உவமைக் கவிஞர் சுரதா

பேராசிரியர் இரா.மோகன்

சுரதா பிறந்த நாள்: 23.11.1921

புதுநெறி காட்டிய புலவர் பாரதியாரின் வழியில் நடை பயின்ற கனகசுப்புரத்தினம், 'பாரதிதாசன்' ஆனார்; பாவேந்தர் பாரதிதாசனின் அடிச்சுவட்டில் கவிதை உலகில் உலா வந்த இராஜகோபாலன், 'சுரதா' (சுப்புரத்தினதாசன்) ஆனார். பாரதியாரைத் 'தேசியக் கவிஞர்' என்றும், பாரதிதாசனைப் 'புரட்சிக் கவிஞர்' என்றும் போற்றிய தமிழ் கூறு நல்லுலகம், சுரதாவிற்குப் 'உவமைக் கவிஞர்' எனப் புகழாரம் சூட்டியது. 'தேன்மழை' என்பது அவருடைய சிறந்த கவிதைகளின் தொகுப்பு. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா – ஆறடி நிலமே சொதந்தமாடா!' (நீர்க்குமிழி), 'அமுதும் தேனும் எதற்கு – நீ, அருகினில் இருக்கையில் எனக்கு?' (தை பிறந்தால் வழி பிறக்கும்), 'கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே' (நாடோடி மன்னன்), 'வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?' (மறக்க முடியுமா?), 'விண்ணுக்கு மேலாடை' (மேஜர் சந்திரகாந்த்) முதலான புகழ்பெற்ற திரை இசைப் பாடல்கள் சுரதாவின் கை வண்ணத்தைப் பறைசாற்றி நிற்பவை ஆகும்.

கவியுளம் காட்டும் உவமைகள்

ஒரு கவிஞர் கையாளும் உவமைகளைக் கொண்டு அவரது உள்ளத்தையும் படைப்பாளுமையையும் உய்த்துணரலாம் என்பர். ஒரு படைப்பில் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காட்டுவதில் உவமை பெறும் இடம் முக்கியமானது; முதன்மையானது. ஓர் உதாரணம்:

'தமிழர் எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு என்றுமுள செந்தமிழில் பெயரிடுதல் வேண்டும்' என்னும் கருத்தை வலியுறுத்துவதற்குச் சுரதா கையாண்டுள்ள ஆற்றல் மிக்க உவமை வருமாறு:

'தாய்மொழியை ஒதுக்கிவைத்துப் பிறநாட்டாரின்
       தழுவல்மொழிப் பெயரிட்டுக் கௌநி னைத்தல்
தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
       சம்மதிக்கும் தன்மையது போன்ற தாகும்.'


'கனி இருப்பக் காய் கவர்ந்தற்று' என்பது போல், தாய்ப் பால் இருக்க நாய்ப்பால் உண்ண எவரேனும் சம்மதிப்பார்களா? அது போல் தான் தாய்மொழியை ஒதுக்கி வைத்துப் பிற நாட்டாரின் தழுவல் மொழியில் பெயரிட்டுக் கொள்ள நினைப்பதும். கவிஞரின் கண்ணோட்டத்தின் என்றுமுள செந்தமிழ்ப் பெயரிடாமல், இரவல் மொழிப் பெயரிடுதல் என்பது அடிமைத் தன்மையின் அடையாளம் ஆகும்.

தமிழ் உணர்வைப் பறைசாற்றும் உவமைகள்

உவமையைப் பொறுத்த வரையில், பாரதிதாசனிடம் மேலோங்கிக் காணப்படுவது சமூக உணர்வு என்றால், சுரதாவிடம் சிறந்து விளங்குவது தமிழ் உணர்வு எனலாம். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ்ப் பண்பாடு முதலான தமிழ் தொடர்பான செய்திகளைச் சுரதா தம் உவமைகளில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் - இயன்ற வகையில் எல்லாம் - எடுத்தாண்டுள்ளார்.

'எப்போதும் இனிப்பவளே! 'ழ'கரம் என்னும்
       எழுத்தே போல் சிறந்தவளே!'


