உறுப்பால் பெயர் பெற்ற புலவரின்
உயரிய அகநானூற்றுப் பாடல்
முனைவர் இரா.மோகன்
பேராசிரியர்
எஸ்.வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு உறுப்பால் பெயர்
பெற்றவர்களாக 32
புலவர்களைப் பட்டியல் இட்டுள்ளது (இரண்டாம்
தொகுதி, ப.1115).
'நரைமுடி நெட்டையார்' என்பது அப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலவர்
ஒருவரின் பெயர் ஆகும். 'நிறைமுடி நெட்டையார்' என்றும் ஒரு பாடத்தில்
அப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
அகநானூறு 339-ஆம்
பாடலைப் பாடியவர் நரைமுடி நெட்டையார் என்னும் புலவர். ''நரைமுடி'
என்னும் சொற்றொடரைத் நெட்டையார் தம் பாடலொன்றில் பயன்படுத்தியமையால்,
அவர் இப்பெயர் பெற்றார் எனக் கருத வேண்டியுள்ளது' (சங்க காலச் சிறப்புப்
பெயர்கள், ப.101)
என்பார் பேராசிரியர் மொ.அ.துரை அரங்கசாமி.
அகநானூறு 339-ஆம்
பாடல் பாலைத் திணையில் அமைந்தது. 'போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது' என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு. பொருள் ஈட்ட எண்ணிப்
பிரிந்த ஒரு தலைவன், இடைவழியில் தலைவியின் உயர்ந்த பண்பு நிலன்களை
நினைந்து தன் நெஞ்சிற்குச் சொல்கிறான்:
'விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப் பெற்ற, மிக்க வேகம் கொண்ட தேர்.
அதன் வலிய ஆரக் கால்கள் பொருந்திய சக்கரங்கள் நிலத்தில் கிழித்துச்
செல்லும் சுவடுகளில், பாம்பு விரைந்து செல்வது போல் நீர் வேகமாக ஓடிக்
கொண்டு இருக்கும். குவிந்து பிறகு விரிக்கப்படும் ஒன்றோடு ஒன்று தொடர்பு
இல்லாத விரல்களைப் போன்று பயற்றுச் செடியில் காய்கள் முதிர்ந்து
விளங்கும். இவ்வாறாகப் பனிப்பருவம் தோன்றி நிலைத்தது.
ஒரு புறம், முயன்று பொருள் தேட வேண்டும் என்ற எண்ணம் காரணமாகத் தளர்ச்சி
இல்லாத உள்ளத்து எழுந்த ஆண்மை முன்னே இழுக்கின்றது; மறுபுறம், தலைவிபால்
கொண்ட காமம் பின்னே நின்று போக விடாமல் தடுக்கின்றது. அவற்றால்
செல்லுதல், தவிர்தல் என்ற இரண்டில் ஒன்றில் படாமையின் இரண்டு பட்ட
நெஞ்சினை உடைய நாம், இருபுறமும் கணுக்களில் தீப்பற்றிக் கொள்ள, இரண்டு
பக்கமும் வேகும் கொள்ளியின் இடையே அகப்பட்டுக் கொண்டு, எப் பக்கமும்
போக முடியாமல் தடுமாறித் தவிக்கும் எறும்பினைப் போன்று வருந்தி
இருக்கின்றோம்.
இந்நிலையில் உடம்போடு உயிர் சேர்ந்து இருப்பது போன்ற நட்பினையும், அதன்
காரணமாக அவ்வுயிர் இன்புற்று வாழ்வது போன்ற காதலையும் உடையவள் தலைவி.
இன்று அவள் அவ்வுயிர் சாதலைப் போன்ற துன்பத்தைத் தரும் பிரிவினைத்
தாங்குவதற்கு அரியளாகி வருந்தி இருப்பாளோ? அவள் மிகவும் இரங்கத் தக்கவளே!'
தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்த அப் பாடல் வருமாறு:
'வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழிஆழ் மருங்கில்,
பாம்புஎன முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப,
அற்சிரம் நின்றன்றால் பொழுதே; முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவுஇல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய,
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி,
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்,
நோம்கொல்? அளியல் தானே - யாக்கைக்கு
உயிர்இயைந் தன்ன நட்பின், அவ்உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவுஅரி யோளே!'
''யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பு' என்றது, ஒருவரையொருவர்
இன்றியமையாத நட்பு என்றபடி. 'சாதலின் இன்னாத தில்லை' என்பவாகலின் 'சாதல்
அன்ன பிரிவு' என்றது சாதல் போலும் இன்னாமையுடைய பிரிவு என்பதாயிற்று.
