படைப்புப் பல
படைக்கும் வருவாய்த் துறை துணைவட்டாட்சியர் பே.இராஜேந்திரன்
முனைவர் இரா.மோகன்
சங்க
காலத்தில் தாம் சார்ந்த துறைப் பணியோடு படைப்புப் பணியையும் ஒருசேரத்
திறம்பட ஆற்றிய சான்றோர் பெருமக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். கணியன்
பூங்குன்றனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்
வாணிகனார் மகனார் நப்பூதனார், மதுரைக் கணக்காயனார்,
கச்சிப்பேட்டு இளந்தச்சனார், முதுகூத்தனார். மதுரை கொல்லன்
வெண்ணாகனார் முதலான புலவர் பெருமக்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்
ஆவர். இங்ஙனம் தொழில் முதலியற்றால் பெயர் பெற்றவர்களாக
47 பேரைப்
பேராசிரியர் ந.சஞ்சீவியின் சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை பட்டியல்
இட்டுள்ளது (பக்.267-268). இம் மரபின் தொடர்ச்சியை இருபதாம்
நூற்றாண்டிலும் நம்மால் காண முடிகின்றது. சான்றாக, தமிழக அரசின்
வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய பே.இராஜேந்திரன்,
கவிதைத் துறையிலும் தடம் பதித்துள்ளார், ‘மௌனத்தின் காத்திருப்பு’
(2012), ‘சுட்டிப் பூங்கா’
(2012), ‘குழந்தைகள் குக்கூ’
(2013),
‘ஒவ்வொரு துளியும் எனர்ஜி…’ (2015) என்னும் நான்கு கவிதைத் தொகுதிகளை
அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்; ‘கவிஞர்கள் பார்வையில் அப்துல் கலாம்’
என்னும் தொகுப்பு நூலையும் எழுத்துலகிற்குத் தந்துள்ளார்.
பே.இராஜேந்திரனின் கவிதை நூல்கள் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும்
பட்டங்களையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. கலைமாமணி ஏர்வாடி
எஸ்.இராதாகிருஷ்ணன் ‘மௌனத்தின் காத்திருப்பு’ என்னும் தொகுதிக்கு
எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல, “கற்பனை அதிகம் இல்லாமல்
காணும் நிகழ்ச்சிகளைத் தைக்குமாறு தம் கவிதைகளில் தருவித்திருக்கிறார்
கவிஞர் இராஜேந்திரன். இக் கவிதையில் நாம் இருக்கிறோம். நம்மோடு
இருப்பவர்கள் இருக்கிறார்கள். நிகழ்வுகள் இருக்கின்றன. இக் கவிதைகள்
நன்றாக இருப்பதற்கு இவையும் காரணங்கள்” (ப.5).
‘கூர்மையான வார்த்தைகளில் ஒளிர்கிறது கவிதை!’
பே.இராஜேந்திரனுக்கு ஒரு
கவிஞர் என்ற முறையில் தனிப்பட்ட கொள்கை உள்ளது. “ஏராளமான வார்த்தைகளால்
தயாரிக்கப்படும் உரைநடையில் இல்லாத கூர்மை, சில வார்த்தைகளில்
செதுக்கப்படும் கவிதையில் இருக்கிறது… கூட்டமாக இருப்பதைக் காட்டிலும்,
கூர்மையாக இருக்கும் வார்த்தைகளில் தான் கவிதை ஒளிர்கிறது, சிறப்பும்
இருக்கிறது” (‘என்னுரை’, மௌனத்தின் காத்திருப்பு, ப.9) எனக் கவிதையின்
தனித்-தன்மையைப் புலப்படுத்துகிறார் அவர். இங்ஙனம் கவிதையின்
சிறப்பினைக் குறித்துக் கருத்துரைப்பதோடு நின்று விடாமல், தம்
கருத்துக்கு இலக்கியமாகத் திகழும் வகையில் கூர்மையான சொற்களால் ஆன
குறுங்கவிதைகளைப் படைத்தும் தந்துள்ளார் இராஜேந்திரன். இவ் வகையில்
குறிப்பிடத்தக்க அவரது கவிதைகள் சிலவற்றை ஈண்டுக் காணலாம்.
