சங்கப் பெண்பாற் புலவர்களின்
படைப்பாளுமை
முனைவர்
இரா.மோகன்
செம்மொழி
வரிசையில் சிறப்பிடம் பெறும் கிரேக்க இலக்கியத்தில் கூட சாஃபோ என்ற ஒரு
பெண்பாற் புலவரைப் பற்றிய குறிப்புக்களே கிடைக்கின்றன. ஆயின், நம் தமிழ்
மொழியிலோ சங்க காலத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள்
இருந்துள்ளனர். அவர்கள் பல ஊரினர்; பல நிலையினர். அவர்களுள் 59
பாடல்களைப் பாடிய நாடறிந்த தமிழ்ப் புலமையாட்டி ஒளவையாரும் உண்டு; ஒரே
பாடலால் (112) புகழ் பெற்ற பாரி மகளிரும் உண்டு. சங்க காலத்தின் சிறந்த
புலமையாட்டிகளுள் ஒருவராக மதிக்கத் தக்க அள்ளூர் நன்முல்லையாரும் உண்டு;
விளிம்பு நிலையிலும் பாட்டுத் திறம் கைவரப் பெற்று வாழ்ந்த குறமகள்
இளவெயினியும் உண்டு மூதின்முல்லைத் துறையில் 'கெடுக சிந்தை கடிது இவள்
துணிவே' (279) என்னும் ஒப்பற்ற புறப்பாடலைப் பாடிய ஒக்கூர்
மாசாத்தியாரும் உண்டு; 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே' (312) என்றாற்
போல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாய், தந்தை, கொல்லன், வேந்தன்,
காளை என அவரவர்க்கு உரிய கடமைகளை அழகிய பாடலாக வடித்துக் தந்த
பொன்முடியாரும் உண்டு. புறம் யாதும் பாடாமல் 13 அகப்பாடல்களே பாடி
முத்திரை பதித்த வெள்ளிவீதியாரும் உண்டு; கணவனை இழந்த கையறு நிலையில் 'நள்ளிரும்
பொய்கையும் தீயும் ஓரற்றே' – 'செந்தாமரைக் குளத்தின் நீரும் தீயும்
எமக்கு ஒன்றுதான்!' (புறநானூறு, 246) என மொழிந்த பூத பாண்டியன்
தேவியாரும் உண்டு. 'காக்கை கரைந்தால் விருந்து வரும்' என்னும்
பழந்தமிழர் நம்பிக்கையை முதன்முதலில் தம் குறுந்-தொகைப் பாடலில் (210)
பதிவு செய்த காக்கை பாடினியாரும் உண்டு; கரிகாற் பெருவளவனுடைய
புதல்வியாரான ஆதிமந்தியாரும் உண்டு. 'பெண்பாலார் பெருமை வாய்ந்தவர்கள்.
மேன்மை, அறிவு முதலிய குணங்கள் இயற்கையில் அமைந்தவர்கள். இயற்கை
அறிவுடன் செயற்கை அறிவும் சேர்ந்து விடின், அவர்களுடைய பெருமை
அளவிடற்கரியதாகும். சங்க காலத்தில் தமிழாராய்ந்து விளங்கிய பெண்பாலார்
ஐம்பதின்மருக்கு மேலிருந்திருக்கலாமென்று தெரிகிறது' (சங்கத் தமிழும்
பிற்காலத் தமிழும், ப.100) என்னும் 'பதிப்பு வேந்தர்'
உ.வே.சாமிநாதையரின் கருத்து இங்கே மனங்கொளத் தக்கதாகும்.
1.
ஆதிமந்தியார்
நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலார்களுள்
ஆதிமந்தியாரும் ஒருவர். இவர் கரிகாற் பெருவளவனுடைய புதல்வியார். இவர்
பெயர் மந்தி எனவும் வழங்கும். ஆதிமருதியார் என்று படித்தற்கும் இடமுண்டு
என்பர் 'பதிப்பு வேந்தர்' உ.வே.சா. (குறுந்தொகை மூலமும் உரையும்,
ப.71). ஏடு எடுத்து எழுதுவோர் கைப்பிழையால் அப்பெயர் ஆதிமந்தியார் என்று
மாறியிருக்கலாம். வஞ்சிக் கோனாகிய ஆட்டனத்தி என்பானை இவர் மணந்தவர்.
