மாயூரம் வேதநாயகரின் பெண்ணியச் சிந்தனைகள்

முனைவர் நிர்மலா மோகன்

மாயூரம் வேதநாயகரின் பிறந்த நாள்: 11.10.2015
நினைவு நாள்:
21.04.2015

மாயூரம் வேதநாயகர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1826-1889) வாழ்ந்த தமிழறிஞர். தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் - குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் - அவர் செய்திருக்கும் தொண்டுகள் அளவிடற்கரியவை. நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய வேதநாயகர், தம் உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் படிப்படியாக உயர்ந்து நீதிபதியானார். மாயூரத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றியதால் 'மாயூரம் நீதிபதி வேதநாயகர்' என்றே அனைவராலும் அவர் அழைக்கப்பெற்றார். முதன்மையான சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துச் 'சித்தாந்த சங்கிரகம்' என்னும் முதல் சட்டத் துறை நூலை வெளியிட்ட பெருமை வேதநாயகரைச் சாரும். இன்னிசை அரங்குகளில் தெலுங்குக் கீர்த்தனைகளே பாடப்பட்டு வந்த காலத்தில் வேதநாயகர் தமிழ் மொழியில் கீர்த்தனைகள் இயற்றி, 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை', 'சத்திய வேத கீர்த்தனை' என்னும் நூல்களாக வெளியிட்டார். ஆங்கில மொழியில் உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சியாகச் சிறுகதையும், புதினமும் தோன்றியிருப்பது போல் தமிழ் மொழியிலும் உருவாக வேண்டும் என்று விரும்பிய வேதநாயகர், 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் புதினத்தை வெளியிட்டுத் தமிழில் புதின இலக்கியத்திற்கு வித்திட்டார்; அதனாலேயே 'தமிழ்ப் புதினத்தின் தந்தை' என்றும் போற்றப்பட்டார். கையூட்டு போன்ற தீய பழக்கங்களைக் கடியும் வகையிலும், நல்ல பழக்கங்களை வலியுறுத்தும் நோக்கிலும் காலத்திற்கேற்ப 'நீதிநூல்' ஒன்றையும் அவர் எழுதி வெளியிட்டார். மேலும் 'திருவருள் மாலை', 'திருவருள் அந்தாதி', 'தேவமாதா அந்தாதி', 'தேவ தோத்திர மாலை' முதலான பல நூல்களையும் தனிப்பாடல்களையும் எழுதியுள்ளார் அவர்.

ஆடவர் வாழ்வில் சரிபங்கு வகிக்கும் பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் உடையவராக விளங்கினார் வேதநாயகர். 1869-ஆம் ஆண்டில் 'பெண்மதி மாலை' என்னும் இசைப்பாடல் நூல் ஒன்றையும், 1870-ஆம் ஆண்டில் 'பெண் கல்வி', 'பெண் மானம்' ஆகிய இரு உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவ்வகையில் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தேசியக் கவிஞர் பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தந்தை பெரியார் போன்றோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறார் வேதநாயகர்.

பெண் கல்வியின் இன்றியமையாமை

'பெண்களுக்குக் கல்வி எதற்கு? அவர்கள் படித்து உத்தியோகம் செய்யப் போகிறார்களா என்ன?', 'பெண்கள் படித்தால் கணவனுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்', 'வித்தியா கர்வத்தினால் கெட்டுப்போய் விடுவார்கள்' என்று பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்த காலத்தில், 'சரீரத்துக்கு ஆகாரம் எப்படியோ, அப்படியே கல்வியானது புத்திக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது' என்று கருத்துரைத்தவர் வேதநாயகர்.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும். கல்வி கற்றவரை 'நாலு எழுத்துப் படித்தவர்' என்று உயர்வாகப் பேசுவதும், கல்லாதவரைச் 'சரியான மடச் சாம்பிராணி' என்று எள்ளி நகையாடுவதும் இவ்வுலக இயல்பு. எனவே கல்வி கற்றால் மேன்மையடையலாம் என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேதநாயகர் பின்வருமாறு பாடுகிறார்:

'கற்றவளே துரைசாணி - கல்லா
மற்றவளே சுத்த மடச் சாம்பிராணி!
சதிகாரர் வலையிற் படாதே - கல்வி
மதியில்லாதவனுக்கு வாழ்க்கைப்படாதே'


