மழலையின் முகவரி: வசீகரனின் 'குட்டியூண்டு'

முனைவர் இரா.மோகன்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஆழ்வார் திருநகரியைப் பிறப்பிடமாகக் கொண்ட வசீகரன், பட்ட வகுப்பில் இயற்பியல் பயின்றவர்; மின்னல் கலைக்கூடத்தின் நிறுவனர்; முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதை, ஒருபக்கக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவைத் துணுக்கு என்றாற் போல் பல்வேறு இலக்கிய வடிவங்களில் படைப்புக்கள் பலவற்றைப் படைத்துவரும் படைப்பாளி. 'பொதிகை மின்னல்' மாத இதழின் ஆசிரியர், 'மின்னல் தமிழ்ப் பணி' மாத இதழின் பதிப்பாசிரியர், 'குட்டி' சிறார் அரையாண்டு இதழின் பதிப்பாசிரியர், 'மின்னல் பதிப்பக'த்தின் நிருவாகி என்றாற் போல் பல்வேறு பரிமாணங்கள் வசீகரனுக்கு உண்டு. 'மின்னல் தமிழ்ப்பணி அறநெறி மாமன்றம்' என்னும் அமைப்பினைத் தொடங்கி அதன் மூலம் மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, தண்ணீர் சேமிப்பு, தமழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் மாதந்தோறும், ஆண்டுதோறும் வசீகரன் ஆற்றி வரும் பல்வேறு சமூக நலப் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. மேலும் அவர் சிறந்த இலக்கியச் சீரிதழ் இரண்டினுக்குப் 'பொதிகை மின்னல் நல்லிதழ் விருது' என்ற பெயரில் ஆயிரம் ரூபாயும் பொற்கிழியும் இந்த ஆண்டு (2013) முதல் வழங்கி வருகிறார். ஹைகூ கவிதையின் அடி வரையறையைப் போல வசீகரன் இதுவரை படைத்துத் தந்துள்ள நூல்கள் மூன்று. அவற்றுள் 'குட்டியூண்டு' (2009) கவிஞாயிறு தாராபாரதி விருதினைப் பெற்றது; ந.க.துறைவனின் 'சிரிப்பின் முகவரி'ய(ஆகஸ்ட்,2005)யைத் தொடர்ந்து வெளிவந்துள்ள 'மழலைகள் ஹைக்கூ' தொகுப்பு; 162 ஹைகூ கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்நூல் 'குழந்தை மனம் படைத்த கவிஞர் கார்முகிலோன் அவர்களுக்கு...' காணிக்கையாக்கப் பெற்றுள்ளது.

மரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பாடுபொருளாகக் கnhண்ட 'மர வரம்' (2010) வசீகரனின் இரண்டாவது நூல்; அது கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை வழங்கும் விழிப்புணர்வு நூலுக்கான சிறப்புப் பரிசினைப் பெற்ற பெருமைக்கு உரியது. 'இலக்கிய மாமரங்களுக்குச் சாமரமாய் விசிறிக் கொண்டிருக்கும் இலக்கிய மாமதி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களுக்கு...' இந்நூல் காணிக்கையாக்கப் பெற்றுள்ளது. 'மரம் என்பது மகிழ்வின் தொடக்கம். மழை நீருக்கான வரவேற்புப் பா. உயிர் வாழ்க்கையின் உத்தரவாதம். தென்றலைச் சேமிக்கும் சிந்தனை வங்கி. புவியைச் சொக்கமாக்கும் புன்னகை வரம். அந்தப் பச்சை உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனைப் படப்பிடிப்பில் மலர்ந்த மூவரிக் கவிதைகளே இந்த மரயவரம்' என இத்தொகுப்பிற்குக் கவிஞர் வரைந்திருக்கும் அறிமுகக் குறிப்பு மரங்களின் மீது அவருக்கு உள்ள இமாலயப் பற்றைப் பறைசாற்ற வல்லதாகும். 'இந்த ஹைக்கூக்கள் 203-ஐயும் எழுதி முடிக்கும் வரை எனக்கு மரங்களோடு சேர்ந்து வாழும் பேறும் கிடைத்தது' ('இலைகளின் ஊடே...', மரயவரம், ப.6) என்னும் கவிஞரின் ஒப்புதல் வாக்குமூலமும் இங்கே நினைவுகூரத் தக்கதாகும். இத் தொகுப்பில் கவிஞரின் உள்ளத்தைத் திறந்து காட்டும் வகையில் அமைந்துள்ள ஹைகூ ஒன்று:

