உலக அறிஞர் வரிசையில் உயரிய இடத்திற்கு உரிய சங்கச் சான்றோர்!

பேராசிரியர் இரா.மோகன்

'பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால்
கிழம் போம்இ கீழ்மையும் போம்'

என்பது மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் அமுத மொழி. பழம் போலும் சுவையும் பயனும் விளைக்கக் கூடிய சங்க இலக்கியத்தை ஒருவர் தம் வாழ்வில் மனம் கலந்து – பொருள் உணர்ந்து – கற்றால் போதும், இழிந்த பண்புகள் அவரை விட்டு அறவே அகன்று சென்று விடும்; அவரது உள்ளத்தில் இளமை உணர்வு இமைப் பொழுதும் நீங்காமல் என்றென்றும் கொலு இருக்கும். சீரிளமைத் திறம் மிகக்கவராக – மகிழ்வும் மன நிறைவும் கொண்டவராக – அவர் வாழ்வில் சிறந்து விளங்குவார்.

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் என அமைந்த சங்க இலக்கியத்தில் ஆன்றோரின் அனுபவ மொழிகளும் உயரிய விழுமியங்களும் சிறந்த அறக் கருத்துக்களும் சீரிய சிந்தனைகளும் செழுமையான தகவுகளும் வழிகாட்டும் பொன்மொழிகளும் வாழ்வியல் மேம்பாட்டுக் கோட்பாடுகளும் நிரம்பக் காணப்படுகின்றன. அவற்றுள் நம் நெஞ்சை அள்ளும் ஒரு சிலவற்றைக் குறித்து மட்டும் பறவைப் பார்வையில் ஈண்டுக் காண்போம்.

பண்டைத் தமிழர் தம் முன்னோர் ஈட்டி வைத்த பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதை இழிவாகக் கருதினர். தம் முயற்சியால் பெற்ற பொருளினைக் கொண்டு வாழ்வதையே அவர்கள் பெரிதாகக் கருதினர்; அதனையே தம் வாழ்க்கை நெறியாகவும் முறையாகவும் கொண்டிருந்தனர். இவ்வுயரிய வாழ்வியல் விழுமியத்தினைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ தம் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவியின் கூற்றாகத் தெளிவுற மொழிந்துள்ளார்.

'உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'
(283)

என்பது பெருங்கடுங்கோ உணர்த்தும் வாழ்க்கைப் பாடம். முன்னோர் தேடி வைத்துச் சென்ற செல்வத்திற்கு முன்னுரிமை தராமல், ஒருவர் தமது முயற்சியால் ஈட்டும் செல்வத்திற்கு முதன்மை தந்து வாழ்ந்து காட்டிய பண்டைத் தமிழரின் பெருமித உணர்வு விதந்து போற்றத் தக்கதாகும்.

பெருமை வாய்ந்த நம் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளுள் தலையாயது, அது எத்துணைத் தொன்மை வாய்ந்ததாக இருப்பினும், எக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும் பொருந்தி வரும் பான்மையைப் பெற்றிருப்பதாகும். இதனை 'முக்காலத்திலும் ஒத்தியல் தன்மை' என்னும் பண்டைய உரையாசிரியரின் சொற்றொடரால் குறிக்கலாம். இக்காலத்திற்கு ஏற்ற முறையில் அதனை 'இக்காலத் தன்மை'
(Modernity) என்ற சொல்லாலும் சுட்டலாம். தனிநாயக அடிகளார் குறிப்பிடுவது போல், 'இக்காலத் தன்மை என்ற சிறப்பியல்பு உள்ளதனாலேயே, சங்க இலக்கியங்கள் என்றும் குன்றா இளமையுடன், புதுமையும், பசுமையும், அழகும், பொலிவும், புதிய கருத்தும் பெற்று, 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியவாய்' என்றும, எங்கும், எவரும, தம் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமாறு, இன்பம் பெருக்கி வருகின்றன' (தமிழ்த் தூது, பக்.31-32) எனலாம். இக் கருத்தின் வழி நின்று, சங்க இலக்கியத்தில் பொதிந்துள்ள சீரிய சிந்தனைகள் இரண்டினை இங்கே சுட்டிக்காட்டலாம்.

'நீ ஒருவர்க்கு நல்லது செய்யாவிட்டாலும் போகிறது, பரவாயில்லை; ஆனால், யாருக்கும் கெடுதலாவது செய்யாமல் இரு!' என்று இன்று உலக வழக்கில் கூறுவதைக் கேட்கிறோம். இதனையே நரிவெரூஉத்தலையார் என்னும் சங்கச் சான்றோர் தம் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:

' நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!'
(195)

உலகில் மனிதராய்ப் பிறந்த யாவரும் தம் நெஞ்சிலும் நினைவிலும் கல்வெட்டுப் போலப் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய – பின்பற்றத் தக்க – பொன்னான அறிவுரை இது!

