இளசையாரின் கவிதைப் பரிமாணம்

பேராசிரியர் இரா.மோகன்

‘இளசையார்’ எனத் தமிழ் கூறு நல்லுலகால் மதிப்போடும் மரியாதை-யோடும் அழைக்கப் பெறும் இளசை சுந்தரம், பன்முகத் திறன்கள் படைத்த ஓர் ஆற்றல்சால் ஆளுமையாளர். எழுத்தாளர், ஊடகவியலாளர், சொற்பொழி-வாளர், கட்டுரையாளர், நகைச்சுவையாளர் என்றாற் போல் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குப் புதுநெறி காட்டிய புலவரான பாரதியார் புகழொடு தோன்றிய எட்டையபுரத்தைத் தமது பிறப்பிடமாகக் கொண்டவர் இளசை சுந்தரம். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயின்று பி.ஏ., பி.எட்., பட்டங்கள் பெற்ற அவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இளசை சுந்தரத்தின் எழுத்துப் பயணம் 1987-ஆம் ஆண்டில் தொடங்கியது. அவரது முதல் நூல் ‘சாதகப் பறவைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஆகும். அந்நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பட்டப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப் பெற்ற சிறப்பினது ஆகும்.

‘நீங்களும் மகுடம் சூடலாம்’, ‘நீங்களும் சிகரம் தொடலாம்’, ‘நீங்களும் வாகை சூடலாம்’, ‘நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம்’, ‘நீங்களும் வெற்றி பெறலாம்’, ‘நம்மை நாமே செதுக்குவோம்’, ‘சிகரம் தொடச் சிந்திக்கலாம் வாங்க’ என்பன படிப்பவர் நெஞ்சங்களில் நம்பிக்கை விதைகளை ஆழமாக ஊன்றும் வல்லமை படைத்த இளசையாரின் இன்றியமையாத நூல்கள் ஆகும்.

தெய்வத்திரு தென்கச்சி சுவாமிநாதனின் அடிச்சுவட்டில் ஐந்து ஆண்டுகள் வானொலியில் இளசையார் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். அவை மூன்று தொகுப்புகளக வெளிவந்துள்ளன. திருச்சி, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, கோழிக்கோடு, ஊட்டி, மதுரை ஆகிய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், இயக்குநர் முதலான பல்வேறு நிலைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இளசை சுந்தரம், ‘வானொலி வளர்த்த தமிழ்’ என்ற ஆய்வுக்காகக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளசையார் மதுரை பொதிகைத் தொலைக்காட்சியில் பொறுப்பு இயக்குநராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘மகாகவி பாரதி விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் இளசையார். கனடா, பாரீஸ், இங்கிலாந்து (லண்டன்), தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்கள் இளசையாரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் விதத்தில் பல்வேறு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன.

பெருந்தலைவர் காமராசர், தியாக சீலர் கக்கன், பொதுவுடைமைத் தென்றல் ஜீவா ஆகியோர் குறித்து இளசையார் வெளியிட்டுள்ள நூல்கள் ஆளுமை வளர்ச்சி நோக்கில் இளைய தலைமுறையினர் கட்டாயம் கற்க வேண்டியவை ஆகும்.

நகைச்சுவையும் ஆன்மிகமும் இளசையாருக்கு இரு கண்களைப் போன்றவை. ‘நகைச்சுவை நந்தவனம்’, ‘சிரிப்பும் சிந்தனையும்’, ‘வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்’, ‘வாய் விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்’, ‘ஆன்மீகம் அறிவோம்’ என்னும் அவரது நூல்கள் இவ்வகையில் கருத்தில் கொள்ளத் தக்கவை ஆகும்.

இளசையார் அண்மையில் ஒரு கவிஞராகவும் தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். ‘பாக்யா’, ‘தினமலர்’ (வார மலர்), ‘கவிதை உறவு’, ‘ராணி’ ஆகிய இதழ்களில் அவ்வப்போது வெளிவந்து வாசகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பினைப் பெற்ற அவரது கவிதைகள் இப்போது ‘விடியலின் வெளிச்சம்…’ என்னும் தலைப்பில் தனி ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன. ‘நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி, நடந்த இளந்தென்ற’லைப் போல், சிறுகதைத் துறையில் காலடி பதித்து, ஊடகத் தமிழை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்று, அவையினைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் தமது பேச்சுத் திறத்தால் உலகையே வலம் வந்து கொண்டிருக்கும் இளசை சுந்தரம், இப்போது கவிதைத் துறையிலும் தடம் பதிக்க முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.