'சுவர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே ஒரு குடில்.'
(மரயவரம், ப.54)

வசீகரனின் மூன்றாவது படைப்பான 'பற... பற...' அண்மையில் (ஆகஸ்ட், 2013) வெளிவந்துள்ளது. பறவகைளின் பெருமையைப் பேசும் இந்நூல் 'இலக்கியப் பறவைகளின் இனிய இதயந்தாங்கலாய் ஊக்கமளித்து உற்சாகப்படுத்தும் கவிஞர் சீனி.இரவிபாரதி அவர்களுக்கு...' காணிக்கையாக்கப் பெற்றுள்ளது. 'பறவைகளின் ஊடே நடத்தப்பட்ட மூவரிக் கவிதைகளே இந்நூல்' எனக் குறிப்பிடும் கவிஞர், ஒரு பறவை வல்லுநரைப் போல் பறவைகளைப் பற்றிய பல்வேறு உண்மைகளையும் தகவல்களையும் மூன்று வரிகளில் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கவிஞர் கார்முகிலோன் குறிப்பிடுவது போல், 'இது பறவைகள் பற்றிய தகவல் களஞ்சியம்' ஆக விளங்குகின்றது. இத் தொகுப்பில் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காட்டும் பதச்சோறு ஒன்று:

'எந்த நாடு சென்றாலும்
தாய்மொழிதான் பேசும்
வலசைப் பறவை.'
(பற... பற..., ப.24)

இனி, 'குட்டியூண்டு' தொகுப்பின் வழி நின்று வசீகரனின் படைப்புத் திறத்தினைக் காண்போம்.

குழந்தை நெஞ்சத்தினைப் போற்றல்

வாழ்நாள் முழுவதும் குழந்தையைப் போற்றும் குழந்தையாக விளங்கியவர் பாரத மணித்திரு நாட்டின் ஒப்பற்ற பெருங் கவிஞர் தாகூர். 'இந்த உலகிலிருந்து ஒதுங்கிக் குழந்தைகளின் இடையிலே வாழ முயல்கின்றேன். குழந்தைகளுக்கு ஒரு நல்ல இயல்பு அமைந்திருக்கின்றது. பயன் இல்லாத பொருளையும் மதிப்பு இல்லாத மக்களையும் தம்முடன் வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடையும் திறன் குழந்தைகளுக்கு இருக்கின்றது' (மு. வரதராசன், கவிஞர் தாகூர், ப.69) என ஒரு முறை அவர் குறிப்பிட்டது இங்கே மனங்கொளத்தக்கது. தாகூரின் அடிச்சுவட்டில் நடை பயிலும் வசீகரனும் குழந்தை நெஞ்சத்தினைப் பெற்றவராகவும் போற்றுபவராகவும் விளங்குகிறார். 'குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள், அவர்களின் உலகம் என்பதே தனி. அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால் கூட போதும், அந்த சுகமே தனி. அந்தத் தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனைப் படப்பிடிப்பில் மலர்ந்த மூவரிக் கவிதைகளே இந்தக் குட்டியூண்டு' என்னும் அவரது சிறப்புக் குறிப்பு இவ்வகையில் நினைவுகூரத் தக்கதாகும்.

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம் கள்ளங்கரவு இல்லாதது; சூதுவாது அறியாதது; வஞ்சமோ சூழ்ச்சியோ தெரியாதது. இதனை நடப்பியல் பாங்கில் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளார் வசீகரன். இவ் வெற்றியைப் பறைசாற்றும் விதத்தில் 'குட்டியூண்டு' தொகுப்பில் பல கவிதைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கே காணலாம்.

தனித்து நின்ற ஒரு குழந்தையிடம் 'யார் நீ?' என்று கேட்ட போது, அக் குழந்தை சட்டென்று அக்கேள்விக்குச் சொன்ன விடை அதன் பளிங்கு நெஞ்சத்தைக் காட்ட வல்லதாகும். அவ் வி;டையைத் தாங்கி நிற்கும் ஹைகூ இதோ:

'தனித்து நின்ற குழந்தையிடம்
யார் நீ என்றதும் சொன்னது:
'எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!'
(ப.63)

குழந்தையின் குரலில் தான் எத்தனை இயல்பு! எத்தனை மிடுக்கு!.

'எதில் செல்லலாம் காரிலா, பைக்கிலா?' என்ற கேள்விக்குப் பிறிதொரு குழந்தை சொல்லும் பதிலும் சுவையானது.

