கவிநாயகரின் ‘பாவாரம்’ அமைப்பும் அழகும்

முனைவர் இரா.மோகன்


“சிவத்திரு கந்தவனம் அவர்கள்... ஆசிரியராகப் பல நாடுகளில் பணியாற்றிய நல்லறிஞர். உயர்புகழ் தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைத் தங்கு தடையின்றிப் பாடும் பாவலர். சிவநெறிக்கும் செந்தமிழுக்கும் உள்ள தொடர்பை உலகறியச் செய்யும் செந்தண்மையர். மொழிக்கு மொழி தித்திக்கும் திருமுறைகளும் அருட்பாடல்களும் வழிபாட்டில் முதன்மை பெறும் மந்திர மொழிகள் என்பதில் ஆழங்கால் பட்டவர்... மாறி வரும் அறிவியல் வேகத்திலும் சமயக் கொள்கையில் இளைய தலைமுறை தடம் புரளாது செல்ல வழிகாட்டும் வண்மையர். இவரது கருத்தாழம் மிக்க கவிதைகள் ‘பாவாரம்’ என்னும் பெயரால் வெளியிடப்படுவது பாராட்டுக்குரியது” (அணிந்துரை, பாவாரம், ப.9) எனக் கவிநாயகரின் படைப்பாளுமை குறித்து விதந்து மொழிவார் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.

கவிநாயகரின் ‘பாவாரம்’ என்னும் பெயரில் அமைந்த பக்திப் பாடல்களின் தொகுப்பு 2007-ஆம் ஆண்டில் முதற் பதிப்பு கண்டுள்ளது. இந்நூலினைப் பதிப்புலகில் தடம் பதித்துள்ள ‘காந்தளகம்’ வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது. தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் அணிந்துரையும், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுரையும் நூலுக்கு அணியும் அரணும் சேர்ப்பனவாகத் திகழ்கின்றன. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, / பிரான்ஸ், இங்கிலாந்து (2 இடங்களில்), நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய ஆறு நாடுகளில் கவிநாயகரின் முத்திரைப் படைப்பான ‘பாவார’த்திற்கு வெளியீட்டு விழா நடத்தப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவிநாயகர் போற்றும் நால்வர் நறுந்தமிழ்

தமிழ்ப் பக்தி இலக்கியத்திற்கு – இயக்கத்திற்கு – திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரது பங்களிப்பு அழுத்தமானது; ஆழமானது. திருஞானசம்பந்தர் (மகன்மை நெறி: சத்புத்திர மார்க்கம்), திருநாவுக்கரசர் (தொண்டு நெறி: தாச மார்க்கம்), சுந்தரர் (தோழமை நெறி: சக மார்க்கம்), மாணிக்கவாசகர் (மெய்ம்மை நெறி: ஞான மார்க்கம்) என நால்வரும் பின்பற்றிய நெறிகளைச் சுட்டுவர் ஆன்றோர். உலக வழக்கில், ‘இறைவன் திருஞான- சம்பந்தருக்குப் பாலைக் கொடுத்து ஆண்டான், திருநாவுக்கரசருக்குச் சூலை (நோயை) கொடுத்து ஆண்டான், சுந்தரருக்கு ஓலையைக் காட்டி ஆண்டான், மாணிக்க- வாசகருக்கு காலைக் காட்டி ஆண்டான்’ என இவற்றை நயமாகக் குறிப்பிடுவர். நால்வரது வாழ்விலும் இறைவர் நிகழ்த்திய அருளிச் செயல்களையும் அற்புதங்களையும், அவர்களது வாக்கில் ஒளிர்ந்திடும் உயிர்ப்பான தொடர்களையும் கருத்துக்களையும் கவிநாயகர் தம் பாவாரப் பாடல்களில் உரிய இடங்களில் வண்ணமும் வனப்பும், வலிமையும் வளமும் சேர்க்கும் வகையில் கையாண்டுள்ளார்; ‘நால்வர் திருத் தமிழமுது’ (384), ‘செய்யதமிழ் நால்வரது செந்நெறி’ (395) என்னும் அழகுத் தொடர்களால் நால்வர் தமிழுக்கும் நெறிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவற்றுள் இன்றி-யமையாத ஒரு சில இடங்களைக் குறித்து ஈண்டுக் காண்போம்.

‘அஞ்சாதே சைவத்தின் அருமை நாட்ட, அவதரித்த திருஞானசம்பந்தர்’ (196) என்றும், ‘செங்கண் காழிக் குழந்தை’ (492) என்றும், ‘ஈடில் சம்பந்தர்’ (496) என்றும் திருஞானசம்பந்தரைப் போற்றும் கவிநாயகர்,

“உரிய பிள்ளைக்கு ஞானத்தை ஊட்டினார்
பிரம னார்புரப் பெருந்தகை யாளரே” (
491)

என இறைவர் ‘சைவத்தோடு தமிழும் தழைத்திடச் செய்ய வேண்டிய தீரத் திறத்துடன்’ (499) சம்பந்தப் பெருமானை வளர்த்த பான்மையினைச் சொல்லில் வடித்துக் காட்டுகின்றார்.

திருஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்த தலம் திருநல்லூர். அவரும் அவரது திருமணத்தைக் காண வந்தோரும் சோதியில் கலந்த அற்புதத் தலம் அது. இந் நிகழ்வினைப் பாவாரத்தில்,

“திருஞான சம்பந்தர்
     திருமண நாள் மனைவியுடன்
பெருமணத் தைக் காணவந்த
    பெருமக்கள் பலரோடு
முருகான வைகாசி
     மூலத்தில் தம்முடனே
திருநல்லூர்ப் பெருமணத்தில்
     சேர அருள் செய்தாரே”
(178)

என்னும் அற்புதமான பாடலாக வடித்துத் தந்துள்ளார் கவிநாயகர்.

திருஞானசம்பந்தருக்கு இறைவர் திருக்கோலக்கா என்னும் தலத்தில் ஐந்தெழுத்து பொறிக்கப் பெற்ற பொற்றாளங்கள் வழங்கியது (469) உள்ளிட்ட பல்வேறு அற்புத நிகழ்வுகளைக் கவிநாயகர் தம் பாவாரப் பாடல்களில் பதிவு செய்துள்ளார்.

‘ஒப்பில்லாத பெருந்தொண்டர்’ (254) என்பது கவிநாயகர் அப்பருக்குச் சூட்டும் புகழாரம். ‘அப்பர் பெருமான் ஆளாகத் திருத்தாள் தீட்சை அளித்திட்டார்’ (587) என அப்பர் பெருமானுக்கு இறைவர் அருளிய பான்மையினைப் பாவாயிரப் பாடல் ஒன்று மொழிகின்றது.

