மரபில்
பூத்த புதுமலர் மீரா: (1938-2002)
பேராசிரியர்
இரா.மோகன்
கவிஞர் மீராவின் நினைவு நாள்:
01.09.2016
மீரா
(மீ.இராசேந்திரன்) - கவிதைச் சுவைஞர்கள் நெஞ்சில் இன்பத் தேனைப்
பாய்ச்சும் ஒரு திருப்பெயர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை
வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தினைத் தேடிக்கொண்ட ஆளுமைக்குச்
சொந்தக்காரர் இவர். மதுரையில் உள்ள 'தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரி'
உருவாக்கிய கவிதைப் பரம்பரையின் முன்வரிசையில் மீராவுக்கு ஓர்
இன்றியமையாத இடம் உண்டு. அவரது மரபுக் கவிதைகளின் தொகுதி 'இராசேந்திரன்
கவிதைகள்'
(1965). 'மூன்றும்
ஆறும்'
(1965)
என்பது மீரா பல்வேறு கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பு.
தமிழ்க் கவிதை உலகில் மீராவைப் பரவலாக அறியச் செய்த படைப்பு 'கனவுகள்
10
கற்பனைகள் - காகிதங்கள்'
(1971).
அங்கதக் கவிதை பாடுவதில் வல்லவர் மீரா என்பதற்குக் கட்டியம் கூறும்
தொகுப்பு 'ஊசிகள்' (1974). ஈழத்து மஹாகவியின் குறும்பாக்களை அடியொற்றி
மீரா படைத்துத் தந்திருக்கும் கவிதை நூல் 'குக்கூ'
(2002).கவிக்கோ
அப்துல் ரகுமானுக்கு முன்பாக 'ஜுனியர் விகடன்' இதழில் வாரந்தோறும்
குறுங்கட்டுரை எழுதும் மரபினைத் தொடங்கி வைத்த பெருமையும் மீராவுக்கு
உண்டு. முத்தாய்ப்பாக,
'வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படுத்திவிடு தாயே!' (மீரா கவிதைகள், ப.15)
என்றாற் போல் கவிஞர் மீராவின் எழுதுகோல் படைத்துத் தந்திருக்கும் வைர
வரிகள் பலவாகும். இனி, மீராவின் கவிதை உலகினை - ஆளுமைப் பண்பினை - சற்றே
அலசிப் பார்ப்போம்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த
வேளை. மூன்று, நான்கு நாட்கள் நடைபெற்ற அந்தப் பெரிய சித்திரைத்
திருவிழாவின் கள்ளழகர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருவதை ஒட்டித் தினமும்
கூட்டம் அலைமோதியது. பல்கலைக்கழகக் கருத்தரங்கைத் தவிர, பட்டிமன்றம்,
கவியரங்கம், நாட்டியம், நாடகம், தெருக்கூத்து, இசை நிகழ்ச்சிகள்
நடைபெற்ற இடங்களில் எல்லாம் ஏகப்பட்ட கூட்டம். அங்கங்கே கூடிய கூட்டம்
பொறுமையாய் அங்கங்கே நிலைகொள்ளவில்லை. அங்கே என்ன கூட்டம், இங்கே என்ன
அதிகக் கூட்டம் என்று ஒவ்வோர் இடமாகப் போய்க் கொண்டிருந்தது. கூட்டம்
தமிழுக்கு வந்ததாகத் தெரியவில்லை. வேடிக்கை பார்க்க, கூட்டத்தை வேடிக்கை
பார்க்க வந்தது மாதிரி இருந்தது. இது கவிஞர் மீராவின் மனத்தை உறுத்தியது.
அப்போது அவரது வாய் அவரை அறியாமல் ஒரு குக்கூ கவிதையை முணுமுணுத்தது.
