திருவள்ளுவரும் மார்க்கஸ் அரேலியசும்
முனைவர்
நிர்மலா மோகன்
ஒப்பியல் நோக்கில் உலக மொழி
இலக்கியங்கள் (கருத்தரங்கக் கட்டுரை)
அறிமுகம்
தமிழுக்குக் ‘கதி’யாவார் இருவர்; க என்பது
கம்பரையும் தி என்பது திருவள்ளுவரையும் குறிக்கும் என்பர் அறிஞர்.
‘தெய்வ புலவர்’ என்று எல்லோராலும் சிறப்பிக்கப் பெறுபவர் திருவள்ளுவர்.
அதனால்தான் பாரதியார், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு’ என்றும், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்
போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும்
புகழ்ச்சியில்லை’ என்றும் பாடினார். ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள;
இதன்பால் இல்லாத எப் பொருளும் இல்லையால்’ என்று திருக்குறளைச்
சிறப்பிக்கின்றது திருவள்ளுவ மாலை. இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நிரலாகவும் முழுமையாகவும்
அறியப்படவில்லை என்பது தமிழர்தம் தவக்குறையே ஆகும்.
மார்க்கஸ் அரேலியஸ் உரோமப் பேரரசு
மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் – கி.பி.
121ஆம் ஆண்டு –
உரோமாபுரியில் பிறந்தார். இவரது தாயார் மன்னர் அண்ட்டோனினஸ் பையஸ்
என்பவரின் உடன்பிறந்தவர். பையசின் மகள் பாஸ்டினாவை மணம் புரிந்த
மார்க்கஸ் அரேலியஸ், அவருக்குப் பின் உரோமானிய அரசாட்சியைப் பெற்றார்.
இவ்வுலகில் 59
ஆண்டுகள் வாழ்ந்த மார்க்கஸ், சமநிலைத் தத்துவத்தைப் பின்பற்றிய சான்றோர்
ஆவார். அரச வாழ்வு, ஆடம்பரச் சூழல், இணையற்ற அதிகாரம் ஆகியவற்றிற்கு
இடையே ஒழுக்க சீலராய், உத்தம ஞானியாய் வாழ்ந்தவர் மார்க்கஸ். அவர்
மாற்றாரை மன்னித்த வீரர், சாந்த சீலர்; பிறர் குற்றம் காணாத பெருந்தகை,
அரசப் பதவிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர்.
அரேலியஸ் சிறந்த அரசர் மட்டுமல்லர்,
சிறந்த சிந்தனையாளரும் ஆவார். அவர் எழுதி வைத்துச் சென்ற சிந்தனைகளே
இன்றும் நிலைபெற்றுள்ளன. தனிப்பட்ட முறையில் அவ்வப்போது அவர் எழுதிய
குறிப்புக்களின் தொகுப்பு, பிற்காலத்தில் ‘சிந்தனைகள்’
(Meditations)
என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது. ‘ஆத்ம சிந்தனைகள்’ என்னும் பெயரில்
மூதறிஞர் ராஜாஜியும், ‘இதய உணர்ச்சி’ என்னும் பெயரில் பொ.திரிகூட
சுந்தரமும் இச்சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்-துள்ளனர்.
“இந்நூலிற்கு உலகத்தின் அற நூல்களில் சிலவற்றைத்தான் இணையாகக் கூற
முடியும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் திருவள்ளுவ தேவரின்
திருக்குறளின் யோக்கியதை இந்நூலுக்கு உளது என்று சொல்லாகும்”. இவ்வாறு
வ.வே.சு.அய்யர் ‘இதய உணர்ச்சி’ என்னும் நூலின் முகவுரையில் (ப.5)
குறிப்-பிட்டுள்ளார்.
“உலகில் எத்தனையோ பெரியோர்கள் நீதி
நெறியைப் பல வழிகளில் விளக்கியிருக்கின்றனர். ஆனால், வெகு சிலருடைய
மொழிகளே கேட்பாரைப் பிணித்து, கேட்டவையின் படி செய்யத் தூண்டக்
கூடியவைகளாயிருக்கின்றன. அத்தகைய குணமுடையன மார்க்க ஔரேலியனுடைய
மணிமொழிகள்” எனப் போற்றுவார் பொ.திருகூடசுந்தரம் (இதய உணர்ச்சி, ப.17).
“குணம்நாடிக்
குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்” (குறள்
504)
என்பார் வள்ளுவர். இக்குறளுக்கு
இலக்கணமாய்த் திகழ்ந்தார் அரேலியஸ். யார் யாரிடம் என்னென்ன குணங்கள்
சிறந்திருக்கின்றனவோ, அவற்றைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டு வாழ்ந்தவர்
அவர். “என் பாட்டனாரிடமிருந்து நன்னடக்கையும் புலனடக்கமும் பெற்றேன்.
