தொல்காப்பிய ஆட்சி: சங்க இலக்கியம்
முதலாக இருபதாம் நூற்றாண்டுப் படைப்புக்கள் வரையில்
பேராசிரியர்; இரா.மோகன்
தொல்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் நூல்;
இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல் என்பது அறிஞர்களின் ஒருமித்த
கருத்து. காலத்தால் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம், முழுமையாகக்
கிடைப்பது என்பது அதன் பிறிதொரு தனிச்சிறப்பு ஆகும். இந்நூல் எழுத்து,
சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது; 'ஓர் அதிகாரத்திற்கு
ஒன்பது இயல்கள்' என்ற ஒழுங்கான அமைப்பினைப் பெற்றது இருபத்தேழு இயல்கள்
உடையது; 1610 நூற்பாக்களால் ஆனது.
தொல்காப்பிய ஆட்சி
திருக்குறளைச் சொல்லாலும் தொடராலும் பொருளாலும் நடையாலும் வழி வழி
நூல்கள் எவ்வாறு. எவ்விடங்களில் எல்லாம் எடுத்தாண்டுள்ளன என்ற நோக்கில்
ஆய்வுகளும், ஆய்வுப் பதிப்புக்களும் வெளிவந்துள்ளன. அவற்றால் தமிழ்
இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் காலந்தோறும் படிந்திருப்பதை
வெளிப்படையாகத் தெரிந்து தெளிய முடிகின்றது. இத்தகைய ஒரு பதிப்பு
முயற்சியும் ஆய்வு நோக்கும் தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்திற்கும்
இதுவரை எவராலும் மேற்கொள்ளப் பெறவில்லை; தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்
என்னும் எண்ணமே மேலோங்கி நிற்பதால், இதுவரை எவரும் அத்தகைய பதிப்பு
முயற்சியில் - ஆய்வில் - முனைப்புடன் ஈடுபடவில்லை. 'தொல்காப்பிய ஆட்சிப்
பதிப்பு' என ஒன்று வெளிவருமானால் - பின்னைய நூல்களின் சொல், தொடர்,
பொருள், நடை முதலியவற்றில் தொல்காப்பியத்தின் தாக்கம் எங்ஙனம் படிந்து
காணப்படுகின்றது என்பது விரிவாக ஆராயப்பெறுமானால் மூதறிஞர்
வ.சுப.மாணி;க்கம் குறிப்பிடுவது போல் - 'நயம் பிலிற்றும் பின்னைய
இலக்கியங்களுக்கெல்லாம் நயம் ஊட்டிய தேனிறால் தொல்காப்பியம் என்பது
உறுதிப்படும்' (தொல்காப்பியக் கடல், ப.5).
முன்னைப் பழைய இலக்கியமான சங்க இலக்கியம் தொடங்கி பின்னைப் புதிய
இலக்கியமான பாரதியார் பாடல்கள் வரை - ஏன், இன்றைய புனைகதைகளிலும்
திரையிசைப் படல்களிலும் கூட - தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தின்
தாக்கம் எங்ஙனம் படிந்துள்ளது என்பதைக் குறித்து ஈண்டு நிரலே காண்போம்.
I.
சங்க இலக்கியங்களில் தொல்காப்பிய ஆட்சி
'சங்க இலக்கியங்களில் தொல்காப்பிய ஆட்சி' என்னும் தலைப்பு பரந்துபட்டது;
விரிந்த அளவில் நுண்ணாய்வாக மேற்கொள்ளத் தக்கது. இவ்வகையில்
தொல்காப்பியத் தாக்கம் பெற்ற தெறிப்பான சில சங்க இலக்கியப் பதிவுகள் நம்
கருத்தில் கொள்ளத்தக்கவை ஆகும்.
'அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்' (1038) என்னும் தொல்காப்பிய
அடியின் விரிவான சொல்லோவியமே 'அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே' (குறுந்தொகை
40) என முடியும் செம்புலப் பெயல் நீராரின் குறுந்தொகைப் பாடல் ஆகும்.
ஐந்திணையின் அடிப்படைப் பண்பினை 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை' என இலக்கண
வடிவில் தொல்காப்பியம் சுட்ட, 'அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே' எனக்
குறுந்தொகை அதற்கு அழகிய இலக்கிய வடிவம் தந்திருப்பது
குறிப்பிடத்-தக்கது.