அதிசய மனிதர் அப்துல் கலாம்

ஒரு தேர்ந்த கவிஞரின் பார்வை வித்தியாசமானது; தனித்தன்மை வாய்ந்தது; சாதாரணமான ஒன்றிலும் அசாதாரணமான பக்கத்தைக் காணும் ஆற்றல் படைத்தது. இத்தகைய பார்வைக்குச் சொந்தக்காரர் இளசையார் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் கவிதை ‘அதிசய மனிதர் அப்துல் கலாம்’ என்பது. அப்துல் கலாமின் மரணம் இறப்பில்லையாம்; உண்மையில் அது இடப்பெயர்ச்சியாம். இதுவரை இந்தியாவில் வாழ்ந்து வந்த கலாம், இப்போது முதல் இந்தியர்களின் இதயங்களில் வாழ்கின்றாராம்; இளைஞர்களின் ஒளி படைத்த விழிகளில் வாழ்கின்றாராம்; எழுச்சிமிகு பாரதம் படைக்கும் வழிகளில் வாழ்கின்றாராம். ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போது அப்துல் கலாம் குறிப்பிட்ட உன்னதமான கருத்துக்குக் கவிஞர் தந்திருக்கும் கவிதை வடிவம் அற்புதமானது; பயில்வோர் நெஞ்சை அள்ளும் தன்மையது. கவிஞரின் சொற்களில் உயிர்ப்பான அவ்வரிகள் வருமாறு;

“ இந்துக்களின் புதினச் சின்னமான
  குத்துவிளக்கை,
  கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமான
  மெழுகுவர்த்தி கொண்டு,
  இஸ்லாமியனாகிய நான் ஏற்றுவதன் மூலம்
  இந்திய ஒருமைப்பாடு உறுதிப்படுகிறது”        

                                        (விடியலின் வெளிச்சம்…, ப.42)

அணுகுண்டு ராட்டையில் அகிம்சை நூல் நூற்ற அப்துல் கலாம், ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயங்களை ஆளுவதால் எந்நாளும் குடியரசுத் தலைவரே ஆவார் என்பது கவிஞரின் முடிந்த முடிபு.

மனைவியின் மாண்பு

உலக இலக்கியங்களில் இருந்து உள்ளூர் இலக்கியங்கள் வரை ஒன்று விடாமல் அனைத்தையும் அலசிப் பார்த்தால், மோனையைப் போன்ற முதல் இடம் – முதன்மையான நிலை – தாய்க்கும், எதுகைக்கு நிகரான அடுத்த இடம் – இரண்டாவது நிலை – தாரத்திற்கும் வழங்கப் பெற்றிருப்பது தெரிய வரும். ‘தாய்க்குப் பின் தாரம்’ என்ற பழமொழியும் இந்நோக்கில் வழங்குவதே ஆகும். உண்மையில் வாழ்க்கையின் பக்கங்களை அமைதியாகவும், பொறுமையாகவும் புரட்டிப் பார்த்தால் தாயின் மடிக்கு உள்ள ஆற்றல் தாரத்தின் தோளுக்கும் இருப்பது புலனாகும். கவியரசர் பாரதியார் ‘வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா!’ எனத் தம் கவிதையில் தாய்க்குப் புகழாரம் சூட்டுவதோடு நின்று விடாமல், ‘மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்’ என மனைவியின் மாண்பினையும் எடுத்துரைப்பது கூர்ந்து நோக்கத் தக்கதாகும். இல்லா-விட்டால், ‘வாழ்க்கைத் துணை’ என்றும், ‘மனைமாட்சி’ என்றும் பொருள் பொதிந்த தொடர்களால் இல்லாளைச் சுட்டி இருப்பாரா வள்ளுவப் பெருந்தகை? கவிஞர் இளசையாரும் ‘நல்ல மனைவி’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையில் வாழ்க்கைத் துணையின் நலத்தினை – மாண்பினை – அருமையாகப் பறைசாற்றியுள்ளார். ‘இடையிலே உறவாய் வந்து இல்லறத்தில் புகுந்தாலும், கடைசி வரை இருந்து கை கொடுப்பவள்’ என்றும், ‘பிள்ளைக் கனியைப் பெற்றெடுத்து, அள்ளி அணைத்து முத்தமிட்டு, வம்சம் தழைக்க வைத்த வாச மலர்’ என்றும், ‘முன்கோபக் கணவனையும் முறையாகப் பண்படுத்தி, நன்னெறிக்குக் கொண்டு வரும் நங்கையரின் திலகம்’ என்றும், ‘பிறந்த வீட்டின் பெருமையையும் புகுந்த வீட்டின் சிறப்பினையும், கண்கள் இரண்டைப் போல் காத்து நிற்கும் மகராசி’ என்றும், ‘கணவனது வருவாய்க்குள் கச்சிதமாய் செலவு செய்து, குணவதியாய் விளங்குகின்ற குடும்ப விளக்கு’ என்றும் நல்ல மனைவியின் நற்பண்புகளை நெஞ்சாரப் போற்றிப் பாடும் கவிஞர், ‘பெண் புத்தி பின் புத்தி’ என்று தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கி வரும் பழமொழிக்கும் (பழிமொழிக்கும்?) உரிய சரியான விளக்கத்தினைத் தந்துள்ளார். ‘பின்னாளில் நடப்பதை எல்லாம் முன்கூட்டியே அறியும் ஞானம் படைத்தவள் பெண்’ என்பது கவிஞர் தரும் புதிய விளக்கம். ‘மாதா பிதா குரு தெய்வம் வரிசையில் மனைவி இல்லையே?’ என்று கேட்டால், அதற்கும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் நல்லதொரு மறுமொழியினை அளித்துள்ளார் கவிஞர். ‘மாதா பிதா குரு தெய்வம் அத்தனையும் அவளாகவே இருப்பதால் அவள் இங்கு தனித்து இல்லை’           (பக்.26-27) என்னும் கவிஞரின் கருத்து சிந்திக்கத் தக்கதாகும்.

