ஒரு தமிழ் உபநிடதத்தினைப் படிக்கும் உணர்வு!

பேராசிரியர் இரா.மோகன்

ங்கத் தொகை நூல்களுள் யாப்பு வகையால் பெயர் பெற்றவை இரண்டு. ஒன்று கலித்தொகை; மற்றது பரிபாடல். இனிய ஓசை நயம் கொண்ட எழுபது பாடல்களின் தொகுப்பு பரிபாடல். அதில் இன்று கிடைப்பன 22 பாடல்களே. அவற்றுள் திருமாலுக்கு உரியவை 6; செவ்வேளுக்கு உரியவை 8; வையை பற்றியவை 8. இப் பாடல்கள் ஒவ்வொன்றின் கீழும் பாடியவர் பெயர், இசை வகுத்தவர் பெயர், பண் விவரம் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.

பரிபாடல் என்றதுமே இலக்கிய ஆர்வலர்களின் நினைவுக்கு மோனையைப் போல் முன்னே வந்து நிற்கும் வைர வரிகள் இவை:

'யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ராயே'
(5)

கடுவன் இளவெயினனார் செவ்வேளிடம் இரப்பனவாக அமைந்துள்ள இப் பாடல் வரிகள், பண்டைத் தமிழரது பக்திப் பண்பாட்டின் உயர்நிலையைப் புலப்படுத்துவனவாகும். பரிபாடலில் காணலாகும் பிறிதொரு சிறப்பு அதன்
5-ஆம் பாடலில் செவ்வேளைப் பரவிய கடுவன் இளவெயினனாரே 3,4-ஆம் பாடல்களில் திருமாலையும் பாடி இருப்பதாகும். அக் காலத்தில் சமயக் காழ்ப்பு இல்லை, சமயப் பொறையே நிலவியது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இது ஒன்றே போதிய வலுவான சான்று ஆகும்.

இனி, கடுவன் இளவெயினனார் திருமாலைப் பாடியுள்ள மூன்றாம் பாடலில் உயிர்ப்பாக விளங்கும் ஒரு பகுதியைக் காண்போம்:

'தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்து நீ!
வேதத்து மறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ!
அனைத்து நீ! அனைத்தின் உட்பொருள் நீ'
(3)

'நெருப்பினுள் வெப்பமாக இருப்பவன் நீ! மலரில் மணமாக இருப்பவன் நீ! கற்களுள் மணியாக இருப்பவன் நீ! சொல்லினுள் வாய்மையாக இருப்பவன் நீ! அறங்களுள் அன்பாக இருப்பவன் நீ! வீரத்தில் வலிமையாக இருப்பவன் நீ! வேதத்துள் மந்திரமாக இருப்பவன் நீ! பூதங்களுள் முதலாவதாகிய வானமும் நீ! கதிரவனிடத்தில் ஒளியும் நீ! திங்களில் குளிர்ச்சியும் நீ! எல்லாப் பொருள்களும் நீ! பொருள்களின் நுண்பொருளும் நீ!' என இப் பகுதியில் இறைவனின் இயல்பினை மொழிந்துள்ளார் கடுவன் இளவெயினனார். இங்குக் கூறப்பட்டுள்ள 'பொருள்கள் எல்லாம் அவனேஇ அவற்றின் உள்ளே மறைந்திருக்கும் உட்பொருளும் அவனே' என்ற விழுமிய மெய்யியல் கருத்தினை இப் பாடற்பகுதி தெளிவுறப் புலப்படுத்தியுள்ளது.

ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றான தீயின் உயிர்ப் பண்பு வெம்மை; பூவுக்குப் பெருமை சேர்ப்பது அதன் நறுமணம்; கற்களில் பெயர் பெற்றது மணி; சொற்களில் மிகச் சிறந்தது வாய்மை; அறச் செயல்கள் யாவற்றிற்கும் அடிப்படையானது அன்பு; வீரத்தின் வெளிப்பாடு வலிமை; வேதத்தின் விழுமிய வடிவம் மந்திரம்; பூதங்களில் முதல் இடத்தைப் பெறுவது வானம்; கதிரவனின் சிறப்புக் கூறு அதன் வெம்மை; திங்கள் என்றால் நம் நினைவுக்கு உடன் வருவது குளிர்ச்சி. இங்ஙனம் அனைத்துப் பொருள்களாக மட்டும் அன்ற, அவற்றின் ஆகச் சிறந்த உயிர்ப் பண்புகளாகவும் இறைவன் இருக்கின்றான் எனக் கடுவன் இளவெயினனார் இப்பகுதியில் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துப் புலப்பாட்டு நெறி நனி சிறந்த ஒன்றாகும். எல்லாம் வல்ல இறைவனின் பொதுமைப் பண்புகளைப் இதனினும் மேலாக எவரும் சொற்களில் வடித்துக் காட்டி விட இயலாது எனலாம்.

