'இலக்கியம் மக்கள் விடுதலைக்கே – என
எழுத்தில் கலகம் செய்பவன் நான்' (தலை நிமிர்வு, ப.26)
என்பது
பாரதி வசந்தன் 'எழுதுகோல் யுத்தம்' என்னும் கவிதையில் தம்மைக்
குறித்துத் தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். அவரைப் பொறுத்த வரையில்
'எழுத்தே உயிர்மூச்சு'; அவர் நடத்துவது 'எழுதுகோல் வேள்வி'யை – 'எழுதுகோல்
யுத்த'த்தை. 'பாட்டுக்கொரு புலவர்' பாரதியார் 'தீயே நிகர்த்து ஒளி
வீசும் தமிழ்க் கவிதை' என்றது போல், 'என் பாட்டு(ம்) நெருப்பெனப்
பிறக்கிறது' என மொழிகின்றார் பாரதி வசந்தன். பாரதியாரும்
பாரதிதாசனும் பாடித் திரிந்த – நடை பயின்ற – 'புதுவையில் பிறந்து
வளர்ந்ததினால் – ஒரு புதுயுகம் படைக்க விரும்பியவன்' என அவர்
தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளுவது குறிப்பிடத்தக்கது. ப.அன்பழகன்
என்பது அவரது இயற்பெயர். 'தமிழ்த் தேசியத்தின் தலைநிமிர்ந்த
இலக்கியப் போராளி' என்பது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பாரதி
வசந்தனுக்குச் சூட்டியுள்ள புகழாரம். எழுபதுகளில் தொடங்கிய அவரது
எழுத்துப் பயணம் இன்றளவும் தொய்வின்றித் தொடர்ந்து வருகின்றது;
சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை, புத்தக மதிப்புரை, ஹைகூ
கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், தலித் இலக்கியம் என்றாற்
போல் பல்வேறு இலக்கியப் பரிமாணங்களில் அவர் தமது ஆளுமைத் திறம்
மிக்க ஆற்றல்சால் பங்களிப்பினை நல்கி வந்துள்ளார்.
'தலை நிமிர்வு': தமிழிய - தலித்தியக்
கவிதைகளின் தொகுப்பு
'30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை' என்னும் சிறப்புக்
குறிப்புடன் வெளியிடப் பெற்றிருக்கும் 'தலை நிமிர்வு' கவிஞரின்
பதினோராவது நூல். 'தமிழிய-தலித்திய
101 கவிதைகளின் தொகுப்பு'
அந்நூல். 'கவிதை எப்போதும் படிமங்களாலும், குறியீடுகளாலும்,
இருண்மைகளாலும் மட்டும் எழுதப்படுவதில்லை. இப்படி வெளிப்படையாகவும்
சில சமயம் பேசும். அப்படி பேசினால் அதுவும் கவிதை தான். அத்தகைய
கவிதைகள் மக்களுக்கானவை. நான் மக்களுக்காக, மக்களிடம்இ அந்த மக்கள்
பேசுகிற மொழியில் எழுதுகிறவன்' ('காலத்தின் குரல்', தலை நிமிர்வு,
ப.11) எனக் கவிஞரே தம் கவிதைகளின் நோக்கும் போக்கும் குறித்துத்
தெளிவு-படுத்தியுள்ளார். அவர் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு
கவிதையின் கீழும் எழுதப்படும் நாளையும் நேரத்தையும், எழுத நேர்ந்த
சூழலையும் நிரல்படப் பதிவு செய்துள்ளார். இன்ன நேரம் தான் என்று
இல்லாமல், அதிகாலை 3 மணி, காலை 6 மணி, காலை 10 மணி, மதியம் 12 மணி,
மாலை
5 மணி, இரவு 9 மணி, நள்ளிரவு 12.30 மணி என ஒரு நாளின் எந்த
நேரத்திலும் – இல்லை, எல்லா நேரங்களிலும் – எழுதும் திறம் கைவரப்
பெற்றவராகக் கவிஞர் விளங்குவது வியப்பு; சிறப்பு. இத் தொகுப்பில்
காணலாகும் பிறிதொரு தனித்தன்மை நெடுங்கவிதைகளும் குறுங்கவிதைகளும்
அடுத்தடுத்தும் கலந்தும் வருவது. 'இதன் நெடுங்கவிதைகள் பலவற்றைச் 'சட்டென'
எழுதிவிட்ட நான், சில குறுங்கவிதைகளுக்காக இரண்டு மூன்று நாட்கள்
கூட சிரமப்பட்டதுண்டு' (ப.11) என்னும் கவிஞரின் படைப்பனுபவம்
சார்ந்த தன்வரலாற்றுக் குறிப்பு இங்கே மனங்கொளத் தக்கது.