தாய்மையின் புலம்பல்

‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்’ என்பது தான் இந்த நூற்றாண்டு அவலங்களின் உச்சம். இதனைப் பாடுபொருளாக்கி ‘தாய்மை’ என்னும் கவிதையைப் படைத்துள்ளார் இளசையார். இக்கவிதையில்,

“ அனாதை இல்லத்தில் இங்கு / அத்தனையும் கிடைக்கிறது
  ஆனாலும் உனைப் பார்க்கும் / ஆவல் மட்டும் தவிக்கிறது
  உயிர்போகும் காலத்துக்குள் ஒருநாளாவது வருவாயா?”   
  (ப.4)

என அனாதை இல்லத்தில் வாழ்ந்து வரும் தாய் ஒருத்தியின் உள்ளத்து உணர்வினை உருக்கமான மொழியில் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

‘நோய்ப் பறவைகளின் வேடந்தாங்கல்!’

“ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
  இரும்இடை மிடைந்த சில சொல்
  பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே”     
    (புறநானூறு, 243)

என இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே சங்கச் சான்றோர் ஒருவர் முதுமையின் அவலத்தை – ஆற்றாமையை – சொல்லோவியமாக்கிக் காட்டினார். முதுமையின் அடையாளமான ஊன்றுகோலைச் சிறப்பித்துப் பாடிய காரணத்தால் ‘தொடித்தலை விழுத்தண்டினார்’ என்பதே அவருக்குப் பெயராக அமைந்தது. இந்நூற்றாண்டின் பெருங்கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமான், “நிமிஷக் கறையான் அரித்த ஏடு, இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத்தட்டு, ஞாபகங்களின் குப்பைக் கூடை, வியாதிகளின் மேய்ச்சல் நிலம், காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட வர்ண ஓவியம்” (நேயர் விருப்பம்,ப.51) எனப் படிம அழகுடன் முதுமையைப் படம் பிடித்துக் காட்டினார். இவ்விரு கவிஞர்களின் வரிசையில் இளசையாரும் ‘முதுமை’ குறித்து ஓர் உருக்கமான கவிதையைப் படைத்துள்ளார்.

“ நோய்ப் பறவைகளின்
  வேடந்தாங்கலாகிப் போனது
  அந்த முதியவரின் உடல்”

எனத் தொடங்கும் அக் கவிதை, ‘வீட்டுக்குச் சுமை என்று, உதாசீனப் படுத்தப்படும் அவர், இன்று காலையில் இருந்து காணவில்லை’ என்ற செய்தியைத் தெரிவித்து மேலே தொடர்ந்து செல்கின்றது. ‘செல்லப் பிள்ளை’ செல்லப்பன் எல்லா விடுகளிலும் சல்லடை போட்டுத் தேடுகிறான்; ‘தங்கப் பிள்ளை’ தங்கப்பன் தொலைபேசி வழி சொந்தங்களிடம் தகவல் திரட்ட முயல்கிறான்; மூத்த மருமகள் முத்தம்மா அக்கம் பக்கங்களில் எல்லாம் அலசிப் பார்க்கிறாள்; இளைய மருமகள் இன்பவள்ளி தன் வீட்டுச் சொந்தங்களிடம் தகவல் சேகரிக்க முயல்கிறாள். இங்ஙனம் நால்வரும் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் எடுத்துச் சொல்லி வளரும் கவிதை கடைசியில் இங்ஙனம் முடிகின்றது:

“ ஆனால்,
  எல்லோருடைய மனங்களிலும்
  இயல்பாக எழுந்த எண்ணம்
  எது தெரியுமா? / அவர்,
  கிடைக்காமலே போகட்டும்!”    
  (ப.52)

என்பது தான். மனித மனங்களுள் ஆழ்ந்திருக்கும் உணர்வை இக் கவிதை அம்பலப்படுத்துகின்றது.

