புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள்
முனைவர் இரா.மோகன்
'வேறு எந்த இலக்கிய வடிவத்தையும் விடப் புதுக்கவிதைக்குச் சக்தி அதிகம்.
மனித ஆன்மாவை அது விரைவாகவும், நெருக்கமாகவும் சென்று தொட முடியும்'
எனப் புதுக்கவிதையின் வலிமையைக் குறித்து ஒரு முறை எடுத்துரைத்தார்
கவிக்கோ அப்துல் ரகுமான். புதுக்கவிதை நிகழ்காலத்தை, இன்றைய நடப்பைப்
படம்பிடிப்பதாக, பதிவு செய்வதாக விளங்குவதே அதன் ஆற்றலுக்கான அடிப்படைக்
காரணம் ஆகும். அதுவே இன்றைய புதுக்கவிதையின் உயிர்ப் பண்பு எனவும்
சொல்லலாம்.
அண்மையில் 'ஆனந்த விகடன்' இதழில் 'சொல் வனம்' பகுதியில் வெளியாகி
இருந்த ஒரு புதுக்கவிதை 'சீதையோடு ஒரு செல்பி' என்பது. அதனை இயற்றிய
கவிஞரின் பெயர் ஷான். கவிஞரின் சொற்களில் அருமையான அக் கவிதை இதோ:
'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.
இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்
நிரம்பி யிருந்தது ராமனின் தொடுதிரை.
பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.
வாலிக்கு இரங்கல் எழுதிக் கொண்டிருந்தான் சுக்ரீவன்,
ராவணன் பறித்துக் கொண்ட செல்பேசியில் இருந்தது
சீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.
விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு,
அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பனகை.
'ஆறு மாதங்களுக்கு டீ ஆக்டிவேட்' என்றான் கும்பர்ணன்.
ராமனைப் போல் சுய படமிட்ட போலிக் கணக்கில்
சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.
'எங்கே உருப்படப் போகிறது?' என்று கடந்தாள் மண்டோதரி.
அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது
அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்பி ஒன்று!'
பதினைந்தே வரிகளில் சீதை, ராமன், பரதன், சுக்ரீவன், ராவணன், விபீஷணன்,
சூர்ப்பனகை, கும்பகர்ணன், மண்டோதரி, அனுமன் என்னும் பத்து இதிகாச
மாந்தர்களை வரவழைத்து, அவர்களின் எண்ணங்களின், சொற்களின்,
செயற்பாடுகளின் வாயிலாக இன்றைய நிகழ்காலத்தை அற்புதமாக இக் கவிதையில்
பதிவு செய்துள்ளார் கவிஞர். 'தொடர்பு எல்லைக்கு அப்பால்', 'வாட்ஸ் அப்',
'செல் பேசி', 'தனிச்செய்தி', 'டேக்', 'டீ ஆக்டிவேட்', 'நட்பு அழைப்பு',
'செல்பி' என்னும் தொடர் ஆட்சிகள் இக் கவிதைக்கு நிகழ்கால வண்ணத்தையும்
வனப்பையும் சேர்த்து இராமாயணம் பற்றிய ஒரு மறுவாசிப்பாகக் கவிதையை
ஆக்கியுள்ளன. புதுமைப்பித்தன் 'சாப விமோசனம்' என்னும் நீண்ட சிறுகதையில்
செய்து காட்டியதை, பதினைந்தே வரிகளால் ஆன இப் புதுக்கவிதையில் திறம்படச்
செய்து காட்டியுள்ளார் கவிஞர் ஷான்.
'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்
இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி'
என்பது ஒளவையாரின் புகழ் பெற்ற ஓர் அறநெறிப் பாடல். இப்பாடல் இன்றைய
புதுக்கவிஞரின் கை வண்ணத்தில் அழகிய, ஆற்றல் சான்ற மறுகோலம் பூண்டுள்ளது.
'பாட்டியுடன் பேட்டி' என்னும் தலைப்பில் அமைந்த சுவையான அக் கவிதை
வருமாறு:
'நேற்று மாலை
அருநெல்லிக் கனியுண்ட
ஒளவைப் பாட்டி
எங்களூர்ச் சாவடி
நாவல்மரத் தடியில்
சுட்ட பழம் பொறுக்கிக் கொண்டிருந்தாள்,
நான் கேட்டேன்:
'பாட்டி, பாட்டி சாதிகள் எத்தனை?'
