வகுப்பறை வானம்பாடிகள்!

பேராசிரியர் இரா.மோகன்
 

'பலர்பால் பிள்ளைத் தமிழ் இல்லையா?'

பி.ஏ.பொதுத் தமிழ் வகுப்பு. மாணவர்களுக்குப் 'பிள்ளைத் தமிழ்' பற்றிய பொதுவான செய்திகளைக் கூறிக் கொண்டிருக்கிறேன். 'பிள்ளைத் தமிழ் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று, ஆண்பால் பிள்ளைத்தமிழ். இன்னொன்று, பெண்பால் பிள்ளைத்தமிழ்' என என் அறிமுகம் தொடர்கிறது. அப்போது ஒரு மாணவர் எழுந்து நின்று மிகவும் பவ்யமான குரலில், 'ஐயா, ஒரு சின்ன ஐயம்' என்று கூற, 'என்ன ஐயா உங்கள் ஐயம்?' என்று நான் கேட்டேன். அவர் குறும்பாகச் சிரித்துக் கொண்டே, 'பலர்பால் பிள்ளைத்தமிழ் என ஒன்று இல்லையா?' என்று கேட்க, வகுப்பில் உடனே சிரிப்பலைகள் எழுகின்றன. 'தம்பி, இதுவரை அப்படி ஒரு பிள்ளைத்தமிழ் இல்லை. ஆனால் தமிழன்னை அதை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் அந்த முயற்சியில் ஈடுபடலாமே?' என்று நான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அந்த மாணவரைப் பார்த்துக் கூறினேன். இப்போது ஒட்டுமொத்த வகுப்பே அந்த மாணவரைப் பார்த்துச் சிரித்தது.

'இடுக்கண் வருங்கால் நகுக!'

திருக்குறள் வகுப்பு, மாணவர்களுக்கு 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருக்குறளை நடத்தினேன். வாழ்க்கையில் நமக்கு இடுக்கண் வரும் போது - துன்பம் வரும் போது - சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கினேன். மறுநாள் அதே நேரம் அதே வகுப்பிற்குள் நுழையும் போது ஒரு மாணவர் என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தார். 'என்ன தம்பி சிரிக்கிறீங்க?' என்ற அவரைக் கேட்டேன். 'நீங்க தானே ஐயா நேற்று சொன்னீங்க, வாழ்க்கையில் நமக்கு இடுக்கண் வரும் போது சிரிக்கணும்னு. நீங்க வர்றீங்க் சிரிக்கிறேன்' என்றார் அவா இயல்பான குரலில். என் நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா?

'கிணற்றில் நீர் இருந்தால், அது தான் சிறப்பு!'

ஒரு நாள் மாணவர்களுக்குத் திருக்குறள் நடத்திக் கொண்டிருக்கிறேன்; திருவள்ளுவரின் தனிவாழ்க்கையைப் பற்றிய செய்திகளைச் சொல்லுகிறேன். 'வள்ளுவருடைய மனைவியின் பெயர் வாசுகி. அவர் கற்பில் சிறந்தவர். அவர்கள் வாழ்வில் நிகழ்ந்ததாக ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கூறுவார்கள். ஒரு முறை வாசுகி கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது வள்ளுவர் 'வாசுகி!' என்று கூப்பிட, கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருந்த அம்மையார் கயிற்றையும் குடத்தையும் அப்படியே விட்டுவிட்டு வந்தார்; மீண்டும் திரும்பிச் சென்று பார்க்கும் போது அவர் விட்டுவிட்டு வந்த நிலையிலேயே கயிறும் குடமும் இருந்தனவாம். எவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி இது! இப்போது இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள் முதலில், கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் மனைவியைப் பெயர் சொல்லிக் கூப்பிடவே ஒரு தைரியம் வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு மதிப்புக் கொடுத்து அந்த அம்மா உடனே வந்தார்கள் என்றால் அது ஒரு சிறப்பு. பிறகு திரும்பிப் போய்ப் பார்க்கும் போது விட்டுவிட்டு வந்த நிலையிலேயே கயிறும் குடமும் இருந்தன என்றால் அது இன்னொரு சிறப்பு' என்று நடைமுறைப் பார்வையோடு நான் உரையாற்றிக் கொண்டிருக்க, ஒரு மாணவர் இடையே குறுக்கிட்டு, 'கிணற்றிலே தண்ணீர் இருந்தால் அது மூன்றாவது சிறப்பு ஐயா!' என்று கூற, வகுப்பறையே மாணவர்களின் சிரிப்பொலியால் அதிர்ந்தது. குடிநீர்ப் பஞ்சத்தால் நாடே தவித்துக் கொண்டிருந்த துன்பமான நேரம் அது! எனவே, அந்த நேரத்தின் மாணவரின் குறுக்கீடு இயல்பான நகைச்சுவையாய் மலர்ந்தது.

'காதல் தூங்குமா?'