'உயிர் ஆயுதம்'
'உயிர் ஆயுதம்' என்னும் தலைப்பில் பாரதி வசந்தன் படைத்திருக்கும்
குறுங்கவிதை, அவரது படைப்பாற்றலையும் படைப்பில் ஆழ்ந்திருக்கும்
உளப் பாங்கையும் பறைசாற்றும் அற்புதமான பதச்சோறு. ஆத்திசூடி
அமைப்பில் – அகர வரிசையில் – அமைந்த அக் கவிதை வருமாறு:
'அன்னைத் தமிழ் நீ படி / ஆதிக்கம் உடைத்தெறி
இன்னல் கண்டு சோராதே / ஈழம் நம் உயிர் மூச்சு
உன்னால் முடிந்த நன்மை செய் / ஊருக்குள் சாதி ஒழி
எங்கும் தமிழ்நீ பரப்பு / ஏழையின் பக்கம் சேர்ந்து நில்
ஐயப்படுவது அகற்று / ஒளிர வேண்டும் பொதுவுடைமை
ஓர்குலம் மனிதர் நம்பு / ஔவை சொல் மறவேல்
அஃதே நமது கைவேல்' (ப.34)
கவிஞரின் ஆழ்ந்த தமிழுணர்வையும், ஆதிக்க எதிர்ப்பு
மனப்பான்மையையும், இன்னலுக்கு இன்னல் தரும் அவரது ஆளுமைப்
பண்பையும், ஈழத் தமிழர்பால் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், பொதுநல
வேட்கையையும், சாதி ஒழிப்புச் சிந்தனையையும், ஏழை எளியவர் மீது
கொண்டிருக்கும் தனிப்பெருங் கருணையையும், பொதுவுடைமைக் கொள்கைப்
பற்றையும், மனிதர் யாவரும் ஒரே குலம் என்னும் உயரிய
கருத்தியலையும், ஔவை மூதாட்டியின் சொல்லைக் கைவேலாகக் கொண்டு
இயங்கிடும் திறத்தையும் இரத்தினச் சுருக்கமான, சுண்டக் காய்ச்சிய
மொழியில் ஒருசேரப் புலப்படுத்தி நிற்கும் அருமையான கவிதை இது!
தமிழியக் கவிதைகள்
தமிழ் – தமிழர் – தமிழ்நாடு பற்றிய தெறிப்பான சிந்தனைகள்
பாரதி வசந்தனின் கவிதைகளில் அங்கிங்கு எனாத படி எங்கும் நீக்கமற
நிறைந்து காணப்படுகின்றன.
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழன்!
'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' எனப் பாடிய
நாமக்கல் கவிஞர், தமிழனின் தனிக்குணம் எது எனக் குறிப்பிடவில்லை.
பாரதி வசந்தன் 'தமிழர் குணம்' என்னும் தலைப்பில் நறுக்கான ஒரு
குறுஞ்கவிதையைப் படைத்துள்ளார்.
