சங்க இலக்கியத்தில் பெண் உடல்
மொழியும் ஆளுமையும்
பேரா.முனைவர்
பூ.மு.அன்புசிவா
மனித
உறவுகளின் ஒருங்கிணைவையும், பண்பு நலன்களின் பாங்கினையும், மன
உணர்வுகளின் நுண்மையையும், அறநெறிகளின் உயர் சிறப்பினையும் சங்க
இலக்கியப் புலவர்கள் அனுபவ மொழிகளாக 'பதிவு' செய்திருக்கின்றனர்.
சங்ககாலம் என்பது பண்டைத்தமிழர் பெருமை, மூவேந்தர்களின் எழுச்சி,
பொற்காலம் போன்ற புனைவுகளுடன் இன்று முன் வைக்கப்படுகின்றது. ஏறத்தாள
நானூறு ஆண்டுகளைச் சங்ககாலம் என்று வரையறுத்து, அப்பொழுது வெளியான
படைப்புகளைத் தொகுத்துச் சங்க இலக்கியம் என அடையாளப்படுத்துகின்றனர்.
இத்தகைய சங்க இலக்கியங்கள் வாயிலாக, மறக்குலப் பெண்டிராக, மூலப்படிவமாக
இருந்த பெண்மையின் உயர்ச்சி திசை மாறி, பெண்ணாக இருப்பதால் மட்டுமே
உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழ்மட்டநிலையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும்
பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம்
பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு
சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே
காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது,
அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான
பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று
இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை
சேமிக்கத் தொடங்கினர்.
'கலையுணக் கிழித்த முழவு மருள் பெரும்பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்க மிசை வாகும்.' (புறம்:236).
வேட்டையாடும் குறவர்கள் ஆண் குரங்கு கிழித்து உண்ட பெரிய பலாப்பழத்தை
சிலநாட்கள் வைத்து உண்டனர். உணவு சேகரிக்க கற்றுக்கொண்ட மனிதன் மண்ணைக்
கிளறி விதைக்கவும் கற்றுக்கொண்டான். இரும்பின் உபயோகம் இல்லை. நெருப்பை
கண்டு பிடித்திருந்தான். எனவே புதர்களை நெருப்பிட்டு அழித்தான்
வேலைப்பிரிவினை பெண்களை தினைப் புனம் காத்தல், களைபறித்தல், கிளி கடிதல்
போன்ற வேலைகளுக்கும், வேட்டை, கரிபுனம் மயக்கல்,தேனெடுத்தல் போன்ற வேலை
களை ஆண்களுக்கும் பணித்தது. ஆண்கள் வேட்டை நிமித்தம் வாழுமிடம் விட்டு
வெளியேறுவதும், பெண்கள் தினைப்புனத்தில் மையம் கொள்வதும் நடைமுறையானது.
இப் பொருளியல் நடத்தையே, தகாப்புணர்ச்சி கொண்டிருந்த இனக்குழுவை
தகுப்புணர்ச்சி கொண்ட குழுவாக மாற்றியது. ஒரு கணத்தின் ஆண்கள்
வேட்டைக்குச் செல்லும்போது, தினைப்புனம் காக்கும் வேற்று கணங்களின்
பெண்களுடன் புணர்ச்சி நடத்தினர். அகமண முறை தகர்ந்து புறமணமுறை
உருக்கொண்டது. 'வயமான அடி தேர் வான் போல்' அவளைத் தேடி இளைஞன் சந்தித்து
அவளுடன் புணர்ச்சி நடத்தியதாக கலித்தொகை கூறுகிறது. 'வள்ளித் திருமணம்'
நாடகம் இதையே குறிக்கிறது. தினைப்புனங்கள் காதல் களங்களாக மாற்றப்பட்டு,
காதல் சுவை அருவிபோல் கொட்டுமாறு சங்க இலக்கியத்தின் அகத்திணை
கட்டமைக்கப்பட்டுள்ளது. இரவுக்குறி, பகற்குறி அமைத்து, களவுப்புணர்ச்சி
நடந்ததை அகத்திணை இலக்கியங்கள் சுட்டும். இதுவரை அறிந்திராத
வேற்றுக்கணத்தின் ஆண்களுடன் புணர்ச்சி கொள்வதும், நீங்கிய பின் அவளது
தவிப்பும் இலக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
'யாரும் இல்லைத்தானே கள்வன்
தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால்
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
முருகும் உண்டுதான் மணந்தஞான்றே' (குறுந்தொகை
25).
