நம்பிக்கையை விதைக்கும் உளவியல் கவிஞர் சிவ.சிவகுமார்

முனைவர் இரா.மோகன்


ருபதாம் நூற்றாண்டு கண்ட தேசியக் கவிஞர் பாரதியார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்; காந்தியக் கவிஞர் வெ.இராமலிங்கம்; குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பர் உவமைக் கவிஞர் சுரதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்; ஆய்வறிவுக் கவிஞர் குலோத்துங்கன். வாழையடி வாழை என வரும் இக் கவிஞர் வரிசையில் அண்மையில் (2013) சேர்ந்திருப்பவர் சிவ.சிவகுமார். அவர் ஓர் உளவியல் கவிஞர்; '2 நிமிடம் போதும்!' என்பது அவரது 46 உளவியல் கவிதைகளின் தொகுப்பு ஆகும். 'இக்கால இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக நான் எடுத்த ஒரு சிறு முயற்சி இது' (ப.9) என இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் குறிப்பிட்டிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அடிப்படையில் சிவ.சிவகுமார் ஒரு பொறியாளர்; இயற்கை மருத்துவத்திலும் யோகாவிலும் தேர்ச்சி பெற்றவர்; பயிற்சி அளிப்பவர்; உளவியல் புலமை கொண்ட வாழ்வியல் மதியுரைஞர். இவரைக் கவிஞராகச் செதுக்கியதில் மின் வாரியத் தமிழ் ஆர்வலர்களின் அமைப்பான 'மின் இலக்கியப் பூங்கா'விற்குப் பெரும்பங்கு உண்டு. சிவ.சிவகுமாரின் கன்னி முயற்சி
'2 நிமிடம் போதும்!' இதனைக் கவிஞர் 'இக்கால இளைஞர்களுக்கு'க் காணிக்கையாக்கி இருப்பது இளைய தலைமுறையினர் மீது அவருக்கு உள்ள ஆழ்ந்த அக்கறையைப் பறைசாற்றுவது.

'நொடி ஒன்று போதும்!'

மேலாண்மை இயலில் முடிவெடுத்தல் (னுநஉளைழைn அயமiபெ) என்பது ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறும். ஒரு மனிதன் நெருக்கடியான நேரத்தில் எடுக்கும்; சரியான முடிவு அவனது வாழ்வின் போக்கையே அடியோடு மாற்றி விடும்; தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடும். கவிஞர் சிவகுமாரின் சொற்களில் குறிப்பிடுவது என்றால்,

'நொடி ஒன்று போதும்
பொறி ஒன்றைப் பற்றவைக்க
வாழ்க்கையை மாற்றிப் போட!

வெற்றி மனிதன் ஆவதும்
வெற்று மனிதன் ஆவதும்
ஒரு நொடி முடிவில் தான்!'
(2 நிமிடம் போதும், ப.13)

ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி எல்லோருக்கும் காலத்தின் அளவு என்பது ஒன்று தான். வசதி படைத்த டாட்டா, பிர்லாவே ஆனாலும் - வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் கந்தசாமி, குப்புசாமியே ஆனாலும் - ஒரு நாள் என்றால் இருபத்து நான்கு மணி நேரம் தான்; ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் நிச்சயமாய் அனைவருக்கும். கூடுதலாக ஒரு நொடி நேரத்தைக் கூட எவரும் விலைக்கு வாங்கி விட முடியாது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இவ் வகையில்,

'காலமெனும் பேருந்து
காத்து நிற்பதில்லை நமக்காக
ஏறினால் இலக்கு வரும்
நின்றுவிட்டால் / சென்று விடும்
நம்மைத் தாண்டி!'
(ப.13)

எனக் கவிஞர் நமக்குத் தரும் எச்சரிக்கை இங்கே மனங்கொளத்தக்கது.

வரலாறு எனப்படுவது...

