பகுப்பாய்வு நோக்கில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் ‘தற்சிந்தனைகள்’
முனைவர் இரா.மோகன்
மூதறிஞர்
செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் (1917-1989) மறைவுக்குப் பிறகு – சரியாகச்
சொல்ல வேண்டும் என்றால் அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு
– வெளிவந்திருக்கும் நூல் ‘தற்சிந்தனைகள்’. நூற்றாண்டு கண்ட
பெருமக்களின் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பதிப்புலகில் தடம் பதித்து
வரும் தமிழ்மண் பதிப்பகம், வ.சுப.மா.வின் இந் நூலினையும்
வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் ஞாயிறு, 15.8.1982
தொடங்கி, வெள்ளிக்கிழமை 14.4.1989 வரையிலான 74 தற்சிந்தனைகள் இடம்
பெற்றுள்ளன. 24.4.1989-இல் மறைவதற்குப் பதினொரு நாட்களுக்கு முன்பு வரை
– அதாவது 14.4.1989 வரை – வ.சுப.மா. தற்சிந்தனைகளை விடாமல் எழுதி
வந்திருப்பதை அறியும் போது நம் நெஞ்சில் வியப்புணர்வே மேலிடுகின்றது.
தற்சிந்தனை எனப்படுவது...
இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும் என்றால் மூதறிஞர்
வ.சுப.மா.வின் நோக்கில் ‘தற்சிந்தனை என்பது வாழ்வு மருந்து’ (த.சி.,
ப.142). ஒருவர் தம் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்குத் ‘தற்சிந்தனை என்னும்
எண்ண வழியே ஏற்ற கருவி’ (த.சி., ப.148) என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை.
தற்சிந்தனைப் பயிற்சியால், ஒருவர் ‘நான் இன்னும் எவ்வகையில் திருந்த
வேண்டும், எக் குற்றங்குறைகளைக் கைவிட வேண்டும்’ என்று எண்ணிப் பார்த்து,
திருந்தி, செம்மையுறுவதற்கான வழிவகை பிறக்கும் என அவர் அறுதியிட்டு
உரைக்கின்றார். மேலும், ‘எப்போதும் தன்னை, தன் எண்ணம் சொல் செயல்களைத்
திறனாய்ந்து சோதித்துத் திருத்திக் கொள்ளும் அக நெறி’ (த.சி., ப.41)
என்றும் தற்சிந்தனை குறித்துக் கூறியுள்ளார்.
முத்தாய்ப்பாக, ‘தற்சிந்தனை என்பது என்ன?’ என்பதற்கு வ.சுப.மா.
விளக்கமாகத் தரும் மறுமொழி வருமாறு:
“தன்னைத் தானே தூய்மையும் வாய்மையும் செய்து கொள்ளும் நெறி
தற்சிந்தனையொன்றே... அவ்வப்போது தன் வாழ்வுக் கூறுகளையும் உறவுகளையும்
எண்ணங்களையும் சொன்முறைகளையும் செயற்பாங்கு-களையும் குடும்ப நிலையையும்
சூழ்நிலையையும் எல்லாம் தீமை குறையுமாறும் நன்மை பெருகுமாறும்
முன்னேற்ற வளர்ச்சி நோக்கித் தானே சிந்தித்துச் செய்வன செய்யும் செயல்
அகமுறை” (த.சி., ப.155).
இனி, இந் நெறிமுறையில் அமைந்திருக்கும் தற்சிந்தனைகளின் நோக்கும்
போக்கும் குறித்து ஈண்டுச் சுருங்கக் காண்போம்.
காந்தியடிகள் மீது தனிப்பெரும் பற்று
மூதறிஞர் வ.சுப.மா., காந்தியடிகள் மீது கொண்டிருக்கும் பற்று மலையினும்
மாணப் பெரிது ஆகும். “என் வாழ்வினைப் பல்லாண்டுகளாகச் செம்மை செய்யும்
மிகப்பெருஞ் சான்றோர் காந்தியடிகள் ஆவர். வாய்மையுறவு அவர்க்கும்
எனக்கும் உண்டு” (த.சி., ப.78) என்னும் வ.சுப.மா.வின் தற்சிந்தனைக்
குறிப்பு இதனை உறுதிப்படுத்தும். “இதுகாறும் உலகத்தாய் பெற்றெடுத்த
சிறந்த முதல் மகன் காந்தியடிகளே” (த.சி., பக்.16-17) என அடிகளுக்குப்
புகழாரம் சூட்டும் வ.சுப.மா., “அடிகளாரின் வாழ்க்கை வெளிப்படை; அதிசயம்,
அற்புதம் என்ற கதைகள் இல்லாத, நம்பிக்கைக்குரிய வரலாறு. உண்மையிலே
மெய்யான அற்புத வாழ்க்கை. உலகம் பெற்ற பெரியவர்களுள் மிகப் பெரியவர்.
மானிடவாற்றல் நல்வழியில் எல்லை-யில்லாதது என்று வாழ்ந்து காட்டியவர்.
உலகப் போராட்டங்களை இயக்கியவர். இந்திய விடுதலையில் உலக நெறி வழங்கியவர்”
(த.சி., ப.21) என அடிகளின் விழுமிய வாழ்க்கையினைக் குறித்து விதந்து
போற்றுகின்றார். தம் நூலில் பெரும்பாலான இடங்களில் ‘பெருமகன் காந்தி’
என்றே அடிகளின் பெயரைச் சுட்டிச் செல்லும் வ.சுப.மா., தனிப்பட்ட
முறையிலும் தமது ஆளுமையில் அடிகளின் வாழ்வு நெறியும் ‘சத்திய சோதனை’யும்
நிகழ்த்தியுள்ள தாக்கம் குறித்து உரிய வகையில் பதிவு செய்துள்ளார்.
