'நகைச்சுவை இமயம்' திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
(1906-1993)



பேராசிரியர் இரா.மோகன்
 

கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த நாள்: 25.08.2014

'அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் -

பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர் -

ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர் - பக்திச் சுவை ஊட்டியவர் -

நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர் - அதில் உயர்கருத்தை நட்டவர் -

தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -
திருமுருக கிருபானந்த வாரியார்' என்பது 'இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம் (வாரியாரைக் கண்ட கண்கள், பக்.
10-11).

காங்கேயநல்லூரில்
1906 ஆகஸ்ட் 25-ஆம் நாள் மல்லையதாசர் - கனகவல்லி இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் வாரியார் சுவாமிகள். அவர் 'சம்பந்தரைப் போல் தவழ்ந்த படி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை; பக்திச் சுவையையும் நகைகச்சுவையையும் இரு கண்களைப் போல் வாரியார் சுவாமிகள் தம் வாழ்வில் என்றென்றும் போற்றி வந்தார்.

ஒருமுறை மைசூர் மகாராஜா, 'நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?' என்று வாரியார் சுவாமிகளிடம் கேட்டார். சுவாமிகள், 'என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்' என்றார். சுவாமிகள் இப்படிச் சொன்ன உடன், மகாராஜா களுக்கென்று சிரித்துவிட்டாராம். பிறகு சுவாமிகள், மகாராஜாவிடம், 'முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா' என்ற திருப்போரூர்ச் சந்நிதி முறையின் திருவாக்கினை மேற்கோள் காட்டி விளக்கிக் கூறினாராம்.

  • 1966-இல் வாரியார் சுவாமிகளுக்குப் பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்களும் உற்றார் உறவினர்களும் திட்டமிட்டனர். ஆனால் சுவாமிகள் அதை விரும்பவில்லை. அதற்குச் சுவாமிகள் தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: 'சிலர் மணிவிழா என்று 'மணி' (அழநெல) திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.'

    'சிரிப்பு மனிதனுக்கே உரிய கலை. மனிதனுக்குத் தான் சிரிக்கத் தெரியும்... சிரிக்கின்ற முகம் அழகாக இருக்கும். சிவந்த இரண்டு இதழ்களுக்கு நடுவில் தோன்றும் பற்கள் பவளப் பெட்டியில் முத்துக்கள் வைத்தாற் போல் அழகாக இருக்கும்' (திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, ப.141) என்பார் வாரியார் சுவாமிகள்.

    சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது சுவாமிகளின் கருத்து.

  • கும்பகோணத்திற்கு அருகில் உள்ள குடவாசல் என்னும் திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் சுவாமிகள் கலந்து கொண்டு 'மீனாட்சியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

    இடையிடையே சில நகைச்சுவைகள் இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இடையில் ஒருவர் மட்டும் சிரிக்காமல் சித்திரத்தில் எழுதிய பதுமை போல் அமர்ந்திருந்தார். இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் சுவாமிகள் 'சிரிப்பால் விளைந்த தீமை' என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.
     

  • புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் சுவாமிகளே கூறுகின்றார், கேளுங்கள்;: ''வாயை மூடு!' என்று முட்டாள் தன் மனைவியைத் திட்டுகிறான். 'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்கிறான் புத்திசாலி.' அறிவார்ந்த நகைச்சுவை (Wit)  என்பது இதுதான்!

    நகைச்சுவையோடு உரையாற்றுவது என்பது மிகவும் அரிய ஆற்றல்; கலை. உணர்ச்சி ததும்ப உரை நிகழ்த்தலாம்; உண்மை வெளிப்படும் வண்ணமும் உரை ஆற்றலாம். ஆனால் ஆறில் இருந்து அறுபது வரை அனைவரும் மனம் விட்டுச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவது என்பது மிகவும் கடினமான கலை. இக்கலையில் தனிப்-பெரும் திறன் பெற்றவராகப் பேச்சுலகில் கோலாச்சினார் வாரியார் சுவாமிகள்.

    'அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி அல்ல் சந்திரவதி! குணவதி, பார்வதி போல சந்திரவதி. சம்பந்தி என்பதே சரி; சம்மந்தி அல்ல. சம் என்றால் நல்ல் மந்தி என்றால் குரங்கு. சம்பந்தியா? சம்மந்தியா? எது உங்களுக்கு வசதி?' என்றாற் போல் அவையினருடன் இயல்பாக உரையாடும் பாங்கில் கேள்வி கேட்டுச் சிரிப்பலைகளை எழுப்புவது வாரியார் சுவாமிகளின் தனிப்பாணி முத்திரைப் பண்பு!.

    வாரியார் சுவாமிகளைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடைபெறும் பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றார்கள். அப்பொழுது வாரியார் சுவாமிகள், ''சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில 'சொல்லின் செல்வர்கள்' இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்' என்று தம் பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை.
     

  • முருகப் பெருமானின் துணைவி வள்ளிநாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் சுவாமிகள் தமக்கே உரிய பாணியில் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்: 'முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்!' இவ் விளக்கத்தைக் கேட்கும் எவர் முகத்திலும் மெல்லிய புன்முருவல் தோன்றுவது உறுதி.

    வாரியார் சுவாமிகள் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றும் போது இடையிடையே தரமான நகைச்சுவையைக் கலந்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்துவார்; மனம் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டுவார். அவருடைய சொற்பொழிவின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் - முதன்மையான காரணம் - அவரது நகைச்சுவை உணர்வே ஆகும். இன்னொன்று: வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை யாருடைய மனத்தையும் புண்படுத்தாது; எளிய மக்களுக்கும் சென்று சேரக் கூடியதாக இருக்கும். 'அவருடைய பேச்சில் நிமிஷத்துக்கு நிமிஷம் நகைச்சுவை தளும்பும். வீட்டு விவகாரத்தை எடுத்துச் சொல்லும் போது ஒரு நாடகத்தைக் காண்பது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். விருந்துணவை வருணிக்கும் போது கேட்டவர்கள் வாயில் நீரூறும்; துண்டால் துடைத்துக் கொள்வார்கள். இறைவனுடைய கருணையையும் அடியார்களுடைய தொண்டையும் விரித்துச் சொல்லும் போது அவையினர் கண்ணில் நீர் பெருகும்' என வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுத் திறனைக் குறித்துக் கூறியிருக்கும் கருத்து, நூற்றுக்கு நூறு சரியானதே ஆகும்.

    வாரியார் சுவாமிகளின் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் அழகிய எடுத்துக்காட்டு:

    'கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை 'நீ' என்று சொல்லுவதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்.'

    இதே போல், 'இல்லாள்' என்ற சொல்லுக்கு வாரியார் சுவாமிகள் தரும் விளக்கமும் சுவையானதாகும். அவரது இயல்பான நகைச்சுவை உணர்வைப் புலப்படுத்த வல்லதாகும். அறிவுக்கு விருந்தாகும் அவ் விளக்கம் வருமாறு:

    'இல்லாள் - இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் 'இல்லான்' - 'பாப்பர்' என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட 'அய்யா, பிச்சை' என்று சொல்ல மாட்டான்; 'அம்மா, பிச்சை' என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!'
     

  • நமது புராணங்களில் 'காமன்' என்று ஒரு தேவன் வருவான். இவன் தான் காதல் மன்னன். இவன் அருள் இருந்தால் தான் மனிதர்களுக்குச் சிருங்கார உணர்வே தோன்றும். இவனுக்குக் 'காமன்' என்று ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா? இவ் வினாவுக்கு நகைச்சுவை உணர்வு ததும்பி நிற்க வாரியார் சுவாமிகள் தரும் விடை இதுதான்:
    'இவன் மதங்களை எல்லாம் கடந்து எல்லா நாட்டவர்க்கும் பொதுவான காதல் தேவனாய் விளங்குகிறான். இவன் எல்லோருக்கும் 'பொது' என்பதைக் குறிப்பிடத்தான் 'காமன்' என்கிறார்கள்.' 'காமன்',
    Common - நயமான சொல் விளையாட்டு (Pun)!.

