ஏர்மங்கலம்
பால.சிவகடாட்சம்
B.Sc.Hons., B.Ed, D.I.C., Ph.D
நெற்பயிர்ச்செய்கையைத்
திருவும் அருளும் இணைந்த மங்கலமான தொழிலாகவும் கடமையாகவும் கருதி அதற்கு
ஏர்மங்கலம் என்னும் பெயரிட்டழைத்தனர் நம் பழந்தமிழ்ப் புலவர்கள்.
உலகத்தோர் சுழன்று சுழன்று எத்தொழிலைச் செய்யினும் அவர்கள்
உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுக்கு நாடுவது ஏர்பிடித்து நிற்கும்
உழைப்பாளிகளையே என்பதை 'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' என்று
சுட்டிக்காட்டினார் வள்ளுவப் பெருந்தகை.
மற்றைய பயிர்களோடு ஒப்பிடுகையில் நெற்பயிரின் நீர்த்தேவை மிக அதிகம்.
ஆற்று நீர், குளத்து நீர், மழை நீர், கிணற்று நீர் என்று எங்கெல்லாம்
போதிய அளவு தண்ணீர் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் நெர்ப்பயிர்ச்செய்கையைக்
காணமுடியும். ஆற்றுநீரையும் குளத்து நீரையும் முழுமையாகப் பயன்படுத்தித்
தண்ணீர்ப்பஞ்சம் காணாத நிலங்களில்தான் செந்நெல் செழித்துவளரும். கூடிய
விளைச்சலைப் பெற்றுத்தரும் நாற்று நடும் பயிர்ச்செய்கை முறையினைத்
தண்ணீர் தடையின்றிக் கிடைக்கும் இடங்களில்தான் பின்பற்றமுடியும்.
நெற்பயிர் முற்றும்காலம் வரை வயல்நிலத்தில் ஐந்து சென்ரிமீற்றர் நீராவது
தேங்கிநிற்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். நீர் மேலாண்மை
(water management)
பிழைத்தால் வேளாண்மை பிழைத்துவிடும்.
வெள்ளத்தை (நீரை) வீணாக்காது அதனைப் பக்குவமாகப் பயன்படுத்தும் திறன்
நெற்பயிர் செய்வோரிடம் எதிர்பார்க்கப்படும் ஒன்று. வெள்ளத்தை ஆள்பவர்களே
'வெள்ளாளர்' ஆனார்கள். அவர்கள் செய்யும் தொழில் 'வெள்ளாண்மை' ஆயிற்று.
நாளடைவில் வெள்ளாண்மை வேளாண்மை ஆகத் திரிந்தது. உழுதூண்மாந்தராகிய
வெள்ளாளர் வேளாளர் ஆன கதை இது.
நெல்வெள்ளாண்மை என்பது கடுமையான உடல் உழைப்பை முழுமையாக வேண்டிநிற்கும்
ஒரு முயற்சி. ஆற்றில் வெள்ளம் வரப்போவதை அல்லது மழைகாலம் தொடங்கப்போவதை
அறிந்ததும் விளைநிலத்தை உழுது பண்படுத்த வேண்டும். வரம்புகளைக் கொத்திச்
சீர்செய்து நீரைத் தேக்கி வைக்கவேண்டும். எருவையும் தழையையும் சேர்த்து
மண்ணுக்கு உரமூட்டவேண்டும். நீரைத்தேக்கி வைப்பதன் மூலமும் சேற்றை
மட்டப்படுத்துவதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்துமுடித்த பின்னர்தான் விதைப்பு ஆரம்பமாகும்.
இன்று பயன்படும் செயற்கைப் பசளைகளைவிட நமது முன்னோர் பயன்படுத்திய
எருவும் தழையுமே நீரின் தேவையைக் குறைக்கவும் மண்ணில் உப்புத்தன்மை
அதிகரிக்காமல் தடுக்கவும் பெரிதும் உதவுவன என்பதை இன்றைய விவசாய
ஆராய்ச்சியாளர் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குறைந்த செலவில், குறைந்த நீர்த்தேவையில், கூடிய விளைச்சலைத்தரும்
புதிய புதிய நெல்லினங்களைக் கண்டறிந்து பயிரிடுவதில்தான் நெல்
விளைவிக்கும் நாடுகள் அக்கறைகாட்டி வருகின்றன. 'வயிற்றுக்குச்
சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்.' உண்மைதான். அதேசமயம்
எமது சந்ததியினருக்கு வளமான நிலத்தையும் தரமான விதைகளையும் விட்டுச்
செல்வது பற்றியும் அல்லவா நாம் சிந்திக்க வேண்டும்.
