வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்!
பேராசிரியர் இரா.மோகன்
'உலகத் தத்துவ தினம்: 15.11.2016
நிலைத்த
உண்மைகளை ஆராயும் துறையினைத் தத்துவம் என்னும் பொதுப் பெயரால் சுட்டுவர்.
தத்துவங்கள் அனுபவங்களின் உடனடியான வெளிப்பாடுகள்; உணர்ச்சிகளின்
தீவிரமான பதிவுகள்; நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச்
சொல்வது என்றால், தத்துவங்கள், வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்;
மனித மனங்களின் இயல்பான படப்பிடிப்புகள். தத்துவ ஞானிகள் சில நேரங்களில்
நாட்டுப்-புறங்களில் வழங்கும் பழமொழிகளைப் போல் விளங்குவார்கள்; நடைமுறை
உண்மைகளைப் போகிற போக்கில் சொல்லிச் செல்வார்கள். சில நேரங்களில்
அவர்கள் விடுகதைகளைப் போல் காட்சி அளிப்பார்கள்; எளிதில் புரியாத
புதிர்களைப் போன்ற நடையில் அனுபவ ஞானங்களை உணர்த்தி நிற்பார்கள்.
அவர்கள் சில சமயங்களில் கள்ளங்கரவற்ற குழந்தைகளைப் போல் விளையாடி
மகிழ்வார்கள்; சில சமயங்களில் குறிக்கோள் இல்லாத பைத்தியக்காரர்களைப்
போல அலைந்து திரிவார்கள்; சில சமயங்களில் பொறுப்பும் முதிர்ச்சியும்
மிகுந்த ஞானிகளைப் போல் செயல்படுவார்கள்.
'ஒரு நாள் இங்கு வந்து தானே ஆக வேண்டும்?'
ஒரு தத்துவப் பேராசிரியரின் வீட்டில் ஒருவன் திருடி விட்டு ஓடினான்.
பேராசிரியர் வேறு திசையாக ஓடி இறுதியில் கல்லறைத் தோட்ட வாயிலில் போய்
உட்கார்ந்தார். அவரிடம் காரணம் கேட்டதற்கு அவர் சொன்ன மறுமொழி:
'என்றைக்காவது ஒரு நாள் அவன் இங்கு வந்துதானே ஆக வேண்டும்?' தத்துவப்
பேராசிரியரின் இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா?
தெரிந்ததும் தெரியாததும்
இரண்டு தத்துவ ஞானிகள் ஓர் ஆற்றின் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர்.
ஆற்று நீரில் மீன்கள் துள்ளிக் குதித்து நீந்திக் கொண்டிருந்த
காட்சியைக் கண்ட ஒரு தத்துவ ஞானி அடுத்தவரிடம், 'ஆற்றில் மீன்கள்
எவ்வளவு மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதிக்கின்றன பார்' என்றார். உடனே
இரண்டாவது தத்துவ ஞானி முதலாமவரைப் பார்த்து, 'மீன்கள்
மகிழ்ச்சியாகத்தான் துள்ளிக் குதிக்கின்றன என்று உனக்கு எப்படித்
தெரியும், நீ, மீனா?' என்று கேட்டார். அப்போது முதல் தத்துவ ஞானி
இரண்டாவது தத்துவ ஞானியைப் பார்த்துத் திருப்பிக் கேட்டார் இப்படி:
'எனக்குத் தெரியும், தெரியாது என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ, நானா?'
உண்மையில் எவ்வளவு தருக்க முறைப்படியான விவாதங்கள் பாருங்கள்! இனிமேல்
யாரும், 'அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது,
பரியாதது அனைத்தும் எமக்கு அத்துப்படி!' என்று தற்பெருமை பாராட்ட
முடியாது போல் இருக்கிறது அல்லவா?
நான்கு வகையான தத்துவக் கருத்தோட்டங்கள்
ஒரு பொன்மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா ஒன்றில் நான்கு
தத்துவ ஞானிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மெல்லிய பூங்காற்று
வீசவே கொடி ஒன்று அசைந்து ஆடியது. அதைக் கண்டு ரசித்த ஒரு ஞானி, 'ஆகா!
இந்தப் பூங்கொடி அசைவது எவ்வளவு அழகாக இருக்கிறது!' என்றார். உடனே
அடுத்தவர், 'பூங்கொடியா அசைகிறது? இல்லை, இல்லை! காற்றல்லவா அசைகிறது?'
