கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள்: 30.08.2016

பேராசிரியர் இரா.மோகன்



'மக்களைச் சிரிக்க வைத்த மகான்': கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
(1908-1957):

'தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்' (தமிழ்ப் பெரியார்கள், ப.125). 1943-ஆம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா. ஆவார்.

'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.

'நாட்டுக்குச் சேவை செய்ய
நாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:
ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்ல
அழகான ஜதையோடு வந்தான் அய்யா!'


என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது. கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் சில சுவையான நிகழ்ச்சிகளை இங்கே காண்போம்:

  • உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ.மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; 'ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?' என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:

    'ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?'

    05.04.1956-இல் திரைக்கு வந்த 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:
     

  • 'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: 'நீ செத்தே!' திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.

    இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்:

    'என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?'

    'வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?'

  • 1956-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 'இந்தியன் டாக்கீ'யின் (இந்தியப் பேசும் படத்தின்) 25-ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.

    பலர் பேசினார்கள்; கலைவாணரும் பேசினார்.

    'லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!' என்று கலைவாணர் தம் பேச்சைத் தொடங்கினார்.
    'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்னும் மகிழ்ச்சியில் அவையோர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

    'அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்' என்று கூறிவிட்டு தொடர்ந்து தமிழில் தமது பேச்சைப் பேசி முடித்தார் கலைவாணர்.
     

  • ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் 'எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை' எனச் சொன்னார்.

    'அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?' என்றார் கல்கி.

    'என்னென்ன கலர்களில்?' - இது என்.எஸ்.கிருஷ்ணன்.

    'திறமை... பேனா மை... தனிமை... பொறுமை' எனக் கல்கி சொன்னதும் உடனடியாக,

    'நீங்கள் சொன்னது மிக அருமை...' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!
     

  • கலைவாணரின் நகைச்சுவை உணர்வு என்றுமே அவரை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருமுறை அவரும் மதுரமும் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றார்கள். நண்பர் அவரிடம், 'என்ன சாப்பிடுகிறீர்கள் காப்பியா, டீயா, ஓவல் டின்னா, ஹார்லிக்ஸா?' என்ற கேட்டார். 'என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கேள்விக்கு இடமேயில்லையே, ஏன்னா 'டீயே மதுரம்'' (அவரது துணைவியாரின் பெயர் டி.ஏ.மதுரம்) - இது என்.எஸ்.கே.யின் முத்தாய்ப்பான பதில்.
     

  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். 'வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்' என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, 'சோழராஜா என்ன கட்டினார்?' என்று கேட்க, மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் 'வேஷ்டி! வேஷ்டி!' என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
     

  • 'இட்லி - கிட்லி, தோசை - கீசை, ராமன் - கீமன், வரதன் - கிரதன் என்று ஒவ்வொரு பெயருக்கும் எதிர்ப் பெயர் கூறலாம். ஆனால் கிருஷ்ணன் என்ற பெயருக்கு மட்டும் எதிர்ப்பெயர் கூற முடியாது!' என்று ஒரு முறை தம் பெயருக்குக் கூட நகைச்சுவையான நயம் ஒன்றினைக் காட்டினார் கலைவாணர்.


சிறந்த திரைப்படத் துறை ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய தம் நூலின் முடிவில் எழுதியிருக்கும் முத்தாய்ப்பான வரி இது:

'1936 முதல்
1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்'.

நிறைவாக, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; 'மக்கள் கவிஞர் ப(h)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது
29; கவியரசர் பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; நகைச்சுவை இமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ தமது 49-ஆம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்: 'நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று (Humour Day)  அறிவிக்கலாமே?'



பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.