‘பூக்களிலே சிறந்த பூ’

ஒரு நாள் அக்பர் தம் அரசவையில் கூடியிருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: ‘பூக்களிலே சிறந்த பூ என்ன பூ?’ யாரும் சரியான பதிலைக் கூறவில்லை. கடைசியாகப் பீர்பால் பதில் சொல்ல அழைக்கப்பட்டார்.

பீர்பால் சொன்னார்: ‘உலகம் முழுவதற்கும் மானம் காக்கும் ஆடையை எந்தப் பூ தருகிறதோ அந்தப் பருத்திப் பூவே பூக்களில் சிறந்த பூ’.

அக்பர் பெருமகிழ்ச்சியோடு இந்தப் பதிலை ஏற்றுக்கொண்டார்.

அறிஞர் ஏ.கே.இராமானுஜம் தொகுத்துள்ள இந்த அற்புதமான இந்திய நாட்டுப்புறக் கதைக்கு அழகிய கவிதை வடிவம் தந்துள்ளார் இளசையார். ‘பூக்களில் சிறந்த பூ என்ன பூ?’ என்ற வினாவுடன் தொடங்குகின்றது அவரது கவிதை. ‘ரோஜாப்பூ’, ‘தாமரைப்பூ’, ‘தாழம்பூ’ இப்படி எத்தனையோ பூக்களின் அணிவகுப்பு தொடருகின்றது முடிவில் ‘பருத்திப் பூ’ என்ற சரியான விடையினைச் சொல்லி, அதற்கான காரணத்தையும் கூறுகிறார் கவிஞர்:

“ அதுதான்
  பூவாகி / பிஞ்சாகி
  காயாகி / கனியாகி
  பருத்தியாய் வெடித்து
  பஞ்சாகி / நூலாகி
  மக்களின் / மானம் காக்கும்
  ஆடையாகிறது!”         
     (ப.53)

‘பகட்டை விடவும் பண்பாடே சிறந்தது’ என்ற பாடத்தையும் மனித குலத்திற்குக் கற்பிக்கின்றதாம் பருத்திப் பூ.

கவிஞர் கண்ணதாசன் ‘தாமரை நெஞ்சம்’ திரைப்படத்திற்காகப் ‘பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ?’ என எழுதிய புகழ் பெற்ற பாடல் இங்கே நினைவுகூரத் தக்கது (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.388).

நடப்பியல் படப்பிடிப்பு

‘யதார்த்தம்’ என்பது தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிறைவுக் கவிதை ஒரு பறவைக் குடும்பத்தின் வாயிலாக நிதர்சமான வாழ்வியல் உண்மையை – மனித உறவுகள் இடையே இருந்து வரும் நடப்பியல் உணர்வை – அக் கவிதை அருமையாகப் பதிவு செய்துள்ளது. கூட்டில் வாழும் தாய்ப்பறவை ஒன்று தன் குஞ்சுகளிடம், ‘வயதான காலத்தில் என்னை நீங்கள் காப்பாற்றுவீர்களா?’ என்று கேட்கிறதாம். முதல் குஞ்சு, ‘கட்டாயம் காப்பாற்றுவேன் அம்மா!’ என்று முனைப்புடன் சொன்னதாம்! அடுத்த குஞ்சோ, ‘அதை விடவும் அதிகமாகக் கவனிப்பேன் அம்மா!’ என்று அக்கறையாய்ச் சொன்னதாம்! இப்போது மூன்றாவது குஞ்சின் முறை. அது யதார்த்தமாக இப்படிச் சொன்னதாம்:

“ உன்னைக் கவனிக்க / என்னால் இயலாது அம்மா!
  ஏன்?