என் தாயாரிடமிருந்து பக்தி, பரோபகார எண்ணம், தீச்செயல் புரியாமை,
எள்ளாமை இவைகளைக் கற்றேன். மற்றும் எளிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்கத்
தெரிந்து கொண்டேன். இதே மாதிரி ஓர் ஆசிரியரிட-மிருந்து தொண்டு செய்வதில்
தளராமையும் கற்றுக் கொண்டேன்” (சமுதாயச் சிற்பிகள், ப.65)
எனக் குறிப்பிட்டுள்ளார் அரேலியஸ்.
பிறருக்கு அறிவுரை சொல்லுவது
எல்லோர்க்கும் எளிது, நடைமுறையில் தாமே அதனைப் பின்பற்றுதல் அரிதினும்
அரிது.
“சொல்லுதல்
யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” (குறள்
664)
என்பார் வள்ளுவர். ஆனால், அரேலியஸ்
நினைத்ததைச் சொன்னவர், சொன்னதைச் செய்தவர், செய்ததைச் சொன்னவர்.
“எளிமை, அடக்கம் இவையிரண்டினாலும் உன்னை அலங்கரித்துக் கொள்… மனித
சமூகத்தை நேசி, கடவுளைப் பின்பற்று” (சமுதாயச் சிற்பிகள், ப.74)
என்று தம் சிந்தனைகளில் குறிப்பிட்டதைப் போலவே வாழ்ந்தவர் மார்க்கஸ்
அரேலியஸ். தம் பன்னிரண்டாம் வயதில் தத்துவ சாத்திரம் பயிலத் தொடங்கிய
மார்க்கஸ், தத்துவ ஞானிகளைப் போலவே உணவை உட்கொள்ளுவார்; முரட்டுத்
துணியையே உடுத்துவார்; வெறுந்தரையில் அமர்ந்தே படிப்பார்.
உயர்குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கின்ற காலத்தில் பயன்படுத்தி வந்த
ஆடம்பரக் கருவிகள் எவற்றையும் பயன்படுத்த மறுத்து விட்டாராம் மார்க்கஸ்.
தன் நலத்திற்கும், சமூக நலத்திற்கும்
முரண்படாதவாறு வாழ வேண்டும் என்பது மார்க்கஸ் அரேலியஸின் கொள்கை
“தேனீக்களைப் பார்; தங்கள் கூட்டத்திற்கு உதவாததை ஒரு தனி ஈயானது
தனக்கென்று நாடாது. என் இயற்கை தருமத்தின்படி நான் இருப்பதே எனக்குப்
பயன்தரும். என் இயற்கைத் தருமம் ஒப்புரவறிந்து செய்தலே. மார்க்கசுக்கு
ஊர் உரோமாபுரி. மனிதனாய்ப் பிறந்த எனது தேசம் உலகமே. உரோமாபுரிக்கும்
உலகத்திற்கும் எது நலனோ, அதுவே மார்க்கசுக்கு நலன்” (ஆத்ம சிந்தனை,
ப.56) என்பது மார்க்கஸின் சிந்தனை. இது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்றை நமக்கு நினைவூட்டுகின்றது.
மனத் தூய்மை
வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய
முதன்மையான அறம் எது? மனத்தூய்மைதான் சிறந்த அறம் என்கிறார் வள்ளுவர்.
“மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)
“திடீரென்று ஒருவர், ‘நீ என்ன நினைத்துக்
கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால் உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே,
‘இதை நினைத்தேன், இது என் மனத்திலுள்ள எண்ணம்’ என்று எளிதில் சொல்லக்
கூடியவாறு மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீ நினைக்கும்
எண்ணங்கள் எல்லாம் பிறருக்கும் நன்மை பயக்கத்தக்கவையாக, தீங்கற்றவையாக,
தன்னலம் கருதாதவையாக இருக்க வேண்டும்” (ப.18)
என்று மார்க்கஸ் அரேலியசும் வள்ளுவரைப் போல மனத் தூய்மையை
வலியுறுத்துகிறார். மேலும் அவர், “கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்
போல உன் மனத்தை வைத்துக் கொள்” (ப.25)
என்றும், “உள்ளத்தைப் பரிசுத்தமாக்கிப் பயன்படுத்துவதே பெருமை. அதில்
தான் சகல நற்பயனும் உண்டு. மற்றவை அனைத்தும் நிலையற்றவை, வெறும்
புகையாய்ப் போகும்” (ப.93)
என்றும் அறிவுறுத்துகிறார்.