இளங்கலை, இளம் அறிவியல் பயிலும் மாணவர்களுக்குக் கு.ராஜவேலுவின் 'காதல் தூங்குகிறது' என்ற நாவல் பாடமாக வைக்கப் பெற்றிருந்தது. ஒரு நாள் வகுப்பில் வழக்கம் போலப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன். மாணவர் ஒருவர் எழுந்து, 'ஐயா, காதலுக்குத் தான் கண் இல்லையே, அது எப்படித் தூங்கும்?' என்று கேட்க, வகுப்பே 'கொல்'லென்று சிரிக்கிறது. நானோ ஒரு நொடி கூட தாமதிக்காமல், 'காதல் தூங்குவதால் தான் ஐயா, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்... காதல் விழித்துக் கொண்டால் நீங்கள் இருக்கும் இடமே வேறு!' என்று சொல்ல, மீண்டும் வகுப்பில் சிரிப்பலைகள் எழுகின்றன.

'மனைவிக்குக் கொடுத்தால் சாக மாட்டாளே ஐயா!'

தமிழ் முதுகலை மாணவர்களுக்கு ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல்களைக் குறித்து நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை அதியமான் வேட்டைக்குச் சென்ற போது அரிய நெல்லிக் கனி ஒன்று கிடைத்தது. கிடைத்தற்கு அரிய அந்த நெல்லிக் கனியைப் பெற்ற அதியமான் என்னவெல்லாம் செய்திருக்கலாம்? எப்படியெல்லாம் நடந்திருக்கலாம்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 'ஒன்று, அந்த நெல்லிக் கனியைத் தானே சாப்பிட்டு நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம். இல்லாவிட்டால், சிங்கக் குட்டி போல் இருக்கிறானே மகன் பொகுட்டெழினி, அவனுக்குக் கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லையென்றால், பட்டத்து ராணியான தன் மனைவிக்குத் தந்திருக்கலாம்' என முன்னுரையாக நான் கூறிவரும் போது, ஒரு மாணவர் எழுந்து, 'அதிலே ஒரு சிக்கல் இருக்கிறது, ஐயா!' என்றாரே பார்க்கலாம். நான் 'என்னய்யா சிக்கல்?' என்று 'திருவிளையாடல்' பாணியில் கேட்க, அந்த மாணவர் கொஞ்சமும் சிரிக்காமல், 'மனைவிக்குக் கொடுத்தால் அவள் சாகமாட்டாளே ஐயா?' என்று சொல்ல, சில மணித்துளிகள் சிரிப்பு மழையால் நனைந்தது வகுப்பு.

மாணவருக்கு நரை வந்ததன் காரணம்

பிறிதொரு நாள் சங்க இலக்கிய வகுப்பில் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை நடத்தினேன்; ஆண்டுகள் பல ஆகியும் நரை தோன்றாமைக்கு அவர் சொல்லி இருக்கும் காரணங்களைக் கூறினேன். 'நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வேலையாட்கள், நல்ல மன்னன், நல்ல சான்றோர்கள் உடன் இருந்தததால் ஒரு முடி கூட நரைக்கவில்லை' என்ற பிசிராந்தையாரின் கருத்தினை எடுத்துரைத்தேன். மறுநாள் வகுப்பில் தற்செயலாகப் பார்த்தால் பி.ஏ. படிக்கும் மாணவர் ஒருவருக்கே முடி நரைத்திருந்தது; 'எதனால் இப்படி ஆயிற்று?' என்று அவரைக் கேட்டேன். 'நீங்க தான் ஐயா காரணம்!' என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே கூறினார் அந்த மாணவர். 'நானா, எப்படி ஐயா?' என்று வியப்போடு கேட்டேன். 'நீங்க தானே ஐயா, நேற்று சொன்னீங்க. நல்ல மனைவி, நல்ல பிள்ளை இருந்தா முடி நரைக்காது என்று. எனக்கு வரப் போற மனைவியும், பெறப்போற பிள்ளையும் எப்படி இருக்குமோன்னு நினைச்சேன், உடனே நரை வந்துவிட்டது ஐயா!' என்று அந்த மாணவர் சொன்னதும் வகுப்பறையே கர ஒலியாலும் சிரிப்பொலியாலும் களை கட்டியது.

'கோவலன் - கண்ணகி வாழ்வில் குழந்தை அழவில்லை!'

ஒரு கல்லூரியில் இலக்கிய மன்றத்தின் சார்பிலே சிலப்பதிகாரம் பற்றிப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். அறையில் மாணவர் கூட்டம் நிரம்பி வழிந்தது. நானும் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தேன். 'கோவலனுக்கும் கண்ணகிக்கும் பெரியவர்களாகப் பார்த்துத்தான் திருமணம் செய்து வைத்தார்கள்; நல்ல நாளில்தான் திருமணம் செய்து வைத்தார்கள். என்ன ஆச்சு?' என்று நான் கேட்க, அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் மாணவர் மத்தியிலிருந்து ஒரு குரல் விளம்பர மொழியில் 'குழந்தை அழுகுது' என்றது! அரங்கில் எழுந்த கரவொலியும் சிரிப்பொலியும் அடங்க நீண்ட நேரம் ஆயிற்று. உடனே சமயோசிதமாக நான், 'அவர்கள் வாழ்வில் குழந்தை அழ வில்லை ஐயா! அதனால்தான் சிக்கலே எழுந்தது!' என்று சொல்ல, அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

'வகுப்பறையில் நடந்த ராக ஆலாபனை!'