“நல்லநெறித் திலகவதி யாரும் தொண்டு
     நாள்தோறும்
எல்லையிலாத் தவஞ்செய்த தரும சேனர்க்கு
     ஏற்ற இடர்ச் சூலை
பல்லவனின் தண்டனை
     பக்கல் இருந்து அருள்செய்து பாதுகாத்தார்
அல்லல்புரி மன்னன்மனம் மாறச் செய்தார்
     அதிகைவீ ரட்டானத்து அண்ண லாரே”
(296)

எனத் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தின் ஒரு பாடலில் அப்பர் பெருமானின் வரலாற்றினை இரத்தினச் சுருக்கமாக மொழிந்துள்ளார் கவிநாயகர்.

கல்லில் கட்டிக் கடலில் விடப்பட்ட அப்பர் பெருமான் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக் கரையேறிய தலம் திருப்பாதிரிப்புலியூர். இவ்வரிய நிகழ்வினைப் பாவாரத்தில்,

“நீதியில் நெறியை விட்டு
    நீங்கிய அப்பர் தம்மைப்
பாதகர் கல்லிற் கட்டி
     கடலிலே பாய்ச்சி நிற்பத்
தீதுசெய் யாது கல்லைத்
     தெப்பமாய் மிதக்கச் செய்தார்
பாதிரிப் புலியூர் உள்ளார்
     பரவியே உருகு வாமே”
(599)

என்னும் ஓர் அழகிய பாடலாகப் புனைந்துள்ளார் கவிநாயகர்.

நால்வருள் இறைவரோடு தோழமை நெறி நின்று ஒழுகிய சுந்தரரின் வாழ்வு சோதனைகள் மிகுந்தது; திருப்பங்கள் நிறைந்தது; உணர்ச்சி மயமானது. ‘அதியடியார் சுந்தரர்’ (149) என்றும், ‘ஒப்பரிய தோழர்’ (159) என்றும் சுந்தரரைச் சிறப்பித்து மொழியும் கவிநாயகர், ‘தீரச் செய்குவர் தோழரின் தேவைகள், பேரமை முதுகுன்றத்துப் பித்தரே’ (217) எனச் சுந்தரர் பொருட்டு இறைவர் நிகழ்த்திய பல்வேறு அற்புதச் செயல்களைப் பாவாயிரப் பாடல்களில் உரிய வகையில் பதிவு செய்துள்ளார்.

“மன்றில் தோழர் திருமணத்தைத்
தடுத்தாட் கொண்ட மறைஞானி”
(1028)

எனப் பாவாரப் பாடல் ஒன்றில் இறைவர் சுந்தரருக்கு நடக்க இருந்த திருமணத்தை ஓலை காட்டித் தடுத்தாட் கொண்ட வரலாற்றினைக் குறித்துள்ளார் கவிநாயகர்.

“தூது சென்று உதவினார் தோழ ருக்குச்
     சோதனை நடத்தினார் தொண்ட ருக்குக்
காதல்நன் னெறியினை வளர்த்த செல்வர்”
(37)

என இறைவர் சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது சென்ற வரலாற்றினைப் பிறிதொரு பாவாயிரப் பாடலில் எடுத்துரைத்துள்ளார் கவிநாயகர்.

‘சுந்தரருக்குத் துணை நின்றீர், தொண்டத் தொகையைச் செய வைத்தீர்’ (98) எனத் திருவாரூரில் சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு இறைவர் அருளிய பான்மையையும் கவிநாயகர் பாவாயிரத்துள் சுட்டியுள்ளார். சுந்தரரைத் ‘தோழர்’ எனச் சுட்டுவதோடு நில்லாமல், இறைவரை, ‘துய்த்து யோகநெறி நின்ற, சுந்தரர்தம் பெருந்தோழர்’ (667) என்றும், ‘பித்தன் எனத் தோழரிடம் பட்டம் பெற்றார்’ (1092) என்றும் கவிநாயகர் குறிப்பது நனிநன்று.

‘வார்கழல்கள் காட்டி மணிவாசகரைக் கொண்டார்’ (769) எனப் பாவாயிரப் பாடல் ஒன்றில் இறைவர் மணிவாசகப் பெருமானை ஆட்கொண்ட வரலாற்றைக் குறிப்பிடும் கவிநாயகர்,

“ ... பெருந்துறை முன்னாள்
குருவென வந்தே வாதவூ ராரை
     குணம்பல காட்டிஆட் கொண்டு
நரிகளைப் பரிகள் ஆக்கிய நடிகர்”
(732)

எனப் பிறிதொரு பாடலில் மணிவாசகர் பொருட்டு இறைவர் நிகழ்த்திய அற்புத நிகழ்வினைச் சுட்டியுள்ளார்.

‘வேகம் கெடுத்துஆண்ட வேந்தன்அடி வெல்க’ (சிவபுராணம், அடி.6)

என்னும் திருவாசக அடி கவிநாயகரின் பாவாயிரப் பாடல் ஒன்றில்,

“வேண்டும் அன்பரின் வேகங் கெடுத்திடும்
ஆண்டவர்”
(104)

எனப் புதுவடிவம் எடுத்துள்ளது.

‘சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்து அருளுவது இனியே?’ (பிடித்த பத்து, பா.1-10) என்னும் மணிவாசகருடைய வாக்கின் தாக்கம், கவிநாயகரின் பாவாயிரப் பாடல் ஒன்றில், ‘சிக்கெனப் பிடித்தார் தம்மை, சிறியனுங் கண்டுய்ந் தேனே’ (63) என வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.

ஒற்றை வரியில், கவிநாயகரின் சொற்களைக் கொண்டே அவரது பாட்டுத் திறத்தினை மதிப்பிடுவது என்றால், கவிநாயகர் ‘பண் சுமந்த பாடல்களின் பாங்க றிந்தார்’ (439) என்றும், ‘நால்வரின் தமிழில் நாள்தோறும் தோய்ந்து இருந்த’ (733) நெஞ்சம் அவருடையது என்றும் சொல்லலாம்.

சைவ சமயத்தின் மேன்மை

சைவ சமயத்தின் மேன்மையை – ‘மேன்மைகொள் சைவ நீதி’யின் தனிப்-பண்பினை – வாய்ப்பு நேரும் போதெல்லாம் கவிநாயகர் தம் பாவாரப் பாடல்களில் பறைசாற்றியுள்ளார்; இறைவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

“சைவத்தில் சாதி இல்லை
    சமூகத்தில் தானும் இல்லை
வையத்தில் பிறப்பி னாலே
    மக்களிற் பேதம் இல்லை”
(608)

என்னும் பேருண்மையை ஐயத்துக்கு இடம் இல்லாமல் அன்றே உலகிற்கு எடுத்துரைத்தவர் சிவபெருமான் என்பதைத் திருப்புன்கூர் திருப்பதிகத்தில் வரும் பாடல் ஒன்றில் நயமாகப் பதிவு செய்துள்ளார் கவி நாயகர். அவரது கண்ணோட்டத்தில் ‘வாழ்வென்றால் சைவநெறி வகுத்த வாழ்வே வாழ்வு’ (1100) ஆகும்.

