக்களுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்-பட்டிருக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க' எனக் குறிப்பிட்டு, அந்த நான்கு குறட்பாக்களையும்
(82, 428, 996, 212) அவற்றின் பொருள்-களையும் தந்திருப்பது உரையாசிரியரின் ஆழங்காற்பட்ட திருக்குறள் புலமையைக் காட்டுவதாகும்.

சிறப்புக் குறிப்புகள் வெளிப்படுத்தும் ஆய்வு நுட்பங்கள்

முனைவர் இர.பிரபாகரன் தம் உரை விளக்கத்தின் நிறைவுக் கூறாகப் புறநானூற்றுப் பாடல்களுக்குத் தந்திருக்கும் சிறப்புக் குறிப்புகள், அவர் எந்த அளவிற்குப் புறநானூற்றுப் பாடல்களை எழுத்தெண்ணிப் பயின்றிருக்கிறார் என்பதைப் பறைசாற்றுகின்றன. இவ் வகையில் ஆய்வாளரும் ஆர்வலரும் கருத்திலும் கவனத்திலும் கொள்ளத்தக்க வகையில் அவரது சிறப்புக் குறிப்புகள் வெளிப்படுத்தும் ஆய்வு நுட்பங்கள் சில வருமாறு:

1. 'காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது' (புறநானூறு 66: பகுதி 1, ப.181).
2. 'புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்த பொழுது பாடப்பட்ட பாடல்' (புறநானூறு, 367: பகுதி 2, ப.322).
3. 'குன்றிமணி போல் சுழலும் கண்களையுடையவன் என்பது சிறப்பான உவமை. விளக்கிலிட்ட குன்றிமணி போல் கண்கள் சுழல்வது மட்டுமல்லாமல், சினத்தால் கண்கள் குன்றிமணியைப் போல் சிவந்திருப்பதையும் அவ்வுவமை குறிப்-பிடுகிறது என்று ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார்' (புறநானூறு, 300: பகுதி 2,.203), தமக்கு முன்னைய உரையாசிரியரின் கருத்தினை உரிய இடத்தில் தக்க முறையில் பதிவு செய்வது என்பது உரையாசிரியர் என்ற முறையில் முனைவர் இர.பிரபாகரனிடம் காணப்படும் நற்பண்பு ஆகும்.
4. 'இப்பாடல், பாடல் 237-க்கு முன்னதாக இயற்றப்பட்டிருக்க வேண்டும். புறநானூற்றுப் பாடல்கள் கால வரிசைப்படித் தொகுக்கப்படவில்லை என்பதற்குப் பாடல்கள் 237, 238 ஆகியவை சான்றாக உள்ளன' (புறநானூறு, 238: பகுதி 2, ப.108). 'புறநானூற்றுப் பாடல்களின் வரிசை முறை ஆராயப்பட வேண்டிய ஒன்று' என்னும் உரையாசிரியரின் கருத்து நுண்ணாய்வுக்கு உரியதாகும்.
5. 'புறநானூற்றில் கூறப்படும் அறவுரைகள் எக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும், எச்சமயத்தார்க்கும் ஏற்றவை என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் ப.மருதநாயகம் 'புதுப்பார்வைகளில் புறநானூறு' என்ற நூலில் கூறுகிறார்' (புறநானூறு, 204: பகுதி 2, ப.44). புறநானூறு பற்றி அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு நூலைப் பற்றிய தகவலையும் முனைவர் இர.பிரபாகரன் தம் விரல் நுனியில் வைத்துள்ளார் என்பதற்கு இக் குறிப்பு தக்க சான்றாகும்.

'புறநானூறு தமிழனின் வரலாற்றையும் வாழ்வியலையும் காணொளி போல் காட்டிப் படிப்போரைச் சிந்திக்க வைக்கும் சிறப்பான நூல். அந்த நூலைத் தமிழர்கள் படிக்க வேண்டும்; படித்துப் பயன்பெற வேண்டும் என்பது தான் என் நோக்கம்' (முன்னுரை, புறநானூறு: மூலமும் எளிய உரையும், பகுதி
2, ப.29) எனப் புறநானூற்று உரை நூலின் இரண்டாம் பகுதிக்கு எழுதிய முன்னுரையில் முனைவர் இர.பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். அவரது நோக்கத்தினை இப் புறநானூற்றுப் பதிப்பு செவ்வனே நிறைவேற்றியுள்ளது எனலாம். நிறைவாக, மூதறிஞர் வா.செ.குழந்தைசாமியின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், 'அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் தமிழ் இலக்கியப் பங்களிப்புக்கு இதை (இவ்வுரைநூலினை) ஒரு தொடர்;ச்சியாகவே கொள்ளலாம்' (புதுகைத் தென்றல்: மார்ச் 2012, ப.5).



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021