தன்னோடு புணர்ச்சியில் ஈடுபட்டு விலகிச் சென்றவன் யாரென்றே தெரியாது.
திரும்ப வருவானோ மாட்டானோ எனத் தவிக்கிறது அந்தப் பேதை உள்ளம். அவனுடன்
புணர்ச்சிகொண்டதற்கான சாட்சி ஏதுமில்லை. தோழிக்கும் தெரியாது. திடீரென
அவள் மனதில் ஒரு மின்னல்வெட்டு. ஆம் ஒரு சாட்சி இருந்ததே, தினைப்பயிரின்
தண்டை ஒத்த கால்களையுடைய கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்ததே. மீண்டும்
அவள் முகம் சுருங்கியது. அது இவர்களைக் கவனிக்காமல் நீரில் வரும் ஆரல்
மீனைப் பார்த்தவாறு அல்லவா நின்று கொண்டிருந்தது? இப்படிப்பட்ட
தவிப்புகளும், ஏக்கங்களும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது. அக மணத்தை
விடுத்து, புறமண முறையில் புகுந்தபொழுது, ஆண் பெண் கூடல் என்பது காதல்
கொண்டு அல்லாமல் காமத்தை முன்னிறுத்தியே நிகழ்ந்துள்ளது. குழந்தைக்கு
தாயை மட்டுமே தெரிந்திருந்தது.
'மீன் உண் கொக்கின் துறவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோன் சிறுவன்' (புறம்:
277)
புறமண முறையிலும்கூட தாய்வழிச் சமூகமே நீடித்திருந்ததை
'பேரிற் பெண்டு' (புறம்:270)
'செம்முது பெண்டு' (புறம்:
276)
போன்ற பாடல்கள் காட்டுகின்றன. தாய்வழிச் சமூகத்தில் பெண் உயர்நிலையில்
இருந்ததும் தெரிகிறது. வேற்றுக்குழுக்களின் ஆண்கள் அல்லது
பெண்களுடன்தான் கூடவேண்டுமென புணர்ச்சியை ஒழுங்குபடுத்திய நிகழ்வுதான்
பண்பாடு என்ற தளத்தில் அவர்களை கால்பதிக்கச் செய்தது. பண்பாடு இங்குதான்
துவக்கம் பெறுகிறது. வேட்டை, உணவு சேகரிப்பு, கரிபுனம் மயக்கல், பன்றி
உழுத புழுதியில் தினை, வரகு விதைத்தல், தினைப்புனம் காத்தல் என்ற
பொருளியல் வளர்ச்சியின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானமாக பண்பாடு நிலை
கொள்கிறது. காதலை, வேட்கையை அடிப்படையாகக் கொண்ட புணர்ச்சிச் செயல்பாடு
மெதுவாக, காதலை அடிப்படையாகக் கொண்டதாக, களவாக மாற்றம் பெறுகிறது.
'யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும், நுந்தையும் எம்முறை கேளீர்
யானும், நீயும் எவ்வழியறிதும்
செம்புலப் பெயனீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' (குறுந்தொகை
40)
'உன் அன்னை யாரென யான் அறியேன். என் தாய் யாரென உனக்குத் தெரியாது. என்
தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும்
இதற்கு முன் அறிந்தவர்கள் அல்ல. ஆயினும் செம்மண் நிலத்தில் பெய்த மழை
நீரானது அம்மண்ணுடன் கலந்து அதன் நிறத்தை ஏற்றுக்கொண்டதுபோல் நம்
இருவரது நெஞ்சங் களும் அன்பால் தம்முள் ஒன்றுபட்டுக் கலந்தன' என்று
காதல் நெஞ்சங்கள் அன்பால் இணைந்தமை குறித்து புலவர் மரபு பாடியுள்ளது.
புணர்ச்சிப் பண்பாட்டின் நகர்வு உண்மைக் காதலைக் கட்டமைக்கிறது.
'முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும், ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ, ஓல்' எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சம் ஊர்க்கே' (குறு:28)
சங்க காலப்பெண் காமவேட்கையின் ஆற்றாமையை வெளிப் படுத்தத் தயங்கவில்லை.
காமம் அவளைப்படுத்தும் துன் பத்தை அறியாது ஊரார் தூங்குவதை பொறுக்க
இயலாமல் கோபம் கொள்வதைக் காண்கிறோம்.
'முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல்
மூதா தை வந்தாங்கு
விழுந்தே காமம்
பெருந்தோளோயே' -(குறு: 204)
என காமத்தை 'மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது
நாவால் மெல்லத் தடவிக் கொடுப்பது போன்று காமம் புதியது' என அக்காலச்
சமுதாயம் காமத்தை மிகவும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது. புணர்ச்சி அதனால்
கிடைக்கும் சுகம் இயற்கையானது. தவிர்க்க இயலாதது. எவ்விதத்திலும்
தீயதாக இருக்க முடி யாது. குழந்தைப் பேற்றுக்கு அது ஒன்றுதான் வழி.
'காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ'
(நற்றிணை:39)
'மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே'
(நற்-80)
காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே
கருதினார்கள். 'இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது' எனக் கபிலரும்
பாடுகிறார்.
'புணரின் புணராது பொருளே, பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே' (நற்:16)
.
'புணர்ச்சியில் திளைத்தால் பொருள் கிடைக்காது. பொருளுக்காகப் பிரிந்தால்
புணர்ச்சி இன்பம் கிட்டாது' என நினைக்கிறான். பொருளியல் வாழ் வில்
ஏற்படும் மாற்றம், புணர்ச்சிப் பண்பாட்டிலும் மாறு தலைக் கொண்டு வந்தது.
களவுப் புணர்ச்சி பெண்களை தீராத தவிப்பிலும், ஆண்களை தமது கடமையை ஆற்ற
விடாமலும் செய்வதை உணர்ந்த சமூகம், கற்பொழுக்கம் அல்லது திருமணம் என்ற
பண்பாட்டுத் தளத்திற்கு நகர்ந்து சென்றது. களவொழுக்கம், கற்பொழுக்கம்
என்ற இரண்டு தளங்களிலும் புணர்ச்சிப் பண்பாடு செயலாற்றத் தொடங்கி யது
தமிழ் சமூகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டது. அனைத்துப் பிரச்சினைகளின்
பிறப்பிடமும், அவற்றிற் கான தீர்வுகள் இருக்குமிடமும் ஒன்றுதான். களவுப்
புணர்ச்சிப் பண்பாட்டில் அன்றாடக் கடமைக்கு ஏற்படும் பாதிப்புகளும்,
இதனால் தலைவன், தலைவிக்கும் ஏற்படுகிற தவிப்புகளும் தீர்ந்துவிடுகிற
இடமாக கற்பொழுக்கம் என்ற பண்பாடு இருந்தது. சங்க காலத்தில் களவை
மேற்கொண்டு தவித்துக் கொண்டிருந்த அனைத்து தலைவிகளின்
களவுப்பண்பாடுகளும் கற்பொழுக்கப் பண்பாடாக மாறியதா? என்பது குறித்து
அறிய முடிய வில்லை. கற்பொழுக்கமானது குடும்பங்களைத் தோற்று
வித்திருந்தது என்பதை அறியமுடிகிறது.
'இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில்மானப்
பிறிது ஒன்று குறித்தது அவள் நெடும் புறநிலையே' (குறு:298).
அகுதை என்ற தன் மகனுக்கு அவன் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோலை பரிசு
வழங்கிய நிகழ்வு இப்பாடலில் தெரிகிறது. ஐயைதந்தை (அகம்:6) அகுதை தந்தை
(அகம்:96) என குழந்தை பெயர்கூறி அவன் தந்தை அழைக்கும் வழக்கம் அன்று
இருந்துள்ளது. இன்றும் நடைமுறையில் உள்ளது. இது குடும்பம் என்பது தோன்றி
விட்டமையைக் குறிக்கிறது. தந்தை வழிச் சமூகம் தோன்றி நிலைபெறத்
துவங்கியுள்ளது. எனினும் களவுப் புணர்ச்சி யில் ஈடுபட்டவர்களின்
திருமணம் சுலபமாக ஈடேற வில்லை என்றே தோன்றுகிறது. தந்தை, சகோதரன் இவர்
களின் எதிர்ப்பும், தலைவன் தலைவியின் திருமணத்திற்கு நற்றாய்,
செவிலித்தாய், பாங்கன், தோழி ஆகியோரின் உதவியும், 'மடலேறுதல்' (பெண்ணின்
தந்தை திருமணத் திற்கு மறுத்தால், தலைவன் ஊருக்குள் வந்து, சப்தமிட்டு
தங்கள் காதலை ஊர்மக்கள் அறிந்துகொள்ளச் செய்வது) என்ற நிகழ்வும், 'உடன்போக்கு'
என்ற சமூக மீறலும் (தலைவன் தலைவியைக் கூட்டிக்கொண்டு வேறிடம் சென்று
மணமுடித்தல்) நடக்கவே செய்தது. இப்பண்பாடு இன்றுவரை நீட்சியடைந்து
வந்துள்ளது.