'வரலாறு ...
தோன்றிச் செல்பவர்களின் கதையல்ல!
ஊன்றி செல்பவர்களின் கதை!'
(ப.14)

என்னும் வரிகள் கவிஞரை அடையாளம் காட்ட வல்ல முத்திரை வரிகள். அவரது அகராதியில் வரலாறு என்பது நேற்று வந்து - இன்று இருந்து – நாளை போவது அன்று; வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது அன்று; 'பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று' என 'வேடிக்கை மனித'ராக வீழ்ந்து மடிவதும் அன்று. ஏதேனும் ஓர் அடையாளத்தை ஆழமாக ஊன்றிச் செல்வதே – சாதனையை நிகழ்த்திக் காட்டுவதே – பொருள் பொதிந்த வாழ்க்கை ஆகும். இவ்வகையில் கவிஞர் தமக்கென்று சில முடிந்த முடிபான – திட்டவட்டமான – கருத்தியல்களைத் 'தோன்றிச் செல்வது அல்ல' என்னும் கவிதையில் வகுத்துக் தந்துள்ளார். அவரது பார்வையில் 'வாழ்க்கை... ஒரு நல்ல கேள்வி / இல்லை யாரிடமும் / சரியான பதில்! மரணம்... ஒரு நல்ல பதில் / இல்லை உரிமை யாருக்கும் / கேள்வி கேட்க! வலி... மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் / தெரிந்த ஒருவனுக்கு / வாழ்க்கை ஓர் அழகுதான்! இன்பம்... இந்நொடி இவ்விடம் / இன்பம் இல்லை என்றால் / எங்கும் இல்லை இன்பம்! விடியல்... விடியும் போதல்ல / நாம் விழித்திடும் போது! ஞானம்... தேடி அலைவதல்ல / நம்மை நாமே தோண்டி எடுப்பது!' (ப.14).

வாழ்க்கை ஓர் அழகிய பயணம்

கவிஞரின் வாழ்க்கைத் தத்துவம் எளியது; இனியது; நடைமுறைக்கு உகந்தது; பழந்தமிழ் மரபின் தொடர்ச்சியாய் விளங்குவது. 'அர்த்தம் தேடி...!' என்னும் கவிதை இவ் வகையில் குறிப்பிடத்தக்கது. இக் கவிதையின் தொடக்கத்தில் மனிதன் வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைவதையும், அவன் காணும் வாழ்க்கை ஆயிரம் அர்த்தங்கள் கொண்டதாக விளங்குவதையும் சுட்டிக்காட்டும் கவிஞர், 'வாழ்க்கை ஓர் அழகான நாவல்!' என்றும், 'வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்' என்றும், 'வாழ்க்கை ஒரு விசித்திரம்' என்றும், 'வாழ்க்கை ஓர் அழகிய பயணம்' என்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துரைத்து, முடிவாக,

'வாழ்க்கை நிலையானது
வாழும் வரை கொண்டாடுங்கள்!'


என மொழிகின்றார்; முத்தாய்ப்பாக,

'இறந்தபின் சென்று சேர்வது
சொர்க்கம்' என்பது இருக்கட்டும்!
இருக்கும் இடத்தை வாழும்பொழுதே
சொர்க்கமாக்கி விட்டுச் செல்லுங்கள்!'
(பக்.16-17)

என மனித குலத்திற்கு அறிவுறுத்துகின்றார்.

பிறிதொரு கவிதையிலும் 'நம் அழுகையுடன் ஆரம்பித்து / பிறர் அழுகையுடன் முடிவடையும் / அழகியதோர் பயணம்!' என வாழ்க்கைக்கு விளக்கம் தரும் கவிஞர், 'வாழ்க்கை என்பது / அமைவது அல்ல / நாம் அமைத்துக் கொள்வது!' (ப.24) என உரைப்பது நுண்ணிதின் நோக்கத்தக்கது.

உறவுகள் மேம்படக் கவிஞர் முன்மொழியும் வழிமுறை

இன்று உலகெங்கும் கட்டிடங்கள் வானளாவ உயர்ந்து வளர்கின்றன் ஆனால், மனித உள்ளங்கள் உயர மறுக்கின்றன, நான்கு திசைகளிலும் பாதைகள் அகன்று செல்கின்றன் ஆனால், மனிதனின் எண்ணங்கள் என்னவோ குறுகிச் செல்கின்றன.

நிலவினில் நாம் கால்களைப் பதித்து விட்டோம்; ஆனால், அண்டை வீட்டுடன் நமக்கு அறிமுகம் இல்லை. ஏவுகணைகள் பற்பலவற்றை வாங்கிவிட்டோம்; விண்ணில் செலுத்தியும் விட்டோம்; ஆனால், மனித நேயங்களை விற்றுவிட்டோம்!

உறவுகள் பற்பலவற்றைப் பெருக்கி விட்டோம்; ஆனால், உணவின் தரமோ குறைந்துவிட்டது. மதங்கள் பற்பலவற்றை வளர்த்திட்டோம்; அடிப்படையான மனித நேயத்தைத் தொலைத்து விட்டோம்.

