வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள்

முனைவர் இரா.மோகன்

பொருளியல் (Economics) என்னும் துறை செல்வம் தொடர்பான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். பொதுவாக, இத் துறை சார்ந்த கருத்துக்கள் ஐந்து பெரும் பிரிவுகளாகப் பகுத்து ஆராயப்படும். அவை வருமாறு:

1. செல்வ நுகர்ச்சி
(Consumption of Wealth)
2. செல்வ உற்பத்தி
(Production of Wealth)
3. செல்வப் பரிமாற்றம்
(Exchange of Wealth)
4. செல்வப் பங்கீடு
(Distribution of Wealth)
5. பொது நிதி
(Public Finance)

“திருக்குறளில் பொருளியல் கருத்துகள் பெரும்பாலும் பொருட்பாலில் இடம் பெறுகின்றன. இக் கருத்துகள் இருபத்தோர் அதிகாரங்களில் பரவிக் கிடக்கின்றன” (அ.தவமணி தேவி, ‘பொருளியல்’, திருக்குறளில் அறிவுத் துறைகள், ப.120) என்பர் அறிஞர். இனி, இக் கருத்தின் ஒளியில் வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் குறித்துச் சுருங்கக் காணலாம்.

அற வழியில் பொருள் ஈட்டுக!

அறம் பொருள் இன்பம் என்னும் விழுமியங்களின் வரிசை முறையில் பழந்தமிழர் பொருளுக்குத் தந்திருக்கும் இடம் கூர்ந்து நோக்கத்தக்கது. பொருள் இருந்தால் மட்டுமே ஒருவர் அறம் செய்ய முடியும்; இன்பம் நுகரவும் கூடும். எனவே, பொருளுக்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் நடு இடத்தினை - அறத்திற்கும் இன்பத்திற்கும் இடைப்பட்ட மைய இடத்தினை – அளித்துள்ளனர்.

“வழுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்”


என்னும் நாலடியார் பாடலும் (114) இங்கே மனங்கொளத் தக்கதாகும். இங்கே ‘நடுவணது’ என்பது பொருளையும், ‘இருதலையும்’ என்பது அறத்தையும் இன்பத்தையும் குறிக்கும்.

வள்ளுவர் பெருமானும் ‘பொருள் செயல் வகை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது குறட்பாவில்,

“அறன்ஈனும், இன்பமும் ஈனும், திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்”
(754)

என மொழிகின்றார். பொருளுக்கு அவர், ‘திறன் அறிந்து’, ‘தீதின்றி’ என்னும் இரு அடைமொழிகளைப் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் சேர்க்கும் திறம் அறிந்து, தீமை ஒன்றும் இல்லாமல், நல்ல வழியில் சேர்க்கப்பட்டு வந்த பொருள், ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் ஒருங்கே தரும் என்பது வள்ளுவரின் முடிந்த முடிபு.

பொருளியல் அறிஞர் டாக்டர் பா.நடராஜன் குறிப்பிடுவது போல், “பெருமை தரும் செல்வத்தை எவ்வாற்றானும் ஈட்டுக என்று அவர் (வள்ளுவர்) கூறவில்லை. பொருளைச் சேர்ப்பதற்குப் பொருந்தும் நெறிகளை வகுத்தார். பொருள், நல்வாழ்வுக்குக் கருவியேயன்றி அதுவே வாழ்க்கைப் பயனாகாது. வள்ளுவர் கூற்றின் படி அறநெறி வழுவாது பொருளீட்டுதல் வேண்டும்... வள்ளுவர் பொருள் ஈட்டலை வலியுறுத்தினாரேயன்றிப் பொருள் குவித்தலை விரும்பினாரில்லை. நல்வாழ்வுக்குத் துணையாகும் பொருளை வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாகக் கொள்ளுதல் தவறு என்கிறார்” (வள்ளுவர் தந்த பொருளியல், பக்.38-39).

வள்ளுவரின் இக் கருத்தியலுக்கு அடியெடுத்துத் தந்தவர் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் ஆவார்.

“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்”
(1367)

என்பது தொல்காப்பியச் செய்யுளியலில் புறநிலை வாழ்த்தாக இடம்பெறும் நூற்பா. இதில் செல்வத்திற்குக் ‘குற்றமற்ற’ என்னும் பொருள் தரும் ‘பழிதீர்’ என்ற அடைமொழியினைத் தொல்காப்பியர் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம் அறவியலுடன் இணைத்துப் பொருளியல் சிந்தனையை வலியுறுத்திச் செல்லும் பாங்கில் வள்ளுவருக்கும் இன்றைய பொருளியல் துறையின் தந்தை எனப் போற்றப்படும் ஆதம் சிமித்துக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. ‘பிறப்பால் மக்கள் யாவரும் ஒரு நிகரே; கல்வியாலும் சூழ்நிலையாலுமே மக்கள் இடையே வேற்றுமை விளையும். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்ல வேண்டும். அது மக்களுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவை நிலைநாட்டும். அறம் வழுவாப் பொருளியலே வேண்டத்தக்கது’ என்பன இருவருக்கும் இடையே காணப்-பெறும் ஒத்த சிந்தனைகள் ஆகும்.