அவன் பெயர் அத்தி எனவும் வழங்கும். ஒரு சமயம் ஒரு நீர்; விழாவில் கழார்
என்னும் ஊரைச் சார்ந்த காவிரித் துறையில் கணவனுடன் இவர் நீராடுகையில்,
கணவனைக் காவிரி ஆறு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது; அதனால்
மந்தியார் தம் கணவனைக் காணாது வருந்தி. பல இடங்களிலும் தேடித் தேடிச்
சென்று, முடிவில் கடற்கரையில் அரற்றி நின்றார். அப்போது இவரது கற்பின்
பெருமையால் கடல், கரைக்கு அருகே கணவனைக் கொணர்ந்து நிறுத்தக் கண்டு,
இவர் மகிழ்ந்து தழுவிச் சேர்ந்தார். சிலப்பதிகாரத்தில் இந்நிகழ்வு
குறிக்கப் பெற்றுள்ளது (21, வஞ்சின மாலை, அடி.11-15). அகநானூற்றுப்
பாடல்களால் (45, 76, 222, 236, 276, 396)
தெரியவரும் செய்திகள் இவை. மேலும், 'இது (குறுந்தொகை 31) காதலற்
கெடுத்த ஆதிமந்தியார் பாட்டு' என்ற நச்சினார்க்கினியரின் உரைக்
குறிப்பும் (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், நூற்பா. 54).
இக் கருத்திற்கு அரண் செய்யும். வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்,
பரணர் ஆகியோர் ஆதிமந்தியாரைப் பாராட்டியுள்ளனர். அகநானூறு 147-ஆம்
பாடலால் ஒளவையாருக்குக் காலத்தால் முந்தியவர் வெள்ளிவீதியார் என்பதும்,
அகநானூறு 45-ஆம் பாடலால் வெள்ளிவீதியாருக்குக் காலத்தால் முந்தியவர்
ஆதிமந்தியார் என்பதும் விளங்கு-கின்றன.
குறுந்தொகையில் 31-ஆவது பாடலாக
இடம்பெற்றிருப்பது ஆதிமந்தியார் பாடியது. 'நொதுமலர் வரைவுழித்
தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது' என்பதும் இதன் துறைக் குறிப்பு.
மருதத் திணையில் தலைவி கூற்றாக அமைந்த அப்பாடல் வருமாறு:
'மள்ளர் குழீஇய
விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும்ஓர் ஆடுகள மகளே; என்கைக்
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும்ஓர் ஆடுகள மகனே.' (31)
'விழவின் கண்ணும் துணங்கையின் கண்ணும்
காணேன் என்றது தலைவன் வீரன் என்பதையும் ஆடுகள மகன் என்பதையும்
புலப்படுத்தியது. யாண்டும்-வேறு எவ்விடத்தும் என்றலுமாம். மாண்தக்கோன்
என்றது தனக்கு ஏற்றவன் என்றவாறு. யானும் ஓர் ஆடுகள மகளே என்றது தான்
துணங்கை ஆடியதையும் குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்றது அவன்
அத்துணங்கைக்குத் தலைக்கை கொடுத்தான் என்பதையும் புலப்படுத்தி அறத்தொடு
நின்றதாயிற்று. வளை நெகிழ்த்த என்றது தன்பால் உண்டான வேறுபாட்டிற்குக்
காரணம் தலைவனது பிரிவென்னும் நினைவிற்று. பீடுகெழு குரிசில் என்பது
தலைவனது உயர்வை வெளிப்படுத்தியவாறு. இத்தகைய தலைவன் ஒருவன் என்னோடு
நட்பு செய்திருப்ப நொதுமலர் வரைதல் அறனன்று. ஆதலின் நீ அதனை மாற்ற
முயல்வாயாக என்பது குறிப்பு' (குறுந்தொகை மூலமும் உரையும், பக்.72-73)
என இப் பாடலின் உரை விளக்கத்தில் மொழிவர் உ.வே.சா.