இற்றைக்கு
நூறுவருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பயிரிட்ட பச்சைப்பெருமாள்,
மொட்டைக்கறுப்பன், முருங்கைக்காயன், மணல்வார, பாளைமுகரன், பன்றிக்கூரன்,
வெள்ளைவாலன், பவளச்சம்பா, குண்டைச்சம்பா, முத்துச்சம்பா, பெருநெல்,
அழகியவாணன், பஞ்சவாளை, குளவாழை, சின்னட்டி, பொன்னாயகன், மலையழகன்,
அச்சடியான், மைக்காத்தான், கார்குறுவை, காடைக்கறுப்பன், என்று எத்தனை
எத்தனை நெல்வகைகள். இவையெல்லாம் இன்று எங்கே?
ஒவ்வொரு விதமான சுவையைத் தரக்கூடிய நெல் இனங்களைக் கைவிட்டு விட்டோம்.
அதேசமயம் நிலத்துக்கும் கிடைக்கக்கூடிய நீருக்கும் காலநிலைக்கும்
பொருத்தமான நெல் இனங்களைத் தெரிந்து பயிரிடும் வாய்ப்பையும் இழந்து
விட்டோம். இன்று விவசாயத் திணைக்களம் தரும் நெல்லைத்தான் பயிரிடமுடியும்.
பாரம்பரிய நெல் இனங்களைக் கைவிட்டாயிற்று. இயந்திரங்களை நம்பி
எருதுகளையும் கைவிட்டுவிட்டோம். சேற்றில் வரிசையில் நின்றபடி
அயிலை நிகரும் விழிகள் புரள
அழகு பொன்முடி யசையவே
அவர வர்க்கொரு பிடிவகுத் துவைத்(து)
அதிதீவிரத்துடன் நாற்றுநடும்
கயிலி மயிலி குயிலி தையலி
கருவி திருவி யொருவி
காரி வாரி வீரி சூரி
கறுப்பி காத்தி கட்டைச்சி (பறாளை விநாயகர் பள்ளு)
இவர்களைக் கைவிட்டுவிட முடியுமா? இவர்களின் துணையுடன் ஏர்பிடித்து
உழுதும் வயலுக்கு நீர்பாய்ச்சியும் களைபிடுங்கியும் விளைந்த கதிரை
அறுவடைசெய்தும் போர் அடித்தும் நெற்குவியலை அளந்து
கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்தும் தாமும் உண்டு பிறரையும்
உண்ணவைக்கும் காராளப் பெருமக்களைக் கைவிடமுடியுமா?
ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
என்னும் குறளில் நெற்பயிர்ச்செய்கையின் அத்தியாவசியமான நான்கு படிகளை
எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர். முதலாவது படி உழுதல். நிலத்தை உழுவது
எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியமானது அந்நிலத்துக்கு எரு இடுவது. உழுவது
நெற்பயிருடன் போட்டி போடக்கூடிய களைகளைக் கட்டுப்படுத்தும்; நிலத்துக்கு
இடப்பட்ட எருப்பசளை பயிருக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
அடுத்து நெற்பயிருக்கு மிக முக்கியமான தேவையான நீர் தட்டுப்பாடின்றிக்
கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும். இன்றேல் அதுவரை பட்ட பாடு எல்லாம்
பாழாகிவிடும். அடுத்து நெற்கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராகும்வரை
பயிரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும். இல்லையேல் பீடைகளும்
காட்டுவிலங்குகளும் விளைச்சலைப் பெரிதும் பாதித்துவிடும். இத்தனை
விடயங்களையும் வழக்கம் போல் வள்ளுவர் ஒரே ஒரு குறளில் சொல்லிவிட்டார்.