சங்க இலக்கியம் வினை முடித்து மீளும் தலைவனின் உள்ளத்திற்குச் 'அருந்தொழில்
முடித்த செம்மல் உள்ளமொடு' (அகநானூறு, 184) எனப் புகழாரம் சூட்டும்.
இதற்கு முன்னோட்டமாக அமைவது 'அருந்தொழில் முடித்த செம்மல் காலை' (1092)
என்னும் தொல்காப்பிய அடி ஆகும்.
தொல்காப்பிய நூற்பாக்களின் அடிப்படையில் சங்கச் சான்றோர்கள் தங்கள்
பாடல்களைப் புனைந்துள்ளமைக்குச் சான்றுகள் நிரம்ப உண்டு. காட்டாக,
ஒக்கூர் மாசாத்தியார் படைத்துள்ள ஓர் அகநானூற்றுப் பாடற் காட்சி இங்கே
குறிப்பிடத்தக்கது. போர் வினை முடித்த ஒரு தலைவன் தேர் ஏறினான். உடனே
பாகன், 'வீடு வந்து சேர்ந்தோம்; இறங்குங்கள்' என்று கூறினான். தலைவன்
மருண்டான். 'இடைப்பட்ட நெடுந்தொலைவைப் பாகனே! எப்படிக் கடந்தாய்? நீ
தேருக்குக் குதிரையாகப் பூட்டியது காற்றா? நின் நெஞ்சமா?' என்று வினவி,
தலைவியை விரைந்து காணும் வாய்ப்பு நல்கியமைக்காகப் பாகனைத் தோளோடு தோள்
தழுவினான்; 'தேரில் ஏறியது அறிந்தேன்; இப்போது இறங்குவது அறிகிறேன்'
என்று பாகனின் ஆற்றலை மனமாரப் பாராட்டினான்.
''மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்' என்றநின் மொழிமருண் டிசினே;
வான்வழங்கு இயற்கை வளியூட் டினையோ?
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?
உரைமதி வாழியோ, வலவ!' (அகநானூறு, 384)
ஒக்கூர் மாசாத்தியாரின் இப்புனைவுக்கு அடியெடுத்துக் கொடுத்தது
தொல்காப்பியக் கற்பியலின் இறுதி நூற்பா என்பது இரண்டையும் ஒப்புநோக்கிக்
கற்பார்க்கு இனிது விளங்கும். அந்நூற்பா வருமாறு:
'வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை;
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான'. (1140)
போர் முதலிய அரச காரியங்களுக்காகத் தேரில் பிரிந்து சென்ற தலைவன், வினை
முடித்துத் திரும்பி வரும் பொழுது, சுர வழியில் இடையில் தங்குதல் என்பது
இல்லை. தலைவன் இங்ஙனம் விரைந்து திரும்பி வருவதற்குக் காரணம் அவனது
தேரில் பூட்டிய குதிரைகள் ஆகும். அவற்றின் வேகத்திற்கு அழகிய ஓர்
உவமையைக் கையாளுகின்றார் தொல்காப்பியர். தலைவனது தேரில் பூட்டப்பெற்ற
குதிரைகள் அவனது உள்ளம் போலவே உற்றுழி உதவக் கூடியவையாம்; பறவையைப்
போலப் பறந்து செல்லக்கூடிய விரைவும் எழுச்சியும் பெற்றவையாம்.
II. திருக்குறளில் தொல்காப்பியத்தின் தாக்கம்
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் குறிப்பிடுவது போல, 'தந்தையின் பொருளை
உரிமையோடு மகன் எடுத்துக்கொள்வது போல, திருவள்ளுவர் தொல்காப்பியரின்
சொற்செல்வத்தைப் பொருட் செல்வத்தோடு அள்ளிக் கொள்ளுகின்றார்' (தொல்காப்பியக்
கடல், ப.60). இக் கருத்திற்கு அரண்செய்யும் சான்றுகள் சிலவற்றை இங்கே
காண்போம். அறம், பொருள், இன்பம் என முப்பாலாகத் திருக்குறளை
வடிவமைப்பதற்குக் கருத்தாக்கம் நல்கியவர் - வழிகாட்டியவர் -
தொல்காப்பியரே ஆவார். 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' (1038)
எனவும், 'அறம் முதலாகிய மும்முதற் பொருள்' (1363) எனவும் அவர் இரு
இடங்களில் சுட்டியிருத்தல் இவ்வகையில் நோக்கத்தக்கது.