இன்று வகைவகையான மருந்துகளைப் பெருக்கினோம்; ஆனால், நோயற்ற வாழ்வினைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். வகைவகையான வசதிகளைப் பெருக்கி விட்டோம்; ஆனால், அவற்றை அனுபவிக்கத் தேவையான நேரத்தைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

அண்டை நாடுகளுடன் சண்டைகள் செய்து, பொறாமை எண்ணம் கொண்டு போட்டி மனம் வளர்த்தோம்.

விலங்கினப் பதிவில் இருந்து விடுபடாமல், வாழ வழி கற்றும், வாழ்க்கையைக் கற்காமல், வாழ்க்கைக்குப் பல ஆண்டுகள் சேர்த்தோம்!

புற உலகில் வெற்றி பெற்றும், அக உலகில் அமைதியைத் தேடினோம்! இந்த வாழ்க்கை வேண்டியா இவ்வுலகில் பிறப்பெடுத்தோம்?

'சிந்திப்போம்! சிலவற்றை மாற்றுவோம்! என முழங்கிவிட்டு, கவிஞர் முன்மொழியும் மணிமொழிகள் இவைதான்:

'வாசித்து மட்டும் பயனில்லை / நேசிப்போம் இந்த உலகை!
அன்பு கொண்டு வெல்வோம் / அனைத்து உயிர்களையும்!'


உறவுகள் மேம்படுவதற்கு மனித குலத்திற்குக் கவிஞர் பரிந்துரைக்கும் நெகிழ்ந்த சொற்கள் நான்கே நான்கு தான்:

'மன்னிக்கவும்'
'வருந்துகிறேன்'
'நேசிக்கிறேன்'
'நன்றி''
(பக்.22-23)

என்னும் நான்கு நெகிழ்வான சொற்களை மட்டும் மனித குலத்தின் உதடுகள் உதிர்த்தால்-உச்சரித்தால்-போதும், வாழ்வில் உறவுகள் மேம்படும்; உலகம் இன்பம் விளையும் பூந்தோட்டம் ஆகும்.

'மனதில் நெருப்பு வேண்டும்!'

வாழ்வில் நிறையச் சாதிக்க வேண்டும் என்று வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது; சாதித்துக் காட்ட வேண்டும். கனவு கண்டால் மட்டும் போதாது; காரியமும் ஆற்ற வேண்டும். வள்ளுவர் கூறுவது போல்,

'ஒருபொழுதும் வாழ்வதும் அறியார்; கருதுப
கோடியும் அல்ல பல.' (337)

இதுதான் நடைமுறை உண்மை; பலரது வாழ்க்கை அனுபவம். இத்தகையோரை நோக்கிக் கவிஞர் கூறுவது இது தான்:

'வெள்ளமாக ஓடும் நீர் / பள்ளத்தில் பாயும் போது
தவறி விழும் ஒருவன் / தத்தளித்து நீரில் மூழ்கி
மூச்சு விடத் தவித்து / நீர்ப்பரப்புக்கு மேல் வர
உயிருக்குப் போடுவான் ஆட்டம்!'


'சாதிக்க நினைக்கும் ஒருவனுக்கு / வேண்டும் இந்தத் தவிப்பு' என்கிறார் கவிஞர். மேலும், 'அது-அந்தத் தவிப்பு-தரும் மனதில் நெருப்பு / அமைந்து விட்டால் அது சிறப்பு!' என வலியுறுத்துகின்றார் அவர்.

'சாதனைக்குப் பொறுப்பு
மனதில் எரியும் நெருப்பு!'
(ப.48)

என்னும் முத்தாய்ப்பான வரிகளுடன் அக் கவிதை முடிவடைவது சிறப்பு.

'எண்ணத்தின் வலு எதையும் செய்யும்!'

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்'
(666)

என்பது 'வினைத்திட்பம்' அதிகாரத்தில் வான்புகழ் வள்ளுவர் படைத்துள்ள அமுத மொழி; அனுபவ உண்மை. இதற்குக் காந்தியடிகளின் வாழ்கில் இருந்து மேற்கோள் காட்டி, 'எண்ணத்தின் வலு எதையும் செய்யும்!' என்னும் புதுக்கவிதை வடிவம் தந்துள்ளார் சிவ.சிவகுமார். 'ஆதவன் உதிப்பதும் மறைவதும் எங்களைக் கேட்டுக்கொண்டு தான்!' என்று சொல்லும் அளவிற்கு ஆதிக்க வெறியை மனதில் கொண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களையே அரண்டு, அதிர ஓட வைத்தாராம் காந்தியடிகள்! அதுவும் எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டான அரை வேட்டியுடனாம்! அண்ணல் கையில் எடுத்த ஆயுதம் அகிம்சை. ஒத்துழையாமை இயக்கம் என்பது விடுதலை பெற்றுத் தந்ததாய் உலக வரலாற்றில் அதுவரை உதாரணம் இல்லை! நடக்க முடியாததை நடத்திக் காண்பிக்கக் காந்தி அடிகளால் எப்படி முடிந்தது? எதனால் அது அவருக்கு வசப்பட்டது?