பாட்டி சொன்னாள்:
'சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்
மீதி மிச்சம் இல்லாமல் ஊர்நிலத்தைத் தான் சுருட்டிக்
கட்டினார் மேல்சாதி, பறிகொடுத்தார் கீழ்சாதி
பட்டாவில் உள்ளபடி – நிலப்
பட்டாவில் உள்ளபடி!''
இக் கவிதையில் இடம் பெற்றிருக்கும் அருநெல்லிக் கனி, ஒளவைப் பாட்டி,
நாவல் மரம், சுட்ட பழம் ஆகியவற்றில் எல்லாம் புதுமை ஒன்றும் இல்லைளூ
ஆனால், 'சாதிகள் எத்தனை?' என்னும் கவிஞரின் கேள்விக்கு ஒளவைப் பாட்டி
தரும் பதில் தான் வித்தியாசமானதுளூ நாட்டு நடப்பைத் தோலுரித்துக்
காட்டுவதுளூ 'வலியோர் சிலர், எளியோர் தமை வதையே புரிகுவதை' - 'மீதி
மிச்சம் இல்லாமல் ஊர் நிலத்தைத் தான் சுருட்டிக் கொள்வதை'
அம்பலப்படுத்துவதுளூ 'பட்டாங்கில் உள்ள படி' என்னும் வெண்பாவின் ஈற்றடி,
'பட்டாவில் உள்ள படி - நிலப் பட்டாவில் உள்ள படி' என மாற்றம் பெறுவதில்,
நில அபகரிப்பு என்னும் நிகழ்காலக் கொடுமை அழுத்தமாகப் பதிவு செய்யப்
பெற்றிருக்கக் காண்கிறோம்.
பாரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன்ளூ முல்லைக் கொடிக்காகக் தான் ஏறி வந்த
தேரையே அவன் விட்டுச் சென்றதும், இறங்கி நடந்து சென்றதும் நாம் நன்கு
அறிந்தவைளூ இலக்கிய வரலாற்றில் பலமுறை படித்து மனம் நெகிழ்ந்தவை.
புதுக்கவிஞர் நீலமணி வள்ளல் பாரியையும் அவனது செயற்பாட்டையும் ஒரு
வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகுகின்றார். அவரது கவிப் பார்வை இதோ:
'நடந்தான் பாரி
நடந்தான் பாரி
நடந்த மக்களின்
தோள் மீதேறிய
சிவிகைச் செல்வர்
செலுத்திய வரியால்
உருவான தேரைக்
கொடிக்கு நிறுத்தி
முதல் தடவையாக
நடந்தான் பாரி.'
பாரி ஏறி வந்த தேர், 'நடந்த மக்களின் தோள் மீது ஏறிய சிவிகைச் செல்வர்
செலுத்திய வரியால் உருவான' ஒன்றாம்! அதனை முல்லைக் கொடிக்கு நிறுத்தி
விட்டு, இப்போது தான் வாழ்வில் முதல் முறையாக நடந்தானாம் பாரி!
பொதுவுடைமைச் சிந்தனை கலை நயத்துடன் வெளிப்பட்டிருக்கும் கவிதை இது!
இதிகாச மாந்தர்களையும் புராண நிகழ்வுகளையும் தமது வித்தியாசமான கேள்விக்
கணைகளால் புரட்டிப் போடுவதில் - அதிரடியாக விமர்சனம் செய்வதில் -
இன்றைய புதுக்கவிதைகள் சிறந்து விளங்குகின்றன. 'தெரு வாழும் கிம்பந்தன்'
என்பது இவ் வகையில் நினைவுகூரத் தக்க ஒரு கவிதை. ஏ.தெ.சுப்பையனின்
சொற்களில் அக் கவிதை வருமாறு:
'திருஞானசம்பந்தனைத்
தேடிப் பிடித்து
பால் புகட்டிய
பர சக்தி...
சென்னை நகரத்
தெரு வாழும் கிம்பந்தன்
பசித்தழும்போது
கைப்புறம் ஏந்திக்
கச்ச விழ்ப்பாளா?'