மேலும், திருக்குறள் 'அகர முதல எழுத்தெல்லாம்' (1) எனத் தொடங்கிக் 'கூடி
முயங்கப் பெறின்' (1330) என்று னகரத்தில் முடியும் எழுத்தின் அமைப்பும்
அழகும் கண்டு நாம் பெருமையும் பெருமிதமும் கொள்கின்றோம்.
திருவள்ளுவருக்கு இங்ஙனம் தம் நூலை அமைப்பதற்கான எண்ணம்,
'எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப' (1)
என்னும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவினால் பிறந்திருக்கலாம் எனக்
கருதுவதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது.
'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப' (1434)
எனப் பெரியோரின் பொருமையைத் தொல்காப்பியர் போற்றிப் பாடுவார்.
இந்நூற்பாவின் சொல்லும் பொருளும் அப்படியே பின்வரும் ஒரு குறளாக
உருவெடுத்திருப்பதைக் காணலாம்.
'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்' (28)
'இம்மை மாறி மறுமை ஆயினும்' என்பது போல, இங்கே தொல்காப்பிய நூற்பா,
திருக்குறளாக மறுபிறவி எடுத்திருப்பது கண்கூடு.
'குற்றமற்ற' எனப் பொருள் படும் 'புரைதீர்' என்னும் தொடர்
தொல்காப்பியருக்கு விருப்பமானது. அவர் அதனைத் தம் நூலில் மூன்று
இன்றியமையாத இடங்களில் எடுத்தாண்டுள்ளார். புறத்திணை இயலில் பாடாண்திணை
பற்றிய நூற்பாவில் ஓர் இடத்திலும், களவியலில் தோழியின் கூற்றைச்
சிறப்பிக்கும் வகையில் இரு இடங்களிலும் இத்தொடர் தொல்காப்பியரால்
கையாளப்பெற்றுள்ளது.
'புரைதீர் காமம்' (1027)
'வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர்; கிளவி' (1053)
'புரைதீர்; கிளவி தாயிடைப் புகுப்பினும்' (1060)
'புரைதீர்;' என்னும் இத் தொல்காப்பியத் தொடர் திருவள்ளுவரின்
உள்ளத்தையும் ஈர்த்துள்ளது.
'பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்;த்த
நன்மை பயக்கும் எனின்' (292)
என்னும் திருக்குறளில் அவர் இத்தொடரினைச் சிறப்பான முறையில்
பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
'எனப்படுவது' எனத் தொடங்கி ஒரு கருத்தினை வகைப்படுத்துவதும் அதற்கு
வரைவிலக்கணம் தருவதும் தொல்காப்பியரின் புலப்பாட்டு நெறி ஆகும்.
இந்நெறியில் அமைந்துள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் நான்கு (963; 1076;
1088; 683).
ஆற்றல் வாய்ந்த இக் கருத்துப் புலப்பாட்டு நெறியினைத் திருவள்ளுவரும்
தம் நூலில் பொன்னே போல் போற்றிக் கையாண்டுள்ளார்.
'வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' (291)
என வரும் குறட்பா இவ்வகையில் நினைவுகூரத்தக்கது.
III.
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியச் சாயல்
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தொல்காப்பியச் சாயல் நிரம்ப உடையது.
'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்என்று
இருமூன்று வகையில் கல்லொடு புணர' (1006)
என்று தொல்காப்பியர் புறத்திணை இயலின் வெட்சித் திணையில் போர்க்களத்தில்
வீர மரணம் அடைந்த ஒரு பெருவீரனுக்கு நடுகல் எடுத்தலின்போது
மேற்கொள்ளப்பெறும் நிலைகளைக் கூறிச் செல்வார். அந்த அடிச்சுவட்டில் அவர்
கூறிய ஒவ்வொரு சொல்லையும் ஒரு காதையாகவே வஞ்சிக் காண்டத்தில்
விரித்துரைத்துள்ளார் இளங்கோவடிகள். காட்சிக் காதை, கால்கோட் காதை,
நீர்ப்படைக் காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை (25-29) எனச் சிலம்பின்
மூன்றாவதாகிய வஞ்சிக் காண்டத்தின் காதைகளுக்குத் தொல்காப்பியத்தை
அடியொற்றிப் பெயர் சூட்டப்-பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
'அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தனும் தொல்லோர் சிறப்பின்
விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை'
(கொலைக்களக் காதை, 71-73)
எனச் சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் கண்ணகி தன் இல்லறக்
கடமைகளைச் செய்ய மாட்டாமையை நினைந்து மனம் வருந்திப் பேசுவாள். இவை ஓர்
இல்லக்கிழத்தியின் தலையாய கடமைகள் என்று இளங்கோவடிகளுககுக்
கல்வி-யூட்டிய நூல் தொல்காப்பியமே.
'கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்லியல் பொறையும், நிறையும், வல்லிதின்
விருந்துபுறந் தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' (1098)
எனக் கற்பியலில் தலைவியின் மாண்புகளை நிரந்தினிது கூறுவார்
தொல்காப்பியர். கற்பு நலம் சான்ற ஒரு பெண்ணுக்குத் தொல்காப்பியர்
வகுத்துள்ள இவ் வரை-விலக்கணத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஓர்
இலக்கியமாகவே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் படைத்துள்ளார்
என்று முடிவுக்கு நாம் வரலாம்.
'வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்' என்பது சிலப்பதிகார
அரங்கேற்று காதையின் இறுதி அடி (175). 'வடுநீங்கு சிறப்பின் முதலன
மூன்றும்' (1034) எனவும், 'வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமை' (1093)
எனவும் வரும் தொல்காப்பியத் தொடராட்சிகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கன.
IV.
கம்பர் வாக்கில் தொல்காப்பியத்தின் செல்வாக்கு
'தெய்வப் புலவர்'இ 'கவிச் சக்கரவர்த்தி', 'கல்வியில் பெரியவர் கம்பர்',
'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்றெல்லாம் போற்றப்
பெறும் கம்பரின் வாக்கிலும் தொல்காப்பியத்தின் செல்வாக்கு ஆங்காங்கே
படிந்திருக்கக் காண்கிறோம். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிட்டத்தக்க
இரு இடங்களை ஈண்டுக் காண்போம்.
கம்பராமாயண யுத்த காண்டத்தின் இரணியன் வதைப் படலத்தில் ஓர் இடம்:
நரசிங்கம் தூணில் இருந்து வெளிப்பட்டுப் பெருவடிவு கொண்டு நிற்கின்றது;
அதனைத் தெய்வம் என்று வணங்குமாறு பிரகலாதன் தன் தந்தை இரணியனுக்கு
அறிவுறுத்துகின்றான். இரணியனா வணங்குபவன்?
'கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள்கரியின் கேழ்இல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணிந்து, பின், என்
வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ? என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான்'
(யுத்த காண்டம்: இரணியன் வதைப் படலம், 146)
'ஊடல் நிலையிலும் நான் மனைவியை வணங்கி இன்பம் வேண்டியதில்லையே? நானா
பகைவனை அஞ்சி வணங்குபவன்?' என்று இங்ஙனம் கம்பரின் இரணியன்
முழங்குவதங்குக் கோடி காட்டிய முன்னவர் தொல்காப்பியர் ஆவார்.
'மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய' (1172)
என்பது தொல்காப்பியர் தீட்டும் குடும்பவியல் காட்சி. 'மனைவி உயர்வும்
தலைவன் அவளுக்குப் பணிவதும் ஆகிய இரண்டும் எண்ணிப் பார்க்குமிடத்து,
தலைவியின் புலவிக் காலத்தில் உரியனவாகும்' என மொழிவார் அவர். 'வாளினைத்
தொழுவ தல்லால், வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ?' என்னும் கம்பர்
வாக்கில் தொல்காப்பியரின் தாக்கம் படிந்திருப்பதைக் காண்கின்றோம்;
தொல்காப்பியர் வகுத்துள்ள அகப்பொருள் விதிக்கு மாறாக - மறுப்பாக -
இரணியனின் முழக்கம் அமைந்திருக்கக் காண்கின்றோம்.
V.