2.
பாரி மகளிர்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' (192) எனத்
தொடங்கும் புறப்பாடல் கணியன் பூங்குன்றனார் பாடியது. 'ஒரு பாட்டாலும்
உலகப் புகழ் பெறலாம் என்பதைக் காட்டுவது' இப் பாடல். இது போல, பாரி
மகளிர் தம் தந்தையை இழந்த மறு திங்களில் முழு நிலவைப் பார்த்துப்
புலம்பிய கையறுநிலைப் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அவலச்
சுவைக்குப் பேரிலக்கியமாய் விளங்கும் அப் பாடல் ஐந்தே அடிகளால் ஆனது
என்பது குறிப்பிடத்தக்கது. அப் பாடல் வருமாறு:
'அற்றைத் திங்கள்
அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.' (112)
'மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த கடந்த
முழுநிலா நாளில் நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள்
மலையையும் (பறம்பு) பிறர் கொள்ளவில்லை. அதே போல், இன்று வானில் முழுநிலா
ஒளி வீசித் திகழ்கின்றது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள்
எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்'
என்பது இப் பாடலின் தெளிவுரை.
'பாரி பாடிய பாடல் எதுவும் கிடைக்கவில்லை; அவன் பாடுதல் வல்லானாய்
இருந்திருக்கவும் கூடும், பாடு புகழாளனாக இருந்தமை வெளிப்படை. ஆனால்,
அவன் தன் மகளிரைப் பாடுதல் வல்லாராய் வளர்த்த பெருமை, அவன் பெருமைக்குப்
பெருமை சேர்ப்பதாம்' (புறநானூறு: மக்கள் பதிப்பு, ப.223) என்பது
மூதறிஞர் இரா.இளங்குமரனார் இப் புறநானூற்றுப் பாடலின் உரை விளக்கத்தில்
வரைந்துள்ள சிறப்புக் குறிப்பு ஆகும்.
மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியைப்
போரில் வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனைச் சூழ்ச்சியால்
வென்றனர்; வஞ்சித்துக் கொன்றனர். 'ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும்,
வஞ்சித்துக் கொன்றமையின் 'வென்றெறி முரசிpன் வேந்தர்' என்றது,
நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை, அல்வழியால் பாரியைக் கொன்று
முழக்குகின்றமை தோன்ற நின்றமையின், இகழ்ச்சிக் குறிப்பினையுடையதாயிற்று'
(புறநானூறு மூலமும் உரையும், ப.249) என்பது உரை வேந்தர் ஒளவை
சு.துரைசாமிப் பிள்ளை இப் பாடலில் காணும் நயக் குறிப்பு ஆகும்.
மூதறிஞர் தமிழண்ணல் குறிப்பிடுவது போல்,
'இப்பாடலில் அணிநலனோ, பிறவோ எதுவும் இல்லை. வெறும் செய்தி சொல்வது போல
இது, பேரவலத்தை விளைவிக்கிறது. இஃதோர் உளவியற் பாட்டு. சென்ற பொங்கலன்று,
உடனிருந்த தந்தை இந்தப் பொங்கலன்று உடனில்லையே என வருந்துவர். இது ஒரு
கருத்துத் தொடர்ச்சியால் ஏற்படும் அவலம்' (புறநானூற்றுக் குறும்பாடல்கள்,
ப.82) ஆகும்.