வேதாரணியத்தில் உள்ள தலம் திருமறைக்காடு. வேதங்கள் வழிபட்டு மூடிவிட்டுப் போயிருந்த வாயிற் கதவுகளை அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் பதிகங்கள் பாடியருளிய அற்புதத் தலம் அது. அத் திருத்தலம் குறித்துப் பாடியுள்ள பாடல் ஒன்றிலும்,

“சாதியைப் பார்க்க மாட்டார்
     சாத்திரம் நோக்க மாட்டார்
நீதியை வழங்கும் வேளை
     நியாயத்தை மட்டும் ஆய்வார்
ஏதமில் ஒழுக்கம் உள்ளார்
    இதயத்திற் கோயில் கொள்வார்
போதலர் மறைக்காடு உள்ளார்
     பூங்கழல் போற்று வோமே”
(229)

என இறைவரது பரந்து விரிந்த தனிப்பெருந் தகைமையினைப் போற்றிப் பரவியுள்ளார் கவிநாயகர்.

“சாதிகள் நோக்க மாட்டார்
    சாத்திரம் பார்க்க மாட்டார்
பேதமும் பிரிவும் தூண்டும்
    பேதையர் பூசை வேண்டார்
ஆதவன் போல யார்க்கும்
    அருளொளி வீசி நிற்பார்
தீதறு நீதி யாளர்
    திருக்கழுக் குன்றுள் ளாரே”
(54)

எனத் திருக்கழுக்குன்றத் திருப்பதிகத்தில் இடம்பெற்றுள்ள பாடலும் இவ் வகையில் நினைவுகூரத் தக்கதாகும். இப் பாடலில் இறைவரின் தனிப்பெருங்கருணையைப் போற்றும் வகையில் வரும் ‘ஆதவன் போல யார்க்கும், அருளொளி வீசி நிற்பார்’ என்னும் உவமை நெஞ்சை அள்ளுவது. மேலும், ‘நெறிமுறை பேணும் மேன்மைகொள் சைவ நீதியை நிலைபெறச் செய்பவர்’ (832) என்றும் இறைவருக்குப் புகழாரம் சூட்டுகின்றார் கவிநாயகர்.

சம காலக் கண்கொண்டு அணுகுதல்

பாடுவது புராண மரபுச் செய்தியே என்றாலும் அதனையும் சம காலக் கண் கொண்டு அணுகுவது என்பது கவிநாயகர் கந்தவனத்தின் பாவாரப் பாடல்களில் காணப்பெறும் ஒரு தனித்தன்மை ஆகும். சான்றாக, இறைவன் மாதொரு பாகனாகக் காட்சியளிக்கிறான் என்பது சைவ சமயத்தின் உயிர்க் கொள்கை. ‘பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்னும் திருஞானசம்பந்தரின் வாக்கு இவ் வகையில் கருதத் தக்கதாகும். கவிநாயகரோ ‘திருமயிலணி’ திருப்பதிகத்தில் வரும் ஒரு பாடலில்,

“மங்கைதனை இடப்பாகம் வைத்துமகிழ் வுற்றதும்ஏன்?
மங்கையர்க்குச் சமவுரிமை வழங்கும்உயர் கருத்தாலோ?”
(912)

என வினா-விடைப் பாங்கில் இன்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படும் பெண்ணுக்குச் சம உரிமை என்னும் கருத்தியலின் அடிப்படையில் இறைவன் உமையொரு பாகனாக விளங்குவதாகப் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு படி மேலாக, திருமறைக்காடு திருப்பதிகத்தில் இடம்பெற்றுள்ள பிறிதொரு பாடலில்,

“ஐயத்தில் அலைப வர்க்கும்
    அறிவினில் தெளிந்த வர்க்கும்
வையத்தில் சத்தி யின்றி
    வாழ்விலை என்று காட்டத்
தையற்குத் தமது மேனி
     சரிசம மாக ஈந்தார்”
(223)

எனக் குறிப்பிடுகின்றார் கவிநாயகர். ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ (பாரதியார் கவிதைகள், ப.180) என்னும் கவியரசர் பாரதியாரின் வாக்கு இங்கே ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

கவிநாயகரின் கண்ணோட்டத்தில் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவர், ‘குங்குமத்து மேனி கொண்ட, குவலயத்து மங்கையை, துங்க வெண்மை நீறு தாங்கும், சோதியான தன்னுடல், பங்குகொள்ள வைத்துப் பெண்ணின், பெருமை பாடும் மாப்பிள்ளை’ (273) ஆவார். இங்ஙனம் சிவபெருமான் பெண்ணின் பெருமை பேசியதும், பெண்ணுக்குச் சம உரிமை நல்கியதும் ‘இன்றல்ல, நேற்றல்லவாம்! என்றோ சக்திக்(கு), உரிமைதனைச் சமமாக ஈந்து தன்னில், ஒருபாக மாக நிதம் வைத்துக் கொண்டாராம்! அருமையதை அறியாத ஒரு சில ஆண்கள் பெண்ணை, அடக்குவது நன்றல்ல என்பதை உணர்த்தும் உயர்குணத்தவராம் அண்ணாமலையார்! (382).
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு’ என்ற படி, இறைவர் திங்களைத் தமது சடையில் வைத்திருப்பதிலும் ஓர் உட்கருத்து உண்டாம். கவிநாயகரின் சொற்களிலே அழகிய அக் கருத்து வருமாறு:

“எங்கணும் உள்ள மக்கள்
    இயற்கையைப் பேண என்றே
திங்களைச் சடையில் வைத்தார்
     திருச்சிராப் பள்ளி உள்ளார்”
(232).

மனிதன் எங்கணும் உள்ள இயற்கையைப் பேண வேண்டும் – இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் – என்ற சம காலச் சிந்தனையின் வெளிப்பாட்டினை இங்கே காண்கிறோம்.

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் கருத்தியலையும் அதன் இன்றியமையாமையையும் இன்று உலகெங்கும் உள்ள தன்னார்வ அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன; அரசினரும் அதனை ஒரு கொள்கை முழக்கமாகவே பரப்பி வருகின்றனர். ‘சுற்றுப்புறச் சூழல் தூய்மை’ என்னும் கருத்தாக்கத்தினைக் கி.பி.7-ஆம் நூற்றாண்டிலேயே நடைமுறையில் பின்பற்றி வந்தவர் அப்பர் பெருமான் ஆவார். இதனை,

“பழகியநல் உழவாரத் தொண்டி னாலே
     பத்தியுடன் பகல்கங்குல் பார்த்தி டாது
கழிவு அகற்றிப் புல்செதுக்கிக் கோயிற் சூழல்
     கவின்செய்த நாவரசர்...”
(293)

என்னும் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகப் பாடல் ஒன்றில் அழகுறப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் கவிநாயகர்.