'தனித்தியங்கும் செந்தமிழ் போன்றே யானும் சிறந்தவள்'

'ஆய்த வெழுத்தின் அமைப்பே அடுப்பாம்' (தேன்மழை, ப.255)

இங்ஙனம் தமிழின் தனித்தன்மையைப் பறைசாற்றும் விதத்தில் சுரதா கையாண்டுள்ள உவமைகள் பலவாகும்.

புத்தம் புதிய உவமைகள்

சுரதாவின் உவமைகள் புத்தம் புதியவை; பொருத்தமானவை. இதுவரை எவரும் கையாளாத தனித்தன்மை வாய்ந்தவை; வித்தியாசமானவை; 'உவமைக் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயர் சுரதாவுக்கு வழங்குவதற்குக் கட்டியம் கூறும் விதத்தில் அமைந்தவை. 'புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு' என்பது போல், சுரதாவின் 'தேன்மழை' தொகுப்பில் படிப்பவர் நெஞ்சை அள்ளும் வகையில் உவமைகள் மண்டிக் கிடக்கக் காணலாம்.

ஆண்மைக்கும் வீரத்திற்கும் அடையாளமாக ஆடவர் முகத்தில் விளங்குவது மீசை. மீசையைக் குறிக்கும் விதத்தில் இதுவரை எத்தனையோ பேர் எத்தனையோ உவமைகளைக் கையாண்டுள்ளனர். ஆயின் சுரதா பாண்டிய மன்னர்களின் மீசையைச் சுட்டுவதற்கு ஒரு கவிதையில் கையாண்டுள்ள உவமை வித்தியாசமான ஒன்றாகும். அவ்வுவமை வருமாறு:

'படுத்திருக்கும் வினாக்குறி போல் மீசை வைத்த
பாண்டியர்கள் வளர்த்த மொழி'


'படுத்திருக்;கும் வினாக்குறி போல்' – கற்பனை வளம் களிநடம் புரிந்து நிற்கும் உவமை இது!

'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம், கூடி முயங்கப் பெறின்' (குறள் 1330) என்னும் காமத்துப் பால் குறட்பாவுக்கு அழகிய உவமை வடிவம் தந்தால் எப்படி இருக்கும்? இதோ, சுரதா தீட்டும் ஒரு சுவையான உவமைக் காட்சி; காதலரின் கூடல் நாடகம்.

'உச்சரிப்பு நின்றுவிடும் தொடுவார்; ஈர
உடை போல் நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.'


'ஈர உடை போல் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்' – காதல் சுவை நனி சொட்டச் சொட்டச் சுரதா கையாண்டுள்ள அற்புதமான உவமை இது!

நாயன்மார் நால்வருள் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர் அப்பர். நரை திரை மூப்பு பிணி நான்கும் அவரது வாழ்வில் அணி வகுத்து நின்றன. கவிமணி வாழ்வாங்கு வாழ்ந்து எழுபத்தெட்டு வயதில் மரணம் அடைந்த போது 'அந்தோ கவிமணி' என்ற தலைப்பில் பாடிய கையறுநிலைக் கவிதையில் சுரதா தக்க இடத்தில் அப்பர் பெருமானின் நிறைவாழ்வினை உமையாகக் கையாண்டுள்ளார். உருக்கமும் உயிரோட்டமும் ததும்பி நிற்கும் அவ்வுவமை வருமாறு:

'அப்பரைப் போல் எண்பத்தோ ராண்டு வாழ்ந்தே
அங்கத்தில் சுருக்கங்கள் பெற்றி ட்டாலும்
எப்பொழுதும் சுருங்காத பெருமை பெற்றாய்!'


அப்பர் தெய்வத் தமிழில் முத்திரை பதித்தவர்; கவிமணி குழந்தைக் கவிதையில் தடம் பதித்தவர். 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பது போல், சுரதாவின் உவமை இரு பெருமக்களையும் இணைத்துள்ள பான்மை எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.

இலக்கணச் செய்திகளை உவமையாக்கல்

இலக்கணச் செய்திகளை உவமையாக்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சுரதா. இவ்வகையில் மரபிலக்கணம் அவருக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணச் செய்திகளையும் சுரதா தம் உவமைகளில் ஆங்காங்கே நயமாக எடுத்தாண்டுள்ளார்.