உலகம் தட்டையானது என்று
நம்பப் பெற்ற ஒரு காலம் உண்டு; அதனைத் தகர்த்து, உலகம் உருண்டையானது
என்ற உண்மையை அறிவியல் மெய்ப்பித்தது. இன்று உலகம் செவ்வக வடிவில்
காட்சி அளிக்கின்றதாம். எப்படி என்கிறீர்களா? இதோ கவிஞரின் மறுமொழி ஒரு
குறுங்கவிதை வடிவில்:
“
உலகம்
செவ்வக வடிவமானது…
கணினி!” (மௌனத்தின் காத்திருப்பு, ப.57)
‘இது கலியுகம் அன்று, கணினி
யுகம்’ என்று சொல்லத் தக்க வண்ணம் கணினியும் இணையமும் இன்று உலகம்
ஆட்டிப் படைத்து வருவதை இக் கவிதையில் கலை நயத்துடன் சுட்டிக்
காட்டியுள்ளார் கவிஞர்.
“
வாடிப் போனாள்…
விற்று முடிப்பதற்குள்
பூக்காரி!” (ப.22)
என்னும் கவிஞரின் குறுங்கவிதை ஒன்று பூக்காரியின் வாழ்க்கை அவலத்தை
உணர்ச்சி மிகு மொழியில் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளது.
இன்று விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்கள் ஆகி விட்ட கொடுமையைக்
கூர்மையான மொழியில் சொல்லும் இராஜேந்திரனின் குறுங்கவிதை ஒன்று:
“ பயிர் போட்டான்
விலையாகவில்லை!
பிளாட் போட்டான்
விற்றுத் தீர்ந்தது!” (ப.33)
நிலத்தில் பயிரினைப் போட்ட போது விலையாகவில்லையாம்! அதையே குடியிருப்பு
மனைகளாகப் பிரித்துப் போட்டதும் உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாம்!
“ மூச்சுத் திணறல்
இயற்கைக்கு…
நகரெங்கும் நச்சுப்புகை” (ப.58)
எனச் சுற்றுப்புறச் சூழல் கேட்டினால் விளையும் தீங்கினையும் பயில்வோர்
நெஞ்சில் பதியும் வண்ணம் தம் கவிதை ஒன்றில் சுட்டிக்காட்டத் தவறவில்லை
கவிஞர்.
பெற்றோர்களின் பெரும்பாலான நேரம் குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுப்பதிலேயே கழிகின்றது; ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்,
குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்
பாடங்களும் இருக்கின்றன. இதனை ஒரு கவிதையில் தேர்ந்த சொல் விளையாட்டின்
(Pun)
மூலம் திறம்படப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்:
“ குழந்தை
நடக்கத் தான்
கற்றுக் கொடுக்கிறார்கள்
எல்லோரும்!
குழந்தையாய்
நடக்கத் தான்
கற்றுக் கொள்வதில்லை
யாரும்!!” (ப.45)
‘குழந்தைக்கு நடக்கக்
கற்றுக் கொடுக்கும் பெரியவர்கள், குழந்தையாய் நடக்கக் கற்றுக் கொண்டால்
போதும், வாழ்வில் கவலை என்பது சொல்லாமல் கொள்ளாமல் விலகிச் செல்லும்,
அமைதி தேடி வந்து சரண் அடையும்’ என்பது கவிஞரின் திண்ணிய கருத்து.
வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு
பே.இராஜேந்திரனின்
‘இப்படியாகத் தான் வெற்றி…’ ஒரு வித்தியா-சமான கவிதை. மனிதன் தனது
வெற்றியில் கற்பதை விட, தோல்வியிலேயே மிகுந்த பாடத்தைக் கற்றுக்
கொள்கின்றான்; இன்னும் சொல்லப் போனால், துன்பங்கள் - சறுக்கல்கள் -
தடங்கல்கள் - அவமானங்கள் - உதாசீனங்கள் - முட்கள் ஆகியவையே மனிதனின்
ஆளுமையைச் செதுக்குவதில் - கூர்மைப்-படுத்துவதில் - பெரும்பங்கு
ஆற்றுகின்றன. வெற்றியின் மறுபக்கத்தைத் திறம்படக் காட்டும்
இராஜேந்திரனின் கவிதை வருமாறு:
“
என்னைத் தழுவிய
தோல்விகளே வெற்றிக்குத்
தோள் தந்தன…
நான் சந்தித்த
சறுக்கல்களே முன்னேற்றத்திற்குச்
சாதகமாய் அமைந்தன…
தொடர்ந்து வந்த
தடங்கல்களே பயணத்திற்குத்
தடம் பதித்தன…
நான் அடுக்கி வைத்திருந்த
அவமானங்களே சிகரத்தை
அடைய வைத்தன…
நான் உதறித் தள்ளாத
உதாசீனங்களே உணர்வுகளை
உசுப்பி விட்டன…
என்னைக் குத்திய
முட்களாலேயே – நான்
மலர்க் கிரீடம் சூட்டிக்
கொண்டது
இப்படித் தானே…”
(ப.32)
ஒரு மனிதன் தனது வாழ்வில்
எதிர்கொள்ளும் எதிர்மறையான அனுபவங்களைக் கூட வெற்றிக்குத் தோள்
தருவனவாய் - முன்னேற்றத்திற்குச் சாதகமானவையாய் - பயணத்திற்குத் தடம்
பதிப்பனவாய் - சிகரத்தை அடைய வைப்பனவாய் - உணர்வுகளை உசுப்பி
விடுவனவாய் - மலர்க் கிரீடம் சூட்டுவனவாய் ஆக்கிக் கொள்வதிலே தான்
வெற்றிக்கான தாரக மந்திரம் அடங்கியுள்ளது எனலாம்.
செவ்விய காதல் உணர்வின்
சித்திரிப்பு
மலரினும் மெல்லியது காதல்
உணர்வு. ஆனால், அதன் ஆற்றலோ மலையினும் மாணப் பெரியது. அது போல் தான்
கவிதை உலகும். அங்கே எதுவும் நடக்கும், எப்படியும் நடக்கும்; பாரதியின்
சொற்களில் குறிப்பிடுவது என்றால், ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்,
கடைக்கண் வைத்தாள் அங்கே, ஆக என்று எழுந்தது பார் யுகப் புரட்சி!’ (பாரதியார்
பாடல்கள், ப.222). பைசா நகரத்துக் கோபுரம் எங்கே, தாஜ்மகால் எங்கே -
இராஜேந்திரனின் கவிதையில் இவ்விரண்டு அதிசயங்களும் ஒன்றோடு ஒன்று
இணைந்து காட்சியளிக்கின்றன:
“
பைசா நகரத்துக்
கோபுரமாய்
இதயங்கள்
ஒன்றோடு ஒன்று
சாய்ந்து கொள்ளும் போது
தாஜ்மகாலாய்
நிமிர்ந்து நிற்கிறது
காதல்!” (ப.49)
இங்கே உலக அதிசயங்கள்
இரண்டினைக் கொண்டு காதல் உணர்வின் செவ்வி தலைப்பட்டிருக்கும் கவிஞரின்
படைப்புத் திறம் நனிநன்று!
கவிஞரின் நோக்கில், ‘மனம்
விட்டுப் பேசுவதால் அல்ல… மனம் தொட்டுப் பேசுவதால் தான், கிளைவிட்டுப்
படர்கிறது காதல்!’ அது தான் ‘அழகான காதல்!’ (ப.52) என்கிறார் அவர்.