  அப்போது எனக்கும் / குஞ்சுகள் இருக்குமே!”  
(ப.71)

இது தான் நிதர்சனமான உண்மை; அப்பட்டமான வாழ்வியல் பாடம்; அனுபவம். ஆம், மனித வாழ்வில் உறவுகள் எப்போதும் முன்னோக்கியே பார்க்கும், பின்னோக்கிப் பார்ப்பதில்லை! நாட்டுப்புறக் கதை ஒன்றில் வரும் தாய்க்கும் தன் மகன் வெயிலில் வாடி விறகு வெட்டுகிறான் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது; அந்த மகனுக்கோ தன் மகனை - பேரனை - தாய் வெயிலில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற வருத்தமே பெரிதாகப் பட்டது!

தன்னம்பிக்கையை விதைக்கும் கவிதைகள்

இளையோர் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையை விதைக்கும் கவிதை-களுக்கும் இத்தொகுப்பில் பஞ்சம் இல்லை. ‘வெற்றி’என்ற இளசையாரின் கவிதை ஒன்றே போதும், இக்கருத்தினை உறுதிப்படுத்த. தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் செயலைத் தொடங்காமலே இருக்கும், சாதிக்க முடியுமா என்ற சந்தேகத்துடனேயே இருந்து வரும் இளைய தலைமுறைக்குக் கவிஞர் முன்மொழியும் வழிகாட்டல் இதுதான்:

“ தயக்கமும் குழப்பமும் தான் / தாழ்வு மனப்பான்மையின்
  தாய்தந்தையர் ஆகும்!
  முயலாமையும் இயலாமையும் தான் / முன்னேற்றத்தைத் தடுக்கும்
  முட்டுக்கட்டைகள்!
  ஏறமுடியும் என்ற / நம்பிக்கை வந்தால்
  இமயச் சிகரம் கூட / எட்டும்உயரம் தான்!
  வெல்ல முடியும் என்ற / வேட்கை வந்தால்
  வெற்றி என்பதும் / விரல் நுனியில் தான்!”       
           (ப.33)

ஒருவர் வாழ்வில் முன்னேறுவதற்குத் தேவை நம்பிக்கையும் வேட்கையுமே; முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டைகளாக இருப்பவை முயலாமையும் இயலாமையும் தான். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து, தயக்கத்தையும் குழப்பத்தையும் புறந்தள்ளி, முடியும் என்ற மூலதனத்தோடு முயன்றால் வெற்றி என்பது விரல் நுனியில் தான், இமயச் சிகரம் கூட எட்டும் உயரம் தான் என இக்கவிதையில் அறுதியிட்டு உரைக்கின்றார் இளசையார்.

‘முடியும் என்பதே மூலதனம்!’ என்னும் பிறிதொரு கவிதையின் வாயிலாக இளசையார் இளையோர்க்கு விடுக்கும் செய்தியும் இதுதான்.

“ என்னால் முடியுமா என்று  / ஏங்கி நிற்காதே!
  உன்னால் முடியும் என்று / உடனே புறப்படு!”        
    (ப.29)

‘எத்தனை சிகரங்கள் உன், கால்படத் தவமிருக்கின்றன!;’ ‘எத்தனை வாய்ப்புகள் உன், கைவசப்படக் காத்திருக்கின்றன!;’ ‘எத்தனை வெற்றிகள் உனக்கு, மாலை சூடக் காத்திருக்கின்றன!;’ ‘எத்தனை கதவுகள் நீ, திறப்பதற்குக் காத்திருக்கின்றன!’ என்பதை எண்ணிப் பார்த்து ஏங்கி நிற்காமல் ஊக்கத்துடன் உடனே செயலாற்றி வெற்றி வாகை சூடுமாறு இளையோரைத் தூண்டுகின்றார் கவிஞர்.

“ நம்பிக்கை இருந்தால் / நதி மீதும் நடை போடலாம்
  வெம்பி வீழாமல் அந்த / விதியை வெல்லலாம்”
(ப.37)

என்பதே இளைய பாரதத்திற்குக் கவிஞர் வழங்கும் செய்தி ஆகும்.

கவிஞரின் கண்ணோட்டத்தில் ‘வெற்றிப் புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை’.

“ நம்பிக்கை வலை வீசினால் / நட்சத்திரங்களும் அகப்படும்
  வானம் வசப்படும் / வாழ்க்கை நிசப்படும்
  முயற்சியின் வித்துக்கள் / முளைக்கத் தொடங்கிவிட்டால்
  வெற்றியின் விளைச்சல் / நிச்சயம் உண்டு”        
         (ப.55)

என்பது கவிஞரின் தெள்ளத் தெளிவான கருத்து.

