தமிழ்
பெரியசாமியின் 'புகழ் சூடி': ஆத்திசூடி வரிசையில் புதுவரவு
முனைவர் இரா.மோகன்
'மக்களால், மக்களுக்காக' என்ற பட, 'தமிழாக, தமிழுக்காக' என்றே வாழ்ந்து வரும் ஆற்றல்சால் ஆளுமையாளர்களுள் கெழுதகை
நண்பர் தமிழ்ப் பெரியசாமி குறிப்பிடத்தக்கவர் ஆவார். 37 ஆண்டுக் காலம்
ஆசிரியராகப் பணியாற்றியுள்ள அவர், தமிழ்நாடு வளர்ச்சித் துறையின்
சார்பில் நடத்தப்-பெற்று வரும் 35,000க்கும் மேற்பட்ட அரசுப்
பணியாளர்களுக்கு மொழிப் பயிற்சி அளித்துள்ள சிறப்புக்கு உரியவர்;
தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத்தின் நூலாசிரியர் குழுவில் இடம்பெற்ற, 1
முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட நூல்களை உருவாக்கியவர்; மாவட்ட
அளவில் ஆசிரியர்களுக்குக் கருத்தாளராகப் பணியாற்றி இருப்பவர். 'திருக்குறள்
புதையல்', 'திருக்குறள் உரை', 'குண்டலகேசி காப்பிய நாடகம்', 'தமிழ்விடு
தூது உரை', 'நந்திக் கலம்பகம் உரை', 'பிழையில்லாத் தமிழறிவோம்' என்பன
தமிழ்ப் பெரியசாமியின் பெயர் சொல்லும் நூல்கள் ஆகும். மதுரை வானொலி
நிலையத்தின் நாடகக் கலைஞர், திண்டுக்கல் கல்விச் சிந்தனையாளர் கழகத்தின்
அமைப்பாளர் என்ற பரிமாணங்களும் தமிழ்ப் பெரியசாமிக்கு உண்டு. தமிழ்நாடு
அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வரும் 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது',
ஈரோடு தமிழ்ச் சங்கம் வழங்கிய 'சாதனையாளர் விருது'இ திண்டுக்கல் அரிமா
சங்கம் வழங்கிய 'மனித நேயச் செம்மல் விருது' முதலான விருதுகளுக்குச்
சொந்தக்காரர் தமிழ்ப் பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
'புகழ் சூடி'
ஆத்திசூடி வரிசையில் தமிழ்ப் பெரியசாமி படைத்துத் தந்துள்ள புதுவரவு 'புகழ்
சூடி'. இதில் 96 ஓரடிப் பாக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்குக் கவிஞரே
அருமையான விளக்கங்கள் எழுதி இருப்பது சிறப்பு. தமிழில் 'ஒளி', 'புகழ்'
என இரண்டு சொற்கள் உண்டு. மூதறிஞர் தமிழண்ணல் தம் தன்வரலாற்று நூலில்,
'உயிர்க்கு ஊதியம் இரண்டுள. ஒன்று ஒளி; மற்றது புகழ். ஒளி – வாழுங்
காலத்து உளதாவது; புகழ் – வாழ்ந்து மறைந்த பிறகும் நிலையாக நீடித்து
நிற்பது' (மனத்துக்கு மனம், ப.15) என வள்ளுவர் வழி நின்று நுண்ணிய
விளக்கம் தருவர். இவ் வகையில் தமிழ்ப் பெரியசாமி தம் நூலுக்குப் 'புகழ்
சூடி' எனப் பெயர் சூட்டி இருப்பது முத்தாய்ப்பு. 'புகழ் சூடி என்னும்
நூல் ஆத்திசூடிப் பாவடியில் அமைந்த அறிவுரை நூல். இதில் காலத்திற்கேற்ப
புதிய கருத்துக்கள் பலவும் வலியுறுத்தப்பட்டுள்ளன' (நுழைவாயில், ப.7)
என்னும் கவிஞரின் முன்னுரைக் குறிப்பு ஈண்டு மனங்கொளத் தக்கது.
