அலைகடலை நோக்கிக் கேட்கும்
அம்மூவனாரின் குறுந்தொகைத் தலைவி
முனைவர் இரா.மோகன்
சங்கச்
சான்றோர் அம்மூவனார் 127
அகப் பாடல்களின் ஆசிரியர்; அகத்திணைப் பாடல் எண்ணிக்கையில் இரண்டாமவராக
விளங்குபவர். 'புறந்தொழா மாந்தர்' என்பது போல, அவர் புறப்பாடல் எதுவும்
பாடவில்லை. அவரது பாடல்களில் வரலாற்றுக் குறிப்பு மிகக் குறைவாகவே இடம்
பெற்றிருக்கும். களவிலும் கற்பிலும் பல்வேறு துறைகள் பற்றியும்,
அகத்திணை மாந்தர்கள் பலரைப் பற்றியும் பாடல்கள் இயற்றிய சிறப்புக்கு
உரியவர் அம்மூவனார். ஐந்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற
சங்க அகத் தொகை நூல்கள் நான்கிலும் அவரது பாடல்கள் இடம்பெற்றிருப்பது
பிறிதொரு சிறப்பு.
அம்மூவனார் நெய்தல் அறிஞர்; நெய்தல் திணையில் மிகவும் பயின்றவர். அதன்
வளங்களைச் சிறப்பாகப் பாடுவதில் மிகுந்த ஆற்றல் கைவரப் பெற்றவர்.
நெய்தல் திணைக்கு உரியது இரங்கற் பொருள். நல்ல குறுந்தொகையில் தலைவி
கூற்றாக வரும் பாடல் ஒன்று இவ்வகையில் நோக்கத்தக்கது. 'தலைவி தன்னுள்
கையாறு (செயலற்று வருந்துதல்) எய்திடு கிளவி' என்பது அப் பாடலின் துறைக்
குறிப்பு. தலைவனது பிரிவால் வருந்தும் தலைவி ஒருத்தி காம மிகுதியால்
கடலை நோக்கிஇ 'நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே, யாரால் வருத்தம் உற்றாய்?'
என இரங்கிக் கேட்கிறாள். அவளது கூற்றினைத் தன்னத்தே கொண்ட குறுந்தொகைப்
பாடல் வருமாறு:
'யார்அணங் குற்றனை கடலே? பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீன்ஆர் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரைஅலை
நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே.'
(163)
'கடலே! பூழி நாட்டாரது சிறிய தலையை உடைய
வெள்ளாட்டின் கூட்டம் எங்கும் பரவினாற் போல, மீனை உண்ணும் கொக்குகள்
பரவி நிற்கும், கடற்கரைச் சோலைகளை உடைய பெரிய நீர்த்துறைக்கண், தாழையின்
வெள்ளை நிறப் பூவைக் கடல் அலைகள் வந்து மோதி அலைக்கும், இருள் செறிந்த
நள்ளிரவிலும் உன் குரல் கேட்கின்றது. என்னைப் போல நீயும் யாரால்
வருத்தம் அடைந்தாய்? சொல்வாயாக!' என்பது இப் பாடலின் தெளிவுரை.
தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறுவது இது.
நள்ளென் கங்குலிலும் துயிலாமல் அரற்றும் நிலையை உடைய அவள் கடலையும்
தன்னைப் போன்றது எனக் கருதி, 'யான் ஒரு தலைவனால் அணங்குற்றது போல நீயும்
ஒரு தலைவனால் அணங்குற்றனை போலும்! அத் தலைவன் யார்?' என்று வினவுகிறாள்.
'நள்ளென் கங்குலில் நின் குரல் கேட்கும் என்றமையால் அதனைக் கேட்பாளாகிய
தலைவியும் அந்நள்ளிரவில் துஞ்சாமை பெறப்படும்' (குறுந்தொகை மூலமும்
உரையும், ப.312)
என இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் குறிப்பிடுவார் 'பதிப்பு
வேந்தர்' உ.வே.சா.
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்குக் கடலும் தனக்கு உரிய தலைவனைப்
பிரிந்து துன்புறுவதாகவே தோன்றுகின்றது! 'நள்ளிரவிலும் கூட உன் குரல்
கேட்கின்றதே. என்னைப் போல் உன்னையும் பிரிந்து சென்றவர் எவரேனும் உண்டோ?
யாரால் நீ இத்தகைய துன்பத்தினை அடைந்தாய்?' என்று கடலை நோக்கி
வினவுகின்றாள் தலைவி. 'இவ்வினாவினை எழுப்பும் பாடலில் கடலுக்கு இரங்கும்
தலைவியைக் காண்கின்றோமா, அன்றித் தனிமையில் ஏங்கும் தலைவிக்கு இரங்கும்
புலவரைக் காண்கின்றோமா, அன்றிப் பிரிவெனும் கொடுமைக்கு இரையாகித்
தவிக்கும் ஒரு மனித உள்ளத்துக்கு உலகெங்கணும் பரந்துள்ள இயற்கை
பரிந்துருகும் அருளினைக் காண்கின்றோமா? இவை யாவும் கலந்து உருக்கத்தைப்
பெருக்கும் நிலையினையே இயற்கை தரவல்லது ஆவதை உணரலாம். சொல்லோவியமும் ஒலி
நயமும் கலந்து விளைக்கும் விந்தை இது' (பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்க,
பக்.70-71)
என இப்பாடலில் பொதிந்துள்ள சிறப்பினைக் குறித்து விதந்து மொழிகின்றார்
பேராசிரியர் மு.வரதராசனார்.
அம்மூவனார் இக் குறுந்தொகைப் பாடலில் படைத்துள்ள தலைவியைப் போலவே
நெய்தற் கலிப் பாடல் ஒன்றில் நல்லந்துவனார் படைக்கும் தலைவியும்
பாய்ந்து வரும் அலைகளால் ஓயாத ஓசை எழுப்பும் நீர் பரந்த குளிர் கடலை
நோக்கி, 'எம் போலக் காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ?' (129:
8-11) என வினவுகின்றாள்.
அம்மூவனாரின் இப் படைப்பாக்க மரபின் தாக்கம் – தொடர்ச்சி - ஐந்திணை
எழுபது, திருச்சிற்றம்பலக் கோவையார், கைலைபாதி காளத்திபாதி அந்தாதி,
பாண்டிக்கோவை, திவ்யப் பிரபந்தம் (திருவாய்மொழி) முதலான பிற்கால
இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கது.
முத்தாய்ப்பாக, அண்மையில் வெளிவந்துள்ள 'ஆனந்த விகடன்'
(27.04.2016)
இதழில் கவிஞர் அ.நிலாதரன் 'நெய்தல் நிலத் தலைவி' என்னும் தலைப்பில்
படைத்துள்ள ஓர் உணர்ச்சிமிகு குறுங்கவிதை இதோ:
'கடலுக்குப் போன தலைவன்
இன்னும் வீடு திரும்பவில்லை
கரைமீனாகத் தவிக்கும்
தலைவியின் இதயத்தில் வெடிக்கிறது
நிமிடத்துக்கு
72
துப்பாக்கிக் குண்டுகள்!'
காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; மனித வாழ்வின் புறக் கோலங்களும்
மாறலாம்; ஆயின், மனித குலத்தின் அக உணர்வுகள் என்பவை வற்றாத ஜீவ
நதியினைப் போல் என்றும் உயிர்ப்புடன் இயங்குபவை என்பது இதனால்
உறுதிப்படுகின்றது அன்றோ?
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021 |