தாயன்பின் தனிச்சிறப்பு
“அன்னைக்குப் பதில்
பின்னையொருவர் கிடைப்பாரா? எத்தனையோ நண்பர்கள் கிடைக்கலாம்; எத்தனையோ
கலியாணங்களைச் செய்து கொள்ளலாம்; எத்தனையோ பேருடன் உறவாடலாம்; ஆனால்,
அன்னை ஒருத்தி தான். அவள் அன்பும் அலாதிதான்” (என் கதை, ப.31) எனத்
தாயன்பின்
தனிப்பெரும் பண்பினைப் பறைசாற்றுவார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
பிள்ளை. இவ் வைர வரிகளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது
கவிஞர் பே.இராஜேந்திரனின் ‘தாய்’ என்னும் கவிதை. கவிஞரின் சொற்களில்
அழகிய அக் கவிதை வருமாறு:
“ நனைந்து கொண்டே
வந்தது குழந்தை!
அப்பா அதட்டினார்:
‘மழையில் ஏன் நனைந்தாய்?’
‘மழை வரும்
போகாதே என்றால்,
கேட்டால் தானே?’
என்றான் அண்ணன்.
‘விளையாட
நேரம்… காலம்…
வேண்டாமா?’
எனக் கொட்டினாள் அக்கா.
அடுப்பறையிலிருந்து
எல்லோரையும்
திரும்ப வைத்தது ஒரு குரல்:
‘என் குழந்தை
விளையாடும் போதுதானா
வரணும்
பாழாய்ப் போன இந்த மழை?!’”
(ப.41)
அப்பா, அண்ணன், அக்கா ஆகிய
மூவரும் நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்த குழந்தையின் மீதே குற்றம்
சாட்டிப் பேச, தாயோ அவர்களிடம் இருந்து வேறுபட்டு, குழந்தை விளையாடும்
போது பார்த்து பெய்த மழையின் மீதே குற்றம் சாட்டுகிறாள்; ‘பாழாய்ப் போன
மழை’ என்று சாடவும் செய்கிறாள்.
முன்னைய
மரபின் தாக்கம்
இராஜேந்திரனின் கவிதைகளில்
முன்னைய மரபின் தாக்கம் ஆங்காங்கே அழகுறப் படிந்திருக்கக் காண்கிறோம்.
சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய பாரதியார் பாடல் வரையில் அவர் ஆழ்ந்த
தமிழ்ப் புலமை கொண்டவராக விளங்குகின்றார். சான்றாக, ‘யாழிசையோடும்
ஒவ்வாது; காலத்தொடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. ஆயினும்,
பெற்றவர்க்குக் குழந்தைகளின் மழலைச் சொற்கள் பேரின்பம் நல்கும்’ என
ஔவைப் பெருமாட்டி தம் புறப்பாடல் ஒன்றில் மழலையின் மாண்பினை
எடுத்துரைப்பார்:
“ யாழொடும் கொள்ளா;
பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும்,
தந்தையர்க்கு
அருள்வந் தனவால்
புதல்வர்தம் மழலை” (92)
இக் கருத்தினை,
“ என்னமோ பேசுகிறது குழந்தை
என்னமாய் பேசுகிறது…
என்கிறாள்
தாய்” (சுட்டிப் பூங்கா, ப.24)
என்னும் அழகிய ஹைகூ வடிவில்
படைத்துத் தந்துள்ளார் பே.இராஜேந்திரன். ‘என்னமோ’ பேசுகிறதாம் குழந்தை!
‘என்னமாய் பேசகிறது!’ எனப் பூரித்து மகிழ்கிறாளாம் தாய்!
‘ஹைக்கூவின் கரம் பிடித்து
தமிழ் இலக்கியக் களத்தில் நடை பயிலும் குழந்தை நான்’ எனத் தம்மைப்
பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் கவிஞர், தமது இக் கவிதையை மேற்கோள்
காட்டிவிட்டு, ‘ஆம்! என்னையும் இப்படித்தான், உச்சி மோந்து கொள்கிறாள்
என் தமிழ்த்தாய்’ என அடக்கத்துடன் மொழிவது குறிப்பிடத்தக்கது.