மனத் தூய்மை மட்டுமன்று, மனத்தை
அலைக்கழிக்கும் ஆசை, கோபம் ஆகியவற்றினின்றும் விடுபட வேண்டும் என்கிறார்
மார்க்கஸ். “பொம்மலாட்டத்தில் பொம்மைகளை ஆட்டுவது போல், ஆசைகள் நம்மை
ஆட்டுகின்றன. மனமானது விவேகத்துக்குக் கட்டுப்படாமல் தன்னிஷ்டம் போல்
இழுத்துச் செல்கிறது…” (ப.51).
“உன்னிடம் இல்லாத ஒரு பொருளின் மேல் ஆசை கொள்ளாதே. உன்னிடம் இருக்கும்
சிறந்த பொருள்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவாய். அவை
இல்லாதிருந்தால் அவற்றை எவ்வளவு ஆவலுடன் தேடியிருப்பாய் என்பதை
நினைத்துப் பார். இவ்வாறு சிந்தித்து மனத்தைத் திருப்தி செய்து கொள்”
(ப.60) என்று ஆசையை அடக்க வழிகாட்டுகிறார் மார்க்கஸ். இதே போல்
வள்ளுவரும் ‘அவா அறுத்தல்’ என்று ஓர் அதிகாரமே வகுத்து, ‘அவா
இல்லார்க்கு இல்லாகும் துன்பம்’ (குறள் 368)
என்றும், ‘தூய்மை என்பது அவா இன்மை’ (குறள் 364)
என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மனத்தை அலைக்கழிக்கும் மற்றோர் இயல்பு
கோபம். கோபத்தினின்றும் விடுதலை பெறுவது எப்படி என்பதையும் ஓர் உவமை
மூலம் அழகாக விளக்கிச் செல்கின்றார் மார்க்கஸ். “மார்க்கஸ் என்ற
உன்னுடைய பெயரை எழுதுவது எப்படி என்று ஒருவன் கேட்டால், அவனுக்குச்
சாவதானமாய் ஒவ்வோர் எழுத்தாக எழுதிக் காட்டுவாய் அல்லவா? அதை எழுதத்
தெரியாதவர்கள் மேல் கோபித்துக் கொண்டு கூப்பாடு போடுவாயா? அவ்வாறே,
இவ்வுலகத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஏற்படும் கடமையும் பல அம்சங்கள் கூடி
உண்டாகும். இதை நினைவில் வைத்துக்கொண்டு மனம் தடுமாறாமல் கோபம்
காட்டுபவரிடம் கோபம் கொள்ளாமல் உன்னுடைய கருமத்தைப் பொறுமையுடன் செய்”
(பக்.50-51)
என்று மனத்தை அலைக்கழிக்கும் ஆசை, கோபம் ஆகியவற்றினின்று விடுதலை பெற
அறிவுறுத்துகிறார் மார்க்கஸ். வள்ளுவர் இதனின்றும் ஒரு படி மேலே சென்று
‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனத்தையே அழித்துவிடும்; அதனால்
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க’ என்று அறிவுறுத்துவார்.
“தன்னைத்தான்
காக்கின் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்” (குறள்
305)
“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்” (குறள்
306)
மனமாசு அகற்றி மனத் தூய்மையுடன் வாழ்வது
ஒன்றே மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வழி என்பதை இரண்டு அறிஞர்களும்
வலியுறுத்தியுள்ளனர் என்பதை இக்கருத்துக்கள் உணர்த்துகின்றன.
பகைவனுக்கு அருளல்
உலகெங்கிலும் உள்ள பேரறிஞர்களின்
சிந்தனைகள் பெரும்பாலும் ஒன்றுபட்டிருக்கும் என்பர். “பகைவனுக்கு
அருள்வாய் நன்னெஞ்சே, பகைவனுக்கு அருள்வாய்” என்று பாரதியார் பாடுவது
போல் மனிதன் தனக்குள் பகைமை உணர்வு நீங்கி வாழ வேண்டும். தனக்குத்
தீங்கிழைத்தவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், அதுவே சிறந்த அறம்
என்பதில் வள்ளுவரும் மார்க்கசும் ஒன்றுபடுகின்றனர்.
“இன்னா
செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?” (குறள்
987)
“இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள்
314)
என்று பொறுத்தல் நெறியை வலியுறுத்துகிறார்
வள்ளுவர்.