சிற்றிலக்கிய வளர்ச்சிக்குத் தொல்காப்பியத்தின் பங்களிப்பு
தொல்காப்பியர் காலத்தில் குற்றமற்ற நற்புகழைக் கருதியபடி உறங்கும்
அரசர்களை எழுப்புவதற்குச் சூதர்கள் பாடுவது 'துயிலெடை நிலை' எனப்பட்டது.
'தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலை' (1037)
எனப் புறத்திணை இயலின் பாடாண்திணை இதனைக் குறிப்பிடும். அரசர்களைத்
துயிலெழுப்பும் இவ்விலக்கிய நெறி பக்தி காலத்தில் மாற்றம் பெற்றது; 'எம்பெருமான்
பற்றி எழுந்தருளாயே' (பாரதியார் கவிதைகள், ப.146) எனத் திருவாசகத்தில்
தெய்வத்திற்குப் பள்ளி எழுச்சி பாடுவதாக அமைந்தது. இருபதாம்
நூற்றாண்டில் பாரத மாதாவுக்குப் பாடப்பெறும் பள்ளியெழுச்சியாகப்
புதுப்பிக்கப்பட்டது; 'ஈன்றவளே பள்ளியெழுந் தருளாயே' எனப் 'பாரத மாதா
திருப்பள்ளியெழுச்சி' (பக்.146-147) பாடினார் பாட்டுக்கொரு புலவர்
பாரதியார்.
VI.
தொல்காப்பியரின் அடிச்சுவட்டில் பாரதியார்
தொல்காப்பியத்தின் ஆட்சியை இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரும்புலவர்
பாரதியாரின் பாடல்களிலும் ஆங்காங்கே காண முடிகின்றது. ஒரு பாடல் என்பது
இன்னின்னவாது அமைந்திருக்க வேண்டும் என்று தொல்காப்பியம் முறை
வகுத்துள்ளது. தொல்காப்பியரின் நோக்கில், கருத்துச் செறிவு - இயற்கை
எழில் - பொருளாழம் என்னும் மூன்று கூறுகளும் முறைப்படி பொருந்திய பாடலே
சிறந்த பாடல் ஆகும்.
'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை' (949)
என்பது தொல்காப்பியர் சுட்டும் இலக்கிய நெறி. சங்கப் பாக்கள் அனைத்தும்
இந்நெறியைப் பின்பற்றி அமைந்தனவாகும். இந்நெறியினை - முன்னை இலக்கிய
மரபினை - விடாமல் போற்றிப் பாடல் இயற்றிய பெருமை கவியரசர் பாரதியாருக்கு
உண்டு.
'அல்லிக் குளத்தருகே - ஒருநாள்
அந்திப் பொழுதினிலே - அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் - செய்தவினை
முற்று மறந்திடக் கற்ற தென்னே' (பாரதியார் கவிதைகள், ப.333)
என்னும் பாரதியாரின் காதல் பாடலில் முதல் கரு உரி என்ற முப்பொருளும்
முறைப்படி அமைந்திருக்கக் காணலாம். இப் பாடலில் இடம்பெற்றுள்ள அல்லிக்
குளமும், அந்திப் பொழுதும் முதற் பொருளைச் சுட்டுவன் முல்லைச் செடி
கருப்பொருளில் அடங்கும்; செய்த வினை உரிப்பொருள் ஆகும்.
தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் பாடிய சிறப்புப் பாயிரம் 'வடவேங்கடம்
தென்குமரி' என இரு திசைகளின் எல்லைகளையே குறிக்கின்றது; தமிழகத்தின்
மேற்றிசை, கீழ்த்திசை எல்லைகளைக் கூறவில்லை; 'நல்லுலகம்' என்று
பொதுப்பட நாட்டினைப் போற்றுகின்றது.
'வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து'
என்னும் தொல்காப்பியப் பாயிர மரபைப் பாரதியாரும் தம் பாடல் ஒன்றில் பின்
வருமாறு குறித்துள்ளார்:
'நித்தந் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு' (பாரதியார் கவிதைகள், ப.165)
'இவற்றிடையே' என்னும் பாரதியாரின் தொடராட்சி, தொல்காப்பியப் பாயிரத்தில்
வரும் 'ஆயிடை' என்பதன் தற்கால வடிவம் ஆகும்.
VII.