'சமுதாயத்தின் உயர்நிலையில் உள்ள திருஞானசம்பந்தன் பசித்து அழுத உடன்,
கையில் ஏந்தி, மடியில் இருத்தி, பொற் கிண்ணத்தில் ஞானப் பால் ஊட்டிய
பராசக்தி, சென்னை நகரத் தெருவிலே வாழும் கிம்பந்தன் பசித்தழும்போது தனது
கைப்புறம் ஏந்திப் பால் ஊட்டுவாளா?' என்னும் கவிஞரின் வினா, கவிதையைப்
படிப்பவர் உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. 'பராசக்தி'யைப் 'பராhhh
சக்தி' எனச் சுட்டி இருப்பதில் கவிஞரின் அறச் சீற்றம்
வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.
கவிப்பேரரசு வைரமுத்து 'தினமலர்' பொங்கல் மலரில் படைத்த நல்லதொரு கவிதை
'அடங்காநல்லூர்' (ஏறு தழுவலுக்கு - ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற ஊர்
'அலங்காநல்லூர்!'). 'போதும்! எங்களை முட்டாதீர்! இதற்கு மேலும் எங்கள்
வாலினை முறுக்காதீர்! தயவு செய்து எங்கள் கொம்புகள் மீது அரசியல் சாயம்
பூசாதீர்! மூக்கணாங் கயிறுருவி நைலான் கயிறு பூட்டாதீர்!' எனக் காளை
இனம் அடுக்கடுக்காகத் தமிழர்க்கு விடுக்கும் வேண்டுகோள்களுடன்
தொடங்குகின்றது கவிதை. 'சட்டமே, இனியும் தடுத்தால் பூம்பூம் மாடாகி
விடுவதன்றி, வேறு வழியில்லை' என உருக்கமாகத் தனது நிலைப்பாட்டினை
எடுத்துரைக்கும் காளை இனம், தொடர்ந்து தமிழரை நோக்கி, 'உங்களுக்கு
ஆகஸ்ட் 15, எங்களுக்கு இன்று தான்! ஆண்டெல்லாம் எங்களை அடிமை கொண்ட
மனிதனை ஒரு நாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக வாடி வாசலில்
காத்திருக்கிறோம்' என மொழிகின்றது. அயல்நாடுகளில் அதற்குப் பெயர் 'காளைப்
போர்' (டீரடட-கiபாவ). அன்னைத் தமிழிலோ 'ஏறு தழுவுதல்'. 'ஏறு தழுவுதல்'
என்ற தமிழன் எப்படி எங்களைக் காயம் செய்வான்?' எனக் கவிஞர் இக்
கவிதையில் காளையின் வாய்மொழியாகத் தொடுத்திருக்கும் வினா பொருள்
பொதிந்தது. மேலும், 'தழுவுதல் குற்றமெனில் காதலுமில்லை, காளையுமில்லைளூ
அடிமாடு லாபம், பிடிமாடு பாவம் எனில், பிள்ளைக் கறி லாபம், பிள்ளை
தழுவுதல் பாவமோ?' எனக் காரசாரமாகக் கேட்கின்றார் கவிஞர். முத்தாய்ப்பாக
இக் கவிதையின் முடிவில்,
'ஒவ்வொன்றாய் இழந்த தமிழா!
அன்னம் இழந்தாய்ளூ
அன்றில் இழந்தாய்ளூ
சிட்டுக் குருவிகளையும்
வானில் தொலைக்கிறாய்ளூ
கடைசியில் காளையினத்தையும் தொலைத்து விடாதே!'
என ஒட்டுமொத்தத் தமிழினத்திற்குக் கவிஞர் விடுத்திருக்கும் எச்சரிக்கை
கருத்தில் கொள்ளத்தக்கது. 'வேளாண்மைக் கலாச்சாரத்தின் உயிர் விஞ்ஞானம்
நாங்கள், எங்களைக் கட்டித் தழுவிக் காப்பாற்றுங்கள்!' என்பதே காளை இனம்
தமிழரிடம் பணிந்து கேட்கும் முடிந்த முடிபான உதவி.
இங்ஙனம் இன்றைய புதுக்கவிதைகள் விமர்சன நோக்கில் நிகழ்காலத்தைப்
படம்பிடித்துக் காட்டுவதிலும், பதிவு செய்வதிலும் தனித்தன்மையுடன்
விளங்குகின்றன.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|