“தீங்கு இழைத்தவனிடமும் அன்பு செய்வது உன் தருமம். உன் உறவினன் தவறு
செய்வதற்குக் காரணம் அறியாமை. மனம் ஒவ்வாமல் தான் தவறு செய்கிறான்.
இருவரும் விரைவில் இறந்து போவீர்கள். தவிர, உனக்குத் தீங்கும்
நேரிடவில்லை. உன் ஆத்மாவுக்கு அவன் செயலினால் ஒரு கேடும் நேரிடவில்லை.
உன் குணம் மாறினாலன்றி ஒரு துன்பமும் நீ அடையவில்லை. இவைகளை நீ மனத்தில்
வைத்தாயானால் தீங்கு செய்தவனிடமும் அன்பு காட்டுதல் எளிதாகும்” (ப.59)
என்கிறார் அரேலியஸ். இப்படிச் சொன்னது போலவே தம் வாழ்வில் நடந்தும்
காட்டியிருக்கிறார் அவர்.
மார்க்கஸின் படைத் தளபதிகளுள் ஒருவன்
அவரின் எதிரிகளை அடக்கச் சென்றான். ஆனால், சில கலகக்காரர்களுடன்
சேர்ந்து மார்க்கசுக்கு எதிராகத் தன்னைச் சக்கரவர்த்தி என்று
முடிசூட்டிக் கொண்டான். அப்போது கலகக்காரர்களால் அவன் கொல்லப்பட்டான்.
தளபதி கொலையுண்டது தெரிந்ததும் அவன் எதிர்த்ததற்காக வருந்தாத மார்க்கஸ்,
அவன்மீது வெறுப்புக் கொள்ளாத மார்க்கஸ் அவன் கொலையுண்டதற்காக
வருந்தினாராம். “ஐயோ, அவன் என்னை எதிர்த்ததற்காக அவனை மன்னித்திருப்பேனே,
அப்படி மன்னிப்பதனால் உண்டாகிற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்காமல் இறந்து
போய்விட்டானே” என்று சொல்லிக் கலங்கினாராம். அவனோடு சேர்ந்து கலகம்
செய்தவர்கள் அனைவருக்கும் மன்னிப்பும் அளித்தாராம் (சமுதாயச் சிற்பிகள்,
ப.69).
இங்ஙனம் பகைவனுக்காகவும் இரங்குகின்ற நெஞ்சம் அவருக்கு இருந்தது.
வாழ்க்கையில் சமநிலை
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஏற்படுவது
இயற்கை. ‘மெய்த்திருப்பதம் மேவு’ என்ற போதும். ‘இத்திருத் துறந்து
காட்டிற்கு ஏகு’ என்ற போதும் இரண்டையும் சமநிலையுடன் ஏற்றுக்கொண்ட
இராமனைப் போல் வாழ்ந்தால் இடர்ப்பாடுகளுக்கு இடமே இல்லை என்பதை இரு
பேரறிஞர்களும் வலியுறுத்துகின்றனர்.
மார்க்கஸ் அரேலியசும், “இன்பம் – துன்பம்,
பிறப்பு – இறப்பு, புகழ்ச்சி – இகழ்ச்சி இவற்றைச் சமமாகக் கருதாதவன்
தெய்வ பக்தன் ஆக மாட்டான்” என்றும், “நேரும் சுகம் துக்கம் இரண்டையும்
வருத்தமின்றி ஒப்புக் கொள்வதே ஞானம்” (ப.15)
என்றும் எடுத்துரைக்கின்றார்.
“இன்பத்துள் இன்பம்
விழையான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்” (குறள்
629)
என ‘இடுக்கண் அழியாமை’ என்னும்
அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுவது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.
நிலையாமைத் தத்துவம்
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறப்பது
என்பது தவிர்க்க இயலாதது. பிறப்பு, இறப்பு என்பவை மனித வாழ்வில்
மாறிமாறி வருகின்றவை.
“உறங்குவது போலும்
சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள்
339)
“நாள்என ஒன்றுபோல்
காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்” (குறள்
334)
என்னும் குறட்பாக்களில் வள்ளுவர் இதனை
உணர்த்துகின்றார்.