தூங்கி கொண்டிருந்த ஒருவனைத் தட்டி எழுப்பினாராம் கவிஞர். எழுந்தவன்
என்ன செய்தான் தெரியுமா? நின்று கொண்டே மறுபடியும் தூங்கத்
தொடங்கினானாம். யாராய் இருக்கும் என்று ஐயத்தோடு பார்த்தாராம்
கவிஞர். அப்போது தான் அவருக்கு உண்மை விளங்கிற்றாம். கவிஞரின்
எள்ளல் மொழியிலேயே முழுக்கவிதையும் இதோ:
'தூங்கியவனை / தட்டி எழுப்பினேன்
எழுந்தவன் / நின்று கொண்டே தூங்கினான்
யாராயிருக்குமென்று / ஐயத்தோடு பார்த்தேன்
அட / நம்ம தமிழன்.' (ப.93)
'எரிமலையின் விசாரணை' என்னும் தலைப்பில் எழுதிய பிறிதொரு
கவிதையிலும்,
'தமிழர்கள் / ஒப்பனை முகங்களிடம்
தம்மை ஒப்படைத்து விட்டுத் / தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்
யாரும் எழுப்பி விடாதீர்கள் /என்கிற அறிவிப்போடு' (ப.81)
எனக் கும்பகர்ணனைப் போல் நெடுந்துயிலில் ஆழ்ந்திருக்கும் தமிழனைக்
கடுமையாகச் சாடியுள்ளார் கவிஞர்.
உயிருக்கும் மேலான தமிழ்
'அமுதத் தமிழ்', 'குமுதத் தமிழ்', 'தாய்த் தமிழ்', 'இருந்தமிழ்', 'அருந்தமிழ்',
'இளந்தமிழ்',, 'கலைத்தமிழ்', 'சொற்றமிழ்', 'இன்றமிழ்', 'மணித்தமிழ்',
'தனித்தமிழ்', 'உயிர்த்தமிழ்', 'திருத்தமிழ்', 'தென்தமிழ்', 'தெளிதமிழ்',
'பைந்தமிழ்', 'குலத்தமிழ்', 'செந்தமிழ்', 'ஒண்டமிழ்', 'தண்டமிழ்',
'வண்டமிழ்', 'தேன்தமிழ்', 'பூந்தமிழ்', 'இயல்தமிழ்', 'இசைத்
தமிழ்', 'நாகடத் தமிழ்', 'மூத்த தமிழ்', 'பிள்ளைத் தமிழ்', 'இன்பத்
தமிழ்' என
29 பொருள் பொதிந்த அடைமொழிகளால் தமிழின் தொன்மைக்கும்
தனித்தன்மைக்கும், சீர்மைக்கும் செழுமைக்கும் புகழாரம் சூட்டும்
கவிஞர், 'தமிழ் – இன்பத் தமிழ் – எங்கள் உயிருக்கு நேர்' என
முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனுக்கும் ஒரு படி உயர்வாக,
'தமிழ் / எங்கள் உயிருக்கும் / மேல்'
(ப.72)
எனப் பறைசாற்றுவது முத்தாய்ப்பு.
சாதித் தமிழனாய் சரிந்து போன சங்கத் தமிழன்!
இன்றைய அவலங்களில் எல்லாம் பேரவலமாகத் திகழ்வது தமிழர் யாவரும்
ஒன்று சேர்ந்து 'தமிழச் சாதி'யாய் வாழாமல், சாதி உணர்வு மீதூரச் 'சாதித்
தமிழ'ராய் வாழ்ந்து வருவது; 'சங்கத் தமிழன்' இன்று 'சாதித்
தமிழ'னாய் தாழ்ந்து போனது கொடுமையின் உச்சகட்டம். 'நான்காம்
திருமுறை' என்னும் கவிதையில் பாரதி வசந்தன் இந்த நிலை கெட்ட
தமிழரின் போக்கினைக் குறித்து நெஞ்சு பொறுக்காமல் பாடுகின்றார்:
'முதல் இடை / கடை
முச்சங்கம் போயின்
நான்காம் சங்கம் / சாதிச் சங்கம்
இயல் இசை / நாடகம்
முத்தமிழ் போயின்
நான்காம் தமிழ் / சாதித் தமிழ்
சேர சோழ / பாண்டியர்
மூவேந்தர் போயின்
நான்காம் தமிழர் / சாதித் தமிழர்
சாதி சாதி சாதி
சாதி போயின் / சாதி போயின்
இன்னொரு / சாதி'
எனப் பாடி வரும் கவிஞர, முடிவில் ஆற்ற மாட்டாத சினம் பொங்கித்
ததும்ப,
'அடச்சீ
செந்தமிழ் நாடெனும் / போதினிலே
பழஞ்செருப்பு வருகுது / எம் நினைவினிலே' (ப.96)
என வசை மாரி பொழிகின்றார். வாழ்வில் உருப்படியாக எதையேனும்
சாதித்துக் காட்டி 'சாதிக்கும் தமிழ'னாக உயர்வடையாமல, 'சாதிச்
சங்கம்' அமைத்து, 'சாதித் தமிழ்' பேசி, 'சாதித் தமிழ'னாய்த்
தமிழினம் சரிந்து போனதை இக் கவிதையில் கடுமையாகக் குத்திக்
காட்டியுள்ளார் கவிஞர்.