வாழுங்காலத்து மட்டுமன்றி, வாழ்ந்து மறைந்த பிறகும் நிலையாக நீடித்து
நிற்க வல்ல விழுமியங்களுக்கு முதன்மை தந்து இளைய தலைமுறையினர்
நெஞ்சங்களில் அவை பசுமரத்து ஆணி போல் பதியும் வண்ணம் தமிழ்ப் பெரியசாமி
'புகழ் சூடி'யில் எடுத்துரைத்துள்ளார். இதுவே இந்த ஆத்திசூடி நூலின்
தனித்தன்மை ஆகும். இனி, 'புகழ் சூடி' வாயிலாகத் தமிழ்ப் பெரியசாமி
வளரும் இளையோர்க்கு வழங்கியுள்ள பன்னிரு கட்டளைக் குறித்துக் காண்போம்.
1. 'அரிமாத் திறன் கொள்!'
உலகறிந்த தமிழ் மூதாட்டியான ஔவையார் இயற்றிய முதல் ஆத்திசூடி 'அறம்செய
விரும்பு' எனத் தொடங்குகின்றது. இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின்
தலைமகனான பாரதியார் தமது புதிய ஆத்திசூடியை 'அச்சம் தவிர்' எனத்
தொடங்குகின்றார். பாவேந்தர் பாரதிதாசனின் ஆத்திசூடி 'அனைவரும் உறவினர்'
என்றும், சுவாமி சுத்தானந்த பாரதியாரின் ஆத்திசூடி 'அறிவே ஆன்மா'
என்றும், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் சூடி 'அகத்தமிழ் படி'
என்றும், வாணிதாசனின் ஆத்திசூடி 'அறிவைப் பெருக்கு'என்றும், பேராசிரியர்
தமிழண்ணலின் ஆய்வுசூடி 'அறிவியல் முறை பேண்' என்றும், பேராசிரியர்
ந.சஞ்சீவியின் ஆத்திசூடி 'அறம் செய(ல்) அரசு' என்றும், கவிஞர் நாரா.
நாச்சியப்பனின் நெறிசூடி 'அன்பு நெறி நில்' என்றும், பதிப்புச் செம்மல்
ச.மெய்யப்பனின் அறவியல் சூடி 'அழகியல் உணர்வு கொள்' என்றும், புலவர்
சோம.இளவரசுவின் நீதிசூடி 'அழகினை விரும்பு' என்றும், கவிச்செம்மல்
ரெ.முத்துக்கணேசனின் 'முத்து(ச்)சூடி' 'அரனைப் போற்று' என்றும் அந்தந்த
ஆத்திசூடியின் முதன்மைப் பாடுபொருளுக்கு ஏற்பத் தொடங்கி உள்ளன. இந்
நெறியினைப் பின்பற்றி தமிழ்ப் பெரியசாமியும் தமது 'புகழ்சூடி'யை 'அரிமாத்
திறன்கொள்' (1) எனத் தொடங்கி இருப்பது நோக்கத்தக்கது.
காட்டு விலங்குகளின் அரசனாகப் போற்றப்படுவது சிங்கம். ஆண்டாள் தமது
திருப்பாவைப் பாடல் ஒன்றில்,
'மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே...' (23)
எனச் சீரிய சிங்கம் ஒன்று மலைக் குகையில் இருந்து பெருமுழக்கத்தோடு
பிடரி மயிர் கிளர்ந்து எழும்படி வெளியே புறப்பட்டு வரும் காட்சியைப்
பெருமிதம் பொங்கித் ததும்பும் மொழியில் சித்திரிப்பார்
'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவ துண்டோ?'
என்பது கவியரசர் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றில் வரும்
உயிர்ப்பான பகுதி ஆகும்.
பாவேந்தர் பாரதிதாசனும் 'சிங்க இளைஞனே! சுடர்முகம் தூக்கு' எனப் பாடி
இளந்தமிழனுக்கு எழுச்சி ஊட்டுவார்.