அவலச் சுவை ததும்பி நிற்கும் இப்
புறநானூற்றுப் பாடலின் தாக்கத்தினை இருபதாம் நூற்றாண்டுத் திரை இசைப்
பாடலிலும் காண முடிகின்றது. கவியரசர் கண்ணதாசன் 'பெரிய இடத்துப் பெண்'
திரைப்படத்திற்காக எழுதிய 'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே
நிலா' என்னும் புகழ் பெற்ற சோகப் பாடலின் சூழல், பாரி மகளிரின்
புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுவது. அதே போலக் கவிஞர் வைரமுத்துவும் 'இருவர்'
படத்திற்காக எழுதிய 'நறுமுகையே நறுமுகையே' எனத் தொடங்கும் திரைப்
பாடலில் வரும் 'அற்றைத் திங்கள் அந் நிலவில்' என்னும் அடியில் பாரி
மகளிரின் சொல்லாட்சியைப் பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ளார்.
கலை வடிவம் பெறம் அழுகைச் சுவைக்கு ஆற்றல்
மிகுதி; ஈர்ப்பும் மிகுதி, அதனாலேயே, சுகத்தை விடச் சோகத்தையே
விரும்பிப் பயின்று வருகின்றது மனித குலம். 'மிக இனிமையான கவிதைகள்
என்பவை மிகச் சோகமான சிந்தனைகளைக் கூறுவனவே' (வுhந ளறநநவநளவ ளழபௌ யசந
வாழளந வாயவ வநடட ழக ளயனனநளவ வாழரபாவள) என்பார் கவிஞர் ஷெல்லி. அவரது
கருத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது பாரி மகளிரின் இப்
புறநானூற்றுப் பாடல்.
3.
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
பெருங்கோழி என்பது உறையூர். ஆங்கு இருந்த
கல வணிகன் பெருங்கோழி நாய்கன் (நாய்கன் - கப்பல் வணிகம் செய்தவன்)
மகளார் இக் நக்கண்ணையார். போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்பானை இவர்
பாடியுள்ளார். அவனை 'என்னை' என்பது உரிமை பாராட்டும் சொல்லாம்.
நக்கண்ணையார் பாடியனவாகப் புறநானூற்றில்
மூன்று பாடல்கள் (83-85) காணப்படுகின்றன. மூன்றும் கைக்கிளைத் திணையில்
பழிச்சுதல் துறையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை சோழன் போரவைக் கோப்பெரு
நற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்ததை நக்கண்ணையார் நேரில்
பார்த்தார். நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். போரைப்
பார்த்தவர்களில் சிலர் 'நற்கிள்ளிக்கே வெற்றி' என்றும், வேறு சிலர் 'நற்கிள்ளிக்கு
வெற்றி இல்லை' என்றும் கூறுவதைக் கேட்ட நக்கண்ணையார் போரவையிலிருந்து
வீட்டிற்கு ஓடி வந்து அங்கிருந்த படியே நற்கிள்ளி மற்போரில் வெற்றி
பெறுவதைக் கண்டதைப் பற்றிப் பாடிய புறப்பாடல் வருமாறு:
'என்ஐக்கு ஊர்இஃது
அன்மை யானும்
என்ஐக்கு நாடுஇஃது அன்மை யானும்
'ஆடுஆடு' என்ப, ஒருசா ரோரே
'ஆடுஅன்று' என்ப, ஒருசா ரோரே
நல்ல, பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன்அவன் ஆடுஆ குதலே.' (85)
'ஆடுஆடு' என்ப, ஒரு சாரார்; 'ஆடுஅன்று'
என்ப, ஒரு சாரார் என உலகின் இருவேறு இயற்கையைப் பதிவு செய்யும்
நக்கண்ணையார், 'இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே' என்னும் சான்றோர்
வாக்கிற்கு ஏற்ப, இருவரது சொற்களையும் 'நன்மொழி'யாக ஏற்றுக்கொள்வது
நோக்கத்தக்கது. முடிவில், தன் தலைவன் வெற்றி வாகை சூடுவதையும்
நக்கண்ணையார் பாடலின் ஈற்றடியில் பெருமித உணர்வு ததும்ப மொழிவது
மனங்கொளத்தக்கது.