தொடை வகைகளுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை எதுகையும் மோனையும். முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை. இவ்விரண்டையும் ஒரு கவிதையில் ஆதிமந்தி – ஆட்டனத்தி இருவரது வருகையையும் கட்டுவதற்கு அழகுறப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் சுரதா.

'வரலாற்றுப் பேரழகி ஆதி மந்தி,
எதுகைவரல் போல் அடுத்து வந்தாள்; அத்தி
என்பானோ, மோனையைப் போல் முன்வந்தான்'


என்னும் பகுதி இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.

பெருந்தமிழ்ப் புலவர் வேங்கடாசலம் பிள்ளைக்குப் பண்டிதமணி 'கரந்தைக் கவியரசு' என்னும் பட்டம் வழங்கி வாழ்த்திப் பேசியது வரலாற்றில் இடம்பெற்ற ஓர் இன்றியமையாத நிகழ்ச்சி 'வழங்கத் தகுந்தவர் வழங்கினார்; அதனை ஏற்கத் தகுந்தவர் ஏற்றுக் கொண்டார்' என்பதோடு நில்லாமல், இலக்கண நயம் மிளிரும் ஓர் உவமையைக் கையாண்டு இந் நிகழ்வினைப் பதிவு செய்துள்ளார் சுரதா. அவ்வுவமை வருமாறு:

'தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
பகுதி போன்று நிலைத்து நிற்கும்;
தகுதி இலாதார் தருகின்ற பட்டம்
சிறப்பிலாப் பட்டமே; காற்றில்
பறக்கும் பட்டமே, அடிக்குந் தம்பட்டமே!'


'பகுதி போன்று நிலைத்து நிற்கும்' என்னும் உவமையில் வெளிப்படும் கவிஞரின் இலக்கணப் புலமை சிறப்பானதாகும். தகுதி - பகுதி; பட்டம் - தம்பட்டம் - கவிஞரின் சாதுரியமான சொல் விளையாட்டினை இங்கே சுவைத்து மகிழ்கிறோம்.

தெரிந்த ஒன்றிற்குத் தெரியாத ஒன்றை உவமையாக்கல்

எழுத்தாளர் பொருமாள் முருகன் குறிப்பிடுவது போல், 'தெரியாத ஒன்றை உணர்த்த நன்கு தெரிந்த ஒன்றைச் சொல்லி விளக்கத் தோன்றியதுதான் உவமை. சுரதா நன்கு தெரிந்த ஒன்றிற்கு யாருக்குமே தெரியாத ஒன்றை உவமையாக்குவார்... அரிய செய்திகளை உவமையாக்கி, உவமைக்கு உரிய இலக்கணத்தை மீறியவர் என்பதாலேயே அவருக்கு அப்பட்டம் மிகவும் பொருந்துகிறது'. புதுநெறி காட்டிய புலவர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய இருவரது வாழ்வையும் வாக்கையும் வாழ்நாள் சாதனையையும் குறிக்கும் வகையில் சுரதா கையாண்டுள்ள இரு அரிய உவமைகள் இவ் வகையில் நினைவு கூரத்தக்கவை:

'வெடித்தவுடன் விரைந்தோடுஆம ணக்கின்
       விதையென்றால் பாரதிக்குப் பொருந்தும்; கீழே
அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால்
       அது புரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்.'


இங்ஙனம் அரிய செய்திகளை உவமையாக்கிச் சுரதா படைத்துள்ள இடங்கள் 'தேன் மழை' தொகுப்பில் பல உண்டு. 'மலைபோன்று தலைநிமிர்ந்த உவமை தந்தார்' எனப் பாரதிதாசனைப் குறித்துச் சுரதா கூறுவது, ஒரு வகையில் சுரதாவுக்கும் பொருந்தி வருவதே ஆகும்.

நிறைவாக, கவிமணி குறித்துச் சுரதா பாடியுள்ள வைர வரிகளையே நாம் சுரதாவுக்கும் அவரது உவமைத் திறத்திற்கும் காணிக்கையாக்கலாம்:

'ஒப்புடையார் உவமேயம் போன்றோர் ஆவர்;
       உத்தமனே நீ உவமை போன்றோன் ஆவாய்!'


ஆம்; சுரதா உவமேயம் போன்றோர் அல்லர்; உவமை போன்றோர் ஆவார்.


 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.