மக்கள் நலப் பொருளாதாரத்தின் அடிப்படை

பொருளை அற வழியில் நேரிய முறையில் ஈட்டுமாறு அறிவுறுத்திய வள்ளுவர், பொருள் தேவைக்கு மேல் இருந்தால் அதனைப் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ (322) வேண்டும் என்கிறார். அதே வேளையில், வரன்முறை அறிந்து ஈகையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வழிகாட்டுகின்றார்; அதுவே ‘பொருள்தனைப் போற்றி வழங்கும் நெறி’ (477) என்றும் சுட்டிக்காட்டுகின்றார். ‘வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்’ என ‘ஈகை’ அதிகாரத்தில் வள்ளுவர் பறைசாற்றுவது அவரது பொருளியல் சிந்தனையின் மணி மகுடம் ஆகும்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”
(226)

இன்று பரவலாகப் பேசப்பெறும் மக்கள் நலப் பொருளாதாரத்தின் (Welfare Economics) அடிப்படையினைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கோடிட்டுக் காட்டியிருப்பது போற்றத்தக்கதாகும்.

பொருளின் இன்றியமையாமை

பொருளின் அருமை, ஆற்றல், இன்றியமையாமை, சிறப்பு ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதத்தில் வள்ளுவர் ‘பொருள் செயல் வகை’ அதிகாரத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை.

பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கப்படச் செய்யும் ஆற்றல் பொருளுக்கு உண்டாம். எனவே, செல்வத்தை அல்லாமல், சிறந்த பொருள் ஒன்று இவ்வுலகத்தில் இல்லை எனப் பறைசாற்றுகின்றார் வள்ளுவர்.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்”
(751)

இக் குறட்பாவில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை ஆகும்.

உலக வழக்கிலும் ‘இல்லான்’ என்ற சொல் பொருள் இல்லாத வறியவனையே சுட்டும். ‘பொருள் உடையவரை எல்லோரும் மதித்துப் போற்றுவர்; பொருள் இல்லாதவரைப் பெற்ற தாய் உட்பட எல்லோரும் தாழ்வாகக் கருதுவர்: இது உலக நடைமுறை’ என்கிறார் வள்ளுவர்.

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு”
(752)

‘கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின், எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் – இல்லானை, இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள், செல்லாது அவன்வாயிற் சொல்’ என்னும் நல்வழிப் பாடல் (34) இங்கே ஒப்புநோக்கத் தக்கதாகும்.

உலகியல் வாழ்வில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் – எல்லோரும் மதிக்கும் ஏற்றம் அடைய வேண்டும் என்றால் – ‘ஈட்டுக பொருளை’ என அவருக்கு ஆணையிடுகிறார் வள்ளுவர். ஏன் தெரியுமா? எதிரியின் இறுமாப்பை அறுக்கவல்ல படைக்கருவி பொருள் போல் வேறு இல்லையாம்.

“செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்”
(759)

என்பது வள்ளுவரின் பொருள் பொதிந்த வாக்கு.

பொருளுக்கு வள்ளுவர் பயன்படுத்தி இருக்கும் அடைமொழிகள் அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் சான்றவை. அவை வருமாறு:

“பொருள் என்னும் பொய்யா விளக்கம்” (753): (செல்வம் என்று எல்லோராலும் சிறப்பித்துச் சொல்லப் பெறும் நந்தா விளக்கு)

“பொருள் என்னும் செல்வச் செவிலி” (757): (பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தை உடைய வளர்ப்புத் தாய்)

‘ஒண்பொருள்’ (760) எனச் சின்னஞ்சிறு அடைமொழி வாயிலாகவும் ஒரு குறட்பாவில் பொருளின் சிறப்பினைப் புலப்படுத்துவார் வள்ளுவர். “அறமும் இன்பமும் பொருளின் பயன் ஆதலாலும், நல்வழியில் வந்த பெரும்பொருள் அவற்றைத் தப்பாது பயக்கும் ஆதலாலும், அதுவும் எளிதாய் ஒருங்கு நிகழும் ஆதலாலும், ‘ஒண்பொருள்’ என்று கூறினார்” என்பர் உரையாசிரியர் (ஞா.தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, ப.408).