“எனக்கோ அவர் (காந்தியடிகள்) நாள்தோறும் நினைவுக்கு வந்து வழிகாட்டும்
தோன்றல். அறுபதாண்டுக்கு மேலாகவே அவர்தம் வாழ்வைப் போற்றி வருகின்றேன்...
காந்தியடிகளின் தன்வரலாற்றைப் பன்முறை படித்திருக்கிறேன். இனி வரும்
ஓராண்டிற்குள் மூன்று முறை படித்து முடிப்பேன்” (த.சி., ப.92) என்னும்
வ.சுப.மா.வின் கூற்று இவ் வகையில் மனங்கொளத் தக்கதாகும். எனவே,
காந்தியடிகளின் தன்வரலாற்று நூலான ‘சத்திய சோதனை’யின் தாக்கமே,
வ.சுப.மா.வின், ‘தற்சிந்தனைகள்’ உருவாவதற்கான அடிப்படைக் காரணம் என
உயத்துணரலாம்.
பதினெட்டாம் வயதில் நேர்ந்த திருப்புமுனை
தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெண்ணின் விழுமிய பண்பு நலன்களாகப் பெண்மை
– தாய்மை – இறைமை என்னும் மூன்றினைச் சுட்டுவார். அதுபோல, மூதறிஞர்
வ.சுப.மா. ‘வாய்மை, தூய்மை, நேர்மைக் குறிக்கோள் கொண்டு வாழ்பவன்’ (த.சி.,
ப.11) எனத் தம்மைக் குறித்துக் கூறிக்கொள்வது குறிப்பிடத்-தக்கது.
வாய்மை என்னும் விழுமியத்திற்கு வ.சுப.மா. தம் வாழ்விலும் வாக்கிலும்
தந்திருக்கும் இடம் மிகப் பெரிது. “இறைவனே என் முழுத்துணை. வாய்மையே என்
வழித்துணை” (த.சி., ப.81) என்னும் அவரது கூற்று இவ்வகையில் நினைவு
கூரத்தக்கது.
வ.சுப.மா.வின் வாழ்வில் பதினெட்டாம் வயதில் ஒரு திருப்புமுனை நேர்ந்தது;
அது அவரது தனி வாழ்வில் ஓர் இன்றியமையாத மைல் கல்லாய் அமைந்தது; அவரது
வாழ்வின் போக்கினையே அடியோடு மாற்றியது. “இரங்கூன் தலைநகரில் என்
பதினெட்டாம் வயதில் வாய்மைக் குறிக்கோளை வாழ்வுக் குறிக்கோளாகக்
கடைப்பிடித்தேன். என் வாழ்வின் வளமெல்லாம் துணைவேந்துப் பதவியுங் கூட
வாய்மையின் விளைவு தானே?” (த.சி., ப.13) என வ.சுப.மா.வே அந்தத்
திருப்புமுனை குறித்துத் ‘தற்சிந்தனை’யில் பதிவு செய்துள்ளார்.
14.4.1989 வெள்ளிக்கிழமையன்று எழுதிய 74-ஆவது ‘தற்சிந்தனை’யிலும்,
“நான் வாய்மையனாக, மெய்யனாக, உண்மையனாக வாழ்வாங்கு வாழ எண்ணுகின்றேன்”
(த.சி., ப.166) என்று தம் உள்ளக் கருத்தினை உள்ளபடி
புலப்படுத்தியுள்ளார். “பொய்யா வாய்மையே என் பிறப்பின் குறிக்கோளும்
நெறியும் ஆகும்” (த.சி., ப.154) என்னும் அவரது வாய்மொழியும் மனங்கொளத்
தக்கதாகும்.
நெடிது வாழ்வேன் என்ற நம்பிக்கை
நிறைந்து செல்வத்தோடு நூறு ஆண்டுகள் வரை வாழ வேண்டும் என்று
விரும்பியவர் கவியரசர் பாரதியார். அவர் தம் கவிதைகளில் இந்த
விருப்பத்தினைப் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அது போலவே
மூதறிஞர் வ.சுப.மா.வும் நெடிது வாழ வேண்டும் என்ற தம் வேட்கையை –
குறைந்தது 85 வயது வரை உடல் நலத்தோடும் மன நலத்தோடும் வாழ வேண்டும்
என்ற விருப்பத்தினை – ‘தற்சிந்தனைக’ளில் பற்பல இடங்களில்
வெளிப்படுத்தியுள்ளார். “இறையருளாலும் என் வாழ்வு நெறியாலும் 85
வயதுக்குக் குறையாமல் வாழ்வேன் என்ற நம்பிக்கை இயல்பாகவுடையேன்” (த.சி.,
ப.48) எனக் குறிப்பிடும் அவர், அதற்கான காரணங்களையும்
‘தற்சிந்தனைக’ளில் பட்டியல் இட்டிருப்பது நோக்கத்தக்கது.