'எதையும் செய்யும்
எண்ணத்தில் வலு!'
(ப.48)

என்பதே கவிஞர் தரும் இரத்தினச் சுருக்கமான மறுமொழி.

தன்னம்பிக்கை எனும் தன்னிகரில்லா நண்பன்!

'தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும்' (விவேகானந்தரின் அறிவுரைகள், ப.2) என்பது 'வீரத்துறவி' விவேகானந்தரின் வாக்கு. கவிஞரின் கருத்தில் தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்குத் 'தன்னிகர் இல்லா நண்ப'னைப் போன்றது; கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிடும் கடவுளுக்கு ஒப்பானது. 'அழைத்தால் வருவேன்' என்னும் தலைப்பில் தன்னம்பிக்கையே பேசுவது போல ஒரு நல்ல கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர்.

'ஆடிப்போய் நீ இருந்தால் / பாடிக் கைகொடுப்பேன்!
பதற்றத்துடன் நீ இருந்தால் / நானிருப்பேன் சுற்றம் போல!
சோகத்துடன் நீ இருந்தால் / நானிருப்பேன் பாசத்துடன்!
தனிமையில் நீ கலங்கி நின்றால் / நான் வருவேன் இனிமை தர!
தூக்கத்தில் வருவேன் கனவில் / துக்கத்தில் வருவேன் நனவில்!
கேட்டதெல்லாம் தருவேன் / அழைத்தால் வருவேன்
அன்புடன்
தன்னம்பிக்கை'
(ப.56)

பதற்றத்துடன், சோகத்துடன், ஆடிப்போய், தனிமையில், நம்பிக்கை இழந்து, தவித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்குக் கை கொடுக்கும் கையாக இருந்து உதவுவது தன்னம்பிக்கையே என்பது கவிஞரின் அழுத்தமான கருத்து; முடிந்த முடிபு.

நிறைவு வரிகளில் நிமிர்ந்து நிற்கும் கவிதை

'எந்த ஒரு சிறந்த கவிதையும் அதன் நிறைவு வரிகளில் தான் நிமிர்ந்து நிற்கும். இது 'முடிவில் அவிழ்க்கிற முடிச்சு' போன்றது. உள்ளிருக்கும் பருப்புக்காக உடைத்துக் கிடைக்கிற அனுபவமே கவிதை' ('நெற்றுக் கவிதைகள்', 2 நிமிடம் போதும்!, ப.5) எனக் கவிதைக்கு வரைவிலக்கணம் வகுப்பார் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன். இவ் வரைவிலக்கணத்திற்கு நன்கு பொருந்தி வருகின்ற சிவகுமாரின் கவிதை 'ஒன்றின் முடிவில்!'.

'வெற்றி... / தெளிவான முடிவுகளின் தொடக்கம்!' எனத் தொடங்கும் அக் கவிதை, அந்தாதிப் போக்கில் படிப்படியாகத் 'தெளிவான முடிவுகள்... / பெற்ற அனுபவங்களின் / தொடக்கம்', 'பெற்ற அனுபவங்கள்... / தவறான முடிவுகளின் தொடக்கம்', 'தவறான முடிவுகள்... / செய்யும் செயல்களின் தொடக்கம்', 'செயல்கள்... / வெற்றியின் தொடக்கம்' என வளர்ந்து சென்று, 'சாம்பலிலிருந்து பீனிக்ஸ் / பறவை போல...' என்னும் அழகிய உவமையைக் கையாண்டு, நிறைவாக,

'ஒன்றின் முடிவில்
மற்றொன்றின் தொடக்கம்!'
(ப.81)

என்னும் அடிப்படையான வாழ்வியல் உண்மையை உணர்த்தி நிற்பது முத்தாய்ப்பு,

எப்போது நாம்?