'கார்லையா? பைக்லையா?
குழந்தையின் பதில்:
'அம்மா இடுப்பில்!''
(ப.34)

அம்மாவின் இடுப்பைத் தவிர ஒரு குழந்தைக்கு மிகுந்த இன்பம் தருவது உலகில் வேறு ஏதேனும் இருக்கிறதா, என்ன?

சாலையைக் கடக்கும் போது குழந்தையின் கை விரல்களைக் கவனமாகப் பிடித்துக் கொள்கிறார் அப்பா. அப்போது அவரைப் பார்த்து அக் குழந்தை சொல்கிறதாம்:

'சாலை கடக்கும் அப்பா
விரல் பிடித்துக் கொண்டார்
'பயத்தைப் பாரேன்!''
(ப.11)

கவிஞர் படைக்கும் இன்னொரு குழந்தை தனது பெற்றோர் மீது குற்றம் சாட்டி அழுகிறது. அது அழுவதற்குப் சொல்லும் காரணம் வேடிக்கையானது; குழந்தைத்தனம் ததும்பி நிற்பது.

'பெற்றோhரைக் குற்றஞ்சொல்லி
அழுதது குழந்தை:
'உங்க கல்யாணத்துக்கு ஏன் கூப்பிடல?'
(ப.18)

'மின்விசிறி போடும்மா!' என்று தன் தாயிடம் அன்புக் கட்டளை இடுகிறது மற்றொரு குழந்தை. எதற்காகத் தெரியுமா?

'மின் விசிறி போடும்மா
கட்டளையிட்டது குழந்தை
தொட்டி மீனுக்கு வியர்க்கும்!'
(ப.58)

தொட்டி மீனுக்கு வியர்க்கிறதாம்! அதனால் மின்விசிறியைப் போடுமாறு அம்மாவுக்குக் கட்டளை இடுகிறது குழந்தை. கடவுளைப் போல கருணை வாழும் இல்லம் அல்லவா குழந்தையின் உள்ளம்?

இங்ஙனம் குழந்தைகள் உலகினைப் பற்றிய இயல்பான பதிவுகள் நூலில் பரக்கக் காணப்படுகின்றன.

மழலை மொழியின் பொருள்

'யாழொடும் கொள்ளர் பொழுதொடும் புணரர் பொருள்அறி வாரர் ஆயினும், தந்தையர்க்கு, அருள்வந்தனவால் புதல்வர்தம் மழலை' (புறநானூறு, 92) எனக் குழந்தைகளின் மழலை மொழியின் பெருகையைப் போற்றுவார் ஒளவையார். 'குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள், மழலைச்சொல் கேளா தவர்' (குறள் 66) எனத் திருவள்ளுவர் மழலைச் சொற்களின் சிறப்பினைப் புலப்படுத்துவார். வாழையடி வாழையென இவ் வரிசையில் வலம் வரும் வசீகரனும் 'குட்டியூண்டு' தொகுப்பில் ஒரு நல்ல ஹைகூவைப் படைத்துள்ளார்.

'அம்மாவுக்கு மட்டும்
அரும்பொருள் புரிகிறது
தத்தக்கா பித்தக்கா'
(ப.16)

என்னும் ஹைகூ இவ் வகையில் குறிப்பிடத்தக்கதாகும். 'தத்தக்கா பித்தக்கா!' என மொழியும் குழந்தையின் மழலைக்கு நமக்கு வேண்டுமானால் பொருள் புரியாமல் போகலாம்; ஆனால் அதற்கு ஏதோ ஓர் அரும்பொருள் இருக்கிறதாம், அது அம்மாவுக்கு மட்டும் புரிகிறதாம்!

கவிஞரின் கண்ணோட்டத்தில்,

'மகிழ வைக்கும்
ஒரே அழுகை
பிறந்த மழலை!'
(ப.58)

'குழந்தையும் தெய்வமும் குணத்தில் ஒன்று' என்னும் ஆன்றோர் அமுத மொழிக்குக் கவிஞர் தந்திருக்கும் ஹைகூ வடிவமே பின்வரும் கவிதை:

'சாதி மதம் இல்லை
ஆண் பெண் பேதமுமில்லை
மழலை நட்பு!'
(ப.17)

மழலை நட்பின் மாண்பினை இங்கே இரத்தினச் சுருக்கமான மொழியில் எடுத்துரைத்துள்ளார் கவிஞர்.