'கூடல் நகரில்
கூட்டம்
கூட்டம் கூட்டம்
கூட்டம் கூட்டம் கூட்டம்
கூட்டம் பார்க்க!' (குக்கூ, ப.23)
'கூடல் நகர்', 'கூட்டம்' என்னும் இரு சொற்களைக் கொண்டே இங்கே ஒரு நயமான
சொல் விளையாட்டினைக் கவிஞர் தமக்கே உரிய தனித்தன்மையுடன் நடத்திக்
காட்டியுள்ளார்.
மீராவின் கவிதை மொழியில் துலக்கமாகவும் தூக்கலாகவும் தெரிவது அவரது
நகைச்சுவை உணர்வு ஆகும். இன்றைய சமூகத்தின் போக்கையோ மனிதனின் பண்பையோ
நகைச்சுவையோடு எள்ளுவது என்பது அவருக்குக் கை வந்த கலை; அவரது
முத்திரைப் பண்பும் கூட. இதனை அவரது மரபுக் கவிதை, கவியரங்கக் கவிதை,
வசன கவிதை, புதுக்கவிதை, குறுங்கவிதை ஆகிய அனைத்துக் கவிதை
வடிவங்களிலும் பரவலாகக் காணலாம். சான்றாக, மீராவின் நகைச்சுவை கலந்த
எள்ளல் திறத்திற்குக் கட்டியம் கூறும் 'குக்கூ' ஒன்று வருமாறு:
'இலக்கியக் கூட்டம்
பரவசமூட்டும் பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
அந்த மாது
காது மட்டும் கேட்காது.' (குக்கூ, ப.23)
காது கேட்காத அந்த மாது இலக்கியக் கூட்டம், பக்திக் கூட்டம் என எல்லாக்
கூட்டங்களுக்கும் தவறாமல் வருவது - வந்து முன்னால் அமர்ந்திருப்பது -
கூட்டங்கள் கேட்பதற்காக அல்ல் தான் அணிந்திருக்கும் வரை மூக்குத்தி,
கடுக்கன் ஆகியவற்றை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகத்தான். படிப்பவர்
முகத்தில் மெல்லிய நகையைப் படரவிடும் அழகிய 'குக்கூ' இது!
நல்ல நகைச்சுவை என்பது சொல்லி வருவதில்லை; திட்டமிட்டுப் பிறப்பதுமில்லை.
தானாக, இயல்பாகப் பீறிட்டு வருவது தான் நல்ல நகைச்சுவையின் அடையாளம்;
இலக்கணம். இதற்கு இலக்கியமாக விளங்கும் ஒரு 'குக்கூ' இதோ:
'வாத்தியார் மனைவி / செத்ததற்காக
விடுமுறை...
மகிழ்ச்சியில் குதித்த / மணிப்பயல் கேட்டான்:
'வருத்தமாயிருக்கு,
ஒரே ஒரு மனைவி தானா
அவருக்கு?'' (குக்கூ, ப.43)
கவிஞர் சிற்பி கூறுவது போல், 'நகைச்சுவை மீராவின் கவச குண்டலம்...
மீராவின் நகைச்சுவை வேப்பம்பூப் பச்சடி. இனிப்புப் பூசிய மருந்து' (அணிந்துரை,
மீராவின் 'கோடையும் வசந்தமும்', பக்.10-11).
நகைச்சுவையின் பரிமாணங்களுள் தலையாயது அங்கதம். தொல்காப்பியர்
செம்பொருள் அங்கதம், பழிகாப்பு அங்கதம் என அங்கதத்தின் இரு வகைகளைச்
சுட்டுவார். 'ஒருவனுடைய குறையையோ ஒரு சமூகத்தாரின் குறையையோ அன்னார்
நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தோன்றக்
கூறுதல் இன்புறத் தக்கதொன்றாகும்' (உரைநடைக் கோவை: இரண்டாம் பாகம்,
ப.75) என அங்கதத்திற்கு விளக்கம் தருவார் பண்டிதமணி மு.கதிரேசனார். 'தமிழ்
அங்கதக் கவிதைகளின் தொகுப்பு' என்னும் சிறப்புக் குறிப்புடன் 1974-ஆம்
ஆண்டில் வெளிவந்த மீராவின் கவிதைப் படைப்பு 'ஊசிகள்'. இதில் 'வேகம்'
என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள முதல் கவிதை வருமாறு:
'எங்கள் ஊர் எம்.எல்.ஏ. / ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை / கட்சி மாறினார்
மின்னல் வேகம் / என்ன வேகம்?