'விசில் தமிழர்கள்'
'மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்' என்பார்கள். தமிழனுக்கோ
ஆயுள் முழுவதும் திரைப்பட மோகம் தான்! இதனைத் தோலுரித்துக் காட்டும்
பாரதி வசந்தனின் குறுங்கவிதை ஒன்று:
'மலையாளிக்கு / மொழிப் பற்று
தெலுங்கனுக்கு / இனப்பற்று
வங்காளிக்கு / நாட்டுப் பற்று
பற்றில்லாத வாழ்க்கை / வாழ்ந்து வரும்
தமிழனுக்கு மட்டும் / சினிமா பற்று' (ப.139)
உயிரினும் மேலான மொழியின் மீதோ, இனத்தின் மீதோ, நாட்டின் மீதோ பற்று
வைக்காமல், ஒன்றுக்கும் உதவாத நிழல் உலகான திரைப்படத்தின் மீது
பற்று வைத்து, 'உடல் மண்ணுக்கு, உயிர் திரை நடிகருக்கு' என வாழ்ந்து
வரும் தமிழனுக்குக் கவிஞர் இக் கவிதையின் வாயிலாகத் தந்திருக்கும்
சாட்டையடி காரசாரமானது! 'புலி நிகர் தமிழனாக' வாழ வேண்டிய தமிழன்,
இன்று 'விசில் தமிழனாக' வாழ்ந்து வருவதைப் பாடும் போது சீற்றத்தின்
உச்சிக்கே சென்று விடுகின்றார் கவிஞர்.
'வந்தேறிகளின் வேட்டைக் காடு'
'வேட்டைக் காடு' என்ற கவிதை அன்பின் ஐந்திணை குறித்து வகுப்பறையில்
மாணவர்களுக்கு விளக்கிக் கூறுவது போல் இப்படித் தொடங்குகின்றது:
'மலையும் / மலை சர்ந்த இடமும்
குறிஞ்சி
காடும் / காடு சார்ந்த இடமும்
முல்லை
வயலும் / வயல் சார்ந்த இடமும்
மருதம்
கடலும் / கடல் சார்ந்த இடமும்
நெய்தல்
மணலும் / மணல் சர்ந்த இடமும்
பாலை'
எல்லாம் சரி, இவற்றின் மூலம் என்ன தான் சொல்ல வருகின்றார் கவிஞர்
என்ற எதிர்பார்ப்பில் கவிதையைத் தொடர்ந்து படிக்கும் போது தான்
அவரது உள்ளக் குறிப்பு தெரிய வருகின்றது.
'தமிழும் / தமிழ் சார்ந்த இடமும்
வந்தேறிகளின் / வேட்டைக்காடு' (ப.59)
என்னும் கவிதையின் முடிப்பு வரிகள் நம் உள்ளத்தில் அதிர்வலைகளை
ஏற்படுத்திஇ நம்மைப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
2.
தலித்தியக் கவிதைகள்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியம் போலக் கிளர்ந்தெழுந்த
பிறிதொரு பேரலை தலித்தியம். 'தலித்' என்பது மராத்திய வார்த்தை.
தலித் இலக்கியம் முதலில் அரும்பியது மராத்தியில்தான். அம்பேத்கர்,
ஜோதிபாபூலே முதலான சிந்தனையாளர்கள் தலித் இயக்கத்தின்
வளர்ச்சிக்குக் கிரியா ஊக்கிகளாக விளங்கியவர்கள் ஆவர்.