தொழிலில் உயர்வு உழவே!

ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் உழவுத் தொழிலுக்கு ஓர் இன்றியமையாத இடம் உண்டு. வள்ளுவர் ‘உழவு’ (104) எனத் தனியாக ஓர் அதிகாரமே அமைத்து, அதில் உழவுத் தொழிலின் உயர்வினைப் பல்லாற்றானும் விதந்து பேசியுள்ளார். அவர் காட்டும் சமுதாயம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைச் சமுதாயம் ஆகும்.

‘உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து சுழன்றாலும், உழவுத் தொழிலின் பின்னே தான் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்பங்கள் தந்தாலும் உழவுத் தொழிலே பிற தொழில்களை விட நனி சிறந்தது’ என ‘உழவு’ அதிகாரத்தின் முதல் குறட்பாவில் உழவுத் தொழிலின் முதன்மையை அறுதியிட்டு உரைக்கின்றார் வள்ளுவர்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை”
(1031)

என்று வள்ளுவரின் முடிந்த முடிபு.

“உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்ற எல்லோரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்” என்றும், “உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின்செல்கின்றவரே” என்றும் உழவர் பெருமக்களின் உயர்வினை அடுத்து வரும் இரு குறட்பாக்களில் உயர்த்திப் பிடிக்கின்றார் வள்ளுவர்.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி;அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.”
(1032)

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
(1033)

இங்ஙனம் உழவுத் தொழிலை அடிப்படையான பொருளியல் செயலாக்கமாக வள்ளுவர் கருதுவது, பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டினைச் சார்ந்த இயற்கை இயலார் (Physiocrates) எடுத்துரைத்துள்ள பொருளியல் சிந்தனையுடன் ஒத்துச் செல்கின்றது.

வள்ளுவர் போற்றும் நாடும் அரசும்

வள்ளுவரின் நோக்கில் ‘தன்னிறைவு படைத்த வள நாடே உரிமை நாடு; பிற நாட்டை எதிர்நோக்கும் நாடு, நாடு அன்று!’ இதனை உணர்த்தும் அரிய குறட்பா வருமாறு:

“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல
நாட வளந்தரு நாடு”
(739)

இன்றைய பொருளியலும் ‘தன்னிறைவு பெற்ற நாடே வலிமை பொருந்தியது’ எனக் கருதுகின்றது.

பிறிதொரு குறட்பாவில் நாட்டிற்கு அணிகளாகக் கருதத்தக்க ஐந்தினைக் குறித்து வள்ளுவர் பட்டியல் இடுகின்றார்.

“பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”
(738)

இக் குறட்பாவில் வள்ளுவர் செல்வத்திற்கு இரண்டாம் இடத்தினை நல்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அணி என்பர்’ என்கிறார் வள்ளுவர்.

‘நாடு’ அதிகாரத்தின் முதல் குறட்பாவிலும், ‘குறையாத விளைச்சலும் நடுநிலைமையாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு’ எனக் குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். இக் கருத்தினைத் தன்னகத்தே கொண்ட குறட்பா வருமாறு:

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு”
(731)

மேலும், ‘பெரும்பொருளால் பெட்டக்க தாகி...’ (732) என்னும் தொடரால், ‘மிக்க பொருள் வளம் உடைய நாடு, எல்லோராலும் விரும்பப்படும்’ என்னும் கருத்தையும் புலப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

தனி மனிதனைப் போன்று அரசிற்கும் பொருள் வாழ்வு உண்டு. அரசும் பொருளை ஈட்ட வேண்டும்; பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அரசு நடத்தும் பொருள் வாழ்வு மக்கள் எல்லோருக்கும் உரியது. அதனைப் பொருளியலில் ‘பொதுநிதி’ (Public Finance) என்பர். பொது நிதியில் அரசின் வருவாய்க்கான வழிகள், செலவினங்கள், அவற்றை ஈடுகட்டுவதற்கான நெறிமுறைகள் ஆகியன அடங்கும்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
(385)

என வள்ளுவர் குறிப்பிடுவது பொதுநிதியின்பாற்படும் எனலாம். ‘பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், ஈட்டிய பொருள்களை ஓரிடத்துச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை அறம் பொருள் இன்ப வழிகளில் வகுத்துச் செலவு செய்தலும் வல்லதே நல்லரசாகும்’ என்பது வள்ளுவர் கருத்து.