இந்த உலகம் கொடியது தான்; பொல்லாதது தான். அதற்காகச் சோர்ந்து போய் மூலையில் முடங்கிப் போய் விடலாமா? அல்லது இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்கையில் சாய்ந்து விடலாமா? கூடாது; கூடவே கூடாது. கொடிய – பொல்லாத – இந்த உலகத்திலும் பாலைவனச் சோலை போலச் சிற்சில இனிமைகள் இருக்கலாம் அல்லவா? அவற்றைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தின் இயல்பினை உணர்ந்துஇ இந்த உலகத்திலேயே – உலகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று அல்ல – நல்ல வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும்; வாழ்வில் இன்பம் அடைவதற்கான வழிவகையினைத் தேடிக் கண்டு கொள்ள வேண்டும் இதுவே பக்குடுக்கை நன்கணியார் என்னும் சங்கச் சான்றோர் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறி:

'இன்னாது அம்மஇவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.'
(194)

எக்காலத்தவர்க்கும் – பொருந்தி வரும் உயரிய உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு இது!
'இல்லற வாழ்வின் இனிமை எதிலே உள்ளது? துட்டிலா (பணத்திலா)? நகை நட்டிலா (அணிகலன்களிலா)? பட்டிலா? (விலையுயர்ந்த புடைவையை அணிந்து கொள்வதிலா?)' என்று கேட்டால்இ அந்தக் கேள்விக்கு அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளும் விடை இதுவாகத்தான் இருக்கும்: 'துட்டு – நகை நட்டு – பட்டு: இவை எதிலுமே இல்லை; கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு; ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுப்பதில் தான் உண்மையில் இல்லற வாழ்வின் இனிமை உள்ளது!' 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' எனச் சிறப்பிக்கப் பெறும் சங்கத் தொகை நூலும் இத்தகைய ஒரு மறுமொழியினையே தருகின்றது;

' ... ... ... உளநாள்
ஒரேஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை'
(18)

'வீட்டினுள் ஒரு கையால் ஒருவர் மற்றவரை அணைத்துக் கொண்டு, வெவளியில் ஒரு கையால் ஓர் ஆடையை இரண்டாகப் பகுத்து உடுத்திக் கொள்ளும் வறுமையான வாழ்க்கையை உடையவரே என்றாலும், வாழ்நாள் முடியும் வரை வறுமையில் செம்மைப் பண்போடு இருவருமாகச் சேர்ந்து வாழும் காதலரின் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கையாகும்': இதுவே இனிய இல்லற வாழ்க்கைக்குச் சங்க இலக்கியம் முன்மொழியும் தாரக மந்திரம் ஆகும். இம் மந்திர மொழி இன்றைய கணினி யுகத்திற்கும் ஏற்புடைய ஒன்றே எனலாம்.

காலம் கடந்து நின்று மனித குலத்திற்கு வழிகாட்டும் நிலையான விழுமியங்களை மட்டுமன்றிஇ நடப்பியல் சார்ந்த அனுபவ உண்மைகளையும் சங்க இலக்கியம் ஆங்காங்கே நயமாகச் சொல்லிச் சென்றுள்ளது. ஓர் எடுத்துக்காட்டு: யாரிடமாவது கடன் கேட்கும் போது ஒருவருடைய முக பாவனை எப்படி இருக்கும்? வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது அதே மனிதரின் முகக் குறிப்பு எப்படி இருக்கும்? இது குறித்துக் கலித்தொகைப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கும் அரிய நடப்பியல் உண்மை வருமாறு:

'உண்கடன் வழிமொழிந்து இரங்குங்கால் முகனும் தாம்
கொண்டது கொடுங்குங்கால் முகனும் வேறுஆகுதல்
பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே!'
(22)

'ஒருவர் பணிவாகப் பேசிக் கடன் பெறும் போது உள்ள அவரது முகமும், அதைத் திரும்பக் கொடுக்கும் போது உள்ள அவரது முகமும் வேறுபடுவது என்பது இன்று மட்டும் காணப்படும் புதிய இயல்பு அன்று; இவ்வுலகத்தில் முன்பும் உள்ள இயல்பு தான் இது!'

உலக வாழ்வில் எளிதில் விடை சொல்ல முடியாத வினாக்கள் எத்துணையோ உள்ளன. அவற்றிற்கு எல்லாம் 'அட்சர லட்சம்' பெறத் தக்க அற்புதமான விடைகளை இரத்தினச் சுருக்கமான மொழியில் – இன்றைய பேச்சு வழக்கில் குறிப்பிட வேண்டும் என்றால் 'நச்'சென்ற முறையில் – கூறியுள்ளது சங்க இலக்கியம்.

உலகில் நிலையானது எது தெரியுமா? நில்லாமையே நிலையானதாம்! 'நில்லாமையே நிலையிற்று'
(143) – 'நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகத்தில் நிலைபெற்றது' – என முடிந்த முடிபாகக் கூறுகின்றது மதுரை கணக்காயன் மகன் நக்கீரனின் குறுந்தொகைப் பாடல் ஒன்று.

இவ்வளவு நிகழ்ந்த பிறகும் இந்த உலகம் இன்னமும் எதனால் இருந்து வருகின்றது தெரியுமா? அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ள ஓர் அழகுத் தொடர் இவ் வினாவிற்கு உரிய விடையினை இனிதே இயம்புகின்றது: 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்'
(54) ஆக ஒரு சில மனிதர்களாவது தன்னலம் துறந்து பிறர்நலம் பேணுவோராக வாழ்ந்து வருவதால் தான் இந்த உலகம் இவ்வளவு நடந்த பிறகும் இன்னமும் அழியாமல் இருந்து வருகின்றதாம்!.

மூதறிஞர் சோ.ந.கந்தசாமியின் முத்திரைச் சொற்களிலே குறிப்பிடுவது என்றால், 'இத்தகைய பொன் போன்ற மொழிகள் பண்பாடு பழுத்த புலவர் உள்ளத்தில் பிறப்பவை. உலகினர்க்கு உணர்த்தப் பெற்றவை. இவற்றை எடுத்துரைத்த சங்க காலச் சான்றோர் உலக அறிஞர் வரிசையில் உயரிய இடத்திற்கு உரியர்' (உலகச் செம்மொழிகள் இலக்கியம்: முதல் தொகுதிஇ ப.89) என்பதிலே எள்ளளவும் ஐயம் இல்லை.

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.