அகத்திணை பற்றிய வகுப்பு. 'ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் உறவு நிலையினைக் கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை என மூன்றாகப் பகுத்துக் கூறுவது தமிழ் இலக்கண மரபு. இவற்றை முறையே ஒருதாலைக் காமம், பொருந்தாக் காமம், ஒத்த காமம் என்று கூறுவார்கள்' என்று சொல்லி விட்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரிவதற்காக, 'கைக்கிளை என்பது ஒரு கை ஓசை, ஒரு தலை ராகம்' என்கிறேன். உடனே ஒரு மாணவர் உற்சாகத்துடன் எழுந்து, 'பெருந்திணை என்பது அபூர்வ ராகம், ஐந்திணை என்பது தெய்வீக ராகம் - சரிதானே ஐயா?' என்றாரே பார்க்கலாம்! நானும் விடாமல் 'ஆமாம், ஐயா! இரண்டு பேருக்கும் இடையே ஒத்த அன்பு - நல்ல புரிதல் - இருந்தால் அது வசந்த ராகம்; இல்லாவிட்டால் மௌன ராகம்...' என்று தொடர்ந்து கூற, வகுப்பறையில் சிறிது நேரம் ஒரே 'ராக ஆலாபனை' தான் போங்கள்!.

கோவலன் ஒரு சிலம்பைக் கொண்டு சென்றது ஏன்?

மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழி தொடர் கல்வித் துறையில் பணியாற்றிய போது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம்: தொடர்பு வகுப்பில் நூற்றுக்கணக்கான தமிழ் முதுகலை பயிலும் மாணவர்கள் கூடி இருக்கிறார்கள். சிலப்பதிகார வகுப்பு. ஐயங்கள் ஏதேனும் இருந்தால் கேட்குமாறு மாணவர்களிடம் கூறுகிறேன். ஒரு மாணவர் எழுந்து, 'ஐயா, எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்' என்று தயங்கியவாறே கூறுகிறார். 'என்ன சந்தேகம்?' என்று கேட்க அவர், 'கோவலன் சிலம்பு விற்கச் சென்ற போது ஏன் ஐயா ஒரு சிலம்பைக் கொண்டு போனான்? பழையதாக இருந்தாலும் இரண்டு சிலம்புகளை வாங்கினால் தானே பயன்படுத்த முடியும்?' உடனே பதி;ல் சொல்லாமல் மறுநாள் வகுப்பில் கூறுவதாகச் சொல்லிச் சமாளித்தேன். வீட்டிற்கு வந்து சிலப்பதிகாரத்தை புரட்டிப் பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை; உரையாசிரியர்களோ அறிஞர்களோ யாரும் விளக்கம் தந்ததாகவும் தெரியவில்லை. மறுநாள் வகுப்பிற்குச் சென்று பாடம் எடுக்க முற்பட்டதுமே அந்த மாணவர் எழுந்து நின்று 'என் கேள்விக்கு என்ன பதில்' என்ற பாவனையில் என்னைப் பார்த்தார். நானோ சிரித்துக் கொண்டே, 'வேறு ஒன்றும் இல்லை ஐயா, மார்க்கெட் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வருவதற்காகத் தான் கோவலன் ஒரு சிலம்பைக் கொண்டு சென்றிருக்கிறான்; நல்ல விலைக்குப் போனால் வீட்டிற்கு வந்து அடுத்த சிலம்பையும் விற்கக் கொண்டு சென்றிருப்பான்!' என்றதும் அரங்கமே மாணவர்களின் சிரிப்பொளியால் அதிர்ந்தது! சிறு இடைவெளிக்குப் பிறகு அது காவிய நீதி
(Poetic Justice)  என்றும், மற்றொரு சிலம்பு இருந்ததால் தான் கண்ணகியால் பாண்டியன் மன்னனின் அரசவைக்குச் சென்று வழக்குரையாடி உண்மையை நிறுவ முடிந்தது என்றும் விளக்கிய போது மாணவர்கள் அமைதி அடைந்தனர்.

வகுப்பறை வானம்பாடிகள்!

நிறைவாக, புதுமைப்பித்தன் 'மாய வலை' என்னும் தம் சிறுகதையில் ஒரு கல்லூரி மாணவனைப் பற்றி எழுதியிருக்கும் சுவையான வாசகம்:

'அவன் (என்.பி.நாயகம்) ஒரு சந்தோஷப் பறவை. கவலை என்பது வகுப்பு எப்பொழுது முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.'

ஆம்! மாணவர்கள் கவலை என்பதை அறியாமல் துள்ளலும் துடிப்பும் களிநடம் புரிந்து நிற்கும் விடுதலைப் பறவைகளைப் போன்றவர்கள். அவர்களது வகுப்பறைகளில் இது போன்ற நல்ல நல்ல நகைச்சுவை மலர்கள் நாளும் பூத்துக் குலுங்கும்.

 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.