மாறிவிட்ட இன்றைய சூழல்

தந்தை சொல்லிக் கொடுக்க, குழந்தை கற்றுக் கொண்ட காலம் எல்லாம் இன்று மலையேறிவிட்டது; குழந்தை கற்றுத் தர, தந்தை பொறுமையாகக் கற்றுக்கொள்ளும் சூழ்நிலை இன்று உருவாகி விட்டது. இதனை,

'கணினியில் அமர்ந்து
சொல்லிக் கொடுத்தது குழந்தை
கற்கும் அப்பா!'
(ப.42)

என்னும் ஹைகூவில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் கவிஞர்.

அதே போல தாத்தா-பாட்டிகள் சொல்லும் கதைகளைக் கேட்கும் நிலையிலும் இன்றைய குழந்தைகள் இல்லை. அவற்றின் கவனம் எல்லாம் - ஆர்வம் எல்லாம் - கணினி விளையாட்டுக்களின் மீது முற்றிலுமாகத் திரும்பி விட்டது.

'கதையோடு பாட்டி
கதை கேட்க நேரமின்றி
கணினி விளையாட்டில் குழந்தைகள்!'
(ப.61)

என்ற ஹைகூவில் இதனைப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

காலத்தின் கோலத்தால்-தாக்கத்தால்-இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சிக்கல்களையும் துன்பங்களையும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் வசீகரன் தம் ஹைகூ கவிதைகளில் ஆங்காங்கே சுட்டிக்காட்டவும் தவறவில்லை. பதச்சோறு ஒன்று:

'அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
கால் மீ மம்மி!'
(ப.62)

இன்றைய கலியுகத்தின் தாய், குழந்தை தன்னை 'அம்மா' என அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதில்லை; பெருமையோ பெருமிதமோ, பூரிப்போ புளகாங்கிதமோ கொள்வதும் இல்லை. மாறாக, 'மம்மி' என அழைப்பதிலேயே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதமும் பூரிப்பும் கொள்கிறாள். இன்னும் ஒரு படி மேலே சென்று 'அம்மா' என அழைத்தாலோ, அடுத்த நொடியே குழந்தையை அடிக்கவும் செய்கிறாளாம்! 'காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி!' என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன சொல்ல முடியும்?

பொதுவாக, குழந்தைகளுக்கு நாம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்கக் கற்றுத் தருவதில்லை; 'டாட்டா காட்டு!' என்று வழியனுப்பவே கற்றுத் தருவோம், வேண்டாத இந்தப் பழக்கம் குழந்தையை எளிதில் பற்றிக் கொண்டு விடுகின்றது; குழந்தையின் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தும் விடுகின்றது. விளைவு?

'புதியவர் வருகை
வரவேற்கச் சொல்லும் அன்னை
டாட்டா காட்டும் குழந்தை!'
(ப.62)

வந்தாரை வரவேற்பது தமிழகத்தின் தனிப்பெரும் பண்பு; ஆயின் இன்றைய தமிழ்க் குழந்தையோ 'டாடா' காட்டியே – வழியனுப்பியே – பழகி இருப்பது அவலத்திலும் அவலம்.

நல்லறமாக – பல்கலைக்கழகமாக – கோயிலாக – தெய்விகமாக – திகழ வேண்டிய குடும்பம் இன்று சண்டையும் சச்சரவும் நாளும் அரங்கேறும் குருஷேத்ரமாக மாறிவிட்டது. ஆவேசமாய் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோரைப் பார்த்து மிரண்டு நிற்கிறதாம் குழந்தை. இதனை,

'மிரளும் குழந்தை
ஆவேசமாய் சண்டையிடும்
அம்மா! அப்பா!'
(ப.12)

என்ற ஹைகூ சித்திரித்துக் காட்டுகின்றது.

பிறிதொரு ஹைகூவில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து நிற்கும் பெற்றோரிடம் சேர்த்து வைக்கும் நோக்குடன் தூது செல்லும் குழந்தையைப் படைத்துள்ளார் கவிஞர்.

'பிரிந்த அப்பா அம்மா
தூது போகிறது
குழந்தை!'
(ப.10)

இங்ஙனம் இன்றைய காலத்தின் கோலம். பிஞ்சு நெஞ்சங்களின் மிது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தினைக் கவிஞர் தம் கவிதைகளில் ஆங்காங்கே நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளின் கேள்விகளும் பேச்சுக்களும்

இன்றைய குழந்தைகள் தம்மை ஈன்று புறந்தந்த பெற்றோரிடமும் சமூகத்திடமும் கேட்கும் கேள்விகளும் பேசும் பேச்சுக்களும் வித்தியாசமானவை; பொருள் பொதிந்தவை; கார சாரமானைவை. அவற்றைக் 'குட்டியூண்டு' தொகுப்பில் ஆங்காங்கே காண முடிகின்றது.