என்றார். அதற்கு மூன்றாமவர், 'அதுவும் இல்லை, மனம்தான் அசைகிறது'
என்றார். நான்காவது ஞானியோ நிதானமாகச் சொன்னார். 'எதுவுமே அசையவில்லை!'
தத்துவ ஞானிகளுக்கு இடையே நடைபெறும் இந்தச் சின்னஞ்சிறு உரையாடல் காட்சி,
அனுமானம், ஆகமப் பிரமாணங்களில் இடம்பெறும் பொருள்முதல் வாதம்,
கருத்துமுதல் வாதம் என்னும் நான்கு வகையான உலகத் தத்துவக்
கருத்தோட்டங்களையே புலப்படுத்தி நிற்கின்றது.
'ஒவ்வொரு கணமும் இனிமை!'
ஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து
கொண்டிருந்தவர். அவர், ஒரு கவலை என்று கதறியதும் கிடையாது; மகிழ்ச்சி
என்று துள்ளிக் குதித்ததும் கிடையாது. 'ஒவ்வொரு கணமும் இனிமை. ஒவ்வொரு
மாற்றமும் விளையாட்டு. எதிலும் சிக்கி உழலாத மனம். வாழ்க்கை நன்றாகவே
இருக்கிறது - இது போதும்' என்னும் திருலோக சீதாராமின் மணிமொழிக்கு ஏற்ப
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இனிமையாக அனுபவித்துக் கொண்டிருந்தவர்
அவர்.
சீடர்கள் சிலர் அவரைக் கேட்டார்கள், 'உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின்
ரகசியம் என்ன?' என்று.
குருநாதர் சிரித்துக் கொண்டே சொன்னார்: 'பெரிதாக ஒன்றுமில்லை. மிக
எளிமையான விஷயங்கள் தான். சொல்கிறேன், கேளுங்கள்.'
1. காலை தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில்
அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
2. வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். எப்போதும் வயிற்றில் கொஞ்சம் இடம்
காலியாக இருக்கட்டும்.
3. கண்ட நேரத்தில் தூங்க வேண்டாம். தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச்
செல்லுங்கள்.
4. பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு
நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
5. நன்றாக, தெளிவாகப் பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள்.
வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.
6. ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்த பிறகே
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7. முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.
8. போர் வீரர்களைப் போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம், சிறு
குழந்தைகளைப் போல் வாழ்க்கையை நேசியுங்கள்.
நம்மை அறிய நமக்கொரு திறவுகோல்!
ஜென் என்பது வெறும் தத்துவம் அல்ல் வெற்றுத் தத்துவமும் அல்ல. அது நாம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ – நமது மனம் செம்மையாக – உதவிடும் ஒரு
வழிகாட்டி. ஜென் கதைகள் நம்மை அறிய நமக்கொரு திறவுகோலாகப் பயன்படுவன.
ஜென் குருமார்களின் வாழ்வும் வாக்கும் நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ
உற்றுழி உதவும் அனுபவப் பொருளை – உண்மை ஒளியை – தன்னகத்தே கொண்டவை.
சிந்தனையைத் தூண்டும் ஜென் கதை ஒன்று:
'அந்த ஜென் குரு எளிமையாக வாழ்ந்து வந்தவர்.
ஒரு மலையடிவாரத்தில் குடிசை அமைத்துக் கொண்டு இயற்கையோடு ஒன்றிப் போய்
வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் திருடன் ஒருவன் அவரது குடிசைக்குள்
அங்குமிங்கும் தேடிப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
அவன் வெறுங்கையோடு வெளியேறும் வேளையில் குரு உள்ளே வந்துவிட்டார். அவனை
இறுகப் பிடித்துக் கொண்டார். திருடன் 'திருதிரு'வென்று விழித்தான்.
'பாவம்! நீ எவ்வளவு தூரத்திலிருந்து இங்கே வந்திருக்கிறாய்.
வெறுங்-கையோடு போகலாமா?' என்று கூறிச் சரசரவென்று தம் ஆடைகளைக் கழற்ற
ஆரம்பித்தார்.
திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திகைப்போடு பார்த்துக்
கொண்டிருந்தான்.
அவர் தம் ஆடைகளைக் கழற்றிச் சுருட்டி அவன் கையில் கொடுத்து, 'போய் வா.