'இந்தப் பகுதியைப் படிக்கும் பொழுது ஒரு தமிழ் உபநிடதத்தினைப் படிக்கும் உணர்வு நமக்குத் தோன்றுவது இயல்பு' (உலகச் சொம்மொழிகள் இலக்கியம்: முதல் தொகுதி, ப.
98) என்னும் மூதறிஞர் சோ.ந.கந்தசாமியின் கருத்து இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

'எல்லாப் பொருள்களும் நீ! பொருள்களின் உட்பொருளும் நீ! ஆதலின், நீ ஓரிடத்தில் தங்குவதும் இல்லை; உனக்குத் தங்குவதற்கு உரிய இடமும் இல்லை. மறதி உடையவர் தம் மறதியில் உன்னைச் சிறப்பிப்பதற்காக உனக்கு இடம் முதலியன உள்ளனவாகக் கூறுதல் பொய்யே ஆகும். அவ்வியல்பினை உடையாய் நீ! முதலும் இடையும் கடையும் ஆகிய முறைமை உடைய படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் ஆற்றுவதற்காக நீ பிறவாத பிறப்புக்கள் இல்லை. ஆனால், உன்னைப் பிறக்கச் செய்த தாய் தந்தையரும் இல்லை. காயாம் பூ ஒத்த நீல நிறம் உடையவனே! அருளே குடையாக, அறமே அதன் காம்பாக, வேறொரு குடை நிழலுக்கும் இடம் இல்லாத படி, மூவேழ் உலகங்களையும் தன் ஒரு குடை நிழலிலேயே தங்கச் செய்த இனிய காவலை உடையவனே!' என இறைவனின் இயல்பும் ஆட்சியும் குறித்துப் பரிபாடல் மூன்றாம் பாடலில் மேலும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கின்றார் கடுவன் இளவெயினனார்:

'அனைத்தும் நீ! அனைத்தின்உள் பொருளும் நீ! ஆதலின்
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதன்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலின்
பிறவாப் பிறப்பிலை; பிறப்பித்தோர் இலையே;

பறவாப் பூவைப் பூவி னோயே!
அருள்குடை யாக, அறம்கோல் ஆக
இருநிழல் படாமை மூவேழ் உலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ!'


வைணவ மரபில் திருமால் நெறி ஐவகையான கோட்பாடுகளைக் கொண்டது என்பர் அறிஞர். அவை வருமாறு:

1. திருமாலின் முதன்மை (பரத்துவம்)

2. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிதற்கு உரிய நிலை (வியூகம்)

3. தீயோரை அழித்து நல்லோரைத் காத்து அறத்தை நிலைநாட்டுவதற்கு உரிய நிலை (அவதாரம்)

4. ஒவ்வொரு பொருளிலும் உட்கலந்து இயக்கும் நிலை (அந்தர்யாமித்துவம்)

5. கோயில் திருமேனி (அர்ச்சை)

இந்த ஐந்து வகையான கோட்பாடுகளும் பரிபாடலில் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்றிருக்கக் காண்கிறோம். இந்தியத் தத்துவ வரலாற்றினை ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதியுள்ள பேராசிரியர் எஸ்.என்.தாஸ்குப்தாவின் கருத்தின் பட, இந்த ஐவகைக் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய திருமால் நெறி தமிழர்க்கு உரியதாகும் (மேற்கோள்: சோ.ந.கந்தசாமி, உலகச் செம்மொழிகள் இலக்கியம்: முதல் தொகுதி, பக்.
97-98).


பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.