“இனிப்பு நீரோ, இரத்தக் கொதிப்போ கெட்ட பழக்க வழக்கங்களோ இன்மையாலும்,
உணவு உறக்க முதலாயின வரம்புடைமையாலும், இயல்பான உழைப்பு உண்மையாலும்,
எக் கவலைக்கும் அப்பாற்பட்ட இயல்பு நெஞ்சும் அறிவோட்டமும்
வழிப்பார்வையும் பயிற்சியிற் பெற்றிருத்தலாலும், எண்பதாண்டுக்கு மேலாக
நல்லுடலோடும் ஆற்றலோடும் இறையருளால் வாழ்வேன்” (த.சி., ப.24). ‘பழக்க
வழக்கங்கள், புலனடக்கம், பசியெடுப்பு, சுறுசுறுப்பு, உடல் வேலை, எதிலும்
அளவு, இவற்றைக் கடைப்பிடித்தால் இளமை நலம் தொடர்ந்து இருக்கும்’ (த.சி.,
ப.110) என்பது வ.சுப.மா.வின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆனாலும் என் செய்வது? எழுதிச் செல்லும் விதியின் கை வ.சுப.மா.வின்
வாழ்க்கை முடிவினை வேறு விதமாக எழுதி மேற்சென்றது. ஆம், 72 ஆண்டுகள் 18
நாட்கள் என்ற அளவில் அவரது மூச்சுத் தொடருக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பெற்றது! இது அவலத்திலும் பேரவலம்! கொடுமையிலும் பெருங்கொடுமை!
எழுத விரும்பிய நூல்கள்
மூதறிஞர் வ.சுப.மா. ஆராய்ச்சி, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம்,
ஆங்கில நூல்கள் என்ற வகைகளில் இதுவரை எழுதி வெளியிட்ட நூல்கள் 32; “என்
நூல் எல்லாமே வாய்மை வழியினவாகவும் மனமாசுகளைக் குறைப்பனவாகவும்
நலங்களைப் பெருக்குவனவாகவும் அமையும்” (த.சி., ப.109) என்பது அவரது
ஒப்புதல் வாக்குமூலம். இவை தவிர, அவர் எழுதத் திட்டமிட்டிருந்த நூல்கள்
பலவாகும். அவற்றைக் குறித்து அவரே தமது ‘தற்சிந்தனைக’ளில் ஆங்காங்கே
பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது:
1. தொல்காப்பியம் போல மாணிக்கம் என்ற பெயரால் ஓர் இலக்கன நூல் நூற்பா
யாப்பில் படைக்க வேண்டும் என்பது என் பல்லாண்டு அவா (த.சி., ப.31).
2. வ.உ.சி. பற்றிய பாரதச் செக்கு என்ற நாடகம், என் மதுரைப் பணிகள் என்ற
வாழ்வு நூல், என் வாய்மை வாழ்க்கை என்ற வாழ்வு நூல், இன்னவை எழுத
வேண்டும் (த.சி., ப.109).
3. “பாரதீயம் என்ற நூல் எழுதுவது குறித்துச் சில சிந்தனைக்
குறிப்புக்கள் உள. தமிழ்ப் புயல் அல்லது தமிழாயிரம் என்ற குறள் நூல்
பாடிக் கொண்டிருக்கின்றேன். 375 குறள்கள் இயற்றியுள்ளேன்...
தொல்-காப்பியத்துக்கும் திருக்குறட்கும் உரையெழுத வேண்டும் என்ற வேணவா
பல்லாண்டுகளாக உண்டு” (த.சி., ப.18).
4. “இலக்கியப் பொருள் வரலாறு, திருவாசகம் என்னும் உயிர் வாசகம்,
இராமலிங்கம் அல்லது உயிரிரக்கம், வாய்மை வாழ்வு என்ற தன்வரலாறு
இவையெல்லாம் எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம்” (த.சி., ப.117).
‘சொல்லில் வந்தது பாதி – நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி’ என்பது போல்,
வ.சுப.மா. எழுதிய நூல்கள் சிலவே; எழுத நினைத்த – திட்டமிட்ட நூல்கள் –
பல!
மனைவியின் மாண்பும் குடும்ப நலமும்
‘யாண்டு பலவாக நரையில ஆகுதல், யாங்கு ஆகியர்?’ என வினவிய போது, சங்கச்
சான்றோர் பிசிராந்தையார் முதலாவதாகக் குறிப்பிட்டது மனைவியின்
மாண்பினையே; ‘மாண்ட என் மனைவி’ எனத் தம் வாழ்க்கைத் துணையைப் பெருமிதம்
பொங்கக் குறிப்பிட்டார் அவர். வள்ளுவர் பெருமானும் ‘வாழ்க்கைத் துணைநலம்’
எனத் தனி ஓர் அதிகாரமே அமைத்து இல்லாளின் மாண்பினை விதந்து கூறியுள்ளார்.
இக் கொள்கைச் சான்றோர்களின் வழியில் வ.சுப.மா.வும் தமது
‘தற்சிந்தனைக’ளில் ‘ஏகம்மை என்ற என் ஒரே மனைவி’ எனக் குறிப்பிட்டு,
அவரது பண்பு நலன்களைப் போற்றி எழுதியுள்ளார்.
“நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழுநேரமும்
ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே
மனைவி. திட்டமிட்டுக் கணக்கிட்டுக் குடும்பம் நடத்தும் கலை வல்லவள்.
உலகியலறிவு மிக்கவள். இயல்பான கல்வியுடையவள்; அறிவு நாட்டம் கொண்டவள்;
பெருமிதம் உடையவள். நான் மேற்கொண்ட பல துணிவுகட்கு எளிதாக உடன்பட்டவள்.
பதவிகளை இடையே துறந்த காலையும், எதிர்காலம் என்னாமோ என்று கலங்காமல்,
உங்கட்கு இது நல்லது என்று பட்டால் சரிதான் என்று சுருங்கச் சொல்லி
அமைபவள். குடும்ப வுழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு” (த.சி., ப.57).