‘ஓ! இளைஞனே!’ என்னும் இளசையாரின் கவிதை இளைய தலைமுறைக்கு முன்வைக்கும் வினா இதுதான்:

“ வழிநெடுகிலும் / வாய்ப்புக்கள் எனும்
  வைரங்கள் கிடக்கையில் - நீ
  குப்பையைக் கிளறும் / கோழியானது ஏன்?”

‘ஒற்றைக் காலில் நிற்கும், செடி கூட இன்னும், உயரத் துடிக்கையில், இரண்டு கால்களைக் கொண்ட, இளைஞனே! நீ இன்னும், உயர வேண்டாமா?’ என வினவும் கவிஞர்,

“ பாதைகளைக் கண்டுபிடி
  இல்லாவிட்டால்
  பாதைகளை உருவாக்கு!”  (ப.9)

என நெஞ்சில் பதியும் வண்ணம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார். வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையே என எண்ணி ஏங்குவதை விட, வாய்ப்புக்கள் கிடைக்குமா என்று எதிர்நோக்கிக் காத்திருப்பதை விட, சீனப் பழமொழி ஒன்று கூறுவது போல, ‘வாய்ப்புக்களை உணர்வதே – உருவாக்கிக் கொள்வதே – அறிவுக் கூர்மை ஆகும்’.

‘பார்ப்பது வேறு; கவனிப்பது வேறு’. உலக வரலாற்றில் இடம்பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் தெரிய வரும் உண்மை இதுதான்:

 “ பார்த்தவர்கள் / பரவசப்படலாம்
  கவனித்தவர்களே / கண்டுபிடித்திருக்கிறார்கள்”         
  (ப.55)

கவிஞரின் அகராதியில், ‘தோல்வி என்பது தோல்வியல்ல - ஒரு திருப்பு முனை; வேறொரு வாய்ப்புக்கான திறவுகோல்; அஞ்சத்தக்கது அல்ல; - ஆராயத்தக்கது; பரீட்சை வைத்துப் பாடம் சொல்லும் புதுமையான ஆசான்!’ (பக்.63-64).

நல்ல உள்ளடக்கம் – சரியான உருவம் – வித்தியாசமான உத்தி

உருவம் (Form), உள்ளடக்கம் (Content), உத்தி (Technique) என்னும் மூன்று கூறுகளுக்கும் கவிதையின் வெற்றியில் சமமான பங்கு உண்டு. வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், ஒரு நல்ல உள்ளடக்கம், அதற்கு ஏற்ற சரியான உருவத்தில், வித்தியாசமான உத்தி முறையில் வெளிப்படுத்தப்படும் போது தான் அது எல்லோரையும் சென்று சேரும். இளசையாரின் ‘விடுமுறை விண்ணப்பம்’ என்ற கவிதை இவ்வகையில் கருத்தக்கது. எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு படிக்கும் இசக்கிமுத்து என்னும் மாணவன் தனது தலைமை ஆசிரியருக்கு எழுதும் விடுமுறை விண்ணப்பமே அக்கவிதை

அன்புக்குரிய / தலைமை ஆசிரியர்
  அய்யா அவர்களுக்கு / வணக்கம்.
  ஊர் கூடித்தேர் / இழுத்த போது நடந்த
  ஊர்ச்சண்டையில் / காயம்பட்டுப் போனார்
  எனது அப்பா.

  ஆஸ்பத்திரிக்குப் போனால்
  ஆயிரம் ஆயிரமாய்ப் / பணம் கேட்கிறார்கள்
  காசு சேகரிக்க வேண்டி / கடன் கேட்டு அலைகிறாள்
  என் அம்மா.

  காசு தருவதாகச் சொல்கிறவர்களும்
  கந்து வட்டி கேட்டு / கட்டாயப்படுத்துகிறார்கள்.
  சினிமா ஆசையில் சென்னைக்குப் போன
  அண்ணன் என்ன ஆனான் / என்றே தெரியவில்லை.
  காலம் கடந்தும் / கல்யாணம் ஆகாததால்
  ஊர் கடந்து / ஒருவனோடு / ஓடிப்போய் விட்டாள் அக்கா.
  எல்லாப் பிரச்சனைகளும் தீர / மலைக்கோயில் சாமியை வேண்டி
  நடைப்பயணம் போகிறேன் நான்.
  அருள் கூர்ந்து விடுமுறை தந்து / ஆதரிக்க வேண்டுகிறேன்.