'தலித் என்ற சொல் மையப்படுத்துவது ஒரு தத்துவத்தையோ கோட்பாட்டையோ
அல்ல. அது ஒரு வாழ்க்கை முறையைத் தான் முன்னிறுத்துகிறது. அந்தச்
சொல் ஒரு சக்தி, எழுச்சி, உத்வேகம். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு
கனவு, நெருப்பு' (மேற்கோள்: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை,
ப.266) எனக் குறிப்பிடுவார் புகழ் பெற்ற நாவலாசிரியர் இமையம்.
தலித் கவிதைகளின் தன்மைகள்
பேராசிரியர் க.பஞ்சாங்கம் தம் கட்டுரை ஒன்றில் தலித் கவிதைகளின்
பன்னிரண்டு பொதுமைப் பண்புகளைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்திக்
கூறியுள்ளார்:
1. அம்பேத்கர் இயக்கத்தைத் தனது தத்துவத் தளமாகக் கொள்வது. 2.
இதுவரை புனிதம் எனக் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்திலும் உடைப்புக்-களை
ஏற்படுத்துவது. 3. அதிர்ச்சிகளை உற்பத்தி செய்வதன் மூலம் ஆதிக்கக்
கருத்தாடல்களைச் சிதைப்பது. 4. கலகக் குரலை அழகியல் ஆக்குவது. 5.
மீறலை முன்னிறுத்துவது. 6. பின் நவீனத்துவம் சொல்வதைப் போல மகா
எடுத்துரைப்புக்களைத் தவிர்ப்பது. 7. விளிம்பு நிலை மரபான
நாட்டுப்புற மரபை முன்னெடுப்பது. 8. கொச்சை மொழி என்று ஆதிக்க
அமைப்புக்களால் கேவலப்படுத்தப்படும் தலித் மொழியை, பேச்சு மொழியை
முன்னிறுத்துவது. 9. சுயவரலாற்றுக் குணம் கொண்டிருப்பது. 10. தலித்
கவிதைகளைத் தலித்துகளே எழுதுவது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துவது.
11. பெண்ணியத்திற்குள்ளும் தலித் பெண்ணியம் எனத் தனியாக வகுத்து
இலக்கியம் படைப்பது. 12. தலித் வாழ்வியல் நிலம் சார்ந்தது என்பதனால்
பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் நிலம் சார்ந்த அரசியலை
வளர்த்தெடுப்பது. ('தலித் கவிதைகள்'இ புதிய தமிழ் இலக்கிய வரலாறு –
தொகுதி iii,
பக்.763-764)
இனிஇ இக் கருத்தியலின் ஒளியில் பாரதி வசந்தனின் தடம் பதித்த தலித்
கவிதைகள் சிலவற்றை ஈண்டுக் காணலாம்.
வாழ்க்கை முறை
'அடங்க மறு / அத்து மீறு
திமிறி எழு / திருப்பி அடி'
'இது வன்முறை இல்லையா?' என்னும் வினாவுக்குப் பாரதி வசந்தன் தரும்
நறுக்கான விடை: 'அது வன்முறை இல்லை... வாழ்க்கை முறை; தமிழர்
நிலத்தில் சாதியத்துக்கு எதிராக நடத்தப் பெறும் புதிய போர் முறை;
தலைமுறை தலைமுறையாய்த் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை –
தலித்துகளை – மீட்கக் கொடுக்கப்படும் உயிர் விலை' (தலை நிமிர்வு,
ப.56).
பாரதி வசந்தனின் கண்ணோட்டத்தில் நான்கு வகை வருணங்களில் இருந்து
ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சமனின் எழுத்து ஆதி எழுத்து. அவன்
எழுத்து கலக எழுத்து; அதன் பெயர் இப்போது தலித் எழுத்து.
'அவன் எழுத்து
அடிக்கு அடி / உதைக்கு உதை
'ஆகா...' வென்று எழுந்தது / கலக எழுத்து
அதன் பெயரே இப்போது / தலித் எழுத்து' (ப.27)
என்னும் கவிஞரின் வாக்கு இவ்வகையில் மனங்கொளத்தக்கது.
தலித்தியத்திற்கு அம்பேத்கரியம்
பாரதி வசந்தனின் உள்ளத்தில் அம்பேத்கருக்குத் தனி இடம் உள்ளது.