இன்றைய உலகில் ஈன்று புறந்தந்ந தாயை மட்டுமே பெரிதாகப் போற்றி, கரம்
பற்றிய தாரத்தினைக் கண்டுகொள்ளாமலே இருந்து வருவோர்க்கு – இன்னும் ஒரு
படி மேலே சென்று, துன்புறுத்துவோர்க்கு – இப் பகுதி நல்லதோர்
அறிவுறுத்தல் ஆகும். இதே போல, ஒருவர் தமது முதுமைப் பருவத்தில்
நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், மேற்கொள்ள வேண்டிய
செயல்முறை யாது என்பது குறித்தும் வ.சுப.மா. ‘தற்சிந்தனைக’ளில் ஓர்
இடத்தில் வெளியிட்டுள்ளார்.
“எனக்கு வயது 70. என் மனைவிக்கு வயது 66 நடக்கின்றது. எங்கள் குடும்பப்
பெருங்கடமைகள் நிறைவேறின. ஆதலின் நானும் என் மனைவியும் தனித்தனியாக
22.8.86-ம் தேதி விருப்பமுறிகள் (உயில்) எழுதி ஆவணக் களரியில் பதிவு
செய்திருக்கின்றோம். நாங்கள் எங்கள் மக்கள் ஆதரவில் வளரவில்லை; வளர
வேண்டிய நிலையிலும் இல்லை; அவர்கள் ஆதரவு செய்ததுமில்லை. மக்கள்
வேலைக்குச் சென்று பொருளீட்டிய நாள் முதல் அவர்கள் ஈட்டத்தை அவர்களே
வைத்துக் கொள்ளும்படி விட்டுவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்க முறை” (த.சி.,
ப.89).
‘திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ என்றபடி, இச் செயல்முறையினை முதிய
தலைமுறையினர் யாவரும் பின்பற்றி நடக்க முற்பட்டால் போதும்,
குடும்பங்களில் எந்த ஓர் இடைவெளியும் விரிசலும் இல்லாமல் விலகிப் போகும்;
நிம்மதியும் மகிழ்ச்சியுமே குடும்ப உறவுகள் இடையே களிநடம் புரிந்து
நிற்கும்.
மனநிறைவு தரும் வாழ்க்கை
‘செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே’ என்பது குமரகுருபரின் அமுத மொழி;
இதற்கு ஏற்ப, தமது அறுபத்தேழாவது வயதின் தொடக்க நாளில் (09.04.1983)
மூதறிஞர் வ.சுப.மா. எழுதியுள்ள ஓர் அருமையான ‘தற்சிந்தனை’ வருமாறு:
“பெற்றோர் இருவரையும் சிற்றிளம் பருவத்தே இழந்த நிலையில், வறுமையுற்ற
நிலையில், பதினோராவது வயதில் பருமா சென்று வட்டிக் கடையில்
சிறுகணக்கனாகப் பணி செய்து, பதினெட்டாம் வயதில் வாய்மைக் குறிக்கோளைக்
கடைப்பிடித்துத் தமிழகம் வந்து, பொருள் முட்டுப்பாட்டொடு அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலவர் வகுப்பில் பயின்று, ஆய்வாளனாகவும்
ஆசிரியனாகவும் பணியாற்றி, பி.ஓ.எல், எம்.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி.
முதலான பட்டங்கள் பெற்று, அழகப்பா கல்லூரியில் முதல்வராகும் பேறு பெற்று,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முத்துறை இணைந்த தமிழ்த்துறைப்
பேராசிரியராகப் பணி செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
துணைவேந்துப் பதவிப் பேறு பெற்று, உலகப் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து,
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுவின் தலைவனாக நன்மதிப்புடைய
தமிழகவரசால் அமர்த்தப் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொன்
விழாவில் சிறப்பறிஞர் பட்டம் வழங்கப் பெற்று, இருபதுக்கு மேற்பட்ட
நூல்கள் எழுதி, தமிழகப் புலவர் குழுவின் தலைவனாகவும் அனைத்திந்தியப்
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தலைவனாகவும் விளங்கி வரும்
வாழ்க்கை, வளர்ந்த நிலையை எண்ணிப் பார்க்கையில் மனநிறைவு தருகின்றது” (த.சி.,
ப.22).
வாழ்வாங்கு வாழ வ.சுப.மா.வின் பத்துக் கட்டளைகள்
மூதறிஞர் வ.சுப.மா. பெரிதும் போற்றுவது – மிகுதியும் வலி- யுறுத்துவது
– ‘வாழ்வாங்கு வாழும் குறள் வாழ்க்கை’யையே. அவரது நோக்கில் மண்ணல் நல்ல
வண்ணம் வாழும் குறள் வாழ்க்கை என்பது பின்வரும் பத்துக் கட்டளைகளை
உள்ளடக்கியதாகும்:
1. “வயது முதிர்ந்து கொண்டு சென்றாலும் இளமையுணர்வு பெற்று
எந்நிலையிலும் துடிப்போடும் ஏறுநடையோடும் வாழலாம். இளமையுணர்வு புறஞ்
சார்ந்ததன்று; மனமென்னும் அகஞ்சார்ந்தது” (த.சி., ப.15).
2. “மனிதன் உயர்திணையாதலின் எப்பருவத்தும் எந்நிலையிலும் செம்மைக்கும்
திருத்தத்துக்கும் உரியவன். இதுவே அறிவுடைமை” (த.சி., ப.17).
3. “வாழ்வில் உயர்ந்த எளிய இயல்பான முறை வாய்மை என்பது என் வாழ்விற்
கண்ட தெளிவு. தாழாத தளரா உயர்வுக்கு நேர்வழி உண்மையே” (த.சி., ப.56).