    எந்தச் சூழ்நிலையிலும் நகைச்சுவை உணர்வுடன் எதிர்வினை ஆற்றும் அரிய பண்பு வாரியார் சுவாமிகளின் ஆளுமையில் அவரது வாழ்நாள் முழுவதும் மேலோங்கிக் காணப்பட்டது. இவ்வரிய பண்பினால் மாணவர் முதல் மகாராஜா வரை - படிப்பு வாசனையே இல்லாத பாமரன் முதல் மெத்தப் படித்த மேதாவி வரை - அனைவரையும் சுவாமிகளால் கட்டிப்போட முடிந்தது. அவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி இது:

    ஒரு முறை வடலூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிகள். காலை எட்டு மணி அளவில் அந்த ரயில் சேலம் நகருக்குச் சென்றது. சுவாமிகள் ரயிலில் குளிக்கும் அறைக்குள் சென்று கைகால்களை அலம்பிக் கொண்டு, திருநீற்றுப் பையை எடுத்து நெற்றி நிறையத் திருநீற்றைப் பூசிக் கொண்டார்.

    அந்த ரயிலில் ஏறிப் பயணம் செய்த ஒரு மாணவர் இதைப் பார்த்து, 'ஐயா! ஏன் நெற்றிக்கு வெள்ளையடித்துக் கொள்கின்றீர்?' என்று கேட்டுச் சிரித்தார்.

    உடனே, சுவாமிகள், 'தம்பீ! குடியிருக்கின்ற வீட்டிற்கு வெள்ளையடிப்பார்கள். காலியான வீட்டில் வெள்ளையடிக்க மாட்டார்கள். நெற்றியில் பகுத்தறிவு குடியிருக்கின்றது என்று நான் வெள்ளையடித்துக் கொண்டேன்' என்று ஓங்கிய குரலில் உரைத்தார்.

    அம் மாணவருக்கு அந்தப் பதில் ஆணி அறைந்தது போல் இருந்தது. பேயறைந்தாற் போல் வாயடைத்துச் சும்மா இருந்தார்.

    ரயிலை விட்டு இறங்கும் பொழுது, 'சுவாமீ! சிறிது திருநீறு கொடுங்கள்' என்று கேட்டு வாங்கித் திருநீறு பூசிக் கொண்டார். நையாண்டியும் சுவாமிகளுக்குக் கை வந்த கலை என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி இது!.

  • கரூரில் வாரியார் சுவாமிகள் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டு விழா! பாராட்டிப் பேசிய அன்பர் ஒருவர், 'மீண்டும் வாரியார் சுவாமிகள் பேச்சை எப்பொழுது கேட்போமோ...?' என்ற ஏக்கத்தோடு, 'மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?' என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள், 'கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே...?' என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!

    வாரியார் சுவாமிகளின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி அமிர்தலட்சுமி அம்மையார் 16.03.1985-இல் காலமானார். மற்றவர்கள் கலங்கினர். சுவாமிகளோ இயல்பாக இருந்தார். 'அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்' (திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, ப
    .319) என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?

    'பாரிக்குப் பின்
    காரி,
    வல்வில்
    ஓரி! -
    பின்னர் வாரித் தர
    யார் வந்தார்?
    வாரி வந்தார்!
    வாரியார் போல்
    யார் வாரித் தந்தார்?'
    (வாரியாரைக் கண்ட கண்கள், ப
    .9)

    ஆம், வாரியார் சுவாமிகள் போல் யார் உள்ளத்தை உயர்த்தும் நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் கூறு நல்லுலகிற்கு வாரி வாரித் தந்தார்?.

     

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.