பாவாரப் பாடல்களின் பாவிகம்

பாவாரத்தில் இடம்பெற்றுள்ள ஈழத்துத் திருத்தலங்கள் 45. அவற்றின் ஊடே அடிநாதமாக ஒலிக்கும் ஒரு கருத்தியல் உண்டு. அதுவே கவிநாயகர் உணர்த்த விரும்பும் பாவிகமும் கூட.

“நிறைந்துநம் தமிழீழம் மலர வேண்டும்
     நெடுங்காலத் துயர்யாவும் அகல வேண்டும்”
(692)

இதுவே ஈழத் தமிழர் வாழ்வில் இனிய நாள்; சிறந்த நாள். அதை இன்னும் வழங்கிடாமல் திருக்கோணமலையார் திகழ்கின்றாரே என்பது கவிநாயகரின் ஆதங்கம்.


“மணியனைய தமிழீழம் மரல வேண்டும்
     மானமுடன் தமிழ்மக்கள் வாழ வேண்டும்”
(760)

எனத் திருவண்ணார் பண்ணையில் குடிகொண்டிருக்கும் வைத்தீசுவரரிடம் கருணை காட்டுமாறு கனிவோடு வேண்டுகோள் விடுக்கின்றார் கவிநாயகர்.

எந்த நிலையிலும் கவிநாயகர் தம் நம்பிக்கையை இழந்து விடவில்லை. எல்லாம் வல்ல இறைவர், ‘செந்தமி ழீழம் பிறக்கத் திருக்கண் திறந்திடுவார்’ (930) என அவர் ஆழமாக நம்புகின்றார். இறைவரை வணங்கி அவர் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்:

“மாண்டவரும் எத்தனைபேர் கணக்கில் உண்டோ?
    வாரிவன நாத!நினை வணங்கி நாமும்
வேண்டுவது தமிழீழ வீடு பேறே!
     விரைவில் அதைத் தந்தருள வேண்டுவாமே”.
(1020)

எத்துணை இடையூறுகள் குறுக்கிட்டாலும் – இடர்கள் அணிவகுத்து வந்து தாக்கினாலும் – இறையருளாலே அவை எல்லாம் தவிடு பொடியாகும். முடிவில்,

“செந்தமிழீ ழமும்பெற்றுத் தமிழர் வாழ்வில்
      சிறந்தோங்கிச் செழித்திடுதல் திண்ண மாமே”
(1080)

என்று அறுதியிட்டு உரைக்கின்றார் கவிநாயகர்.

திருஞானசம்பந்தப் பெருமானின் பாடல் பெற்ற சிறப்புடைய ஈழத்துத் திருத்தலம் திருக்கோணமலை. அப் பதிகத்தில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களிலும் நிந்தைத் துதி (பழிப்பது போல் புகழ்தல்) என்னும் முறையைக் கையாண்டு ஈழத் தமிழர் நலனுக்காகவும் தமிழீழத்தின் மலர்ச்சிக்காகவும் உணர்ச்சி பொங்கக் குரல் கொடுத்-துள்ளார் கவிநாயகர்.

“புவியறியத் தமிழ்மன்னர் முன்னர் ஆண்டு
      பொலிந்துபுகழ் பூத்த தமிழ் ஈழ மண்ணைச்
சவியுறவே மீட்டுஇன்னும் தந்நி டாது
      தமிழ்மக்கள் படுதுயரைப் பார்த்துக் கொண்டு
சிவபெருமான் அருளாது சிறந்த செல்வத்
      திருக்கோண மலைமேவித் திகழ்வா ராமே’
(693)

என்பது கவிநாயகர் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ள பெருங்கவலை; ஆழ்ந்த வருத்தம். ‘திடநலனைத் தமிழர்க்கு வழங்காது’ (694) – ‘செய்ய தமிழ் மக்கள் துயர் தீராது’ (695) – ‘சிறிதேனும் செந்தமிழர்க்கு அருள்செய்யாதே’ (696) – ‘திருவாழ்வில் திகழ் தமிழர் துயர் தீராதே’ (697) – ‘கலைஈழத் தமிழ்மண்ணை மீட்பதற்குச் செங்குருதி சிந்துபுலித் தீரம் கண்டும்’ (698) – ‘கொத்தியெறி சடலங்கள் குவியக் கண்டார், குண்டுகளும் குழந்தைகளைக் கொல்லக் கண்டார், கத்தியழு கன்னியரின் கற்பும் கண்டார், கண்டும் இவை கடுகளவும் கருணை இன்றி’ (699) – ‘எந்த உயிருக்கும் உயிர் ஆன தந்தை, இனியும்தன் பிள்ளைகளின் இடர் தீராது’ (700) திருக்கோண மலையில் உறையும் இறைவர் வாளாது இருக்கின்றாரே என்று உளம் உருகியும் மறுகியும் பாடுகின்றார்.

தமிழின் அருமையும் தமிழரின் பெருமையும்

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் அருமையும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடியான தமிழரின் பெருமையும் கவிநாயகரால் பாவாரப் பாடல்களில் திட்பமும் நுட்பமும் ஒட்பமும் துலங்க வெளிப்படுத்தப் பெற்றுள்ளன.

“இல்லறத்து மாண்புடனே
     இன்மழலைச் செல்வம் உண்டு;
சொல்லுதிருக் குறள் உண்டு;
      தொல்தமிழர் மரபும் உண்டு;
செல்வ மகன் வணங்கி வரும்
      திருநின்றி யூர் அருள்வார்
மெல்லிதழ்ப் பூங் கழல் உண்டு;
      வேறுஏது வேண்டுவதே?”
(187)

எனத் திருநின்றியூர் திருப்பதிகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் இவ் வகையில் மனங்கொளத் தக்கதாகும்.

“... ... திருவெண்ணெய்
நல்லூர் உள்ளார் திருநாமம்
          நமச்சிவாய எனச் சொன்னால்
சொல்லும் பொருளும் சுவைத்தமிழும்
         துலங்கிச் சிறத்தல் திடமாமே”
(640)

எனத் திருவெண்ணெய் நல்லூர் திருப்பதிகப் பாடல் ஒன்றில் மொழியும் கவிநாயகர், திருவதிகை வீரட்டானத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவர்,

“பண்புடனே திசைஎங்கும் பரந்து வாழும்
      பைந்தமிழர் சாதனைகள் படைக்கச் செய்வார்;
முன்புஅரசில் வீற்றிருந்த மொழிக ளுள்ளே
     மூத்தமொழி முத்தமிழும் செழிக்கச் செய்வார்”
(300)

என்றும் நம்புகின்றார். கவிநாயகரின் நோக்கில், ‘எல்லாம் வல்ல சிவபெருமான், சுவைக்கும் தமிழே யான பிரான்’ (73); ‘தமிழ்மொழி இனிமையில் இருப்பார்’ அவர் (420).
தமிழின் உயர்வையும் தனித்தன்மையையும் செம்மையையும் பறைசாற்றும் வகையில் கவிநாயகர் பாவாயிரத்துள் கையாண்டுள்ள சிறப்பு அடைமொழிகளின் பட்டியல் வருமாறு:

‘அருந்தமிழ்’ (347)
‘அன்புத் தமிழ்’ (280)
‘இன்றமிழ்’ (130)
‘இனிய செந்தமிழ்’ (220)
‘ஒப்பிலாச் செந்தமிழ்’ (910)
‘கன்னலார் தமிழ்’ (650)
‘கன்னற் செந்தமிழ்’ (500)
‘சீரிய செந்தமிழ்’ (160)
‘செந்தமிழ்’ (230; 240; 260; 321; 404; 410; 710; 739; 820; 824; 830; 840; 850;
930; 960; 1040; 1080; 1110; 1130)
‘சுவைத் தமிழ்’ (640)
‘செய்ய தமிழ்’ (395; 695)
‘தன்னிகரில் தமிழ்’ (842)
‘தெள்ளுதமிழ்’ (154; 369)
‘நல்ல தமிழ்’ (290)
‘நல்ல முத்தமிழ்’ (597)
‘நற்றமிழ்’ (660; 740; 761; 974)
‘நிலையான தமிழ்’ (288)
‘நால்வரின் தமிழ்’ (733)
‘படிமச் செந்தமிழ்’ (140)
‘பிறங்கு தமிழ்’ (1098)
‘புதுத்தமிழ்’ (60)
‘பைந்தமிழ்’ (800)
‘பொலியும் தமிழ்’ (662)
‘மந்திரத் தமிழ்’ (528; 869)
‘மலைவிலாத் தமிழ்’ (630)
‘முத்தமிழ்’ (300, 866, 989)
‘வண்டமிழ்’ (402, 610, 770, 929)
‘வல்ல தமிழ்’ (440)
‘வான்தமிழ்’ (830)
‘விளங்குபுகழ்த் தமிழ்’ (190)

முன்னோர் மொழிபொருளும் சொல்லும் போற்றி ஆளுதல்

“முன்னோர் மொழிபொருளே அன்றிஅவர் சொல்லும்
பொன்னே போல் போற்றுவம்”
(நன்னூல், நூற்பா 9)

என்பது பவணந்தி முனிவரின் வாக்கு. இதற்கு ஏற்ப, கவிநாயகர் தமது பாவாரப் பாடல்களில் ‘மூத்தோர்கள்’ எனச் சிறப்பிக்கப் பெறும் சங்கச் சான்றோர்கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குப் புதுநெறி காட்டிய பாரதியார் வரையிலான புலவர் பெருமக்களின் சொற்கள், தொடர்கள், கருத்துக்கள் ஆகியவற்றை எல்லாம் ஒல்லும் வகைகளில் எல்லாம் எடுத்தாண்டுள்ளார். இவற்றை ஊன்றி நோக்கும் போது கவிநாயகர் தம் முன்னோரது பனுவல்களை எந்த அளவிற்கு ஊடுருவி, உள் நுழைந்து, மனம் கலந்து பல நாள், பன்முறை பயின்றிருக்கின்றார் என்பதை உய்த்துணர முடிகின்றது.

“யாதும் ஊர்யா வரும் கேளிர்
     யாரும் அன்பால் சிவமாவர்”
(100)

என்னும் கவிநாயகரின் வாக்கில் கணியன் பூங்குன்றனாரின் புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடலின் முதல் அடியும், திருமூலரின் ‘அன்பே சிவம்’ என்னும் உயிர்ப்பான தொடரும் கைகுலுக்கி நிற்பது கண்கூடு.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
(423)

என்னும் வள்ளுவர் பெருமானின் வாய்மொழியே கவிநாயகரின் கைவண்ணத்தில்,

“எப்பொருள் கற்கினும் கேட்கினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காட்டி யாளே”
(429)

எனப் புதுக்கோலம் கொண்டுள்ளது.

‘எண் குணத்தர்’ (735), ‘மனத்துக்கண் மாசிலர்’ (473), ‘செல்வத்துள் செல்வ மாய திருமுறைச் செல்வத்தை’ (8) என்றாற் போல் திருக்குறளின் உயிர்த் தொடர்களைக் கவிநாயகர் கையாண்டுள்ள இடங்கள் சிறப்பானவை.

“பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பின் புகார்”
(மங்கல வாழ்த்துப் பாடல், அடி. 15-16)

என்பன நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் புகார் நகரின் சிறப்பினைக் குறிக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும் ஈரடிகள். இவற்றின் தாக்கம்,

“பதியெழல் அறி யாத பழங்குடி
கதிபெற...”
(325)

என்னும் கவிநாயகரின் கூற்றில் இடம்பெற்றிருக்கக் காண்கிறோம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர் மரபினைத் தொடங்கி வைத்த பெருமைக்கு உரியவர் திருமூலர். கவிநாயகரின் உள்ளத்தில் திருமூலருக்கு தனிஇடம் உள்ளது. ‘திருமூலர் திருவெண்பா’ என அவர் ஒரு வெண்பா நூலே பாடியிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. இன்னும் ஒரு படி உயர்வாக, ‘திருமூலர் தமிழிலே ஒளிர்ந்து நிற்பார்’ (529) என அவர் இறைவரைச் சுட்டுவதும் மனங்கொளத்தக்கது.

“படமாடக் கோயில் பரமற்கு ஒன்றுஈயின்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அது ஆகாது;
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பரமற்கு அது ஆமே”
(திருமந்திரம், பா.1836)

என்னும் திருமூலர் பாடலும்,

“படமாடக் கோயிலுக்கு நாளும் வந்து
     பணிந்துருகிப் பத்தியுடன் வணங்கு கின்ற
நடமாடும் கோயில்கள்உள் ளேயும் நின்று
     நடமாடி நலஞ்செய்யும் மக்கள் நாதர்...”
(1077)

என்னும் கவிநாயகரின் வாக்கும் ஒத்திசைந்து செல்வது உள்ளங்கை நெல்லிக் கனி.

“அப்பணி செஞ்சடை ஆதிப் பிரான்தன்னை
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்;
முப்புரம் ஆவது மும்மல காரியம்,
அப்புரம் எய்தமை யார்அறி வாரே”
(திருமந்திரம், பா.147)

என்னும் திருமந்திரப் பாடலின் வாமன வடிவமே கவிநாயகரின் கீழ்க்காணும் ஈரடிகள்:


“வீரமுடன் நாம்எரித்த முப்புரங்கள் வேறில்லைச்
சேருமலம் மூன்றும் அவை தேர் என்றார்”
(518)

“விழிக்கு நல்ல விருந்தாவார்
      வேண்டாப் பழிக்கு மருந்தாவார்
மொழிக்குத் தக்க பொருளாவார்
      மூடித் தீங்கு மறைந்துள்ள
வழிக்கு வாய்க்கும் துணையாவார்
      வாழ்ந்து காணும் பயனாவார்”
(783)

என்னும் கவிநாயகரின் பாடலில்,

“விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்; மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை அவள் பன்னிரு தோளும்; பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
(70)

என்னும் அருணாகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடலின் சாயல் அழகுறப் படிந்திருக்கக் காணலாம்.