தன்னூறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை என
தொல்காப்பியமும் வரையரை செய்கிறது. (தொல்- பொருள் . இனம்-116)
இவ்விரு பாடல்களும், சங்கத் தலைவிகளின் அடங்கிய தன்மையைப்
புலப்படுத்துகிறது. தொல்காப்பியமும் அதை இலக்கணப்படுத்தியுள்ளது.
'துயர் பொறுக்கல்லேன் தோழிநோய்க்கே'
(குறு:224)
'காமம் நெரிதர நாணம் கைநில்லாதே'
(குறு:149).
'முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல் ஆசு, ஓல் என கூவுவேன் கொல்' என நாம்
பார்த்த சங்கத் தலைவி அல்ல இவள். முற்றிலும் மாறுபட்ட தலைவியைக்
காணுகிறோம்.
'நோய் அலைக் கலங்கிய மதன் அழிபொழுதில்
காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணியதின் தாங்கி' (நற்:94)
'காமம் அளவுக்கு மீறிய நோயாகி, தனது மனவலிமையைக் குறைத்த போது தனது
புணர்ச்சி ஆசையை வாய்விட்டுச் சொல்வது ஆணுக்குப் பொருத்தமானது. ஆனால்
பெண்களுக்கு இயலாதது. தாங்கியாக வேண்டும்.'
குறிஞ்சி நிலம் தவிர்த்து, பிற நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில்
ஆண்களுக்கான பணியையும், பெண்களுக்கான பணியையும் சமூகம் தெளிவாக
வரையறுத்துவிட்டது. நிலத்தில் தினை, வரகு, பயிர்வகைகளைப் பயிரிடவும்,
பாலுக்கு உறை தெளிதல், தயிர் கடைதல், வெண்ணைய் எடுத்தல்,
நெய்யுருக்குதல் போன்ற பணி களையும், இவற்றின் பண்டமாற்றாக நெல்லும்
எருமைக்கன்றும் வாங்கி வருதல் ஆகியவை பெண்களின் பணியாக வரை
யறுக்கப்பட்டது. வெட்சிப்பூ சூடி வேற்றுப்புலத்தார் வரு வதைத் தடுக்க,
கரந்தைப்பூ அணிந்து போர் செய்யும் பணி ஆண்களுக்கானது. வெட்சி, கரந்தைப்
போர் நடத்திய வீரனை ஊரே திரண்டு ஒப்பனை செய்து, புதுக்கோலம் பூண்டு,
புத்துணவு சமைத்து, மதுப்பிழிந்து கொடுத்து வாழ்த்திய நிகழ்ச்சியை 'உண்டாட்டு'
எனச் சங்கப்புலவர் மரபு கூறுகிறது. தலைவன் போரில் வெற்றி பெற்று தான்
கொண்டு வந்த கால்நடையைக் கொடுத்து 'கள்ளுண்டான்' என்றும், சமூகம்
எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டதையும் புற நானூறு பதிவு செய்கிறது.
ஊர்மன்றத்தில் நடுநாயகமாக அமர்ந்து, ஊரை நிர்வகிக்கும் பொறுப்பைப்
பெற்றான். அவனது அழுக்குப் படிந்த ஆடையை வெளுத்துக் கொடுக் கும்
புலத்தியாக பெண் அடிமையாக்கப்பட்ட செய்தியை சமூக, பொருளதார, அரசியல்
தளங்களில் ஆண்களின் செயல்பாடானது அதிகமாக அதிகமாக அவனது ஆளுமை
உச்சத்திற்கு சென்றது. புணர்ச்சியின் அளவைக் குறைத்துக் கொண்டாலன்றி
அவனால் இயங்க முடியாது. பெண் ணுக்கு இவையேதும் இல்லாததால், தொடர்ந்து
காமப் புணர்ச்சிக்கு அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அவன்
தனக்குத்தானே குறைத்துக் கொள்வது மட்டுமல்ல, தலைவியும் குறைத்துக்
கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான எல்லைக்கோடும்
வகுக்கப்பட்டது.
'அமிழ்தத் தன்ன அம்தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும்படர் செய்யும் ஆயின்
உடன் உறைவு அரிதே காமம்
குறுகல் ஓம்புமின் அறிவுடையோரே'
(குறு:206).