'ஆடுகளையே பலி இடுவர்; யாரும் சிங்கத்தைப் பலி இடுவதில்லை. எனவே சிங்கம்
போல ஒருவர் பீடும் பெருமிதமும் விளங்க வாழ்ந்து காட்ட வேண்டும்' என்பது
டாக்டர் அம்பேத்காரின் சிந்திக்கத் தூண்டும் மணிமொழி.
வாழையடி வாழை என வரும் இச் சான்றோர்களின் வைர வரிகளை நினைவுபடுத்துவது
போல் தமிழ்ப் பெரியசாமியும்,
'அரிமாத் திறன் கொள்' (1)
என இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துகின்றார். முன்னும் பின்னும் இரு
மருங்கும் பார்த்து பெருமிதத்தோடு நடப்பது அரிமா நோக்கின் தனிச்சிறப்பு.
எனவே, எங்கும் – எதிலும் – வெற்றி காண விரும்புவோர், அரிமாத் திறனை
வளர்த்துக் கொள்ள வேண்டியது தலையாய கடனாகும்.
2. 'கணிப்பொறி கற்றிடு!'
இது கணிப்பொறிக் காலம். கணிப்பொறி பற்றிய அறிவு இன்று அனைவரும்
பெற்றிருக்க வேண்டிய இன்றியமையாத தேவை ஆகிவிட்டது. 'அவனன்றி ஓர் அணுவும்
அசையாது' என்பது பழமொழி: 'கணிப்பொறி இன்றி கடுகளவும் நடவாது' என்பது
இன்றைய புதுமொழி. 'மாதா பிதா குரு தெய்வம்' என்ற வரிசையில் கணினியையும்
சேர்த்து 'மாதா பிதா குரு கணினி தெய்வம்' என ஐந்தாக்கி மொழிவார்
கவிப்பேரரசு வைரமுத்து. கணிப்பொறியும் கைபேசியும் இணைய தளமும் முக
நூலும் இருபத்தியோரம் நூற்றாண்டின் விடியலில் அகர முதல் னகரம் வரை
எல்லாவற்றையும் எளிதாக்கி விட்டன; விரல் நுனியில் விபரங்கள் அனைத்தும்
கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்து விட்டன. இச் சூழ்நிலையில் தமிழ்ப்
பெரியசாமி 'புகழ் சூடி'யில் வளர்ந்து வரும் இளையோர்க்குப்
பரிந்துரைக்கும் அடிப்படையான கருத்து இதுதான்:
'கணிப்பொறி கற்றிடு!' (13)
தமிழ்ப் பெரியசாமியின் நோக்கில் கால ஓட்டத்தில் பின்தங்கி நின்று
விடாமல்இ கால மாற்றத்தை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்பத் தன்னைத்
தகுதிப்படுத்திக் கொள்வதே இன்றைய இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டிய
முதற் பணி ஆகும்.
3. 'தூக்கம் அளவு செய்!'
நலமான, நிறைவான வாழ்வுக்கு உணவு, உறக்கம், உழைப்பு என்னும் மூன்றிலும்
அளவு வேண்டும். அளவாக உண்ண வேண்டும்; அதுவும் முன்னே உண்ட உணவு
செரித்ததா என்று பார்த்து, நன்றாக பசி எடுத்த பிறகே உண்ண வேண்டும்.
அதுவே ஒருவரை நோய் அணுகாது இருப்பதற்கான வழிமுறை ஆகும். அதே போல,
உறக்கத்திலும் அளவு வேண்டும்; கண்ட நேரத்தில் கண்டதை எல்லாம் உண்பது
எங்ஙனம் உடலுக்குக் கேடு விளைக்குமோ அதுபோல கண்ட நேரத்தில் எல்லாம்
உறங்குவதும், கும்பகர்ணன் போல் நெடுநேரம் உறங்கிக் கொண்டே இருப்பதும்
தீங்கையே தரும். அதனால் தான் ஔவையாரும் தமது ஆத்திசூடியில்,
'இலவம் பஞ்சின் துயில்'
என்றார். இச் சூடியின் மெய்ப்பொருள் இலவம் பஞ்சால் ஆன மெத்தையில்
படுத்து உறங்க வேண்டும் என்பதன்று. 'இலவின் பஞ்சு போலக் கிடந்துறங்குக.