இருபதாம் நூற்றாண்டுப் புனைகதைகளில் தொல்காப்பியத் தடம்
'மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்' (1000)
என்பது அகத்திணையின் அடிப்படையான பண்பைச் சுட்டும் தொல்காப்பிய நூற்பா
'அகத்திணையில் ஒருவரது இயற்பெயரைச் சுட்டிக் கூறிப் பாடப்பெறாது; தனி
ஒருவர் வாழ்வாயினும் பொதுப்படவே பாடப்பெறும். உலக இலக்கியத்தில், சங்க
இலக்கியத்; தனித்தன்மை இது' (தொல்காப்பியம்: மூலமும் கருத்துரையும்,
ப.311) என்பர் பேராசிரியர் தமிழண்ணல். தொல்காப்பியர் சுட்டியுள்ள
இவ்விலக்கிய நெறி இருபதாம் நூற்றாண்டுப் புனைகதைகளிலும்
பின்பற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தமிழுக்கு ஞான பீட விருதினைப்
பெற்றுத் தந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'அக்கினிப் பிரவேசம்' என்ற
சிறுகதை இவ்வகையில் நினைவுகூரத்தக்கது. அக் கதையில் வரும் மாந்தர்கள்
இயற்பெயர்களால் சுட்டப்பெறவில்லை; அவன், அவள், தாய் என்றே பொதுப்படக்
கதைமாந்தர்களின் பெயர்கள் சுட்டப்பெற்றுள்ளன.
தொல்காப்பியம் வகுத்துரைக்கும் கற்புக் கூறுகள் இரண்டு. ஒன்று கரணமொடு
புணர்தல்; மற்றொன்று, கொடைக்கு உரியோர் கொடுத்தல். இரண்டனுள், பின்னது
இல்லையேனும் நன்று; முன்னது இல்லாதிருத்தல் கூடாது.
'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான' (1089)
எனக் கரணத்தினை வலியுறுத்துவார் தொல்காப்பியர், வரைவுக்கு -
திருமணத்திற்கு - ஏதாவது ஒரு கரணம் - பலர் அறியும் ஒரு வெளிப்படையான
சடங்கு - வேண்டும் என்பதே தொல்காப்பியர் துணிவு. இதனை ஜெயகாந்தன் தம்
சிறுகதை ஒன்றில் இன்றைய காலத்திற்கு ஏற்ற முறையில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயகாந்தனின் 'புதிய வார்ப்புகள்' என்னும் சிறுகதையில் வரும் இந்து தன்
தந்தைக்குத் தெரியாமல் காதலனோடு உடன்போக்கு மேற்கொள்ளத் திட்டமிடுகிறாள்;
அந்நிலையில் அவளது தாய் குஞ்சம்மாள் இந்துக்குக் கூறுவதாக ஜெயகாந்தன்
எழுதியுள்ள பகுதி இது:
'குஞ்சம்மாள் திரும்பி இந்துவின் வெறுங்கழுத்தைப் பார்த்தாள்: 'இந்து,
மறந்துடாதே! ஏதாவது ஒரு தெய்வ சந்நிதானத்திலே போயி... இந்த மாதிரி ஒண்ணு
சுட்டிக்கோடி. பெண்களுக்கு இதுதான் பெரிய நகை!' என்று தன் கழுத்தில்
கிடந்த மாங்கல்யக் கயிற்றை வெளியே எடுத்துக்காட்டினாள்' (புதிய
வார்ப்புகள், ப.26).
இப் பகுதியில் ஜெயகாந்தன் தமிழர் திருமணத்தில் சிறப்பிடம் பெறும் தாலி
கட்டிக்கொள்வதன் இன்றியமையாமையை உணர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் தொன்மை நலம் சான்ற சங்க இலக்கியங்கள் முதலாக இன்றைய இருபதாம்
நூற்றாண்டுப் படைப்புகள் வரையில் தொல்காப்பிய ஆட்சி சொல், தொடர், பொருள்,
நடை, கருத்து என்றாhற் போல் பல்வேறு நிலைகளில் படிந்திருக்கக்
காண்கிறோம். எதிர்கால ஆய்வுலகம் மேற்கொள்ள வேண்டிய ஒரு விரிவான
நுண்ணாய்வுக்கான முன்னோட்டமே - கோலப் புள்ளியே - இக் கட்டுரை ஆகும்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
|