“ குழந்தைகள் செய்யும்
குறும்புகள்…
காணக் கண் கோடி வேண்டும்”
(சுட்டிப் பூங்கா, ப.27)
எனக் குழந்தைச் செல்வம்
தரும் கொள்ளை இன்பத்தை விதந்து கூறும் கவிஞர்,
“ கவலைகளைக் கரைக்கும்
களிப்பு மருந்து…
மழலைச் சிரிப்பு”
(ப.39)
என மழலைச் சிரிப்பின்
மாண்பினையும் போற்றிப் பாடுவார்.
“ சொல்லு மழலையிலே –
கண்ணம்மா
துன்பங்கள்
தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே –
எனது
மூர்க்கந்
தவிர்த்திடுவாய்” (பாரதியார் பாடல்கள், ப.336)
எனப் பராசக்தியைக்
குழந்தையாகக் கண்டு பாரதியார் பாடிய பாடல் வரிகள் இங்கே ஒப்புநோக்கி
இன்புறத் தக்கன.
‘சொல்லப்படாத கதைகள்’
இன்றைய இளங்குழந்தைகளின் போக்கில்
பெருத்த மாறுதல் காணப்படுகின்றது. அவை பெற்றோர்களைத் தவிர வேறு
எவரிடமும் எளிதில் செல்வதில்லை; எல்லோரையும் பார்த்த உடன் சிரிப்பதும்
இல்லை; உண்ணும் வேளையிலும் அவை மிகவும் அடம் பிடிக்கின்றன; குறும்புகள்
செய்கின்றன; ‘வேண்டாம்’, ‘முடியாது’ என்றாற் போல் எதிர்மறையான
சொற்களையே அடிக்கடி வழங்குகின்றன; விடாப்பிடியாகவும் நடந்து கொள்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் இன்று வீடுகளில் குழந்தைகளுக்குக் கதைகள்
சொல்லி மகிழ்விப்பதற்கும் அறிவுறுத்துவதற்கும் தாத்தா-பாட்டிகள்
இல்லாமையே.
தனிக்குடித்தனம்; அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல்;
ஆயாவிடம் வளரும் அவல நிலை. இதனை,
“ வருத்தத்தில்
இருக்கின்றன
சொல்லப்படாத கதைகள்…
தாத்தா பாட்டியின்றி”
(ப.35)
என்னும் ஹைகூ
கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பே.இராஜேந்திரன்.
‘குழந்தைகள் குக்கூ’
2013-ஆம் ஆண்டில் வெளிவந்த
பே.இராஜேந்திரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘குழந்தைகள் குக்கூ’.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் திருமகள் நா.தேவி நாச்சியப்பன் இத்
தொகுப்பிற்கு எழுதிய வாழ்த்துரையில் குறிப்பிடுவது போல், “குழந்தை
என்னும் இன்பக் கடலில் முத்துக் குளித்து எடுத்த முத்தான கவிதைகள்.
குழந்தைகளுக்கான பாடு-பொருளைக் கொண்டவையாக இல்லாமல், குழந்தையே
பாடுபொருளான கவிதைத் தொகுப்பு இது!” (p.iv).
கவிஞரின் படப்பிடிப்பில்,
“ குழந்தை
விளையாடும் போது
ஆனந்தம்…
குழந்தைகளோடு
விளையாடும் போது
பேரானந்தம்!”
(ப.15)
குழந்தை விளையாடும் போது x
குழந்தைகளோடு விளையாடும் போது: கவிஞரின் கைவண்ணத்தில் ஒரு வேற்றுமை
உருபு கூட எவ்வளவு பெரிய அற்புதத்தினை நிகழ்த்தி விடுகிறது பாருங்கள்!
நமக்கெல்லாம் மழலையர்
பள்ளியாகத் தெரிவது கவிஞரின் பார்வைக்கு இப்படிக் காட்சியளிக்கின்றது:
“ ஒரே
ஒரு செடியில்
இத்தனை பூக்களா…?