சிறுகாற்றியக்கத்திற்கும் பஞ்சு கிடவாமல் எழுதல் போல நீ
சிறிதியக்கத்திற்கும் உணர்ந்து எழுக என்று விதித்தவாறாம். பஞ்சு
மூச்சுப் படினும் கிடவாதெழுதல் போல நீயும் அத்துணை மென்மையாகக் கிடந்து
சிறிதோர் அசைவிற்குங் கிடவாதெழுதல் காணுமாறு சிறுதுயில் புரிக என்பதே
கருத்தாகக் கொள்க. இன் உருபு ஒப்புப் பொருட்டு' (ஆத்திசூடியுர, ப.50)
என்பர் மகாவித்துவான் ரா.இராகவையங்கார். இக் கருத்திலேயே தமிழ்ப்
பெரியசாமியும்,
'தூக்கம் அளவு செய்' (43)
என்னும் சூடியைப் படைத்து இளையோர்க்கு விழிப்புணர்வை ஊட்டியுள்ளார்.
4. 'நேற்றிலும் உயர்வாய்!'
'நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு' (336)
என்பது 'நிலையாமை' அதிகாரத்தில் இடத்தில் இடம்பெற்றுள்ள ஓர் அரிய
குறட்பா. இக்குறட்பாவின் உண்மைப் பொருள் உற்றுநோக்கி உணரத்தக்கது.
மனிதன் நாள்தோறும் வளர்கிறான். நேற்று இருந்தவன் இன்று இல்லை; இன்று
இருப்பவன் நாளை புதிய மனிதனாகப் பிறப்பு எடுப்பான். மாற்றமும்
வளர்ச்சியும் உயர்வும் மேன்மையும் நிகழ்ந்து கொண்டே இருப்பது தான்
ஆறறிவு படைத்த மனித வாழ்வின் தனிச்சிறப்பு. ஒருமுறை பேரறிஞர் பெர்னார்ட்
ஷா 'என்னை என்னுடைய அவ்வப்போதைய மாற்றத்தோடும் வளர்ச்சியோடும்
அளக்கின்ற ஒரே மனிதர் என் தையற்காரர் தான்!' என வேடிக்கையாகக்
குறிப்பிட்டது ஈண்டு நினைவுகூரத் தக்கது.
வாழ்வில் சாதனை படைக்க விரும்புவோர் – முத்திரை பதிக்க எண்ணுவோர் –
ஒவ்வோர் அடியையும் உயரிய கருத்துடனும் நெடிய தொலைநோக்குடனும் விழுமிய
குறிக்கோளுடனும் சரியான திட்டமிடலுடனும் எடுத்து வைக்க வேண்டும்; அதே
போல, ஒவ்வொரு நொடியையும் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். இதுவே,
'நேற்றினும் உயர்வாய்!' (56)
என்னும் 'புகழ் சூடி' உணர்த்தும் தன்முன்னேற்றச் சிந்தனை ஆகும். 'இன்று
புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று
விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!' என்னும் பாரதியாரின் மணிமொழி இங்கே
ஒப்புநோக்கத் தக்கதாகும்.
5. 'நோக்கம் உயர்வு செய்!'
'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (596)
என்பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. 'எண்ணுவது எல்லாம் உயர்வாகவே எண்ணுக.
எண்ணியது கை கூடாது போனாலும் அங்ஙனம் உயர்வாக எண்ணுவதை ஒருபோதும்
கைவிட்டு விடக் கூடாது' என்பது இக் குறட்பாவின் பொருள்.
இலட்சியம், குறிக்கோள், நோக்கம் என்பன ஒரு பொருள் தரும் சொற்கள் ஆகும்.