4. “எனது இப் பிறப்பு செய்தற்கு உரியவும் அரியவும் செய்யல் வேண்டும்.
என் பிறப்பு பெருந்தொண்டுப் பிறப்பாகப் பயன்பட வேண்டும்” (த.சி.,
ப.88).
5. “நல்ல அறிவான நயமான நாணயமான கடுமையான உழைப்-பினாலும் திட்டத்தாலும்
போதிய பொருள் தொகுக்க முடியும் என்பது என் வாழ்வுத் தெளிவு” (த.சி.,
ப.107).
6. “காலம் என்ற செல்வத்தை மிகவும் போற்ற வேண்டும். இது பல வகையில் வீணே
கழிகின்றது. கொன்னே கழிந்தன்று முதுமை என்பது ஆகாது” (த.சி., ப.111).
7. “மிகவும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்ற நீண்ட நோக்கால் என்
திட்டங்கள் தடைப்பட்டமையை உணர்கின்றேன்... முதன்முறையிலேயே செம்மைத்
திறம் என்று கொள்ளாமல், மறுமுறை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று
ஓரளவு மனம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இப்போது உணரத்
தலைப்பட்டிருக்கின்றேன்” (த.சி., பக்.112-113).
8. “தூய நினைவால் இறைவனைத் தொழுவதே என் வழிபாடு ஆகும். இதுவே தெளிநெறி...
பெரும்பாலும் படுக்கைக்குச் செல்லுமுன் இறை நினைவு கொள்வது என்
பெருவழக்காகும்” (த.சி., பக்.120-121).
9. “பல்துறைப் பெரியவர்களின் வரலாறுகளைக் கற்பது உறுதியையும் அறிவையும்
வளர்க்கும். எந்த நாட்டவராயினும் எந்த இனத்தவராயினும் எந்தக்
காலத்தவராயினும் எந்த மொழியினராயினும் உலகம் தழுவிய வரலாறுகளைக் கற்பது
உண்மைகளை விரிவாக்கும் என்பது என் நம்பிக்கை” (த.சி., ப.128).
10. “‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்பது வாழ்வின் எச்
செயலுக்கும் எஞ்ஞான்றும் பொருந்தும் அளவறமாகும்... என் வாழ்வின்
முறையான வெற்றிக்கு அளவுப் பண்பே காரணமாம்” (த.சி., பக்.148-149).
திருவாசகமும் திருக்குறளும்
மூதறிஞர் வ.சுப.மாவின் உள்ளத்தில் தனி இடம் பெற்ற தமிழ் நூல்கள் இரண்டு.
ஒன்று, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்; மற்றது, உலகப் பொதுமறையான்
திருக்குறள். இவ்விரு நூல்களையும் பற்றிய தமது உருக்கமான மனப்பதிவுகளை
வ.சுப.மா. ‘தற்சிந்தனைக’ளில் பல இடங்களில் எழுதிச் சென்றுள்ளார்.
“முழுப் புலனடக்கத்தை இன்று முதல் கடைப்பிடிக்கின்றேன். திருவாசகம்
திருக்குறள் மேலாணை” (த.சி., ப.49) என்னும் அவரது சூளுரை இவ்வகையில்
சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. “திருவாசகம் என்னும் உயிர் நூலும்
திருக்குறள் என்னும் அறநூலும் என் மறைகளாகும். இவற்றை மிகுதியாக
நாடுவேன்” (த.சி., ப.121) என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள வ.சுப.மா.,
பிறிதோர் இடத்தில் “திருவாசகம் என் வாழ்வு மறை. எங்குச் சென்றாலும்
திருவாசகம் என் பையுள் இருக்கும்” (த.சி., ப.142) எனவும்
குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்த வரையில் திருவாசகம் ஒரு சமய நூல்
அன்று; ஒரு மதப் பனுவலும் அன்று. திருவாசகம் அவரது உயிர்த் துணை நூல்;
தெய்வ நூல்; மாசில் பனுவல்.
“உயிர் மறையாக, இருளோட்டி ஒளியூட்டும் கதிரியாக, பேராற்றல் தரும்
பிழம்பாக, நம்பிக்கை நாட்டும் குருவாக, இறையுணர்வு ஊட்டும் தாயாகப்
போற்றி வருகின்றேன். திருவாசக நினைவும் இறை நினைவும் எனக்கு ஒன்றே. என்
உணர்வு, என் அறிவு, என் குணம், என் செயல் எல்லாவற்றையும் பண்படப்
பக்குவம் பெறப் பதமாக நெறிப்படுத்தி வருவது திருவாசகமே. திருவாசகமே என்
வாழ்வு; வாழ்வே திருவாசகம்” (த.சி., பக்.157-158) எனப் பல்லாண்டு-களாகத்
திருவாசகத்தினை உயிர் நூலாகவும் உர நூலாகவும் உண்மை நூலாகவும் செயல்
நூலாகவும் கண்டு பயின்று வருவதைச் சுட்டியுள்ளார் வ.சுப.மா.
மூதறிஞர் வ.சுப.மா. தமது ‘தற்சிந்தனைக’ளில் திருக்குறள் சொற்-களையும்
கருத்துக்களையும் பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ளார். ‘இவ்வாழ்வு
நெறியில் திருக்குறள் நல்ல வழிகாட்டி’ (த.சி., ப.16) என்னும் அவரது
கூற்றும் இங்கே கருதத்தக்கதாகும்.
1. “‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்பது உயிர் வள்ளுவம் ஆதலின்
மாசு புகாத, மாசு பிறக்காத, மாசு கலவாத மனத்தைக் காப்பாற்றிக் கொள்வேன்”
(த.சி., ப.17).