'காமம் என்பது நும் போன்ற வரால் ஒருங்குகூடி வாழ்வதற்கு அரியதாகும்.
ஆதலின் அதனை நெருங்குவதிலிருந்து அறிவுடையீரே நும்மைக் காத்துக்கொள்ளும்'
என ஆண் தரப்பு அறிவுரை செய்கிறது.
'இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என்நெஞ்சே' (குறு:202).
இப்பாடல் மருத நிலத் தலைவியின் கூற்றாக பதிவாகியுள்ளது. 'களவு காலத்தில்
நமக்கு இனியனவற்றைச் செய்த நம் காதலுக்கு உரியவர், இக்கற்பு காலத்தில்
இன்னாத செயல்களைச் செய்தலால் என் நெஞ்சு மிகவும் வருந்துவதாயிற்று.'
ஆண்கள் காமத்தை நெருங்கக்கூடாது எனக் கூறியபொழுது, பெண்கள் அதனால்
வருந்துவதும் புரிபடுகிறது.
ஆண் பொருள் வேண்டியோ, அல்லது போரின் நிமித்தமோ பிரிந்துள்ள நிலையில்,
பிற ஆண்கள் இவளை நெருங்காது இருக்கும் பொருட்டு, தனது அழகைக் குறைத்துக்
கொண்டு வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் அவன் வரவுக்காக காத்திருப்பது
என்ற அளவில் அவளின் ஆளுமை வீழ்ந்து பட்டது என்பதை அறியமுடிகிறது.
'மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீ,
இல் போது கொண்டு பலகுரல் அழுத்திய
அந்நிலை புகுதலின், மெய் வருந்து றாஅ
அவிழ் பூ முடியினன் கனவ இய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே' (நற்:
42).
வினை முடிந்து மீள்கின்ற தலைவன், பாகனைப் பார்த்து தான் வருவதை
தலைவிக்கு முன்னே போய் தெரிவிக்க ஆணையிட, அவன் சென்று அறிவிக்கவே, 'அவள்
நீராடி தன்னைப் புனைந்து கொள்ளும் பொழுதில் நான் செல்லவும், அவள் என்னை
அணைத்து மகிந்த நிலை முன் நிகழ்ந்தது மறத்தற்கரிது' என்கிறான் தலைவன்.
எனவே தலைவன் வெளிச்செல்லும் காலங்களில், தன்னை அழகுபடுத்திக்கொள்ளாமல்
இருந்த நிலையை சங்கநூலில் காண்கிறோம். ஆணின் ஆளுமை மேலும் மேலும்
உயர்நிலையில் கட்டமைக்கப்பட்டதும், பெண்ணின் ஆளுமை கீழ்நிலைக்கு
தள்ளப்பட்டதுமான வரலாற்றை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
நிலவுடைமையின் வளர்ச்சிப்போக்கு பெண்ணை அவளின் ஆளுமையை அழித்து,
அடிமையாக்கிய வரலாறே, தமிழ்ப் பண்பாட்டின் அசைவியக்க வரலாறு ஆகும்.
அதுமட்டுமல்ல, சங்கப் பாடல்களைப் பாடியோருள் முக்கியமானவர்கள் பாணர்கள்.
வறுமைமிக்கவர்கள். 'யாழ் ஆகுளி பதலையோடு சுருக்கி' தமது வறுமையைப்
போக்க விறலியுடன் மன்னனைக் காணச் செல்வர் (புறம்:64)
என சங்கநூல் கூறுகிறது. இவர்கள்
வேந்தர் காலங்களில், தலைவனுக்கும் தலைவிக்குமிடையே மற்றும் தலைவனுக்கும்
பரத்தையருக்குமிடையே தொடர்பை பாதுகாக்கும் இழிதொழிலுக்கு ஆளாகினர்.
விறலியர் பரத்தையர்களாக மாறினர் (சிவத்தம்பி.
2003,பக்.116)
சங்க இலக்கிய சமூக நிறுவனத்தில், தமது ஆளுமையை அடக்கி அடிபணிந்த பெண்கள்
போற்றுதலுக்குள்ளானார்கள். சமூக நிறுவ னத்தை கேள்விக்குள்ளாக்கிய பெண்
ஆளுமை பரத்தையர் என்ற பட்டத்தைப் பெற்று சமூக நிறுவனத்தின் வெளியே
வைக்கப்பட்டனர்.
பேரா.முனைவர்
பூ.மு.அன்புசிவா
149,Aரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
|