'கடவுள் இல்லையென்று எவனாவது
சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்
அப்பாவும் அம்மாவும் தான் எங்களுக்கு
ஆயிரங்காலத்துத் தெய்வம்
அதற்கடுத்த தெய்வம் / அம்பேத்கர்' (ப.198)
என்னும் கூற்று அம்பேத்கரின் மீது கவிஞர் கொண்டிருக்கும் மலையினும்
மாணப் பெரிய மதிப்பினைப் பறைசாற்றுவதாகும்.
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் இளங்கோவைப் போல் வள்ளுவன் போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்ம, இது வெறும் புகழ்ச்சி இல்லை'
என்பது கவியரசர் பாரதியாரின் வாக்கு; அவரது அடிச்சுவட்டில் நடை
பயிலும் பாரதி வசந்தனோ, கருத்தியல் நோக்கில் அம்பேத்கர், பெரியார்,
மார்க்ஸ் ஆகிய மூவரையும் உயர்த்திப் பிடிக்கின்றார். தமிழ்நாட்டின்
– தமிழர்களின் - தலித் மக்களின் விடுதலைக்கு இம் மூவரது
பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதவை என வலியுறுத்துகின்றார். 'அவசியம்'
என்னும் தலைப்பில் பாரதி வசந்தன் படைத்துள்ள கவிதை வருமாறு:
'தலித்தியத்திற்கு / அம்பேத்கரியம்
தமிழியத்திற்குப் / பெரியாரியம்
பொதுவுடைமைக்கு / மார்க்சியம்
தமிழ்நாட்டின் / விடுதலைக்கு
இந்த மூன்றும் / அவசியம்
புரியாத / மர மண்டைகள்
அப்பாலே போய் விடுவது / அதை விடவும்
அவசியம்.' (ப.159)
தலித் மக்களைப் பற்றிய சுய விமர்சனம்
தலித் மக்களில் உள் ஒன்று வைத்துப் புறம் வேறாய் வாழ்ந்து வரும் ஒரு
சாராரைப் பற்றிய கூர்மையான விமர்சனமாகக் கவிஞர் பாரதி வசந்தன்
படைத்திருக்கும் கவிதை 'துரோகி'. பாடுபொருளாலும் பாடுமுறையாலும்
தனித்து விளங்கும் அக் கவிதை வருமாறு:
'பிச்சேரியில்'ழூ
பறையர்கள் இருக்கும் / பழஞ்சேரியில் பிறந்து
அப்பா கையேந்தி / அழுக்குத் துண்டில்
முடிந்து வந்து கொடுத்த / மய்யக் கிழங்கோடு•• சாப்பிட்டவன்
அரசாங்க / உத்தியோகத்துக்குப் போனதும்
தகப்பன் பேர் சொன்னால் / தன் சாதி தெரியுமென்று
கை நிறைய / சம்பாதிக்கிறவளாய்ப் பார்த்து
கல்யாணம் செய்து கொண்டு / டவுனில் வீடெடுத்து
தலைமறைவாய் வாழ்கிறான் / காசுக்கு பீ தின்ன
அம்பேத்கரையே / மறந்தவனுக்கு
அப்பனாவது / மசுராவது' (ப.73)
தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த, இட ஒதுக்கீட்டின் மூலம் ஒரு
வேலையும் கிடைத்து உச்சிக்குச் சென்றதும், தான் பிறந்த, வளர்ந்து,
வாழ்ந்த தலித் சூழலை முற்றிலுமாக மறந்து, உயர்சாதியைச் சார்ந்த
பெண்ணைக் கலப்பு மணம் செய்து கொண்டு, 'புதிய பிராமணர்க'ளாய் மாறி
விடும் துரோகிகளைப் பாரதி வசந்தன் இக் கவிதையில் அடையாளம்
காட்டியுள்ளார்.
பிறிதொரு கவிதையிலும் கவிஞரின் உள்ளம் இங்ஙனம் பொங்கிக்
குமுறுகின்றது:
'கற்பி' என்றது அந்தக் / கறுப்புச் சூரியன்
என்றைக்காவது நீ / சேரிக்குக் கற்பித்தது உண்டா?