                              இப்படிக்கு,

                              எட்டாம் வகுப்பு ‘இ’பிரிவு
                              இசக்கிமுத்து.”     
              (பக்.49-50)

சாதிச் சண்டை, கந்து வட்டிக் கொடுமை, திரைப்பட மோகம், முதிர்கன்னியர் அவலம் என சமூகத்தையே அலைக்கழித்து, ஆட்டிப் படைத்து வரும் அத்தனை அவலங்களையும் ஒரே கவிதையில் கொண்டு வந்திருக்கும் கவிஞரின் திறம் பாராட்டத்தக்கது. ‘விடுமுறை விண்ணப்பம்’ (கறுப்புப் பணம் சிவப்பு எழுத்து, ப.7) என்று இதே தலைப்பில் கவிஞர் எஸ்.அறிவுமணி படைத்திருக்கும் கவிதை இங்கே ஒப்புநோக்கி மகிழத்தக்கது.

பரிணாம வளர்ச்சி!(?)

‘எழுதுகோல்’ என்ற கவிதையில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தாம் சொல்ல வரும் கருத்தினை நயமாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். ‘கற்கால மனிதன் கல்லால் பாறையில் கிறுக்கினான். அடுத்து வந்தவன் எழுத்தாணியால் ஏட்டில் எழுதினான். மைக்கூட்டில் தொட்டு மயிலிறகால் எழுதும் மார்க்கமும் கற்றான். ஊற்றுப் பேனாவால் உன்னதமாய் எழுதும் ஆற்றலும் பெற்றான். பால் பாயிண்ட் பேனாவில் பல வகைகள் பாங்குடன் படைத்தான்’ எனக் கவிதையை வளர்த்து வரும் கவிஞர், அதனை இங்ஙனம் முத்தாய்ப்பாக முடித்து வைக்கிறார்:

“ எழுது கருவிகளில் / எத்தனையோ திருத்தங்கள்
  எழுதியதால் திருந்தியவர்கள் / எத்தனைப் பேர்?”        (ப.1)

அழகிய கற்பனை, ஆற்றல் சான்ற கருத்து, இனிய ஓசை, உள்ளத்தை உருக்கும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றின் கூட்டுக்களியே இந்தக் கவிதை. கவிமணியின் தேர்ந்த சொற்களிலே குறிப்பிடுவது என்றால், ‘உள்ளத்தில் உள்ளது – இன்ப உருவெடுப்பது – தெள்ளத் தெளிவந்த தமிழில் உண்மை தெரிந்து உரைப்பது’ கவிதை ஆகும்.

மொழி ஆளுமை

“ நாக்குக்கும் கற்பு உண்டு /           அது தான் மௌனம்…”      (ப.20)

என நாவடக்கத்தின் மேன்மையை நவிலும் போதும்,

“ நம்பிக்கையை / நடவு செய்தால்
  வெற்றிகளை / அறுவடை செய்யலாம்!” 
(ப.9)

எனப் படிப்பவர் நெஞ்ச வயலில் தன்னம்பிக்கை விதையை ஊன்றும் போதும்,

“ இரு கரம் கூப்பி / வணங்குவதை விடவும்
  ஒரு கரம் நீட்டி / உதவுவது உன்னதமானது”    
(ப.40)

என உதவும் மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கும் போதும்,

“ வாழ்க்கை என்பது
  சூதாடிப் பெறுவதல்ல; / போராடிப் பெறுவது” 
(ப.18)

என வாழ்க்கை எனப்படுவது யாது என உணர்த்தும் போதும்,

“ உழைக்கப் பிறந்தவர்கள் / ஓரங்களில் கிடக்க
  மேனாமினுக்கிகளுக்குத் தான்
 

  மேன்மையெல்லாம் கிடைக்கிறது”         (ப.70)

என இன்றைய சமூக நடப்பினைச் சித்திரிக்கும் போதும்.

“ புத்தகங்களைக் / குனிந்து படித்தால்
  நிமிர்ந்து / நிற்கலாம்”   
     (ப.21)

எனச் சிறந்த புத்தகத்தின் உயர்வினைப் பறைசாற்றும் போதும்,

“ இது / வீழ்ச்சியை
  உயர்ச்சியாக்கும் அற்புதம்!”     
   (ப.57)

என நயாகரா அருவியை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் போதும்.

 “ கோயில்களில் / கூட்டம் கூடுவது சரி
  கோர்ட்டுகளிலும் / கூட்டம் நிரம்புவது ஏன்?”        
    (ப.38)

என மனித குலத்தை நோக்கிக் கூரிய கேள்விக் கணையைத் தொடுக்கும் போதும்.

