சங்க இலக்கியம்: செவ்விய அடைமொழிகளின்
களஞ்சியம்
முனைவர் இரா.மோகன்
“அடைகளின்
ஆற்றல் அளப்பரிது. அவை பாமொழிப் பறவையின் பைஞ்சிறகுகள்; புலமைப்
புரவலனின் போர் வீரர்கள்” (செவ்வியல் இலக்கிய அடை: வகை தொகைக் களஞ்சியம்
– I, p.xxiii)
என மொழிவர்
பேராசிரியர் ந.சஞ்சீவி. அவரது முனைவர் பட்ட ஆய்வேடே ‘செவ்வியல் இலக்கிய
அடை: வகை தொகைக் களஞ்சியம்’ என்னும் இரு தொகுதிகளாக அண்மையில் (2016)
வெளிவந்துள்ளது. காவ்யா பதிப்பகம் உயர்தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் தடம்
பதித்துள்ள இத் தொகுதிகளை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது. “ஒரு
தமிழறிஞரின் மகனாய்ப் பிறந்து, தக்கார் பலரிடமும் தமிழ் கற்று, ஒரு
பதினெட்டு ஆண்டுகள் தமிழாசிரியனாய் எழுத்தாலும் பேச்சாலும் இரவு பகலாய்
உழைத்ததன் பயன் – பரிசு – இவ்வாய்வு நூலின் கருவும் உருவும் என்று
எண்ணித் தெய்வத் தமிழை – தமிழ்த் தெய்வத்தை வாழ்த்தி வணங்குகிறேன்”
(p.xxxv)
என்னும் பேராசிரியர்
ந.சஞ்சீவியின் முன்னுரைக் குறிப்பு ஈண்டு மனங்கொளத் தக்கதாகும்.
தக்க அடைமொழிக்காக 43 ஆண்டுகள் காத்திருந்த
கவிஞர்
வோர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞரின் வாழ்வில் நடந்த ஓர் உண்மை
நிகழ்ச்சி: குயிலின் சிறப்பியல்பை விளக்குவதற்கு ஒரு நல்ல அடைமொழியைத்
தேடி அவர் பல ஆண்டுகள் முயற்சி செய்தாராம். 1802 முதல் 1845 வரை
நாற்பத்து மூன்று ஆண்டுகள் இவ்வகையில் கழிந்தனவாம். சரியான அடைமொழி
கிடைக்காமல் 1802-இல் கவிஞர் தாம் எழுதிய அந்தப் பாடலை
1807, 1815, 1820, 1827
ஆகிய ஆண்டுகளில்
திரும்பத் திரும்பப் படித்துப் பயன் காணாமல் முயற்சியைக் கைவிட்டாராம்.
கடைசியில் 1845-இல்
‘Wandering Voice’
என்ற தக்க அடைமொழி
கிடைத்த பின்னரே அமைதி அடைந்தாராம் கவிஞர்.
‘அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்கள்’
அடைமொழி ஆட்சியைப் பொறுத்த வரையில் சங்கப் புலவர்கள் தேர்ந்து
தெளிந்தவர்களாக – நுண்ணோக்கும் முருகியல் உண்மை ஒருசேரக் கைவரைப்
பெற்றவர்களாக – விளங்குகின்றனர். ஔவையாரின் மொழியில் குறிப்பிட வேண்டும்
என்றால் அவர்கள் ‘அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்’களாகத் (புறநானூறு,
235) திகழ்கின்றனர். “தேர்ந்த புலவர் தாம் கொண்ட கருத்தையும் தாம்
உணர்ந்த உணர்ச்சியையும் விளக்குவதற்கு நீண்ட பல பாட்டுக்களைப் பாடுவது
இல்லை. ஒரு சில அடிகளாலும் அல்லது ஒரு சில சொற்களாலும் விளக்கும் திறன்
அவர்களுக்கு அமைந்திருக்கிறது. சில இடங்களில் அடையாக வரும் ஒரே
சொல்லிலும் அவருடைய உணர்ச்சியை நாம் பெறுமாறு செய்கின்றனர்” (மேற்கோள்:
மு.வரதராசன், இலக்கியத் திறன், ப.258) என்னும் அறிஞர்
சி.டி.வின்செஸ்டரின் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது. ஓர் எடுத்துக்காட்டு:
“தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்”
(புறநானூறு, 334)
என்னும் சங்கச் சான்றோர் மதுரைத் தமிழ்க் கூத்தனாரின் சொல்லோவியத்தில்
முயலின் முழு உருவமும் – எல்லா உறுப்புக்களும் – சித்திரிக்கப்
பெறவில்லை; முயலைக் காணும் எவரது உள்ளத்தையும் உடனடியாகக் கவரும் சில
உறுப்புக்களின் நலங்கள் மட்டுமே சிறுசிறு அடைகளைக் கொண்டு காட்டப்
பெற்றுள்ளன. ‘தூய மயிரையும் குட்டையான கால்களையும் நீண்ட காதையும் உடைய
சிறிய முயல்’ என்னும் நான்கு சிறு தொடர்களை – அடைமொழிகளை – கற்ற உடனே
கற்பவர் மனக்கண் முன்னே முயலின் உருவம் வந்து நின்று விடுகின்றது.
இதனையே பண்டைய உரையாசிரியர்கள் ‘சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல்’
எனச் சுட்டுவர்.