கூழே குடித்தாலும் தோள் வலிமை பெற்ற தன்
தலைவன் போர்க்களம் புகுந்தால் பகைவர் என்ன கதிக்கு ஆளாவார்கள்
என்பதையும் பிறிதொரு புறப்பாடலில் நயமாக எடுத்துரைத்துள்ளார்
நக்கண்ணையார்:
'போர்எதிர்ந்து
என்ஐ போர்க்களம் புகினே,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே' (84)
'என்ஐமுன் / நில்லன்மின் தெவ்விர்
பலர்என்ஐ, முன்நின்று கல்நின் றவர்' (771) என்னும் திருக்குறள் இங்கே
ஒப்புநோக்கத் தக்கதாகும்.
4.
பேய் மகள் இளவெயினியார்
இவர் பேயுருலத்தோடு நின்று பாலை பாடிய
சேரமான் பெருங்கங்கோவைப் பாடினர் என்றும், இளமையிலே இறந்து பின்னர் பேய்
உருவம் பெற்றார் என்றும், போர்க் களத்துப் பிணந்தின்னும் பேய் மகளிரை
வியந்து பாடியதால் பேய் மகள் என்ற பெயர் பெற்றார் என்றும் பலரும்
பலவாறாகக் கூறுவர். இவரது இயற்பெயர் இளவெயினி. குறமகள் இளவெயினி என்று
ஒரு புலவர் இருந்ததால், அவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர்
பேய் மகள் இளவெயினி என்று அழைக்கப்-பட்டார் என்றும் கூறுவர் (முனைவர்
இர.பிரபாகரன், புறநானூறு மூலமும் எளிய உரையும், பாடியவர் வரலாறு,
ப.432).
'களப்போரில் பேய் மகள் செயலாக இவர்
பாடியது கொண்டு, பேய் மகள் இளவெயினி எனப்பட்டார்' (புறநானூறு: மக்கள்
பதிப்பு, பாடியவர் வரலாறு, ப.39) என்பர் மூதறிஞர் இரா.இளங்குமரன்.
இவரால் பாடப்பட்டவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பொற்றாமரைப் பூவை வெள்ளி
நாரால் தொடுத்துப் பரிசு வழங்குதல் இவரது புறப்பாடலால் (11)
அறியப்படுகின்றது.
5.
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
அகநானூறு 154-ஆம் பாடல் பொதும்பில்
புல்லாளங் கண்ணியார் இயற்றியது. முல்லைத் திணை சார்ந்தது; வினை முற்றிய
தலைமகன் தேர்ப் பாகனுக்குக் கூறுவதாக அமைந்தது.
தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்ற ஒரு
தலைவன், வினை முடிந்து திரும்ப வேண்டிய கார் காலம் வந்தது. அதனால் பாகனை
அழைத்துக் கார் கால வருகையைக் கூறித் தலைவியை விரைந்து சென்று
சந்திப்பதற்கு ஏதுவாகத் தேரை விரைந்து செலுத்துமாறு கூறுகிறான்:
'ஊர்மதி வலவ தேரே
சீர்மிகுபு
நம்வயின் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே' (அகநானூறு, 154)
மிகுந்த மழை பொழிந்து பசுமைப் பயன்
பொலிதல், பள்ளம் எல்லாம் நீர் நிறைந்திருந்தல், வழியெல்லாம் மகிழ்வுடன்
தவளைகள் வாத்தியங்கள் போல் ஒலித்தல், செம்மண் தரையில் நீண்ட காம்புடைய
பிடவ மலர்கள் உதிர்ந்து கோலம் செய்தல், காந்தள் பூக்கள் பாம்பு சீறிப்
படம் எடுத்தாற் போல மலர்ந்திருத்தல், முறுக்கி விட்டது போன்ற கொம்புகளை
உடைய ஆண்மான் அன்புடைய தன் பெண் மானோடு இன்பமாக உலாவுதல் என இயற்கை
நிகழ்வுகளால் முல்லை நிலமே அழகு பெற்று விளங்குவதைப் புல்லாளங்
கண்ணியார் தம் பாடலில் படம் பிடித்துக் காட்டி இருக்கும் பான்மை
அருமையிலும் அருமை.