2. “திருக்குறள் ‘மருந்து’ என்ற அதிகாரம் கூறும் உடல் நலக் கருத்துக்களை
எண்ணிக் கொள்ளல் தகும்” (த.சி., ப.83).
3. “‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற படி, பல ஆண்டுகட்கு முன்பே,
இத்தகைய ஒரு பரிசு (நோபல்) நோக்கத்திற்குத் தன் ஆக்கங்களை உயர்த்த
வேண்டும் என்ற வேட்கை எனக்கு ஓடியது” (த.சி., ப.93).
4. “‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்ற வள்ளுவம் தனி-மனிதனும்
குடும்பமும் நாடும் என்றும் நாணயமாக முறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய
பெரிய வாழ்வறம்” (த.சி., ப.107).
5. “‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்ற நிலைக்கு நான் உயர வேண்டும்” (த.சி.,
ப.125).
இறை வழிபாடு
“என் ஒரே பற்றுக்கோடு இறையே. என் இறையுணர்வு பொதுவான சமயக் கொள்கை
வழிப்பட்டதன்று; பிறப்பால் சைவனாயினும் என் இறைநோக்கு தூய மனநோக்காகும்.
நெஞ்சந் தொடர்பு என் இறைத் தொடர்பு. இதுவே எளிய இனிய ஆரவாரமற்ற உண்மைத்
தொடர்பு. இவ்வுணர்வு உணர்த்தற்கரியது; மொழியால் விளக்கவியலாது” (த.சி.,
ப.109) எனத் தமது இறைநோக்கு குறித்து ஓர் இடத்தில்
தெளிவுப்படுத்தியுள்ளார் வ.சுப.மா. அவரே ‘தற்சிந்தனைக’ளில் பிறிதோர்
இடத்தில் தமது இறை வழிபாடு பற்றித் தெரிவித்திருப்பது வருமாறு:
“என் இறை தொழுகை, புறத்தார்க்குத் தெரியாது; பிறர் பார்க்க இது
நடப்பதில்லை. இது முக்கியமான கடைப்பிடி. திருநீறு பூசிக் கொள்வதுண்டு.
கோயிலுக்குச் செல்வதும் உருவ வழிபாடு செய்வதும் சில வழிபாட்டுச்
சடங்குகளைப் பற்றுவதும் பொதுவாகவுண்டு. இவை உலகியல் நடப்பு. அவ்வளவே
அதன் நிலை. ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த உருவத்தையும் வைத்து
வழிபடுவதில்லை. தூய தனி நினைவே என் இறை வழிபாடு” (த.சி., ப.122).
இன்னமும் கூர்மைப்படுத்தி வ.சுப.மா.வின் சொற்களிலேயே குறிப்-பிடுவது
என்றால்,
“ ‘தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது’
என்ற தெய்வ வள்ளுவம் யானறிந்த உண்மையாகும்.
‘வேண்டத் தக்க தறிவோய், வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்ற திருவாசகமும்
யானறிந்த மெய்ம்மையாகும்” (த.சி., பக்,122-123).
‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, இவ்விரு மறைமொழிகள் – மந்திர மொழிகள்’
போதும், வ.சுப.மா.வின் இறைநோக்கினையும் வழி-பாட்டினையும் புலப்படுத்த.
இயல்பு என்ற மனப் பக்குவம்
வ.சுப.மா. தமது ‘தற்சிந்தனைக’ளில் பெரிதும் வலியுறுத்திக் கூறும்
வாழ்வியல் அறம் ஒன்று உண்டு. அது, ‘எதனையும் இயல்பு என்று (எடுத்துக்)
கொண்டுவிடும் மனப்பான்மை’ (த.சி., ப.80) ஆகும். “இயல்பு. இது இயல்பு,
இது இயல்புதான் என்ற மனப்பக்குவம் எப்போதும் மிகையினும் குறையினும்
வேண்டும். இயல்பு என்ற நிலைக்கு வரம்பு கூற முடியாது என்றாலும்
அறிவோட்டத்துக்கும் உணர்வொழுங்கிற்கும் மனப்பக்குவத்திற்கும் இயல்பு
என்ற பதம் இன்றியமையாதது. ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற
வள்ளுவம் உடலுக்கேயன்றி மனத்துக்கும் பொருந்தும். கூடுதலும் குறைதலும்
ஏற்றமும் இறக்கமும் வாழ்வும் தாழ்வும் இன்பமும் துன்பமும் புகழும்
பழியும் என்ற இரட்டைகள் இல்லாத காலமில்லை. இவையும் இயல்புகளே” (த.சி.,
ப.113) எனத் தமது பிறிதொரு ‘தற்சிந்தனை’யில் இம் மனப்பான்மையைக்
குறித்து மேலும் விளக்கிக் கூறுகின்றார் வ.சுப.மா.
இந்த இயல்பு நிலை நமக்குப் பக்குவ நிலையாக, நிலைப் பண்பாக வாழ்வில்
அமைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் வ.சுப.மா.
‘தற்சிந்தனைக’ளில் வழிகாட்டியுள்ளார். அவரது அனுபவ மொழி இதோ:
“நோயாளி அலறும் போது அவ்வுணர்ச்சிப்படாமல் என்ன மருத்துவஞ் செய்ய
வேண்டும் என்ற செய்வதறியும் எண்ணமே மருத்துவனுக்கு ஓடு-மன்றோ? இது தானே
மருத்துவவியல்பு. அது போல் எந்நிலையிலும் தன்னைத் தானே மருத்துவப் பதம்
செய்து கொள்ளும் இயல்பு நாடி ஒவ்வொருவர்க்கும் பயிற்சியாதல் வேண்டும்.