முடியுமா என்பது முட்டாள்தனம்; முடியாது என்பது மூடத்தனம்; முடியும்
என்பது மூலதனம். எனவே, 'எதுவும் என்னால் முடியும்' என்னும் நெஞ்சுரம் –
மன உறுதி – ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வேண்டும். 'குறிக்கோள் இலாது
கெட்டேன்!' என்பது அப்பர் வாக்கு. எனவே, வாழ்வில் உயர வேண்டும்
என்றால், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு குறிக்கோள் வேண்டும். நெஞ்சில்
உரம் உயர்ந்த, குறிக்கோள் இவ்விரண்டும் உடையவர்களே வாழ்க்கையில் மேன்மை
அடைவர்; முத்திரை பதிப்பர். இதனை உணர்த்தும் தாரக மந்திரமே,
'நோக்கம் உயர்வு செய்!' (59)
என்னும் 'புகழ் சூடி!' சிங்க நடை போட்டு சிகரம் தொட விரும்புவோர் சிறு
குறிக்கோள் கொண்டவராக இல்லாமல், உயர்நோக்கம் உள்ளவராக – விழுமிய
குறிக்கோள் உடையவராக – இருத்தல் வேண்டும். இதுவே தமிழ்ப் பெரியசாமி
இளையோர்க்கு உணர்த்த விரும்பும் வெற்றி மொழி ஆகும்.
6. 'பிழை கண்டு ஆர்த்தெழு!'
பிழை கண்ட இடத்தில் வாய் மூடி மௌனியாய் இருப்பது – கண்டும் காணாமலும,
எதிர்க்குரல் எழுப்பாமலும் அமைதி காப்பது – இமாலயத் தவறு ஆகும்.
'பிழை கண்டு ஆர்த்தெழு!'
என்பது 'புகழ் சூடி' இளைய தலைமுறையினர்க்கு வலியுறுத்தும் கொள்கை
முழக்கம் ஆகும்.
'தடைகளை உடைத்தெறிந்து' (38) – இன்னும் கூர்மையான சொற்களில்
குறிப்பிடுவது என்றால்இ தடந்தோள் திறத்தால் தடைக் கற்களையே படிக்கற்கள்
ஆக்கி – தடம் பதிப்பதே தம் ஆளுமைப் பண்பால் உலகையே மாற்றிக் காட்டிய
ஆற்றலாளர்களின் தனிப்பெரும் பண்பாகும்.
7. 'பூக்களைப் படித்தல் செய்!'
ஒருவருக்குக் கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் போதும், எவரிடம்
இருந்தும் – எதனிடம் இருந்தும் – வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்-
கொள்ளலாம்; 'திறவோர் காட்சியில் தெளிந்தனம்' என்றபடி வாழ்வில்
தெளிவினைப் பெற்று உயரலாம். இந்த நோக்கத்துடன் தமிழ்ப் பெரியசாமி
படைத்திருக்கும் 'புகழ்சூடி' வருமாறு:
'பூக்களைப் படித்தல் செய்!' (65)
பொதுவாக, 'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்பார்கள்; தமிழ்ப் பெரியசாமியோ
'பூக்களைப் படியுங்கள்' என்கிறாரே, அப்படி என்றால் என்ன பொருள்?
பூக்களிடம் இருந்து எதைப் படிப்பது? இதோ, கவிஞரின் விடை:
'பூக்களிடம் இருந்து மென்மை உள்ளம், இனிய சொற்கள், உதவும் மனப்பான்மை
ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளலாம். இதுவே பூக்கள் தரும் பாடம் ஆகும்' (புகழ்
சூடி, ப.71).
8. 'பெற்றோரைப் பேண்!'