இன்னும் எழுபது / கட்சி இருந்தால்
இன்னும் வேகம் / காட்டி இருப்பார்...
என்ன தேசம் / இந்தத் தேசம்?' (ஊசிகள், ப.13)
நமது அரசியல்வாதிகள் வேகம் காட்டுவது நாட்டை முன்னேற்றுவதில் அல்ல்
வறுமையை ஓட ஓட விரட்டுவதில் அல்ல் தொகுதியை வளப்படுத்துவதில் அல்ல.
அவர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவுவதில்தான் வேகம் காட்டுவார்கள்;
அதுவும் ஏழு மாதத்தில் எட்டுத் தடவை மின்னல் வேகத்தில் கட்சி
மாறுவார்கள்; இன்னும் கூடுதலாகக் கட்சிகள் இருந்திருந்தால் அவர்கள்
இன்னும் வேகம் காட்டி இருப்பார்கள். 'என்ன தேசம் இந்தத் தேசம்?' என்னும்
அங்கதக் குறிப்புடன் கவிதை நிறைவடைவது சிறப்பு.
கூர்மையான சமூக விமர்சனப் பார்வை படைத்தவர் மீரா. 'வாழைப் பழத்தில் ஊசி
ஏற்றுவது போல' என்பார்களே, அதுபோல இன்றைய சமூக நடப்பினை – சம கால
மனிதனின் போக்கினை – நகைச்சுவையுடன் குத்திக் காட்டுவது அவரது
தனித்தன்மை. 'மீசை இருந்தது!' என்ற கவிதை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
இக்கவிதை மலேசிய இதழ் ஒன்றில் 1964-ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆலமரத்தின்
அடியில் ஒருவன் சிட்டுக்குருவியைச் சீட்டுக்குருவியாய் ஆக்கி ஏதோ அளந்து
கொண்டிருந்தானாம்; 'எதிர்காலத்தைப் பார்க்கலாம்' என்று கவிஞர் அவனிடம்
கேட்டு காசளித்தாராம். உடனே அவன் கூண்டைத் திறந்தானாம்; குருவியும்
வந்ததாம்; வந்த குருவி வழக்கப்படி ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துச்
சென்றதாம். அதனைப் பிரித்துப் படித்தாராம் கவிஞர். 'விரைவில் நல்ல
அம்சமும் செல்வமும் அமையப் பெற்ற கணவன் கிடைப்பான், கவலைப்படாதே' என்று
அச்சீட்டில் எழுதி இருந்ததாம்! சீட்டைக் கீழே போட்டுச் சிரித்தாராம்
கவிஞர். 'ஒருகால் மங்கையாய் இந்நேரம் மாறி இருக்கலாம்' என்று நிசமாய்
எண்ணிப் பயந்து, மீசையைத் தடவிப் பார்த்தாராம்! 'மீசை இருந்தது மிகப்
பெரியதாகவே!' என்னும் வரியுடன் முடிவடையும் அக் கவிதையில் இயல்பான
கேலியும், கூர்மையான குத்தலும் கைகுலுக்கி நிற்பதைக் காணலாம்.