“ உலக நலனுக்காக / ஒற்றைக்காலில் நின்று
  தமமிருக்கிறது மரம்”          
         (ப.28)

எனக் கற்பனை வளத்துடன் மரத்தின் மாண்பினை மொழியும் போதும்,

“ யுத்தம் இல்லாத உலகம்
  உருவாகும் காலம் வராதா?”     
  (ப.10)

என ஓர் உலகக் குடிமகனின் உன்னத ஏக்கத்தைப் பதிவு செய்யும் போதும்,

“ சந்திர மண்டலத்தில் / கால் பதிக்கத் தெரிந்த மனிதனுக்கு
  எதிர்வீட்டு இந்திரன் மனதில்
  இடம் பிடிக்கத் தெரியவில்லை”  
(ப.2)

என இன்றைய விஞ்ஞான மனிதனைக் கூர்மையாக விமர்சனம் செய்யும் போதும்,

“ உற்றுக் கவனிக்கிற / உயர்ந்த குணம் இருந்தால்
  கற்றுக் கொள்ள நிறைய உண்டு”
(ப.17)

என உற்றுக் கவனித்தலின் இன்றியமையாமையைச் சுட்டும் போதும்,

“ கர்ப்பக் கிரகத்தல் நின்று / கடவுளைக் கும்பிட்ட நீ
  கர்ப்பத்தில் உனைச் சுமந்த
  எனை எப்படி மறந்தாய்?”          
(ப.4)

என ஒரு தாயின் புலம்பலை உணர்ச்சிமிகு மொழியில் உரைத்திடும் போதும் இளசையாரின் மொழி ஆளுமையில் அருமையும் எளிமையும் அழகும் இனிமையும் கொலுவிருக்கக் காண்கிறோம்.

கால மாற்றம்

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்னும் நான்கு வகையான யுகங்களுள் இன்று நடைபெற்று வருவது கலி யுகம் என்பர். இந்தக் கலியுகத்தில் எல்லாமே தலைகீழாக நடக்கும். தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும். அதர்மம் என்னும் பேய் ஆட்சி செய்யும். ‘காலம் மாறிப் போச்சு!’ என்ற கவிதையில் களங்களும் காட்சிகளும் இன்று மாறிப் போய்விட்ட அவலத்தைத் தமக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

“ முல்லைக் கொடிகளை / முறித்துப் போடும்
  பாரிகளின் கார்கள்…
  மாபெரும் விருந்துகளில் / மயில் கறி கேட்கும்
  பேகன்கள்…
  அவ்வையைக் கண்டதும் / அதிசய நெல்லிக்கனியை
  ஒளிக்க முயலும் / அதியமான்கள்…
  ஆட்சியைப் பிடிக்க / தம்பியின் தலை கேட்கும்
  குமணர்கள்…
  மணியடித்த பசுவிடம் / பேரம் பேசும்
  மனுநீதிச் சோழர்கள்…
  காரியம் நடக்க / காசு கேட்கும்
  காரிகளும் ஓரிகளும்…
  சமாதானப் புறாக்களின் / சதைகளை ருசி பார்க்கும்
  சிபி ராஜாக்கள்…
  கவச குண்டலங்களை / மதுக்கடைகளில் அடகு வைக்கும்
  கர்ண வீரர்கள்…
  காட்சிகள் மாறிவிட்டன / களங்கள் மாறிவிட்டன

  கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க

  அர்ஜுனன் கீதை சொல்கிறான்…”      
  (ப.7)

கவிக்கோ அப்துல் ரகுமான் ‘கலியுக இதிகாசம்’ என்னும் கவிதையில் ‘தீபங்கள் தலைகீழாய்த் தொங்கும் இந்த யுகத்தில்….’ எனத் தொடங்கி, ‘இவர்களே இந்த யுகத்தின் இதிகாசப் பாத்திரங்கள்’ என முடிப்பார். இது போல், இன்றைய கலியுகத்தில் இதிகாச மற்றும் இலக்கிய மாந்தர்களே ஆனாலும் இப்படி தலைகீழாகத் தான் செயல்படுவார்கள், சூதும் வாதும் சூழ்ச்சித் திறமும் கள்ளங்கரவுமே அவர்களது மனங்களில் மண்டிக் கிடக்கும் என்கிறார் கவிஞர்.

பாரதி வழியில்…

நிறைவாக, பிரான்சு நாட்டின் பாரிசு தமிழ்ச் சங்கத்தால் ‘இன்றைய பாரதி’ என பட்டம் வழங்கி சிறப்பிக்கப் பெற்ற, கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் அவர்களைப் பாரதியாரின் சொற்களிலேயே நாம் இப்படி வாழ்த்தலாம்: இளசையார் எதிர்காலத்தில் இன்னும் பல கவிதை நூல்களைப் படைக்க வேண்டும்; தமது ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்!’.




 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.