இன்று வள்ளுவர்
வலியுறுத்திய ஒவ்வொரு படியிலும் விவசாயி பெரும் சிரமங்களை
எதிர்கொள்வதைக் காண்கிறோம். இவற்றுள் தண்ணீர்ப் பிரச்சனையே பெரும்
பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 'எனக்குக் குடிக்கவே தண்ணீர் இல்லை. உனது
நெல்லுக்குத் தரமுடியுமா' என்று ஆற்று நீரில் பங்குபெறுபவர்கள் ஆளை ஆள்
அடித்துக்கொள்கிறார்கள். தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்வாழமுடியுமா
என்பதைக்கூட இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. உழவுத் தொழிலுக்கு
இன்று கிடைக்கும் மதிப்பு இதுதான்.
இத்தனை
சிரமங்களுக்கும் மத்தியில் நாங்கள் ஏன் இத்தொழிலைச் செய்யவேண்டும் என்று
உண்மையான கமக்காரன் கேட்கப்போவதில்லை. விவசாயம் அவனது தொழில் மட்டும்
அல்ல. அது அவனது வாழ்க்கை முறை. இலாபத்தை எதிர்பார்த்துச் செய்யாத
தொழில் வேளாண்மை ஒன்றுதான். 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு
நெல்லும் மிஞ்சாது' என்பது பழமொழி.
வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற இலக்கு ஒன்றையே எண்ணி
ஏர்பிடிக்கும் வேளாளருக்கே திருவாளர் என்னும் பெயர் உரித்தானது
என்கிறார் கம்பர்.
நாம் சேற்றில் கால் வைத்தால்தான்
நீங்கள் சோற்றில் கைவைக்க முடியும்
என்று பேசாத
உழவனுக்காகப் பேசினார் வைரமுத்து. யார் அதை நினத்துப் பார்க்கிறார்கள்.
பாராளும் வேந்தர்
குதிரையும் யானையும் பூட்டக் கதிரவன் தன் தேரைப்பூட்டும் அதிகாலையில்
ஏரைப்பூட்டும் ஏழைக் கமக்காரனை இன்று யார் நினைத்துப் பார்க்கின்றார்கள்.
'பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர்பூட்ட ஏர்பூட்டும் செம்பொற்கை' (திருக்கை வழக்கம்: கம்பர்)
'கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லோரையும் காத்து ஈடேற்றும் கை' என்று
கம்பநாட்டாழ்வார்
போற்றும் காராளர்கை இன்று கமநல வங்கிகளிடம் கடன்கேட்டுக் காத்து
நிற்கின்றது. (திருக்கை வழக்கம்: கம்பர்)
பயிர்ச்செய்கையின்
சிறப்பை, அதன் முக்கியத்துவத்தை இன்றைய இளம் தலைமுறையினருக்கு
உணர்த்துவதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். அரிசி எங்கே இருந்து
வருகின்றது என்று கேட்டால் பல்பொருள் அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம்
என்று பதில் சொல்லும் சிறார்களைக் காண்கிறோம். இந்தியா, இலங்கை போன்ற
நாடுகளில் 'என் தந்தை ஒரு விவசாயி' என்று சொல்வதற்கு வெட்கப்படும் இளம்
சந்ததியைக் காண்கிறோம். இந்த நிலையில் எதிர்காலத்தில் நான் ஒரு விவசாயி
ஆக வர விரும்புகின்றேன் என்று கூறும் ஒரு மாணவனைக்காணமுடியுமா? ஆயுதம்
செய்வதற்கும் தொழிற்சாலைகள் வைப்பதற்கும் கொடுக்கப்படும் முன்னுரிமை
விவசாயத்துக்குக் கிடைக்கின்றதா? உணவு உற்பத்தித் துறையை உதாசீனம்
செய்யும் நாடுகள் தம் தவறை உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே (ஏர்
எழுபது: கம்பர்)
மழை நடக்கும் படி நடக்கும் வேளாளரின் ஏர் நடந்தால் இயல் நடக்கும் இசை
நடக்கும் நாடகம் நடக்கும். செல்வம் நடக்கும். தர்மம் நடக்கும். இந்தப்
பூமி நடக்கும். படையும் நடக்கும். பசி மட்டும் நடக்காது என்று கம்பன்
கூறும் உண்மையை மறக்காதிருப்போமாக.
பால. சிவகடாட்சம்
B.Sc.Hons., B.Ed, D.I.C., Ph.D
|