யானையைப் பற்றிய சங்கச் சான்றோர்களின்
அடைமொழிகள்
தனியுறுப்பு மருத்துவம் போல, சங்க இலக்கியத்தில் யானையைப் பற்றி மட்டும்
பயன்படுத்தப் பெற்றுள்ள அடைமொழிகளை நாம் தொகுத்தும் பகுத்தும் அலசி
ஆராயலாம். சங்க இலக்கியத்தில் ‘யானை’ என்ற சொல்லே பெருவழக்காய்
இடம்பெற்றுள்ளது; யானையைக் குறிக்கும் ‘வேழம்’, ‘களிறு’, ‘வாரணம்’
என்னும் பிற சொற்களும் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன; பெண் யானை ‘பிடி’
என்ற சொல்லால் சுட்டப்பட்டுள்ளது. யானையின் புறத்தோற்ற அழகினையும் அதன்
செயல் திறத்தினையும் கவிநயத்துடன் காட்சிப்படுத்தும் வகையில் சங்கப்
புலவர்கள் கையாண்டுள்ள சில சிறப்பு அடைமொழிகள் வருமாறு:
1. ‘அண்ணல் யானை’: தலைமை பொருந்திய யானை (குறுந்தொகை, 260)
2. ‘உரல்கால் யானை’: உரலைப் போன்ற காலை உடைய யானை (குறுந்தொகை, 252)
3. ‘தடக்கை யானை’: வளைந்த கையை உடைய யானை (குறுந்தொகை. 332)
4. ‘நெடுநல் யானை’: உயர்ந்த நல்ல யானை (குறுந்தொகை, 357)
5. ‘சிறுகண் யானை’: சிறிய கண்ணை உடைய யானை (புறநானூறு, 170, 316)
6. முறஞ்செவி யானை’: முறம் போன்ற காதை உடைய யானை (நற்றிணை, 376)
7. ‘ஆடுஇயல் யானை’: அசையும் இயல்பை உடைய யானை (புறநானூறு, 165)
8. ‘புகர்முக வேழம்’: புள்ளிகள் அமைந்த முகத்தை உடைய யானை (நற்றிணை,
158)
9. ‘வினைநவில் யானை’: போர் வினைத் தேர்ச்சி அமைந்த யானை (புறநானூறு,
347)
10. ‘வெண்கோட்டு யானை’: வெண்மையான கொம்பினை உடைய யானை (அகநானூறு, 392)
சங்க காலத்தில் ‘கழைதின் யானையார்’ என்னும் சிறப்புப் பெயராலேயே புலவர்
ஒருவர் சுட்டப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
செவ்விய அடைமொழிகளின் களஞ்சியம்
“திராட்சை மது (Wine)
என்றாலும் சிவப்பு மது (Red
Wine)
என்றாலும் உருவைப் படைக்க இயல்வதில்லை. ‘குருதிச் சிவப்பான மது’
(Blood – red Wine)
என்று அடைமொழி புணர்த்து
விட்டால் அதனைக் காட்சிப்படுத்துவதை உணர்கிறோம்” (ஒப்பிலக்கிய அறிமுகம்,
ப.178) என்பார் பேராசிரியர் தமிழண்ணல். அவரது கூற்றுக்கு இணங்க,
காட்சிப்படுத்தும் திறத்தினைத் தன்னகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான சீரிய,
செவ்விய அடைமொழிகளின் களஞ்சியமாகவே சங்க இலக்கியம் திகழ்கின்றது. இவ்
வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அடைமொழிகளின் ஆட்சியை –
பயன்பாட்டினை – இங்கே காணலாம்.
குறுந்தொகைப் பாடல் ஒன்று இரத்தம் போன்ற நிறத்தை உடைய செங்காந்தள்
பூவினைக் காட்சிப்படுத்தும் வண்ணம் ‘குருதிப் பூ’ (1) எனச்
சுட்டுகின்றது. குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள இன்னமும் சில
அழகிய, ஆற்றல் சான்ற, தேர்ந்த, நுண்ணிய அடைமொழிகளின் பட்டியல் வருமாறு:
1. ‘அமிழ்துபொதி செந்நா’ (14): அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நா
2. ‘பீடு கெழு குரிசில்’ (31): பெருமை பொருந்திய தலைவன்
3. ‘ஒன்றுமொழிக் கோசர்’ (73): இரண்டு உரையாமல் ஒன்றையே மொழியும் வாய்மை
உடைய கோசர்
4. ‘கேடில் விழுப்பொருள்’ (216): தன்னை உடையார் கெடுதலன்றித் தான்
கெடுதல் அறியாத சீரிய பொருள்
5. ‘தூவெள்ளருவி’(235): தூய வெள்ளிய அருவி
6. ‘செய்வினை முடித்த செம்மல் உள்ளம்’ (270): செய்வினை
முற்றுப்-பெற்றதால் நிறைவை உடைய உள்ளம்; தலைமை பொருந்திய உள்ளம்
7. ‘கடுஞ்சூல் மகளிர்’ (287): முதற்சூல் கொண்ட மகளிர்
8. ‘நகைமுக விருந்தினன்’ (292): சிரித்த முகத்தோடு விருந்தினனாக வந்த
தலைவன்
9. ‘சிறுவீ முல்லை’ (348): சிறிய பூக்களை உடைய முல்லை
10. ‘மெய்ம்மலி உவகை’ (398): உடம்பு பூரிக்கும் உவகை
புலவர்களின் புலமைத் திறம் அவர்களது பாடல்களில் துலங்கிட அடைமொழியின்
பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பது இதனால் விளங்கும். மேலும்,
பேராசிரியர் ந.சஞ்சீவியின் தடத்தில் பன்முக நோக்கில் சங்க இலக்கிய
அடைகளில் நுண்ணாய்வு மேற்கொள்ளுவதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது என்பதும்
இதனால் தெளிவாகும்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|