பாட்டுக்கொரு புலவர் பாரதியார் கண்ணன் பாட்டில், ‘பசிக்கு உணவு’ எனக் கண்ணனைப் போற்றிப் பரவுவார். கவிநாயகரும் இது போலவே, ‘பசித்தவர் உணவிலே பொதிந்திருப்பார்’ (529) எனத் திருவாவடுதுறையில் குடிகொண்டிருக்கும் இறைவரைச் சுட்டுகின்றார். பிறிதோர் இடத்திலும், ‘பசிக்கு உண்ணும் உணவில் உள்ளார்’ (749) என இறைவரைப் போற்றிப் பாடியுள்ளார் கவிநாயகர்.

“உள்ளத்தில் உள்ளான், அடி – அது நீ
     உணர வேண்டும் அடி!
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
     உள்ளேயும் காண்பாய் அடி!”
(கவிமணி கவிதைகள், ப. 13)

என்னும் கவிமணியின் அமுத மொழியினைக் கவிநாயகர் இரத்தினச் சுருக்கமாக,

“உள்ளத்தில் உள்ளவரைக் கோயில் உள்ளும் கண்டேனே” (502)

என ஒற்றை அடியிலேயே உரைத்திருப்பது சிறப்பு.

கவிநாயகர் தம் பாவாரப் பாடல்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முத்திரைப் பாடல் வரியினையும் கையாளத் தவறவில்லை. ஓர் எடுத்துக்காட்டு:

“செய்யுந் தொழிலே தெய்வம் என்பார்” (725)

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமை தான் நமது செல்வம்’ (மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், ப.72) என்பது பட்டுக்கோட்டையாரின் வைர வரியாகும்.

கவிநாயகரின் படைப்புத் திறம்

கவிநாயகரின் பாவாரப் பதிகங்களில் அழகிய உவமைகளும், ஆற்றல் சான்ற சிந்தனைகளும், இனிய சொல் வளங்களும், ஈர்த்து உள்ளத்தை ஆட்கொள்ளும் இலக்கிய நயங்களும், உயரிய வாழ்வியல் விழுமியங்களும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றுள் இன்றியமையாத ஒரு சிலவற்றை ஈண்டுக் காணலாம்.

திருமுறைகளில் மிகுதியான பாசுரங்களைக் கொண்ட தலம் – சுந்தரமூர்த்தி நாயனார் இறைவருடன் தோழமை பூண்டு ஒழுகிய தலம் – அவர் திருத்தொண்டத் தொகையை அருளிய தலம் – திருவாரூர் ஆகும். அத் தலம் குறித்துப் பாடிய பாடல் ஒன்றில்,

“நீரில் லாத பயிரானேன்
     நிழல் இல்லாத மரமானேன்
தேர்செல் லாத தெருவானேன்
     தேசாந் தரியாய் அலைகின்றேன்”
(93)

என மூன்று உணர்ச்சி மிகு உவமைகளைக் கையாண்டுள்ளார் கவிநாயகர்.

திருக்குற்றாலத்தில் திகழும் இறைவர், ‘சாமரைத் தென்றற் சுகம் போல, தழுவிடும் குழந்தைத் தளிர்போல, தாமரை மலரின் இதழ் போல, தண்டமிழ்க் கம்பன் கவி போல, காமனின் இன்பக் கணை போல’ (246) களிப்புறச் செய்து அடியவருக்கு உலகின் இனிமையையும் வீடு பேற்றின் அருமையையும் விளக்கிக் கூறுவாராம். இப்பாடலில் அழகிய உவமைகள் ஐந்து அணிவகுத்து வந்திருப்பது சிறப்பு.

குமரகுருபர சுவாமிகள் நிறுவிய காசி மடத்தின் தலைமை நிலையம் அமைந்துள்ள தலம் திருப்பனந்தாள். இங்கே தாடகை என்னும் அசுரப் பெண் வழிபடும் பொழுது அவளது ஆடை நெகிழ்ந்தது. ஆடையைத் தனது கையால் பிடித்துக் கொண்டு வழிபாட்டினைத் தொடர்ந்து செய்ய, இறைவர் சாய்ந்து அவளது வழிபாட்டை ஏற்று அருளினார். சாய்ந்த மூர்த்தியை நிமிர்த்த மன்னன் யானைகளைக் கொண்டு இழுத்தும் பயனளிக்கவில்லை. அன்புக்குச் சாய்ந்த இறைவர் குங்குவியக் கலய நாயனாரது அன்புக் கயிற்றுக்கே நிமிர்ந்தார். இவ்வரிய நிகழ்வினைப் பற்றிய கவிநாயகரின் அழகிய படப்பிடிப்பு வருமாறு:

“ஆடை வீழவும் ஆர்வுடன் பூசித்த
தாட கைதனி அன்புக்குச் சாய்ந்தவர்
கூடும் அன்புக் குலியர்க்கு நிமிர்ந்தவர்
பீடு கொள்பனந் தாள்அருள் பித்தரே”
(659)

எதுகையும் மோனையும் முரணும் சிறந்து விளங்கும் கவிநாயகரின் முத்திரைப் பாடல் இது!

கவித்துவம் களிநடம் புரிந்து நிற்கும் அழகிய அடைமொழிகளும் அருமையான சொல்லாட்சிகளும் ஆற்றல்சான்ற தொடர்களும் பாவாயிரப் பாடல்களுள் மலிந்து கிடக்கின்றன.

அப்பர் பெருமான் முத்தி அடைந்த தலம், சுந்தரருக்குச் செங்கல்லை இறைவர் பொன்னாக்கித் தந்த அற்புதத் தலம், முருக நாயனார் தொண்டு செய்த தலம் என்றாற் போல் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட தலம் திருப்புகலூர். அங்கு வாழும் மக்களை, ‘செங்கரும்பு மனத்தார்’ (152) என்னும் அழகுத் தொடரால் சுட்டுகின்றார் கவிநாயகர். வாழ்வில் செம்மையான குறிக்கோளுடன் கரும்பு போன்ற இனிமையான பண்பு நலன்களும் வாய்க்கப் பெற்றவர்கள் திருப்புகலூர் வாழ் மக்கள் என்பது கவிநாயகர் உணர்த்தும் குறிப்பு.