காசில்லை என்றவளிடம், கணநொடியில் கேட்கிறது ஒரு குழந்தை: 'அப்ப ஏன் பெத்த?' (ப.27)

பொய் சொன்ன அப்பாவிடம், போய்ச் சொல்கிறது பிறிதொரு குழந்தை: 'உம்மாச்சி கண்ணக் குத்தும்' (ப.18).

பாடையில் தாய் பிணமாகக் கிடக்கிறாள். 'எழுந்து சோறு போடும்மா!' எனச் சொல்லி அழுகின்றது ஒரு குழந்தை (ப.59).

மூட்டை சுமப்பவனிடம், கவிஞர் படைக்கும் சிறுவன் ஒருவன் கேட்கிறான்: 'நீ எந்தப் பள்ளிக்கூடம்?' (ப.24)

தந்த சாக்லெட்டைத் தின்று விட்டு, திருடனிடம் சிரித்துக் கொண்டே சாதுரியமாகக் சொல்கிறது ஒரு குழந்தை: 'இந்தச் சங்கிலி கவரிங்!' (ப.22)

நெஞ்சை அள்ளும் சொல்லோவியங்கள்

தாத்தாவின் மடியில் பச்சிளங்குழந்தை வீற்றிருக்கும் காட்சி கவிஞரின் எழுதுகோலில் அழகிய ஒரு ஹைகூவாக உருவெடுத்துள்ளது. கொள்ளை அழகு குலவும் அந்த ஹைகூ கவிதை இதோ:

'ஒரு பொக்கைக்கு
துணை இன்னொரு பொக்கை
தாத்தா மடியில் மழலை!'
(ப.60)

கவியரசர் பாரதியார்.

'சொல்லு மழலையிலே – கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே – எனது
மூர்க்கம் தவிர்த்திடுவொய்'
(பாரதியார் கவிதைகள், ப.336)

எனக் 'கண்ணன் பாட்'டில் பாடுவார். அவரது வாக்கினை அடியொற்றி,

'கள்ளமில்லாச் சிரிப்பில்
கொள்ளை போனது
கவலைகள்!'
(ப.51)

எனப் பாடுகிறார் வசீகரன்.

'மழலையின் முகவரி'

ஒருவர் ஹைகூ கவிதை படைப்பதற்கே தனிப்பார்வையும் திறனும் கைவரப் பெற்றவராக விளங்குதல் வேண்டும்; அதுவும் குழந்தைகள் சார்ந்த ஹைகூ படைப்பதற்கோ அவர் இரு மடங்குப் படைப்பாளுமையும் கூர்பார்வையும் உளவியல் அறிவும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இவ் வகையில் வசீகரன் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களின் பல்வேறு பரிணாமங்களும் உயிர்க்களையும் தனித்தன்மையும் விளங்கும் வண்ணம் மழலையின் முகவரியாகக் 'குட்டியூண்டு' தொகுப்பினைப் படைத்துத் தந்திருப்பது போற்றத்தக்கது. ''குட்டியூண்டு' என்றொரு மழலைகள் பற்றிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு, எழுதியிருப்பவர் வசீகரன். அடேங்கப்பா, இந்த மூன்று வரி ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை நான் இதுவரை 30 தடவைக்கு மேல் படித்திருப்பேன். வருகிறவர்களிடம் எல்லாம் படித்துக்காட்டி நெகிழ்ந்திருப்பேன். சில என்னைக் 'கலகல'வென்று சிரிக்க வைத்தன. சில விழிகளில் நீர்; கோக்க வைத்தன. என்னை வசீகரித்துவிட்டார் கவிஞர் வசீகரன்' (தினமணி: தமிழ்மணி, டிசம்பர், 2010) என்னும் கலாரசிகனின் மதிப்பீடு மிகையன்று, உண்மையே. நிறைவாக,

'குழந்தையாய் நீ இரு,
நீயாய் இருக்க வேண்டாம்
குழந்தை!'
(ப.57)

என்னும் அவரது மொழியினைக் கொண்டே இக் கட்டுரையை நிறைவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.