கவிதையில் மட்டுமன்றி, மீராவின் உரைநடையிலும் நகைச்சுவை உணர்வு
ஆங்காங்கே களிநடம் புரிந்து நிற்பதைக் காணலாம். சின்ன விஷயங்களைக் கூட
அதி அற்புதமாகவும் நகைச்சுவை உணர்வோடும் எழுதுவதில் வல்லவர் ஐரிஸ்
எழுத்தாளர் ராபர்ட் லிண்ட். 'என் செல்ல எழுத்தாளர்' என்று அவரைத் தம்
கட்டுரை ஒன்றில் மீரா குறிப்பிட்டுள்ளார். லிண்டின் பாணியைப் பின்பற்றி
'பிழைகள் தரும் பேரின்பம்' என்னும் தலைப்பில் அவர் ஒரு சுiவாயன
கட்டுரையையும் எழுதியுள்ளார். அக் கட்டுரையில் நகைச்சுவை உணர்வு ததும்பி
நிற்கும் ஓர் இடம் இதோ:
'முன்பு மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஒரே இடத்தில் ஆசிரியர்களைக் கூட்டி
வைத்துத் தேர்வுத் தாள்களைத் திருத்தச் சொல்லும் வழக்கம் இருந்தது.
அப்போது ஆசிரியர்கள் தங்களுக்குத் தனித்தனியே கிடைத்த பேரின்பத்தை
மற்றவர்களோடு சமமாய்ப் பங்கிட்டுக் கொள்வார்கள். 'என் மாணவன் என்ன
அழகாய் எழுதுகிறான் பாருங்கள்... கேவலன் மாதவி வீட்டில் தன் அஸ்தியைக்
கரைத்தான்..' இப்படிச் சொன்னதும் அந்த மாணவரின் 'தனக்குவமையில்லாத
தாளைப்' பார்க்க ஒவ்வொருவராக ஓடி வருவார்கள். பார்த்து விட்டு
விதவிதமாகச் சிரிப்பார்கள். திடீரென்று ஒருவர் அந்த மாணவரின் 'திருவாசக'த்துக்கு
நயம் சொல்வார். 'பையன் உணர்ச்சியுள்ளவன் ஐயா: மனைவி இருக்கும் போது
இன்னொருத்தியைக் கோவலன் நாடிப் போனதை அவனால் சகிக்க முடியவில்லை.
கேவலமான காரியத்தைச் செய்ததால் 'கேவலன்' என்று அவன் பெயரை மாற்றி வைத்து
விட்டான் ஐயா. மன்னன் நெடுஞ்செழியன் கோவலன் தலையை வாங்கினான்; நம்
மாணவன் நெடுஞ்செழியன் தன் சக்திக்கேற்பக் கோவலனின் காலை
வாங்கியிருக்கிறான்' என்று பாராட்டுவார். மண்டபமே சிரிப்பில் மூழ்கும்'
(வா இந்தப் பக்கம், பக்.43-44).
கவிஞர் இக்பால் குறிப்பிடுவது போல், 'புதுத்தமிழின் இலக்கிய வரலாற்றில்
மீராவின் பாட்டுக்கு ஒரு தனியிடம் உள்ளது போல், மீராவின் வசனத்துக்கும்
ஒரு தனியிடம் உண்டு' (அணிந்துரை, மீராவின் 'வா இந்தப் பக்கம்', ப.5).
மீராவின் கட்டுரைகள் அவரைத் தீராத விளையாட்டுக் குறும்பு கொண்ட ஒரு
நகைச்சுவையாளராக அடையாளம் காட்டி நிற்கின்றன.
'என்னைப் பொறுத்த வரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விடச் சமுதாய
நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்' என்பது கவிஞர்
மீரா தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம். இவ் வகையில் அவருக்கு வலிமை
வாய்ந்த ஒரு கருவியாகப் பயன்பட்டது நகைச்சுவையே ஆகும். பேராசிரியர் பாலா
சுட்டிக்காட்டுவது போல், 'மீரா கவிதையின் அடிப்படை வெளியீட்டு மொழி
எள்ளலும் கேலியும், அவை கிளத்தும் நகை நயந்த சமூக விமர்சனமும் தாம்!' (அணிந்துரை,
மீராவின் 'குக்கூ', ப.9).
பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
|