இதே போல அடியவர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்-களைப் பாவாயிரத்தின் பிறிதொரு பாடலில்,

“விறகுகளும் வீதிகளில் விற்று வந்தார்
மண்சுமந்து செம்மனத்தி பிட்டும் உண்டார்
மாணிக்கர் பொருட்டு அடியும் வாங்கி நின்றார்”
(439)

என நயமாகக் குறிப்பிடுகின்றார் கவிநாயகர். இங்கே ‘செம்மனத்தி’ என்னும் புதிய சொல்லாட்சியைக் கையாண்டு பிட்டு விற்கும் மூதாட்டியின் மன நலத்தைப் புலப்படுத்தியுள்ளார் கவிநாயகர். மேலும், ‘சென்னியில் முன்னர் மண் சுமந்து, செம்மனச் செல்வியின் பிட்டுண்டார்’ (784) எனத் திருஊர்காவற்றுறை திருப்பதிகத்தில் வரும் சிறப்புக் குறிப்பும் இங்கே மனங்கொளத் தக்கதாகும். ‘பொன்மனச் செம்ம’லை நாம் அறிவோம். இங்கே ‘செம்மனச் செல்வி’யை நமக்கு அடையாளம் காட்டுகின்றார் கவிநாயகர்.

திருவெண்காட்டில் உறையும் இறைவரைப் போற்றி வணங்கும் அடியவருக்குக் கிடைக்கும் வாழ்வு எத்தகையதாக இருக்கும்? அவ் வாழ்வுக்குப் பயன்படுத்தி இருக்கும் பல்வேறு சின்னஞ்சிறு அடைமொழிகள் வாயிலாகவே கவிநாயகர் தம் உள்ளக் கருத்தினைத் திறம்படப் புலப்படுத்தி விடுகின்றார்:

“திருவெண் காடு உறைவார் –
வாழ்த்திப் பெறலாம் வளவாழ்வே
(201)
ஓம்பிப் பெறலாம் உயர்வாழ்வே (202)
சேர்ந்தாற் பெறலாம் திருவாழ்வே (203)
சிந்தித்து எழுந்தால் திருவாழ்வே (204)
போற்றிப் பெறலாம் புகழ்வாழ்வே (205)
பேணிக் கொண்டால் பெருவாழ்வே (206)
புகழ்ந்து பெறலாம் பொருள்வாழ்வே (207)
புகழ்ந்து பெறலாம் புதுவாழ்வே (208)
பரவிப் பெறலாம் பதவாழ்வே (209)
ஏத்திப் பெறலாம் இதவாழ்வே (210)

இங்கே இறைவரை வணங்கினால் கிடைக்கும் வாழ்வின் உயர்வினை உரைப்பதற்கு ஒன்பது வகையான பொருள் பொதிந்த அடைமொழிகளைக் கவிநாயகர் கையாண்டிருப்பது அருமையிலும் அருமை!

பிறிதொரு பாவாரப் பாடலில்,

“வைய வாழ்க்கையின் மாயம் புரிந்தது
தெய்வ வாழ்க்கைஉன் சேவடி சேர்க்குமே”
(355)

எனக் கவிநாயகர் மொழிந்திருப்பதும் இங்கே கருதத் தக்கதாகும். பல்வகை-யான மாயங்கள் நிறைந்தது – மயக்கங்கள் புரிவது – மாசுகள் மலிந்தது – ‘மண்ணியல் வாழ்வு’ (415) எனக் குறிப்பிடும் கவிநாயகர், ‘மின்மினி வாழ்க்கை’ (863) என்னும் நயமான தொடராலும் உலகியல் வாழ்வைச் சுட்டுகின்றார்.

திருமாலும் அயனும் காணா வகையில் இறைவர் சோதியாக நின்ற தலம் திருவண்ணாமலை. அதனால் பஞ்ச பூதத் தலங்களில் அது தீயைக் குறிக்கும். நினைக்க முத்தி தரும் அத் தலத்தில் அருணகிரிநாதர் வாழ்ந்து முத்தி பெற்றார். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை பாடி அருளியதும் அத் தலத்திலேயாம். இத்தகைய பெருமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட திருவண்ணாமலைத் திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் கவிநாயகர் எண் அலங்கார முறையில் ஏறுவரிசையில் பாடி இருப்பது நயம்.

1. ஒருவருமாய் முதல்வருமாய் உலகம் எல்லாம்...
2. இருவர்தாம் ஒருவர்என இயங்கு கின்றார்...
3. மூன்றுவிதக் கண்கொண்டார் நெற்றிக் கண்ணை...
4. நான்குஆகும் வேதத்துஉட் பொருளும் ஆனார்...
5. ஐந்துபெரும் பூதவலு வெல்ல வல்லார்...
6. ஆறுதிரு முகம்தாங்கி அசுரர் தம்மை...
7. ஏழெழுபே ருலகங்கள் கண்ட நாதர்...
8. எண்குணத்தார் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லா(து)...
9. ஒன்பது வாசலைக் கொண்ட உடலைத் தந்தார்...
10. பத்துத் தலையான... இரவணனுக்கு அருள்பா லித்தார்...
(381-390)

திருவண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் இறைவரான அருணாசலேசுவரரின் முழுமுதல் தன்மையை இப் பதிகத்தின் பத்துப் பாடல்களில் கவிநாயகர் வெளிப்படுத்தி இருக்கும் திறம் பயில்வார் நெஞ்சை அள்ளுவதாகும்.
இங்ஙனம் முழுப்பதிகத்திலுமாக அல்லாமல் ஒரு பாடலிலேயே,

“ஐந்தொழில் வல்லார் ஆறுமுகம் கொள்வார்
ஏழிசையாளர் எண் குணத்தர்”
(735)

என்றாற் போல் எண்ணலங்கார உத்தியை நயமாகக் கையாண்டு கவிநாயகர் எழுதிச் சென்றிருக்கும் இடங்களும் உண்டு.

‘பல்லுப் போனவர் பார்வை இழந்தவர், கல்லுப் போன்றவர் யாரும் கடைசியில், வல்லவர் தமை வந்தடை வார்களாம்’ (4), ‘கூட இருந்தே குழி பறிப்பார், குறிக்கோள் இல்லார்’ (455) என்றாற் போல் வழக்குச் சொற்களையும் தொடர்களையும் அழகுறக் கையாண்டு கவிநாயகர் எழுதிச் செல்லும் இடங்களும் பாவாயிரத்துள் உண்டு.

ஒரு முறை மனம் கலந்து, பொருள் உணர்ந்து படித்தாலே போதும், படிப்பவர் நெஞ்ச அரியணையில் ஏறி அமர்ந்து கொள்ளும் ஆற்றல் சான்ற பொன்மொழிகள் கவிநாயகரின் பாவாயிரத்துள் அங்கிங்கு எனாத படி எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. இவ் வகையில் கருதத்தக்க திருவாசகங்கள் சில இதோ:

“வேற்றுமைகள் பாராத விளங்குபுகழ் தமிழுண்டு” (190)
“உற்றவர்க்கும் மற்றவர்க்கும் ஒருவராய தலைவனார்” (261)
“மாசில் தொண்டர் மனத்தில் இருப்பவர்” (322)
“தங்க மானவர் தாயினைப் போன்றவர்” (622)
“வாடும் நிலத்தை வளஞ்செய் கின்ற மழையைப் போன்றவர்” (833)
“தமிழினிற் பூசை செய்து தமிழடி வணங்கு வாமே” (958)
“குட்டக் குட்டக் குனிந்த தமிழர்கள்” (1110)
“அன்பே சிவமானார் தொழும் அடியார்க்கு அமுதாவார்” (1119)
“அன்பரின் நெஞ்சம் ஆள்கின்ற அண்ணல்” (1121)

உயரிய உலகப் பொதுமை வாய்ந்த, நிலையான விழுமியங்களின் பேழையாகவும் அரிய கருத்துக்களின் கருவூலமாகவும் சீரிய சிந்தனைகளின் பெட்டகமாகவும் கவிநாயகரின் ‘பாவாரம்’ திகழ்கின்றது.