மழலையர் பள்ளி”
(ப.33)
‘கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!’ என்பார் பாரதியார். இராஜேந்திரனோ அவரது
அடிச்சுவட்டில்,
“ குழந்தை கன்னத்தில்
முத்தமிடும் போது
காணாமல் போகின்றன…
கவலைகள்”
(ப.41)
என்கிறார்.
“ புத்தகங்களே…
பாடங்களோடும்
படங்களோடும்
விளையாட விடுங்கள்…
எங்கள் குழந்தைகளை”
(ப.54)
என்பது புத்தகங்களிடம்
கவிஞர் விடுக்கும் விண்ணப்பம்; வேண்டுகோள்.
‘குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. நம் கவிஞரோ இன்னும் ஒரு படி
மேலாக,
“ கோவிலுக்கு வரும்
குழந்தைகளை
எதிர்கொண்டு வரவேற்க
வாசலுக்கே வரும்…
இறைவன்” (ப.66)
எனக் குழந்தைகளை
எதிர்கொண்டு வரவேற்கக் கோயில் வாசலுக்கே இறைவனை வரவழைக்கின்றார்!
‘உணவு ஊட்டினாளாம்
குழந்தைக்கு அம்மா… மனது நிறைந்ததாம் அம்மாவுக்கு!’ (ப.72),
‘நானுக்குத் தா…’, ‘நாளைக்கு வந்தேன்…’ எனக் கூறும் போது இனிக்குமாம்
‘மழலை இலக்கணம்!’ (ப.96).
குழந்தையின் இயல்புக்குக் கொஞ்சமும்
பொருந்தி வராத, படிப்பவர் மனத்தில் நெருடலை ஏற்படுத்தும் கவிதை ஒன்றும்
இத் தொகுப்பில் இடம்-பெற்றுள்ளது:
“ ‘நீ தான்
கடைசிப் பிள்ளையா?’
சுட்டிக் குழந்தை
சொன்னது…
‘அப்பாவுக்கே வெளிச்சம்’!”
(ப.99)
மழைத்துளி – உயிர்த் துளி!
வான்புகழ் வள்ளுவர் கடவுளுக்கு அடுத்த
இடத்தினை மழைக்கு நல்குவார். அறத்துப்பாலில் ‘கடவுள் வாழ்த்து’க்கு
அடுத்து இரண்டாவதாக இடம் பெறும் அதிகாரம் ‘வான்சிறப்பு’ ஆகும். இளங்கோ
அடிகள் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடலில்
ஞாயிறு, திங்களைத் தொடர்ந்து ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என
மழையினைப் போற்றிப் பாடுவார். இருபதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான
பாரதியாரும் தம் வசன கவிதையில் ‘மழை இனிது’ (பாரதியார் பாடல்கள்,
ப.507) எனப் புகழாரம் சூட்டுவார். இங்ஙனம் வாழையடி வாழை என வரும் கவிஞர்
வரிசையில் பே.இராஜேந்திரனும் சேர்ந்துள்ளார். மழையின் பெருமையைப்
பேசுவதாக அவர் படைத்துள்ள நூல் ‘ஒவ்வொரு துளியிலும் எனர்ஜி…’ (2015).
இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. ‘வானத்து மழைத்துளி வையத்து
உயிர்த் துளி என்பதை உலகத்தோர் உள்ளத்தில் மிருதுவாய் விதைத்திடவே
இந்நூல்’ (என்னுரை…, ஒவ்வொரு துளியும் எனர்ஜி…, p.iv) என்பது
இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் வரைந்திருக்கும் சிறப்புக்
குறிப்பு,
“ ஹை…
அழகா இருக்குல்ல…
மழை” (ஒவ்வொரு
துளியும் எனர்ஜி…, ப.1)
என ஒரு குழந்தையின்
மனநிலையில் மழையின் அழகினை மகிழ்வுடன் கொண்டாடும் கவிஞர்,
“ மழையெனப் பொழியும்
அன்பும்
உழைத்துப் பிழைக்கும்
மனமும்
உயர்த்திடுமே உலகை”
(ப.8)
என உறுதியாக
நம்புகின்றார். அவரது கருத்தில், ‘மழையின்றி அமையாது உலகு; ஒவ்வொரு
துளியும்… எனர்ஜி!’ (ப.14)
மழை பெய்யும் போதெல்லாம் மகிழ்ச்சி
அடைகிறதாம் கவிஞரின் மனம். ஏன் தெரியுமா? இதோ கவிஞரின் நறுக்கான விடை:
“ எங்கோ இருக்கிறார்
நல்லார்
ஒருவரென”
(ப.85)
இனிமேல் ‘கழுதைக்கும் கழுதைக்கும்
வேண்டாம், மண்ணுக்கும் மரத்திற்கும் செய்து வைப்போம் திருமணத்தை…’ என
அறைகூவல் விடுக்கின்றார் கவிஞர். ஏனெனில் அப்போது தானம் ‘வானம்
பிரசவிக்கும் மழையை’ (ப.87) என்கிறார் அவர். முத்தாய்ப்பாக,
“ ஒரு வார்த்தை…
ஒரு வாக்கியம்…
ஒரு கவிதை…
ஒரு நூல்…
ஒரு மழைத் துளி…
எதுவும்
புரட்டி விடக் கூடும்
நம் வாழ்க்கையை”
(ப.68)
என்னும் கவிஞரின் கூற்று
நூற்றுக்கு நூறு உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
சிந்தையை அள்ளும்
சித்திர மின்னல்கள்
ஒருமுறை பொருள் உணர்ந்து,
மனம் கலந்து படித்தாலே படிப்பவர் இதய அரியணையில் ஏறி அமர்ந்து கொள்ளும்
சித்திர மின்னல்கள் இராஜேந்திரன் கவிதை உலகில் பரக்கக் காணப்படுகின்றன.
இவ் வகையில் குறிப்பிடத்தக்க சில மந்திர மொழிகள் இதோ:
·
“ மழையில்…
ஒவ்வொரு துளியும்
எனர்ஜி” (ஒவ்வொரு துளியும் எனர்ஜி, ப.6)
·
“ எத்தனை
முறையும்
விழலாம்…
ஒரு முறை எழ!”
(ப.96)
·
“ வான்துளியே
வையகத்தின் உயிர்த்துளி.
வியர்வைத் துளியே
வையகத்தின் உயர்வுத்
துளி” (ப.99)
·
“ பறக்கப்
பிறந்தது பறவை
வாழப் பிறந்தவனே
மனிதன்…” (ப.95)
·
“ நல்ல
புத்தகங்கள்
தூங்காதிருக்கின்றன
மனிதர்கள்
விழித்துக்கொள்ள”
(மெளனத்தின் காத்திருப்பு, ப.16)
·
“ தெரசா:
முகம் சுழித்து
ஒதுக்கப்பட்டவர்களின்
முகவரி
நீ…” (ப.28)
·
“ மாதரைப்
பெற்றிடவே
மாதவம் செய்யட்டும்
மண்ணும் விண்ணும் இனி…”
(ப.30)
நிறைவாக, பே.இராஜேந்திரன்
தம் கவிதை ஒன்றில்,
“ கவிதையைப் படிப்பதில்
தமிழ் அழகு…
தமிழைப் பேசுகையில்
எவனும் அழகுதான்…”
(ப.73)
என மனம் நெகிழ்ந்தும்
மகிழ்ந்தும் கூறுகிறார். ஒரு சிறு சொல்லினைச் சேர்த்து நாம் அவரது கவிதை
உலகம் குறித்துச் சுருக்கமாகவும் செறிவாகவும் இப்படி மதிப்பிடலாம்:
“ பே.இராஜேந்திரன் –
கவிதையைப் படிப்பதில்
தமிழ் அழகு…
அதனை வாசிக்கையில்
எல்லாமே அழகுதான்!”
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|