எல்லோரும் பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்து விடுவதில்லை; ஒரே நாளில் புகழேணியின் உச்சிக்குச் சென்று விடுவதுமில்லை. ஒரு குறிக்கோளை வகுத்து, அதனை அடையத் திட்டமிட்டு உழைத்து, இடையே குறுக்கிடும் தடைக் கற்களைப் படிக்கற்கள் ஆக்கி, தொலைநோக்கோடு ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொண்டு, கருத்துடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைப்போரே வாழ்வில் சாதனை படைக்க முடியும்; முத்திரை பதிக்க இயலும். காந்தியடிகளும் சரி, வீரத் துறவி விவேகானந்தரும் சரி எடுத்த எடுப்பிலேயே உச்சிக்குச் சென்றுவிடவில்லை. முன்னாளில்... முதல் வழக்கில்... கண்கள் இருள, நா தழுதழுக்க... அழாத குறையாக இருந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் தான் பின்னாளில்... இங்கிலாந்து பராhளுமன்றத்தில் நாடாளுவோரைக் கலக்கி இந்தியாவுக்கு அகிம்சை வழியில் விடுதலை வாங்கித் தரும் காந்தியடிகளாக உயர்கிறார். சிகாகோவில் தாம் பேசிய பின் பேச வேண்டியவர்களைத் தமக்கு முன் தள்ளிய நரேந்திரன்தான் நிறைவாக உலக அரங்கினில் இந்தியாவை உயர்வு படுத்திச் சாதனை படைக்கும் விவேகானந்தராக உயர்கிறார்.

'அவர்கள் பிறக்கவில்லை
அவர்களாக!'


எனச் சுருக்கமாக மொழியும் கவிஞர்,

'மோகன்தாஸ் காந்தியாக
நரேந்திரன் விவேகானந்தராக
சுப்பிரமணியம் பாரதியாக
கனக சுப்புரத்தினம் பாரதிதாசனாக
இராமசாமி பெரியாராக
இராமலிங்கம் வள்ளலாராக
உயர்வு பெற்றனர்'


எனத் தம் படிப்படியான, திட்டமிட்ட, தொலைநோக்குடன் கூடிய உழைப்பினால் முன்னேறிய ஆளுமையாளர்களைப் பட்டியல் இட்டுக் காட்டி,

'ஆம்!
எப்போது... நாம்?'
(ப.62)

என்னும் கூரிய கேள்விக் கணையோடு நம்மைச் சிந்திக்கத் தூண்டி கவிதையை நறுக்கென்று முடிக்கின்றார் கவிஞர்.

ஒருமுறை படித்தாலே மனத்தில் பதிந்து விடும் பொன்மொழிகள்

பசுமரத்து ஆணி போல் - கல்வெட்டு போல் - ஒரு முறை மனம் கலந்து படித்தாலே பதிந்து விடும் அழகும் எளிமையும் இனிமையும் பொருந்திய பொன்மொழிகள் இத் தொகுப்பில் பரக்கக் காணப்படுகின்றன. இவ் வகையில் குறிக்கத்தக்க கவிஞரின் சில மணிவாசகங்கள் இதோ:

'பிரச்சனையோ வாய்ப்போ / நோக்கும் விதத்தில்!'
'ஒவ்வொன்றிடமும் உண்டு / கற்றுக் கொள்ள ஏதோ ஒன்று!'

'துன்பைத்தையும் கொண்டாடத் / தெரிந்தவனுக்கு வாழ்க்கை ஒரு வசந்தம்தான்!'

'விடியும் என்று விண்ணை நம்பும் நீங்கள்
முடியும் என்று உங்களை நம்புங்கள்!'

'வெற்றி / உலகிற்கு அறிமுகப்படுத்தும் / உங்களை!
தோல்வி / உலகத்தை அறிமுகப்படுத்தும் / உங்களுக்கு!'

'செயல்படத் தெரிந்தவன் / சாதிக்கிறான்!
சாதிக்கத் தெரியாதவன் / போதிக்கிறான்!'

'தினையோ வினையோ / போடுவது நம் கையில்!
மனம் ஒரு விளைநிலம்! / போட்டது விளையும்!'

                                              (பக்.
27; 33; 37; 45; 51; 52; 58)

நிறைவாக, 'இந்த புத்தகத்தில், மனிதரின் நல்வாழ்வுக்குத் தேiவான உளவியல் கருத்துக்களைக் கவிதை வடிவத்துக்குள் கவனமாக வைத்து இயற்கை உணவாக நமக்கு வாழங்குகிறார். ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு பக்குவம்' (ப.7) என்னும் பதிப்புரைக் குறிப்பு இத் தொகுப்பைப் பொறுத்த வரையில் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.