என்று பெண்ணுக்கு அறிவுறுத்தும் வேதநாயகர், படித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு வலியுறுத்துகிறார். தன் பொருட்டுத் தன் தோழனைப் பெண் பார்க்கத் தூது அனுப்பும் மாப்பிள்ளை, பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு கீர்த்தனையில் எடுத்தியம்புகின்றான்:

'எழுத்து வாசகம் அறியாதவள் மட்டி,
ஏதும் அறியாள் அவள் சுரண்டுவாள் சட்டி;
கழுத்திலே அவளுக்குத் தாலியைக் கட்டிக்
காரியமிலை, அது காசுக்கு நட்டி'

என்று அக்கீர்த்தனையில் படிக்காத பெண் வேண்டாம் என மாப்பிள்ளை குறிப்பிடுவதாகப் பாடியிருக்கிறார் வேதநாயகர்.

நல்ல குடும்பம்

குடும்பம் சிறப்புற நடைபெறுவது பெண்கள் கையில்தான் உள்ளது. கணவனையும், குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்து, நாத்தனார், கொழுந்தனாரை அரவணைத்து, மாமனார், மாமியாரைப் போற்றி வாழ்ந்தால்தான் இல்லறம் நல்லறமாக விளங்கும். இதனைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்குப் பற்பல அறிவுரைகளை வழங்கியுள்ளார் வேதநாயகர்.

நல்லதொரு குடும்பம் அமையப் பெண் என்ன செய்ய வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இதோ வேதநாயகர் பாடுகிறார்.

'தலைவன் நெஞ்சைக் கரைக்காதே - மாமி
தலைமேல் நீ மிளகாய் அரைக்காதே!
நாத்திமேற் கச்சை கட்டாதே - வெகு
ஷhத்திரமாயவள் தலையை வெட்டாதே!
தலையணை மந்திரந் தீது - கெட்ட
கலகக்காரிகளுக்குக் கஷ்டம் போகாது!'


நல்ல மனைவியின் இலக்கணம் என்ன? அவள் ஆபத்து வேளையில் அறிவூட்டும் மந்திரியாகவும், அரும்பிணி வரும்போது அதைத் தீர்க்கும் சஞ்சீவியாகவும், துன்பம் அணுகும்போது ஆறுதல் சொல்பவளாகவும், வறுமைக் காலத்தில் திருமகள் போலக் கை கொடுப்பவளாகவும், கணவன் பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கும் சற்குருவாகவும் விளங்க வேண்டும்.

'ஆபத்து வேளையில் அறிவுசொல் மந்திரி,
அரும்பிணிக்கு அவள் ஒரு சஞ்சீவி - துன்பம்
அணுகும் போது ஆறுதல், தரித்ர காலத்தில்
பாபத்தில் வீழாமற் போதிக்குஞ் சற்குரு'


நல்ல மனைவி என்கிறார் வேதநாயகர்.

நகைப் பற்று

பெண்ணின் அடிப்படையான பலவீனம், நகைகள் மீதும் புடைவைகள் மீதும் அவள் கொண்டிருக்கும் தனியாத ஆசை. தன்னிடம் இல்லாவிட்டாலும், இரவல் வாங்கியாவது அவற்றை அணிந்து கொள்ளத் துடிக்கும் அவள் மனம். இது இந்தியப் பெண்ணிடம் மட்டும் அல்ல் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களிடத்தும் காணக்கூடிய ஒரு பண்பே ஆகும். எழுத்தாளர் மாப்பசான் எழுதிய 'நெக்லஸ்' என்னும் உலகப் புகழ்பெற்ற சிறுகதையும் இதற்குச் சான்று பகரும். வேண்டாத இவ் ஆசையை விட்டு விலகுவது தான் பெண்ணுக்கு நல்லது என்பதை வேதநாயகர் குறிப்பிடத் தவறவில்லை.