நில்லா உலகில் நிலைத்து வாழ விழைவோர் செய்ய வேண்டியது யாது? ‘மில்லியன் டாலர் வினா’ இது! இதற்குக் கவிநாயகர் தரும் அற்புதமான விடை இதோ:

“கல்வி கற்கில்என்? கற்பனை செய்கில்என்?
செல்வம் சேர்க்கில்என்? தேசங்கள் போற்றில்என்?
இல்லை ஈற்றினில் ஏதும் எமக்கதால்
தில்லை நாதரைச் சிந்தைசெய் நெஞ்சமே”
(2)

பட்டினத்தார் உரைப்பது போல, ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!’ எனவே, ‘தில்லை நாதரைச் சிந்தை செய்து’ உய்யுமாறு நெஞ்சிற்கு அறிவுறுத்து-கின்றார் கவிநாயகர்.

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பியும் உதவார்’ என்பது மக்கள் நாவில் தொன்றுதொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி. இங்கே ‘அடி’ என்பது இறைவனின் அடியினை – தாளினை – குறிக்கும். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்னும் பழமொழியும் இறைவனின் பேராற்றலை உணர்த்துவதாகும்.

“உடைமையை இழக்க லாகும்
    உறவினை இழக்க லாகும்
குடிமையைத் துறக்க லாகும்
    கொடுமையை மறக்க லாகும்
கடமையை மறக்க லாகும்
    கடவுளை மறக்க லாமோ?
இடர்கெடு மறைக்காடு உள்ளார்
    இருங்கழல் போற்று வாமே”
(228)

இன்று மனிதன் ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?’ என நிம்மதியைத் தேடி அலைகின்றான்; ‘ஆயிரம்தான் வாழ்வில் வரும், நிம்மதி வருவதில்லை’ எனச் சொல்லி மறுகுகின்றான். இந்நிலையில் அமைதியும் நிம்மதியும் தேடி அவன் சரணடைய வேண்டியது தெய்வத்திடம் தான்.

“செய்யும் செய்கையில் நேர்மையொன்று இல்லை
    திசைகள் எங்கணும் சூழ்ச்சியின் தொல்லை
வையம் வாழ்வாங்கு வாழ்வதும் இல்லை
     மன்ற நீதி கிடைப்பதும் இல்லை
தெய்வத் தைவிட்டு வேறு எங்கு செல்வார்
     தேடிக் காணொணா நிம்மதி தேடி?”
(408)

என வினவுகின்றார் கவிநாயகர்.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு”
(374)

என்பது பொருள் பொதிந்த, நடப்பியல் சார்ந்த வள்ளுவர் வாக்கு. இதனை நினைவு-படுத்தும் வகையில் கவிநாயகர் படைத்துள்ள ஒரு பாவாரப் பாடல் வருமாறு:

“வல்லவர் சிலபேர் ஆயின்
     வலிமையில் லாதோர் பல்லோர்;
செல்வர்கள் சிலபேர் என்றால்
     வறியவர் பலபேர்; சீரார்
கல்வியைக் கற்றோர் சில்லோர்
     கல்லாத பேர்கள் பல்லோர்;
எல்லையில் வேறுபாடு ஏன்
     ஏன்கழுக் குன்றக் கோவே?”
(44)

திருக்கழுக்குன்றத்தில் குடியிருக்கும் இறைவரிடம் கவிநாயகர் தொடுக்கும் இவ்வினா சிந்திக்கத் தூண்டுவது.

முத்தாய்ப்பாக, கவிநாயகர் எல்லாம் வல்ல இறைவரிடம் மனம் கசிந்துருகிக் கனிவுடன் வேண்டுவதெல்லாம் இது தான்:

“வேண்டு வேன்ஏழை நாடுகள் மேல்எழ,
வேண்டு வேன்அன்பு மேதினி ஆண்டிட!”
(360)

சுருங்கக் கூறின், ‘மேதினி எங்கும் உள்ள, மேன்மைகொள் தமிழர் ஓங்க’ (600) வேண்டும் என்பதுவே கவிநாயகரின் வேணவா.

தன்வரலாற்றுக் குறிப்புக்களின் பதிவு

கவிநாயகர் இளமைப் பருவத்தில் கோவை அரசினர் கலைக்கல்லூரியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் (1956-1958) பயின்றார். அக் காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தலம் பேரூர். அப்போது அவருக்குப் பேரூர் ஆதீனத்தை அமைத்த சாந்தலிங்க அடிகளாரைச் சந்தித்து உரையாடும் நல்வாய்ப்பு கிட்டியது. அதனை இதனை,

“காந்தம் போலே கவர்ந்திடுவார்
    கலைநந் தியிலே இவர்ந்திடுவார்
சாந்தம் மனதுக்கு ஈந்திடுவார்
    சங்கத் தமிழும் ஆய்ந்திடுவார்
சாந்த லிங்க அடிகளுக்கும்
    தன்னெறி வளர்க்கப் படியளப்பார்”
(79)

என்னும் பாவாரப் பாடலில் அழகுறப் பதிவு செய்துள்ளார் கவிநாயகர்.

கவிநாயகருக்கு வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும், துறைத்தலைவராகவும், உப அதிபராகவும் எட்டு ஆண்டுக் காலம் (1965-1972) பணியாற்றும் அனுபவம் வாய்த்தது. அதன் வெளிப்பாடே,


“புள்ளி அதிகம் தேர்வுகளில்
     போட்டுச் சித்திகள் தந்திடுவார்”
(78)

என்னும் பாவாரப் பாடல் அடிகள் ஆகும்.


வாழ்நாள் பணியாய்த் திகழும்!
 

நிறைவாகக் குறிப்பிடுவது என்றால்,

“சீருடைய கந்தவனக் கவிஞ! – நீர் அவர்க்குச்*
சிந்தை நிறை அன்பைச் செந்தமிழ்ப்பா வாரம்என
ஐந்து புலனடக்கி ஆர்வமுடன் – நந்தமிழர்
வாழ்வு சிறக்க வழங்கினீர்; உங்களது
வாழ்நாட் பணியாய் அது திகழும்...”
(அணிந்துரை, பாவாரம், ப.22)

என்னும் கலாநிதி சுப்பிரமணியனின் கூற்று, கவிநாயகரின் ‘பாவார’த்தைப் பொறுத்த வரையில் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை எனலாம்.

 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.