வாசிப்பு - ஒரு கலை

எம்.ரிஷான் ஷெரீப்


'வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்' என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது 'வாசிக்கும் கலை' எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு
SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S - Survey ( தேடிப் பார்த்தல்)
Q - Question ( கேள்வி எழுப்புதல்)
R - Read (வாசித்தல்)
R - Retrive ( மீளவும் பார்த்தல்)
R - Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை
S - Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

'இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?'

'இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?'

போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, உங்கள் அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

சிந்திப்போம் !

 



mrishanshareef@gmail.com