'நகைதுணி இரவல் வாங்காதே - வாங்கில்
சகலரும் ஏசுவர் தாழ்வு நீங்காதே'

என்றும்,

' நகையிலாக் காது கேளாதோ - பல
வகை பட்டில்லா உடல் வளர்ந்து நில்லாதோ'


என்றும் அறம் வலியுறுத்தும் வேதநாயகர், பெண்கள் இத்தகைய ஆசைகளை வளர்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வியறிவு இன்மைதான் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். பெண்கள் அணிகள் எனக் கருதும் நகைகளைக் 'கால் விலங்குகள்', 'கை விலங்குகள்', 'கழுத்து விலங்குகள்', 'இடுப்பு விலங்குகள்', 'தலை விலங்குகள்', 'விரல் விலங்குகள்' என்றும், கல்வியை 'ஞானாபரணம்' என்றும் வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்

ஆண்கள் பெண்களைக் கொடுமைப்படுத்தும், கேவலப்படுத்தும், அடிமைகளைப் போல நடத்தும் நிலை மாற வேண்டும் என்றும், பெண்களுக்கும் சம உரிமை நல்கப்படல் வேண்டும் என்றும் 'பெண்மானம்' என்னும் நூலில் வேதநாயகர் எடுத்துக்காட்டுகின்றார்.
பெண்ணுக்குக் கணவன் செய்யும் கொடுமை போதாதென்று, மாமியார், நாத்தனார் கொடுமை மற்றொரு புறம். நாய், பசு, மாடு முதலிய விலங்குகளின் மீது காட்டும் அன்பைக் கூட மாமியார் தன் மருமகளிடம் காட்டுவதில்லை. மருமகளுக்கு எவ்வளவு தான் வயிறு பசித்தாலும், புருஷன், மாமன், மாமி முதலானவர்கள் எல்லாரும் சாப்பிட்டு எல்லா வேலைகளும் முடிந்தபிறகுதான் சாப்பிட வேண்டுமேயன்றிப் பசித்த போது சாப்பிட முடியாத நிலை பெண்களுக்கு உண்டு. இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பெண்கள் வாழ்வில் சுட்டிக் காட்டலாம். இவற்றையெல்லாம் கண்டு வருந்தும் வேதநாயகர், 'இது எவ்வளவு பெரிய அநீதி? 'தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு' என்பது போல, ஸ்திரீக்குப் பசித்தபோது அவள் முந்திப் புசித்தால் குற்றமென்ன?' என்று பெண்ணின் உரிமைக்காக நியாயமான குரல் கொடுக்கின்றார்.

'தையல் சொல் கேட்போம்!'

மனம் போன போக்கில் இடைக்காலப் புலவர்கள் பலர் பெண்களை நம்பக்கூடாது என்று பாடி வைத்திருக்கிறார்கள். ஒளவையாரும் 'தையல் சொல் கேளேல்' என்று ஆத்திசூடியில் சொல்லியிருக்கிறார். 'ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்' என்பது போன்ற இந்த இழிநிலை பெண்களுக்கு ஏன்? எனச் சிந்திக்க வைத்து, அதற்கு நல்லதொரு விளக்கமும் அளிக்கிறார் வேதநாயகர். 'பெண்கள் நல்ல புத்தி சொல்லுகிற பட்சத்தில் அதைக் கேட்டால் பாதகமென்ன? பெண்கள் படித்தால் ஒளவையைப் போல விவேகிகள் ஆவாரென்பதற்கு ஒளவையே சாஷpயல்லவா? ஒளவையினுடைய நீதி நூல்களைப் படித்துப் பயன் அடையாத புருஷர்களுண்டோ? இல்லையே. ஆகையால் இந்த விஷயத்தில் ஒளவை சொல்வது அநுசிதமானதால், பெண் வார்த்தையைக் கேளாதேயென்னும் ஒளவையின் வாக்கியத்தை ஒளவைக்கே உபயோகப் படுத்தி, இந்த விஷயத்தில் அவர் சொல்லும் வார்த்தையைத் தள்ளிப் பெண்கள் சமயத்தில் நல்ல புத்தி சொன்னால் கேட்போமாக' என்று ஆண்களுக்குத் தையல் சொல் கேட்குமாறு நயமாக அறிவுரை கூறுகிறார் வேதநாயகர்.

பெண்கள் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று பேசியதுடனும்; எழுதியதுடனும் நில்லாமல், அதனை நடைமுறைப் படுத்தவும் முன்வந்தார் வேதநாயகர். 1869-இல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளி ஒன்றை மாயூரத்தில் தம் சொந்த முறையில் தொடங்கி நடத்தியதை வேதநாயகரின் வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

வேதநாயகரின் 'பெண்மதி மாலை', 'பெண் கல்வி', 'பெண் மானம்' என்னும் மூன்று நூல்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல அரிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சான்றோர்கள் பட்டியலில் வேதநாயகருக்கு முதல் வரிசையில் முதல் இடம் உண்டு.


 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்