பிச்சேரி –
புதுச்சேரியின் பேச்சு வழக்கு
•மய்யக் கிழங்கு – மரவள்ளிக் கிழக்கு
சேரியிடம் இருந்தாவது / கற்றதுண்டா...?
'ஒன்று சேர்' என்றது அந்த / உரிமைக் காற்று
எப்போதாவது நீ / சேரி சனங்களை
ஒன்று சேர்த்திருக்கிறாயா? – இல்லை
சேரி சனங்களிடமாவது / ஒன்று சேர்ந்திருக்கிறாயா...?
'கலகம் செய்' என்றது அந்தக் / கால நெருப்பு
அதை மட்டும் சரியாகச் செய்கின்றாய்.
சேரிகளுக்கும் / சேரிகளின் விடுதலைக்கும்
எதிராக எப்போதும் / கலகம் செய்து கொண்டிருக்கிறாய்...
போடா! / போய்த் தூக்குமாட்டித் தொங்கு.
அம்பேத்கரை / அவமானப்படுத்துவதை விடவும்
அது மேல்.'
பொதுவாக, தலித் சமூகத்தில் பிறந்து கலப்பு மணம் புரிகின்றவர்கள்
விரும்புவது எல்லாம் உயர்சாதியைச் சார்ந்த பெண்களைத் தான். மேலும்,
இவர்களது தனிப்பட்ட பேச்சுக்களில் அடிக்கடி ஒலிப்பது: 'இப்ப எல்லாம்
யார் சார் சாதி பாக்குறாங்க?' இவர்கள் தலித் நலச் சங்கங்களில்
உறுப்பினர் ஆவது இல்லை; வெளியில் இருந்து ஆதரவு தருவதும் இல்லை.
மேலும், தாம் ஒரு தலித் என்று அடையாளம் காட்டிக் கொள்வதும் இல்லை.
இவர்களைப் போன்ற 'கோடாரிக் காம்பு'களுக்குப் பாரதி வசந்தனின் கவிதை
வலிமையான ஒரு சாட்டையடியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இங்ஙனம்
தான் சார்ந்த சமூகத்தையே நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறத்தோடும்
விமர்சனம் செய்யும் பாங்கு வளரும் போது, தலித் கவிதைகள் இன்னும்
செழுமையும் கூர்மையும் பெறும் என்பது உறுதி.
அன்பாதவன் குறிப்பிடுவது போல், 'நிதர்சன உண்மையும் நிஜமான கோபமும்
கொண்ட இக் கவிதைகளின் சிறப்பே, தவறு செய்பவர் யாராயிருப்பினும்
அதைத் தட்டிக் கேட்கும் தைரிய மனம் தலித் கவிஞர்களுக்கு
வாய்த்திருப்பது வெகு சிறப்பான அம்சமாகும்' (தற்காலக் கவிதைகள் ஒரு
பார்வை, ப.29).
iii.
சென்ரியு
கவிதைகள்
'புதுச்சேரியின் முதல் சென்ரியு தொகுப்பு' என்னும் சிறப்புக்
குறிப்புடன் பாரதி வசந்தன் 2004-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள கவிதை
நூல் 'யாதெனில்'. இந் நூல் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பு வெளியீடு
என்பது குறிப்பிடத்தக்கது. 'பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில்
அறிமுகம் செய்து வைத்த ஹைக்கூவுக்கும், பாரதியைப் போற்றிப்
பாதுகாத்த புதுச்சேரி மண்ணுக்கும்' இந்த சென்ரியு கவிதை நூலைக்
காணிக்கையாக்கியுள்ளார் கவிஞர். 'சென்ரியு: ஒரு புதிய ஹைக்கூ'
என்னும் தலைப்பில் நூலுக்கு எழுதிய முன்னுரையில், 'அடிப்படையில்
ஹைக்கூவும, சென்ரியும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும்
வெவ்வேறானவை... அசை, அலகு, அடி என்கிற கணக்கின் படி பார்த்தால்
சென்ரியுவும் ஹைக்கூவைப் போலத் தான் வடிவம் உடையது. ஆனால்
சென்ரியுவின் உள்ளடக்கத்தில் நகைச்சுவையும் மனித இயல்புகள்
பற்றியுமே பிரதானமாக இருப்பதால் அது 'எள்ளல் இலக்கிய'மாகக்
கருதப்படுகிறது' (ப.6) எனக் கவிஞரே சென்ரியு பற்றிய தம் கருத்தினைப்
பதிவு செய்துள்ளார்.