நாம் இந்த உலகில் வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள் நம் தாய் தந்தையர்
ஆவர். அவர்களைக் கண்ணெனக் காத்தல் பெற்ற பிள்ளைகளின் தலையாய கடமை ஆகும்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'தாயிற் சிறந்த கோயிலும்
இல்லை', 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்றெல்லாம் இளமையில்
படித்திருக்கிறோம்; மனப் பாடம் செய்து ஒப்பித்தும் இருக்கிறோம். ஆனால்,
வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளை- களுக்கும் இடையே தலைமுறை
இடைவெளி காரணமாக இடைவெளியும் விரிசலும் எப்படியோ ஏற்பட்டு விடுகின்றன.
'வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
அனாதை இல்லை'
என்பது தான் இன்றைய காலகட்டத்தின் அப்பட்டமான பதிவு; படப்பிடிப்பு.
எனவே, இன்றைய சூழலில்,
'பெற்றோரைப் பேண்'
(66)
என்னும் புகழ் சூடியின் வாயிலாகப் பெற்றோரைச் சுமையாகக் கருதாமல்,
அவர்களுக்குத் தொண்டு செய்வதைப் பணியாகக் கருதி, சுகமான சுகமாக அதனை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் தமிழ்ப் பெரியசாமி.
9. 'மொழி பல பயில்!'
தமிழ்ப் பெரியசாமி 'தாய்மொழி உயிராம்' (39) என இளையோர்க்குத்
தாய்மொழியின் முதன்மையை உணர்த்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை; 'தெளிதமிழ்
பேசு' (44) என்று அன்னைத் தமிழின் அருமையினையும் தமிழில் பேச வேண்டியதன்
இன்றியமையாமையையும் எடுத்துரைப்பதோடு மட்டும் அமைதி அடைந்து விடவில்லை.
இன்னும் ஒரு படி மேலாக,
'மொழி பல பயில்' (79)
என இளைய தலைமுறைக்கு நனிசிறந்த – இருபத்தியோரம் நூற்றாண்டுக்குப்
பெரிதும் தேவைப்படுகின்ற – பன்மொழிக் கல்வியை உயர்த்திப் பிடிக்கின்றார்
தமிழ்ப் பெரியசாமி.
பன்மொழிப் பயிற்சியும் புலமையும் இருந்ததால் தான் 'யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!' என்று பாரதியாரால் அறுதி
இட்டு உறுதியாக உரைக்க முடிந்தது.
பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவரான குமரகுருபரர் காசியில் சைவ மடம்
நிறுவுவதற்கு அடித்தளம் இட்டுத் தந்தது அவர் மன்னனிடம் அவனது
இந்துஸ்தானி மொழியில் பேசியதே ஆகும்.
எனவே, இன்றைய வளரும் தலைமுறையினர் தாய்மொழிக் கல்வியோடு அயல்மொழிகள்
பலவற்றைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்துகின்றார்
தமிழ்ப் பெரியசாமி.
10. 'விதியென ஒடுங்கேல்!'
அறத்துப் பாலின் இறுதி அதிகாரம் 'ஊழ்'. அதன் இறுதிக் குறட்பா இது:
'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்' (380)
இங்ஙனம் ஊழின் பெருவலிமையை எடுத்துரைத்த வள்ளுவரே 'ஆள்வினை உடைமை'
அதிகாரத்தின் இறுதிக் குறட்பாவில்,
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்' (620)
எனப் பறைசாற்றுவது கூர்ந்து நோக்கத்தக்கது. 'பசி நோக்காது, கண்
துஞ்சாது, தளராது, தாமதியாது உழைப்பவர்களைக் கண்டு ஊழும் புறங்காட்டி
ஓடி மறையும்' என்னும் வள்ளுவரின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
'விடா முயற்சி' என்னும் சொல்லாட்சியே ஒருவர் இடைவிடாமல் – தொய்வில்லாமல்
– உழைக்க வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.
கம்ப ராமாயணத்தில் ஓர் இடம்: 'விதியின் பிழை; இதற்கு வெகுண்டது ஏன்?'
என்று இராமன் வினவிய போது, சற்றும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக 'விதிக்கு
விதி ஆகும் என் விற்றொழில் காண்டி!' என இலக்குவன் விடை கூறுவது
கருத்தில் கொள்ளத்தக்கது.