எனவே இயல்பு என்பது இயக்கம். இயல்பு என்பது பக்குவப்பாடு. இயல்பு என்பது
எதிர்கால வழி. எதனையும் உணர்ச்சி வயப்பட்டாலும் இயல்பே என்ற ஓர் எண்ணம்
தோன்றி விட்டால் போதும். பின்னர் அறிவோடும் செல்வழி தோன்றும். எதற்கும்
இயல்பு எதுவும் இயல்பு என்ற அறிவு மனப்பக்குவத்தைப் பல காலமாக நான்
பயின்று வருகின்றேன். இயல்பினான் இல்வாழ்க்கை எனவும் இன்பம் விழையான்
இடும்பை இயல்பென்பான் எனவும் இலக்கம் உடம்பு இடும்பைக்கு எனவும் வரும்
குறள்கள் என் நெஞ்சில் படிந்தவை. யான் ஏதும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்கு
என் கடவேன் என்பது திருவாசகம் கற்பிக்கும் இயல்பு” (த.சி., ப.151).
சுருங்கக் கூறின், ‘எல்லாம் இயல்பென எண்ணுக; இயல்பாக எல்லாம் செய்க’ (த.சி.,
ப.160) என்பதே மனித குல நல்வாழ்வுக்கு வ.சுப.மா. வலி-யுறுத்தும் ஒரு
பெருநெறி ஆகும்.
முத்திரைப் பணிகள்
“என் பிறப்புக்குச் சில முத்திரைச் செயல்கள் வேண்டும். நான் மனிதப்
பிறவியாய் வாழ்ந்தேன் என்பதற்கு உலகிற்கும் நாட்டிற்கும் அறிவிற்கும்
மொழிக்கும் நீண்ட நெடிய சில செயற்பாடுகளைச் செய்தாக வேண்டும் என்ற
துடிப்பு எனக்கு ஓர் இடிப்பாயிற்று” (த.சி., ப.14) என்பதற்கு ஏற்ப,
மூதறிஞர் வ.சுப.மா. தம் வாழ்நாளில் உலகிற்கும் நாட்டிற்கும் மொழிக்கும்
சமுதாயத்திற்கும் பயன் தரும் வண்ணம் அரும்பணிகள் பலவற்றை ஆற்றியுள்ளார்.
அவற்றைக் குறித்து அவர் தம் ‘தற்சிந்தனைக’ளில் ஆங்காங்கே பதிவு
செய்யவும் தவறவில்லை.
வ.சுப.மா.வின் முத்திரைப் பணிகளுள் மோனையைப் போல் முன்னே நிற்பது
தமிழ்வழிக் கல்வி இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அரும் பணி ஆகும்.
“எல்லாவற்றினும் பெரிதாக, தமிழ்வழிக் கல்வியியக்கத்தை ஒரு பேரியக்கமாக
நடத்திப் பரப்பி வருகின்றேன். மழலை முதல் பல்கலை வரை தமிழ் ஒன்றே
பயிற்று மொழி, தமிழே வேலை மொழி, தமிழே வாழ்வு மொழி, தமிழே பொருள் வளம்
தரும் வளமொழி என்ற நோக்கில் இவ்வியக்கத்தைப் பரப்பி வருகின்றேன்.
மூன்றாண்டில் இவ்வியக்கம் வெற்றி காணும் என்பது என் நம்பிக்கை” (த.சி.,
பக்.164-165) என்னும் அவரது வாய்மொழியும் இங்கே கருதத்தக்கதாகும்.
“என் வாழ்நாளில் தமிழுக்கு அடிப்படையில்லா அவலத்தைக் கண்டுகொண்டிருப்பதா?
முன்னோ, பின்னோ தமிழகம் முழுதும் தமிழ் பரப்பவும் பிறமொழித் தாகத்தைத்
தீய்க்கவும் தமிழ் யாத்திரை தொடங்க வேண்டும் என்பது பற்றிச்
சிந்தித்து வருகின்றேன்” (த.சி., ப.20) என 14.1.1983-இல் எழுதிய
‘தற்சிந்தனை’யில் குறிப்பிட்ட வ.சுப.மா., சிந்தனை செய்வதோடு மட்டுமே
நின்று விடாமல், செயல் வடிவில் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் சார்பாக
12.6.1988 ஞாயிற்றுக் கிழமையன்று மதுரை மாநகரில் மாபெரும் ஊர்வலமும்
பொதுக்கூட்டமும் நடத்தியதை 18.6.1988 அன்று எழுதிய ‘தற்சிந்தனை’யில்
பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் அம்பலம் ஏறும் தில்லைத் திருமுறை இயக்கம், தமிழ் எழுத்துத்
திருத்தம் தேவை தானா என்ற இயக்கம் ஆகியன தொடர்பான பணிகளுக்கும் வ.சுப.மா.
தம் பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியுள்ளார்.
தன்வரலாற்றுக் குறிப்புக்களின் ஆட்சி
ஒருவரது தற்சிந்தனையில் அவரது தன்வரலாற்றுக் குறிப்புக்கள் இடம்-பெறுவது
என்பது இயல்பினும் இயல்பே. இவ் வகையில் வ.சுப.மா.வின் தற்சிந்தனைகளிலும்
அவரது தனிவாழ்வு பற்றிய இன்றியமையாத தகவல்கள் ஆங்காங்கே
இடம்பெற்றிருக்கக் காண்கிறோம். ஒரு சில சான்றுகள் வருமாறு:
1. “25.8.1982: என் முதல் நூலே மனைவியின் உரிமை என்ற நாடக நூலாகும்.