'வரைபடங்களில் நாடுகள்
தமிழ்நாடு மட்டும்
திரைப்படங்களில்' (யாதெனில், ப.9)
எனத் தொகுப்பில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் சென்ரியு கவிதை
தமிழரின் திரைப்பட மோகத்தினை எள்ளி நகையாடுகின்றது.
'கட்டியிருந்த கோவணமும்
களவு போனது
கனவு மயக்கத்தில் தமிழர்கள்' (ப.11)
என்னும் சென்ரியு கட்டியிருந்த கோவணமும் களவு போனது தெரியாமல் கனவு
மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழர்களைச் சாடுகின்றது.
படிப்பவர் நெஞ்சங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் அரசியல்
நையாண்டியுடன்
(Political Satire) கூடிய
சென்ரியு கவிதைகள் இத் தொகுப்பில் பல்கிக் காணப்படுகின்றன. ஓர்
எடுத்துக்காட்டு:
'சீனாவில் மரண தண்டனை
இங்கே மந்திரி பதவி
மக்களைத் தான் தூக்கில் போட வேண்டும்' (ப.65)
சீன நாட்டில் ஊழல் செய்த அரசியல்வாதிக்கு உடனடியக மரண தண்டனை
விதிக்கப்படுகின்றது; நம் நாட்டிலோ ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கு
மந்திரி பதவி தரப்படுகின்றது. 'பாஞ்சாலி சபத'த்தில் பாஞ்சாலி மாடு
நிகர்த்த துச்சாதனனால் இழுத்துச் செல்லப்படுவதை வெறுமனே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த ஊராரின் கீழ்மையை, 'நெட்டை மரங்கள் என
நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?' எனப்
பாரதியார் சீற்றம் கொப்பளிக்கப் பாடுவது போல், பாரதி வசந்தனும் 'மக்களைத்
தான் தூக்கில் போட வேண்டும்' என்னும் கவிதையின் ஈற்றடியில் தமது
கடுங்கோபத்தை வெளிப்படுத்துகின்றார்.
'அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்'
சினிமாவிடம் தோற்றது சிலப்பதிகாரம்' (ப.65)
என்னும் சென்ரியு 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்னும்
சிலப்பதிகாரத்தின் பாவிகம் சினிமாவிடம் தோற்றுப் போவதைத் தனக்கே
உரிய பாணியில் விமர்சனம் செய்கின்றது. பாரதி பாடியதற்கு மாறாக, 'சூதும்
வாதும் பண்ணும் படிச்சவன், ஓஹோ என்று வாழ்வது தானே இன்றைய நடப்பு?
நிதர்சனம்?'
'வாய்மையே வெல்லும் – சில சமயம்' என்பார் எழுத்தாளர் சுஜாதா. பாரதி
வசந்தனோ,
'வாய்மையே வெல்லும்
எப்போதும் இறுதியில்
இப்போது இடைவேளை' (ப.63)
என அங்கதச் சுவை கலந்த எள்ளல் குறிப்போடு பாடுகின்றார்.
தமிழர்களுக்குத் தலைநிமிர்வை ஏற்படுத்தும்
எழுத்து
முத்தாய்ப்பாக, மக்கள் கவிஞர் இன்குலாப் குறிப்பிடுவது போல், 'பாரதி
வசந்தனின் 'தலை நிமிர்வு' எனும் அருமையான இந்தக் கவிதைத் தொகுதி (கூடவே,
இத்தொகுதியுடன் அவரது ஒட்டுமொத்த எழுத்துக்கள் எல்லா-வற்றையும் நாம்
சேர்த்துக் கொள்ளலாம்) தமிழர்கள் அனைவருக்குமான தலைநிமிர்வை
ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி' (ப.21).