என்னிடம் இருப்பது இவ்வளவு தான்' என்று அனுப்பி வைத்தார்.
திருடன் போன பிறகு நிர்வாணமாக அமர்ந்தபடி சாளரத்தின் வழியாக வெளியே
பார்த்தார்.
ஒளிமயமான வட்ட நிலா வானத்தில் காய்ந்து கொண்டிருந்தது.
'பாவம்! நல்லதாகக் கொடுக்க நம்மிடம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இந்த
நிலவையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டார் அந்த
ஞானி!'
உண்மையில் இதுதான் ஒரு தத்துவஞானியின் உள்ளம் என்பது! நாமும் இந்த
உள்ளத்தைப் பெற்று விட்டால் போதும், அப்புறம் கவிஞர் கண்ணதாசன் ஒரு திரை
இசைப் பாடலில் பாடியிருப்பது போல், உலகம் முழுவதும் ஒரு சிட்டுக்
குருவியைப் போல் பறந்து பறந்து திரியலாம்; ஊர்வலமாக வந்து விளையாடி
மகிழலாம்;!
கண்ணதாசனின் கீதோபதேசம்
இளமை நிலை இல்லாதது; உடம்பு நிலை இல்லாதது; செல்வமும் நிலை இல்லாதது.
இவை மாறாத உண்மைகள். ஆனால், மனிதன் இவற்றைப் பற்றியே எப்போதும் எண்ணிக்
கொண்டிருந்தால் வாழ்க்கை என்னாவது? எப்போதும் முகாரி ராகத்தையே
இசைத்துக் கொண்டிருக்க முடியுமா? அவ்வப்போது மோகன ராகமும் பாட வேண்டாமா?
எப்போதும் 'இல்லைப் பாட்'டையே இசைத்துக் கொண்டிருக்க முடியுமா?
அவ்வப்போது - இடையிடையே – 'இன்பப் பாட்'டையும் முணுமுணுக்க வேண்டாமா? 'மயக்கமா?
கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?' எனத் தொடங்கி, 'சுமை
தாங்கி' படத்திற்காகக் கண்ணதாசன் பாடியிருக்கும் தத்துவப் பாடல், அவரது
முத்திரைப் பாடல் ஆகும். வாழ்வில் நிம்மதியும் அமைதியும் நாடுவோர்
உணர்ந்து தெளிய வேண்டிய – தெளிந்து வாழ்வில் பின்பற்ற வேண்டிய –
அற்புதமான பாடல் அது.
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!'
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வேதனைகளை வெற்றி கொள்வது
எப்படி? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களைப் புறமுதுகு காட்டி ஓடச்
செய்வது எப்படி? வாடி நின்றால் அவை ஓடிவிடுமா? 'வேதனையே விலகி விடு,
துன்பமே போய்விடு!' என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டால் அவை பின்வாங்கிச்
சென்று விடுமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கவிஞர் கூறும் ஒரே பதில்,
'எதையம் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!'
என்பது தான்!
நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதை விட – அவர்களது
நிலையை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுவதை விட, நமக்கும் கீழே
இருப்பவர்களைப் பார்த்து நிம்மதி அடைவது – அமைதி பெறுவது – மிகவும்
நல்லது; நம்மிடம் இல்லாத பொருளுக்காக ஏங்குவதை விட, நம்மிடம் இருக்கும்
சிறந்த பொருளை நினைத்து நிம்மதி அடைவது – அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு
நன்றி கூறுவது – மிகவும் நல்லது. ஏழை மனத்தை விழுமிய எண்ணங்களால்
மாளிகையாக்கும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது. இவ்வுண்மையினைக்
கண்ணதாசன் உணர்த்தியிருக்கும் பாங்கு படிப்பவர் நெஞ்சில் இன்பத் தேனைப்
பாய்ச்சுவதாகும்.
'ஏழை மனதை மாளிகை யாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தோடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு'
விரக்தியின் - வேதனையின் - விளிம்பிற்கே சென்று விட்ட நெஞ்சம் கூட,
இப்பாடலை ஒரு முறை பொருளுணர்ந்து படித்தால் போதும், நம்பிக்கையையும்
நிம்மதியினையும் அடையும். 'சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்,
தத்துவமாக நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்' என்னும் கூற்று, கண்ணதாசனைப்
பொறுத்த வரை, நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதாகும்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.
|