பின்னர் நெல்லிக் கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் எனச் சில நாடகங்கள்
படைத்தேன். இவை மக்களிடை அத்துணைச் செல்வாக்குப் பெற்றனவாகக்
கருதுதற்கில்லை” (த.சி., ப.15).
2. “14.11.1984: இல்லற வாழ்வு தொடங்கி இன்று முப்பத்தொன்பது ஆண்டுகள்
ஆகின்றன (நேரு பெருமகன் பிறந்த திங்களும் நாளும் நான் மணஞ்செய்து கொண்ட
திங்களும் நாளும் ஆம் என்ற நினைவு எனக்கு வருவதுண்டு. இன்று நேருவின்
95ஆவது பிறப்பு நாளாகும்). என் 28 ஆவது வயதில் திருமணம் நடந்தது.
இப்போது என் வயது 68” (த.சி., ப.54).
3. “9.4.1987: நள பங்குனி 26உ ஞாயிற்றுக்கிழமை 9.4.1917 என் பிறப்பு
நாள். இதுவே சரி. 17.4.1917 என்பது தவறு. எனினும் இதுவே கல்விப் பணியில்
இடம்பெற்ற நாளாயிற்று; என் செய்வது?” (த.சி., ப.116).
4. “9.3.1988: அண்ணாமலைப் பல்கலைக்கழத்து 13 ஆண்டுகள் செய்த பணிக்கு
ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பெறுதற்கு முயன்று வருகின்றேன்” (த.சி.,
ப.125).
செவ்விய மொழிநடை
‘தற்சிந்தனைக’ளில் மூதறிஞர் வ.சுப.மா. கையாண்டிருக்கும் மொழி நடை,
நன்னூலார் ஒரு நூலுக்கு இருக்க வேண்டியனவாகக் குறிப்பிடும் பத்து
வகையான அழகுகளையும் பாங்குறப் பெற்றதாக விளங்குகின்றது; முதிர்ந்து,
கனிந்த அறுபத்தைந்தாவது வயதில் (1982) எழுதப் பெறுவது ஆகையால்,
அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும், திட்பமும் நுட்பமும்
வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இவ் வகையில் நனிசிறந்த சிலவற்றை ஈண்டுக்
காணலாம்.
‘என் வாழ்வே என் செய்தி’ (My
L.ife is My Message)
என்றார் காந்தியடிகள். அவரை அடியொற்றி வ.சுப.மா.வும் இரத்தினச்
சுருக்கமான முறையில் தமது நெடிய வாழ்வின் வாயிலாக உலகிற்கு வழங்கும்
செய்தி இதோ:
“நான் உலகிற்கு வழங்க எண்ணிக் கொண்டிருக்கும் பொருள் இரண்டே: வாய்மை,
தற்சிந்தனை” (த.சி., ப.156).
வ.சுப.மா.வின் மொழி நடையில் வழக்குச் சொற்களின் ஆட்சியும் ஆங்காங்கே
தலைகாட்டுவது உண்டு; ஓர் எடுத்துக்காட்டு: “சில திங்களாக என் உடல் நலம்
சிறிது இடக்குச் செய்கின்றது” (த.சி., ப.166).
“கற்பனவும் இனியமையும் என மணிவாசகர் சொல்லலாம். சாந்துணையும் கல் என்ற
வள்ளுவமே எனக்குப் பொருந்தும்” (த.சி., ப.145): வ.சுப.மா.வின்
‘தற்சிந்தனை’யில் இலக்கிய மணமும் வாழ்வியல் தெளிவும் கைகுலுக்கி
நிற்கும் கவின்மிகு இடம் இது!
“ஒருமைப்பாடு என்பது எருமைப்பாடாகிவிட்டது” (த.சி., ப.21):
வ.சுப.மா.வின் உரைநடையிலும் ஓசை நயம் சிறந்து விளங்கும் என்பதற்கு
இவ்வரி நல்ல சான்று.
“கருவுற்ற பெண் சுமையாகக் கருதாமல் இயல்பு எனக் கருதுவது போலவே, எந்தத்
திட்டங்களையும் இயல்பாக, இயல்பினும் இயல்பாக, யாற்றொழுக்காகக் கருதிச்
செய்யும் மனப்பக்குவமே நல்ல செயல் நெறியாகும்” (த.சி., ப.131): எளிதில்
விளங்கும் உதாரணம் கொண்டு வ.சூ.மா. தன் கருத்தைப் புலப்படுத்தி
இருக்கும் அருமையான இடம் இது!
நிறைவாக ஒரு கருத்து:
“ சிந்தனைகளே – என் எழுத்துக்களே
நான் உலகிற்கு விட்டுப் போகும் பொதுவுடைமைகள்” (த.சி., ப.117)
எனத் ‘தற்சிந்தனைக’ளில் ஓர் இடத்தில் பெருமிதம் பொங்கித் ததும்பப்
பறைசாற்றுகின்றார் வ.சுப.மா. அவரது கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில்,
சீரிய கருத்துக்களின் கருவூலமாக, விழுமிய வாழ்வியல் அறங்களின்
பெட்டகமாக, உயரிய விழுமியங்களின் பேழையாகத் திகழும் ‘தற்சிந்தனைகள்’
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் என்றென்றும் உற்றுழி உதவி, உறுபொருள்
நல்கிடும் ‘பொதுவுடைமைச் செல்வ’ங்களாக விளங்குகின்றன எனலாம்.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|