முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

பேராசிரியர் இரா.மோகன்
 

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிறந்த நாள்: 11.11.1899

மிழ் கூறு நல்லுலகிற்குத் திருச்சி நகரம் தந்த பெருங்கொடை கி.ஆ.பெ.விசுவநாதம் (1899-1994) 'முத்தமிழ்க் காவலர்' எனத் தமிழக மக்களால் மதிப்போடும் மரியாதையோடும் சுட்டப்பெறும் ஆளுமைக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. 'திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் செறிவான எழுத்தாளர்; சுவையான பேச்சாளர். ஓழுங்கு, ஒழுக்கம் இரண்டையும் போற்றுபவர். 'செய்வன திருந்தச் செய்' என்ற ஒளவையாரின் நெறியை அவர் செய்வன யாவற்றிலும் காணலாம்' என்பது பேராசிரியர் மு.வரதராசனார், கி.ஆ.பெ.விசுவநாதத்திற்குச் சூட்டியுள்ள புகழாரம். 'ஆயிரம் பிறை கண்டவர்' என்றாற் போல் இம்மண்ணுலகில் 95 ஆண்டுக் காலம் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டிய கொள்கைச் சான்றோர் கி.ஆ.பெ.

கி.ஆ.பெரியண்ணாபிள்ளை – சுப்புலட்சுமி இணையருக்குப் பிறந்த 16 குழந்தைகளில் கடைக்குட்டிதான் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆவார். அவருக்கு முன்னே பிறந்தவர்களில் அண்ணன்மார் எட்டுப் பேர்; அக்காமார் ஏழு பேர். எனவே, அவருக்குத் தம்பியும் இல்லை; தங்கையும் இல்லை. இது ஒரு வகையில் பார்த்தால், அவருக்குக் குறைதான்; தமது குடும்பத்தைப் பற்றிக் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களே ஓர் இடத்தில் நகைச்சுவை உணர்வோடு குறிப்பிட்டிருக்கிறார்.

பதினாறு பேறுகள்

பழங்காலத்தில் 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள்' என்று வாழ்த்துவார்கள். அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால், அவன் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது கருத்து. அப் பேறுகள்: மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பன.

'யாரோ நல்லவர் ஒருவர் இப் பேறுகளை எண்ணாமல், பதினாறு பிள்ளைகளை எண்ணி, என் தாய் தந்தையர்களை வாழ்த்தி விட்டதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகள் பிறந்து விட்டோம். நான் தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை, தங்கையும் இல்லை. இக் காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்துமா? பொருந்தாது' எனப் பெற்றோர்க்குத் தாம் பதினாறாவது பிள்ளையாகப் பிறந்ததையும் நகைச்சுவை உணர்வு ததும்பக் குறிப்பிட்டுள்ளார் கி.ஆ.பெ.விசுவநாதம்.

நகைச்சுவையும் நையாண்டியும்

நகைச்சுவை பற்றிக் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட கருத்து இருந்தது. அவரது பார்வையில் நகைச்சுவை வேறு; நையாண்டி வேறு. நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு நூலிழை தவறினாலும் நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை, அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி, மற்றவர்களை மகிழ்விக்கும். 'ஒருவன் கூறியது நகைச்சுவையா? நையாண்டியா?' என்பதை அறிய விரும்பினால், 'அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா' என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

நடையும் உடையும்

'எது நகைச்சுவை?' என்பதற்கு நல்லதோர் உதாரணமாகக் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 'நடையும் உடையும்' என்னும் தலைப்பில் அமைந்த குட்டிக் கதையினை இங்கே சுட்டிக் காட்டலாம்:

'தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றூரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தான். மாலையி;ல் கடற்கரையைப் பார்க்கப் போனான்.

அங்கே, கடற்கரையில் ஒரு சிறு பையன் அலையை நோக்கி வேகமாக ஓடுவதும், தண்ணீரைக் கண்டதும் பின்வாங்குவதும், பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்பொழுது ஒரு பெரிய அலை வந்தது.

அதைக் கண்ட குடியானவன் பயந்து போய், அப்பையனின் கூட வந்தவரைப் பார்த்து, 'சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றான்.

அது கேட்ட அந்த ஆள் சிரித்து, 'அது பையன் அல்ல, பெண்' என்றார். 'அப்படியா? நீங்கள்தான் அப்பெண்ணின் தந்தையா?' என்று கேட்டான் குடியானவன். அவர், 'இல்லையில்லை நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல, தாய்' என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.

பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை மாற்றி நடந்துகொள்ளும் வேடிக்கையைப் பம்பாயில் பார்த்து விட்டு வந்த அவன், தன் ஊர் வந்ததும் அனைவரிடமும் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தான்.

எப்படி நம் நாட்டில் நடையும் உடையும்? இதுபோன்ற 90 சுவையான கதைகளைத் தொகுத்து தனி ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளார் கி.ஆ.பெ.விசுவநாதம். இக்கதைகளுக்கு அவர் தந்திருக்கும் தலைப்பு 'அறிவுக் கதைகள்' என்பதாகும்.

'சிறப்பு ழகரம்'

தமிழ் எழுத்துக்களில் 'ழ' என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்புத் தருவது. பிற எந்த மொழியிலும் இது போன்ற எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் இதனைச் 'சிறப்பு ழகரம்' என்றே கூறுவர். இந்தச் சிறப்பு 'ழ' ஒலி தமிழ் மக்கள் சிலரால் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. திருச்சிக்குத் தெற்கே சிலர் 'ழ'வை 'ள' ஆக உச்சரிப்பர் (எ-டு: வாழைப்பழம் - வாளப்பளம்). திருச்சிக்குக் கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் 'ழ'வை 'ஷ' ஆக உச்சரிப்பர் (எ-டு: மார்கழித் திருவிழா - மார்கஷித் திருவிழா). இனி, தமிழகத்து வடக்கே சென்னை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ஸ' ஆக்கிப் பேசுவர் (எ-டு: இழுத்துக் கொண்டு - இஸ்த்துக்குனு). திருச்சிக்கு மேற்கே, கோவை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ய' ஆக ஒலிப்பர் (வாழைப்பழம், வாயப் பயம்).

தமிழுக்கு உள்ள இந்தச் சிறப்பு 'ழ'கரம் தமிழ் மக்களிடத்துப் படுகிற பாட்டைக் கி.ஆ.பெ.விசுவநாதம் தமக்கே உரிய பாணியில் சுவையாக எடுத்துக்-காட்டியுள்ளார்.

'நான் ஒரு தடவை கோவைக்குச் சென்ற போது கடைத் தெருவில் வாழைப் பழத்தை விற்கும் ஒருவன், 'வாயப் பயம்' என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.

நான் அவனைப் பார்த்ததும் அவன் என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து, 'வாயப் பயம் வேணுங்களா?' என்றான்.

எனக்கு வியப்பு ஒரு புறம்; கோபம் ஒரு புறம். 'நீ எந்த ஊர் அப்பா?' என்றேன்.
அவன், 'கியக்கங்கே' என்றான்.

நான், '(கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?' என்றேன்.

அவன், 'புயக்க வந்தேங்க' (புயக்க – பிழைக்க) என்றான்.

'கியக்கேயிருந்து புயக்க வந்தேன்' என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது.

'ஏம்பா, தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறீர்கள்?' என்று அதட்டிக் கேட்டேன்.

அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, 'அது எங்க வயக்கங்க' என்றான்.

நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய்விட்டேன்'.

இங்ஙனம் மெல்லிய பூங்காற்றாய் நகைச்சுவைத் தென்றல் கி.ஆ.பெ.வின் எழுத்திலும் பேச்சிலும் வீசி நின்ற தருணங்கள் நிரம்ப உண்டு.

கல்லாமையின் இளிவு

சான்றோர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைக்
(Anecdotes)  கி.ஆ.பெ.விசுவநாதம் தம் நூல்களில் உரிய இடங்களில் பதிவு செய்துள்ளார். நகைச்சுவை, நையாண்டி, கேலி, கிண்டல், எள்ளல், அங்கதம், சொல் விளையாட்டு முதலான நகைச்சுவை உணர்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் விதத்தில் அந்நிகழ்ச்சிகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒரு சுவையான நிகழ்ச்சிக் குறிப்பு இதோ:

'கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர்.

ஒரு நாள் மதுரையிலே கி.ஆ.பெ.விசுவநாதம் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றூரில் இருந்து கவிராஜரைப் பார்க்க ஒருவர் வந்தாராம். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் கி.ஆ.பெ.விசுவநாதத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டு, 'வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?' என்று கேட்டாராம்.