“உறுபொருளும் உல்கு பொருளும் தன்ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்”
(756)

என்னும் குறட்பா அரசின் வருவாய் மூன்று வழிகளில் பெறப்படுவதாகச் சுட்டுகின்றது. இக் குறட்பாவின் படி வரியாக வந்த பொருள் (உறுபொருள்), சுங்கமாக வந்த பொருள் (உல்கு பொருள்), தன் பகைவரை வென்று திறையாக வரும் பொருள் (ஒன்னார்த் தெறுபொருள்) ஆகிய மூன்றும் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் பொருள்கள் ஆகும்.
வள்ளுவர் பொருட்பாலில் குடிமக்கள் நலம் பேணும் அரசினையே (Welfare State) பெரிதும் போற்றியுள்ளார். குடிமக்களை வற்புறுத்தி, மிரட்டி, வருத்தி, கொடுமை செய்து வரி வசூலிப்பதில் அவருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
(555)

என்னும் குறட்பா இவ்வகையில் மனங்கொளத்தக்கது. இதில் மக்கள் அழுத கண்ணீரை முறை இல்லாத வழியில் பெற்ற செல்வத்தைதத் தேய்த்து அழிக்க வல்ல ‘படை’யாக வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.

வரவுக்கு ஏற்ற செலவு

நாட்டு நிருவாகம் பற்றி மட்டுமன்றி, வீட்டு நிருவாகம் குறித்தும் திருவள்ளுவர் தம் நூலில் சிந்தித்துள்ளார். மனைவியை ‘வாழ்க்கைத் துணை’ என்னும் பொருள் பொதிந்த தொடரால் சுட்டும் அவர், சிறந்த வாழ்க்கைத் துணையின் இயல்பினையும் எடுத்துரைத்துள்ளார்.

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” (
51)

இக் குறட்பாவில் இடம்பெற்றுள்ள ‘தற்கொண்டான் வளத்தக்காள்’ என்னும் தொடர் பொருளியல் நோக்கில் இன்றியமையாதது. ‘கணவன் வருவாய்க்கு ஏற்ப வாழ்பவள்’ என்பது இதன் பொருள்.

‘தற்கொண்டான் வளத்தக்காள்’ என்னும் கருத்தியலுக்கான கூடுதல் விளக்கத்தினைப் பிறதொரு கோணத்தில் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் தந்துள்ளார் வள்ளுவர். ‘வருவாய் அளவாக இருப்பினும் தீங்கு இல்லை; செலவு மட்டும் விரிந்து செல்லக் கூடாது’ என்பது அவர் இங்கே தரும் வழிகாட்டுதல் ஆகும்.

“ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை.”
(478)

இக் குறட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ஆகாறு’ – பொருள் வரும் வழி (வருவாய்), ‘போகாறு’ – பொருள் போகும் வழி (செலவு) என்னும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்-தக்கவை. ‘வரவுக்கு ஏற்ற செலவு’ என்னும் பொருளியல் சிந்தனையை இங்கே வெளிப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

ஒப்பியல் நோக்கில் துலங்கும் வள்ளுவரின் தனித்தன்மை

கௌடில்யரின் ‘அர்த்த சாத்திர’மோ கிரேக்கச் சிந்தனையாளர்களோ உழவுத் தொழிலுக்கு முதன்மை தரவில்லை; உழவுத் தொழிலை இழிதொழிலாகவே மதித்தனர். மாறாக, வள்ளுவர் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்துள்ளார்; தனி ஓர் அதிகாரமே படைத்து உழவுத் தொழிலையும் உழவர் பெருமக்களையும் உயர்த்திப் பிடித்துள்ளார்.

கெளடில்யர் காட்டும் அரசியலிலும் பொருளியலிலும் அறவியலுக்குச் சற்றும் இடம் இல்லை. அவர் குடிமக்களை மிரட்டி வரி வசூலித்தலை முதன்மையாகப் பேசுவார். வள்ளுவரோ அறவியல் அடிப்படையிலேயே பொருளியல் வாழ்வினை அமைத்துக் காட்டியுள்ளார்; குடிமக்கள் நலம் பேணும் அரசினையே போற்றிப் பாடியுள்ளார். இது வள்ளுவரின் பொருளியல் சிந்தனையில் மேலோங்கி இருக்கும் தனிப்பண்பாகும்.

காலத்தாலும் சூழ்நிலையாலும் வேறுபட்டவர்கள் என்றாலும் வள்ளுவரும் இன்றைய ஆதம் ஸ்மித்தும் அடிப்படைக் கருத்துக்களால் பெரிதும் ஒன்றுபட்டுள்ளனர். இருவரும் அறம் சார்ந்த பொருளியலையே வலியுறுத்தி இருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

 




முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.