எனவே, அவ்வுயிர் 'வாழ்தல் அன்ன காதல்' என்பதற்கு, அவ்வுயிர் இன்புற்று
வாழ்தல் போலும் இன்பத்தை நல்கும் காதல் எனப் பொருள் கொள்க' (ந.மு.வேங்கடசாமி
நாட்டார் ரூ ரா.வேங்கடாசலம் பிள்ளை, அகநானூறு: களிற்றியானை நிரை, ப.19)
என்பது உரையாசிரியர் தரும் நுண்ணிய விளக்கம் ஆகும்.
'மணமக்களின் வாழ்க்கைப் பிணிப்புக்கு இப் பாட்டில் ஒரு நல்ல உவமம்
வருகின்றது. தலைவன் தலைவியரது நட்பு உயிருருவியது; வெறும்
மனவெழுச்சி-யானதன்று, நினைத்தாற் கூடுவதும், நினைத்தாற் பிரிவதும்
போன்றதன்று. பிரிவு என்பது, அவர்களுக்குள் இறந்து போவது ஒன்றே தான்,
அப்படியே, அவர்கள் உடலோடு வாழுங் காலம் முழுமையுங் கூடுதலேயாம். முயற்சி
காரணமாக அவர்கள் ஏதேனும் சில காலம் பிரிந்திருக்க நேர்ந்தால், அந்தப்
பிரிவும் உடலிலிருந்து உயிர் நீங்குவது போல அவர்களுக்குத் தோன்றும்;
மீண்டும் சேர்ந்திருக்கும் போது, உயிர் உடம்பில் வந்து வாழ்வது போலத்
தோன்றும். அவர்கள் நட்பு, உடம்பில் உயிர் பொருந்தியிருப்பது போன்ற நட்பு'
(சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, பக்.149-150)
என இப் பாடலில் சிறந்து விளங்கும் உவமையின் நலத்தைப் போற்றுவார்
மூதறிஞர் இளவழகனார்.
'உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு போன்றது காதல். உயிர் உடம்பில்
வாழ்தல் போன்றது காதல். உயிர் உடம்பை விட்டுப் பிரியும் சாதல் போன்றது
பிரிவு' என்னும் நரைமுடி நெட்டையாரின் இந்த அகநானூற்றுப் பாடல்
கருத்தையே இருபதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான பாரதியார் தம் 'குயில்
பாட்டு' என்னும் காப்பியத்தில் வேறு சொற்களில் இங்ஙனம்
குறிப்பிட்டுள்ளார்:
'காதல், காதல், காதல்
காதல் போயின், காதல் போயின்
சாதல், சாதல், சாதல்' (பாரதியார் கவிதைகள், ப.286)
சங்க இலக்கியத்திற்கு 'உவமைக் களஞ்சியம்' எனப் புகழாரம் சூட்டும்
பேராசிரியர் மு.வரதராசனார், 'பிற்காலத்து நூல்களில் வரும் உவமைகள்
பலவும் சங்கப் பாட்டுகளுக்குக் கடன்பட்டவை எனலாம். சங்க நூல்களில் அந்த
உவமைகள் இயல்பாக அமைந்து காணப்படுகின்றன. அந்தப் பழங்காலப் புலவர்களால்
அமைத்துத் தரப்பட்ட உவமைகளைப் பிற்காலத்தார் அவ்வாறே பின்பற்றி
வழங்கியுள்ளனர்' (தமிழ் இலக்கிய வரலாறு, ப.63) என எடுத்துரைப்பார். இக்
கருத்திற்கும் பிறிதோர் உவமை ஆட்சியால் கட்டியம் கூறி நிற்கிறது நரைமுடி
நெட்டையாரின் இந்த அகநானூற்றுப் பாடல்.
'இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி,
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்'
என இப் பாடலில் இடம்பெற்றுள்ள அரிய உவமையை, மாணிக்கவாசகரும் தமது
திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பப் பாடல் ஒன்றில் பொன்னே போல் போற்றிக்
கையாண்டுள்ளார்.
'இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு
ஒத்துநினைப் பிரிந்த
விரிதலை யேனை...' (9)
பாவலர் மணி ஆ.பழநியும் தம் 'காரல் மார்க்சு காப்பிய'த்தில்,
'ஒருபுறம் காதல், மறுபுறம் கல்வி,
இடையிலே தத்துவ உலகம்;
இருதலைக் கொள்ளி உள்எறும் பாகி
இயங்கினன் ஆதலின்...' (50)
என இவ்வுவமையை எடுத்தாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் உறுப்பால் பெயர் பெற்ற நரைமுடி நெட்டையாரின் அகநானூற்றுப் பாடல்
உவமை நயத்தாலும் கருத்து வளத்தாலும் நனிசிறந்து மிளிரக் காண்கிறோம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021 |