அதற்கு அவர், 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!' என்றாராம். 'பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி?' என்று மறுபடியும் கேட்டாராம், கவிராஜர் வந்தவர் அதற்கும் திரும்பத் திரும்ப, 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்' என்றே சொன்னாராம். கவிரஜர் சிறிது யோசித்து – சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, 'தங்களுக்குக் குழந்தை உண்டா?' என்று கேட்டாராம். 'இருக்கிறான், ஒரே பையன்' என்றாராம் வந்தவர். 'என்ன படித்திருக்கிறான்?' என்று கவிராஜர் கேட்க, வந்தவர் 'எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை' என்று சொல்ல, கவிராஜர், 'என்ன செய்கிறான்?' என்று கேட்க, அவர் 'வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொன்னாராம்.

உடனே கவிராஜர் எழுந்து, அவரை எழச் செய்து, தட்டிக் கொடுத்து, வெளிவாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று, 'இனி யாராவது 'உங்களுக்கு எத்தனை எருமைகள்?' என்று கேட்டால், 'இரண்டு என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்' என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தாராம்'.

இந்நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டிவிட்டு, 'கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது – காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை' எனக் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பது மனங்கொளத் தக்கதாகும்.

'ஆமை புகுந்த வீடு'

'ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் பாழாகி விடும்' என்பது நம் நாட்டுப் பழமொழி. இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? இதோ, கி.ஆ.பெ.விசுவநாதம் இப் பழமொழிக்குத் தரும் அற்புதமான விளக்கம்:

'அமீனா புகுந்த வீட்டைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆமை, பாம்பைப் போல நச்சுத்தன்மை கொண்ட ஒரு உயிரினம் அல்ல. இது புகுந்த வீடு எப்படி பாழாகி விடும் என்பது ஒரு கேள்வி. ஆமை என்றதும் பலர் கிணற்று ஆமையை எண்ணுகிறார்கள். இது கிணற்று ஆமையும் அல்ல, குளத்து ஆமையும் அல்ல. விண்ணாறும் அல்ல் வெட்;டாறும் அல்ல. அழுக்காறு. மற்ற ஆற்றின் இரு கரைகளிலும் கோட்டுப் பூவும், கொடிப் பூவும் பூக்கும். இந்த ஆற்றின் கரைகளில் 'எரிப்பு' ஒன்று மட்டுமே பூக்கும். ஆற்றாமை, அழுக்காறு, எரிப்பு என்பன 'பொறாமை' என்பதையே குறிக்கும். இது புகுந்தால் வீடும், நாடும் பாழாகிவிடும்'. எனவே ஒரு மனிதன் தன் உள்ளத்தில் இந்த ஆமை-பொறாமை-புகுந்து விட இடம் கொடாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

செவ்விய தமிழரின் பண்புகள்


செவ்விய தமிழரின் பண்புகளாகப் பன்னிரண்டை அகர முதல் ஒளகாரம் வரையிலான பன்னிரண்டு உயிரெழுத்துக்களைக் கொண்டு கி.ஆ.பெ.விசுவநாதம் புலப்படுத்தி இருக்கும் அழகே அழகு.

அறத்தின் வழி நிற்றல்
ஆண்மையில் உயர்தல்
இன்பத்தில் திளைத்தல்
ஈதலிற் சிறத்தல்
உள்ளத்தில் தௌ;ளியராதல்
ஊக்கத்தில் தளராதிருத்தல்
எவரையும் தமராய்க் கொள்ளல்
ஏற்றத்தாழ்வின்றி வாழ்தல்
ஐயந்திரிபறப் பேசுதல்
ஒழுக்கத்தைக் காத்தல்
ஓரஞ்சாராது நிற்றல்
ஒளவியந்தன்னை அகற்றல்
செவ்விய தமிழரின் பண்பு.


அறிவார்ந்த நகைச்சுவை

சிலர் நகைச்சுவையுடன் பேசுவர்; ஆனால், பேசிய பின் நினைத்துப் பார்த்தால் ஒன்றும் இராது; தேறாது. ஆனால், பொருட்செறிவுடனும் நகைச்சுவையுடனும் பேசுவது அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தனிச்சிறப்பு.

ஒருமுறை கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுடன் ஒரு திருமண விருந்தில் கலந்து கொண்டு வெளியே வரும்போது ஒருவர், 'ஐயா, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்' என்றாராம். 'எனக்கு வேண்டாம். வயதானவர்கள் யாராவது பின்னால் வருவார்கள், அவர்களுக்குக் கொடுங்கள்' என்று அவருக்கு மறுமொழியாகச் சொன்னாராம் 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம். அப்போது அவரது வயது என்ன தெரியுமா?' எண்பதைத் தாண்டி இருந்ததாம்!

(கட்டுரையாளர் தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதாளர்)

 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.