சாபக் கேடு, தலைவிதி, சாதகப் பலன், போதாத நேரம் என்றெல்லாம்
அறிவுடைமைக்குச் சற்றும் பொருந்தி வராத காரணங்களைக் காட்டி புலம்பிக்
கொண்டு இராமல், வாழ்வில் நடப்பதை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு,
இயல்பாக வாழக் கற்றுக் கொள்வதே அறிவுடைமை ஆகும். இக் கருத்தின்
இரத்தினச் சுருக்கமான வெளிப்பாட,
'விதியென ஒடுங்கேல்!'
என்னும் 'புகழ் சூடி' ஆகும்.
' விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலை செஞ்சா உயர்வோம் என்ற
விவரம் மண்டையில் ஏறணும்'
எனப் பாடி திரைப் பாடலில் விழிப்புணர்வை விதைத்த மக்கள் கவிஞர்
ப(h)ட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வழித்தோன்றலே தமிழ்ப் பெரியசாமி
ஆவார்.
11. 'வெற்றியில் பணிவு கொள்!'
'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்ற படி, அனைவரிடமும் பணிவுடன் நடத்தல்
என்பது ஆகச் சிறந்த பண்பாகும். அதுவும் வெற்றி வாகை சூடிய காலத்தில்
பணிவுடன் நடத்தல் என்பது உயரிய வாழ்வியல் நெறி ஆகும். எனவே,
'வெற்றியில் பணிவு கொள்!' (93)
என இளையோர்க்கு வழிகாட்டுகின்றது 'புகழ்சூடி'.
வெற்றியில் பணிவு கொள்வதும், தோல்வியில் பாடம் கற்றுக் கொள்வதும்
ஒருவரது ஆளுமை உருவாக்கத்தில் இன்றியமையாத இடத்தினைப் பெறும் இரு
பண்புகள் ஆகும்.
12. 'வையம் உனதறி!'
'வையம் உனதறி!' (95) என்பது புகழ்சூடியின் ஈற்றடி. 'உலகம் உன்னுடையது;
அதில் வாழும் உரிமை உனக்கு உண்டு. இதை அறிந்து நீ வாழ வேண்டும்... நீ
உனக்காகவும் நாட்டிற்காகவும் உலகிற்காகவும் செய்வன செய்ய வேண்டும்.
அதுவே ஆறறிவு பெற்றதன் பயன் ஆகும்' என்பதே இச் சூடியின் வாயிலாக
இளையோர்க்குத் தமிழ்ப் பெரியசாமி வலியுறுத்தும் செய்தி.
கவியரசர் பாரதியார் தமது 'புதிய ஆத்திசூடி'யில் 'வையத் தலைமை கொள்' என
இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துவார். அவரது அடிச்சுவட்டில் பாவேந்தர்
பாரதிதாசனும் 'உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்' என வையத்துள்
வாழ்வாங்கு வாழும் முறையினை இளைய பாரதத்திற்குத் தெளிவுபடுத்துவார்.
இவ்விரு முன்னைக் கவிஞர்களின் மொழிகளை அடியொற்றி, 'நீ உனக்காகவும்
நாட்டிற்காகவும் உலகிற்காகவும் செய்வன செய்ய வேண்டும். அதுவே ஆறறிவு
பெற்றதன் பயனாகும' (புகழ் சூடி, ப.95) என நல்வழி காட்டுகின்றார் தமிழ்ச்
பெரியசாமி.
நிறைவாக ஒரு கருத்து: தமிழ்ப் பெரியசாமியின் 'புகழ் சூடி'யினை மனம்
கலந்து, பொருள் உணர்ந்து பயின்று, அதன்படி நிற்கும் இளையோர் யாவரும்
உலகம் உற்று நோக்கும் ஓர் ஆளுமையாளராக – ஆற்றலாளராக – வாழ்வில் உயர்வர்
– தடம் பதிப்பர் – என்பது திண்ணம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|