வள்ளுவரைப் போலவே மார்க்கசும் வாழ்க்கை
நிலையாமை குறித்துப் பல இடங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கப் போவதைப் போல் வாழ்க்கையை நடத்த
வேண்டாம். மரணம் நிச்சயம். இன்றோ நாளையோ, அது எப்போதும் வரக்
காத்திருக்கிறது. கழிந்ததும் வருவதும் மனிதனுடைய காலமல்ல. தற்காலமே
மனிதனுக்கு உரித்தான காலம். அதை அவன் வீணாக்குகிறான். தன் வசமில்லாத
முதலிரண்டைப் பற்றி வருந்தியும் கவலைப்பட்டும் தன் வசமுள்ள காலத்தை
வீணாக்குகிறான்” (ப.29)
என்று நேற்று நடந்ததைப் பற்றியோ, நாளை நடக்கப் போவதைப் பற்றியோ
கவலைப்படாமல் இன்றைய வாழ்க்கையை வாழ்வதற்கு அறிவுறுத்துகிறார் அரேலியஸ்.
இறப்பு என்பது இயல்பான ஒன்று என்றும்
வலியுறுத்துகிறார் மார்க்கஸ். “இறப்பது உலகத்தின் இன்றியமையாத நிகழ்ச்சி.
அது கடவுள் நியதி; அதை வெறுக்காதே. பாலியப் பருவத்திலிருந்து வளர்ந்து
யௌவனம் அடைவது போலவே முடிவில் இறப்பது இயற்கையாக வரும். ஆகையால்,
அறிவுள்ளவன் மரணத்தை வெறுக்க மாட்டான்; அசட்டை செய்யவும் மாட்டான். அதன்
மெய்ப்பொருளை அறிந்து இயற்கைச் சக்திகளுள் ஒன்றாக அதை ஒப்புக்கொண்டு
அதனை எதிர்பார்த்திருப்பான். தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும்
நாளை எதிர்பார்ப்பது போலவே, உன் ஆத்மா அடைபட்டிருக்கும்
இவ்வுடலிலிருந்து வெளியேறுவதை எதிர்பார்ப்பாயாக” (ப.69)
என்று அறிவுரை கூறிய மார்க்கஸ் சொன்ன வண்ணமே நடந்தும் காட்டினார்.
கி.பி.180-ஆம்
ஆண்டு தம் ஐம்பத்தொன்பதாம் வயதில் பாசறையில் இறந்தார் மார்க்கஸ். அவர்
இறங்கும் சமயத்தில் அவரைச் சூழ்ந்து நின்ற மந்திரிகளும் சேனாதிபதிகளும்
அவர் பிரிவை எண்ணி அளவில்லாத துக்க மேலீட்டால் கண்களில் நீர் பெருக
நின்றனர். அதைக் கண்ணுற்ற மார்க்கஸ் “ஏன் அழுகிறீர்கள்? சேனையைப்
பற்றியே சிந்தியுங்கள். எனக்காக வருந்தாதீர்கள். நீங்கள் பின்னால்
வருவீர்கள், நான் முன்னால் போகிறேன். அவ்வளவுதானே, விடை தாருங்கள், போய்
வருகிறேன்” என்று கூறினாராம்.
முடிவுரை:
“மன்னா உலகத்து
மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே”
என்று புறநானூறு
(165) கூறுவது போல், நிலையில்லாத
இவ்வுலகத்தில் தம் சொல்லாலும் செயலாலும் நிலைத்த புகழை நிலைக்கச்
செய்தவர் அரேலியஸ் ஒருவருடன் கூடவே இருப்பவர்கள். அவரைப் புகழ்வது
என்பது இயல்பு. ஆனால், பகைவர்களும் ஒருவரைப் புகழ்வது என்பது அரிது.
உடன் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, பகைவர்களும் பாராட்டும் பண்பினராக –
முழுமையான மனிதராக – உலகத்தவரால் மதிக்கப்பட்டவர் அரேலியஸ்.
உரோமாபுரியில் மட்டுமின்றி இங்கிலாந்து போன்ற பிற நாடுகளிலும்
மார்க்கஸின் உருவச் சிலை வணங்கப்பட்டு வருகிறது என்பதே அவருக்குக்
கிடைத்த பெருமையாகும்.
மார்க்கஸ் அரேலியஸின் சிந்தனைகளையும்
விஞ்சிய வண்ணம் ஒரு சில இடங்களில் அமைந்துள்ளன திருவள்ளுவரின்
சிந்தனைகள். எனவேதான் ‘உலகப் பொதுமறை’ என்று போற்றப்படுகின்றது
திருக்குறள். நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதே
அதன் பெருமைக்குச் சான்று பகரும். உலக அறிஞர்களின் சிந்தனைகளுடன் ஒப்ப
வைத்து எண்ணத்தக்க முறையில் வள்ளுவரின் சிந்தனைகள் அமைந்து தமிழ்
மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தருகின்றன. இது உண்மை;
வெறும் புகழ்ச்சி இல்லை.
முனைவர்
நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்
|