பயணத்திற்கு இனிய குளிர்ந்த வழி,
தொடங்கிய விரைவோடு இறுதி வரை ஓடும் குதிரை, சுத்தரிக்கப்பட்ட அதன்
அழகிய பிடரி மயிர், கால் வரை தொங்கும் மாலையில் ஒலிக்கும் மணிகள், உடல்
அழகோடு தலைவனையே விரும்பும் உள்ள அழகையும் ஒருங்கே பெற்றுத் திகழும்
மாநிறத்து மங்கையான தலைவி, அத் தலைவியை விரைந்து சென்று சந்திக்கத்
துடிக்கும் தலைவனின் மனநிலை என இப்பாடலின் ஒவ்வோர் அடியையும் சொல்லையும்
நோக்குத் திறத்துடன் புல்லாளங் கண்ணியார் செதுக்கி இருக்கும் பாங்கு
பயில்வோர் நெஞ்சை அள்ளுவதாகும்.
'வினவையின்
பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை;
உள்ளம் போல உற்றுறி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான'
என்னும் தொல்காப்பியக் கற்பியல் இறுதி
நூற்பாவுக்கு (1140) நல்லதோர் இலக்கியமாகப் புல்லாளங் கண்ணியாரின் இவ்
அகநானூற்றுப் பாடல் விளங்குகின்றது.
'வினை முற்றிய தலைமகன் தேர்ப் பாகற்கு
உரைத்தல்' என்ற துறையில் 44 பாடல்கள் சங்க இலக்கித்துள் காணப்படுகின்றன.
அவற்றுள் பொதும்பில் புல்லாளங் கண்ணியாரின் இவ் அகநானூற்றுப் பாடல்
தனிச்சிறப்புடன் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
ந. முருகேசபாண்டியன் 'சங்கப் பெண்
கவிஞர்களின் கவிதைகள்' என்னும் தம் தொகை நூலுக்கு எழுதிய முன்னுரையில்
குறிப்பிடுவது போல, 'சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள்
கவிதை எழுதியிருக்க வாய்ப்புண்டு அவற்றில் தொகுப்பாளரின் மனத்தடை,
கட்டுப்பாடு, நோக்கம் காரணமாகப் பல கவிஞர்களின் கவிதைகள்
தொகுக்கப்படாமலிருக்க சாத்தியமுண்டு. எனவே சங்க காலத்தில் பெண்கள்
எழுத்தறிவு பெற்றிருந்ததுடன் கவிதைகளும் எழுதினர் என்பது, அன்றைய சமூக
மதிப்பீட்டில் பெண்ணின் இடத்தினை அறிய உதவுகின்றது. இரண்டாயிரமாண்டு
வரலாற்றுப் பழமையான தமிழில், சங்க காலத்தில் தான் பெண்கள் அதிக அளவில்
கவிதைகள் எழுதியுள்ளனர். அதற்கடுத்துக் காரைக்கால் அம்மையார், ஆண்டாள்
என்ற சமயம் சார்ந்த பெண் கவிஞர்களின் கவிதைகள் மட்டும்தான்
பதிவாகியுள்ளன. சங்க காலத்தில் கவித்துவ வீரியத்துடன் அழுத்தமாகத் தடம்
பதித்திருந்த பெண் கவிஞர்களின் தொடர்ச்சி ஏன் அறுபட்டது? பெண்ணின்
வெளியை வீட்டினுள் முடக்கிடுமாறு சமூக நிலைமையில் மாற்றங்கள்
தோன்றியதற்கான காரணங்கள் நுட்பமாக ஆராயப்பட வேண்டியனவாகும்' (சங்கப்
பெண் கவிஞர்களின் கவிதைகள், பக்.8-9).
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
|